​இ.எம்.எஸ். கலைவாணன் எழுதிய "வண்ணத்துப்பூச்சிகள் அருவருப்பானவை" கவிதை தொகுப்பு | E.M.S.Kalaivanan's Vannathupoochikal Aruvaruppanavai Tamil Book Review | புதியமாதவி | www.bookday.in

​இ.எம்.எஸ். கலைவாணன் எழுதிய “வண்ணத்துப்பூச்சிகள் அருவருப்பானவை” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“வண்ணத்துப்பூச்சிகள் அருவருப்பானவை” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

விந்துகளால் நிறைந்த வீடு

புதியமாதவி.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபிங்காளி தேவி தாமே பாலியல் தொழிலாளியாக இருந்தவர். அவர் எழுதிய ‘காமினி களங்கா’ (Kamini Kalanka)
என்ற கவிதை நூல் இந்தியாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் எழுதிய ஆரம்பகால கவிதைத் தொகுப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மராத்தி மொழி கவிஞர் நாம்தேவ் தசலில் கவிதைகள் அவர் வளர்ந்த காமாட்டிபுர வாழ்வின் அனுபவமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. 1972ல் வெளியான நாம்தேவின் முதல் கவிதை தொகுப்பு ‘கோல்பிதா’ (GOLPITHA)

காமாட்டிபுரத்தின் ஒரு பகுதியின் பெயர். அங்கு வாழ்ந்த பாலியல் தொழிலாளிகள், தரகர்கள், குற்றவாளிகள், தெருவோர மக்கள் ஆகியோரின் உலகத்தை அவர் கவிதையாக்கினார்.

அவருடைய புகழ்பெற்ற ‘காமட்டிபுர ‘ கவிதையில் நாம்தேவ் காமட்டிபுரத்தை வெறும் பாலியல் தொழிலின் இடமாக மட்டும் பார்க்கவில்லை. அது:

*வறுமையின் சின்னம்
*உடல்சுரண்டலின் சின்னம்
*சாதி மற்றும் வர்க்க ஒடுக்குமுறையின் சின்னம்
*அதே நேரத்தில் அதுவே எதிர்ப்பின் சின்னம்
என்று பல அடுக்குகளில் அதை விவரிக்கிறார்.
“காமட்டிபுரமே
உனது அக்குளில்
எல்லா பருவங்களையும்
சுருட்டி வைத்துக் கொண்டு
சேற்றில் அமர்ந்திருக்கிறாய்.
சந்தையின் இன்ப துன்பங்களைத் தாண்டி
சேற்றில் மலரும் உன் தாமரைக்காக
காத்திருக்கிறேன்.”

என்று அக்கவிதையில் அந்த இருண்ட உலகத்திலும் மனித கண்ணியமும் வாழ்வின் மீதான நம்பிக்கையும் இருக்கிறது என்று முடித்திருப்பார்.
தன் சுயசரிதையாக தன் பாலியல் தொழிலில் வாடிக்கையாளர்களாக வரும் ஆண்களைப் பற்றியும் அவர்களின் உரையாடலில் வெளிப்படும் “ஆண் திமிர் ‘ மனப்பான்மையையும் கூர்மையாக பதிவு செய்திருக்கிறார் நளினி ஜமீலா .

கவிஞர் இன்குலாப், புதியமாதவி ஆகியோரின் கவிதைகள் ஒரு சில இத்தொழிலின் பெண்ணிய உணர்வுகளைப் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் ஒரு ஒட்டுமொத்த தொகுப்புமாக வெளிவந்திருக்கும் கவிஞர் இ. எம். எஸ். கலைவாணன் கவிதை தொகுப்பு ‘வண்ணத்துப்பூச்சிகள் அருவருப்பானவை ‘ கவிதைகள் ஒவ்வொரு பக்கமும் இதன் இருண்ட பக்கங்களை நம் சமூக விமர்சனத்துடன் ஆவணமாக்கி இருக்கிறது. பாலியல் தொழில் என்பதை இக்கவிதைகள் பொருளாதார வர்க்க பிரச்சனையாகவும் தனிமனித ஆண் பெண் உறவின் விரிசல்களாவும் சேர்த்தே பதிவு செய்திருப்பது இத்தொகுப்பின் மையக்கருத்தை முழுமையடைய செய்திருக்கிறது.

ஓரு ஆள் படுக்கும்
ஒற்றை மரக்கட்டிலோடு
சிறிய அறை
ஆடை அணிகலங்களுடன்
ஒரு பொம்பள சாமி காலண்டர்.
அம்மணமான இருட்டில்
வீட்டுக்குள் வீடுகட்டும் வலையான்கள்
பாதி உயிரில்லா பல்பு.
வாழ்க்கையிழந்த சிகரட் துண்டுகள்
எச்சிலுமிழ்ந்த பான்பராக் கவர்கள்
கண்ணீர் கறை தலையணை
தண்ணீர் படாத போர்வை.
சட்டையும் வேட்டியும் போட
தொங்கவிடும் கொக்கிகள்
கன்னம் வற்றிய சொம்பு
மெலிந்த கப்பு
கழற்றிய கண்ணாடி
மணிபர்சு வைக்க
உறுதியிழந்த இரும்பு ஸ்டாண்ட்
பணம் பெற்ற பிறகு
வியாபாரம் நடக்கும் ஒரே தொழில்
பணபரிவர்த்தனைக்குப் பின்
மேல் ஆடையில்லாமல் நான்.
கீழாடையில்லாமல் அவன்.
உருவி எறியும் ஆணுறை விழ
மூலையில்
ஒரு குப்பைக் கூடை
இப்படித்தான்
விந்துகளால் நிறைந்த
என் வீடு “
(பக் 18 & 19)

இந்தக் கவிதை அதன் இறுதி வரியில் உச்சம் தொட்டிருக்கிறது. ‘விந்துகளால் நிறைந்த என் வீடு’ என்பது வெறும் உடலுறவின் எச்சத்தைக் குறிப்பதல்ல. அந்த அறைக்கு வந்துப்போகும் எண்ணற்ற வாடிக்கையாளர்களின் ஆசைகள், பெண்ணின் உழைப்பு, வறுமை, துக்கம், வாழ்வாதார போராட்டம் ஆகியவற்றின் திரட்சியான உருவகமாக மாறுகிறது. இக்கவிதை நேரடியான அலங்காரமற்ற மொழியில் வலுவான கவிதைப்பிரதியின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இக்கவிதை ஒரு தனிப்பட்ட பாலியல் தொழிலாளியின் அறையை விவரிப்பது போல தோன்றினாலும் உண்மையில் அது உடல், உழைப்பு, மூலதனம் , பாலின அதிகாரம் மற்றும் சமூக ஒதுக்கலின் அரசியலைப் பேசும் ஆவணமாகி இருக்கிறது.

பெண்ணியக் கோட்பாட்டின் வாசிப்பில், இக்கவிதை பெண் உடலை வெறும் காமப்பொருளாக மட்டும் அல்லாமல், வாழ்வாதாரத்தின் கருவியாகவும் இருப்பதை முன்வைக்கிறது. பெண் உடல் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அரசியல் வெளியாக கருதப்படும் அடுத்தப் பக்கத்தையும் சேர்த்தை வாசிக்கிறது.

“பணம் பெற்ற பிறகு
வியாபாரம் நடக்கும்
உலகின் ஒரே தொழில்”

என்ற வரிகள் பாலியல் தொழிலை ஒழுக்கவியல் கண்ணோட்டத்தில் மட்டும் அணுகாமல் உழைப்பின் கண்ணோட்டத்தில் அணுகி அதில் பெண்ணுடல் உழைப்பு வேறுபடும் புள்ளியை மிகவும் நுண்ணியப் பார்வையுடன் பதிவு செய்திருக்கிறது.

மார்க்சியப் பார்வையில் இக்கவிதை உடலின் பண்டமாக்கலை (Commodification of the Body) சித்தரிக்கிறது. பாலியல் தொழிலாளில் தன் உடலையே சந்தையில் விற்பனைப் பொருளாக்கி இருப்பதன் சமூக காரணிகளை சமூக கட்டமைப்பை பேசுகிறது.

அறையில் காணப்படும் ஒவ்வொரு பொருட்களும் வறுமையின் அடையாளங்களாக இருக்கின்றன. ஒற்றைக் கட்டில், பாதி உயிருள்ள பல்பு, தண்ணீர் படாத போர்வை, உறுதியிழந்த இரும்பு ஸ்டாண்ட் இவை அனைத்தும் பொருளாதர பற்றாக்குறையின் குறியீடுகள். வறுமையும் பாலியல் தொழிலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதை இக்கவிதை ஆழமாக முன்வைக்கிறது.

மைக்கல் ப்ஃகுல்ட் (Michel Foucault) முன்வைத்த உடல் அதிகார கோட்பாட்டின் பார்வையில் பார்க்கும்போது இந்த அறை ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட இடமாகத் தெரிகிறது, உடல் இங்கு தனி நபருக்குச் சொந்தமானதல்ல. சந்தைக்கும் வாடிக்கையாளருக்கும் சமூக ஒழுக்க நெறிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ளது,
இக்கவிதையின் கடைசிவரி, ‘விந்துகளால் நிறைந்திருக்கிறது என் வீடு” என்பது உயிரியல் உண்மையைச் சொல்வதல்ல, அது ஆண் ஆதிக்கத்தின் தடயங்கள் அறை முழுவதும் பரவி இருப்பதைக் குறிக்கிறது. பெண்ணின் வாழ்க்கை, பெண் உடலுக்கான இடம் ஆணின் ஆசைகளால் அதன் எச்சங்களால் நிரம்பி இருக்கிறது. பெண்ணுடலுக்கான தனி இடமோ ஆசையோ இல்லை.

தலித் பெண்ணிய கோட்பாட்டில் பெண்ணின் ஒடுக்குமுறை பாலினத்தால் மட்டுமல்ல, சாதி, வர்க்க தொழில் ஏற்றத்தாழ்வுகளால் தீர்மானிக்கப்படுகிறது . இக்கவிதையில் பேசப்படும் பெண்ணும் நடுத்தர வர்க்க பெண்ணல்ல, அவள் விளிம்பு நிலைப் பெண். அவளுடைய அறை சமூக விளிம்பு நிலை வாழ்வின் பிரதியாக நிற்கிறது. இங்கு “வீடு” என்பது பாதுகாப்பின் இடமல்ல, அவள் இருத்தலுக்கான போராட்டக்களம்.

சமூக உற்பத்தியாக இடம் (Production of Space) என்ற பார்வையில் இந்த வீடு வெறும் கட்டிடம் அல்ல, இது அதிகார உறவுகள், பொருளாதர தேவைகள் மற்றும் பாலின அரசியலால் உருவாக்கப்பட்ட சமூக இடம்.

வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் அவர்களின் உடல் எச்சங்கள் ,புகை, பான் பராக்க் கவர்கள் மட்டுமே அறையில் அவர்களின் வருகைக்கான அடையாளமாக தங்குகின்றன. வாடிக்கையாளர்களின் நினைவகமாக இந்த அறை காட்சி அளிக்கிறது.

இக்கவிதை பாலியல் தொழிலைப் பற்றிய இரக்க கவிதை மட்டும் அல்ல. இது ஒரு சமூக ஆவணம். உடலின் சந்தைமயமாக்கல், பெண்ணின் உடல் உழைப்பு, வறுமை, ஆண் ஆதிக்கம், சமூக விளிம்பு நிலை ஆகியவற்றை ஒரே அறையின் படிமங்களாக்கி இருக்கிறது.

இத்தொகுப்பின் கவிதைகள், சமூகத்தால் “ஒழுக்க கேடாக” ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தை கவிதையின் மையப்பொருளாக்கி அந்த இட்த்தை ஓரு சமூக அரசியல் களமாக்கி “வீடு” என்பதன் புனிதக் கருத்தை தலைகீழாக்கி உயிர்வாழ்வின் கொடூரமான பொருளாதரத்தை வர்க்கத்தை மையம் விளம்பின் அதிகார வெளியை கவிதைகளாக்கி இருப்பதில் தமிழ் இலக்கியவெளியில் தனித்துவம் பெறுகிறது.

கவிஞர் கலைவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள் .

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“வண்ணத்துப்பூச்சிகள் அருவருப்பானவை” கவிதை தொகுப்பு
ஆசிரியர்:​இ.எம்.எஸ். கலைவாணன்
வெளியீடு:
களம் புதிது – மே 2026
விலை: 
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 புதியமாதவி, மும்பை.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *