Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 12th Medical Series By Dr. Idangar Pavalan.மரபணு மருத்துவத்தைத் தேடியலைந்த நாட்கள்

மாலை வேளையில் லேசாக சாரலைத் தூறிவிட்டு ஓய்ந்திருந்தது வானம். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே இலைகளின் விளிம்பில் துளிர்த்திருக்கிற நீர்த்திவளைகளைப் போல ஜன்னல் கம்பிகளில் குமிழ் குமிழாய் பருத்து விழக் காத்திருந்த நீர்த்துளிகள் யாவற்றையும் ஒவ்வொன்றாக கைவிரல் நுனி தொட்டு வாங்கிக் கொண்டேன். கைநீட்டி குழந்தையை வாங்கிக் கொள்வதற்கு முன்பாகவே இருகைகளையும் நீட்டியபடி தாவிக் குதித்து நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிற குழந்தையைப் போல இந்த மழைத்துளிகள் யாவும் விரல் வழியே நழுவிச் சென்று நீர்ப் போர்வையால் கைகளை நனைத்தபடியே இருந்தன.

அதன் குளிர்ச்சி உடல் முழுக்கப் பரவப் பரவ அதுவரை இறுக்கமாகிப் போன மனம் மெல்லக் கரையத் துவங்கியது. அதிகாலையில் மரபணு மருத்துவரை எப்படியோ சந்தித்துவிட்ட மகிழ்ச்சியையும் தாண்டி அந்த சந்திப்பினூடே நடந்த உரையாடல்கள் யாவும் என்னை அதுவரையிலும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தன. ஜன்னலுக்குள்ளே எட்டிப் பார்த்தபடி முணுமுணுக்கிற சாரல் துளிகளின் வருகையால் வேதனையில் உழன்ற உடலின் கணப்பு மெல்ல அவிழத் துவங்கியது. அதேசமயம் மனதிற்குள்ளே நெருப்பு போன்று கனன்று கொண்டிருக்கிற வலியும், வேதனையும், ஆற்றாமையையும் இருப்பு கொள்ளாமல் தவித்தபடியே தான் இருந்தன. இந்த மழைக்கு மட்டும் மனதிற்குள்ளான காயங்களையும் ஆற்றிவிடுகிற வல்லமை இருந்திருந்தால் இப்போது எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கும் என்று மனமோ ஏக்கம் கொள்ளத் துவங்கியிருந்தது.

பல வாரங்களுக்குப் பின்பாக மாநிலத்தின் கடைகோடியில் அரிதினும் அரிதாக ஒரு மரபணு மருத்துவர் இருப்பதை அறிந்து அவரைச் சந்திக்கச் சென்ற பின்பாக என்னால் அந்தச் சந்திப்பின் முழு மகிழ்ச்சியையும் அடைய முடியவில்லை. அப்படியொரு அதிசயக்கத்தக்க மருத்துவரை சந்தித்துவிட்டேன் என்று சந்தோசப்படுவதா அல்லது ஒரு மருத்துவராகிய நானே இப்படி மரபணு மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக இத்தனைக் காலமும், இவ்வளவு தொலைவும் அலைய வேண்டியிருக்கிறதென்றால், பாவம் படிப்பறிவற்ற இந்த அப்பாவி ஏழை மக்களெல்லாம் என்ன தான் செய்வார்களோ என்று நொந்து கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆரம்பத்தில் அவரைச் சந்திப்பதற்கு முன்பாக எனக்குள்ளிருந்த மரபணு மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அலாதியெல்லாம் மெல்ல மெல்லக் கரைந்து போய் பின் அவரிடமிருந்து மரபணு மருத்துவத்தைப் பற்றிய போதாமையின் நிதர்சனமான உண்மையைக் கண்டு கொண்ட நொடியில் எனக்குள்ளேயே நான் உடைந்து போனேன். அந்த அவஸ்தையின் புலுக்கம் அடுப்படிக்குள்ளிருந்து வீட்டிற்குள்ளேயே முண்டுகிற புகைமூட்டம் போல மூளைக்குள்ளே அது வலிய வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவருடன் கலந்துரையாடிய நிமிடத்தின் நிஜங்கள் யாவும் நம் மருத்துவத்துறையின் மீதான போதாமையை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே இருந்தது.

ஒரு வலசைப் பறவையின் பரவசத்தோடு பயணப்பட்டு அவரைச் சந்தித்த பின்பாக மீண்டும் கூடு திரும்பிக் கொண்டிருக்கிற இந்த தருணத்திலும்கூட ஒரு சிறகொடிந்த பறவையின் மனநிலையில் தான் நான் இருக்கிறேன். மரபணு மருத்துவரைப் பற்றித் தெரிந்த மருத்துவ நண்பர்களிடமெல்லாம் விசாரித்து, அதன் விலாசங்களைத் தேடி, கூடுதலாக இணையத்தின் வழியே தமிழகத்தின் எதேனும் கடைக்கோடியில் எவரேனும் இருந்துவிட மாட்டார்களா என்று பித்து பிடித்தாற் போல் அலைகிற எளிய மருத்துவனான நானும்கூட வலசை செல்கிற பறவை தானோ என்றே சில சமயங்களில் எனக்குத் தோன்றும்.

ஒரு வலசைப் பறவைக்குக்கூட மூளையின் வலைப் பின்னலுக்குள் தான் எங்கே செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும், இடைத் தங்கல் எவ்வளவு சாத்தியம் என்பது உள்ளிட்ட நுட்பங்களெல்லாம் தெரியும். ஆனால் இவ்வளவு காலம் படித்தும், எட்டாண்டு கால அனுபவமிக்க மருத்துவனாகியும், ஏனைய மருத்துவர்களின் தோழமை வட்டத்திற்குள் இருந்தும்கூட ஒரேயொரு மரபணு மருத்துவரைச் சந்தித்து பிறவிக் குறைபாடுடைய இந்தக் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்துவிடக்கூடிய அவசியமான உரையாடலை நிகழ்த்துவதற்கே இத்தனைக் காலங்கள் ஓடிக் கடந்துவிட்டன.

சுற்றிலும் ஊர்ந்து செல்கிற பேருந்துகளின் இரைச்சல், சாலையெங்கும் நிறைந்து வழிகிற மக்கள் கூட்டங்கள், எரிச்சலும் கோபமுமான மனிதர்களின் சதா பேச்சரவங்களென அசூயையான உலகம் புகைமண்டலம் போல என்னைச் சூழந்திருக்க, எதனாலும் என்னுடைய பதட்டமான மனநிலையிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை. ஒரு சிறிய கோட்டை மறைப்பதற்குப் பக்கத்திலேயே பெரிய கோட்டை வரைவது போல அதற்கெல்லாம் மீறிய துயரத்தில் என்னை நானே வதைத்துக் கொண்டிருந்தேன்.

நெடுநாளைய இந்தப் பயணத்தின் போது நான் கண்டுகொண்ட பிரதான உண்மையென்பது நாமெல்லாம் எப்போதுமே நிலையில்லாததையும், நிரந்தரமற்ற ஒன்றையும் தான் தேடியலைகிறோம் என்பது தான். ஆதிகாலம் தொட்டு இன்று வரையிலும் எத்தனையோ பிறவிக் குறைபாடுடைய குழந்தைகள் பிறந்து, வளர்ந்து, பேசுவதற்கான குரல்களை இழந்து, கேட்பதற்கான புலனுணர்வுகளையெல்லாம் தொலைத்து ஏதோ கடந்த கால மௌனப் படங்களைப் போல நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் இதுவரையிலும் நாம் இக்குழந்தைகளுக்காக செய்தவையெல்லாம் நிலையில்லாததும் நிரந்தரமற்ற ஒன்றாகவும் தானே இருந்திருக்கிறது!

உலகிலே கண்டறியப்படுகிற அத்தனை நோயிற்குமான குணமாக்கலையும்கூட இதே உலகம் தான் கண்டுபிடித்தும் வைத்திருக்கிறது என்று என்னுடைய மருத்துவப் படிப்புக் காலத்தில் நினைத்து அத்தனையும் வியந்திருக்கிறேன். ஆனாலும் மாற்றுத்திறனாளி முகாம்களில், செவித்திறன் குறைபாடுடைய பள்ளிகளில் இன்றும்கூட குறைபாடுகளோடு எண்ணிக்கையில்லா குழந்தைகள் இருப்பதை எண்ணி நம் மருத்துவமும் விஞ்ஞானமும் இன்னும் போதாமையின் பாதையில்தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறதென்கிற நிஜம் உறைக்கத் துவங்கியது.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 12th Medical Series By Dr. Idangar Pavalan.

ஆதி மனிதன் தோன்றிய காலத்திலிருந்து எந்த யுகத்தில் இந்தப் பிறவிக் குறைபாடுடைய சாபங்களெல்லாம் மனித குலத்தை கொடிய சர்ப்பத்தைப் போல தீண்டியிருக்கும்? எத்தனையோ தலைமுறைத் தலைமுறைகளாக இத்தகைய பாவங்கள் மனதகுலத்தை விடாமல் இன்றுவரையிலும் துரத்தியடித்துக் கொண்டு தானே இருக்கிறது. இவ்வளவு விஞ்ஞான மருத்துவத் தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட பின்னாலும்கூட அடுத்த தலைமுறைக்கும் இப்பிரச்சனை கடத்தப்படாமலிருக்க, இந்தக் குழந்தைகளுக்கான நிரந்தமான தீர்வு ஒன்றை நாம் என்ன தான் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்கிற மன உளைச்சலில் இன்னமும் என் மனம் தவித்தபடியே தான் இருக்கிறது.

ஆரம்பத்தில் நான் கல்லூரிக் காலம் முடிந்து அரசு மருத்துவனாய் கிராமத்தில் பணியாற்ற வந்த காலகட்டத்திலெல்லாம் பள்ளிக் குழந்தைகளுக்கென்று வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிச் சிறார் நலத்திட்டம் என்கிற தனிப்பட்ட மருத்துவமொன்று இருந்தது. ஆனாலும் ஏதோவொரு வகையில் இப்பணி எனக்கு குறைபட்ட ஒன்றாகவே மனதில் தோன்றும். அரசு ஆரம்ப சுகாதார நிலைகளில் நிகழ்த்தப்படுகிற நூற்றிலொரு திட்டங்களுள் ஒன்றாய் அது இருப்பதாலும், ஆயிரக்கணக்கான சிறார்களைக் கொண்ட பள்ளிகளே நூற்றுக்கணக்கில் இருக்கின்ற போது அதற்கென தனியே மருத்துவர்கள் இல்லாதிருப்பதும்கூட ஏனோ மனக்குறையாகவே இருக்கும். இத்தகைய காரணங்களால் பள்ளிச் சிறார்களுக்கான அன்றைய ஆரோக்கியம் சார்ந்த மருத்துவங்கள் எதுவும் அவ்வளவாக பிரபலமாகியிருக்கவில்லை.

அதற்குப் பின்பான காலகட்டத்தில் தான் பள்ளிக் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக ஆர்.பி.எஸ்.கே (Rashtriya bal swathya karyakram) என்கிற நடமாடும் மருத்துவத் திட்டத்தை ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொண்டு வந்தார்கள். இத்திட்டத்தின் வழியே கடைக்கோடிக் கிராமங்கள் தோறும் சென்று பிறந்த குழந்தை முதல் பதினெட்டு வயது வரையிலான குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் பிறவிக் குறைபாடுகளுக்கான அறிகுறிகளை பரிசோதிக்கத் துவங்கினார்கள். அவர்களுக்குப் பால்ய பிராந்தியத்திலேயே நாள்பட்ட நோய்கள் இருப்பதைக் கண்டறியவும், ஆரம்ப கட்ட நிலையிலேயே அதற்கு வைத்தியம் செய்வதும், மேற்சிகிச்சை தேவைப்படுகிற பட்சத்தில் அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு சிறப்பு மருத்துவக் குழுவினரிடம் பரிந்துரைப்பதுமான நுட்பமான பணிகளை திறம்படச் செய்யத் துவங்கினார்கள். அதற்குப் பின்னர் தான் குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள் மீதான கவனத்தையே இந்தச் சமூகம் தீவிரமாக உணரத் துவங்கியது.

நிஜத்தில் பிறவிக் குறைபாடுகள் பற்றிய தெளிவு எனக்கு உருவாகிய காலகட்டமும் கூட இதுதான். இத்தகைய பள்ளிச் சிறார்களுக்கென்றே தனிப்பட்ட மருத்துவம் துவங்கப்பட்ட பின்னர் கண்டறியப்பட்ட நோய்களும் அதன் வழியே சிகிச்சையளித்து குணமடைந்து மீண்ட குழந்தைகளும் ஏராளம். என் கண் முன்னாலே நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்வு, மறுவாழ்வு பெற்று மீண்டு வந்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்ணாரக் கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன். ஆனாலும் இத்தகைய மரபணு மருத்துவத்தை நோக்கிய பாதையில் காலெடி எடுத்து வைத்து பயணப்பட்டப் பின்பாக இதனுடைய போதாமையையும், இன்னும் செல்ல வேண்டிய தூரத்தையும் என்னால் எளிதாகவே உணர முடிந்தது.

பள்ளிகளை மட்டுமே கவனம் கொள்கிற இந்தக் குழந்தைகளுக்கான திட்டமானது பள்ளி செல்லாதக் குழந்தைகளையும் எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதைப் பற்றிய குழப்பம் எனக்குள் இப்போதும்கூட எழவே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு திட்டங்களும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தும்கூட, ஏன் நான் இப்பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளைத் தேடி இப்படி மனப்பிறழ்வு வந்தவனைப் போல காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன் என்கிற கேள்வியையும் என்னை நோக்கி நானே கேட்க வேண்டியிருக்கிறது.

