ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்10. காதுகளின் மூலப் பிரச்சனைகளைத் தேடி..

மழைக்கால இரவு. தவளைகள் கோரசாக இன்னிசைத்துக் கொண்டிருக்கிற ரம்மியமான பொழுது. வெளியே பிறைநிலா தெளிந்த வானம். அதைச் சுற்றிலுமாக கோட்டை கட்டி அதிலேயே லயித்திருந்தது வெளிர் நிலா. ஆங்காங்கே விண்மீன்கள் மின்னி மின்னி மறைந்தபடி இருந்தன. நீண்ட நேரமாகவே மொட்டை மாடி இரவில் நின்று அந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த இரவின் சங்கீதம் என்னுள்ளே மிதந்து மிதந்து வந்து இதயத்தின் ஆழத்தை நோக்கிச் சென்று இதமாக வருடியபடியே இருந்தது.

கண்களை மூடிக்கொண்டு அந்த ஒட்டுமொத்த மழைக்குப் பிந்திய இரவின் கான ஸ்வரங்களை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். மேலே தாழ்வாரத்திலிருந்து நிதானித்துச் சொட்டுகிற மழைத்துளியின் துல்லியமான சப்தங்களைக்கூட என்னால் கேட்க முடிந்தது. மெல்லிசையுடன் காதுக்குள் நுழைகின்ற மென் குளிர்காற்று, கிர்ர் கிர்ர் என்று சப்தமிடுகிற வெட்டுக்கிளிகள், விட்டுவிட்டுக் குரல் எழுப்புகிற மழைக்கு ஒதுங்கிய மஞ்சள் மைனாக்கள், அவ்வப்போது தேங்கிய குட்டையில் யாரோ நடக்கிற அசைவின் சலசலப்புச் சப்தம் மற்றும் அந்த இரவிற்கே உரித்தான திவ்யமான மௌனம். இவை எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக காதுகளை விடைத்து விடைத்துக் கேட்கிற முயல்குட்டிகளைப் போல எவ்வளவு நேரம் அந்த அகால இரவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

பட்டென்று முட்டை உடைபட்டு உள்ளிருந்து ஒரு ஜீவன் வெளிப்படுவது போல ஒரு வெளிச்சம் எனக்குள்ளிருந்து உடலெங்கும் பரவுவது போன்றதோர் உணர்வு. அந்த நிச்சலமான நிமிடத்தில் இன்னும் கண்டறியப்படாத பிறவிக் குறைபாடுடைய அத்தனை குழந்தைகளையும் தேடிப்பிடித்து அவர்களையெல்லாம் சரிசெய்த பின்பாக யாவரையும் இங்கே அழைத்து வந்து இந்த இரவினூடே கசிந்து வழிகின்ற மழைக்குப் பின்பான உற்சவம் கூடிய கான இசையைக் கேட்டு இரசிக்கச் செய்ய வேண்டுமென்கிற ஆசையில் மனமோ ஏங்கித் தவித்தது. அவர்களின் பன்னீர் பூக்களைப் போன்ற ஒடிசலான அழகிய பிஞ்சு விரல்களைப் பிடித்தபடியே நீண்ட நேரம் மொட்டைமாடி இரவில் நின்று கண்களை மூடி இரவெல்லாம் இந்த இசையைக் கேட்டு தியானித்தபடி அமர்ந்திருக்க வேண்டும் என்ற தவிப்போ என்னுள்ளே மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

இந்த நிமிடத்தின் ஈரக்காற்றில் மிதந்து வருகிற காற்றின் ஓசை, மழைத்துளிபட்டு எழும்புகிற மண்ணின் ஈர வாசம், சில்லிட்டு சிலிர்த்து நிற்கிற சருமத்தின் மயிரிழைகள், கண்முன்னே காற்றின் விளக்கொளியில் நடனமாடும் ஈசல்கள், அடர் இருட்டினுள் காற்றிலிட்ட புள்ளிக்கோலம் போல மிளிருகிற மின்மினிப் பூச்சிகள் இவையாவற்றையும் இரசித்துக் குதூகலமடைய இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் நான் வாஞ்சையோடு கற்றுக் கொடுக்க வேண்டும். பின்பு கண்களை மூடியபடி முழுக்க முழுக்க காதுகளின் ஒட்டுமொத்த சப்தங்களாலே இந்த உலகின் விசித்திரங்களையெல்லாம் ஆசைதீர அனுபவித்துப் பார்க்கச் சொல்லி அதன் தரிசனங்களை அவர்களின் வார்த்தைகளினாலே சொல்லக் கேட்டு அதிலேயே நான் லயித்துக் கிடக்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது.

மொட்டைமாடியிலிருந்து கீழிறங்கி வந்தபோது அறைக்குள்ளே குளிர் கலைந்து கதகதப்பை மூட்டிக் கொண்டிருந்தது. மாலை வேளையில் வாசித்துவிட்டு வைத்த புத்தகத்தின் அதே பக்கங்கள் மேசையின் மீது ஏற்றிய மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அப்படியே உறைந்து போய் இருந்தது. மெழுகுவர்த்தியோ அதன் பேனா முனை போன்ற கூரிய மஞ்சள் கண்களால் அங்குமிங்கும் காற்றுக்கு அசைந்தபடி அந்த பக்கத்தையே நீண்ட நேரமாக சலிப்பின்றி வாசித்துக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு ஜூவாலையின் நிசப்தமும்கூட ஏனோ அந்த பேசாத குழந்தைகளின் மௌனத்தையே நினைவூட்டுவதைப் போல கண்முன்னே மேசையில் தலையாட்டியபடி என்னுடன் ஏதோ பேசுவதற்கு முற்படுவது போல அப்படியே தள்ளாடியபடியே இருந்தது.

அறைக்குள்ளே கடிகார முட்களின் நகர்வுகள் மிகவும் தெள்ளத் தெளிவாக கேட்டது. காலம்! ஆம், எல்லாம் காலம்தான். நான் பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளைத் தேடுகிற, அப்படித் தேடிக் கண்டடைந்து குணப்படுத்த முனைகிற ஒவ்வொறு முயற்சியுமே எங்கோ ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை மாற்றிவிடப் போகிற ஒரு சிறு பொறி என்பதை அந்த கடிகார முட்களின் நகர்வுச் சப்தம் எனக்கு நினைவூட்டுவதைப் போலவே இருந்தது. அதுவோ சாளரத்தின் மீதிருந்து கத்துகிற ஒரு கவுளிச் சத்தத்தைப் போல எதையெதையோ எனக்கு ஞாபகப்படுத்துவதாகவும் இருந்தது.

மருத்துவக் கல்லூரியின் மூன்றாமாண்டு பாடமான காது மூக்கு தொண்டை புத்தகத்தை எடுத்து வைத்து இப்போது இன்னும் மிக நெருக்கமாக மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன். இந்தப் புத்தகத்திலிருந்து தான் இக்குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை, எதனால் இப்படியெல்லாம் ஏற்படுகிறது என்கிற விவரங்களை பெற்றோர்களுக்குப் புரிய வைத்தாக வேண்டும். இரவிலே கண்களை உருட்டி உருட்டி எங்கள் பாட்டி சொல்லும் சாகசக் கதைகளைப் போல இப்புத்தகத்திற்குள்ளும் இத்தகைய குழந்தைகளின் எதிர்கால வாழ்வை மாற்றியமைக்கப் போகிற எத்தனையோ சாகசக் கதைகள் புதைந்திருக்கக்கூடும் என்கிற ஆர்வமும் பரசவமும் ஒருசேர என்னை தொற்றிக் கொண்டது.

காது கேளாத பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு அப்படி என்னதான் தீர்க்கவே முடியாத பிரச்சனை வந்துவிட்டது என்று புரிந்து கொள்வதற்கோ காது அடுக்குகளில் குறிப்பாக உள்காதுகளைப் பற்றிய இரகசியங்களை இன்னும் சற்றுக் கூடுதலாக பெற்றோர்களுக்கு நான் விளக்கியாக வேண்டும். உண்மையில் உள்காதுக்குள்ளே தான் கேட்டலின் பல அற்புதங்கள் நிகழுவதைப் போல அங்கேதான் எல்லா பிரச்சனைக்குமான காரணமும் இருக்கிறது. அதனால் தான் இப்பெற்றோர்களுக்கு உள்காது பற்றிய சாகசங்களை அதன் சமாச்சாரங்களை மிக நுணுக்கமாகவும் அதேசமயம் மிக எளிதாகவும் நான் இப்போது விளக்கியாக வேண்டியிருக்கிறது.

Sound-waves-mechanism-hearing-ear-canal-membrane.jpg

காது கேட்டலில் வெளிக் காதிலிருந்து வருகிற சப்தங்களோ உள்வாங்கப்பட்டு காது துளையின் வழியே சவ்வு வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தங்குதடையின்றி போய் சேர்ந்துவிடுகிறது. ஆக, வெளிக்காதில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றாகிவிட்டது. அடுத்து அந்த சப்தமும் சவ்வில் பட்டு அதனோடு இணைந்த குட்டி குட்டி எலும்புகளை அதிரச் செய்வதன் வழியே அது உள்காது வரைக்குமே சரியாகச் சென்றுவிடுகிறது. ஆகவே நடுக்காதிலும் எந்தப் பிரச்சனையுமில்லை என்பது தெளிவாகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு வெளிக்காதில் காது அழுக்கு, தண்ணீர் சென்று அடைத்துக் கொள்ளுதல் போன்ற பிரச்சனையும், நடுக்காதில் காது சவ்வில் ஓட்டை விழுதல், காதில் சளி பிடித்துக் கொண்டு சீல் வடிதல் போன்ற பிரச்சனைகளும் வந்து காது கேட்டலில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு. ஆனாலும் இவற்றை மருந்து மாத்திரைகளால் சுலபத்தில் சரிசெய்துவிட முடியும். ஆனால் உள்காது தொடர்பாக வருகிற விவகாரங்களோ முழுக்க முழுக்க நரம்புகள் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களாகவே இருப்பதால் அவற்றை அவ்வளவு எளிதாக குணப்படுத்த முடிவதில்லை.

காது சவ்வினால் அதிர்வுக்குள்ளாகி முன்னும் பின்னுமாக அதிருகிற நடுக்காது எலும்புகளும் உள்காதிலிருக்கிற காக்ளியா என்கிற பகுதியின் மேலே போய் முட்டுக்கிடா மாதிரி ஒவ்வொரு அதிர்வுக்கும் ஏற்ப முட்டி முட்டி வருகிறது. அந்த முட்டுதலுக்கு ஏற்ப காக்ளியாவின் கடலிற்குள் உண்டாகிற அலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிற மின்சாரத்தால் தான் இந்த கேட்டல் நிகழ்வே நடைபெறுகிறது. இந்த காக்ளியாதான் நாம் மிகவும் கவனம் கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான பகுதி. மழைக்கால மண் பாதையில் மெல்ல மெல்ல ஊர்ந்து வருகிற நத்தை ஓடுகளைப் போலத்தான் இந்தக் காக்ளியா ஓடும் இருக்கிறது. ஒரு மண்ணுளிப் பாம்பு சுருண்டு படுத்திருப்பதைப்போல ஒன்று, இரண்டு, இரண்டரை சுற்றுகளாக சுற்றியபடி காக்ளியாவும் மண்டையொட்டிற்குள்ளே சுருண்டபடியே கிடக்கும். இந்த காக்ளியா ஓடுதான் மின்சாரத்தை தயார் செய்கிற உறுப்பு, எந்திரம், பேட்டரி எல்லாம். அது எப்படி?

bZLl7vOopy4JrRaPcpkKDMxNPW_bQk5ALNocVql8tv5lMhq8NZsqYJkEu3pa4LIM-CVePCkPh3JgRXlmWMq2NgN1Y0xP3RDEo4_Avb12E4GMX4xbj3l7Tw3Xi9AGnA1K.jpg
400px--Journey_of_Sound_to_the_Brain.ogv.jpg

ஆக்ரோஷமான கடலலைகளில் ஒரு உருளையை அலைகளுக்கேற்ப சுழல வைத்து மின்சாரம் தயாரிப்பார்களே, அதே போலத்தான் காக்ளியா ஓட்டிற்குள்ளும் கரெண்ட் எடுக்கிற சமாச்சாரமும் நடக்கிறது. அதாவது காக்ளியா ஓட்டிற்குள்ளுமே ஒரு குட்டிக் கடல் இருக்கிறது. எங்கோ மந்திர தந்திரக் கதைகளில் வருகிற மாயாஜால கடலைப் போலவே நம் காதுக்குள்ளே, மண்டையோட்டிற்குள்ளே, ஓடு போன்ற காக்ளியாவிற்குள்ளே ஒரு குட்டிக் கடலும் இருக்கிறது. அது இரவுக்கடல் போல சதா அமைதியாகவே இருக்கும். ஆனால் ஏதாவது சப்தம் கேட்டால் பொசுக்கென்று தலைதூக்கி தெருநாய் விழித்துக் கொள்வதைப்போல, பௌர்ணமி இரவு வந்தால் கடல் ஆக்ரோஷம் கொள்வதைப்போல வெளியிலிருந்து வருகிற ஒவ்வொரு சப்தத்திற்கும் ஏற்ப அதிர்ந்து வந்து முட்டுகிற எலும்புகளுக்கு ஏற்ப இந்த காக்ளியாவிற்குள் இருக்கிற குட்டி கடலிலும் அலைகளோ எழும்ப ஆரம்பிக்கின்றன. சிறுவர் தண்ணீர் பார்க்குகளில் செயற்கையாக அலைகளை உருவாக்குவது போல சப்தங்களுக்கு ஏற்ப இங்கே விதவிதமான அலைகள் உருவாக்கப்படுகின்றன.

3-s2.0-B9780124158054000072-f07-06-9780124158054.jpg

கடலில் உருளையைச் சுழல வைத்து மின்சாரம் எடுப்பதுபோல இந்த காக்ளியாவிற்குள் இருக்கிற ஸ்பெஷல் செல்களும் அலையிலிருந்து  மின்சாரத்தை தயாரிக்க தண்ணீரிலே மிதந்தபடியே கிடக்கும். சுருண்டுக் கிடக்கிற காக்ளியா ஓட்டின் முழு நீளத்திற்குமே இந்த செல்கள் வரிசைகட்டி நீண்டபடி குளத்தின் ஆகாயத்தாமரை செடிகள் கிடப்பதைப்போல சாந்தமாக மிதந்தபடியே இருக்கும். ஆனால் ஒருவேளை வெளியிலிருந்து சப்தம் ஏதும் கேட்டு அதற்கேற்ப அதிர்ந்து காக்ளியாவிற்குள் அலைகள் உருவானால் இந்த ஸ்பெஷல் செல்களோ தூண்டப்பட்டுவிடும். அதாவது மெல்ல வருகிற சப்தம், பலமாக கேட்கிற சப்தம் என்று ஒவ்வொன்றுக்குமாக இங்கே எக்கச்சக்கமான அலைகள் உருவாகி அந்தந்த சப்தங்களுக்கே என்றிருக்கிற ஸ்பெஷல் செல்களை அது தூண்டச் செய்து அதிலிருந்தே இந்த மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த செல்களில் உருவாகின்ற மின்சாரங்களானது ஒரு சமிக்கை, ஒரு குறியீடு, ஒரு குறுந்தகவல். அதாவது ஒவ்வொரு சப்தங்களும் மிகமிக நுணுக்கமாக அந்தந்த செல்களால் குட்டி குட்டி தகவல் துணுக்குகளாக மின்சாரம் வடிவில் மாற்றப்பட்டு அந்த செய்திகளோ மூளைக்கு காது நரம்புகளின் வழியே கடத்தப்படுகிறது.

j_medgen-2020-2021_fig_001.jpg

இப்படி ஆயிரக்கணக்கான செல்கள் ஒரு மிதவையைப் போல மிதந்தபடி அதிர்வுகளை மின்சார சமிக்கைகளாக மாற்றி மாற்றி வேலை செய்து கொண்டிருக்கும் போது அவையெல்லாம் அந்தந்த செல்களிலிருந்து வால் போல நீளுகின்ற மெல்லிசான நரம்புகள் வழியே சென்று அப்படி ஆயிரக்கணக்கான செல்களிலிருந்தும் வெளியாகிற நரம்புகளும் ஒன்று சேர்ந்து ஒரே கத்தையாக ஒரு முழு நரம்பாக பரிணமித்து அந்த கேட்டல் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்கிறது. வீட்டு வயர்களில் பல செப்புக் கம்பிகள் சேர்ந்து மின்சாரத்தை கொண்டு செல்வதைப் போலத்தான் இந்த ஆயிரக்கணக்கான நரம்பு இழைகளும் ஒன்றுசேர்ந்து கேட்டல் செய்தியை தூக்கிக் கொண்டு மூளைக்கு காவடி யாத்திரை செல்கின்றன.

brain.png

இந்த மின்சார செய்தி துணுக்குகளோ கேட்டலுக்கென்றே இருக்கிற பிரத்தியேக பக்கவாட்டு மூளையின் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாம் கேட்பது என்ன சப்தம்? அது வெறும் சப்தமா அல்லது பேசும் மொழியா? மொழியென்றால் என்ன மொழி, யார் என்ன பேசுகிறார்கள்? என்பதை பகுத்துப் பார்க்கிறது. அதாவது பிள்ளைப் பிராயத்திலிருந்தே நாம் கேட்டு, பார்த்து, பேசிப் புரிந்து கொண்டு மூளையில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த தகவல்களையெல்லாம் நொடிப்பொழுதில் மூளையும் புரட்டிப் பார்த்து இன்னார் தான், இதைத்தான் பேசுகிறார்கள், அதற்கு இதைச் சொல் அல்லது இதை செய் என்று அன்புக் கட்டளையிடுகிறது.

ஆனால் இப்படிக் கேட்பதை வைத்து மூளையும் பகுத்துப் பார்க்க வேண்டுமானால் மூளையின் மொழிகளுக்கான பிரத்தியேகப் பகுதியானது பிறந்த தருணத்திலிருந்தே சரியாகத் தூண்டப்பட்டிருக்க வேண்டும். அதேபோல பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளென்றால் குறைந்தபட்சம் ஆறுமாதகால வயதிற்குள்ளாவது கண்டறிந்து காது கேட்கும் கருவிகள் வழியே சப்தங்களை அனுப்பி அந்த மூளைப் பகுதியானது தூண்டப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி விரைவிலேயே தூண்டப்படாத போது நரம்பு செல்கள் யாவுமே போகப் போக செயலிழக்கத் துவங்கிவிடும். அதேசமயம் சப்தங்களைக் கேட்பதன் வழியே மூளைப்பகுதி தூண்டப்படுகிற சிகிச்சையும் அதிகபட்சமாக குழந்தைகளின் ஆறு வயதிற்குள்ளாகவாவது ஆரம்பித்திருக்க வேண்டும்.

இப்படி பிறவிக் குறைபாடுடைய ஒரு குழந்தையை ஆறுமாதகால வயது முதல் ஆறுவயது காலத்திற்குள் கண்டறிந்து கேட்கும் கருவிகள் வழியே தூண்டப்படவில்லையானால் அதற்கு பின்பாக என்ன சிகிச்சை செய்தாலும் குழந்தைகளுக்கான சிகிச்சைக்குரிய முழுபலனுமே கிடைக்காது. அதனால்தான் தாமதமாக ஒரு குழந்தை சிகிச்சை எடுத்துக் கொண்டாலுமே அவர்களுக்கு கருவிகள் வழியே சப்தங்கள் கேட்கிற போதும்கூட அதை மூளையால் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் பேச்சுத்திறன் குறைபாடுடையவர்களாக ஒருசிலர் திக்கித் திக்கி பேசுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். எனவேதான் குழந்தைகளை ஆறுமாத வயதாயிருக்கிற போதே அவர்களின் குறைகளைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை துவங்கியிருக்க வேண்டுமென்றும், அதிகபட்சமாக ஆறுவயதிற்குள்ளாகவாவது சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார்கள்.

சரி, உள்காதில் அதுவும் காக்ளியாவில் தான் பிரச்சனை என்றால் அங்கே அப்படி என்ன தான் நடக்கிறது? என்று யோசித்துப் பார்த்துப் பயப்படுகிற பெற்றோர்களிடம் அதற்கான பதிலையும் கட்டாயம் நான் ஒரு மருத்துவராக சொல்லியாக வேண்டும். அதற்காகத் தானே நான் இவ்வளவு பாடத்தையும் முதலிலேயே விளக்கிச் சொல்லும்படி ஆயிற்று.

tinnitus-healthy-damaged-hair-cells-inside-cochlea-medical-illustration-177589274.jpg

இப்போது இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால் காக்ளியாவிற்குள் இருக்கிற ஸ்பெஷல் செல்களில்தான் இக்குழந்தைகளுக்கான கேட்டலின் பிரச்சனையே இருக்கிறது. காக்ளியாவிற்குள் ஏற்படுகிற அதிர்வுகளின் வழியே குட்டிக் கடலில் அலைகளெல்லாம் சரியாக எழும்பி வந்துவிடுகிறது. ஆனால் இங்கே பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு என்ன நடக்கிறதென்றால் அந்த அலைகளிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய ஸ்பெஷல் செல்களில் பிரச்சனையாகி அவையெல்லாம் செயலிழந்துவிடுகின்றன. இத்தகைய செல்கள் இருந்தால் தானே மின்சார சிக்னலை தயாரித்து அதன் கேட்டல் அற்புதத்தை நிகழ்த்த முடியும். ஆக, பேட்டரியே இல்லாமல் டார்ச் எப்படி எரியும் என்பதைப் போலத்தான் இந்த பாதிப்பிற்குள்ளான காக்ளியாவும் இருக்கிறது. மேலும் நம்முடைய துரதிஷ்டவசமாக இந்த ஸ்பெஷல் செல்களின் செயலிழப்பு என்பதோ நிரந்தந்தரமான ஒன்றாக இருக்கிறது. இவற்றை ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தெல்லாம் இயேசுபிரானைப் போல மீண்டும் உயிர்த்தெழ வைக்க முடியாது. ஒருமுறை அவை செயலிழந்துவிட்டால் செயலிழந்ததுதான்.

பல்லாயிரக்கணக்கான ஸ்பெஷல் செல்கள் அலைகளில் மிதந்தபடி இருக்கிற போது பிறவிக் குறைபாட்டினுடைய தீவிரத் தன்மைக்கு ஏற்பவும் அதனுடைய செல்கள் செயலிழந்து போகிற எண்ணிக்கைக்கு ஏற்பவும் குழந்தைகளின் காது கேட்கும் திறனுடைய குறைபாடும் அதிகமாகிக் கொண்டே போகும். அதன் தொடர்ச்சியாக காக்ளியாவிற்குள்ளே இருக்கிற சுமார் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்த ஸ்பெஷல் செல்களும் அடுத்தடுத்து படிப்படியாக மரணிக்கத் துவங்கி ஒருகட்டத்தில் அனைத்து செல்களுமே செயலிழந்தவர்களாக அதனால் சுத்தமாக காது கேட்கும் திறனே அற்றவர்களாக இக்குழந்தைகள் மாறிவிடுகிறார்கள்.

பொதுவாக குழந்தைகள் பிறந்தவுடனே பிறவிக் குறைபாட்டால் ஒட்டு மொத்த ஸ்பெஷல் செல்களுமே செயலிழந்து போய்விடுவதில்லை. அதனால் தான் ஆரம்பத்திலே எஞ்சியிருக்கிற ஆரோக்கியமான ஸ்பெஷல் செல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கேட்கிற சப்தங்களை வைத்து குழந்தைகளும் ஓரளவிற்கு தங்களது எதிர்குரலை, கைகால் அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் பெற்றோர்களோ இதை வைத்தே தங்கள் குழந்தைகளின் மீதான சில தவறான புரிதலுக்கு வந்துவிடுகிறார்கள்.

குழந்தைகளை அள்ளியெடுத்து முகத்திற்கு முகம் அருகாமையில் வைத்து அம்மா சொல்லு! அம்மா சொல்லு! என்று தாயவள் கனிந்து பேசுகிறபோது உண்மையிலேயே காது நன்றாக கேட்கிற குழந்தைகளெல்லாம் அந்த சப்தங்களை வைத்தும் அப்படி சப்தங்களை எழுப்புகிற அம்மாவின் முக பாவனைகளை வைத்தும் மழலை மொழியில் பேசுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்ப்பார்கள். ஆனால் காது கேளாத குழந்தைகளைப் பொருத்தவரையிலும் அவர்கள் முழுக்க முழுக்க பெற்றோர்களின் உதட்டசைவுகளை மட்டுமே உன்னிப்பாக கவனித்து அதைப் போலவே நகல் செய்து தங்களின் உதடுகளை அசைத்துப் பார்க்கிறார்கள். அம்மா, அப்பா, தாத்தா இவையெல்லாமே மிக எளிதாக நகல் செய்யக்கூடிய வார்த்தைகளாக இருப்பதால் இந்தக் குழந்தைகள் காது கேட்காவிட்டாலும்கூட அதை மிக எளிதாக நகல் செய்து உச்சரிக்கக்கூடும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

எங்கள் பிள்ளைக்கு எல்லாம் காது சரியாகத் தான் கேட்கிறது, அப்படியில்லாமல் பதிலுக்குப் பதில் அவர்கள் எங்களிடம் பேசுவார்களா? அவர்கள் ‘அம்மா’ ‘அப்பா’ என்றெல்லாம் சொல்கிறார்கள், மற்ற வார்த்தைகளைத் தான் பேச முடியவில்லை, அதற்காக காது கேட்கவில்லை என்ற அர்த்தமாகிவிடுமா? பிள்ளைகள்தான் இப்போது ஒருசில வார்த்தைகளை பேசுகிறார்களே, அப்போது போகப் போக அவர்களும் சமத்தாக பேசிவிடுவார்கள் என்று தானே அர்த்தம், ஆக எதற்காக இப்போது சிகிச்சைக்காக இவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஆறு வயது வரையிலும் சிகிச்சைக்கான காலம் இருக்கிறது என்று நீங்களேதான் சொல்கிறீர்கள், அப்படியென்றால் அதுவரையிலுமே கொஞ்சம் பொறுக்கலாம் தானே!

இப்படியாக ஒவ்வொரு பெற்றோர்களும் அவரவர்களின் புரிதலுக்கு ஏற்ப ஏதோவொரு காரணத்தை வைத்துக் கொண்டு அக்குழந்தையை முறையான பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவோ அப்பிரச்சனைக்கான சரியான சிகிச்சையை மேற்கொள்ளவோ முயற்சிக்காமல் வெறுமனே இருந்துவிடுகிறார்கள். ஆனால் இக்குழந்தைகளை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்து சிகிச்சையை துவக்குகின்றோமோ அந்த அளவிற்கு அவர்களின் பேச்சுத்திறனும் அச்சு அசலாக ஏனையோரைப் போலவே தெளிவாக இருக்கும் என்பதையும் பெற்றோர்களுக்கு நான் அவசியம் புரிய வைத்தாக வேண்டும்.  இந்த புரிதலை பெற்றோர்களிடம் நான் ஏற்படுத்திவிட்டால் கட்டாயம் இப்பிரச்சனையின் தீவிரத்தையும் அவர்களுக்கு விரைவிலேயே மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையைப் பற்றியும் உணர்து கொண்டு கட்டாயம் நல்ல தீர்வை நோக்கி நகர்ந்துவிடுவார்கள்.

ஒருசில குழந்தைகளின் அப்பாக்களோ பிறவிக் குறைபாடின்றி வேறு சில காரணங்களால் கூட தாமதமாக பேசியிருப்பார்கள். ஆனால் அதையும் அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு குழந்தையின் அப்பாவே தாமதமாகத் தானே பேசினார். அதனால் பிள்ளையும் இன்னும் கொஞ்சம் வயது போனால் தாமதமாகப் பேசிவிடுவார்கள் என்று சிந்திக்கத் துவங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் காது நரம்புகள் பலமில்லாமல் இருக்கிற காரணத்தினால்தானே இப்பிரச்சனை வருகிறது, அதை சத்து டானிக்குகள் கொடுத்து சரி பண்ணிவிடலாம் தானே என்று யோசித்து எல்லாவற்றையும் போட்டு தவறாக குழப்பிக் கொள்கிறார்கள். ஆனால் இப்பிறவிப் பிரச்சனை என்பதோ நிரந்தரமானது மேலும் அது போகப் போக தீவிரமடையக்கூடிய ஒன்று என்பதை இறுதியில் அவர்கள் புரிந்து கொண்டால் கட்டாயம் அவர்கள் எனக்கு ஒத்துழைக்க்க் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

அதெல்லாம் சரிதான். என் பிள்ளைக்கு ஏன் இப்பிரச்சனை வந்ததென்ற நியாயத்தை முதலில் எனக்கு விளங்குப்படியாகச் சொல்லுங்களேன். நாங்கள்தான் யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லையே! அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் எங்களுக்கு ஏன் இப்படியானதொரு தண்டனையென்று முதலில் எங்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். இந்தக் கொடுமையெல்லாம் நாங்கள் சாகிற காலம் வரையிலும் அனுபவிக்க வேண்டுமென்பதுதான் எங்களது தலைவிதியா? இது என்ன எங்களுக்கு தலைமுறைதோறும் தொடருகிற கொடுஞ் சாபமா? இப்படியாக மனதிற்குள் போட்டு தங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்து பரிதவிக்கிற பெற்றோர்களுக்கான பதிலையும் நான் சொல்லியாக வேண்டும். ஆனால் அதற்கு முதலில் மரபணுவைப் பற்றி பெற்றோர்களுக்கு நான் தெளியப்படுத்தியாக வேண்டுமே!

இதற்காக மரபணு தொடர்பான புத்தகங்களையும் அபூர்வமாகவ இருக்கிற மரபணு மருத்துவ நிபுணர்களையும் தேடியலைந்து நான் கண்டுகொண்ட அதிர்ச்சித் தகவல்களை நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

தொடரும்..தொடர் 1:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 2:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 3:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 4:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்
தொடர் 5:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 6:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 7:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 8:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 9:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்