ஸ்வயம் ஒழுங்குமுறைகள் – 2021, ஏபிசி ஒழுங்குமுறைகள் வரைவு, கலப்பு கற்பித்தல் மற்றும் கற்றல் முறை குறித்த கருத்து குறிப்பு : மூன்று ஆவணங்களும் தேசிய கல்விக் கொள்கை – 2020 உடன் சேர்த்து முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.
I. முன்னுரை
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இணையவழியில் ஒவ்வொரு பாடம்/தாளும் நாற்பது சதவீதம் கற்பிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும் வகையில் இருக்கின்ற கலப்பு கற்பித்தல் கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற திட்டத்தை 2021 மே 20 அன்று கூடிய பல்கலைக்கழக மானியக் குழு விவாதித்து நிறைவேற்றியது. ஸ்வயம் திட்டத்தில் வழங்கப்படுகின்ற திறந்தவெளி இணையவழிப் பாடங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து பாடங்கள்/தாள்களுக்கும் பொருந்துவதாக இந்த கலப்பு செயல்முறைத் திட்டம் இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இந்த கலப்பு செயல்முறை குறித்து இருந்த காலத்திற்குப் பொருந்தாத உற்சாகம் ஏராளமான முரண்பாடுகளுக்குள் சிக்கியுள்ளது. தேசிய நாளிதழ்களும், செய்திச் சேனல்களும் அன்றாடம் நிகழும் உயிரிழப்புகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்ற இந்த நேரத்தை இதுபோன்றதொரு திட்டத்தை விவாதிப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர்கள் தேர்வு செய்து கொண்டிருப்பது மிகக் கொடூரமான முரண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. பிற துறைகளைப் போல பல்கலைக்கழகங்களும் ஆசிரியர்கள், புகழ்பெற்ற அறிஞர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன. தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை கோவிட் தொற்றால் இழந்துள்ள மாணவர்கள் இணையற்ற துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆர்வமுள்ள இளம் மனங்களின் தீவிர கற்றலுக்கான ஆய்வு வலைகளுக்கான (Study Webs of Active Learning for Young Aspiring Minds – SWAYAM) ஒழுங்குமுறைகள் – 2021, இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் அகாடமிக் பேங்க் ஆப் கிரெடிட்ஸ் (ஏபிசி) மாடல், கலப்பு முறை கற்றல் (பிஎல்) மாடல் ஆகியவை செயல்படுத்தப்படுமேயானால், அவை உயர்கல்வி குறித்து தற்போது இருந்து வருகின்ற முன்னுதாரணத்தை முழுமையாக மறுவரையறை செய்து விடும். மாணவர்களுடன் ஆசிரியர்களுக்கு இருந்து வரும் தொடர்பைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்களின் பங்களிப்பைக் குறைப்பதையே இந்த புதிய கற்றல் முறை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்களை வெறுமனே வாடிக்கையாளர்களாக மாற்றுகிற இந்த கலப்பு கற்பித்தல் முறை பற்றி பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள கருத்து குறிப்பில் ‘மாணவர்களே தங்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்’, ‘படிப்புகளை மாணவர்களே வடிவமைத்துக் கொள்ளலாம்’, ‘தேவைப்படும் பட்டத்தை மாணவர்களே வடிவமைத்துக் கொள்ளலாம்’, ‘மாணவர்களை மையப்படுத்துகின்ற கல்வி’ என்பது போன்ற அலங்காரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய அர்த்தமற்ற இதுபோன்ற வார்த்தைகள் பொதுக்கல்வியை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான நகர்வின் வெளிப்படையான யதார்த்தத்தை மறைத்து நிற்கின்றன. உண்மையில் ‘மாணவர்களின் விருப்பம்’ என்ற போர்வையில் பொது நிதியில் இயங்கி வருகின்ற உயர்கல்விக்கான செலவினங்களைக் குறைப்பதே அந்த கல்வி முறையின் நோக்கமாக உள்ளது.
கல்வி குறித்த கொள்கைகளுக்கான பரிசீலனை என்பது சமத்துவம், தரம், அணுகல், செயல்திறன் என்ற நான்கு முக்கிய கருத்துகளின் அடிப்படையிலேயே இருந்திட வேண்டும். அ) டிஜிட்டல் வசதிகளை அடைவதில் உள்ள இடைவெளி (வர்க்கம், சாதி, பாலினம், பகுதி, கிராமப்புறம்/ நகர்ப்புறம்), அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் திறன் (வசதியானவர்கள்/ ஏழைகள்) ஆ) படிப்புகளின் கடுமை மற்றும் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்தல் இ) ஏற்ற இறக்கமான பணிச்சுமையால் ஏற்படப் போகும் வேலையிழப்பு, தற்காலிக/ஒப்பந்தமயமாக்கல் போன்றவற்றால் ஆசிரியர்களின் பணிநிலைமைகளின் மீது ஏற்படப் போகின்ற தாக்கம் போன்றவற்றைக் கவனிக்காமலேயே இணையவழி/மெய்நிகர் தீர்வுகள் குறித்து முன்வைக்கின்ற வாதத்தின் மூலம் தேசிய கல்விக் கொள்கை, இப்போது பரிசீலனையில் உள்ள ஆவணம் உள்ளிட்ட அனைத்து கொள்கை ஆவணங்களும் பரிதாபமான தோல்வியையே கண்டுள்ளன.
அர்த்தமுள்ள உள்கூறு, வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தாங்கள் வழங்கப் போகின்ற பட்டங்களின் தரம் குறித்து எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள இந்த கொள்கை ஆவணங்கள் முன்வரவில்லை. இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் ஏபிசி திட்டம் நூறு சதவீத படிப்புகளை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளக்கூடிய மாணவர்களின் கிரெடிட் அங்கீகாரம், கிரெடிட் மீட்பு போன்ற செயல்முறைக்கு உதவி, இளங்கலை தாராள கல்வி பட்டத்தை அவர்கள் பெறுவதற்கு வழிவகுத்து தருகிறது. நடைமுறையில் உள்ள சிறப்பு ஹானர்ஸ் பட்டத்திற்குப் பதிலாக இவ்வாறு வழங்கப்படப் போகின்ற இளங்கலைப் பட்டம் மிகவும் பிற்போக்கான நடவடிக்கையாகும். மேலும் அது அறிவு உற்பத்திக்கான திறனையும் பாதிக்கிறது. உலகம் முழுவதும் முக்கியமான பாடங்கள் மற்றும் துணைப் பாடங்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் பாட வடிவங்களிலேயே சிறப்புப் பயிற்சி என்பது இருந்து வருகிறது. அவற்றைப் போன்ற சிறப்பு பயிற்சிகளும், கூட்டு ஆய்வுகளுமே இன்று நாம் எதிர்கொண்டு வருகின்ற தொற்றுநோய் போன்ற நெருக்கடிகளைப் புரிந்து கொள்வதற்கான ஆய்வுகளுக்கும், திறன்களுக்கும் முக்கியமானவையாக இருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் பொதுத்தளங்களில் பகிர்ந்து கொண்ட நடைமுறை யதார்த்தங்களையும், அனுபவங்களையும் கலப்பு கற்றலுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மானியக் குழு மேற்கொண்டிருக்கும் கருத்தியல் வாதம் புறக்கணித்திருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த தொற்றுநோய் காரணமாக இணையவழி வகுப்புகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது அவர்களிடமிருந்த தனிப்பட்ட இணைய இணைப்பு வசதிகள் (பெரும்பாலும் நம்ப முடியாத, மிகக் குறைந்த அளவிலான தரவுப் பொதிகளைச் சார்ந்து), கல்விக்குச் சாதகமில்லாத மிகவும் மோசமான வீட்டு நிலைமைகள், டிஜிட்டல் சாதனங்களுக்கு முன்பாக நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டியிருப்பதால் ஏற்படுகின்ற தண்டுவடப் பாதிப்பு போன்ற உடல்நலக்குறைவு, தன்னியல்பான உரையாடல் தொடர்புகளோ, கூடுதல் வழிகாட்டுதலோ இல்லாமை என்று பல குறைபாடுகளுடனேயே இருந்தன. அவை குறித்து ஆவணப்படுத்தப்பட்ட அனுபவங்கள் அதிக அளவிலே இருக்கின்றன. தொற்றுநோயின் போது இணையவழி உயர்கல்வி குறித்த அனுபவத்தை வரையறை செய்திருக்கின்ற சில முக்கியமான அனுபவங்களை மட்டுமே நாங்கள் இந்த எதிர்வினையில் பகிர்ந்து கொள்கின்றோம். ஸ்வயம்/திறந்தவெளி இணையவழிப் படிப்புகளை தொலைதூரக் கல்விக்கான படிப்புகளின் களஞ்சியமாகப் பயன்படுத்திக் கொள்வதைக் குறை கூற முடியாது என்றாலும் அவற்றை வழக்கமான கல்வியை இல்லாமலே செய்து விடுவதற்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நேரடி வகுப்பறைகளை வேறு எதைக் கொண்டும் மாற்றீடு செய்து விட முடியாது. இணையவழி கற்பித்தல்-கற்றல் மனிதர்களுக்கிடையிலான தொடர்புகளைக் குறைக்கிறது. கற்றல் செயல்பாட்டைத் துண்டிக்கின்ற இந்த கல்வி முறை கல்வி மற்றும் பாடநெறி குறித்து சக மாணவர்களுக்கிடையே இருந்து வருகின்ற தொடர்பை அகற்றுவதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கான பயனுள்ள வளாக வாழ்க்கையை இழந்து போகுமாறு செய்கிறது.
இத்தகைய மாற்றங்கள் கற்பித்தல் தொழிலுக்கும் நிச்சயம் தீங்கையே இழைக்கப் போகின்றன. கற்பிக்கும் மணிநேரங்கள் அல்லது வகுப்புகளுக்கான கால அளவைக் கொண்டே வழக்கமாக உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள கற்பித்தல் பணிக்கான இடங்கள் உருவாக்கப்படுகின்றன / பராமரிக்கப்பட்டு வருகின்றன. கற்பித்தல்-கற்றலின் கணிசமான பகுதியை இணைய வடிவில் தருவதன் மூலம் இப்போதுள்ள பணிச்சுமையின் நிலைத்தன்மை மிகவும் குறைந்து விடும். இதுபோன்று பணிச்சுமை உறுதியற்றிருப்பது ஆசிரியர்களிடமிருந்து வேலையைப் பறிக்க காரணமாக இருந்திருப்பதை கடந்தகால அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதனால் முதன்முதலாகப் பாதிக்கப்படப் போகின்றவர்களாக ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள், ஒப்பந்த ஆசிரியர்களே இருக்கப் போகிறார்கள். கற்பித்தல் பணிகளை இவ்வாறு குறைப்பது, பணிப் பாதுகாப்பின்மையை உருவாக்குவது வருங்காலத்தில் மாணவர்கள் கற்பித்தல் தொழிலைத் தேர்ந்தெடுப்பதையே தடுத்து நிறுத்தி விடும்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்மொழிவுகளில் உள்ள உண்மையான நோக்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்த முன்மொழிவுகளில் கல்வி அணுகல், கல்வியின் தரம், கல்வி சுதந்திரம், வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கென்று வழங்கிட எதுவும் இல்லை என்பதால் இந்த முன்மொழிவு உறுதியுடன் எதிர்க்கப்பட வேண்டும்.
II. இணையவழிக் கல்வி உண்மையில் கொண்டு வரப் போவது என்ன
இந்த கலப்பு முறை கற்பித்தல் மற்றும் கற்றல் பற்றிய கருத்து குறிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்கனவே பகிர்ந்து கொள்ளப்பட்ட இணையவழிக் கல்வி குறித்த அனுபவங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டியதில்லை என்பதையே தேர்வு செய்து கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இடைவெளி/அணுகல், மாணவர்களுக்கான சமமற்ற கற்றல் சூழல்கள் அல்லது அவர்கள் குழுவாகத் தங்களுக்குள் தொடர்பு கொள்வது இல்லாமல் போவதன் விளைவுகளுக்கான தீர்வுகள் எது குறித்தும் அது பேசவில்லை. அதற்கு மாறாக பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாளும் நாற்பது சதவீதம் இணையவழிச் செயல்முறை வழியாக வழங்கப்பட வேண்டும் என்று புதிய விதிகளை அது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்த முன்மொழிவிற்குள் இந்த நாற்பது சதவீதம் என்ற குத்துமதிப்பான எண் எவ்வாறு வந்தது என்பது குறித்து எந்த தர்க்கமும் அதனால் முன்வைக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மானியக் குழுவோ அல்லது கல்வி அமைச்சகமோ மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஏற்படும் சவால்களைச் சமாளிக்க உதவுவதற்கான எந்தவொரு முயற்சி குறித்தும் எதையும் குறிப்பிடவே இல்லை. களத்தில் உள்ள உண்மை நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாமல் இதுபோன்று ஸ்வயம் விதிமுறைகள், ஏபிசி மாடல், கலப்பு கற்றல்/கற்பித்தல் மூலம் இணையவழிக் கல்வியை பெருமளவிற்கு பரந்து செயல்படுத்துவது உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து வரும் கற்பித்தல்-கற்றலை முழுமையாகச் சீர்குலைத்தே விடும். வழக்கமான கல்விக்கு கூடுதலாக சிலவற்றை வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான முக்கியமான கருவியாக உள்ள தொலைதூரக் கல்வி மூலம் வழங்க முடியும் என்பதால் தொலைதூரக் கல்வியை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அதை விடுத்து அனைத்து படிப்புகளிலும் இணையவழிக் கல்வியை நோக்கிய இந்த உந்துதலானது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மிகவும் அத்தியாவசியமான நேரடி வகுப்பறை கற்பித்தல் மூலம் இருந்து வருகின்ற வழக்கமான படிப்புகள், கற்றல் சூழல் ஆகியவற்றைச் சீர்குலைத்திடவே வழிவகுக்கும்.
பல்கலைக்கழக மானியக் குழு பின்வரும் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. டிஜிட்டல் இடைவெளி: சரியான இணைய இணைப்பு வசதிகள் இல்லாமை, இணைய வளங்கள், டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல் இல்லாமை போன்றவை ஏற்கனவே கற்பித்தல்-கற்றலில் இருந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியிலிருந்து வருகின்ற அல்லது இணைய இணைப்பு வசதி மிகவும் மோசமாக, சீரற்ற நிலையில் உள்ள பகுதியிலிருந்து வருகின்ற மாணவர்களால் (எடுத்துகாட்டாக ஜம்மு&காஷ்மீர்) வகுப்புகள், விரிவுரைகள், வெபினார்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளைச் சமர்ப்பிக்கவோ முடியவில்லை. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிறுவன உள்கட்டமைப்பும் மிகவும் மோசமாகவே இருக்கிறது. தொடர்ச்சியான தனியுரிமை மீறல், தரவு கசிவு, ஆய்வு ஆவணங்கள் உள்ளிட்ட பதிப்புரிமை பெற்ற பொருட்களின் திருட்டு ஆகியவற்றிற்கு தனிப்பட்ட இணையவழிக் கற்றல் மேலாண்மை அமைப்புகளின் போதாமையே காரணமாக உள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவின் நிறுவன உதவிகள் எதுவும் கிடைக்காததால் இணையவழிக் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டின் வேகத்தைப் பராமரிப்பதற்காக தங்களுக்கென்று சொந்தமாக வைத்திருக்கும் மிகக் குறைந்த இணைய வளங்களையே ஆசிரியர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
2. சமமற்ற, குறைந்த தரத்திலான கற்றல் சூழல்கள்: பல்வேறு பின்னணியில் வீடு/குடும்பச் சூழ்நிலைகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு தங்கள் வளாகங்களுக்குள் சமமான, உகந்த கற்றல் சூழலை வழங்குகின்ற கல்வியை வழங்க வேண்டிய முக்கியமான பொறுப்பு உயர்கல்வி நிறுவனங்களிடமே இருக்கிறது. இந்த தொற்றுநோய்க் காலத்தில் ஏற்பட்டிருக்கும் இணையவழிக் கற்றலுக்கான மாற்றத்தின் விளைவாக மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் வீடுகளைச் சார்ந்தே இயங்க வேண்டியிருப்பதால் கற்றல் சூழல்களில் சமத்துவமின்மையை அது உறுதிப்படுத்திக் கொடுத்துள்ளது. தனிப்பட்ட இடவசதி எதுவும் இல்லாததால் தனியுரிமை பெரும்பாலும் மறுக்கப்படுகின்ற நிலையில், வீட்டுப் பொறுப்புகள் என்ற சுமை, தொந்தரவுகள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடமுள்ள எதிரிடையான மனப்பான்மை போன்றவை மாணவர்களும், ஆசிரியர்களும் இணையவழிக் கல்வியில் தொடர்ச்சியாக ஈடுபடுவதைத் தடுப்பதாக அல்லது அதை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருந்து வருவதால் அவர்கள் அனைவரும் அன்றாடச் சவால்களைச் சமாளிக்கவே மிகவும் போராடி வருகின்றனர். இந்த சவால்களின் தாக்கத்தை பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் குடும்பங்களும், பெண்களும் மிகவும் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்றிருக்கின்ற யதார்த்தங்களைப் புறக்கணிப்பதன் மூலம் கலப்பு வழி கற்றல் குறித்த பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டிருக்கும் கருத்து குறிப்பு சமூகத்தில் சலுகை பெற்றவர்களுக்கு, செல்வந்தர்களுக்கு ஆதரவான சார்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
3. முழுமையற்ற கற்றல் செயல்முறை, குழுக்களுக்கு இடையிலான உரையாடல் இல்லாமை: இணையவழிக் கற்றல் முறை நேரடியான வகுப்பறைகளைப் போல அல்லாமல் தனிப்பட்ட ஒருவருக்கானதாகவே இருக்கிறது. இவ்வாறு தனிப்பட்ட கற்றல், தனிப்பட்டவர் விருப்பத்திற்கேற்ற பட்டங்கள் போன்றவற்றிற்கு இருக்கின்ற சாதகமான நேர்மறை அம்சங்களைப் பற்றி இதுவரையிலும் ஏராளமாக எழுதப்பட்டுள்ள போதிலும் அதற்கான ஆபத்துகளும் இருக்கவே செய்கின்றன. சகாக்களின் ஆதரவு, கூட்டு சிந்தனையும், புரிதலும் இல்லாததாக, தொடர் விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் உருவாகின்ற விமர்சன முன்னோக்கைப் பகிர்வது போன்ற செயல்பாடுகள் இல்லாததாக உள்ள இந்த தனிப்பட்ட கற்றல் முறை குழுவாகக் கற்றலுக்கு எதிரானது என்று குறிப்பிடப்படும் வகையிலே இருக்கிறது. இதுபோன்று கருவிகள் மூலமான இணையவழியிலான குழுரீதியான தொடர்புகள் இயந்திரமயமானவையாக, உந்துதலை ஏற்படுத்தாதவையாகவே இருக்கின்றன. ஆனால் நிறுவனக் கல்வி வெளிகள் நட்பு, நெருக்கமான நேரடித் தொடர்பு, கலாச்சார நடவடிக்கைகள், விளையாட்டு போன்றவற்றின் மூலம் உடல்ரீதியான நெருக்கமான குழுத் தொடர்புகளை வளர்த்தெடுக்கின்றன. இதுபோன்ற உந்துதல் வழிமுறைகள் அருவமான இணையவழிச் செயல்முறைகள் வழியாகக் கிடைப்பதில்லை. இணையவழி வகுப்புகளில் மாணவர்களின் நேரடி வீடியோ இருப்பைக் கட்டாயமாக்க முடியாது என்பதால் பெரும்பாலான ஆசிரியர்களால் உண்மையில் தாங்கள் கற்பித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் முகங்களைக்கூடப் பார்க்க முடிவதில்லை.
தொற்றுநோய் காரணமாக இணையவழிக் கற்பித்தலை நோக்கி உருவான இந்த மாற்றம் மிகச் சில படிப்புகள்/ துறைகளைத் தவிர்த்து பெரும்பாலானவற்றில் எதிர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் நீர்த்துப் போன வடிவில் ஆய்வக, களப்பணிகளை தாங்கள் எதிர்கொண்டது குறித்த அனுபவங்களை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். மாணவர்களுக்கான நேரடி அனுபவம் எதுவும் இல்லாமல் மிகக் குறைந்த அளவில்தான் அந்த தாள்களைக் கற்பிக்க முடியும்.
தொற்றுநோய் காரணமாக அப்போது உருவாகியிருந்த தனிமையால் அனைத்து வயது மாணவர்களிடமும் மனச்சோர்வு உள்ளிட்ட பிற மனநோய்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையையே இணையவழிக் கற்பித்தலை நோக்கி உருவான மாற்றம் உருவாக்கித் தந்தது. இந்த முக்கியமான அம்சத்திற்கான தீர்வைக் காண பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்து குறிப்பு எந்தவித முயற்சியையும் எடுத்திருக்கவில்லை.
III. இளங்கலை தாராள கல்வி
பல்கலைக்கழக மானியக் குழுவின் கலப்பு கற்றல் குறித்த கருத்து குறிப்பில் ‘ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேவையான கிரெடிட்டுகளைச் சேர்க்காத நிலையில் பல பாடங்களைச் சார்ந்த கதம்பமான படிப்புகளில் ஒரு மாணவர் ஈடுபட்டு தாராள கல்வியில் இளங்கலை பட்டம் பெறுவதற்கான வாய்ப்பை ஏபிசி திட்டம் வழங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அத்தகைய பட்டம் பெற்ற மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் அந்த கருத்து குறிப்பு பலத்த மௌனத்துடன் இருக்கிறது. ‘உங்கள் பட்டத்தை வடிவமைத்துக் கொள்ள அல்லது உங்கள் படிப்புகளை வடிவமைத்துக் கொள்ள’ என்று வெளிப்படையாக வழங்கப்படும் சுதந்திரத்தின் பெயரில் ஏபிசி, பிஎல் என்று முன்மொழியப்பட்டுள்ள இந்த புது மாடல்கள், தங்களுக்கான பயனுள்ள பட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பை மாணவர் மீதே சுமத்தி வைக்கின்றன என்பதால் தான் பெறுகின்ற பட்டத்தின் அடிப்படையில் தனது அடுத்த கட்ட நகர்வு, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு அந்த மாணவரே பொறுப்பாகி விடுகிறார்.
இந்த ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஏபிசியைப் போன்றதொரு நடவடிக்கையை உலகின் எந்தவொரு முன்னணி பல்கலைக்கழகமாவது இதுவரையிலும் மேற்கொண்டிருக்கிறதா? மாணவர்களை மையப்படுத்திய கற்றல் என்ற பெயரில் தன்னுடைய மாணவர்களை இதுபோன்று கதம்பமான படிப்புகளில் ஈடுபட அனுமதித்து – அதாவது குறிப்பிட்ட வகையில் எதனுடனும் இணைந்திராத குழப்பமான கதம்பமான பாடங்களைப் (கிரெடிட்) பயின்று – பின்னர் அதையே இங்கே சொல்வதைப் போல இளங்கலை தாராள கல்வியில் பட்டம் என்று உலகில் உள்ள புகழ்பெற்ற எந்தவொரு பல்கலைக்கழகமாவது கூறிக் கொள்ளுமா? இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்ற பலவகையிலான பாடங்களை ‘துறைகளுக்கு இடையிலான’ பாடங்கள் என்று சொல்வதன் மூலம் இந்த ஆவணத்தில் முழுமையான குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது; துறைகளுக்கு இடையிலான பாடங்கள் என்பவை மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கிரெடிட் வாங்குவதற்காக எந்தவிதத் தொடர்புமில்லாமல் தோராயமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படிப்புகளின் தொகுப்பு கிடையாது. துறைகளுக்கு இடையிலான பாடங்கள் உண்மையில் பாடத்திட்ட வடிவமைப்பின் அடிப்படையில் மிகவும் சவாலானவை. அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு மிகத் துல்லியமான அளவீடும், பாடத் திட்ட வடிவமைப்பாளர்களின் நிபுணத்துவமும் தேவைப்படும்.