சில காலம் கழித்து தான் இந்த மருத்துவத் திட்டத்தைப் போலவே கல்வித் துறையிலும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கென்று கிராமங்கள் தோறும் இயங்குகிற எஸ்.எஸ்.ஏ (Sarva Shiksha Abhiyan) என்கிற திட்டம் இருப்பதைப் பற்றி என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. வெறுமனே குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசான வாழ்வைப் பற்றி மட்டுமே காலமெல்லாம் கனவு கொண்டிருந்தால் இத்தகைய அரிதான விசயங்களையெல்லாம் என்னால் தீர்க்கதரிசனமாக கண்டடைந்திருக்கவே முடியாது. அதேசமயம் இப்படியொரு அரியத் தேடலின் மகத்துவங்களையெல்லாம் என்னால் உணர்ந்திருக்கவும் முடியாது. இதைப் பற்றி யோசிக்கிற போது இன்னும் கூட நாம் இலட்சியப் பாதையிலிருந்து நழுவிவிடவில்லை என்கிற உள்ளுணர்வின் திருப்தி எனக்குள் ஏற்படவே செய்கிறது.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 12th Medical Series By Dr. Idangar Pavalan.

அடிப்படையில் புத்தனும் இயேசுவும்கூட தனக்குத் தானே கேள்வியைக் கேட்டுக் கொண்டவர்கள் தான். அகத்தின் கேள்வி ஏற்படுத்திய தேடலின் நெருப்பு கனன்றபடியே இருக்க, அதன் அகத் தூண்டலின் வழியே வாழ்வின் மெய்மையைத் தேடிய பயணத்தில் அவர்கள் கண்டு கொண்ட தரிசனங்கள் யாவும் மனிதகுல மேன்மைக்கான போதனைகளாக மாறின. நானொன்றும் ஆன்மீகவாதியல்ல. ஆனால் நான் ஏன் இவ்வாறு என்னுடைய சுகவாழ்க்கையெல்லாம் துறந்து இப்படி விட்டேந்திரியாய் திருந்து கொண்டிருக்கிறேன் என்பதற்குப் பின்னால் இந்த இருவருமே தான் எப்போதும் இருக்கிறார்கள். என்னுடைய பயணத்தின் பாதையில் எராளமான தடைக்கற்களின் கூர்மையைச் சந்திக்கின்ற போதும், எனக்கானத் தோல்விகளின் புறமுதுகை எதிர்கொள்கிற போதும் நான் அயர்ச்சியுறாமல் இயங்குவதற்கு இந்த புத்தனும் இயேசுவுமானவர்களே முன்னத்தி ஏராக நின்று எனக்கு வழிகாட்டியபடியே இருக்கிறார்கள். ஏனெனில் இவ்வுலகின் ஒப்பற்ற தேசாந்திரிகள் இவர்களே!

தாலூகா வரியாக இயங்குகிற இத்தகைய அரசின் எஸ்.எஸ்.ஏ திட்டத்தைப் பற்றிய தேடலில் இன்னும்கூட பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்ததும் ஒருவழியில் நல்லதுதான். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளிப் பள்ளிக் குழந்தைகளுக்கென்றே வடிவமைப்பட்ட இத்திட்டத்தைப் பற்றி அங்கிருப்பவர்கள் எல்லோருமே ஒருவித நெகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டார்கள். இத்திட்டத்தின் முக்கிய அங்கமான சிறப்புப் பல்நோக்குப் பயிற்றுநர்களெல்லாம் வீதிவீதியாக வீடுகள் தோறும் சென்று அங்கிருக்கிற குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிகிறார்கள். பின்பு நடத்தப்படுகிற சிறப்பு முகாம்களின் வழியே குறைபாடு உறுதி செய்யப்படுகிற குழந்தைகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நலவாரிய அலுவகத்தின் வழியே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைப் பெறுவதற்கான உதவிகளையும் அவர்கள் உடனிருந்து செய்து கொடுக்கிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் இக்குழந்தைகளை அருகைமையிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கே சேர்ந்து படிக்க வைப்பதற்கான முயற்சிகள் எடுப்பதோடு, அக்குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியையும் அவர்கள் வழங்குகிறார்கள். முக்கியமாக, மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கென பராமரிப்புப் பணப் பலன்களைப் பெற்றுத் தருவது, காது கேட்கிற கருவிகள் போன்ற உதவி உபகரணங்களைப் பெற்றுத் தருவது, மூளை வளர்ச்சிக் குறைவான குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உடல் பராமரிப்புத் தொடர்பான பயிற்சியை பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுப்பதென அவர்களின் அநாயசமான பணியைப் பற்றிக் கேள்வியுறும் போது உள்ளார மகிழ்ச்சியின் மழை பெய்யத் துவங்கியது என்னவோ உண்மைதான்.

ஆனாலும் இத்திட்டத்தைப் பற்றி நான் தெரிந்து கொண்ட தருணத்திலும்கூட ஏதோ ஒன்று நெருடலை ஏற்படுத்துவதாகவே இருந்தது. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் இத்திட்டத்தின் அடிப்படையிலேயே குறைபாடு இருப்பதாக மனதிற்குப்படுகிறது. எல்லா ஆரோக்கியமான குழந்தைகளிலும் குறைபாடுடையவர்களையே மனம் தேடுவதைப் போல, எத்தனையோ நல்ல திட்டங்கள் இருந்தாலும் அதிலிருக்கிற குறையை நோக்கியே மனம் அலை பாயத் துவங்கிவிடுகிறது. இத்திட்டமானது முதலாம் வகுப்பிலிருந்து தான் துவங்குகிறதென்றால் இத்திட்டத்தின் பயிற்றுநர்கள் ஆறு வயதிலிருக்கிற குழந்தைகளிலிருந்து தான் தங்களது பணியையும், குறைபட்ட குழந்தைகளைக் கண்டறிகிற வேலையையும் செய்கிறார்கள் என்பதை இயல்பாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியென்றால் பிறவிக் குறைபாடுடைய காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளை ஆறு வயதிற்குள்ளாகவே கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சையளிக்க வேண்டும் என்கிற முதலாவது நிபந்தனையிலேயே இத்திட்டம் அடிபட்டு விடுகிறதே!

எப்படிப் பார்த்தாலும் பிறவிக் குறைபாடாய் பிறக்கிற இந்த அப்பாவிக் குழந்தைகளுக்கென இயக்கம் கொள்கிற இந்த மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த இரண்டு கட்டமைப்பின் மீதும் மதிப்பும் மரியாதையும் மேலோங்கி நிற்கிற மனம் பரவசம் கொள்ளவே செய்கிறது. ஆனாலும் அத்தகைய பரவசம் வடிந்து அடியாழத்தில் நிகழுகிற நிஜத்தைக் காணுகையில் இப்படியாகப் பிறந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்கிற முத்திரையைக் குத்துகிற வேலையையும், அப்படி மாற்றுத்திறனாளியாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவுமான தற்காலிக தீர்வை மட்டுமே தான் நாம் இதுவரையிலும் செய்து வந்திருக்கிறோம் என்றே மனதிற்குப் புரிகிறது.

ஏனோ இந்தப் பேருந்துப் பயணத்தில் அடைமழையாய் பெய்து ஓய்ந்துவிட்ட இந்த மழையையும் நம்முடைய பிறவிக்குறைபாடுடைய குழந்தைகளுக்கான கட்டமைப்பையும் ஒருவகையில் முடிச்சுப் போட்டுப் பார்க்கவே மனம் எத்தனிக்கிறது. இந்தப் பெருமழையின் ஒவ்வொரு துளியும் ஆதியிலிருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதியில் துளிர்த்த அதே நீர்த்துளி தான் மீண்டும் மீண்டும் மழையாகி பின் மேகமாகி சுழற்சியின் அடுக்கில் பூமியில் அடுத்தடுத்து பிரவாகமெடுத்தபடியே இருக்கின்றன. இந்த மனிதகுலம் இருக்கின்ற வரையிலும் இந்த மழையும், மலை முகடுகளும் இருக்கத் தானே செய்யும். அதே போலத்தான் இக்குறைபாடு பற்றி இன்றுவரையிலும் நாம் முன்னெடுத்திருக்கிற கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த குறைபாடுகளுடைய முன்னேற்பாடுகளுமே என்று தோன்றுகிறது.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 12th Medical Series By Dr. Idangar Pavalan.

இங்கே ஒரு மருத்துவனாக எனது நீண்ட காலப் பயணத்தினூடே கண்டு கொண்ட காளீஸ்வரி, பிரியா போன்ற இன்னும் எத்தனையோ குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களுக்குப் புரியும்படியான விழிப்புணர்வை ஏற்படுத்திய கையோடு, பலகட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் இக்குழந்தைகளை என்னால் காது கேட்கவும், பேச வைத்துவிடவும் முடியும் தான். அதன் வழியே இக்குழந்தைகளிடமிருக்கிற காது கேளாத, வாய் பேசாத குறைபாட்டையெல்லாம் ஊர்க் கோடாங்கி அருள்வாக்குச் சொல்லிப் பேயை விரட்டியடிப்பதைப் போல என்னால் துரத்திவிடவும் முடியும்.

ஆனால் இக்குழந்தைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்களாகி அவர்களும் திருமணம் செய்து கொள்கிற பட்சத்தில் இவர்களுடைய குழந்தைக்கும் இக்குறைபாடு வராது என்பதற்கு இங்கே என்ன நிச்சயம் இருக்கிறது? அதை நிச்சயப்படுத்துவற்கான மருத்துவம் என்ன இருக்கிறது? நாமும் இப்போதுள்ள வசதியினால் கேட்பதற்கான கருவியை குழந்தைக்குப் பொருத்துகிறோம், அவர்களுக்குப் பயிற்சியளித்து நம்மைப் போலவே பேச வைத்தும் விடுகிறோம். ஆனால் இக்குழந்தைகளின் பிறவிக் குறைபாட்டிற்குரிய குறைபட்ட மரபணுக்கள் இன்னமும் அவர்களின் உடலிலேயே இருக்கிற பட்சத்தில் அதனைச் சரி செய்வதற்கான மரபணு மருத்துவத்தைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

ஒருவேளை இக்குழந்தைகளுக்கு குறைபட்ட மரபணுவினால் தான் இக்குறைபாடே வந்திருக்கிறதென்றால் நாம் அவர்களுக்கு காது கேட்பதற்கான சிகிச்சையளித்த பின்னரும்கூட அத்தகைய மூலப் பிரச்சனை இன்னும் அப்படியே தானே இருக்கும். ஆக, இவர்களும் பின்னாளில் திருமணம் செய்து கொள்கிற போது அவர்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைகளுக்கும் இதே குறைபாடு தொடருமா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கான அல்லது உத்திரவாதம் அளிக்கக்கூடிய மருத்துவக் கட்டமைப்பை நாம் இன்னுமே வளர்த்தெடுக்கவே இல்லை என்பது தானே அர்த்தமாகிறது.

ஆக, எவ்வளவு தான் இக்குழந்தைகளுக்கு வாழ்வதற்கான சலுகைகளை நாம் அளித்தாலும் அது அன்றைய தலைமுறைக்கானதாகவே இருக்கிறதே தவிர அடுத்த தலைமுறைக்கான மருத்துவமாகவும், நிரந்த மாற்றத்திற்கான வழிகாட்டியாகவும் அது இன்னமும் மாற்றமடையவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இக்குறைபாடானது அவர்களது பிள்ளைகள், அவர்களுக்கு அடுத்த பேரன் பிள்ளைகளென தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு இத்தகைய நோயானது ஒரு சங்கிலித் தொடரைப் போல காலம் முழுமைக்கும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கும். அதுபோலவே இந்த நூற்றாண்டிலும் இப்பிரச்சனை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.

அப்படியென்றால் தலைமுறைக்கும் தொடருகிற இந்த மரபணுவின் மூலப் பிரச்சனையைச் சரி செய்வதற்கான முயற்சியைச் செய்யாமல், ஏதோ உலகம் அழிந்து மடியும் வரைக்கும் மட்டும் இக்குழந்தைகளுக்காக ஏதோ நம்மால் முடிந்த ஏதேனும் சில உதவிகளைச் செய்துவிட்டு நகர்ந்துவிடுவோம் என்பதைப் போலத் தான் நாமும் நடந்து கொள்கிறோமா என்று நம் கட்டமைப்பின் மீதே பெருத்த சந்தேகம் எழுகிறது. உண்மையில், நாம் சிந்திக்க வேண்டியது என்னவோ அடுத்த தலைமுறையிலாவது எப்படி ஆரோக்கியமான உலகத்தைப் படைக்கப் போகிறோம் என்பதைப் பற்றித் தானே இருக்க வேண்டும்?

காது கேளாத பிறவிக் குறைபாடுடைய குழந்தைகள் யாவரும் வளர்ந்து பெரியவர்களாகி திருமணமாகிய பின்னே அவர்களின் வாழ்வை நினைத்து அச்சப்படுவது முதலில் அவர்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைகளைப் பற்றித் தான். எங்களது காலம் தான் இப்படிக் கிடந்து நல்லது கெட்டதென எதையும் கேட்காமலும், எதையும் ஆசைதீர வாய் திறந்து பேசாமலுமாக கழிந்துவிட்டது. எங்களது பிள்ளைகளின் காலத்திலாவது இப்பிரச்சனைகள் தொடராமலிருக்க வேண்டுமென்பதே எங்கள் காலத்தின் கனவாக இருக்கிறதென கண்ணீர் மல்க கடவுளிடம் வேண்டிக் கையேந்தி நிற்பதை இன்றும்கூட மடாலயங்களில் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 12th Medical Series By Dr. Idangar Pavalan.

முதலாவது பிறந்த குழந்தை காது கேளாத பிறவிக் குறைபாடாய் இருந்துவிட்டால் அக்குழந்தையைப் பெற்றவர்கள் மருத்துவமனைகள் தோறும் அழைத்துச் சென்று பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லையென அக்குறைபாட்டைச் சரிசெய்வதற்கான வழியில் எப்படியோ தட்டுத்தடுமாறியாவது நடக்கத் துவங்கிவிடுகிறார்கள். ஆனால் எத்தனையோ துயரங்களைத் தாண்டி அவர்கள் கடந்து வந்தாலும்கூட அவர்களுக்குள்ளேயே ரணமாய் உறுத்திக் கொண்டே இருக்கிற ஒரே விசயம், அடுத்ததாகப் பிறக்கப் போகிற பிள்ளையாவது ஏதும் குறைகளற்று ஆரோக்கியத்தோடு பிறக்குமா என்கிற ஏக்கப் பெருமூச்சாகத் தானே இருக்கிறது.

ஆனாலும் இத்தகைய ஏக்கத்திற்குப் பதிலாக மரபணு மருத்துவம் சார்ந்த ஏதாவதொரு கட்டமைப்பை இன்றைய சூழலில் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா, அவர்களின் வேதனைக்கும் ஆற்ற முடியாத துயரங்களுக்கும் நிரந்தர தீர்வாக எத்தகைய பதிலைத் தான் நாம் வைத்திருக்கிறோம் என்றால், ஒன்றுமே இல்லை என்பதே அத்தகைய மரபணு மருத்துவருடனான உரையாடலின் போது நான் கண்டு கொண்ட உண்மை. எத்தனையோ மாதக் கணக்கிலே நான் அலைந்து திரிந்து இதற்கான விடையைத் தேடிப் புறப்பட்டுப் போன இந்தப் பயணத்தில் மரபணு மருத்துவத்தைப் பற்றிய நிதர்சனமான விசயங்களைப் பற்றி ஏராளமாக அறிந்து கொள்ள முடிந்தது. அதேசமயம் நான் கண்டடைந்த எந்தவொரு விசயங்களுமே இக்குழந்தைகளுக்கான உவப்பான செய்தியாக இல்லை என்பதையும் நான் கூடவே சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

நான் பேருந்திலே பயணப்படுக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில் படபடத்து சப்தமிடுகிற ஜன்னல் திறப்புகளையும் மீறி சாரல் துளிகள் சில மெலிசாக பேருந்தினுள் எட்டிப் பார்த்தபடியே இருக்கின்றன. பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுதில் மழை பெய்வதைக் காணக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். எத்தகைய துயரங்களையும் கடந்துவிட அழைக்கின்ற அசரீரிக் குரல் போலவே மழையின் ஓசை சதா காதில் விழுந்து கொண்டே இருக்கும். அப்படியொரு துயரத்திலிருந்து மீள்வதற்கான அழைப்பை மழை எனக்கும் விடுத்தபடியே தான் இருக்கிறது.

இந்தச் செவ்வக வடிவ கண்ணாடிச் சட்டத்தின் ஜன்னலிற்கு வெளியே வீதியெங்கும் மழைகள் தூவி வீடுகளும் தெருக்களும் தெளிவற்ற நீரோவியங்களைப் போலவே கண்ணுக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இங்கு மழையும் இருக்கிறது, நீரும் இருக்கிறது. ஆதியில் உருவான தண்ணீரிலிருந்து எதுவுமே கூடவும் இல்லை, குறையவும் இல்லை. ஆனாலும் நாம் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் இன்னமும் பருவத்திற்கு அலைந்தபடியே தான் இருக்கிறோம். அதற்குக் காரணம் தண்ணீர் இல்லையென்பதல்ல, நம் கட்டமைப்பு சரியில்லை என்பதே எதார்த்தம். இக்குழந்தைகளுக்கும்கூட நாம் அப்படியான நிலையைத் தான் ஏற்படுத்தி வைத்திருக்கிறோமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

பிறவியிலேயே காது கேளாமல், வாய் பேசாமல் இருக்கிறவர்கள் யாரையேனும் திருமணம் செய்து கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்விற்குத் தயாராகிற போது அத்தகைய குறைபாடு தங்கள் பிள்ளையின் வாழ்வையும் சிதைத்துவிடக் கூடாதென்று அவர்கள் விரும்புகிற பட்சத்தில் அதற்கான மரபணு ஆலோசனைகளையும், பரிசோதனையும், சிகிச்சைக்கான வழிமுறையும் வழங்குவதற்கான அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு ஏற்கனவே இருக்கத்தான் செய்கிறது. மரபணு மருத்துவம் என்கிற பெயரளவில் மட்டுமே நாம் தெரிந்து வைத்திருக்கிற இதன் முக்கியத்துவத்தை ஒரு மருத்துவராக நானே இப்போது தான் கண்டறிகிற போது ஏதுமறியா இந்தப் பொது ஜனங்களைப் பற்றி நான் என்ன குற்றச்சாட்டை வைத்துவிட முடியும்?

வெறுமனே புத்தகப் புழுவாகத் திரிந்த நாட்களைத் தாண்டி நடப்பில் இக்குழந்தைகளுக்கான எதிர்காலத்தை நோக்கிய கள எதார்த்தத்தில் நகரத் துவங்கிய நாட்களிலிருந்து எல்லாமுமே வலியும் வேதனையுமான துயரங்களைத் தாண்டி என் வாழ்வில் வேறு எதுவுமே இல்லையென்றாகிவிட்டது. மரபணுக் குறைபாடு என்றால் அதற்கென மரபணு மருத்துவர்கள் இருப்பார்கள், எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்கிற கற்பனையோடே மருத்துவப் படிப்பை முடித்தாயிற்று. இப்போது அத்தகைய மருத்துவம் அப்படி எங்கே தான் இருக்கிறது என்று தேடப் போய் கண்டு கொண்ட உண்மை என்னவோ இன்னும் நான் பயணிக்க வேண்டிய பாதைகளை நீளச் செய்தபடியே தான் இருக்கிறது.

முதலில் மரபணு மருத்துவ ஆலோசனை மையங்களுக்கு இப்பெற்றோர்கள் செல்கையில் இத்தகைய மரபணு மருத்துவர்கள் அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கிற பிரச்சனைகள், குறைபாடுகள் மற்றும் குடும்பத்தில் அம்மா வழியிலும் அப்பா வழியிலுமாக இருக்கிறவர்களின் நோய்க்கூறுகளை வைத்தே மரபணு வரைபடத்தை கச்சிதமாக வரைந்தெடுக்கிறார்கள். பெற்றோர்களில் எவரிடமாவது பிறவிக் குறைபாடுக்குரிய அறிகுறிகள் இருப்பின் அவருடைய இரத்த மாதிரியை மரபணு பரிசோதனைக்காகச் சேகரித்து அதிலிருந்து மரபணுக்களை வரிசையாகப் படித்து எந்தக் குறைபாடுடைய மரபணு அப்பெற்றோருக்கு இருக்கிறதென்பதைக் கண்டறிவார்கள். அதன் பின்பு சேகரித்த ஒட்டுமொத்த தகவலின் அடிப்படையில் அவர்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்கு எத்தனை சதவீதம் இக்குறைபாடுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதென்பதை தெய்வவாக்கு போலவே பெற்றோர்களுக்குச் சொல்லிவிடுகிறார்கள்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 12th Medical Series By Dr. Idangar Pavalan.

மரபணு மருத்துவர்கள் முதலில் கண்டறிவது என்னவோ இப்பிரச்சனையானது மரபணுவால் விளைந்த ஒன்றா அல்லது மரபணு தவிர்த்த வேறு ஏதாவது காரணங்களால் ஏற்பட்டிருக்குமா என்கிற மர்மமான விசயத்தைத்தான். மரபணுப் பிரச்சனையென்றால் எந்த மரபணுவில் பிரச்சனை, அது எத்தனை சதவீதம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதற்குச் சாத்தியம் என்கிற அடுத்தகட்ட தேடுதல் வேட்டையை நோக்கிய பாய்ச்சலை அது துவங்கிவிடும். ஒருவேளை மரபணுப் பிரச்சனையால் அத்தகைய குறைபாடு ஏற்படவில்லையென்றால் அடுத்த குழந்தைக்கும் இது வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது அல்லவா. அதாவது இப்பிரச்சனை அந்தவொரு குழந்தையோடே முடிந்து போகிற விசயமாகிவிடும். அப்போது அடுத்த குழந்தையை நினைத்து பெற்றோர்கள் அச்சப்பட வேண்டியிருக்காது. குறிப்பாக குறைபிரசவம், குறைவான எடையில் பிறத்தல், கிருமித் தொற்றுகள் போன்றவற்றின் வழியே பிறவிக் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பின் அது அடுத்த தலைமுறைக்கும் பரவாது என்பதை வைத்தே இதனை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒருவேளை அவர்கள் ஒரே இரத்த உறவுக்குள்ளே தலைமுறை தலைமுறைக்கும் திருமணம் செய்திருந்தாலோ, அவர்களது வீட்டில் உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலோ இத்தகைய மரபணு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதென்கிற முடிவிற்கு மரபணு மருத்துவர்களும் வந்துவிடுவார்கள். கிட்டத்தட்ட நமது உடலிலே தோராயமாக முப்பதாயிரம் மரபணுக்கள் இருப்பதாக இதுவரையிலும் கண்டறிந்திருக்கிறார்கள். அதிலே குறிப்பட்டு இருநூறு முதல் முந்நூறு வகையிலான மரபணுக்களில் தான் இத்தகைய காது கேளாத குறைபாட்டிற்கான காரணங்கள் புதைந்து இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இக்குழந்தைகளுக்கென மரபணுக் குறைபாட்டில் ‘கனெக்ஸின்’ என்கிற மரபணுக் கோளாறு தான் அதிகபட்ச காரணகர்த்தாவாக இருப்பதாக அறியப்படுவதால் முதலில் காது கேளாத பிறவிப் பிரச்சனையோடு வருகிறவர்களுக்கு இந்த ‘கனெக்ஸின்’ மரபணுவைத் தான் இரத்த மாதிரியைக் கொண்டு முதற்கட்டமாக பரிசோதித்துப் பார்க்கிறார்கள். இந்த பரிசோதனையின் முடிவிலேயே குறைபாட்டிற்கான விடை நமக்கு கிடைத்துவிட்டால் அதற்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரத்திற்குள்ளாகவே செலவீனம் முடிந்துவிடும். ஆனால் இத்தகைய பரிசோதனைகளெல்லாம் அரசு மருத்துவமனைகளிலே இன்றுவரையிலும் கிடையாது என்கிற விசயங்களைக்கூட என்னால் மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒருவேளை இந்தப் பெற்றோர்களின் இரத்த மாதிரியில் ‘கனெக்ஸின்’ மரபணுவிற்குரிய குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போனால் மீதமிருக்கிற அத்தனை மரபணுக்களையும் நாம் பரிசோதித்துப் படித்துப் பார்த்துத்தான் எந்த மரபணுவில் எந்தப் பிரச்சனை என்கிற முடிவிற்கே வர முடியும். அதை வைத்துத்தான் அத்தகைய பெற்றோர்களுக்கான ஆலோசனைகளையும் பின்பாக வழங்க முடியும். ஆனால் அதற்கு ஆகிற செலவு என்னவோ இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரைக்குமானதாக அல்லவா இருக்கிறது!

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் இத்தகைய ஆலோசனையின் வழியே இந்தப் பெற்றோர்களுக்குப் பிறக்கப் போகின்ற குழந்தைக்கு, குறைபாட்டோடு பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் எத்தனை சதவீதம் இருக்கிறது என்கிற தோராய மதிப்பைத்தான் தர முடியுமே தவிர கட்டாயம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று உறுதிபடச் சொல்லிவிடவும் முடியாது. ஆனால் அத்தகைய இடத்தை நோக்கி நகருவதற்கு உண்டான பரிசோதனையை பெற்றோர்கள் கரு ஜனித்த பின்னால் வந்து செய்து கொண்டு குறைபாட்டை உறுதி செய்து கொள்ள முடியும்.

இந்தப் பெற்றோர்களுக்கு கர்ப்பப்பையில் கரு ஜனித்து வளர்ந்து பதினாறு வாரக் குழந்தையாகிற போது அவர்களை மீண்டும் மரபணு ஆலோசனை மையத்திற்கு வரச் சொல்லி அவர்களுக்கு பனிக்குடப் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். அதன் மூலம் குழந்தைக்கு ஏதேனும் மரபணுக் கோளாறு இருக்கிறதா அல்லது ஏற்கனவே பெற்றோர்களிடமிருந்து மரபணு பரிசோதனை மூலம் கண்டுபிடித்த காரணிகள் ஏதும் இந்தக் குழந்தைக்கு ஒத்துப் போகிறதா என்கிற முடிவிற்கு வருகிறார்கள். இதன் வழியேதான் உங்கள் குழந்தைக்கு எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கப் போகிறார்களா இல்லையா என்கிற நல் வாக்கை அவர்கள் உறுதிபடப் பிறப்பிக்கிறார்கள்.

அதேசமயம் பெற்றோர்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லாமல் இருந்து முதல் குழந்தை இக்குறைபாட்டோடு பிறந்திருந்தால் அடுத்த குழந்தைக்கு இப்பிரச்சனை வராமல் இருப்பதற்கான வழிமுறைகளும் மரபணு மருத்துவத்தில் இருக்கவே செய்கின்றன. அதற்கு முதலாவது பிறந்த குழந்தையின் மரபணுவைப் பரிசோதனை செய்து குறைபாட்டிற்கான காரணியைக் கண்டறிந்துவிட்டு, பின்பு அதை வைத்தே அடுத்த குழந்தைக்குப் பனிக்குடப் பரிசோதனை மூலம் இக்குறைபாட்டை உறுதி செய்யவோ அல்லது ஆரோக்கியமான குழந்தையென சான்றிதழ் அளிக்கவோ செய்கிறார்கள். இதனை வைத்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தையைத் தொடரலாமா அல்லது கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்பதனைப் பற்றிய முடிவினை செய்து கொள்ளலாம்.

ஆனால் அதெல்லாம் சரி தான், இந்த மரபணு மருத்துவம் எங்கே இருக்கிறது, யார் ஆலோசனை வழங்குகிறார்கள், அவர்களை எப்படி அணுகுவது, எவ்வளவு செலவாகும் என்கிற கேள்வியெல்லாம் இருக்கிறதே! இப்படி யாரேனும் பெற்றோர்கள் கேட்கிற பட்சத்தில் அவர்களுக்குப் பதிலளித்துவிட வேண்டிய இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்கிற தேடுதலோடு பயணித்த பாதையில் எல்லாமே சூன்யமாக இருப்பதைக் கண்டு கொண்ட பின்பு அவர்களுக்கு நான் என்ன பதிலைத் தந்துவிட முடியும்?

மழை இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. மழைக்காலத்திலே சாலையில் ஊர்ந்து செல்கிற நத்தைகளைப் போல பேருந்தும்கூட மழைக்கு மெதுவாகவே செல்கிறது. மழைக்குக் காத்திருந்து பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மழையையும் தூக்கிச் சுமந்தபடியே பேருந்திற்குள்ளே நுழைகிறார்கள். அப்படியே மழையும் பேருந்தில் கொஞ்சம் பயணித்துப் பார்க்கிறது. சற்று நிமிடத்தில் பேருந்தும் பிரத்தியேக குளியலறையைப் போல காட்சியளித்துக் துவங்கிவிட்டது. முன்சீட்டின் இருக்கையில் அமர்ந்து பிள்ளையை தோள் மேல் போட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்த தாயைக் கண்டு கொள்ளாமல், சீட்டின் கைபிடியில் துளிர்த்து நின்ற மழைத்துளிகளை தாய்ப்பாலென சுவைத்துக் கொண்டிருந்தது அக்குழந்தை. மழையால் வயிறு நிரம்பிய பின்னால் தூங்கப் போகலாமென நினைத்திருக்கும் போல.

மழைக்காலத்தில் பேருந்து மனிதர்களின் அரவங்கள் குறைவதேயில்லை. அத்தனை இரைச்சலையும் மீறி தாயின் மடியிலிருந்தும் இருக்கையிலிருந்தும் எம்பிக் குதிக்கிற, ஜன்னல் வழியே மழையை வேடிக்கைப் பார்க்கிற, மழையின் பேச்சுக் குரலைக் கேட்டுக் கூப்பாடு போடுகிற குழந்தைகளும் கணிசமான அளவில் பேருந்தினுள்ளே இருக்கத்தான் செய்தார்கள். எனக்குத் தெரிந்து அந்தக் குழந்தைகள் யாருக்குமே காது கேளாத வாய் பேசாத குறைபாடு இருக்காது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

ஆனாலும் இது என்னவொரு மனநிலையென்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எந்தக் குழந்தையை எங்கே கண்டாலும் அவர்களை ஆரோக்கியமான குழந்தையா அல்லது மாற்றுத்திறனாளிக் குழந்தையா என்று ஒவ்வொருவரையும் மனம் எடை போட்டுப் பார்க்கவே எத்தனிக்கிறது. இப்படிப்பட்ட எண்ணத்தோடு பாவத்தைச் சுமந்து திரிகிற எனக்கும் குழந்தைகள் பிறக்கின்ற போது இதே மனநிலையில் தான் அவர்களையும் அணுகுவேனா, உண்மையில் ஒரு மருத்துவராக அன்றி சாதாரண மனிதனைப் போலதொரு தந்தையாக அவர்களை என்னால் நேசிக்க முடியாதா என்று வேறு அச்சமாக இருக்கிறது. பேருந்தினுள் இரைச்சலோடு இரைச்சலாக கூப்பாடு போடுகிற இந்தக் குறைவில்லாத குழந்தைகளைப் போலவே இந்தப் பூமியெங்கிலும் இருந்துவிட்டால் எப்படியிருக்கும் என்கிற மனநிலையை நோக்கி மனமோ ஏங்கித் தவிக்கத் துவங்கிவிட்டது.

ஆனாலும் நிஜம் என்னை மழையின் குளுமையும் மீறிச் சுடவே செய்கிறது. உண்மையின் வலி உடலெங்கும் பற்றியெரிகிற தீயைப் போல தகிக்கவே செய்கிறது. என் நிலையறிந்து தான் இந்த மழையும் எனக்காகப் பெய்து கொண்டிருக்கிறதோ என்றுகூட மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாடு முழுமைக்கும் இருக்கிற அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட எங்குமே இப்படியான மரபணு மருத்துவ ஆலோசனை மையங்களே இல்லையென்கிற உண்மையை ஒரு மருத்துவரான நானே இப்போது தானே அறிந்து கொள்ள முடிகிறது. சென்னையிலிருக்கிற ஒருசில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்களால் இத்தகைய ஆலோசனை மையங்கள் நடத்தப்படுகிறதே தவிர தமிழகம் முழுமைக்கும் இந்த மையங்கள் இல்லை என்கிற நிஜத்தைக் கண்டு கொண்ட நொடியில் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

இன்னும்கூட சொல்லப் போனால் மரபணு மருத்துவம் பற்றிய மருத்துவப் படிப்பென்பதே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுவரையிலுமே இல்லை. அப்படியொரு படிப்பே இல்லாத பட்சத்தில் எங்கிருந்து மரபணு மருத்துவர்கள் உருவாகுவார்கள்? மரபணு மருத்துவம் படித்த மருத்துவர்களே இல்லாத பட்சத்தில் இக்குழந்தைகள் எங்கே சென்று யாரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள்? டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மட்டும் செவிலியர், விலங்கியல், நுண்ணுயிரியல் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கென்று முதுகலை மரபணு ஆலோசனை மருத்துவ பட்டப் படிப்பு இருக்கிறதே தவிர இன்றைய நிலையிலும் மருத்துவம் படித்தவர்களுக்கான மரபணு மருத்துவப் படிப்பென்பதோ, பயிற்சியோ எதுவுமே இல்லையென்பது தானே இங்கே உண்மை நிலவரமாக இருக்கிறது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆராய்ச்சி மையத்தில் மட்டும் மரபணு மருத்துவம் தொடர்பான துறை சமீபத்தில் துவங்கப்பட்டு மரபணு தொடர்பான ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் செய்து வருகிறார்கள். இதைத் தவிர வேறு எந்த அரசு மருத்துவக் கல்லூரிகளிலுமே இப்படியான துறை இல்லை என்பதை நேரிலே சென்ற போது தான் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இங்கும்கூட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் தான் ஆலோசனைகளை மேற்கொள்கிறார்களே தவிர அதற்கென்று மரபணு மருத்துப் பயிற்சி பெற்ற நிபுணர்கள் எவருமே அங்கில்லை என்பதே எதார்த்தம். அங்கிருக்கிற ஆய்வகத்தில் ‘கேரியோடைப்பிங்’ என்கிற மரபணுக்களை எண்ணிப் பார்த்துக் கண்டறிகிற நோய்க்கான பரிசோதனைகள் தான் இருக்கிறதே தவிர மேலே இப்பெற்றோர்களுக்கென்று குறிப்பிட்ட குறைப்பட்ட மரபணுவைக் கண்டறியும் பரிசோதனைகளெல்லாம் இல்லவே இல்லை.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 12th Medical Series By Dr. Idangar Pavalan.

என் பயணத்தில் நான் கண்டு கொண்ட எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிகிச்சைக்கு ஆகிற செலவை எண்ணியே அதனை வலிய தவிர்த்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். அப்படியிருக்க, இப்படி முப்பதாயிரம் வரையிலும் செலவளித்து பரிசோதனை செய்து கொள்வதை என்னவோ அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லப் போகிற கிளி ஜோசியம் பார்ப்பதைப் போலவே நினைத்துக் கொண்டு இதையெல்லாம் தவிர்க்கவே முயலுவார்கள். அப்படியென்றால் அரசு மருத்துவமனையிலேயே இலவச மரபணு பரிசோதனை வசதிகள் வருகிற காலம் வரையிலும் இவர்களை அத்தகைய இலக்கை நோக்கி நகர்த்துவது எவ்வளவு சிரமம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஆக, இங்கே மரபணு மருத்துவம் தொடர்பான மருத்துவர்களுக்கான படிப்பும் இல்லை, அதற்கான மருத்துவர்களும் இல்லை, அதற்கான துறையோ, ஆலோசனை மையங்களோ, பரிசோதனைக்கூடங்களோ, சிகிச்சை மையங்களோகூட எதுவுமே இல்லை. ஆனால் இப்படியான சூழல் தான் இருக்கிறது என்பதை இப்பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு எனக்கு எதுவும் தெரியாது என்பதைப் போல இங்கிருக்கிற எல்லோரையும் போல தலையைத் திருப்பிக் கொண்டு என்னால் நகர்ந்து செல்லவும் முடியாதே. ஆனால் இதற்கான தீர்வென்பது மிகமிக எளிதானதுதான். அத்தகைய தீர்வை நோக்கிச் சிந்திப்பவர்களே இங்கு குறைவு என்பதன் விளைவு தான் இன்றைய மரபணு மருத்துவம் பற்றிய எதார்த்த நிலையென்பதை யாரிடம் சொல்லி நான் புரிய வைப்பது?

பொதுவாக மாவட்டம் முழுவதிலும் இருந்தே பிறவிக் குறைபாடுடைய காது கேளாதவர்களைப் போல பார்வையற்றவர்கள், இருதயக் குறைபாடுள்ளவர்களென இன்னும் எத்தனையோ நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் அத்தனை பேருக்குமே இத்தகைய மரபணு மருத்துவ ஆலோசனைகள் அவசியமனது தானே. பிறவியிலேயே குறைபாட்டோடு பிறக்கிற அத்தனை பேருக்குமே அதற்கான மூலக் காரணம் மரபணு பிரச்சனையா அல்லது மரபணு அல்லாத ஒன்றா என்கிற குழப்பத்தைப் பரிசோதித்துத் தீர்க்க வேண்டும் தானே. இதன் வழியே இக்குறைபாடுடைய குழந்தைகளின் அடுத்த தலைமுறையை நல்ல ஆரோக்கியமான சமூகமாக உருவாக்குவதற்காக மாவட்டம் தோறும் இத்தகைய மரபணு ஆலோசனை மையங்களின் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிய எண்ணம் எனக்குள்ளே தோன்றிக் கொண்டே தான் இருக்கிறது.

ஏற்கனவே மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் என்கிற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிற அதேசமயத்தில் எல்லா மருத்துவக் கல்லூரிகளிலுமே மரபணு மருத்துவத்திற்கான துறையை துவங்க வேண்டிய தேவையை நோக்கி நாம் நகர வேண்டிய காலமாகிவிட்டது. இன்னும்கூட அரசு மாவட்ட மருத்துவனைகளில் ஏற்கனவே இயங்கி வருகிற குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைந்த மையங்களில் மரபணு ஆலோசனைப் பிரிவையும் ஏற்படுத்தி நாம் இத்தகைய பெற்றோர்களுக்கு உதவ முடியும். அங்கிருக்கிற ஆர்.பி.எஸ்.கே மருத்துவர்கள், குழந்தைகள் சிறப்பு மருத்துவர்களுக்கென்று மரபணு மருத்துவம் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்பையோ அல்லது அவர்களுக்கென்றே சிறப்பு பயிற்சி முகாம்களையோ ஏற்படுத்தி மரபணு மருத்துவத்தைப் பற்றிய முன்னெடுப்பை ஏற்படுத்தலாம். உண்மையிலே ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாய் பிறந்து அவர்களுக்குக் காலம் முழுமைக்கும் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், பராமரிக்கவென்று ஆகிற செலவைக் காட்டிலும் இக்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ஆகிற செலவு என்பதுகூட குறைவாகத்தான் இருக்கும்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பேருந்து என் வீட்டிற்கான நிறுத்தத்தில் நின்றுவிடக் கூடும். மழையும்கூட ஓய்ந்துவிட்டது. இனி எப்போது பெய்யுமென்று தெரியவில்லை அல்லது எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம். ஆனால் இக்குழந்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிற பயணம் முடியவே போவதில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகவே புரிகிறது. நான் பயணிக்கிற இந்தப் பாதைக்கு எந்தவொரு முன் வரைபடமும் இல்லை. இதற்கு முன்னர் இந்தப் பாதையில் பயணித்த நபரோ அல்லது எப்படியெல்லாம் பயணிக்கலாம் என்கிற அனுபவ குறிப்புகளோகூட எனக்குக் கிடையாது. நான் உருவாக்கிற இந்தப் பாதை ஒரு வேளை எனக்குப் புதிய பாதையாகவே தோன்றினாலும் என்னைப் போலவே இனி பயணிக்கப் போகிற அடுத்த தலைமுறைக்கு இது ஏற்கனவே அனுபவப்பட்ட பாதையாகவும் இருக்கக்கூடும். அதற்கு நான் உழைக்க வேண்டிய காலமும் பயணிக்க வேண்டிய தூரமும் அதிகமாக இருக்கிறது என்பதையும்கூட நான் புரிந்தே தான் வைத்திருக்கிறேன்.

இங்கு ஆர்.பி.எஸ்.கே, எஸ்.எஸ்.ஏ போன்ற இன்னும் எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இன்னும் கண்டறியப்படாத, கண்டறிந்தும் ஆறு வயதைக் கடந்து சிகிச்சை செய்ய முடியாத, குணப்படுத்துவதற்கான வயதிற்குள்ளாக கண்டுபிடித்தும்கூட சிகிச்சை மற்றும் பொருளாதாரத்தை மனதில் வைத்து எல்லாவற்றையும் நிராகரிப்பவர்களை இன்னும் நான் என் நெடிய பயணத்திலே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன, இதை முற்றிலும் தவிர்க்கவே முடியாதா, இதற்கான எளிய விடையென்று ஏதாவது ஒன்று எந்த வகையிலேனும் கிடைத்திடாதா என்று சதா அலைந்து கொண்டே இருக்கிற தருணத்தில் தான் அதற்கான தரிசனத்தை நான் ஒருவழியாகக் கண்டு கொள்ள முடிந்தது.
அது என்னவென்று அறிந்து கொள்ள நீங்களும் ஆர்வமாக இருக்கிறீர்களா?

முந்தைய தொடர்களை படிக்க: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 11 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *