ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 11 – டாக்டர் இடங்கர் பாவலன்11. மரபணுவும் நம் தலையெழுத்தும்..

தலை பாரமாக இருக்கிறது. இதற்கு எந்த வைத்தியமும் உதவப் போவதில்லை என்பது நன்றாகவே தெரியும். அப்படியும் நீண்ட நேரமாக தலையில் கை வைத்தபடியேதான் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். மனிதனை அலைக்கழிப்பது கேள்விகளும் அது தேடச் சொல்லி உந்துகிற அதற்கான விடைகளும்தானே! கேள்வி ஒன்றாக இருந்தாலும் அது பல பதில்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஒன்றைத் தேட இன்னொன்று கிடைக்கிறது. அதிலிருந்து அடுத்தடுத்த கேள்வி முளைத்துக் கொண்டே போகிறது. இந்த தொடர் தேடலில் எனது முதல் கேள்வி என்னவென்பதையே மறந்துவிடுகிறேன். நான் எந்த பதிலைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்பதுகூட பல சமயங்களில் குழப்பமாகிவிடுகிறது. பல நாட்களாக காளீஸ்வரியின் அம்மா பேசிய உக்கிரம் நிறைந்த வார்த்தைகளும் அதனூடே அவள் முன் வைத்த கேள்விகளும் தலைக்குள் வண்டு துளைத்தெடுப்பதைப் போல சதா துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.

“அவ வேணாமுன்னு பெத்த புள்ள சார். மூத்த புள்ள பிறவி ஊனமா போனதும் அடுத்த புள்ளைக்கும் இப்படி ஆகிடுமோன்னு பயந்து பதறியடிச்சுட்டுப் போய் கருவை கலைக்கிறதுக்கு டாக்டர்கிட்ட போய் நின்னா கருவைக் கலைக்கிறது பாவம் கீவம்னு தத்துவம்லாம் பேசி அப்போ மாட்டேன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. இப்போ பாருங்க ரெண்டு புள்ளயும் வாயும் காதும் இல்லாம ஊனமா கெடக்குதுங்க. அப்பவே பாவம்னு பாக்காம கருவுலயே கலைச்சுருந்தா இப்படி எம் புள்ளைய ஊரெல்லாம் சேந்து அய்யோ பாவம்னு சொல்லும்படியா ஆயிருக்குமா?”

உண்மையிலே குழந்தைகள் இப்படி குறைபாடுடையவர்களாய் போவதற்கு அவர்களுடைய பெற்றோர்களே காரணமாயிருக்க முடியுமா என்ற கேள்விதான் எனக்குள்ளே இப்போது தோன்றிக் கொண்டே இருக்கிறது. இந்தக் கேள்வியே என்னை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. தான் பெறப் போகிற பிள்ளை பிறவிக் குறைபாடாய் போவதற்குத் தானே காரணமாய் இருக்க முடியும் என்று ஒரு பெற்றோருக்கு முன்னமே தெரிந்தால் அந்தத் தாயின் மனம் எப்படி இயங்கும்? நெஞ்சம் பதறாதா? கணவனோடு ஒவ்வொரு கூடுதலிலும் பிள்ளை உண்டாயிருக்குமோ, அது குறையுள்ள பிள்ளையாய் போகுமோ என்று அச்சப்படமாட்டாளா?

அப்படி கரு உருவாகி வளர வளர அவளது பயம் எதைப் பற்றியதாக இருக்கும்? நம்மை இந்த உலகம் மலடி என்று இனி சொல்லாது என்றா? குறையுள்ள பிள்ளையைப் பெற்றாவது தான் மலடியில்லை என்று நிரூபித்ததை எண்ணி அவளால் நிம்மதி அடைந்திருக்க முடியுமா? தனக்கு பிள்ளை பிறந்தால் போதும் அது எப்படியிருந்தாலும் வளர்த்துவிடுவேன் என்று அவர் கங்கனம் கட்டிக் கொள்வாரா? அல்லது மற்ற எல்லா பிள்ளையும் பிறந்து சுகமாய் இருக்க இவர்கள் மட்டும் வளர்ந்து துன்பப்பட வேண்டுமா என்று நினைத்து கருவிலேயே கலைக்கச் சொல்லுவாரா? அப்படித்தானே காளீஸ்வரியின் தாயுமே யோசித்திருக்கிறாள்! இப்படி எத்தனை எத்தனையோ பிறவிக் குறைபாட்டோடு கையின்றி காலின்றி பிறந்த குழந்தையை யாருக்குமே தெரியாமல் வீட்டிலேயே பிரசவித்து கருணைக் கொலை செய்த தாய்மார்களும் யாரேனும் இருக்கக் கூடுமோ? இப்படியெல்லாம் யோசிக்க யோசிக்க எனக்கே பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது.

இப்படித்தான் ஒன்றை யோசிக்க இன்னொன்றை நோக்கி மனம் குரங்கைப் போல தாவிக் கொண்டேயிருக்கிறது. ஆரம்பத்தில் என்ன கேள்வி தோன்றியது என்பதே எனக்கு இப்போது மறந்துவிட்டது. ஆம், இக்குழந்தைகள் பிறவிக் குறைபாட்டாய் பிறப்பதற்கு பெற்றோர்களே காரணமாய் இருக்க முடியுமா? இதே கேள்விதான்.

ஆம், முடியும். ஒரு பிள்ளை பிறவிக் குறைபாட்டாய் பிறப்பதற்கு பெற்றோர்களும், ஏன் அதற்கு முந்தைய தலைமுறையும்கூட காரணமாக இருக்க முடியும் என்றுதான் மருத்துவப் புத்தகங்கள் சொல்லுகின்றன. இதைப் பற்றி சிந்திக்க சிந்திக்க இதற்கான விடையைத் தேடுவதற்கு, இதற்கொரு சரியான தீர்வைக் காண்பதற்கு நான் மருத்துவப் புத்தகத்தினுள் மூழ்கித் தேட வேண்டியிருந்தது. ஒரு கப்பல் மூழ்கிப் போகும்போது அது வரலாற்றோடும் தான் ஆழ்கடலிற்குள் தூங்கப் போகிறது. பலநூறு ஆண்டுகளுக்கு பின் அகழ்வாராயப்படும் அந்தக் கப்பல் எத்தனையோ வரலாற்றின் அதிசயப்  பக்கங்களை நிகழ்காலத்தில் எழுதிச் செல்கிறது. அப்படியானதொரு அபூர்வமான புதையலொன்றைத் தேடித்தான் இப்போது நானும் புத்தக கடலிற்குள் மூழ்கியபடி முக்குளிப்பான்களைப் போல நீந்தத் துவங்கியிருக்கிறேன்.

குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து வந்தவர்கள் அல்லவா! அப்படியென்றால் பிள்ளைகளின் பிரச்சனையும் பெற்றோர்களிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று எளிதாக புரிந்து கொள்ள முடியும். இக்குறைபாடோ குழந்தைகள் பிறந்த பின்பாக ஒன்றும் புதிதாய் முளைத்து வருவதில்லை. அது வயிற்றுக்குள் கருவாய் ஜனித்து வளரும் போதே பிரச்சனைக்குள்ளாகி அவர்கள் பிறக்கின்ற போதே குறைபாடுள்ளவர்களாக பிறக்கிறார்கள். அப்படியென்றால் வயிற்றுக்குள்ளே தான் ஏதோ கோளாறு நடக்கிறது என்று சுலபமாக புரிதலுக்கு வந்துவிட முடியும். ஆனால் மாயாஜாலக் கதைகளில் வருகிற ஆழ்கடல் புதையலைத் தேடுகிற பயணத்தில் புதையலுக்கான  வரைபடம் இரண்டாக பிரிந்து கிடப்பதைப்போல இதற்கான விடையுமே இரண்டு விதமான வரைபடத்திற்குள் ஒளிந்தே கிடக்கிறது. இந்த இரண்டு வரைபடங்களை வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கான மூலப் பிரச்சனையைத் தேடுகிற இந்த ஆழ்கடல் பயணத்தை நினைத்து நான் இப்போதும் பரவசமடைந்தவனாக இருக்கிறேன். ஏனென்றால் இந்தத் தேடிலின் முடிவிலே என்ன புதையல் எனக்கு கிடைக்கப் போகிறது என்று எனக்கே தெரியாதே!

நான் சந்தித்த குறைபாடுடைய குழந்தையின் பாட்டி ஒருவர், “இந்தப் புள்ளையோட தாத்தாவுக்கும் இப்படித்தான் காதும் கேக்காம வாயும் பேசாம இருக்கு. அவரே அப்படித்தான் இருக்காரு. இந்தப் புள்ளைய மட்டும் சரி செஞ்சுற முடியுமா? இது பரம்பரை வியாதியாச்சே!” என்று கரித்துக் கொட்டியபடியே இருந்தார். இப்போது மீண்டும் ஒரு கேள்வி. இது பரம்பரை வியாதியா இல்லியா? இது புள்ளைங்க பேரப்புள்ளைங்க என்று அடுத்தடுத்த தலைமுறைக்கும் தாவுமா? ஆக, இப்படியான குழப்பத்தையும் நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும் அல்லவா!

காளீஸ்வரியின் அம்மா அப்பா இருவருமே ஒரே இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொண்டவர்கள். அதாவது அக்கா பொண்ணு முறை அவருக்கு. அடுத்ததாக பிரியாவின் அப்பா அம்மாவுமே கிட்டத்தட்ட அதே இரத்த உறவிற்குள் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அவருக்கோ அத்தைப் பொண்ணை கட்டிக்கிட்ட முறை.இரண்டாமாண்டு மருத்துவப் பாடமான நோயியல் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதன் பக்கங்களில் நான் எதையெதையோ தேடிக் கொண்டிருக்கிறேன். மரபணு சம்பந்தப்பட்ட பாடத்தில் இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் பிறக்கிற குழந்தை இப்படி காது கேளாத பிரச்சனை மட்டுமல்ல தலையிலிருந்து கால்வரையிலான எந்த உறுப்பிலுமே குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கல்லூரிக் காலத்தில் படித்த ஞாபகம். அதைத்தான் இப்போது புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து தேடிக் கொண்டிருக்கிறேன்.

மரபணுவை பற்றித் தான் படிக்கப் போகிறோம், அதைப் பற்றித் தான் பெற்றோர்களிடம் விளக்கப் போகிறோம் என்று யோசிக்கிற போது அவர்களால் இதைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ள முடியுமா என்றுதான் இப்போது குழப்பமாக இருக்கிறது. ஆனால் நிச்சயமாக இந்த மரபணுவைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு அவசியம் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனாலும் அவர்களும் விளங்கிக் கொள்கிற வகையில் என்னால் தெளிவாக்கிச் சொல்லிவிட முடியுமா என்கிற பயமும் கூடவே தொற்றிக் கொள்ளத் தான் செய்கிறது. எதுவானாலும் சரி, என் முயற்சியை எப்போதும் விடப்போவதில்லை. கடலுக்குள் மூழ்கி முத்துக்குளிப்பவனுக்கு அதுதான் வாழ்க்கை, போராட்டம், எதிர்காலம் எல்லாம். அப்படியிருக்க ஒருமுறை புத்தகக் கடலுக்குள் மூழ்கிவிட்டான பின்பு, கையில் வரைபடம் கிடைத்தான பின்பு இனி எக்காரணம் கொண்டும் தேடலை நான் விடப்போவதில்லை.

நாம் வாழுகிற இந்த சமூகமே நோய்வாய்ப்பட்ட சமூகம்தானே! சக மனிதனிலிருந்து இன்னொரு மனிதன் எப்படியெல்லாம் தன்னை வகைபடுத்திக் கொள்ள முடியுமோ, உயரே உயரே வைத்துக் கொள்ள முடியுமோ, தன்னை எந்தெந்த வழியிலெல்லாம் மேம்பட்டவனாக காட்டிக் கொள்ள முடியுமோ அப்படி ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து தனித்தேதான் கிடக்கிறார்கள். அப்படி தனித்துக் கிடக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தனது குணநலன்களோடு ஒத்துப்போகிற மனிதர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களுக்கென்று ஒரே குலம், கோத்திரம், கோட்பாடு, பழக்கவழக்கம் என்றெல்லாம் வைத்துக் கொண்டு குழுகுழுவாக, சாதிவாரியாக, மதம்வாரியாக இந்த மனித சமூகமே ஏதாவதொரு வகையில் பிளவுபட்டுத்தானே கிடக்கிறது.

எது எப்படியும் ஆகட்டும். இந்த மனித குலத்தில் பெண்களின் நிலை மட்டும் அப்படியேதான் இருக்கிறது. குலத்தைக் காக்க, கோத்திரத்தைக் காப்பாற்ற, குடும்ப ஒழுக்கத்தைப் பேண, குடும்பச் சொத்துகளைப் பாதுகாக்க என பெண்களை இந்த ஆணாதிக்கம் நிறைந்த மனித சமூகம் கிட்டத்தட்ட ஒரு பண்டமாற்று பொருளைப் போலத்தானே வைத்திருக்கிறது. சொந்த பந்தம் விட்டுப் போயிறக் கூடாது, பொண்ணு நம்மைவிட்டு வெளியே எங்கேயும் போய்விடக்கூடாது கைக்குள்ளயேதான் இருக்கணும், சொந்த பையனுக்கே கொடுத்தால் பொண்ணு நமது கட்டுப்பாட்டிலேதான் இருக்கும் என்று பெண்களை இரத்த உறவிற்குள்ளாக திருமணம் செய்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே! அதை சமூக கண்ணோட்டமாகப் பார்க்காமல் அறிவியல் கண்களைக் கொண்டு பார்க்கத்தான் இப்போது நான் மருத்துவ பாடப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன்.

இப்புத்தகத்தை படிக்கிற வரையிலும் அதெப்படி சொந்தபந்தத்திற்குள் திருமணம் செய்தால் பிரச்சனை வரும். அதுவே வேறு யாரோ ஒருவரோடு திருமணம் செய்து கொண்டால் வராதா? என்றுதான் குழப்பத்தோடு யோசித்திருந்தேன். ஆனால் இந்த மருத்துவ புத்தகங்கள் எனக்கு திறந்து காட்டுகிற உலகமோ ஒரு சாகசம் நிறைந்த உலகம் போலாகவே இருக்கிறது. மணலில் புதைந்து கிடக்கிற சங்கினை எடுத்து விசில் ஊதிப் பழகுகிற நாளில் இதுவும்கூட ஒரு கூழாங்கல்லைப் போலத்தானே இருக்கிறது என்றே நினைத்திருந்தேன். ஆனால் கடற்கரை மணலில் பரந்து பாய்போல விரியும் அலைகளுக்குக் கீழே மணலிற்குள் நழுவிக்கொண்டு ஓடுகிற சங்குப் பூச்சியைப் பார்த்த பின்னால் அடைந்த பரவசத்தைப் போலவே இப்புத்தகமும் மரபணுக்களைப் பற்றிய புத்தம் புதியதான உலகத்தை எனக்கு திறந்து காட்டியபடியே இருக்கிறது.

முதலில் திருமணம் செய்து கொள்கிற தம்பதியினருக்கு குழந்தை எப்படி பிறக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் இரத்த உறவுக்குள்ளாக திருமணம் பற்றி எளிதாகச் செல்லிவிட முடியும் என்றே நினைக்கிறேன்.

அதாவது கணவன், மனைவி இருவருமே எதனால் ஆக்கப்பட்டவர்கள் என்கிற கேள்வியைக் கேட்டால் உடனே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று யோசிக்க கூடாது. ஏனென்றால் அறிவியலின் படி மனிதர்களாகிய நாமெல்லாம் பல செல்களால் ஆன உயிரினம். அதாவது கைபிடி களிமண்ணை குழைத்து பிடிமண் பொம்மை சிலையை உருவாக்குறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிடிமண் பொம்மையில் எத்தனை மண் துகள்கள் இருக்கென்று தெரியுமா? தெரியாது. அந்த கணக்குத் தெரிந்தால் அத்தனை மண் துகள்கள் சேர்ந்த ஒரு சிலைதான் இந்த பிடிமண் பொம்மை என்று நாம் தெளிவாக சொல்லிவிடலாம் இல்லியா! அதேபோலத்தான் நாமும் பல செல்களை ஒன்றாக்கி கருப்பைக்குள் பிடிக் கொழுக்கட்டை போல பிடித்து வைத்து செய்யப்பட்ட பிள்ளைகள் என்றே புரிந்து கொள்ளலாம்.

வானத்திலுள்ள இரவு நட்சத்திரங்களை எண்ணி எண்ணிப் பார்த்து தோற்பது போலல்லாமல் அறிவியலோ நமது உடலிலுள்ள செல்களையெல்லாம் தோராயமாக எண்ணிப் பார்த்து ஒரு மனிதன் 37.2 இலட்சம் கோடி செல்களால் ஆனவன் என்றதொரு கணக்கைச் சொல்லுகிறது. அப்படியென்றால் அந்த திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இருவருமே 37.2 இலட்சம் கோடி செல்களால் ஆனவர்கள் என்று வைத்துக் கொள்ளலாமா? சரி, இத்தனை செல்களும் எங்கிருந்து வந்திருக்கும்? யார் இதை பிடித்து குழந்தையாக அழகாக வணைந்தார்கள்? என்றெல்லாம் தெரிய வேண்டுமல்லவா!

முன்பெல்லாம் புத்தகங்களை படிக்கையில் வெறுமனே நோய், அதற்கான அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று மட்டுமே மனதில் தோன்றும். அந்தந்த நோயிற்குரிய மனிதனைப் பற்றியோ அவர்களின் குடும்பத்தைப் பற்றியோ படிக்கிற காலம் வரையிலும் தோன்றியதில்லை. ஆனால் இப்போது புத்தகத்தைப் படிக்கிற போதெல்லாம் குறைபாடுடைய குழந்தைகளே புத்தகத்தினுள் வரைந்திருக்கிற ஒவ்வொரு படத்திலும் தெரிகிறார்கள். அதில் வருகிற காது படங்கள் அவர்களின் காதுகளாகவே மனதில் படுகிறது. இக்குறைபாட்டுக்கான காரணத்தைத் தேடி புத்தகத்தில் கண்கள் அலை பாய்கிற போதுகூட அந்தக் குழந்தைகளுடைய பெற்றோர்களும் கண்முன்னே வந்து வந்து அழுகிறார்கள், ஏதேதோ சொல்லிச் சொல்லி வேதனையுடன் சிரிக்கிறார்கள். எது எப்படியோ, இந்தக் குறைபாட்டை சரிசெய்வதற்கான தீர்வை கண்டுபிடிக்கிற வரைதான் இந்த அழுகையும், வலியும், வேதனையும் எல்லாம் என்று சொல்லி எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டுதான் இப்போதெல்லாம் நகர வேண்டியிருக்கிறது.சரி, திருமணமாகிய பின்பு பெண்ணின் வயிற்றுக்குள்ளே கருவாக குழந்தை வளர ஆரம்பிக்கிறது. அதுவரைக்கும் நமக்குத் தெரியும். ஆனால் அந்த பெண்ணின் கர்ப்பப்பைக்குள்ளே என்ன வேலை நுட்பமாய் நடக்கிறது என்று தெரிய வேண்டுமே! அதாவது கருத்தரித்தலின் போது ஆணிலிருந்து வருகிற விந்தணுவும் அந்த சமயம் பார்த்து பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளியாகிற சினை முட்டையும் இணைந்து ஒரே கருவாகிறது. ஆக, அவ்வளவுதான். இங்கிருந்து ஒரு வரைபட்டதை தூக்கிக் கொண்டு நாம் முதல் புதையலைத் தேடி போவோம்.

ஒரு மனிதன் 37.2 இலட்சம் கோடி செல்களால் ஆனவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் ஒரே ஒரு செல்லிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஏன், மருத்துவனாகிய நானும்கூட கண்ணுக்கே தெரியாத நுண்ணோக்கியால் கூர்ந்து பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய ஒரு செல்லிலிருந்து வளர்ந்தவன்தான் என்று யோசிக்கும் போது எனக்கே வியப்பாய்தான் இருக்கிறது. அதாவது மண்ணுக்குள் ஒரே ஒரு விதையைப் போட்டு அது பல கிளைகளுடைய பெரிய மரமாய் வளர்வதைப்போல. ஆனாலும் அந்த ஒரு செல்லும் எங்கேயிருந்து வந்தது, அது எப்படி உருவாயிற்று, பின் அது என்னவாக ஆயிற்று என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே!

இப்போது ஒரு வெங்காயத்தை உரிப்பது போல ஒவ்வொன்றாக உரித்துப் பார்ப்போம். பொதுவாக நம் உடல் முழுக்கவே செல்களால் ஆனதுதான். அந்த செல்களுக்குள்ளும் முட்டைக்குள் மஞ்சள் கரு இருப்பதைப் போலவே குட்டியாக கருவும் இருக்கிறது. அந்த கருவிற்குள்ளேதான் குரோமோசோம்கள் இருக்கின்றன. அதாவது பள்ளிக் குழந்தைகள் ரெட்டை சடை போட்டு ரிப்பன் கட்டியிருப்பார்களே அதுமாதிரியே குரோமோசோம்களும் இருக்கும். எப்படி ரிப்பன் நூல் பிரிந்தால் நீள.. நீள.. நீளமாக வருமோ அதே மாதிரி குரோமோசோம்களைப் பிரித்தால் நூல் போல ரொம்ப ரொம்ப நீளமாக நீண்டு போய் அந்த நூலிழையில்தான் மரபணுக்களும் வரிசைகட்டி அமர்ந்திருக்கும்.

gene.png

இந்த மரபணுக்களெல்லாம் என்னவென்று தெரியுமா? ஒரு செல் எப்போது, என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அதற்குள்ளே இருக்கிற மரபணுக்கள் தான் முடிவு செய்யும். அதாவது அதற்கான தகவல்கள் எல்லாம் இந்த மரபணுக்குள்ளே சில குறியீடுகளாக பதிந்து வைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட ஒரு அஞ்சல் பெட்டியைப் போல. நம் தலையெழுத்து என்று சொல்கிறோமே, ஒருவேளை அது இந்த மரபணுக்குள் எழுதி வைக்கப்பட்ட ஒன்று தானோ என்னவோ? அதாவது வறுத்த முழு கோழியைக் கண்டவுடன் எச்சில் வாயில் ஊறுகிறதென்றால் அது அந்த உமிழ்நீரைச் சுரக்கிற செல்களின் மரபணுவினால் தான் நடக்கிறது என்பதை வைத்தே இதனை புரிந்து கொள்ளலாம்.

28e8093a6c73a669578e4ece04543452e0cb08cf.gif

இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பார்த்தால் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் ஆணின் விதைப்பையிலிருந்து வெளியாகிற விந்தணு, பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளியாகிற சினை அணு ஆகிய இரண்டே இரண்டு வகையான செல்களைத்தவிர. இந்த இரண்டு வகையான செல்களில் மட்டும் அதிலே பாதியாக 23 குரோமோசோம்கள்தான் இருக்கும். அதாவது ஆண் பாதி பெண் பாதியாகக் காட்சியளிக்கிற அர்த்தநாரீ சிலையைப் போல இந்த 23 குரோமோசோமுடைய ஆணின் விந்தணுவும், பெண்ணின் சினையணுவும் கருத்தரித்தலின் போது ஒன்றுகூடும் போது அது 46 குரோமோசோம்களை உடையதாக, ஒரு முழு செல்லாகப் பரிணமிக்கிறது. அந்த முழு செல்லே பின்னர் குழந்தையாக உருமாறுகிறது. ஆக, முதன் முதலாக உடலின் 37.2 இலட்சம் கோடி செல்களும் ஒரே ஒரு செல்லிலிருந்து உருவானவைதான் என்று சொன்ன அந்த ஒரு செல்லானது இந்த விந்தணுவும் சினையணுவும் இணைந்து உருவான செல்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?

இப்படி பெண்ணின் கருப்பையிற்குள்ளும் தம்பதிகளாகிவிட்ட இந்த இரண்டு இனப்பெருக்க அணுக்களும் இணைந்து ஒரே செல்லாகிற பிறகு அது பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. கடற்கரையில் கொட்டிக் கிடக்கிற எண்ணவே முடியாத அத்தனை மணல்களும் ஏதோவொரு பெரிய மலையிலிருந்து வந்தவைதானே! வானிலே மின்னுகிற நட்சத்திரங்களெல்லாம் பிரளய வெடிப்பின் ஏதோ ஒன்றிலிருந்து வெடித்துச் சிதறியவை தானே! அப்படித்தான் இந்த ஒரு செல்லானது கருப்பைக்குள்ளே தன்னை மடங்குளாக பெருக்கிக் கொண்டே செல்கிறது. ஒன்றிலிருந்து இரண்டாக, இரண்டிலிருந்து நான்காக, நான்கிலிருந்து எட்டாக, எட்டிலிருந்து பதினாறாக என்று பெருகிப் பெருகி ஒரு கட்டத்தில் ‘மொருலா’ என்கிற இறுகிய களிமண் உருண்டைப் போலாகிறது. இந்தக் களிமண்ணிலிருந்துதான் கருப்பைக்குள்ளே கண், காது மூக்கு எல்லாம் வைத்து, இருதயம், மூளை, நுரையீரல் என்றெல்லாம் வணைந்து குழந்தைக்கு உயிரைக் கொடுக்கிறாள் தாய். இதன் பின்னர்தான் இந்த செல்களெல்லாம் உருவத்தில் பருத்துப் பெரியதாகி வளர்ந்து முழு உருவம் பெற்று குழந்தைகளாகப் பிறக்கிறார்கள்.

stages-human-embryonic-development_1308-47535.jpg

இப்படி கருவின் களிமண்ணிலிருந்து குழந்தையை வார்க்கின்ற போது அவர்கள் யாரைப்போல, எப்படி, எந்த நிறத்தில் வர வேண்டுமென்பதை அந்த அம்மா அப்பாவிடமிருந்து வந்த செல்லின் மரபணுவிற்குள்ளே பொதிந்திருக்கிற தகவலின் அடிப்படையிலே தான் உருவாகிறார்கள். பானை வணைபவனின் எண்ணத்திற்கேற்ப மண்பாண்டங்கள் விதவிதமாக உருக்கொள்வது போல மரபணுவின் தகவலுக்கேற்ப குழந்தையும் அழகாய் வணையப்படுகிறது. உதாரணமாக குழந்தைக்கு இரண்டு காதுகள் வேண்டும், அதற்குள் சவ்வு, காக்ளியா, நரம்பு செல்களெல்லாம் சரியான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்கிற தகவலைப்போல. ஒருவேளை அம்மா அப்பாவிடமிருந்து வருகிற மரபணுவு குறைபாடுடையதாக இருந்தால், அந்த மரபணுவும்கூட காதுகள் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக இருந்தால் அந்த குழந்தையானது காது கேளாத குறைபாடுடைய குழந்தையாகவே பிறக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா!

ஆனால் இப்போது திரும்பவும் அதே கேள்வி எழவே செய்யும். இதற்கும் இரத்த உறவுக்குள் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்வி நியாயமானதுதான், எளிதானதுதான். அதனை விளக்குவதுதானே இங்கு கடினமாக இருக்கிறது.

பொதுவாக செல்லிற்குள் இருக்கிற குரோமோசோம்களில் வரிசைகட்டி அமர்ந்திருக்கிற மரபணுக்கள் தங்களுக்குள்ளேயே வித்தியாசம் காட்டுபவை. தனக்கென்று தனித்துவம் இல்லையென்றால் தானே தற்கொலை செய்து கொள்ளும். எதிரெதிர் துருவமாக வந்தால் மட்டுமே காந்த சக்தி உயிர் பெறுவதைப்போல, இரண்டு எதிரெதிர் முனைகள் ஒன்று சேர்கிற போது மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்வது போல மரபணுக்களில் இருக்கிற வரிசைகள் ஒவ்வொன்றுமே வேறுவேறானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மின்சாரமே உற்பத்தி செய்ய முடியாததைப்போல அந்த மரபணுவும் செயலிழந்துபோய் அந்த மரபணுவில் சொல்லப்பட்டிருக்கிற தகவலுக்கான வேலையும் நடக்காமலே போய்விடும். அதாவது காது கேளாத குழந்தைக்கு ஸ்பெஷல் செல்களின் மரபணுக்கள் செயலிழந்து போய் அதனால் ஸ்பெஷல் செல்களும் வேலை செய்யாமல் போவதைப்போல.

இரத்த உறவு என்று நாம் சொல்கிற போது திருமணம் செய்து கொள்கிற இரண்டு பேரும் இரத்த வகையில் ஒன்றானவர்களாக இருப்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதை வைத்தே மரபணுவையும் ஒருவகையிலே இருப்பதாக புரிந்து கொள்ளலாம். இரத்த பந்தமுள்ள மரபணுக்களுடைய இருவருமே ஒன்றாகத் திருமணம் செய்து கொண்டு அவர்களின் விந்தணுவும் சினையணுவும் இணைந்து கருத்தரிக்கிற போது உருவாகிற செல்லில் ஒரே மாதிரியான மரபணு வரிசை வருவதற்கான வாய்ப்புதானே அதிகமாக இருக்கிறது. அதற்காக ஒரேயடியாக அவர்களிடமிருந்து வருகிற அத்தனை மரபணுவும் ஒரே போல வந்திருக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏதாவது ஒன்றோ இரண்டோ ஒத்துப் போகிற வகையில் மரபணுக்கள் வந்து வரிசையில் அமருகிற போதுதான் அது குறைபாடுள்ள மரபணுவாய் போக வாய்ப்பிருக்கிறது.

அதேபோல இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். எத்தனையோ பேர் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்கிறார்கள். அவர்களது பிள்ளைகளெல்லாம் நன்றாகத் தானே இருக்கிறார்கள். அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்றும்கூட கேள்விகள் எழலாம்.

கிட்டத்தட்ட கருத்தரித்தலில் உருவாகிற ஒரு செல்லினுடைய மரபணுக்கள் கணவன் மனைவி இருவருடைய மரபணுக்களையும் குலுக்கிப் போட்டுத்தான் புதிதாக உருவாகியிருக்கும். அப்படி உருவாகையில் இரத்த பந்த உறவாக இருக்கிற பட்சத்தில் அந்தக் குலுக்கல் முறையில் வித்தியாசமான மரபணுக்களும் வரிசையில் விழலாம், ஒரே மாதிரியான மரபணுவும் வரிசையில் விழலாம். அப்படி வேறு வேறு மரபணு வரிசையென்றால் பிரச்சனையில்லை. ஒருவேளை ஒரே மாதிரியான மரபணு வரிசையென்றால் அதுவோ பிறவிக் குறைபாட்டை தோற்றுவிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவே இரத்த உறவில்லாத ஒருவருடம் திருமணம் செய்து கொள்கிறபோது அவர்களது மரபணு வெவ்வேறானதாக இருக்கும் அல்லவா! அப்போது எப்படிக் குலுக்கிப் போட்டாலும் அந்த ஒரு செல்லில் வித்தியாசமான மரபணு வரிசைதான் வந்து விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் மற்ற திருமணங்களைவிட இரத்த உறவு சம்பந்தப்பட்ட திருமணத்தில் பிறக்கிற குழந்தைகள் பிறவிக் குறைபாட்டோடு பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என சொல்ல வேண்டியிருக்கிறது.

அதேசமயம் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு அப்படி ஏதும் பிரச்சனையின்றி குழந்தைகள் பிறந்துவிட்டாலும்கூட அடுத்தடுத்தும் தொடர்ந்து இரத்த உறவிற்குள்ளே திருமணம் செய்கிறபோது பிறவிக் குறைபாடு வருகிற அதிகபட்ச வாய்ப்பிற்குள்ளே அவர்கள் போய்விடுவதுண்டு. அதனால்தான் தாத்தா பாட்டி, அம்மா அப்பா இப்படி யாருக்குமே இல்லியே! ஆனால் எங்கள் பிள்ளைக்கு வந்துவிட்டதே என்று பெற்றோர்களும் சந்தேகிக்கிறார்கள். அதேசமயம் தாத்தாவிற்கு காது கேளாத மரபணு இருந்திருந்தாலும் கருத்தரித்தலின் போது குறைபாடுள்ள அந்த மரபணு குலுக்களில் இருந்து தப்பித்துவிட்டால் அந்த மரபணு தூங்கும் நிலைக்குச் சென்று பிரச்சனையை உருவாக்காது. ஆனால் அடுத்த தலைமுறையிலும் இரத்த உறவுக்குள் தொடர்ந்து திருமணம் முடிக்கிற போது அந்த குறைபாடுடைய மரபணு விழித்துக் கொண்டு காது கேளாத பிரச்சனையைத் தூண்டிவிடும். அதனால்தான் தாத்தாவிற்கு காது கேளாத பிரச்சனை வந்திருக்கும், ஆனால் அதுவே பிள்ளைக்கு வராமல் பேரனுக்கு வந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.இரத்த உறவுக்குள்ளாக திருமணம் பற்றி இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் அத்தகைய திருமணம் முடித்தவர்களிடம் கொஞ்சமாக ஆய்வு செய்து பார்த்தால் அவர்களில் குறிப்பிட்ட சதவிகித பெண்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கருச்சிதைவாவது ஆகியிருக்கும். அதற்கான காரணத்தையும் நாம் விளங்கிக் கொண்டால் ஒரு முடிவிற்கு எளிதாக வந்துவிட முடியும்.

ஆணும் பெண்ணும் கூடலின் போது ஆணின் விதைப்பையிலிருந்து ஒரு வெளியேற்றத்தில் மட்டும் மூன்று முதல் ஐந்து கோடி வரையிலான விந்தணுக்கள் வெளியேறி கருப்பைக்குள் நுழைகின்றன. ஆனால் அதேசமயம் பெண்ணின் சினைப்பையிலுள்ள நான்கு இலட்சம் சினை முட்டைகளிலிருந்து ஒவ்வொரு மாதத்திலும் பத்திலிருந்து பன்னிரெண்டு முட்டைகளை மிகக் கவனமாக தயார் செய்து அதிலிருந்து ஒரேயொரு முட்டையை மட்டுமே தேர்வு செய்து கருப்பைக்குள்ளே அனுப்புகிறது. இப்போது நன்றாக யோசித்துப் பாருங்கள், அந்த ஒரே ஒரு முட்டையானது கோடிக்கணக்கான விந்தணுவிலிருந்து ஒரே ஒரு விந்தணுவை மட்டுமே தேர்வு செய்து அதனுடன் மட்டுமே ஒன்றாய் கலக்கிறது. ஆக, கோடிக்கணக்கான விந்தணுவிலிருந்தும் இலட்சக் கணக்கான சிணையணுவிலிருந்தும் பலமுறை பரிசோதித்துப் பார்த்து, நன்கு தரம் பிரித்து ஒரேயொரு கருவைத்தான் கருப்பைக்குள்ளே உருவாக்குகிறது. ஒருவேளை அத்தனை கோடி விந்தணுவிலும் ஒன்றுகூட தேறவில்லையென்றால் அந்த மாதத்தில் கருத்தரிக்காது இரத்தப்போக்காய் அந்த மாதவிலக்கு கழிந்துவிடும்.

அப்படிக் கவனமாக தேர்வு செய்து உருவான கருவானது கருப்பைக்குள் பதிந்து குழந்தையாய் வளரத் துவங்குகையில் அதுவும் தேர்ச்சி பெற்ற, மிக மிகத் தரமான கருவாயிருத்தல் வேண்டும். ஒருவேளை அத்தகைய கருவானது தரமில்லாமல் அந்த கரு வளர்ந்து குழந்தையாய் பிறக்கையில் பிறவிக் குறைபாடுள்ளதாக இருக்கும் என்பதை கருப்பை முன்னமே கண்டறிந்துவிட்டால் அந்த கருவை அப்போதே கருக்கலைப்பு செய்துவிடும். ஆக, ஒருவருக்கு கருக்கலைப்பு ஆகிறதென்றால் அந்த கரு வளர்ந்து வெளியே வந்தால் ஒன்று அந்த பிள்ளை இறந்துவிடும் அல்லது குறையுள்ள பிள்ளையாய் போகும் என்றறிந்தே உடம்பு இயல்பாகவே அதனை கருக்கலைப்பு செய்கிறது. அதனால் யாரேனும் ஒருவருக்கு கருக்கலைப்பு நிகழ்ந்தால் அதற்காக அந்தத் தாயை பரிகாசம் செய்யாமல் அதற்காக உண்மையில் நிம்மதி தான் கொள்ள வேண்டும்.

எனவே இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொண்டு சராசரியாக அவர்களுக்கு ஒரு கருக்கலைப்பு நிகழ்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால்கூட அந்த கருவானது ஏதோவொரு குறைபாடுடையதன் காரணமாகவே கழிந்திருக்கிறது என்கிற முடிவிற்கு வந்துவிடலாம் அல்லவா! குழந்தைகள் பிறந்து குறைபாடுடையவர்களாய் இருப்பவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு இரத்த உறவு பிரச்சனையை ஆராயாமல் கருக்கலைப்பு நிகழ்ந்தவற்றையும் கூடவே கருத்தில் கொண்டால் இந்த பிரச்சனையின் தீவிரத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

இவை எல்லாவற்றிற்குமே ஒரே தீர்வு என்னவென்று தெரியுமா? இரத்த உறவிற்குள் திருமணம் செய்யாமலிருப்பது மட்டும் தான். இப்படியான மரபணு பிரச்சனைகள் பல்வேறு சிக்கலுடையதாக இருந்தும், கேள்விகளும்கூட பலவிதங்களில் குழப்பமுடையதாக இருந்தாலும்கூட அதற்கான பதிலோ சுலபமாகத்தானே இருக்கிறது. ஆதலால் ஒரு குழந்தை பிறவிக் குறைபாடுடையவர்களாக பிறப்பதற்கு பெற்றோர்களும் காரணமாயிருக்கிறார்களா என்ற கேள்விக்கு இதுதான் இறுதியான பதில். எனவே இனிவரும் காலங்களில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரத்த உறவிற்குள் திருமணம் செய்வதை தவிர்த்தால் இத்தகைய காது கேளாத பிறவிக் குறைபாடு மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ வகையான பிறவிக் குறைபாடுகளையும் தவிர்க்க முடியும்.

ஆக, ஆழ்கடல் நீலம் பாரித்த கடலிற்குள் ஒரு அழகான வண்ண வரைபடத்தை எடுத்துக் கொண்டு சென்ற பயணத்தின் முதல் புதையல் கிடைத்தாயிற்று. இந்தப் புதையல் எப்பேர்ப்பட்ட பொக்கிஷம்! இரத்த உறவுக்குள் திருமணத்தை தவிர்ப்பதன் மூலம் இனி வருகிற தலைமுறைகளில் காது கேளாத குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதையே தவிர்த்துவிட முடியுமென்பது எப்பேர்ப்பட்ட ஆபூர்வமான புதையல். இந்தப் புதையல் மருத்துவப் புத்தகங்களுக்குள்ளேதான் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ எளிய மக்களுக்கு இன்று வரையிலும் இந்த புதையலின் பலன் இன்னமும் சென்று சேரவேயில்லை. கடலிலும் நிலத்திலுமாக அகழ்வாராய்ச்சி செய்து கண்டறியப்படுகிற புதையல் அரசாங்கத்திற்கும் அதன் கஜானா வழியே எல்லா மக்களுக்கும் சென்று சேர வேண்டும் தானே. ஆனால் இத்தகவல் தேவைப்படுகிற எந்தப் பெற்றோர்களுக்கும் இதுவரையிலும் போய்ச் சேரவேயில்லை.

இந்தப் புதையல் இப்புத்தகத்திற்குள்ளே தான் இவ்வளவு காலும் புதைந்திருக்கிறதென்றால் உண்மையில் இதற்கான வரைபடம் இந்த குறைபாடுடைய குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும்தானே இருந்திருக்கிறது. புதையல் ஓரிடத்திலும் அதற்கான சாவியும் வரைபடமும் வெவ்வேறு இடத்திலும் இருப்பதைப்போல, ‘எனக்குப் பிறந்த ஒரே பிள்ளையும் இப்படி காது கேளாத பிள்ளையாய் போய்விட்டதே!’ என்று அரற்றுகிற அபலைத் தாய் ஒருபுறமும், இரத்த உறவுக்குள் திருமணத்தை தவிர்த்தாலே குழந்தைகளெல்லாம் நலமுடன் பிறப்பார்கள் என்கிற தீர்வு மருத்துவப் பாடப்புத்தகத்தில் இன்னொரு புறமுமாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான் இதுவரையிலும் இக்குழந்தைகளுக்கான எந்தவொரு வழியும் கிடைக்காமல் பெற்றோர்கள் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தார்களா என்று யோசிக்கிறபோது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இப்போது கடலிற்குள் புதையலைத் தேடிச் சென்ற இரண்டு வரைபடத்தில் இன்னொரு வரைபடமும் என்னிடம் இப்போது மீதமிருக்கிறது. அது இன்னொரு புதையலுக்கான வரைபடம். அதாவது ஏன் இந்தக் குழந்தைகளெல்லாம் மரபணு பிரச்சனையால் மட்டும்தான் பிறக்க முடியுமா, வேறு காரணங்களே கிடையாதா? என்ற கேள்விக்கான விடை தேடுகிற வரைபடம் அது.உண்மையிலே கரு வயிற்றுக்குள்ளே உருவாகி அது குழந்தையாய் பரிணமித்துக் கொண்டிருக்கையில் கர்ப்பவதியாய் இருக்கிற தாயவள் தெரிந்தோ தெரியாமலோ காது நரம்புகளை பாதிக்கக்கூடிய ஸ்டிரெப்டோமைசின் போன்ற மருந்துகளை தவறுதலாக எடுத்துக் கொண்டாலோ, காது நரம்பை பாதிக்கக்கூடிய கிருமித் தொற்றால் தாயவள் பாதிக்கப்பட்டு அது தொப்புள்கொடி வழியே சென்று குழந்தையின் காது நரம்பை பாதித்திருந்தாலோ, அந்தக் குழந்தையை குறைபிரசவமாய் தாயவள் பிரசவித்திருந்தாலோ, அவர்கள் மிகவும் குறைந்த எடையுள்ளவர்களாக பிறந்தாலோ, குழந்தை பிறந்து மஞ்சள்காமாலை, தீவிர காய்ச்சல் தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அந்தக் குழந்தைகளின் காது நரம்புகள் செயலிழந்து அவர்களுமே பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளாக பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

சரி, இப்போது நம்மிடையே இரண்டு புதையல்கள் கிடைத்திருக்கின்றன அல்லவா. அதாவது இரத்த உறவிற்குள் திருமணம் செய்தால் மரபணு தொடர்பான பிரச்சனையாகி அதனாலும் காது கேளாமல் போகலாம். அதேசமயம் கருவாய் வளருகிற போது வேறு சில பிரச்சனைகளாலும் காது நரம்பு பாதிக்கப்பட்டு காது கேளாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. சரியா?

ஆக, இப்போது இன்னொரு கேள்வி எழும். நாங்கள் இரத்த உறவிற்குள் திருமணம் செய்திருக்கிறோம் எங்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்கும் இதே பிரச்சனைகள் வருமா? எங்கள் தாத்தாவிற்கும் இதே பிறவி காது கேளாத பிரச்சனை இருக்கிறதே, அது என் பிள்ளைக்கும் வருமா? நான் காது கேளாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன், எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் இதே பிரச்சனை வராமலிருக்க நாங்கள் என்ன செய்வது? எங்கள் முதல் குழந்தைதான் இத்தகைய குறைபாட்டோடு பிறந்துவிட்டது, அடுத்த பிள்ளைக்கும் இதே பிரச்சனை வராமலிருக்க இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஆகிய அத்தனை கேள்விகளுக்குமான சுருக்கமான விடை என்ன தெரியுமா?

மரபணு சிறப்பு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்! என்பதுதான்

ஏனென்றால் பிறக்கப் போகிற அல்லது பிறந்து காது கேளாத குறைபாட்டோடு இருக்கிற முதல் குழந்தைக்கு, மரபணு தொடர்பான பிரச்சனை ஏதும் இருக்கிறதா இல்லையா என்கிற விடையைக் கண்டுபிடித்துவிட்டாலே இந்த ஒட்டுமொத்த கேள்விக்கான விடையும் கிட்டத்தட்ட தெரிந்து கொண்ட மாதிரிதான். ஆனால் நாமெல்லாம் எவ்வளவு பெரிய துரதிர்ஷடாலிகளாக இருந்திருக்கிறோம், இப்போதும்கூட இருக்கிறோம் என்பதை இந்த மரபணு மருத்துவம் தொடர்பாக தேடியலைந்த போதுதான் நானே கண்டுகொள்ள முடிந்தது.

ஆம், உங்களுக்கு நம் மருத்துவத்துறை கட்டமைப்பினுடைய துயரமான கதையைத்தான் அடுத்ததாக சொல்லப்போகிறேன். சில சமயங்களில் புதையல்கள் வழியே காண்பது இப்படியான ஏமாற்றமாகவும் தானே இருக்கிறது.

தொடரும்..தொடர் 1:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 2:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 3:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 4:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்
தொடர் 5:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 6:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 7:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 8:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 9:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 10: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்