மெனுவிலிருந்து தோராயமாக தனித்தனியாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்ற வழியிலே பாடத் தேர்வுகளை மாணவர்களிடம் விட்டுவிட முடியாது. இந்த ஆவணத்தின் ஒட்டுமொத்த தர்க்கமும் தனக்கு விருப்பமான சுதந்திரத்துடன் இருக்குமாறு மாணவரை முழுமையான நுகர்வோராக மாற்றுகின்ற வகையிலேயே இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற ஒப்புமை இந்த ஆவணத்தில் தவறாக இடம் பிடித்துள்ளது. ‘தனக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் குறித்து நுகர்வோர் ஒருவர் ஏற்கனவே நன்கு அறிந்திருப்பார், தான் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சிறந்த நீதிபதியாக அவரே இருக்க முடியும்’ என்ற கருத்துகளே நுகர்விற்கான ஒருவரது தேர்வைப் பொறுத்தவரை அடிப்படையாக இருந்து வரும் அனுமானங்களாக இருக்கின்றன. அவற்றை அனுமானிக்க முடியாத இடங்களில் தேர்வு செய்வதற்கான சுதந்திரம் எதுவும் நுகர்வோரிடமே தரப்படுவதில்லை. பல்வேறு மருந்து உற்பத்தியாளர்கள் வெளியிடுகின்ற தகவல் குறிப்புகளைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்ற நோயாளிகளிடமே தங்களுக்குத் தேவையான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை வழங்குகின்ற நடவடிக்கை பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா? கல்வியில் உள்ள பெரும் பிரச்சனை என்னவென்றால், மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பாடங்கள், அவற்றின் சிக்கல்களை முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள்; அதனாலேயே அவர்கள் மாணவர்களாக இருக்கின்றனர். அத்தியாவசியமான பாடங்கள் எவை, மற்ற துறைகளுடன் ஒன்றுடன் ஒன்று எந்த அளவிற்கு பாடங்கள் கலந்திருக்கின்றன, துறைகளுக்கு இடையிலான பாடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறியும் நிலையில் அவர்கள் இருப்பதில்லை. எனவே சில புள்ளிகளில் போதுமான நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கின்ற இறுக்கமான நன்கு வடிவமைக்கப்பட்ட அமைப்பில் மட்டுமே (இதைத்தான் துறைகளுக்குள் அல்லது அதற்கு மேற்பட்ட விருப்ப படிப்புகள் இப்போது செய்து கொண்டிருக்கின்றன) மாணவர்கள் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது பயனுள்ளதாக இருக்கும். மாணவர் ஒருவர் தன்னுடைய ஆசிரியர்களுடைய வழிகாட்டுதலுடன் தனது பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று கருதுவது, மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் தங்களுக்கான மருந்துகளை நோயாளிகளே வடிவமைத்துக் கொள்ளலாம் என்று தரப்படும் ஆலோசனையைப் போன்றதாகவே இருக்கும்.
மாணவர் ஒருவரால் அல்லது தனிப்பட்ட ஆசிரியர் ஒருவரால் பயனுள்ள முழுமையான பாடவேலைகளை தனித்து வடிவமைக்க முடியும் என்ற அனுமானம் அடிப்படை ஆதாரமே இல்லாததாகும். அவ்வாறு செய்து கொள்ள அனுமதிக்கும் போது, பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே பின்பற்றி வருகின்ற சிறந்த நடைமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு புறக்கணித்து விடுகிறது. பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்குகின்ற பட்டங்கள், பாடவேலைகளைப் பொறுத்தவரை பெயர் பெற்றவையாக உள்ளன. தில்லி பல்கலைக்கழகத்தில் பாடவேலைகள், பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு அனைத்து மட்டங்களிலான நன்கு நிரூபிக்கப்பட்ட வலுவான ஆலோசனை முறைகள் பின்பற்றி முன்னெடுக்கப்படுகின்றன. அதன் கூட்டு, பல அடுக்கு செயல்முறைகளே பரந்த அளவிலான தொழில்களில் மிகச் சிறப்பாகப் பயின்ற மாணவர்களை உருவாக்கும் திறனைக் கொண்டதொரு நிறுவனமாக அந்த பல்கலைக்கழகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு உதவியுள்ளன. 2015ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட தெரிவு முறை பாடத்திட்டமானது (சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம் – சிபிசிஎஸ்) பல்கலைக்கழகங்கள் வழங்கி வந்த படிப்புகளை வடிவமைப்பதில் அவற்றிற்கென்று இருந்து வந்த பங்கைப் பெரும்பாலும் குறைத்தது. அந்த முறை பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகும். பாடத்திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்வதில் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய சிறிய அளவிலான சுதந்திரம்கூட அங்கே கூட்டு ஜனநாயகம் மற்றும் சட்டரீதியான அமைப்புகளின் மூலமாகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
‘சுதந்திரம்’ என்ற பெயரில் இளங்கலை படிப்புகளை நீர்த்துப் போகச் செய்வது சிறந்த இளங்கலை பாடநெறியை உருவாக்குவதற்காக வலுவான தளத்தை நம்பியிருக்கின்ற கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த படிப்புகளில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும். பாடவேலைகளும், பாடத்திட்டங்களும் பட்டம் பெறுவதற்கான வழியை வழங்குவதைக் காட்டிலும் மிகப் பெரிய நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன. கல்வி என்பது உருமாற்றும் செயலாகும். உருமாற்றங்களையும், தனிநபரிடம் இயங்குதிறனையும் கொண்டு வருவதற்கான திறனைக் கொண்டிருப்பதன் காரணமாகவே அரசியலமைப்பால் கல்வி பொதுப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புகளை இவ்வாறு நீர்த்துப் போக அனுமதிப்பது அந்த நோக்கத்தையே முற்றிலுமாக அகற்றி, வெறும் பட்டம் என்றழைக்கப்படுகின்ற தாளை உருவாக்கும் இயந்திரம் என்ற நிலைக்கே பல்கலைக்கழகத்தை தரம் தாழ்த்தி விடும்.
IV. இதுபோன்றதாக ஒப்பிடக்கூடிய மாடல்கள் வேறெங்கும் இல்லை
இதுவரையிலும் உலகில் புகழ்பெற்ற எந்தவொரு பல்கலைக்கழகமும் தங்களுடைய வழக்கமான கற்பித்தல் திட்டங்களுக்கான அடிப்படை கற்பித்தல் பயன்முறையாக இங்கே முன்மொழியப்பட்டுள்ள அளவிலே கலப்பு முறைக்குச் சென்றிருக்கவில்லை. ஹைஃப்ளெக்ஸ் மாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு என்று இங்கே குறிப்பிடப்படுகின்ற சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் இணையதளம் கலப்பு கற்றல் என்ற வார்த்தையை கவர்ந்திழுக்கும் விஷயங்களில் ஒன்றாகக்கூட குறிப்பிட்டிருக்கவில்லை. மேலும் அந்த சொல் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான முன்னணி திட்டங்களுக்கான விளக்கத்திலும் நிச்சயமாக குறிப்பிடப்படவே இல்லை; உண்மையில் அந்த வார்த்தையை அதன் இணையதளத்தின் விரிவான தேடலில் காண்பதுவும் கூட மிகவும் கடினமாகவே இருக்கிறது. புகழ்பெற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களுடைய வழக்கமான படிப்புகளை வகுப்புகளில் நேருக்கு நேரான தொடர்புகளின் மூலமாகவே கற்பித்து வருகின்றன என்பதை இங்கே வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. கற்பித்தலுக்கு உதவியாகப் பல்வேறு மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் நேருக்கு நேர் கற்பித்தலுக்கு மாற்றாக அவை பயன்படுத்தப்படுவதில்லை. அது அவ்வாறாக இருக்கத் தேவையில்லை என்று கொண்டால், பெரும்பாலான அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கோவிட் பாதிப்புகள் குறைந்து வருகின்ற இந்தக் காலத்தில் ஏன் வளாக இருத்தலுக்கே திரும்பி நேரடி வகுப்பு கற்பித்தல் முறைக்கு வந்திருக்கின்றன அல்லது போதுமான வளாக உள்கட்டமைப்பின் வளர்ச்சியின் மூலம் கட்டுப்படுத்தப்படுவதாக அவை ஏன் இருக்கின்றன?
ஹார்வர்ட், எம்ஐடி, பிரின்ஸ்டன், ஸ்டான்போர்ட், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமாவது படிப்புகளில் கணிசமான பகுதியை பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இருந்து பயிலக் கூடிய வகையில் வசதிகளை உருவாக்கிக் கொடுத்து தன்னுடைய மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறையை வைத்திருக்கின்றதா? அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள கிரெடிட் பரிமாற்ற முறையைப் பற்றி நன்கு அறிந்துள்ள எவருமே அவ்வாறு பல்கலைக்கழகங்களுக்கிடையே கிரெடிட் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு மிகவும் கடுமையான நிபந்தனைகள் பயன்பாட்டில் இருப்பதை ஒப்புக் கொள்வார்கள். மேலும் பொதுவாக அதுபோன்ற கிரெடிட் பரிமாற்றங்கள் சில அடிப்படை படிப்புகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன; அதுவும் தங்களை ஒத்த அல்லது உயர்தர வரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் மட்டுமே அதுபோன்ற பரிமாற்றங்கள் அனுமதிக்கப்படுகின்றன. எப்படியிருந்தாலும் இந்த நடைமுறை அங்கே மிகச் சாதாரண நடைமுறையாக இல்லாமல், பல்கலைக்கழகத்தின் முடிவின்படி தீர்மானிக்கப்பட வேண்டிய விதிவிலக்காகவே உள்ளது (நிச்சயமாக மாணவரின் விருப்பப்படி இருக்கவில்லை).
V. இணையவழித் தேர்வுகள் மூலம் பட்டங்களை நீர்த்துப் போகச் செய்தல்
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து தில்லி பல்கலைக்கழகத்தில் இணையவழித் தேர்வுகளின் மூலம் கிடைத்திருக்கும் அனுபவங்கள் சரியாகத் திட்டமிடப்படாத தேர்வுகளின் உள்ளார்ந்த குறைபாடுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளன. மாணவர்கள் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறையைப் பயன்படுத்துவதை முழுமையாகக் கண்காணிக்காததால் அவர்களின் தரவரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தேர்வுகளில் நேர்மையற்ற தன்மையையே ஊக்குவித்திருக்கின்றன. மாணவர்கள் நேர்மையற்றவர்களாக மாறுவதற்கான பெரும் அழுத்தத்தைக் கொடுப்பவையாக இருப்பதால் இதுபோன்ற இணையவழித் தேர்வுகள் நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்பும் வகையிலேயே இருக்கின்றன.
இத்தகைய தேர்வு முயற்சிகள் தகுதியற்றவையாக இருந்த போதிலும், தேர்வுகள் இல்லாது தரப்படுகின்ற பட்டங்கள் அவற்றிற்கான மதிப்பிழப்புக்கே வழிவகுக்கும் என்றே அரசாங்கமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முடிவு செய்தன. 2020 ஜூலை முதல் திறந்த புத்தகத் தேர்வுகளை நோக்கி தில்லி பல்கலைக்கழகம் முன்னேறியது. அதுவும் பேரழிவை ஏற்படுத்துகின்ற முயற்சியாகவே அமைந்தது. ஏற்கனவே மாணவர்களிடையே இருந்து வரும் டிஜிட்டல் இடைவெளி தேவையான சாதனங்களைத் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய மாணவர்களுக்குச் சாதகமாக இருந்ததால், அத்தகைய தேர்வும் அனைவருக்கும் நியாயமானதாக இருக்கவில்லை. இந்த முறை இணையவழி படிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுமானால், அது நிச்சயம் தேர்வு முறைக்கான மதிப்பு, அதன் மூலம் பெறுகின்ற பட்டம் ஆகியவற்றிற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளையே ஏற்படுத்திக் கொடுக்கும். பெரும்பாலான வகுப்பறைகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் தீவிர மதிப்பீட்டுப் பயிற்சிக்கு ஏற்ற அளவிலே இல்லாததால், இறுதிக்கட்டத்தில் இல்லாத ஆண்டு / செமஸ்டர் மாணவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அசைன்மென்ட் அடிப்படையிலான மதிப்பீடுகளும்கூட குறைபாடுகளால் பாதிக்கப்படுபவையாகவே இருந்தன.
மதிப்பீடு குறித்தோ அல்லது அதன் சாதகங்கள் குறித்தோ கலப்பு கற்றல் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆவணத்தில் எந்தவொரு குறிப்பையும் காண முடியவில்லை. எந்தவொரு உயர்கல்வி நிறுவனமும் அவ்வாறு நியாயமான மதிப்பீட்டைச் செய்ய முடியாத நிலையிலே இருப்பதற்கு வெளிப்படையான காரணங்கள் இருக்கின்றன. மதிப்பீட்டிற்கென்று ஆகும் அதிக செலவுகள் அதை மேற்கொள்ளத் தடையாக இருக்கின்றன. பயிற்சி மையங்கள் போன்ற கல்வி தொடர்பான வணிக நிறுவனங்களின் மோசமான, நெறியற்ற நடைமுறைகள் குறித்து ஆசிரியர்கள் அமைப்புகள் வெளிப்படுத்திய அச்சங்கள் குறித்தும் அந்த ஆவணத்தில் விவாதிக்கப்படவில்லை அல்லது கருத்தில் கொள்ளப்படவில்லை.
VI. எதற்கான, யாருக்கான ‘தெரிவு’?
இணையவழி கல்வி குறித்து இப்போது இருக்கின்ற மூன்று ஆவணங்களையும் தேசிய கல்விக் கொள்கை – 2020இன் மற்ற பரிந்துரைகளுடன் (விரிவான தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019யில் உள்ளவாறு) சேர்த்து வாசிக்க வேண்டும். எந்தவொரு கல்விக் கொள்கையின் தாக்கமும் அது செயல்படும் மக்களின் சமூக-பொருளாதார கட்டமைப்புகளின் பின்னணியிலிருந்தே புரிந்து கொள்ளப்பட வேண்டும். கல்வி அமைப்பை முற்றிலுமாக மாற்றுகின்ற கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் மிக அதிகமானோருக்கு உதவுகின்ற வகையில் மலிவான தரமான கல்வியை வழங்கும், தரம் மற்றும் சம அணுகல் தொடர்பான பிரச்சனைகளைக் களைந்து விடும் என்பதை உறுதிபடுத்துவதற்கான எந்தவொரு ஆய்வையும் தேசிய கல்விக் கொள்கை – 2020 (விரிவான தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019யும் கூட) மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் அடிப்படை வழிகாட்டுதல் கொள்கைக்கு மாறாக உயர்கல்வியை மிகவும் செலவுள்ளதாக, அனைவராலும் அணுக முடியாததாக மாற்றி இடைவிலகலை அதிகரித்து, பெரும் பகுதியினரிடம் எவ்விதப் பயனுமற்ற பட்டங்களை அளிக்கும் வகையிலேயே இருக்கின்றன.
தேசிய கல்விக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ள சில முக்கிய மாற்றங்கள், அவற்றின் தாக்கம், கலப்பு கற்றல் பற்றிய கருத்து குறிப்பு, ஏபிசி ஆகியவற்றின் மீது பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்தை ஈர்க்கின்றோம்.
1. மானிய அடிப்படையிலான பொது நிதியளிக்கப்பட்ட கல்வியில் இருந்து கடன் அடிப்படையிலான கல்விக்கு மாறுவதையே தேசிய கல்விக் கொள்கை – 2020 வலியுறுத்துகிறது. அதன் விளைவாக பொது நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், மத்திய. மாநில பல்கலைக்கழகங்களைப் பராமரிப்பதற்கான சுமை பெற்றோர்கள், மாணவர்கள் மீதே மாறும். கல்வி நிறுவனங்களுக்குத் தரப்படுகின்ற மானியங்கள் மலிவான, தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. ‘தற்சார்பு’ மீதான இந்த உந்துதலுக்கு கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் என்று இருவரும் கடன் சுமைகளால் அழுத்தப்படுவார்கள் என்பதே பொருளாகும். கல்வி நிறுவனத்தின் கடன்கள் மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணமாக மாற்றியமைக்கப்படும் என்பதை இங்கே அங்கீகரிப்பது மிகவும் முக்கியமாகும். தரப்படுத்தப்பட்ட தன்னாட்சி வழங்கல் என்ற பெயரில் இந்த மாற்றத்தை ஏற்கனவே கண்டிருக்கிறோம். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட பல மத்திய பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டணத்தை அதிகரிக்க வழிவகுக்கின்ற வகையில் உயர்கல்வி நிதி நிறுவனத்திடமிருந்து (Higher Education Funding Agency – ஹெஃபா) கடன்களைப் பெற்றுள்ளன.
2. உயர்கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் 40,800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சுமார் 15,000 பல பாடப்பிரிவுகள் கொண்ட பெரிய நிறுவனங்களாகக் குறைப்பதற்கு தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019 பரிந்துரைத்துள்ளது. அந்த நடவடிக்கையின் மூலமாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று அது வாதிடுகிறது என்றாலும் கல்வி நிறுவனங்களின் தற்போதைய அளவு, அவற்றின் விரிவாக்கத்திற்கான சாத்தியம் குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. பொது நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களின் சமீபத்திய விரிவாக்கங்களான 2007ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (ஓபிசி) விரிவாக்கம், 2019ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான (ஈ.டபிள்யூ.எஸ்) விரிவாக்கம் ஆகியவை அவற்றிற்கான உரிய மானியங்களை ஒதுக்காமலேயே முறையான திட்டமிடல் இன்றி செய்யப்பட்டதால் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் பற்றாக்குறை அதிக அளவில் உருவாகியுள்ளது. அது கல்வியின் தரத்தை தீவிரமாகப் பாதித்துள்ளது. வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மாணவர்களின் அணுகல், அவர்களுக்கான கல்விக் கட்டணம் மீது பாதிப்பையே ஏற்படுத்தும்.
3. பல கட்டங்களில் வெளியேறும் வாய்ப்புகளுடன் வெவ்வேறு சான்றிதழ்களுடனான நான்கு ஆண்டு கால இளங்கலை படிப்புக்கு மாறுவது (FYUP) கல்விக் கொள்கையின் மற்றொரு பரிந்துரையாக உள்ளது. தற்போதைய மூன்று ஆண்டு திட்டத்தில் இருந்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை நோக்கி மாணவர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போட்டி அவர்களைத் தள்ளி விடும். பல கட்டங்களில் வெளியேறும் வாய்ப்புடனான கல்வி அமைப்பு பெண்கள், தலித்-பகுஜன் மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வியிலிருந்து வெளியேறும் வாய்ப்பை உருவாக்கும். அது பெரும்பாலும் பயனற்ற சான்றிதழ்கள், டிப்ளோமாக்களுடன் அந்த மாணவர்களை அமைப்பிலிருந்து வெளியேற்றி விடும். கிரெடிட்டுகளை எப்போது வேண்டுமானாலும் (பல நுழைவுப் புள்ளிகள் இருப்பதால்) சேகரித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம் அந்த மாணவர்களிடம் உருவாக்குகின்ற தவறான பாதுகாப்பு உணர்வு அவர்கள் கல்வியைக் கைவிடும் சதவீதத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
கல்விக்கான விரிவாக்கங்களுக்காக எந்தவொரு அரசு செலவினமும் வழங்கப்படாத நிலையில் வழக்கமான கல்வியை இணையவழிக் கல்வியை நோக்கி மாற்றுவதற்காக கொண்டு வரப்படும் இந்த மாற்றம் தீங்கை விளைவிக்கும் வழியாகவே இருக்கும். பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்து குறிப்பு உண்மையில் அத்தகைய மாற்றத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு குறித்துகூட (பிரிவு 6.4இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு) எந்தவொரு பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்தவில்லை. கல்விக்கான செலவில் வெளிப்படையாக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருப்பதால் இது பெரும்பாலான மக்கள் உயர்கல்விக்கு வருவதைத் தடை செய்யும். தற்போதுள்ள பொது நிதியளிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை அழிக்கவும், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இருக்கப் போகின்ற விபரீத வழியாகவே அது இருக்கும். வழக்கமான கல்வியைச் சீர்குலைப்பதால் தங்கள் இளங்கலை படிப்பிற்காக இணையவழி அல்லாத வகுப்புகளை அதிகரித்துக் கொள்ளவும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தங்களை மாற்றிக் கொள்வதற்குமான வாய்ப்பு உயரடுக்கினருக்கு இருக்கும். ஆனால் அதே வேளையில் சமூகத்தின் பின்தங்கிய அடுக்கினர், முதல் தலைமுறை மாணவர்கள், பெண்கள், தலித்-பகுஜன் மாணவர்கள் போன்றவர்கள் தங்கள் கல்விக்கான செலவினங்களைக் குறைப்பதற்கான முயற்சியில் இணையவழிப் பாடங்களை அதிகரித்துக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுவார்கள். வழக்கமான முறையான கல்வியில் சேர்வதற்கு விரும்பினாலும் அமைப்பிலிருந்து பயனற்ற பட்டங்களுடனே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆக இந்த கொள்கை உயரடுக்கினருக்கான தரமான முழுமையான கல்வியைப் பாதுகாத்து, அதிக ஊதியத்திலான வேலைகளை அவர்களுக்கு வழங்கிடும். ஆனால் பாதகமான பின்னணியில் இருந்து வருபவர்களின் கற்றல் சூழல், பட்டங்கள், வேலைவாய்ப்பு போன்ற வாய்ப்புகள் மீது அது அதிக பாதிப்பையே ஏற்படுத்தும். இந்தப் பிரிவுகளில் பெண்களே மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.
VII. பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்களின் பங்கு
நமது நாட்டின் அறிவுசார், கலாச்சார எல்லைகளை வரையறுப்பதில் பல்கலைக்கழகங்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன. அவை சகிப்புத்தன்மை, தாராளமயம், கல்விசார் சிறப்பு சூழலில் சமூக லட்சியங்கள், பகுத்தறிவு விழிப்புணர்வு போன்றவற்றிற்கான உறுதியான நோக்கத்தை வளர்த்தெடுத்துள்ளன. நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த தலைமுறையினர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பல்கலைக்கழகங்களுக்கான முக்கியத்துவத்தை உள்ளுணர்வாகப் புரிந்து கொண்டிருந்ததாலேயே, அனைவரையும் உள்ளடக்கி, சமத்துவ சூழலைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
அண்மைக் காலங்களில் பல்கலைக்கழகங்களின் சட்டரீதியான அதிகாரங்களை நிர்மூலமாக்குவதன் மூலம் அவற்றின் தன்னாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் திட்டமிடப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பல்கலைக்கழகங்களில் எஞ்சியிருக்கும் சிறிதளவிலான தன்னாட்சியையும் முற்றிலுமாகப் பறித்து விடப் போகின்றன. பல்கலைக்கழகங்களை தங்களின் திறனுக்கும் அதிகமான மாணவர்களைச் சேர்த்திடும் வெறும் பதிவு மேசைகளாக அவை தரம் தாழ்த்திடப் போகின்றன. தரமான கல்விக்கான தேவைகள் அதிகரித்து வருகின்ற வேளையில் அதனை நிறைவேற்றுவதற்கான ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்குப் பதிலாக இந்த கொள்கைகள் அந்தப் பொறுப்பைத் தவிர்த்து விடவே வழிவகுத்துத் தருகின்றன.
சமீப காலத்தில் பல்கலைக்கழக மானியக் குழு தங்களுடைய பாடங்களில் ஸ்வயம் படிப்புகளை இணைத்துக் கொள்ளுமாறு பல்கலைக்கழகங்களுக்கு பல கடிதங்களை எழுதியுள்ளது. அவ்வாறு சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் கிரெடிட்டுகளைப் பெற முடியும் என்று அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகங்கள் அதைக் கடைப்பிடிக்கத் தவறின. எனவே ஸ்வயம் விதிமுறைகள் – 2016 மூலம் பல்கலைக்கழகங்களுக்கு இருந்து வந்த சுதந்திரத்தை 25.3.2021 அன்று அறிவிக்கப்பட்ட ஸ்வயம் விதிமுறைகள் – 2021ஐக் கொண்டு பல்கலைக்கழக மானியக்குழு இப்போது பறித்திருக்கிறது. ஸ்வயமை கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளை ஸ்வயம் விதிமுறைகள் – 2016 வகுத்திருந்தது. அதில் இருந்த பிரிவு 4.4 ‘இந்த முடிவை எடுக்கும்போது அ) கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு பாடத்திட்டத்தை நடத்துவதற்கு பொருத்தமான கற்பித்தல் ஆசிரியர்கள் கிடைக்கவில்லை அல்லது ஆ) மாணவர்கள் விரும்புகின்ற குறிப்பிட்ட தாள்களை (படிப்புகள்) வழங்குவதற்கான வசதிகளை கல்வி நிறுவனத்தால் வழங்க இயலவில்லை – ஆனால் அவை ஸ்வயம் மேடையில் கிடைக்கின்றன இ) கல்வி நிறுவனத்தில் கற்பித்தல்-கற்றல் செயல்முறைக்கு ஸ்வயமில் வழங்கப்படும் படிப்புகள் துணைபுரியும் என்று கருதினால் ஸ்வயமின் இணையவழிப் படிப்புகளை அனுமதிப்பதை கல்விப் பேரவை கருத்தில் கொள்ளலாம்’ என்று கோடிட்டுக் காட்டியிருந்தது.
அந்த 2016ஆம் ஆண்டு விதி இப்போதைய ஸ்வயம் விதிமுறைகள் – 2021இல் காணப்படவில்லை. எனவே இப்போது பல்கலைக்கழகங்கள் ஸ்வயம் இணைணயவழிப் படிப்புகளை பின்பற்றுவது கட்டாயமாகிப் போனது. குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் வழங்கப்படும் மொத்த படிப்புகளில் இருபது சதவீதம் வரை ஸ்வயம் இயங்குதளத்தின் மூலமாக வழங்கப்படுகின்ற இணையவழி கற்றல் படிப்புகளை ஸ்வயம் விதிமுறைகள் – 2016 (பிரிவு 4.3) அனுமதித்தது; ஆனால் ஸ்வயம் விதிமுறைகள் – 2021 (பிரிவு 4.7). அதை நாற்பது சதவீதம் வரை எடுத்துச் சென்றிருக்கிறது. இவ்வாறான அதிகரிப்புக்கு ஆதரவாக எந்தவிதமான விளக்கங்களோ அல்லது ஆய்வோ வழங்கப்படவில்லை.
மறுபுறத்தில் தங்களுடைய பட்டப்படிப்பு பாடத் திட்டத்திற்கென்று ஒதுக்கப்பட்ட மொத்த கிரெடிட்டுகளில் 50% முதல் 70% வரை பிற நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட படிப்புகளிலிருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ள இப்போது வெளியிடப்பட்டுள்ள ஏபிசி விதிமுறைகள் குறித்த வரைவு அனுமதிக்கிறது. மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் நாற்பது சதவீத பாடத்திட்டங்களை (ஸ்வயம் படிப்புகள் தவிர) இணையவழியாக கற்பிப்பதற்கும், மீதமுள்ள அறுபது சதவீத பாடத்திட்டங்களை இணையவழி அல்லாத முறையில் கற்பிப்பதற்கும் அனுமதிக்கின்ற கலப்பு கற்பித்தல் மற்றும் கற்றல் முறை இருக்கின்றது.
இந்த மூன்று கொள்கைகளும் இணைந்து செயல்படும் போது பல்கலைக்கழகங்கள் என்ற ஒன்றே இருக்காது. ஆசிரியர்களுக்கு வேலையே இருக்காது. கல்வி நிறுவனங்களில் இருக்கும் அவர்கள் வெறுமனே பயிற்சியாளர்களாகவும், நிர்வாக ஊழியர்களின் நீட்டிப்பாகவும் மாற்றப்படுவார்கள். இதுபோன்று கற்பித்தலில் ‘கலந்து கொள்ளாத’ பல்கலைக்கழகங்களுக்கு நாட்டில் எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அவை எப்போதாவது நல்ல நிறுவனங்களாகக் கருதப்பட்டு உலகத் தரவரிசையில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கிடையில் இடம் பெறுமானால் எதைக் காரணமென்று சொல்வது? வேலைக்கான சந்தையில் பயனற்ற பட்டம் என்று அழைக்கப்படும் காகிதத்தை வழங்குவதாக மட்டுமே அத்தகைய பல்கலைக்கழகங்களின் பங்கு உள்ளது. இத்தகைய கொள்கை மாற்றம் மொத்த மாணவர் சேர்க்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் அது (i) ஏற்றவர்களாக தங்களை மாற்றிக் கொண்டவர்களின் சதவீதம் மற்றும் (ii) தகுதியான பட்டங்களைக் கொண்ட பட்டதாரிகளின் சதவீதம் ஆகியவற்றில் அதிகரிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.
உலகெங்கிலும் கிராமப்புறங்களுக்கு கல்வியை எடுத்துச் செல்வதற்கான முக்கிய வழிமுறையாக தொலைதூரக் கல்வி முறையே இருந்து வருகிறது. இருப்பினும் முழுமையான வளர்ச்சியை வழங்குகிறது என்ற அடிப்படையில் வழக்கமான கல்வி முறையையே மாணவர்கள் விரும்புகிறார்கள். பல்கலைக்கழகங்களே பல்வேறு பின்னணிகளுடன் உள்ள மாணவர்கள் தங்களுக்கிடையே தொடர்பு கொள்வதன் மூலம் புதிய சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளவும், உருவாக்கிக் கொள்ளவும், தங்களை நெறிப்படுத்துவதைக் கேள்விக்குள்ளாக்கவும் உதவி வருகின்றன. இதுபோன்ற இடங்களில் உள்ள ஜனநாயகத்தன்மையும், மாணவர்கள் – ஆசிரியர்களுக்கிடையிலான ஈடுபாடுமே பல்கலைக்கழகங்களை அறிவு உற்பத்தியின் மையங்களாக வைத்திருக்க உதவி வருகின்றன.
பொது நிதியளிக்கப்பட்டு இயங்கி வருகின்ற பல்கலைக்கழகங்களின் அழிவு என்பது தனியார் பல்கலைக்கழகங்கள் இன்றைக்கு எதிர்கொண்டு வருகின்ற போட்டியைக் குறைத்திடவே வழி செய்யும். அதன் விளைவாக தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற கல்விச் செலவு மேலும் பன்மடங்கு அதிகரிக்கவே செய்யும். வெறுமனே தொழில் தேவைகள், தொழில்துறையின் திறன் தேவைகள் அல்லது பட்டம் வழங்கும் பதிவு மேசைகளைப் பூர்த்தி செய்யும் நிலைக்கு பல்கலைக்கழகங்களின் தரம் தாழ்ந்து போய் விடக்கூடாது. கற்பிக்கும் விஷயங்கள், எவ்வாறு கற்பிக்கிறார்கள் என்பதற்காகவே பல்கலைக்கழகங்களும் ஆசிரியர்களும் பெயர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். பதிவுசெய்யப்பட்ட விரிவுரைகள் மூலம் இணையவழியில் கற்பித்தலானது மாணவர்-ஆசிரியருக்கிடையிலான தொடர்புகளை வெகுவாகக் குறைத்து விடும். இப்போது முன்வைக்கப்படுகின்ற கற்பித்தல் முறையானது ஆசிரியர் ஒருவர் விரிவுரை செய்யும் போது தனது வகுப்பில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டியதில்லை என்றே கருதுகிறது. வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அடுத்து என்ன என்பதை அவர்களைக் கணிக்கச் செய்வது போன்ற விஷயங்களை நிகழ்த்துகின்ற ஆசிரியர்களின் பதிவுசெய்யப்பட்ட விரிவுரைகளே மிகச் சிறந்த திறந்த வெளி இணையவழிப் பாடங்களாக இருக்கின்றன என்பதை பல்கலைக்கழக மானியக் குழுவும், கொள்கை வகுப்பாளர்களும் தங்களுடைய கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூடுதல் கண்காணிப்பு, ஆசிரியர்களை இலக்கு வைப்பது என்பதாக சமீப காலமாக இருந்து வரும் போக்கு இறுதியில் உரையாடலற்ற விரிவுரைகளின் சுத்திகரிக்கப்பட்ட பதிப்புகளை பதிவேற்றுவதிலேயே சென்று முடியும். அதன் விளைவாக இலக்கியம், வாழ்வியல், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் மிகவும் பாதிக்கப்படும். விழிப்புணர்வுள்ள குடிமக்களை உருவாக்குவது, ஜனநாயகமயமாக்கல், மாபெரும் ஒருங்கிணைப்புக்கான சமூக மாற்றம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கின்ற பங்கின் மீது நடத்தப்படுகின்ற நேரடித் தாக்குதலாகவே அது இருக்கும்.
தேவைப்படுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றொரு மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கிறது. இவையனைத்தையும் இணைத்து ஒன்றாகச் சொல்வதென்றால் இந்த கொள்கைகள் ஆசிரியர்களின் பணிச்சுமையை 75% – 80% குறைத்து விடலாம். இதனால் அரசின் செலவினங்கள் குறையும் என்பதால் அதுவே இத்தகைய மாற்றங்களுக்கான முக்கிய காரணியாக இருப்பதாகத் தெரிகிறது. நாடு முழுவதும் உயர்கல்வியில் 30,000க்கும் மேற்பட்ட கற்பித்தல் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர பணி நியமனங்களுக்காக லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஒப்பந்த பணி, தற்காலிகப் பணி போன்றவை ஆசிரியர்கள் படும் இன்னல்களை அதிகரித்துள்ளன. தில்லி பல்கலைக்கழகத்தில் 4500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் (கடந்த பத்தாண்டுகளில் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது) கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ள பதவிகளில் தற்காலிகமாகக் கற்பித்து வருகின்றனர். பணி நியமனம் குறித்து மூன்று முறை விளம்பரப்படுத்தப்பட்டது என்றாலும் அந்த விளம்பரங்கள் ஏதோவொரு காரணத்திற்காக காலாவதியாக அனுமதிக்கப்பட்டன. 2014-15, 2017, 2020ஆம் ஆண்டுகளில் சுருக்கமாக மிகச் சில நியமனங்கள் மட்டும் நடந்தன. இதுபோன்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு வேலையில்லாமல் செய்வது மட்டுமல்லாமல், ஆய்வாளர்களுக்கும், கல்வியாளர்கள் என்ற பணியைத் தேர்வு செய்ய விரும்புகின்ற மாணவர்களுக்கும் இந்த கொள்கை மாற்றம் வழியில்லாத முட்டுச் சந்தையே காட்டுகின்றது. வேலைக்குள் மிகவும் தாமதமாக நுழைவது, பணிப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு, மோசமான பணி நிலைமைகள், வேலையில் திருப்தியின்மை போன்றவை கற்பித்தல் தொழிலுக்கு மிகுந்த இழப்பையே ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற நிலைமை நீடிப்பது வருங்காலத்தில் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகம் பாதிக்கவே செய்யும்.
VIII. மாணவர்களின் வளாக வாழ்க்கை
வெறுமனே பாடத்திட்டங்கள், பாடநெறி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் என்பதாக மட்டுமே கற்றல் என்பது இருக்கவில்லை. வளாக வாழ்க்கை என்று தளர்வாக குறிப்பிடப்படுவதில் இருக்கின்ற ஒட்டுமொத்த ஈடுபாட்டின் சிக்கலான விளைவாகவே கற்றல் இருக்கிறது என்பதை வழக்கமான கல்லூரிக் கல்வியைக் கொண்டிருந்த அனைவரும் அறிந்திருப்பர். நட்பு, சக மாணவர்களுடன் கூடுதல், விளையாட்டுகள், கலாச்சார மற்றும் கலை நடவடிக்கைகள், குழு மற்றும் கழகங்கள், உல்லாசப் பயணம், விவாதங்களில் தீவிரமாக ஈடுபடுதல், சமூக மற்றும் ஜனநாயக மன்றங்களில் பங்கேற்பு, சிவில் சமூகம் மற்றும் பொது வெளியில் பரந்த ஈடுபாடு என்று மாணவர்கள் எதிர்கொள்கின்ற பலவிதமான அனுபவங்கள் வளாக வாழ்க்கையில் கிடைக்கின்றன. இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று அனைவரும் பரஸ்பரமான கல்லூரிச் சூழலை உருவாக்கிட தங்களுக்கிடையிலான கருத்துகள், சமத்துவமான சமூகத் தொடர்புகள் வழி சமுதாய மனப்பான்மையுடன் பங்கேற்கின்றனர்.
ஒரே சீரான கற்றல் – கற்பித்தல் செயல்முறைகள், சக மாணவர்களின் உதவிகளை அளிப்பதுடன் பெரும்பாலும் கல்விக்கு எதிரானதாக இருக்கும் வீட்டுச்சூழல்களாலும், வர்க்கம், சாதி, பாலினம் சார்ந்து பாரம்பரியமாக சமூகத்தில் இருந்து வருகின்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தன்னுணர்வாகப் பதிந்திருக்கும் இளமை நெறிகளாலும் மாணவர்களிடம் உருவாகின்ற தனிப்பட்ட பதட்டத்திலிருந்து அவர்களைத் தற்காலிகமாக மீட்டெடுத்து வைத்துக் கொள்ளும் இடங்களாக கல்வி நிறுவனங்கள் திகழ்கின்றன. தங்களுக்கான இந்த முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கும் கல்வி நிறுவனங்கள் சமத்துவமான, சுதந்திரமான கற்றல் சூழலை வழங்குவது மட்டுமல்லாது மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, நிறுவனம் குறித்த அடையாளத்தின் தொடர் பராமரிப்பு, வளர்ச்சி, மாணவர்களிடம் உருவாக்கி பதிய வைக்கப்படும் நிறுவனம் சார்ந்த பெருமையுணர்வு போன்றவற்றிற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மிகுந்த தன்னுணர்வுடன் வளர்த்தெடுத்து வருகின்றன.
அரசாங்கம் தொலைநோக்கற்று இருக்கின்ற இந்த கலப்பு கற்றல் முன்மொழிவில் உள்ளவாறு மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் வழக்கமான நேரடி வகுப்புகளின் குறிப்பிடத்தக்க பகுதியை இணையவழி வகுப்புகள், இணையவழி மதிப்பீடு என்று மாற்றுகின்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றால், ஏற்கனவே இருந்து வருகின்ற வளாக வாழ்க்கை என்பதே மிகுந்த துயரமான பாதிப்பிற்குள்ளாகி விடும்.
வழக்கமான முறையான கல்வியை 70-80% அளவிற்கு இணையவழிக்கு மாற்றுவது கல்வி அமைப்பில் மாணவர்களுக்கான பங்கைக் குறைக்கும் முயற்சியாகவே இருக்கிறது. மேலும் அது மாணவர்களின் ஜனநாயக இயக்கங்களை அகற்றுவதாகவும் உள்ளது. இதுபோன்று மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் இலக்காக கட்டண உயர்வு, சாதிப் பாகுபாடு, உதவித்தொகை மற்றும் அனைவரும் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சனைகளுக்கு எதிரான சமீபத்திய மாணவர்களின் இயக்கங்களே இருப்பது தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களாக இப்போது மட்டுமல்லாமல், பிற்காலத்திலும் அவர்களுடைய நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமாக உள்ள சகவாழ்வு, குழுவாகப் பணியாற்றுவது, தலைவர்களை உருவாக்குவது போன்றவற்றை கற்பிக்கின்ற வளமான வளாக வாழ்க்கை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது.
மொத்த மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்திற்கு மேல் இருபத்தைந்து வயதிற்குட்பட்டவர்களைக் கொண்ட நாடு பொதுக்கல்வி, சுகாதாரத்துறையில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானதாகும். இதில் செய்யப்படும் எந்தவொரு குறைப்பும் மலிவான உழைப்பு சந்தைக்கே நம்மை இட்டுச் செல்லும். மிகப் பெரிய மக்கள் தொகை தங்களுடைய திறன்களயும், உளவியல்ரீதியான ஆரோக்கியத்தையும் இழந்து விடுவதாகவே அது அமைந்து விடும்.
IX. முடிவுரை
தேசிய கல்விக் கொள்கை – 2020 கல்விக்கான நிதி வழங்குவதிலிருந்து விலகி கடன் அடிப்படையிலான கல்வி மாடலுக்கு ஆதரவாக மாறியிருப்பதால், பொது நிதியளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அது ஏற்படுத்தும் தீங்கை எதிர்த்து ஆசிரியர்களும், மாணவர் குழுக்கள் மற்றும் சங்கங்களும் போராடி வருகின்றனர். இதுபோன்ற கல்விக் கொள்கையின் விளைவாக மாணவர்களின் கல்விச் செலவு பன்மடங்காக உயரும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் அறிவு உற்பத்திக்கான தொடர்புக்கான பயனுள்ள ஒரே வழியாக இருக்கின்ற வகுப்பறைகளில் கிடைக்கும் தரமான கல்வியை பெரும்பான்மையான மக்கள் இனிமேல் இழக்க நேரிடும். நாடு முழுவதிலும் இருக்கின்ற கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான வாதங்களுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் நயவஞ்சகமான முறையில் இந்த தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொண்டு கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவதற்கான பாதையை நோக்கி விரைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. கல்வியின் மூலம் தங்களுடைய வாழ்க்கையில் மேல்நோக்கிச் செல்ல விரும்புபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற இந்தியா போன்றதொரு நாட்டில் கல்விக்கான நிதியளிக்கும் தனது உறுதிப்பாட்டைத் திரும்பப் பெறுவதில் அரசாங்கம் மிக உறுதியாக இருப்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.
மேலே உள்ள அனைத்து காரணங்களுக்காகவும் தேசிய கல்விக் கொள்கை – 2020 உடன் ஸ்வயம் ஒழுங்குமுறைகள் – 2021, ஏபிசி ஒழுங்குமுறைகள் வரைவு, கலப்பு கற்பித்தல் மற்றும் கற்றல் முறை குறித்த கருத்து குறிப்பு என்ற மூன்று ஆவணங்களும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.
ராஜீப் ரே
தலைவர், DUTA
ராஜீந்தர் சிங்
செயலாளர், DUTA
https://drive.google.com/file/d/1sBEb7XzntCRBsiuf3euOFF8iw25FZTQS/view
நன்றி: தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்
தமிழில்: தா.சந்திரகுரு