ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 13 – டாக்டர் இடங்கர் பாவலன்

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 13th Medical Series By Dr. Idangar Pavalan.நிரந்தரமான தீர்வுக்கான தரிசனங்கள்

– டாக்டர் இடங்கர் பாவலன்

எப்போதும் எனக்கான நாட்கள் வெகு சீக்கிரமாகவே இருண்டுவிடுகிறது. அதிகாலைப் புறப்பாட்டிலிருந்து, துயில் கொள்ளச் செல்கிற சாமம் வரையிலும் எனது தேடலின் விளைவாகக் கண்டு கொள்கிற நிகழ்வுகளின் அத்தனை ஞாபகங்களையும் மெல்ல மெல்ல அசைபோட்டுக் கொண்டிருக்கும் போதே மூளை அயர்ந்து விரைவில் தூக்க நிலைக்குச் சென்றுவிடுகிறது. கடந்த காலத்தின் நினைவுகளோடு, அன்றைய பகல் பொழுதுகளின் அவஸ்தைகளையும் ஒரு தேர்ந்த தறியோட்டுகிறவனின் நூற்பாவுதலைப் போல அழகழகாக வெவ்வேறு நிகழ்வுகளைப் பிண்ணிப் பிண்ணி விதவிதமான கனவுகளை இரவில் நான் நெய்தபடியே இருக்கிறேன். இதனாலே என் மனம் எப்போதும் கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடையிலான ஒருவித மயக்கத் தோற்றத்திலேயே இருக்கிறது.

நேற்றைய தினத்தின் முடிவில் மரபணு மருத்துவத்தைப் பற்றி மனம் முடிச்சுப் போட்டுப் பார்த்துக் கொண்ட விசயங்களையெல்லாம் இன்றைய இரவின் கனவுகள் யாவும் ஒவ்வொன்றாக ஞாபகக் கிடங்குகளில் இருந்து எடுத்து ஆர்வமாக புரட்டிப் பார்த்துக் கொள்கிறது. இந்த சமயத்திலே நான் கனவில் இருக்கிறேனா அல்லது நேற்றைய தினத்தில் இருக்கிறேனா அல்லது இரவோடு இருளாக எழுந்து எதையோ என் நாட்குறிப்பில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேனா என்று எனக்கே குழப்பமாகிவிடுகிறது. இதைப் பற்றி யோசிக்கும் போதே இந்த சிந்தனையும்கூட எனது நனவிலியில் தான் எழுகிறதா அல்லது இப்படி சிந்திப்பதும்கூட கனவில் தான் நிகழுகிறதா என்று கொஞ்சம் பதட்டமாகிவிடுகிறது. ஒருவேளை இது பைத்தியக்காரத்தனத்தின் ஆரம்ப கட்ட மனநிலை தானோ என்னவோ?

மெல்ல மெல்ல தலை கனத்து, அறையெங்கும் புழுக்கமாகி, உடல் உஷ்ணமேறுவதைப் போல உணருகையில், பருத்த உடலை அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு, கண்களைக் கொஞ்சம் அயர்ச்சியோடு விழித்துப் பார்க்கையில் அறை இன்னமும் இருளைப் போர்த்தியபடி அப்படியே தான் இருக்கிறது. இந்த இருள், பன்னிரெண்டு மணிக்கு முந்தைய நேற்றைய இரவா அல்லது அதற்குப் பின்பான அடுத்த நாளைய இரவா என்று ஒரு கணம் அதிர்ந்து கண்களைச் சுருக்கி கடிகாரம் தாங்கிய சுவர்களை உற்றுப் பார்க்கிறேன். என் துயரம் படிந்த பாவத்தின் கண்களுக்கு எதுவுமே புலப்படுவதில்லை. இந்த இருளில் நான் விழித்திருக்கிறேனா அல்லது கண்கள் மூடிய நிலையிலேயே இந்த இருட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறேனா என்று இந்த காரிய இருள் கூட ஒருவித தோற்ற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த நிமிடம் எழுந்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இருள் முழுக்கச் சூழ்ந்திருக்க தன்னந்தனியனாக வெறுமனே படுக்கையில் படுத்தபடி மேற்கூரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலொரு வேதனை எதுவுமே இருக்காது. ஆனால் இந்தச் சமயத்தில் தான் தெளிந்த நீரைப் போல மனம் தெளிவாகச் சிந்திக்கத் துவங்குகிறது. எப்போதும் எனக்குள்ளே எழுகின்ற கேள்விகளுக்குப் பதிலான கேள்விகளை இந்த இரவிலே தான் நான் கண்டிருக்கிறேன். நான் யார், என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் சரியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா, சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேனா என்பது போன்ற கேள்விக்கு மேல் கேள்விகளை இந்த இருளோடு பரிமாறிக் கொள்வது என்னவோ கண்ணாடி முன்னின்று என்னை நானே பார்த்துக் கேட்டுக் கொள்வதைப் போலவே இருக்கும்.

அடிப்படையில் எப்போதும் ஒரு புத்தனின் சீடனாக என்னை நானே வருத்திக் கொள்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் அவரது ஞானம் பெற்ற தரிசனங்களை விடவும் அத்தகைய தருணங்களைக் கண்டடைவதற்காக அவரது பயணப்பட்ட பாதைகளும், அடைந்த பயணங்களுமே அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய மகத்துவமான புத்தனிடமிருந்து தான் பயணம் என்பது வெளியே தேடியலைவதும், அதன் வழியே நமக்குள் ஆழ்ந்து பயணிப்பதற்கான சாளரத்தின் சாவிகளைக் கண்டுபிடித்தபடி அகத்தினுள் நுழைந்து தீர்க்கதரிசனங்களைக் கண்டு கொள்வதுமான அற்புதங்கள் நிறைந்த ஒன்று என்பதைக் கண்டிருக்கிறேன். அதன் தாக்கத்தினால் தான் ஒருவேளை இப்படியான சிந்தனைக்குள் சிக்குண்டு உழல்கிறேனா என்றும்கூட எனக்கு விளங்கவில்லை.

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா  பள்ளியில் இலவச பயிற்சி | 3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத ...

பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளைத் தேடியலைகிற என்னுடைய பயணத்திற்கு உண்மையிலே எது காரணமாக இருக்க முடியும்? நான் ஒரு மருத்துவராக இருப்பது மட்டுமே இக்கேள்விக்கான விடையாகிவிட முடியுமா? ஆனாலும் எல்லா மருத்துவர்களும் இப்படிப் பயணப்படவில்லையே! நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்? ஒருவேளை இக்குழந்தைகளின் மீதான பரிதாபகரமான மனநிலை தான் என்னை இயக்குகிறதா! அப்படியென்றால் இக்குழந்தைகளைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் பெற்றோர்களால் நான் அவமானகரமாக நடத்தப்படும் போது அது ஏன் என்னுடைய சுயத்தைத் தட்டியெழுப்பி இப்பயணத்திற்கான முடிவை நோக்கி என்னை நகர்த்தவில்லை?

எனது பயணத்தின் இதயத்தை நோக்கிய தேடலின் அர்த்தங்களை ஆழ்மனதினுள் எழுகின்ற கேள்விகளாலே இந்தக் காரிய இருளின் பார்வைக்குப் புலப்படாத கண்களால் துலாவிப் பார்க்கிறேன். உண்மையில் எதற்காக இந்த பயணம், யாருக்காக இந்த பயணம், இந்தக் குழந்தைகளுக்காகவா அல்லது எனக்காகவா? எனக்கான வாழ்வின் அர்த்தங்களை இக்குழந்தைகளுக்கான தேடலின் வழியே கண்டு கொள்வதற்காகத் தான் ஒருவகையில் நான் முயலுகிறேனா? ஒருவேளை இக்குழந்தைகளுக்காக நிச்சயிக்கப்பட்ட வாழ்வை உறுதி செய்வதற்கான பாதையில் தான் என்னை நானே தேடி கண்டுகொள்ளப் போகிறேனோ? இக்கேள்விகள் ஒவ்வொன்றும் கல்தூண்களிலிருந்து கணீரென்று வருகிற சப்தங்களைப் போல எனக்குள்ளிருந்து விம்மியபடி எழவே செய்கிறது. இத்தகைய முடிவுறா கேள்விகளின் ஓடுகளை முதுகிலே சுமந்தபடியே தான் இன்னும் விடியாத இன்றைய தினத்தின் விடியலை நான் துவங்கியிருக்கிறேன்.

