பொது மருத்துவரும் சிறப்பு மருத்துவரும் – ஒரு சந்திப்பு

சகமனிதனின் துயரை தன் துயரமாக அவதானிக்க பழகிக் கொண்டவனால் எந்தவொரு அழகிய இரவுகளையும் பார்க்க முடிவதில்லை. அவனுக்கு கனவுகள்கூட துயரத்தையே கூட்டிக் கொண்டு வருகிறது. பகலில் எங்கோ பார்த்த சோகம் படிந்த இரவல் பெறுவதற்காக கைநீட்டிக் கொண்டு நிற்கிற சிறுமியின் முகம் அன்றைய நினைவுகளிலும் கனவுகளிலும் அடிக்கடி வந்து வந்து போகிறது. நாம் எங்கே கண்டோம், எப்போது கண்டோம் என்பதையும் தாண்டி அவர்கள் நம்முள்ளே ஏதோ ஒன்றை கிளர்ச்சியடையச் செய்து அவர்களை நோக்கிய ஞாபகங்களில் உலாவச் செய்கிறார்கள்.

போர் கண்ட குழந்தை அதன் ஞாபகங்களில் சிறு கைத்தட்டளுக்குக்கூட கேட்டு மருளுவதைப்போல இருக்கிறது நாம் சந்திக்கிற மனிதர்களைப் பற்றிய கதைகளும் கனவுகளும். யாரோ ஒருவர் வந்து நம்முள் அவர்களது வாழ்வை விதைத்துவிட்டுப் போகிறார்கள். உண்மையில் அத்தகைய மனிதர்களைப் பற்றிய நினைவுகள்தான் நம் அன்றாடக் கனவுகளா? நம் கனவுகளில் நாம் உலாவுவதுகூட ஏனையோரின் கதைகளுக்குள்ளாகத்தானா?

சரண்குமாரின் ஞாபகங்கள் யாவும் என் கனவுகளில் அரூபமாக வந்து வந்து அழுதுகொண்டே இருக்கிறது. அந்த அழுகையும்கூட மௌனமாகவே இருக்கிறது. ஒரு மனிதன் சப்தமின்றிகூட அழமுடியுமா? அப்படி வெடித்து அழுவதற்குக்கூட அவனுக்குப் பேசத் தெரிந்திருக்க வேண்டுமா? அப்படியென்றால் பேசத் தெரிந்த மனிதர்களால் மட்டும் தான் அழுதழுது தன் கவலைகளை கரைத்துக் கொள்ள முடியுமா?

சரண்குமார் ஆயிரத்தோரு அரேபிய இரவுகளைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதைகளோடு வந்து என் கனவுகளில் உலாவிக் கொண்டிருந்தான். ஒருநாளில் ‘ஓ’ வென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற காட்சி, அடுத்தடுத்த நாட்களில் பெருந் தியானத்தில் வீழ்ந்துவிட்டதைப் போலானதொரு பேரமைதி, இன்னொரு நாள் பஞ்சகாலத்திற்குப் பின்பான பெருமழையைப்போல அத்தனையும் பேசிவிடத் துடிக்கிற ஆவேசம், பின்பு கத்திக் கத்தி வெறுமனே காற்று மட்டுமே வெளியேறி அதன் தொண்டை வலியால் வாய் உலர்ந்துபோய் தன்னைத் தானே கழுத்தை நெறித்து துன்புறுத்திக் கொள்கிற அடம் என்று அவனது செய்கைகள் யாவும் என்னை பயமுறுத்தி படுக்கையிலிருந்தே எழச் செய்துவிடும். என் இரவுக் கனவுகளின் கதாபாத்திரமாவும் கதாநாயகனாகவும் வந்து அவன் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்வதை ஒருநாளும் சகித்துக்கொள்ள முடியாமல் தூக்கமும் உடனே கலைந்து போகும்.

“அண்ணே, நான் உங்களை அண்ணான்னே கூப்பிடவா? நான் பேசுனா அழகா இருக்குல்ல! எப்பண்ணா நான் பேசப்போறேன். அண்ணா, எந்திரிங்கண்ணா.. எந்திரிங்க..”

