இட ஒதுக்கீடு
…….
சிகரத்தில்
சிரிக்கும் பூக்களா
தரைக்குப் பாய்
விரிக்கும்
பிரம்மன்
தலைக்குள்
பிறந்தவனெப்படி
ஏழையின்
பட்டியல் வளைக்குள்
வருவான்
கூவம் நதியோரம்
குடிவாழ்ந்து
பசியாற்றியதுண்டா
கொசுக்களுக்கு
மாநகராட்சி
பள்ளிக்கு அனுப்பி
மதிய உணவு
உண்டதுண்டா
பிள்ளைகள்
பத்துக்கு பத்து
அறைகள் கொண்ட வீடா
வானத்தை
அண்ணாந்து பார்க்கும்
அடுக்கு மாடியா
இதில் எது சிறந்தது
மதில் ஏறி யார் அளந்தது
நீதியின் கண் மறந்தது
ஆதியில் பிறந்தவனை
சாதியால் பிரித்து
நாதியற்றவனாக
மாற்றியவனுக்கா
நியாயம் படைக்கிறது
நீதிகள்?