விடிந்தும் விடியாததுமான உன்மத்தப் பொழுதில் பறவைகள் தங்கள் கூடுகளிலிருந்து வானில் பறக்கத் துவங்கியிருக்கிற அந்த நிச்சலனத்தில் என்னுடைய மனமும் கூட்டை விட்டு பறக்கத் துவங்கியிருந்தது. ஒவ்வொரு விடியலும் எனக்கான போதி மரத்தை என் படுக்கையருகே கொண்டு வந்து விட்டுச் செல்கிறது. எனது காலையின் விழிப்பு ஏதோவொரு வாழ்க்கை மீதான திறப்பை உணர்த்தியபடியே இருக்கிறது. பிரக்ஜையுடன் எழுந்து அமர்ந்தவுடனே சட்டென்று மனம் வெறுமை கொள்ளத் துவங்கிவிடுகிறது. என்ன செய்யலாம், என்று யோசிக்கத் துவங்கையிலேயே நிகழ்காலத்தின் அழைப்பைத் தவிர்த்தபடி மனமோ மீண்டும் நேற்றைய அவஸ்தைக்குள்ளாக வலிய வலம் வரத் துவங்கிவிடுகிறது.

இத்தனை மாதங்களாக அலைந்து திருந்து கொண்டிருந்தும்கூட என்னால் இன்னும் இக்குழந்தைகளுக்கான ஆத்மார்த்தமான தீர்வைக் கண்டடைய முடியவில்லையே என்கிற ஏக்கம் என்னுள்ளிருந்து பெருமூச்சாய் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மலைப் பயணத்தின் பாதைகளற்ற வனாந்திர வெளியில் நெடுந் தொலைவு வந்துவிட்டு நட்ட நடுக்காட்டில் வந்த வழியெது, போகும் பாதையெது என்று ஒருகணம் திகைத்து நிற்பதைப் போல அடிக்கடி மனமும் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. ஆனாலும் இந்த வாழ்வில் நான் கற்றுக் கொண்டதெல்லாம், நாம் எதைத் தேடுகிறோம் என்கிற தெளிவு இருக்கிற வரையிலும் நாம் எதிலும் தோல்வியடையப் போவதில்லை என்பதைத் தான். ஆம், தெளிவான ஆற்று நீரில் தானே அடியாழம் காண முடியும்.

இந்த கணம் நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன், எதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஜையோடு தான் இருளின் போர்வைக்குள்ளாக அமர்ந்திருக்கிறேன். பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கான நிரந்தரமான தீர்வை உறுதிபடுத்தக் கூடிய மரபணு மருத்துவத்தைப் பற்றிய நிஜம் ஒருவகையில் எனக்குப் புரிந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் இதைச் செயல்படுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வார்களோ என்கிற எதார்த்தமும் என்னைச் சோர்வடையத் தான் செய்கிறது. ஆனாலும் ஆர்.பி.எஸ்.கே, எஸ்.எஸ்.ஏ போன்ற அத்தனை மருத்துவ வசதிகளிருந்தும் இன்னும்கூட கண்டறியப்படாத இக்குழந்தைகளைத் தேடி, ஊர் ஊராக சுற்றித் திரிந்து கொண்டு, இரவெல்லாம் தூக்கத்தைத் தொலைத்து, கெட்டக் கெட்ட கனவுகளில் உழன்று, ஊருறங்கும் நடுநிசி நேரத்தில் விழிப்புற்றுக் கிடப்பதற்கான காரணத்தை நான் எப்படியேனும் கட்டாயம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

ஒருவேளை தூக்கத்திற்குச் சென்ற என்னுடைய உடல் இந்த அதிகாலைப் பொழுதில் விழிக்கத் தவறி மரணித்துவிட்டால்கூட இந்த உலகம் எப்போதும் போல இயங்கத்தான் போகிறது. என் இறப்பு இங்கே ஒன்றையும் அசைத்துவிடப் போவதில்லை தான். எனது இறப்பிற்குப் பின்னாலும்கூட பிறவிக் குறைபாட்டோடு பிறக்கக்கூடிய குழந்தைகள் இன்னும்கூட ஆயிரக்கணக்கில் பிறந்து கொண்டே தான் இருக்கப் போகிறார்கள். அவர்களில் பாதிக்கும் மேல் நம்முடைய குறைபட்ட மருத்துவக் கட்டமைப்பின் வழியே கண்டறியப்படாமல் ஆறு வயதைக் கடந்து அன்றாடம் மாற்றுத் திறனாளிகளாக உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகிறார்கள்.

குழந்தைகளுக்கு திக்குவாய் நெடுநாட்களாக இருக்கிறதா..?அதை எளிதில் சரி செய்து  விடலாம்.. - Seithisolai | DailyHunt

அப்படியானால் எனது தேடலின் பயணாக கேளாதிருக்கிற, வாய் பேசாதிருக்கிற குழந்தைகளைப் பேசவும், கேட்கவும் வைக்க முடியுமென்று கண்டறிந்த முயற்சிகளெல்லாம் என்னுடைய இறப்போடே முடிந்து போய்விடக் கூடிய ஒன்றாய் இருந்துவிடுமோ என்கிற நடுக்கம் வேறு என்னை நிலைகுலையச் செய்கிறது. இவ்வளவு காலமாய் நான் அலைந்து திரிந்து அடைந்த வேதனைகளும் துயரங்களும் இறுதியில் வீணாய் தான் போகப் போகிறதா என்றும் மனம் அச்சம் கொள்ளத் துவங்கியிருக்கிறது. ஒருவேளை நான் இன்னும்கூட ஒரு பூஜ்ஜியத்தின் சூன்யத்தில் தான் நின்று கொண்டிருக்கிறேனா என்று சட்டென்று வெறுமை வந்து என்னைச் சூழ்ந்து கொள்ளவும் செய்கிறது.

மருத்துவனாக வாழப் பணிக்கப்பட்ட என் வாழ்வு முடிவிற்கு வரும் காலத்திற்கு முன்னேயே இக்குழந்தைகளுக்கான தீர்க்கமானதொரு நிரந்தர தீர்வைக் கண்டுபிடித்துவிட வேண்டும். அதை தமிழகமெங்கிலும் நடைமுறைப்படுத்திய பின்பான அடுத்த நாளே நான் இறந்து போனால்கூட ஒருவகையில் என் வாழ்வு அர்த்தமானது தான். ஆனால் அதுவரையிலும் எக்காரணம் கொண்டும் துவங்கிய இப்பயணத்தை நான் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதை தீர்மானித்தோடு தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவகையில் தூக்கத்தைத் தொலைத்த இந்த இரவும்கூட அந்தப் பயணத்தின் ஒரு பகுதிதானோ என்னவோ!

இருளின் குளத்திற்குள் நீந்தியபடியே நான் பழக்கப்பட்டுப் போன திசையில் நகர்ந்து ஒரு பார்வையற்றவனின் செய்கையைப் போல சுவற்றில் கைகளை மேடு பள்ளங்களாக நகர்த்தி மின் விளக்குகளுக்கான பட்டனை அழுத்திய நொடியில் கிள்ளிவிட்டு வீரிட்டு அழும் குழந்தையைப் போல பளிச்சென்று அறையில் விளக்கு இரைந்து ஒளிர்ந்தது. அதுவரையில் துயில் கொண்டிருந்த அறையும்கூட சோம்பலை முறித்துக் கொண்டு கொஞ்சம் புரண்டுப்படுத்தது. ஜன்னலோரத்தில் கிடத்தப்பட்ட எனது பழுப்பு நிறத்திலான நாற்காலி மேசையைப் பார்த்தேன். அது இன்னமும் சாளரத்தின் வெளியே எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. அதன் மடியில் நேற்றிரவு அணைக்கப்படாமலே மூடி வைக்கப்பட்ட மடிக்கணினியிலிருந்து புள்ளி போல பச்சை விளக்கொன்று கண்சிமிட்டி ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்தது.

மடிக்கணினியின் நாடியைப் பிடித்து நிமிர்த்தி முகத்திரையைத் திறக்கையில் நீலத்திரை ஒளிர்ந்து மெல்ல மெல்ல அதிலே எந்த தேசத்திலோ காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டு அழகாய் சிரிக்கும் குழந்தையின் படம் முன்னே தெளிவாகத் துவங்குகிறது. இப்போதெல்லாம் என்னுடைய அறைகளை இக்குழந்தைகளுக்கான பிரத்தியேகமானப் பகுதியாகவே மாற்றி வைத்திருக்கிறேன். மடிக்கணினியின் முகப்பிலும், அலைபேசியின் திரைகளிலுமென எல்லாவற்றிலும் எனது கவனம் எதன் திசையிலும் திரும்பிடாத வகையில் இக்குழந்தைகளின் புகைப்படத்தையே எதிர்படும் நோக்கில் வைத்திருக்கிறேன்.

சுவரெங்கிலும் இக்குழந்தைகளின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அறைகளை அலங்கரித்தபடியே இருக்கின்றன. சோகம் ததும்புகிற அக்குழந்தைகளின் புகைப்படங்கள் யாவும் மேலிருந்து மின்விசிறிகள் உமிழுகிற காற்றிற்குப் படபடத்துச் சப்தமிடுமிற போது எழுகிற அரவங்கள் யாவும் அவர்களின் அழுகுரல் போலவே எனக்குள்ளே ஏதோ செய்யத் துவங்கிவிடும். என்னை நானே மனதளவில் வதைத்துக் கொள்வதற்காக வலிந்து நானே ஏற்படுத்திக் கொண்ட யுக்தி இது. அப்படி ஒவ்வொரு முறையும் புகைப்படத்தைக் காணுகையில் எனது பயணத்தைப் பற்றிய ஞாபகங்களில் மூழ்கி அதனது பாதையை நோக்கி நான் மீண்டும் நகரத் துவங்கிவிடுவேன்.

இப்போதெல்லாம் தேடலின் பாதைகள் அமர்ந்த இடத்திலேயே எல்லாம் சாத்தியமாகிவிட்டது. அலாவுதீன் பூதத்திடமிருந்து தனக்கு வேண்டியதை இருந்த இடத்திலிருந்தபடியே கேட்டு வாங்கிக் கொள்வதைப் போல, இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அலைபேசியின் தொலை தொடர்பு வசதிகளின் வழியே உட்கார்ந்த இடத்திலேயே கேட்கிற எல்லாவற்றையும் எளிதாகவே பெற்றுவிட முடிகிறது. ஜன்னல் வழியாக உலகைப் பார்த்துக் கவியெழுதிக் கொண்டிருந்த காலங்கள் போய் கணினித் திறப்புகளின் வழியே ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் பார்த்து அத்தனையும் கணித்துவிடக்கூடிய காலத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். இந்தக் கணினியின் வழியே வீட்டிற்குள்ளிருந்தபடியே இவ்வுலகைக் காணவும், இவ்வுலகின் எந்த மூலைகளிலிருந்தும் நம் அனுமதியின்றி யாரோ ஒருவர் நம்மை உளவு பார்க்கவுமான ஆபத்தான இடத்திற்கு வந்ததை எண்ணி அச்சப்படுவதா அல்லது ஆச்சரியப்படுவதா என்பதைப் பற்றி என்னால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

குழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்! - Three Tips to Make Babies  Sleep! | பெமினா தமிழ்

ஆரம்பத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் இக்குழந்தைகளைக் கண்டுபிடித்துக் குணப்படுத்த முடியாமல் போனதற்கு, “குழந்தைகள் வளர வளர பேசிவிடுவார்கள், அவனது அப்பா தாமதமாகப் பேசியதைப் போல பையனும் தாமதமாகத் தான் பேசுவானோ என்னவோ, அம்மா அப்பாவென்று ஒருசில வார்த்தைகளைப் பேசுகிற போது இன்னும் கொஞ்சம் காலம் போனால் அவனாகவே பேசிவிடுவான் தானே, இது பரம்பரை நோயாக இருக்கையில் எப்படி இதைச் சரி செய்துவிட முடியும், அறுவை சிகிச்சையின்றி மருந்து மாத்திரைகள் மூலமாகவே இதைச் சரி செய்திட முடியுமா, நாட்டு மருந்துகளின் வழியே இந்நோயிற்கு எதுவும் சாத்தியப்படாதா, இதற்கான சிகிச்சையை தலையில் செய்வதானால் அது அவர்களின் மூளையைப் பாதித்துவிடாதா” போன்ற படிக்காத பாமர மக்களாகிய பெற்றோர்களின் தவறான புரிதல்களே காரணமாக இருந்திருக்கின்றன. அப்படியென்றால் இப்பெற்றோர்களுக்கான சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அக்குழந்தைகளை சிகிச்சைக்கு தயார்படுத்துவது தான் ஆகச்சிறந்த வழியாக இருக்குமென்கிற புரிதல் தான் எனக்கு ஆரம்பத்திலே இருந்தது.

ஆனால் குழந்தைகள் எந்த வயதில் பேசத் துவங்குவார்கள், எந்த வயதில் என்னென்ன வார்த்தைகள் பேசுவார்கள், குழந்தைகள் நாம் செல்வதைக் கேட்டு எப்படிப் பேசக் கற்றுக் கொள்கிறார்கள், குழந்தைகளுக்குக் காது கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும், அவர்களுக்கு காது கேளாமல் போனால் ஏன் வாய் பேசாமலும் இருந்துவிடுகிறார்கள், இதற்கான காரணங்கள் என்னென்ன, இக்குறைபாடுகளை எப்படி நம் வீட்டுக் குழந்தைகளிடம் கண்டுபிடிப்பது, ஒருவேளை பிரச்சனை இருப்பதைச் சந்தேகிக்கும் பட்சத்தில் அதை எப்படி, யாரிடம் சென்று, எந்த பரிசோதனைகளின் வழியே உறுதி செய்யலாம், அவர்களுக்கான உரிய சிகிச்சை முறைகள் என்னென்ன இருக்கிறது என்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை அளிப்பதின் வழியே தான் இக்குழந்தைகளுக்கான தீர்வை நோக்கிய பாதையில் இப்பெற்றோர்களை நகர்த்த முடியும் என்பதை நான் ஒரு தீர்மானமாகவே வைத்திருந்தேன். ஆனால் இக்குழந்தைகளுக்காகத் தேடியலைந்து ஓரிடத்தில் வந்து இப்போது நிற்கிற போது எனது முடிவைப் பற்றி மீண்டும் ஒருமுறை பரிசீலித்துப் பார்த்தால் அது மலையை நகர்த்துவது போன்ற அசாத்தியமானதும் அபத்தமானதுமாக இருப்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் தமிழகத்தின் எங்கோ ஒரு குக்கிராமத்தின் மூலையில் அமர்ந்து கொண்டு எனக்குத் தெரிகிற அல்லது தெரிந்தவர்களின் வழியே காது கேளாதவர்கள் என்று அறியப்படுகிற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மட்டுமே நான் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு இருந்தால், என்னால் கண்டறிய முடியாமல் போகிற தமிழகம் முழுக்க இருக்கிற ஏனைய குழந்தைகளின் கதி என்னவாகும் என்கிற கவலைகள் தான் இப்போது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன. இரவு படுக்கைக்கு செல்கிற ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் என்னால் கண்டறியப்படாத ஒரு குழந்தை, ஆறு வயதைக் கடந்து மாற்றுத்திறனாளி என்கிற வாழ்நாள் அடையாளத்தோடு தான் வாழப் போகிறது என்கிற குற்றவுணர்ச்சியால் நான் தினந்தினம் தூக்கம் வராமல் தவித்தபடியே இருக்கிறேன்.

இந்தக் குழந்தைகளையெல்லாம் தேடியலைகிற போது ஆறு வயதை நெருங்குகிற நெருக்கடியில் எத்தனையோ பேரை நான் சந்தித்திருக்கிறேன். எனது இருப்பிடத்திலேயே இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போன எத்தனையோ குழந்தைகள் இருக்க, தமிழகமெங்கும் இருக்கிற குழந்தைகளுக்காக ஒரு மருத்துவனாக நான் என்ன தான் செய்யப் போகிறேனோ என்கிற வேதனையில் உழன்ற நாட்களெல்லாம் மாதவிடாய் வந்த பெண்ணின் நாட்களைப் போலவே அடிவயிற்றில் ஏதோ செய்யத் துவங்கிவிடும். இப்போது எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலமே இல்லையா, இதற்கான நிரந்தரமான தீர்வே கிடையாதா, நான் இறந்துவிட்டால் என்னோடே இக்கதையெல்லாம் முடிந்து போய்விடுமா என்கிற பதைபதைப்புகள் தான் எனது இதயத்தை வந்து முழுவதுமாய் நிறைக்கின்றன.

ஆகாசத்திலிருந்து ஒளியை வாளியில் அள்ளி எல்லோர் வீட்டு முற்றத்திலும் தெளித்துவிட்டு அதிகாலைப் புறப்பாட்டை துவங்கியிருக்கிற இந்தக் கிழக்குச் சிவந்த வானத்தைப் பார்க்கிற போதெல்லாம், ஒவ்வொரு நாளும் உதிக்கிற இந்த அற்புதமான விடியல்களைப் போலவே இக்குழந்தைகளின் வாழ்விலும் என்றாவது ஒரு நாள் நிரந்தரமான விடியலை என்னால் ஏற்படுத்திடவே முடியாதா என்கிற ஏக்கங்கள் தான் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய மனநிலையில் தான் ஜன்னலைப் பார்த்தவாறு இப்போது மடிக்கணினியின் முன்னால் வந்து அமர்ந்திருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரையில் நான் இங்கே இருந்தாலும் இல்லாவிட்டாலும் இக்குழந்தைகளுக்கான நிரந்தரமான தீர்வென்பது சாத்தியப்பட வேண்டும். குழந்தைகள் எவரும் காது கேளாத குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய் மாற்றுத்திறனாளியாக மாறுகிற அவலம் இனிமேல் ஒருபோதும் நடக்கக் கூடாது. எனது தேடலின் வழியே தமிழகத்தின் எந்தவொரு மூலையிலும் இருக்கிற குழந்தைகளுக்கு நிரந்தரமான தீர்வென்பது கிடைக்கப் பெறாத பட்சத்தில் என்னுடைய இவ்வளவு நாளைய பயணத்திற்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை என்றாவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆக, இக்குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கிற இடத்திலேயே, அங்கிருக்கிற வசதி வாய்ப்புகள் மூலமே இத்தகைய நிரந்தர தீர்வானது நிச்சயமாக்கப்பட வேண்டும். அவர்கள் குழந்தையாய் பிறக்கின்ற இடத்திலேயே அவர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறதா இல்லையா, என்ன பிரச்சனை, எதனால் பிரச்சனை போன்ற விசயங்களெல்லாம் பெற்றோர்களுக்குக் கிடைத்துவிட வேண்டும். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு என்ன பிரச்சனையென்று தெரியாமல் ஆறு வயது வரையிலும் காத்திருக்கத் தேவையிருக்காது அல்லவா! ஆனால் இதுவெல்லாம் நிஜத்தில் சாத்தியம் தானா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத் தான் கணினியின் வலைப்பக்கத்தைப் புரட்டியபடி பக்கம் பக்கமாக இந்த அதிகாலையிலே தேடிக் கொண்டிருக்கிறேன்.

எனது மருத்துவ நண்பர்களிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு இடைச்செருகலைப் போல அவர்கள் பகிரிந்து கொண்ட சில விசயங்களைத் தான் இப்போது நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது குழந்தைகள் பிறக்கின்ற போதே, அவர்களுக்கு அந்தந்த மருத்துவமனையில் வைத்தே காது கேட்பதைப் பரிசோதிப்பதற்கான திட்டமொன்று நடைமுறையில் இருப்பதாகவும், அத்தகைய விவரங்களை ஏற்கனவே இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கலைக்கூடமானது (IAP-Indian Academy of Pediatrics) தங்களது இணையத்தில் வெளியிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறிய விசயங்களை வைத்துக் கொண்டுதான் இப்போது ஆவலோடு கணினியின் முன்னால் அமர்ந்திருக்கிறன்.

Indian Academy of Pediatrics (IAP) | Home

உண்மையில் எனக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பிறக்கிற அத்தனை குழந்தைக்கும் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உலகளாவிய அளவிலே அறிவுறுத்தி சட்டங்களும் திட்டங்களும் இயற்றியிருப்பதைப் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதைப்போலவே இவ்வுலகில் பிறக்கிற அத்தனை குழந்தைகளுக்கும் காது கேட்கிற பரிசோதனையைச் செய்து காது கேட்டல் திறனை உறுதி செய்த பின்னர் தான் அவர்களை மருத்துவமனையிலிருந்தே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கிற ‘பச்சிளம் குழந்தைகளுக்கான கேட்கும் திறன் பரிசோதனைத் திட்டம்’ ஒன்று ஏற்கனவே நடைமுறையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் நான் உறைந்து போனேன்.

பிறந்தவுடனேயே குழந்தைகளுக்குக் காது கேட்பதைக் கண்டறிய முடியுமா, அதை காது கேட்கும் பரிசோதனைகளின் வழியே உறுதிப்படுத்திட முடியுமா, அப்படியான திட்டங்கள் நிச்சயமாகவே இருக்கிறதா, தமிழகத்தில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன என்பது போன்ற கேள்விகள் அடுத்தடுத்து மழைச் சாரலைப் போல எனக்குள் விழுந்து கொண்டே இருக்கின்றன. நான் மருத்துவக் கல்லூரி மாணவனாய் இருந்த ஐந்தரை ஆண்டு காலம் வரையிலும் இப்படியொரு திட்டம் இருப்பதாகப் படித்ததோ, அப்படியாக குழந்தைகளைப் பரிசோதித்தை நான் பார்த்ததோ எனது நினைவிலேயே இல்லை. அப்படியிருக்க என்ன தான் இத்திட்டத்தில் சொல்ல வருகிறார்கள் என்பதைப் பற்றிய அதிர்ச்சியோடும், நாம் தேடுகிற விசயத்திற்கு ஒருவேளை இதுவே தீர்வாக இருக்குமோ என்கிற அலாதியோடும் கணினியின் பக்கங்களை அவசர அவசரமாக புரட்டிக் கொண்டிருந்தேன்.

இந்த நேரத்தில் இத்திட்டம் பற்றிய நிஜம் எனக்குப் புலப்பட வேண்டுமானால் முதலில் இதனது வரலாற்றுப் பாதைக்குள் நான் பயணித்தாக வேண்டும். பொதுவாக இணையத்திற்குள் நுழைந்துவிட்டாலே ஏதோவொரு மாயாஜால உலகத்தினுள் பிரவகித்துவிட்ட பரவசத்தைப் போலொரு உணர்வு தொற்றிக் கொள்கிறது. அங்கே சாமந்திப் பூக்களை அள்ளியெடுத்து நூலில் வரிசைபடுத்திக் கோர்ப்பதைப் போல பிரபஞ்சம் முழுமைக்கும் நடக்கிற விசயங்களையெல்லாம் ஒரே கோர்வையாக்கி நம் கண்முன்னே எளிதாக விளக்கிக் காட்டிவிடுகிறது. ஆனாலும் பிறக்கையிலேயே காது கேட்பதைப் பரிசோதிப்பது பற்றிய திட்டத்தை வெவ்வேறு இணையங்களின் வழியாக தீவிரமாக தேடிப் பார்த்து தான் எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

இத்திட்டத்தின் துவக்க காலம் என்ன, இத்திட்டம் துவக்குவதற்கான உந்துதலாக இருந்த நிகழ்வு எது, இத்திட்டத்தை முதலில் யார் முன் வைத்தது, இதற்கான திட்ட வரையறையை யார், எப்போது கொண்டு வந்தார்கள், இத்திட்டத்தை அமல்படுத்திய நாடுகள் என்னென்ன, அதைச் செயல்படுத்துவதற்காக அந்நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன, இத்திட்டம் இந்தியாவிலும் தமிழகத்திலும் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு நான் வெவ்வேறு வார்த்தைகளின் வழியே இணையத்தின் பக்கங்களில் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளுக்குப் பின்பான காலத்திலிருந்தே குழந்தைகளிடம் காது கேளாத குறைபாடிருப்பதை மருத்துவமனை அளவிலேயே கண்டறிவதற்கான முன்னேற்பாட்டை மருத்துவ ஆய்வாளர்கள் எடுத்திருப்பதைப் பற்றிய ஆச்சரியமான தகவல்களை இணையத்தின் பக்கங்கள் யாவும் எனக்குள் கடத்தியபடியே இருக்கின்றன. இதைப் பற்றி நான் வாசித்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் தீர்க்க தரிசனமான ஒளியொன்று மின்னிட்டு மறைவதை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.

அதாவது இதுவரையிலும் நான் தெருக்களிலும், வீடுகளிலும் சென்றுதான் இக்குழந்தைகளைத் தேடியிருக்கிறேன். ஒவ்வொரு ஊர்களிலும், சமுதாயக் கூடங்களிலும், மருத்துவமனைகளிலும் இக்குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களை நிகழ்த்துகையில் நான் பேசுவதன் வழியாக உந்தப்பட்டு யாரேனும், எங்கள் ஊரிலே நீங்கள் சொன்னது போலவே குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிற போது, அவர்களின் அலைபேசி எண்ணையும், அக்குழந்தையின் முகவரியையும் வாங்கிக் கொண்டு அந்த ஊர்களையும் வீடுகளையும் தேடியலைந்து பெற்றோர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இதே மடிக்கணினியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் காணொளிகளை கையிலே எடுத்துக் கொண்டு, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் பேசிப் புரிய வைத்து, அக்குழந்தைகளை சிகிச்சை எடுத்துக் கொள்வதை நோக்கி வழிநடத்துவதையே இதுவரையிலும் நான் தீர்க்கமுறச் செய்திருக்கிறேன்.

தொலைபேசி வழியேகூட பேசி அவர்களிடம் என்னால் இதைப் பற்றி விளக்கிவிட முடியும். ஆனால் நேரிலே சென்று பெற்றோர்களிடம் பேசி அவர்களை சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ள வைப்பதைப் போலதொரு சௌகரியம் எனக்கு அதிலே கிடைப்பதில்லை. அப்படி வீடுகள் தோறும் நான் செல்கின்ற போதுதான் அக்குழந்தைகளுக்கு உண்மையிலே என்ன பிரச்சனையென்று என்னால் நேரிலேயே கண்டு கொள்ள முடிகிறது. அதேசமயம் அப்பெற்றோர்களின் வறுமை, நிச்சயமற்ற வாழ்க்கை, போதாத சம்பாத்தியம் என்பதான குடும்பச் சூழல்களையும் என்னால் அறிந்து கொள்ள முடியும். ஒரு சில சமயங்களில் பெற்றோர்களை இழந்து பாட்டியின் ஆதரவில் வாழ்கிற பாவப்பட்ட குழந்தைகளையும்கூட நான் சந்தித்திருக்கிறேன். இப்படி விதவிதமான குடும்பச்சூழலில் வாழ்கிற பெற்றோர்களைச் சந்திக்கிற போதுதான் இந்தக் குழந்தைகளுக்கான சிகிச்சைகளை மட்டுமல்ல, இவர்கள் சிகிச்சைக்குச் செல்லாமலிருப்பதற்கான குடும்பச் சூழலையும் நாம் மாற்றியாக வேண்டும் என்கிற உள்ளுணர்வு எனக்குள் அசரீரியாக எதிரொலிக்க ஆரம்பிக்கும். ஒருவகையில் நான் சமூகத்திய மருத்துவனாக உருவாகியதற்கான காரணமும் இதுவாகத்தான் இருக்கும் என்றே நம்புகிறேன்.

ஆனால் இதையெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தால் நான் செய்த விசயங்கள் யாவும் தற்காலிக செயல்பாடாகவே இருந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் வழியாக மட்டுமே தெரிய வருகிற குழந்தைகளைத்தான் நான் சிகிச்சைக்குத் தயார் படுத்துகிறேன். அப்படியென்றால் என்னுடைய நிலப்பரப்பையும் தாண்டி என் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்தாத பெற்றோர்களும் அதன் வழியே என்னுடைய பார்வைக்கு வராத காது கேளாத குழந்தைகளும் இன்னும் நிறையவே இருக்கத் தானே செய்வார்கள்!

இதிலிருந்து எல்லா குழந்தைகளுக்குமே என்னால் உதவி செய்ய இயலாது என்கிற எதார்த்தத்தை இயல்பாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டால் இக்குழந்தைகளுக்கான தீர்வை நோக்கி என் மனம் தேடாமல் எல்லாமே இங்கு எதார்த்தம் தான் என்ற நிலையில் அமைதியாக இருந்துவிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எங்கோ ஒருவர் எங்கள் ஊரில் இப்படி ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்லுகிற தகவலின் வழியேதான் நான் சமூகத்தினுள் பயணப்பட்டு ஒரு குழந்தைகளைக் கண்டறிந்தும் சிகிச்சையளித்தும் கொண்டிருக்கிறேன் என்றால் அது உண்மையில் சல்லடையில் தண்ணீரை அள்ளுவது போன்ற குறைபாடுடையது தான் என்பதை ஒருவகையில் நானும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

Doctor Vikatan - 16 December 2018 - காது - ஆரோக்கியத்துக்கு செவி  சாய்ப்போம்! | Ear Pain – Causes, Symptoms, and Treatment - Doctor Vikatan

இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கான பிறவியிலேயே காது கேட்டல் பரிசோதனைத் திட்டத்தைப் பற்றி யோசிக்கையில், உண்மையிலே இதுவரையிலும் நான் சமூகத்திற்குள் சென்று தான் உங்கள் ஊரிலே காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் யாரேனும் இருக்கிறார்களா இல்லையா என்று பேசிப் பேசி இதனை சமூகத்தினுள் செயல்படுத்த வேண்டிய ஒரு திட்டமாகவே நான் செய்து வந்திருப்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய குழந்தைகளைப் பிறக்கின்ற போதே பரிசோதித்துக் கண்டுபிடிக்கையில் அது மருத்துவமனை அளவிலேயே செயல்படுத்தக்கூடிய எளியதான திட்டமாகிவிடுகிறது அல்லவா!

அதாவது இதுவரை நான் பொத்தாம் பொதுவாக சமூகத்திற்குள்ளே சென்று இக்குழந்தைகளைத் தேடுவதைப் போலல்லாமல் இத்திட்டமானது பிரவசமாகிற இடத்திலேயே எல்லா குறைபாடுடைய குழந்தைகளையும் கண்டுபிடிக்கிற துல்லியமானதொரு வேலையைச் செய்கிறது. மேலும் அக்குழந்தைகளுக்கான சிகிச்சையும்கூட பிரவசவிக்கிற மருத்துவமனையிலிருந்தே அதற்கான சிறப்பு மருத்துவர்கள் மூலம் அப்போதே துவங்கப்பட்டுவிடும். இந்த விசயத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க இப்போதுதான் ஞானோதயம் வந்த புதிய புத்தனைப் போல அகத்தின் மகிழ்ச்சியில் ஜன்னல் வழியே அசைந்தாடுகிற அரச மரத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறேன்.

இத்திட்டத்தைப் பற்றி இணையத்தில் பரவலாகத் தேடிக் கொண்டிருக்கையில் இதன் துவக்கப்பட்ட வரலாறு அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் மருத்துவமனையில் வைத்தே பரிசோதிக்கலாம் என்கிற முடிவிற்கு அவர்கள் வருகையில் பிறக்கிற எல்லா குழந்தைகளுக்கும் பரிசோதிப்பதா அல்லது அவசியமென்று கருதப்படுகிற குறைபாடுடைய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும் பரிசோதிப்பதா என்கிற குழப்பம் தான் முதலிலே வந்திருக்கிறது.

ஆனால் இக்குறைபாடு வருவதற்கு குறைபிரசவம், குறைந்த எடையில் பிறப்பது, மஞ்சள்காமாலை, மூளைக்காய்ச்சல் போன்ற காரணங்களும் அல்லது பல சந்தர்ப்பங்களில் காரணமே இல்லாமலும் இக்குழந்தைகள் காது கேளாமல் பிறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பிறக்கிற அத்தனைக் குழந்தைகளுக்கும் பாகுபாடின்றி காது கேட்பதைப் பரிசோதித்துப் பார்த்துவிட வேண்டும் என்கிற முடிவிற்கு இறுதியில் வந்திருக்கிறார்கள். அதேபோல பரிசோதிப்பதென்றால் எப்படி குழந்தைகளுக்கென்று செய்வது, கைதட்டி சத்தம் எழுப்பியா அல்லது முறையான காது கேட்கிற பரிசோதனைக் கருவிகளை வைத்தா என்கிற விவாதங்களும் நடைபெற்று இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் வழியாகத்தான் பரிசோதிக்க வேண்டுமென்கிற இடத்திற்கும் அவர்கள் நகர்ந்து வந்திருக்கிறார்கள்.

இறுதியில் ஒருவழியாக அவர்கள் நடைமுறைப்படுத்திய திட்டங்களும் வரைமுறைகளும் என்னவென்று தெரியுமா?

No description available.
படம்-1 OAE- OtoAcoustic Emission

உலகெங்கிலும் இருக்கிற மகப்பேறு தொடர்பான அத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இத்திட்டமானது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு அங்கே பிறக்கிற அத்தனை குழந்தைகளுக்கும் ஓ.ஏ.இ (OAE- OtoAcoustic Emissions) என்கிற காது கேட்டல் பரிசோதனை வழியே கேட்கும் திறன் ஆரோக்கியமாக இருப்பதைப் பரிசோதித்து உறுதி செய்தாக வேண்டும். அப்பரிசோதனையில் தோல்வியுறுகிற குழந்தைகளையெல்லாம் மறுபடியும் ஆறாவது வாரத்தில் முதல் தவணை தடுப்பூசியின் போது வரச் சொல்லி மீண்டும் ஓ.ஏ.இ பரிசோதனையைச் செய்து பார்க்க வேண்டும். இப்படி இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியுறுகிற குழந்தைகளை காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் பரிந்துரைத்து அவர்களுக்குப் பெரா (Brainstem Evoked Response Audiometry) என்கிற காது கேட்டல் குறைபாட்டை உறுதிபடுத்துகிற பரிசோதனை செய்து அதன் வழியே குறைபாடு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

No description available.
படம்-2 Brainstem Evoked Response Audiometry

ஒருவேளை வீட்டிலேயே பிரசவித்து மருத்துவமனையின் பரிசோதனை வட்டத்திற்குள்ளே வராத குழந்தைகளும் இருக்கிற பட்சத்தில் அவர்களுக்கான சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த மருத்துவமனை வருகையில் அவர்களைத் தவறாது ஓ.ஏ.இ வழியே காது கேட்பதை பரிசோதித்துக் கெள்ள அறிவுறுத்துகிறார்கள். கடைசியாக, இதன் வழியே இவ்வுலகில் பிரசவமாகிற அத்தனை குழந்தைகளுமே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் போதே தனக்குக் காது கேட்டல் குறைபாடு இருக்கிறதா இல்லையா என்கிற உறுதிப்பாட்டோடு செல்ல முடிகிறது.

இதிலே நான் சமூகத்தினுள் சென்று தேடுவதைப் போல பொத்தாம் பொதுவாக குழந்தைகளைத் தேடி, சிலரைக் கண்டுபிடிக்காமல் போகிற விசயங்களெல்லாம் நடப்பதற்கு வாய்பே இருக்காது அல்லவா. அதாவது இப்பிரச்சனைக்கு இதுவரை நான் தேடிக் கொண்டிருந்த நிரந்தரமான தீர்வு என்பது இது போன்றதொரு துல்லியத்தைத் தான். எங்கும் எதிலும் எந்தக் குழந்தையும் இக்குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் மாற்றுத்திறனாளியாகிவிடக் கூடாது என்கிற எனது கேள்விக்கான பதிலே இந்த திட்டத்தினது கச்சிதமான துல்லியம்தான்.

இன்னும்கூட தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு நாளில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தோராயமாக பத்தாயிரம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் இத்திட்டம் எல்லா மருத்துவமனையிலும் செயல்படுத்தப்பட்டிருக்கிற பட்சத்தில் அந்த பத்தாயிரம் குழந்தைகளுக்குமே தவறாமல் ஓ.ஏ.இ பரிசோதனை செய்யப்பட்டுவிடும் தானே. அவ்வாறு பரிசோதித்த குழந்தைகளில் பத்து குழந்தைகளுக்கு மட்டும் பரிசோதனை முடிவு தோல்வியடைந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால், ஒருநாளில் தமிழகத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளில் காது கேளாத குழந்தைகளென கண்டறியப்பட்டவர்கள் பத்து பேர் என்கிற துல்லியமான முடிவுகள் ஒரு அரசுக்கு எளிதாகவே தெரிய வந்துவிடும் அல்லவா.

இதன் வழியே அந்தப் பத்து குழந்தைகளையும் முதல் தவணை தடுப்பூசியின் போது மறுபடியும் வரச் சொல்லி பரிசோதிக்கப்பட்டதா, அதிலே எத்தனைக் குழந்தைகள் மறுபடியும் தோல்வியுற்றார்கள், அதில் எத்தனை குழந்தைகளுக்கு பெரா பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டது, அந்த குழந்தைகளுக்கெல்லாம் தாமதமின்றி சிகிச்சை துவங்கப்பட்டுவிட்டதா என்கிற துல்லியத்திலும் துல்லியத் தன்மையில் வந்து நாம் அப்போது நின்றிருப்போம்.

இப்போது யோசித்துப் பார்த்தால் நான் விரும்பியது, நான் தேடியது எல்லாமே இதைப் பற்றிய ஒன்றைத் தான். இத்திட்டம் மட்டும் தமிழகத்தின் எல்லா மகப்பேறு மருத்துவமனையிலும் நிறுவப்பட்டுவிட்டால் நான் வீதிவீதியாக அலைந்து குறைபட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கத் தேவையே இல்லாமல் ஆகிவிடுகிறது. மேலும் இக்குழந்தைகள் பிறக்கின்ற இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை நோக்கி ஏற்கனவே இருக்கிற மருத்துவ வசதிகளின் மூலமாக நகரத் துவங்கிவிடுவார்கள். அப்படியானால் தமிழகத்தில் இத்திட்டம் பற்றிய நிலவரம் என்ன, இத்திட்டம் பற்றி மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தேடிப் பார்த்தால் போதும், என்னுடைய இந்தப் பயணம் முடிவிற்கு வந்துவிடும் என்றுத் தோன்றுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதாக முடியப் போவதில்லை என்பதைத்தான் இணையத்தின் பக்கங்கள் அடுத்தடுத்து எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டே இருக்கின்றன.

அமெரிக்கன் குழந்தைகள் நல மருத்துவக் கலைக் கூடமானது (AAP) குழந்தைகள் பிறக்கும் போது அவர்களுக்கு மருத்துவமனை அளவிலேயே கேட்கும் திறனைப் பரிசோதித்துக் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான பரிந்துரைகளை 1999ம் ஆண்டிலே பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தியாவிலே முதன் முதலாக அண்டை மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சின் பகுதியில் வைத்து இத்திட்டத்தை முன்னோடித் திட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் அவர்கள் செயல்படுத்தியிருக்கிறார்கள். இத்திட்டத்தைப் பற்றி இன்று வரையிலும் தமிழகத்திலிருக்கிற பல்வேறு மருத்துவர்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோகூட பரிட்சயமே இல்லாத பட்சத்தில் 2003 லேயே இத்திட்டத்தை அங்கிருக்கிற எல்லா மகப்பேறு மருத்துவமனையிலும் ஓ.ஏ.இ பரிசோதனைகளின் வழியே நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் கேரளாவின் கட்டமைப்பைப் பற்றி நாம் மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.

அதன் வழியே அவர்கள் ஜனவரி 2003லிருந்து ஜனவரி 2015 காலகட்டம் வரையிலும் சுமார் 1,01,688 குழந்தைகளை ஓ.ஏ.இ மற்றும் பெரா பரிசோதனைகளின் வழியே பரிசோதித்து அதிலே 162 குழந்தைகளுக்கு இத்தகைய நிரந்தர கேட்டல் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் ஆறு மாத காலத்திற்குள்ளாகவே அதற்கான சிகிச்சைகளையும் தாமதமின்றி துவங்கியிருக்கிறார்கள். அடடா, இதெல்லாம் எப்பேர்ப்பட்ட சாதனையென்று கேரளாவை நினைத்து ஒருபுறம் மனமோ தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. மறுபக்கம் ஏனைய மாநிலங்களை நினைத்து கைகள் அனிச்சையாகத் தலையில் அடித்துக் கொள்கிறது.

இத்திட்டத்தின் பரிந்துரையே, ஒவ்வொரு மகப்பேறு மருத்துவமனையிலும் பிறக்கின்ற குழந்தைகளை ஒரு மாத காலத்திற்குள்ளாகவே ஓ.ஏ.இ வழியே பரிசோதித்துப் பார்த்திருக்க வேண்டும். அப்படிப் பரிசோதனையில் தோல்வியுற்ற குழந்தைகளை மூன்று மாத காலத்திற்குள்ளாகவே பெரா பரிசோதனையின் மூலம் குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் குறைபாடு உறுதியாகிய குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள்ளே காது கேட்கிற கருவியை வெளியே பொருத்தி அதன் சப்தங்களின் வழியே காது கேட்டல் நரம்புகளைத் தூண்டி சிகிச்சைகளைத் துவங்கியிருக்க வேண்டும். அக்குழந்தைகளுக்கு ஒரு வயதாகிற போது கேட்டல் தொடர்பான ஒட்டு மொத்த பரிசோதனைகளையும் செய்து, அதன் வழியே குறைபாட்டின் அளவைக் கண்டறிந்து, தேவைப்படுகிற பட்சத்தில் காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று கச்சியமான வரைவுரைகளை வகுத்திருக்கிறார்கள். ஆஹா, இத்திட்டத்தைப் பற்றிக் கேட்கும் போதே எவ்வளவு அற்புதமாத திட்டமாக இருக்கிறதென்று மனதிற்குள் சாரலடிக்கத் துவங்குகிறது. உண்மையிலே இத்திட்டம் மட்டும் சரியாக செயல்படுத்தப்பட்டுவிட்டால்?

ஆனால் எர்ணாகுளத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கலைக் கூட்ட அரங்கம் 2015ம் ஆண்டு டிசம்பர் 18, 19லே ஒன்றுகூடித்தான் இத்திட்டத்தை இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கவே செய்திருக்கிறார்கள். இத்திட்டங்களெல்லாம் பல்வேறு நாடுகளில் சட்ட வரையறையாக எப்போதோ கொண்டு வந்துவிட்டார்கள் என்பது வேறு விசயம். ஆனால் இவையெல்லாவற்றையும் தாண்டி என்னைப் பொருத்தவரையில் தமிழகத்திலே இத்திட்டத்தின் நிலையென்ன என்பது பற்றி எனக்கு இப்போதுத் தெரிந்தாக வேண்டும். அதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் கட்டாயம் அருகிலுள்ள அரசு ஆரம்ப நிலையங்களுக்கும், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக சென்று விசாரித்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கணினித்திரையின் வெளிச்சத்தோடு ஜன்னலிலிருந்து அறைக்குள் நுழைகிற சூரிய வெளிச்சமும் ஒன்றாகக் கலக்கிற விடிகாலைப் பொழுது வரையிலும் தொடர்ந்த என்னுடைய இணைய வழித் தேடலை ஒருவழியாக நான் அப்போதுதான் நிறைவு செய்திருந்தேன். இப்போது என்னுடைய இரட்டிப்பு மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒன்று இக்குழந்தைகளுக்கான நிரந்தர தீர்வென்பதைக் கண்டு கொண்டதான பெருமகிழ்ச்சி. மற்றொன்று இனி ஒவ்வொரு மருத்துவமனைகளாகச் சென்று தேடியலைகிற எதிர்பார்ப்புகள் நிறைந்த பயணத்தின் மகிழ்ச்சியென நான் இரட்டிப்பில் திகைத்துப் போயிருந்தேன். இருள் களைந்து போன அறைக்குள் உதித்த சூரிய வெளிச்சத்திலே மூழ்கியபடி நிலைக் கண்ணாடியில் என் முகத்தை நான் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மௌனமாக சிரிக்கும் புத்தனின் முகம் கண்ணாடியில் நிறைந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.

I saw our dreams shatter before our eyes': Husband of TN woman infected  with HIV | The News Minute

ஆனால் எல்லாமே நாம் நினைப்பது போலவே நடந்துவிட்டால் நமக்கு இங்கே என்ன வேலை என்பது போலத் தான் மருத்துவமனையின் அவலம் இருந்ததை அங்கே நேரில் சென்றபோது தான் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. மகப்பேறு நடக்கிற அரசு ஆரம்ப நிலையங்களில் இந்தத் திட்டமே நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இப்படியெல்லாம் ஒரு திட்டம் இருக்கிறதா என்று கேட்கிற அளவில் தான் அங்கேயிருக்கிற மருத்துவர்களும் இருந்தார்கள். என்ன செய்வது, நானும் அங்கிருந்து வந்தவன் தானே! அரசு மருத்துவனைகளில் இருக்கிற குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு இத்திட்டம் பற்றிய பரிட்சயம் இருந்தாலும் எந்த தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளிலும் இப்படியொரு திட்டத்தின் வழியே யாருமே பிறக்கிற குழந்தைகளுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை என்பதை அவர்களும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்கள். அங்கு ஓ.ஏ.இ கருவியே இல்லாத பட்சத்தில் எங்கிருந்து அவர்கள் பரிசோதனை செய்வார்கள்!

மாவட்ட மருத்துவமனைகளில் ஆர்.பி.எஸ்.கே திட்டத்தின் அங்கமான ஒருங்கிணைந்த மாவட்ட மருத்துவ வளாகத்திற்குச் சென்று விசாரித்த போது அங்கே ஓ.ஏ.இ பரிசோதனை செய்வதாகவும் ஆனால் மருத்துவர்களால் கேட்டல் திறனை பரிசோதிக்க வேண்டி பரிந்துரைக்கிற குழந்தைகளுக்கு மட்டுமே பரிசோதிப்பதாகவும், அங்கே பிறக்கிற அனைத்து குழந்தைகளுக்குமே பரிசோதிப்பதில்லை என்றும் கையை விரித்துவிட்டார்கள். அதெல்லாம் சரிதான், ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலாவது இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் மாவட்ட மருத்துவமனைகளைப் போலவே முக்கியமென்று கருதுகிற குழந்தைகளுக்கு மட்டுமே ஓ.ஏ.இ கருவி மூலம் பரிசோதிக்கிறார்களே தவிர எல்லோருக்குமே பார்ப்பதில்லை என்கிற உண்மையை நேரடியாகவே பார்க்க முடிந்தது.

ஒரு பக்கம் இக்குழந்தைகளுக்கான நிரந்தர தீர்வென்பது குழந்தைகள் பிறக்கும் போது மருத்துவமனை அளவிலேயே பரிசோதிப்பது மட்டும் தான் என்பதைக் கண்டுகொண்ட சந்தோசம். இன்னொரு பக்கம் இந்த எளிய திட்டத்தை எத்தனையோ நாடுகளில் ஆயிரத்தி தொள்ளாயிரம் ஆண்டுகளிலே அமல்படுத்திவிட்ட பின்னரும், பக்கத்து மாநிலமான கேரளாவில் 2003ம் ஆண்டிலயே இதனைக் கொண்டு வந்துவிட்ட பின்னரும், இந்திய குழந்தைகள் மருத்துவக் கலைக்கூடம் 2015லேயே இதனை அமல்படுத்துதற்கான கோரிக்கையை விடுத்த போதும், நான் தேடிச் சென்ற இன்றைய நாள் வரையிலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மகப்பேறு மருத்துவக் கட்டமைப்பிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இதையெல்லாம் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் எனது உடலைச் சாய்த்துக் கொள்வதற்கும் என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குமாக ஏதாவது சிறியதொரு இடம் கிடைத்திடாதா என்று அரசு மருத்துவமனையின் வளாகத்திலேயே நின்றபடி பரிதவித்துக் கொண்டிருந்தேன். அப்படியென்றால் இத்திட்டம் நிறைவேற்றப்படாத காரணத்தினால் தானே இங்குள்ள குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள் எதுவும் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாமல் போகிறது. அதனால் தானே காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை நம் சமூகத்தில் இன்னமும் அதிகரித்தபடியே இருக்கிறது என்று நம் மருத்துவக் கட்டமைப்பின் மீதே கோபம் கோபமாக வருகிறது. இன்று தமிழகமெங்கும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பள்ளிக்கூடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றால் அதற்கும் இந்த குறைபட்ட மருத்துவச் சமூகம் தானே காரணமாக இருக்கிறது. இப்படி நம் மருத்துவக் கட்டமைப்பின் மீதே பல்வேறு குறைபாடுகளை வைத்துக் கொண்டு படிப்பறிவற்ற பெற்றோர்களையே இன்னும் எத்தனைக் காலம் தான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கப் போகிறோமோ தெரியவில்லை.

இரண்டு இலட்சம் மதிப்புள்ள ஓ.ஏ.இ கருவிகளை தமிழகமெங்கிலும் இருக்கிற மகப்பேறு நடக்கிற மருத்துவமனைகளில் வாங்கி வைப்பதொன்றும் அரசுக்கு சிரமமான காரியமல்ல. வெளியே தனியார் மருத்துவமனைகளில் இப்பரிசோதனைக்கு எழுநூறு முதல் தொள்ளாயிரம் வரையிலும் செலவழித்து தான் இன்றளவிலும் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைக்கூட செலவளித்துச் செய்ய முடியாத நிலையில் தான் காளீஸ்வரி, பிரியா போன்ற குழந்தைகளின் குடும்பங்கள் இருக்கின்றன. இந்தப் பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாகவும், அதனை எல்லா குழந்தைகளுக்கும் பரிசோதிக்கிற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியதும் நம் மருத்துவக் கட்டமைப்பினுடைய தலையாக கடமை அல்லவா!

அதேபோல எட்டு முதல் பன்னிரெண்டு இலட்சம் மதிப்புள்ள பெரா என்கிற காது கேட்கும் குறைபாட்டை உறுதி செய்யக் கூடிய கருவியை மாவட்ட அளவிலே வைத்து ஓ.ஏ.இ மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வருகிற குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையிலேயே வைத்து இலவசமாக பரிசோதனை செய்யலாம். அதற்கும்கூட வெளியே ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலும் பெற்றோர்கள் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதின் வழியே நாம் செய்கிற விசயங்கள் ஒவ்வொன்றும் இக்குழந்தைகளுக்கான நிரந்தர தீர்வுக்கான விசயம் என்பதை முதலில் நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை இதற்காகச் செலவு செய்து இத்திட்டத்தை அமல்படுத்திவிட்டால் தலைமுறைக்கும் இப்பிரச்சனைக்குரிய குழந்தைகள் மருத்துவமனையிலேயே தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு காலமுள்ள வரைக்கும் தொடர்ந்து குணமாக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பது பெரிய விசயம்தானே!

ஆனால் எல்லாமும் கனவைப் போலவே இருக்கிறது. மரபணு மருத்துவ ஆலோசனைக் கூடங்களும், பிறக்கும் போதே காது கேட்டலைப் பரிசோதிக்கக்கூடிய திட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே போதும், இக்குழந்தைகளுக்கான எதிர்கால வாழ்க்கைக்கு ஏதோ உறுப்படியாகச் செய்த திருப்தி இங்கே கிடைத்துவிடும். ஆனால் இதையெல்லாம் யார், எப்போது செய்யப் போகிறார்களோ என்று நினைக்க நினைக்க விடிந்த பிறகும்கூட எல்லாம் எனக்கு இப்போது கனவாய் தான் இருக்கிறது.

ஆனால் இந்தப் புலம்பல்களையெல்லாம் கொஞ்ச காலம் தள்ளி வைத்துவிட்டு ஆறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற காளீஸ்வரியையும் பிரியாவையும் கூடிய விரைவில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான வழியை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இறுதியாக அதற்கான வழியை நான் கண்டுபிடித்ததையும், அவர்களிருவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று மருத்துவனையில் பரிசோதித்துக் கொண்டதையும், கடைசியாக அவர்களே சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டதைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

முந்தைய தொடர்களை படிக்க: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 11 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 12 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.