புலம்பல் – ஏ.ஆகாஷ்பத்து மாசம் சுமந்தேன் – உன்னை
பக்குவமாய் என்னிலிருந்து பிரித்தேன்
பால் கொடுத்து வளர்த்தேன்-தினம்
பாதுகாப்பைக் கொடுத்தேன்..

நீதான் செல்வம் என்று
செல்லம் கொடுத்தேன்..
உனக்காக மட்டும் தான்
பத்தியங்கள் எடுத்தேன்..

தவழ்ந்து நீ போகையில்
பார்த்து பார்த்து இரசித்தேன்-என்
கன்னத்தில் நீ அறைகையில்
வலி மறந்து சிரித்தேன்..

நீ அழுகும் குரல் கேட்டு
என் மனம் துடித்தேன்..
குறும்புகள் நீ செய்தாலும்
வலிக்காமலே அடித்தேன்..

எனக்கு பசி இருந்தாலும்
உன் பசியைத் தீர்த்தேன்
உன்னை காணாத நேரம்
மனம் பதைத்து வேர்த்தேன்..

உனக்கெதனா ஆகுமுன்னு
பல பொருளை வெறுத்தேன்..
தந்தை உன்னை அடித்தாலும்
எதற்கு என்று முறைத்தேன்..

வேலைப் பல இருந்தாலும்
வேளைத் தவிராமல் உனை பார்த்தேன்
என் தூக்கம் போனாலும்
இரவெல்லாம் உனைக் காத்தேன்..

நீ வளரும் வரை உனக்காக
எதையும் செய்தேனப்பா..
நீ வளர்ந்த பிறகு எனக்காக ஏதாகிலும்
செய்வாய் என்று எதிர்ப்பார்க்காமல்..

நானுன் வீட்டில்
ஓரமாக இருப்பது
பாரமாகக் கூட இருந்திருக்கலாம்
உனக்கு..

நான் நன்றாய் இருக்க
முதியோர் இல்லத்தில் சேர்த்தாய்
அதினால் எனக்கு வருத்தமில்லை..
ஆனால்..

ஒருமுறைக்கூட என்னை
வந்து பார்க்காமல்
இப்போதாவது வந்து பார்த்தாயே
என்று கதறுகிறாள்..
♥கல்லறைக்குள் தாய்♥

ஏ.ஆகாஷ்
கடுக்கலூர்