யோசித்துப் பார்த்தால் நாம் சந்திக்கிற யாரோ ஒருவரின் பகிர்ந்து கொள்ள முடியாத துக்கங்களோ, நிறைவேற்றிக் கொள்ள முடியா ஆசைகளோதான் நம்முள் நினைவுகளாகவும் கனவுகளாகவும் தகவமைத்துக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது. நாம் எங்கோ யாரையோ சந்தித்த மனிதர்களோ, அதன் அனுபவங்களோ, அதன் மீதான ஈர்ப்போ அல்லது அனுதாபங்களோதான் சட்டென்று நம்முடைய அனுபவங்களாகவோ இலட்சியங்களாகவோ நமக்குள் உருக் கொண்டுவிடுகின்றன.

அதிகாலையின் நம் விழிப்பு என்பது வெறுமனே கண்களின் விழிப்பு மட்டுமல்ல. அதையும் தாண்டி ஆழ்மனதிற்குள் நம்மை அன்றைய தினத்தின் ஏதோ ஒன்றை நோக்கி உந்தித் தள்ளுகிற விழிப்பும்கூட. அதிகாலைப் பொழுதைப்போல எப்போதும் சிறப்பானதொரு தருணத்தை எவரும் அனுபவித்திட முடியாது. எழுகிற சூரியன், துளிர்க்கிற பனித்துளி, அதில் குளிக்கிற புல்தரை, அடர்ந்த பசுந்தளிர்கள், மெல்ல அசைகிற கிளைகள், ஒடுங்கியிருந்த சிறகுகளை விரித்து சோம்பல் முறிக்கிற பறவைகளென பேருலகின் ஒட்டுமொத்த விழிப்பும் நமக்குள்ளான ஒரு தூண்டலை ஏற்படுத்திவிடும். நம் ஆழ்மனம் விழித்துக் கொள்வதும்கூட அத்தகைய அற்புத தருணத்தில்தான்.



பொது மருத்துவரான எனக்கு காது மூக்கு தொண்டை சிறப்பியல் மருத்துவரை வெகுவிரைவில் சந்திக்க வேண்டி உந்தித் தள்ளிக் கொண்டே இருந்தது அந்த அதிகாலை. ஒரு கேள்வி எழும்போதே அதற்கான விடையைத் தேடியலைகிற பயணம் தொடங்கிவிடுகிறது. ஒன்றின் விடை கிடைக்கிற போதே அதிலிருந்து அடுத்த கேள்வி முளைக்கத் துவங்கிவிடுகிறது.

உண்மையில் சரண்குமார் பேசிவிடுவானா? அவனைப் பெற்றவளை ‘அம்மா’ வென்று அழைக்கிற தருணத்தைப் போல என்னையும் அவன் ‘அண்ணா’ என்றழைக்கிற தருணமும் நிச்சயம் வாய்க்குமா? பதினோரு வருடங்கள் மொழியை உச்சரித்துப் பார்க்காத அந்தப் பிஞ்சு நுனி நாக்கிலிருந்து வசப்படுகிற முதல் குரல் என்னவாக இருக்கும்? நிச்சயமாகவே ஒரு பெற்ற தாயைப் போல அவனும் என்னை அண்ணா வென்று அழைத்துவிட வேண்டுமென்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே இருப்பதை என்னால் உணர முடிந்தது. அத்தகைய உணர்வை எந்தச் சொற்களாலும் விவரிக்க இயலாது.

இன்று சூரியன் அஸ்தமனமாகிற மாலை வரையில் அந்த சிறப்பியல் மருத்துவரைக் காண நான் காத்திருக்க வேண்டும். இரவு நிலா வருகைக்கான குளத்துநீர் அல்லி மலர்களினுடைய காத்திருப்பு என்பது எப்பேற்பட்ட துயரமானது என்பதை இந்த மருத்துவருடனான காத்திருப்பு எனக்கு அதிகாலையிலிருந்து உணர்த்திக் கொண்டேயிருந்தது. அந்த காத்திருப்பின் மகிமைதான் அதனை வெண்பூக்களால் அலங்கரித்திருக்கிறதோ என்னவோ என்று எனக்குப் புரியத் துவங்குகிறது.

சின்னஞ்சிறு தெருக்களினூடே சிறிய மாடம் போலானதொரு இரண்டு அறைகளுடைய மருத்துவமனைதான் அது. வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற வாகனங்களைக் கவனிக்கும்போதே காத்திருப்போரைப் பற்றிய கவனம் அதிகிரித்துவிடுகிறது. இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ என்று மனம் கணக்குப்போட ஆரம்பித்துவிடுகிறது. வாசலை அடைத்து காலணிகள் ஒதுங்கியும் ஒன்றன்மேல் ஒன்றாக இடித்தும் கிடந்தன. ஒரு ஜோடிச் செருப்புகூட ஒரு தத்துவத்தை உள்ளடக்கியிருப்பதாய் தோன்றிவிடுகிறது. ஒருவேளை அதற்கு பாத்திரமானவர்கள் உள்ளே காத்திருப்பதைப்போல அவையும் அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கக்கூடும் என்பதாக எண்ணி அவற்றின் மேலும் பரிதாபமாக இருந்தது.

எப்போதும் மருத்துவமனைக்கென்றே ஒரு புனிதத் தன்மையிருக்கும்போல. காலணிகள் வெளியே கழற்றிவிடப்படுவதும், அடிக்கொருமுறை துடைத்து பளிங்கு முகம்போல பளபளக்கிற தரையில் நடப்பதும், தியான மண்டபத்தைப் போல எல்லோரும் சாந்தமான முகத்தோடு வலிய அமைதியை வரவழைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதும், ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டு ஆசிவழங்குகிற குருவைப்போல ஒரு மருத்துவர் நோயாளிகளை அணுகுவதும் ஏனோ வித்தியாசமான உணர்வை உள்ளுக்குள் ஏற்படுத்தி மனம் கிளர்ச்சியடையச் செய்துவிடுகிறது.

“நீங்க?”

“நானும் டாக்டர் தான், சாரைப் பார்க்க முடியுமா?”

“கொஞ்சம் இருங்க சார், கேட்டுட்டு வர்றேன்.”

மருத்துவரைச் சந்திக்க அத்தனைபேர் முன்பதிவுகளோடு வந்து காத்திருக்கும் பொழுதில் ஏதோ ஒரு சலுகையையொன்றைப் பற்றிக் கொண்டு முன்வரிசை நோயாளிகளை முந்தியபடி ஒருவர் முன்னே அழைத்துச் செல்லப்படுகிற துயரம் பணயிடத்தில் ஒரு மருத்துவராக அமர்ந்திருக்கும் போது எப்போதும் எனக்கு கடினமானதாக இருக்கும்.

ஒரு மருத்துவமனைக்குள் நுழைகிறவர் ஒன்று மருத்துவம் சார்ந்தவராக இருக்க முடியும், இன்னொன்று சிகிச்சை பெறுகிற நோயாளிகளாக இருக்க முடியும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஒரு அரசியல்வாதியோ, உயர் அதிகாரியோ, அரசு ஊழியனோ அங்கே தனக்குரிய அடையாளத்தை ஒரு உரிமையாகவே எடுத்துக் கொண்டு மருத்துவரைக் காண இடையில் உள்நுழைகிற ஒருவரைக் காணும்போது, எது அடையாளம்? என்ற வியாக்கியானம் எனக்குள் துவங்கிவிடுகிறது. அந்த குற்றவாளிகளின் பட்டியலில் அன்று மாலை ஆறுமணிக்கு என் பெயரும் சேர்ந்துவிட்ட உண்மை ஏனோ எனக்குள் குற்ற உணர்ச்சியை உண்டு பண்ணியது.

“சார் உள்ள போங்க.”

“என்ன???”

“உங்களை சார் உள்ள வரச் சொல்றாரு!”

“………………..”

கையில் சரண்குமாரின் ஐந்து வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காலாவதியாகிப்போன பரிசோதனை முடிவுகளோடு அவர் முன்னால் நின்றபோது ஏதோ வேண்டுதலுக்காக கடவுளின் சன்னதியில் நின்று பரவசத்தோடு மனதிற்குள் திளைத்திருப்பதைப் போன்ற உணர்வு தொற்றிக் கொண்டது. அவர் ஏற்கனவே முன்பே எனக்கு அறிமுகமான நபர் என்கிற போதிலும் இதற்கு முன்பாக அவருக்கு அறிமுகமான அதே நபராக இப்போது நானில்லை என்பதை ஒருவேளை அவரும்கூட கண்டு பிடித்திருக்கக்கூடும்.

“என்ன சார் விசயம், சொல்லுங்க!”

“ஒரு பதினொரு வயசு பையன் சார். அவனுக்கு பிறவியிலிருந்தே காதும் கேக்காது, வாயும் பேச வராது. A case of Congenital deaf and dumb. அந்த பையனுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்கணும் சார்!”

“ரிப்போட்ட இங்க கொடுங்க.”

“…………………..”



தனக்கு என்ன நோய் என்பதே தெரியாமல் பதறியபடி வருகிற நோயாளிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு அதற்கான முடிவுகளுக்காக காத்திருப்பதென்பது ஒரு போர் அறிவிக்கபட்டு தன் கணவன் மீண்டு வருவானா அல்லது தன் வாழ்வு அவ்வளவுதானா என்கிற போர்வீரனுடைய மனைவியின் பரிதாபமான மனநிலைதான் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். காத்திருப்பின் துயரம் என்னவென்பதை ஒவ்வொரு கணமும் மருத்துவமனைச் சூழல் நமக்கு ஒரு புத்தனைப்போல கற்பித்துக் கொண்டே இருக்கிறது.

“அந்தப் பையனுக்கு எத்தனை வயசுன்னு சொன்னீங்க?”

“பதினொரு வயசு சார்!!!”

“இங்க பாருங்க டாக்டர். இந்தப் பையனுக்கு 100 பெர்சண்ட். சுத்தமா காது கேக்குற திறனே போச்சு. அவனுக்கு பதினொரு வயசுன்னு வேற சொல்றீங்க. ஆறு வயசுக்குள்ளன்னாகூட அவனுக்கு ஆபரசன் செஞ்சு ஏதாவது பண்ணிருக்கலாம். இப்போ எதுவுமே பண்ண முடியாதே டாக்டர்!!”

எனக்குள் நானே பொத்தென்று கீழே விழுந்த உணர்வு. என் இருக்கையிலிருந்து நழுவி தரைக்கும் கீழே விழுவது போலான பிரம்மை. அப்படியானால் அவன் என்னை ‘அண்ணா’ என்று அழைக்க முடியாதா? அந்த பெண்மணியை அவன் ஒருமுறைகூட ‘அம்மா’ வென்று அழைத்திட முடியாதா? ஒரு மருத்துவரின் முன்பு அமர்ந்து விளக்கம் கேட்கிற ஒரு நோயாளியின் துயரம் இவ்வளவு சித்ரவதை நிறைந்ததாகவா இருக்கும்.

ஒரு மருத்துவன் ஒரு நோயாளியாகின்ற தருணத்தை யாராது என்னைப் போல உணர்ந்திருக்க முடியுமா? நான் உண்மையில் ஒரு நோயாளிதானா அல்லது யாரோ ஒரு முன்பின் பழக்கமில்லாத சகோதரனுக்காக வாய் பேச வைக்க வரம் வேண்டி வந்து நிற்கிற மருத்துவனா? அதெல்லாம் இல்லையென்றால் ஏன் என்னுள் இத்தனை பதட்டம் பரவுகிறது, உள்ளுக்குள் இத்தனை நடுக்கம் கொள்கிறது? அப்படியென்றால் இத்தனை பதினொரு வருட காலமும் பாத ரேகைகளே தேய்ந்துவிடுமளவிற்கு அலைந்து திரிந்த அந்தத் தாயின் ஏக்கமும், பயமும், ஆசையும், பதட்டமும், அழுகையும் எதற்குச் சமானமாய் சொல்லிவிட முடியும்!!

“வேற வழியே இல்லையா சார்???”

இந்தக் கேள்வியைக் கேட்காத ஒரு நோயாளியும் இல்லையென்பது ஒரு மருத்துவனாக எனக்கு நன்றாகவே தெரியும். என்னிடம் கடும் வாதையோடு வருகிற எல்லா நோயாளிகளுக்கும் குறைந்தபட்ச சிகிச்சையோடு அறிவுறுத்துகிற தருவாயில் அவர்களது இறுதியான அடைக்கலம் இந்த வார்த்தைகளுக்குள்ளாகத் தான் இருந்திருக்கிறது. வேற வழியே இல்லியா சார்??? அப்போதெல்லாம் ஒரு சிறு வரிகளைவிட்டு விரல் நகர்வதுபோல எளிதாக கடந்து சென்றுவிடுகிற எனக்கு, இத்தகைய வார்த்தைகளுக்கும் அதற்கு நிகராக சொல்லப்படுகிற பதிலுரைகளுக்கும் எத்தனை எத்தனை எதிர்பார்ப்பும் ஏக்கமும் ததும்பியிருக்கும் என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது.

“ட்ரை பண்ணலாம் டாக்டர். காக்ளியார் இம்ப்ளாண்ட் ஆபரேசன்னு ஒன்னு இருக்கு. அதை செஞ்சா இப்போதைக்கு அவனுக்கு காது கேக்க வைக்க முடியும். ஆனா ஆறு வயசுக்குள்ளயே மூளை வளர்ந்துறதால இப்போ அவனுக்கு பயிற்சி கொடுத்து பேச வைக்க முடியாது. ஏதாவது ரோட்டுல, தெருவுல போகும்போது பஸ் வண்டின்னு வந்தா அந்த சத்தத்தை கேட்டு ஒதுங்கலாம். அதுக்கு மேல இந்த ஆபரேசனால இந்த வயசுல ஒரு பிரயோசனும் இல்ல”

“அப்போ பண்ணிடலாம்ல சார். அட்லீஸ்ட் வெளியில போனா வண்டி காருன்னு வர்றப்போ அதுல இருந்தாவது அவனுக்கு கொஞ்சம் பாதுகாப்பு கெடைக்கும்ல சார்.”

ஒருமுறை புருவத்தை ஏற்றி சுழித்தபடி பார்வையாலே என்னை விழுங்கிவிடுவது போல நிமிர்ந்து என்னை அலட்சியமாகப் பார்த்தார்.

 “அதுக்கு இப்போ எவ்ளோ ஆகும்னு தெரியுமா, டாக்டர்?”

தலை குனிந்து கொண்டே, “தெரியாது சார்!” என்றேன்.

“குறைஞ்சது இப்போ எட்டிலிருந்து பத்து இலட்சம் வரைகூட ஆகும். அவங்க வசதியான குடும்பமா?”

“இல்ல சார், கூலி வேல தான். ஆனா இந்த ஊருல இருக்குற முதலாளிங்க, பெரிய பெரிய டாக்டருங்க கிட்ட உதவிக்கு பணம் வாங்கி ஆபரேசன் பண்ணிடலாம் சார். அவனுக்கு ஏதாவது செஞ்சிரணும் சார்.”

கொஞ்ச நேரம் தலை குனிந்தபடி அவர் கண்களை இறுக மூடிக் கொண்டார். மூக்குக்கண்ணாடியைக் கழற்றி மேசைமீது வைத்துக் கொண்டார். இரு கைமுட்டிகளையும் மேசையில் ஊன்றி பெருமூச்சு விட்டபடி ஒரு அப்பாவியைப் பார்ப்பது போல மெல்ல என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டார். இப்படித்தான் நான் எத்தனையோ விவரம் தெரியாமல் வந்து பதிலுக்குப் பதில் பேசுகிற நோயாளிகளைப் பார்த்து எளிதாக புன்னகைத்திருக்கிறேன். ஆனாலும் அந்தப் புன்னகையின் வலியென்னவென்பதை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. ஒரு அபத்தமான புன்னகைக்கு முன்பாக வெகுளித்தனமான கேள்விகளோடு வந்து நிற்கிற மனிதரின் துயரம் என்னவென்பதை அன்றுதான் நான் கண்டு கொண்டேன்.

“நீங்க காது கேக்காத கொழந்தைங்க பள்ளிக்கூடம் போயிருக்கீங்களா டாக்டர்?”

அந்த கேள்வியே எனக்கு அவமானகரமாக இருந்தது. நான் இதுவரையிலும் அப்படியொரு இடம் இருப்பதைப் பற்றிக்கூட யோசித்ததில்லை.உண்மையில் அப்படியொரு இடம் இருப்பதே எனக்குத் தெரியாமல் இருந்ததை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

“இல்ல சார்!”

“அங்க நூத்துக்கு மேல புள்ளைங்க காது கேக்காம, வாய் பேசாம இருக்காங்க. அவங்க அத்தனை பேருக்குமே உன்னால ஏதாவது செஞ்சிர முடியுமா?”

“…………………….”



இந்த கேள்வியின் ரணம் உண்மையில் அப்போது எனக்கு விளங்கவில்லை. இப்படியொரு கேள்வியை என் வாழ்நாளில் நான் எதிர்கொண்டதே இல்லை. ஆனால் மூளையில் தொக்கிக் கொண்டே நின்ற இந்தக் கேள்விதான் சிகிச்சையென்பது மருத்துவமனையில் மட்டும் வழங்கப்படுவதல்ல, வெளியே அப்படி நோய்மைக்குள்ளான குழந்தைகளை நோக்கிச் சென்று அவர்களிடையே மேற்கொள்ள வேண்டிய சமூக மாற்றத்தோடும் தொடர்புடையது என்பதை உணர்த்தியது. இங்கே ஒரு சிற்றூரில் இருக்கிற சின்னஞ்சிறு பள்ளியிலேயே நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களென்றால் இன்னும் எத்தனையெத்தனை குழந்தைகள்தான் என்னைச் சுற்றிலும் காது கேட்காமலும் வாய் பேசாமலும் இருக்கிறார்கள்? அங்கிருக்கிற அத்தனை குழந்தைகளுக்கும் என்னால் நிச்சயமாக உதவிட முடியுமா? இந்தக் கேள்வியே என்னை திகைக்க வைத்தது.

அவர்கள் எல்லாருக்கும்கூட சரண்குமாரைப்போல ஏதாவது ஒரு துயரத்தின் கதை இருக்கத்தானே செய்யும். சரணின் தாயைப்போல அவர்களது பெற்றோர்களும் கால்கடுக்க அலைந்து திரிந்து எதுவும் முடியாத பட்சத்தில்தானே இந்தப் பள்ளியில் வந்து சேர்த்திருப்பார்கள். இன்னுமே கண்டறியப்படாத எத்தனையோ குழந்தைகள் இன்னும்கூட என்னைச் சுற்றி இருக்கத்தானே செய்வார்கள்? அப்படியென்றால் அவர்களின் கதி????

அந்த மருத்துவரிடமிருந்து விடைபெற்று எழும்போது நாற்காலியும் என் கூடவே எழுவதுபோல உடலில் எடை கூடிக்  கொண்டது அல்லது அப்படி ஏதோ ஒரு கணம் எனக்குள்ளாக அமிழ்ந்து போய் கீழே அழுத்திக் கொண்டே இருந்தது. இப்போது சரண்குமாருக்கு எதுவும் செய்ய முடியாதா என்கிற துயரத்தைத் தாண்டிலும் இத்தனை குழந்தைகளா நம்மைச் சுற்றிலும் எந்த சிகிச்சையும் கிடைக்காமல் எந்தவொரு சகமனிதர்களின் கவனித்திலும் விழாமல் மாற்றுத்திறனாளியாக தினந்தினம் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற வலி எனக்குள்ளாக தாங்க முடியாத துயரத்தை வரவழைத்தது. மனிதனின் அழுகையும்கூட ஒரு வரம் தான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்ளாமல் நம் துயரத்தை நாமே ஆற்றிக்கொள்ள நம்மிடமே ஓர் ஆயுதம் இருப்பதும்கூட நல்லதிற்குத்தானே.

இன்னும் எத்தனை எத்தனை அழுகைகளையும் ஆற்ற முடியா துயரங்களையும் இந்த மருத்துவமனைகள் பார்த்திருக்கின்றனவோ என்றபடி வெளியே வந்து மருத்துவமனை வாயிலை திரும்பிப் பார்த்தேன். நாளை கட்டாயம் அந்த காது கேளாத பள்ளிக்குச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற உள்ளுணர்வு என்னுள் எழுந்து கொண்டேயிருக்க இன்று என்னவெல்லாம் கனவுகள் வந்து என்னை காயப்படுத்தப் போகிறதோ என்கிற அச்சமும் கடுங் காய்ச்சலைப்போல உடலெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

தொடரும்..



தொடர் 1:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 2:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *