காது கேளாதோர் பள்ளியில் ஒருநாள்

விடியல் என்பது இன்னொரு நாளல்ல, அது இன்னுமொரு வாழ்வு என்று தோன்றுகிறது. எல்லா விடியல்களும் நமக்கு ஏதோ ஒன்றை போதிக்கின்றன. ஏதோ ஒன்றை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. எதாவதொன்றை செய்யச் சொல்லி நம்மைத் தூண்டுகின்றன. அதுவொரு புத்தனுடைய விழிப்பு நிலையைப் போன்றது.

அதிகாலையிலிருந்தே காது கேளா பள்ளியை நோக்கிய பயணத்திற்காக காத்திருந்தது மனம். போர் விட்டுச்சென்ற நிலத்தை காணச் செல்வது போன்ற பதபதைப்பு என்னை தொற்றிக் கொண்டது. மெல்லியதாக சின்னச்சின்ன தூரல்கள் விழுந்து கொண்டிருந்தன.

மழையின் மொழி எது? மண்ணை முத்தமிட்டு முத்தமிட்டே உச்சிமுகர்கிற அந்த தருணத்தின் நிசப்தம்தான் அதன் மொழியா? மஞ்சள் வெயில் விழுகிற மழைத்துளியை ஊடாடிக் கொண்டு நம்மை ஆரத்தழுவிக் கொள்கிறதே, ஆயிரமாயிரம் ஒளிக்கீற்றுகளால் நம் மீது தவழ்ந்தபடி விரல்களால் மயிற்கூச்சமடையச் செய்கிறதே அதுதான் அதன் பிரத்தியேக மொழியா?

விடிவதற்கும் கூட்டிலிருந்து பறவைகள் வலசை செல்வதற்குமான அந்த தருணத்தில்தான் நானும் என் பயணத்திற்கான பாதையை நோக்கி மெல்ல நகரத் துவங்கினேன். வலசை செல்கிற பறவைகளின் பறத்தல் அனுபவம் எப்பேர்ப்பட்டது? எந்த தங்களுமின்றி மழை, காற்று, மேகம், மலை, கடலென பருந்துகளுக்கும் வல்லூறுகளுக்கும் தப்பிப்பிழைத்து தங்குமிடம் வந்து சேருகிற அதன் பறத்தல் அனுபவத்தைப் போலான பயணத்தின் ஒரு பாதையைத்தான் நானும் துவங்கியிருக்கேனா? என் பயணத்தின் இலக்கு என்னவென்று தெரியாது செல்கிற இந்த பாதை இன்னும் எந்தெந்த எல்லைகளையெல்லாம் தாண்டி பயணிக்க வேண்டியிருக்குமோ, யாரையெல்லாம் சந்திக்க, எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என்றெண்ணும்போதே பெரும் எதிர்பார்ப்பு என்னை தொற்றிக் கொண்டது.

பூமியை எல்லைக் கோடுகளால் மனிதன் கீறிவைத்த நிலத்தை பறவைகள் சாவகாசமாக கடந்து செல்கின்றன. குழந்தைகளைத் தேடியபடி நான் பயணிக்கும் பாதைகளின் தடைகளையெல்லாம் நான் பறவையைப்போல சாவகாசமாக கடந்துவிட முடியுமா? என்னுடைய தேடல் என்னை எந்தெந்த திசைகளை நோக்கி இழுத்துச் செல்லுமென்பதைக் கூட அறியாமல் அந்த விடியற்காலைப் பொழுதில் கரடுகள் குவித்த மண் பாதையில் அமைதியற்ற மனதோடு சென்று கொண்டிருந்தேன்.

தூரத்திலிருந்து பார்க்கிற போதே மலையின் நிசப்தம் நமக்குப் புரிந்துவிடுகிறது. மலை நம்மிடம் பேசுவதில்லையானாலும் மலையின் பாஷை ஏதோவொரு அலைவரிசையில் நமக்கு கடத்தப்பட்டுவிடுகிறது. அதேபோல தாழிடப்படாத திறந்த கதவுகளோடு நிசப்தமாக நிற்கிற அந்த மௌன பாவம் படிந்த பள்ளியும் ஏனோ எனக்கு அந்த மலையை நினைவுபடுத்தியது. எல்லோராலும் எல்லா வகையிலும் தனித்துவிடப்படுகிற ஒதுக்கப்படுகிற மனிதர்களுக்காக அந்த இரும்புக் கரத்தின் கதவுகள் இரு கைகளை விரித்தபடி என்னிடம் வாருங்கள், நான் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்! என்பதாக கையசைத்து வரவேற்பதைப்போல தோன்றின. காற்றில் அசைந்தாடுகிற அந்த கதவுகளின் சப்தம்கூட கேட்டுவிடுமளவிற்கு நிசப்தமான அந்த உலகிற்குள்ளாக நான் அப்போதுதான் முதன்முதலாக அடியெடுத்து வைத்தேன்.



வழியில் முதுவயது தாத்தா ஒருவர் பாதையோரமாக நின்று வழிகாட்டியபடி இருந்தார். காலங்காலமாக யாரிடமே பேசாமல், அப்படி யாரிடமும் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல ஒரு தொடர்வண்டி தண்டவாள கைக்காட்டடியைப்போல நின்று கைகளைக் காட்டி அவர் பேசியது ஏனோ உள்ளுக்குள் உறுத்தவே செய்தது.

“உங்க பேரு?”

முகத்தில் ஆயிரம் ஆச்சரியக் குறிகளுடன் என்ன, என்பதைப்போல புருவம் சுழித்து கையசைத்துக் கேட்டார்.

“இல்ல, நீங்க இங்கதான் வேலை பாக்குறீங்களா?”

உதட்டசைவுகளையே அவர் கூர்ந்து அவதானிப்பதும் அப்படி உதட்டசைவிற்கு ஏற்ப அவர்தம் உதடுகளையும் நாவையும் அசைத்து அசைத்துப் பார்த்து கேள்வியை புரிந்து கொண்டவுடன் ஆமாம்! ஆமாம்! என்பதைப்போல மேலும் கீழுமாக தலையாட்டினார்.

நான் அவர்களின் உலகிற்குள்ளாக வந்திருக்கிறேன் என்கிற புரிதலே அப்போதுதான் மூளைக்குள் உறைத்தது. கை விரல்களை மடித்து நீட்டி உதட்டை பிதுக்கியபடி யாரைப் பார்க்க வேண்டும் என்பதான ஜாடையில் வெளிக்காட்ட தன் மொத்த உடல் மொழியையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சாரை பாக்கணுமே! என்று நான் சக மனிதனிடம் உரையாடுவதைப் போலவும் அவ்வப்போது அவர்களுக்குப் புரியாதோ என்பதாக நினைத்து வார்த்தைகளை கூடவே இழுத்து இழுத்தும் பேசிக் கொண்டிருந்தேன். அத்தோடு கைகளின் அசைவுகளை என் கேள்விக்கேற்ப உபயோகிக்க நினைத்து நினைத்து அதில் தோற்றுப்போகவே, அவர் ஒரு குறும்புப் புன்னகையோடு என் கையைத் தட்டிவிட்டு எனக்கு எல்லாம் புரியும், சகல சப்தங்களும் என்னுள் அடக்கம் என்பதாக தலையாட்டிக் கொண்டே வந்தார்.

எதார்த்தமான உலகிலிருந்து அவர்களின் உலகிற்குள் ஒன்றெனக் கலப்பது நமக்கு அவ்வளவு சிக்களுடையதாக இருப்பினும் அவர்களின் அசாத்தியமான உலகிலிருந்து நம்முடைய எதார்த்த உலகிற்குள் அவர்களோ சட்டென்று நுழைந்து நம்முள் ஒன்றென நொடிப்பொழுதில் கலந்துவிடுகிறார்கள். சிலைகளுடன் பேசுகிற மழலைகளின் மொழியை யாரலும் அறிந்துவிட முடியுமா? சப்தங்களற்ற உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றவர்களின் பாஷையும்கூட கடவுளின் மொழிதானோ என்னவோ?

ஒருமுறை பள்ளியை முழுக்கண்களாலும் உள்வாங்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன். கிளைகள் சப்தமின்றி அசைந்து கொண்டிருந்தன. பூக்கள் மலருவதுகூட மௌனமாகத் தானே நிகழ்கிறது. பள்ளிக் கட்டடங்களைச் சுற்றிலும் முதுமை தாங்கிய மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. மரங்களுக்கிடையேயான இடைவெளிகள் ஒவ்வொன்றும் சீராக வண்ண வண்ண மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்டத்தைப் போன்று இயற்கையால் சூழப்பட்டிருந்தன.

ஆதியில் மனிதர்களின் மொழி எது? காட்டின் குரலையே மொழிபெயர்ப்பு செய்து தகவல் பரிமாற்றம் செய்து கொண்டவன்தானே அவன்! ஆதிவாசிகளின் மழை வேண்டி கொண்டாடுகிற மழைநடனம்கூட அவன் இயற்கையிலிருந்து கற்றுக் கொண்டது தானே! குருவிகளைப்போல கத்திக் கொண்டும், சருகுகள் காற்றில் அசைந்து கொள்வதைப்போல கைகளால் சமிக்கை காட்டி பேசிக் கொள்வதும் தானே அவனது ஆதி மொழி. அப்படியென்றால் ஆதியில் பிறந்த மனிதனது மொழியைத்தான் இங்கிருக்கிற காது கேளாத வாய் பேசாத குழந்தைகளும் பேசிக் கொள்கிறார்களா? அப்படி பேசிக் கொள்வதற்கான பயிற்சியாகத்தான் இங்கே இவ்வளவு மரங்களும் செடிகளுமாக வளர்த்திருக்கிறார்களா? யோசிக்க யோசிக்க மனம் ஒன்றிலிருந்து இன்னொன்றாக குரங்குபோல தாவிக் கொண்டிருந்தது.

முன்பின் தெரியாத ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடுகையில் அதன் வழியாகவே நம்மைச் சந்திப்பவர்களும் நமக்குள் அறிமுகமாகிவிடுகிறார்கள். நம் பால்யகாலமும் கல்லூரி நாட்களும் பணிச்சுமையும் லட்சியமும் குடும்ப வாழ்வும் என நம் வாழ்வை ஒருவர் முன்பாக திறந்து வைக்கையில் அத்தகைய திறப்புகளின் வழியாகவே முழுவாழ்வையும் திறந்த மனதோடு அவர்களும் நம்மோடு பரிச்சயமாக்கிக் கொள்கிறார்கள்.



இருவருடனான உரையாடல் என்பதுகூட கண்ணாடியைப் பார்த்து பேசிக் கொள்வதைப் போலத்தானே, ஒருவர் பேசுவதிலிருந்து இன்னொருவரை புரிந்து கொள்வதும். பள்ளித் தலைமையாசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நிமிடங்களுக்குள்ளாகவே அவரும் எனக்குள் ஒளிவு மறைவின்றி முழுமையாக அறிமுகமாகிக் கொண்டார்.

“இங்க நிறைய குழந்தைங்க இருக்காங்களா சார்?”

“இந்த பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறப்போ அஞ்சு கொழந்தைங்க தான். இப்போ தொண்ணூத்தி ஏழு பிள்ளைங்க இருக்காங்க. ஆனா இதுகூட கொறைதான்.”

“கொறையா? அப்போ இன்னும் நிறைய குழந்தைங்க வெளிய இருக்காங்களா சார்?”

“பெத்தவங்களுக்கு இன்னும் இந்த கொழந்தைகளைப் பத்தின விழிப்புணர்வே வரல. தன்னோட கொழந்தைக்கு இப்படிப்பட்ட கொறைபாடு இருக்குன்னு யாரும் நம்பத் தயாரா இல்ல. அதனால இதை மறைக்கத்தான் பாக்குறங்களே தவிர வெளிய வந்து இந்த கொழந்தைகளுக்காக என்ன செய்யணும்னு யாரும் யோசிக்குறது இல்ல”

“சார், அப்புறம் எப்படித்தான் கொழந்தைக எல்லாம் இங்க வர்றாங்க?”

“ஆரம்பத்துல இப்படியொரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுருக்கோம்னு நோட்டிஸ் கொடுத்தோம். நிறைய விழிப்புணர்வு பண்ணோம். ஆனா வந்தது எல்லாரும் பெரிய பெரிய பசங்க, பொண்ணுங்களாத்தான் இருந்தாங்க. அப்படி பாத்தா இந்த ஸ்கூலே அவங்களுக்குப் பத்தாதே. இருந்தும், பெரியவங்களுக்கு இந்த நிலைமையில ஏதும் செய்ய முடியாதேன்னு முடிவு பண்ணி மூணு வயசுல இருந்து ஆறு வயசுக்குள்ள வந்து சேருங்கன்னு நோட்டிஸ் போட்டோம். அப்படி வந்து சேர்ந்த பிள்ளைங்களைத்தான் நாங்க இவ்ளோ வருசமா இங்க கஷ்டப்பட்டு படிக்க வச்சுட்டு இருக்கோம்.”

“அப்போ நிறைய குழந்தைங்க வந்தாங்களா சார்?”

“அட, நீங்க வேற சார். ஆரம்பத்துல கொஞ்சம் தயங்குனவங்க, மத்த வாய் பேசாத புள்ளைங்க நல்லா படிக்குறதப் பாத்துட்டு நம்ம புள்ளையும் படிச்சு மேல வந்துருமுன்னு முன்னாடியே வந்து சேத்தாங்க. ஆனா அதுக்கப்புறமாதான் அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துச்சு, அத்தோட எல்லாமே போச்சு.”

“ஏன் சார், என்ன ஆச்சு?”

“இப்போ மாற்றுத்திறனாளி கொழந்தைகள அரசுப் பள்ளியில சேத்து அவங்க ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு வந்தாலும் பாஸ் கொடுத்துரணும்னு அரசு சொல்லுது, அதேசமயத்துல இன்னொரு பக்கம் அரசுப் பள்ளியில தேர்ச்சி சதவீதம் அதிகமாவும் இருக்கு. அது எப்படி?”

“புரியல சார்!”

“இங்க, வாய் பேசாத குழந்தைங்க மூளை வளர்ச்சி கொறைவா இருக்குற புள்ளைங்களை சாதாரண பள்ளிக்கூடத்துல சேத்துட்டு ஒன்பதாப்பு வரைக்கும் பாஸ் கொடுத்துடுறாங்க. அப்புறம் பள்ளிக்கூடத்தோட தேர்ச்சி சதவீதம் போயிடும், மதிப்பு கொறைஞ்சுடும்னு வெளியேறச் சொல்லிடுறாங்க. அதனால கல்வியில அதிகம் பேர படிக்க வைச்ச மாதிரியும் ஆச்சு, பத்து பன்னெண்டு தேர்ச்சி அதிகமான மாதிரியும் ஆச்சு. அதுக்கப்புறமா இந்த கொழந்தைங்கள என்ன செய்யுறதுன்னு பள்ளிக்கூடங்களுக்கும் தெரியுறதில்ல, பெத்தவங்களுக்கும் புரியுறதில்ல. கடைசியா எங்ககிட்ட வந்து சேத்துக்கச் சொல்லி அழுது பொலம்பிட்டு நிக்கிறாங்க”

“அப்படி வர்ற குழந்தைங்க எல்லாம் ஒன்பதாப்பு வரைக்குமே அந்த பள்ளிக்கூடத்துல நூத்துல ஒண்ணா இருந்துட்டு எந்த ஸ்பெஷல் கவனமும் கெடைக்காம, எந்த படிப்பும் ஏறாம, எப்படி பள்ளிக்கூடத்துக்கு மொத மொறையா போனாங்களோ அதே மாதிரியே வெளியேறி இங்க வந்துருப்பாங்க. ஆனா அந்த சமயத்துல கத்துக்குற வயசும் கூடி அதுக்கான பக்குவமும் கடந்து போயிடுறதுனால இந்த கொழந்தைங்களுக்கு எங்களாலயும் எதுவுமே செய்ய முடியாம போயிடுது.”



ஆசிரியரின் குரல் கம்மிக் கொண்டது. அவரது குரலில் இருந்த தெளிவு குறைந்து நடுக்கம் தெரிந்தது. தனக்குத்தானே ஏதேதோ சொல்லிக் கொண்டு தன்னாலே தலையசைத்துக் கொண்டார்.

அப்போதுதான் அவரின் குரல் தன்மையைக் கவனித்தேன். சாதாரணமாக மனிதரிடம் பேசுகிற பாவணையல்ல அவரின் மொழி. அதீதமான முகபாவனைகளோடு உதடுகளை அகல விரித்து வார்த்தைகளை பல் எளிருகள் தெரியுமளவிற்கு இழுத்து இழுத்து பேசிக் கொண்டிருந்தார். அருகாமையிலிருக்கிற மனிதரிடம்கூட உரத்து சப்தமாகப் பேசுகிற அவரின் குரல் கரகரவென்று இருந்தது. முப்பதாண்டுகால செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கற்பித்தலின் விளைவாக அவர்களுடைய சம்பாசனையின் வழியே மொழிப்பிரயோகமும் பேசுகிற தொனியும் முற்றிலும் உரக்க மாறியிருந்தது.

காது கேளாத குழந்தைகளுடன் பேசிப் பேசியே தன் குரல்வளம் சிதைந்துபோன உண்மை அவருக்குத் தெரியுமா? என்றாவது நம் முகத்தை நாமே அவதானித்துக் கொள்வதைப் போல அவரது குரலை அவரே கேட்டுக் கவலைப்பட்டிருப்பாரா? அல்லது சொந்தக் குழந்தைகளோடு அதே தொணியில் உரக்கப் பேசும் போது அவரது பிள்ளைகளே இதை கவனித்து சுட்டிக் காட்டியிருப்பார்களா? பள்ளிக்கூட குழந்தைகளுக்கும் வீட்டுக் குழந்தைகளுக்குமான இடைவெளியை அவரால் கண்டுகொள்ள முடிந்திருக்குமா? குறைபாடுடைய குழந்தைகளைப் பார்க்கிறபோது தன் பிள்ளையின் ஞாபகமோ, தனக்குப் பிறந்த குழந்தையோடு விளையாடும்போது அவர்களைப் பற்றிய எண்ணமோ வந்தால் அவரின் மனோபாவம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கற்பிக்கிற ஆசிரியர் தன் வாழ்வையே ஒரு தியாக மனப்பான்மையோடு முன்வைக்கும்போது அதன் மகத்துவம் இறைவனுக்கும் நிகராகிவிடுகிறது. ஐம்புலங்களில் ஏதோ ஒன்று குறைபாடுடையதாய் இருக்கிறபோது ஒரு தேர்ந்த ஆசிரியருடைய கற்பித்தல் அதன் வழியே அத்தகைய குழந்தைகளிடம் ஒரு பரிபூரணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“அப்போ அந்த கொழந்தைகளோட எதிர்காலம்???’

“வேற என்ன சார் செய்யுறது? சாதாரண பள்ளிக்கூடத்துல சேத்தா நம்ம புள்ள பேசிடுவான்னு பெற்றோர் நினைக்கிற அறியாமையால வந்த விளைவு இது. அந்த கொழந்தைங்களால புதுசா வந்து இந்தப் பள்ளிக்கூடத்துல கத்துக்கவும் முடியாம, மேல் படிப்ப தொடர்ந்து படிக்கவும் முடியாம எதிர்காலமே கேள்விக்குறியா முடிஞ்சு போயிடுறத நினைச்சா எங்களுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும்.”

“அப்போ, இங்க கொழந்தைகளுக்கு எப்படி சார் சொல்லித் தர்றீங்க?” 

அதுவரை இறுகிப் போயிருந்த முகம் மெல்ல மலர்ந்தது. சப்தம் கரைந்து நிசப்தமானது. வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு பள்ளியை செயல்முறையோடு சுற்றிக்காட்ட அவர் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். என் பள்ளிக் காலத்திலெல்லாம் கேட்டுப் பெறுவதற்கு முன்பாகவே எனக்குக் கிடைத்த அத்தனையும் இவர்களுக்கு பிறப்பாலே மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கையில் நாம் எவ்வளவு சவுகரியமாக வாழ்ந்து வந்திருக்கிறோம் என்கிற குற்ற உணர்வும் பிடித்துக் கொண்டது.

நிலத்திலிருந்து உயர்த்திக் கட்டப்பட்ட மேடையிலிருந்து அந்த அதிகாலை பள்ளித் துவக்கத்திற்கான இறைவணக்கப் பாடல் ஆரம்பமாகியது. பள்ளி வயதில் சிறுவனாக முன்வரிசையில் நின்று கண்ணை மூடியபடிப் பாடிய எனது பள்ளிப் பாடல் கண்முன்னே வந்து வந்து போனது. என் பால்யகாலத்திற்குள் மூழ்கி அதில் கரைந்தபடி மெல்ல கண்ணைத் திறந்து பார்த்த அந்த நொடி எனக்குத் திக்கென்றிருந்தது.

ஒரு குழந்தை திக்கித்திக்கி புரியா மொழியில் கைகளை அசைத்து உடலை வளைத்து தலையை ஆட்டி ஆட்டி உடல் மொழியால் தன் இறைவணக்கப் பாடலை அங்கே அரங்கேற்றம் செய்து கொண்டிருந்தாள். ஒரு சிம்பொனி இசையமைப்பைப்போல அவளின் நயம் அங்கே ஒரு இசைக் கச்சேரியை நிகழ்த்திக் கொண்டிருந்தது. அவளின் கையசைப்பிற்கேற்ப உதட்டின் அசைவுகளுக்கேற்ப கீழே வரிசையில் நின்ற குழந்தைகளெல்லாம் அதன் பிரத்தியேக இசையில் லயித்தபடி மெய்மறந்து அதைக் கேட்டுணர்ந்து பதிலுக்கு பின்னிசை தருவதைப்போல முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.

ஏனோ அந்தப்பாடல் என்னுள் ஒரு வயலினுடைய சோகமான கீதத்தை ஞாபகப்படுத்தியது. அதன் நாண் கம்பியில் முதுகைத் தேய்த்தபடி நகரும் கைபிடியிலிருந்து எழுகின்ற இசை நம் ஆன்மாவை கரைத்து துக்கத்தை மேலெம்பச் செய்து அழச் செய்துவிடும். அதுபோல எனக்குள் அமிழ்ந்து கிடந்த துயரத்தையெல்லாம் சட்டென்று மேலெழச் செய்து அந்த காட்சி என்னை விம்மி அழ வைத்தது. அக்குழந்தையின் இசைமீட்டல் நின்றவுடன் கீழிருந்த அத்தனை குழந்தைகளும் ஆரவாரத்தோடு கைவிரல்களைத் தூக்கி ஓசையில்லாமல் கைதட்டிக் கொண்டனர். அங்கே சப்தமில்லாமல் ஒரு திரைப்படம் என்முன்னே ஓடிக்கொண்டிருந்ததை கண்ணைக் கசக்கியபடியே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.



முதல் இரண்டு அறைகளும் பிரத்தியேகமாக கேட்பதற்கும் பேசுவதற்குமாக பயிற்சி அளிக்கப்படுகிற அறைகள். அந்த அறையில்தான் குழந்தைகளின் முதல் குரல் கேட்டுணரப்படுகிறது. அங்குதான் அக்குழந்தையின் முதல் சப்தம் மொழியாக உருமாற்றம் பெறுகிறது. அவ்விடம்தான் தன் தாயை, தந்தையை பெயர் சொல்லிக் கூப்பிடுவதற்கான பிரத்தியேகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உள்ளே நுழைந்த நிமிடத்தில் அங்கே ஓர் சிறுவன் குட்டி நாற்காலியில் தன் ஆசிரியர் அருகே அமர்ந்தபடி எதிர் மேசையில் நிற்க வைக்கப்பட்டிருந்த நிலைக் கண்ணாடியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கைகளில் தாங்கியிருந்த சிலேட்டில் ‘பாப்பா’ ‘அம்மா’ என்றொரு வார்த்தைகள் மிக அழுத்தமாக எழுதப்பட்டிருந்தன.

அக்குழந்தையின் கை விரல்கள் அந்த ஆசிரியரின் உதடுகளையும் கண்ணங்களையும் தொட்டுணர்ந்தபடி அந்த முகத்தின் வார்த்தை உச்சரிப்பின் நுணுக்கமான தசை அசைவின் முகபாவனைகளை கண்ணாடியில் பார்த்தபடியே அதற்கேற்ப தன் உதடுகளை வெளித்தள்ளி குவித்து மெல்ல மெல்ல வார்த்தைகளை உச்சரித்து ஆசிரியரின் அதே முகசாடையை தன் முகத்திலும் கொண்டுவர நெற்றியைச் சுருக்கி அவன் தீவிரமாக முயன்று கொண்டிருந்தான்.

இத்தகைய ஆசிரியரின் நெருக்கத்திற்குரிய கற்றல் முறை எந்தச் சாதாரண பள்ளியிலும் சாத்தியமில்லை என்று இப்போது புரிகிறது. “பாப்பா.. சொல்லு, பா.. பாப்பா..” என்று அவனது விரல்களை தன் உதடுகளோடு தொட்டுக் காண்பிக்க காண்பிக்க அவனும் வாயினை அகல அகலத் திறந்து வார்த்தைகளை உதிரி உதிரியாக பேச முயன்று கொண்டிருந்தான். அவனது உச்சரிப்பில் சப்தமின்றி வெறும் காற்றுக்குமிழிகள் மட்டுமே வெளியேற மீண்டும் அவனது கையை நகர்த்தி ஆசிரியரின் குரல்வளைப் பகுதியில் வைத்து உச்சரிப்பிற்கேற்ப அதிருகிற தொண்டைப்பகுதியின் அழுத்தத்தையும் நகர்வையும் சுட்டிக்காட்டி மறுகையை அவனது குரல்வளைப் பகுதியில் வைத்து அதே அதிர்வை வரவழைக்கச் செய்து சப்தத்தை இன்னும் அதிகமாக்கியபடி இருந்தார்.

“பா…ப்பா.. பாப்… பா.. பா..ப்…பா”

அந்தக் குழந்தை காது கேட்காமல் வெறுமனே உதட்டசைவுகளை பிரதியெடுத்து தன் முகசாடையோடு பொறுத்திப் பார்த்து வார்த்தைகளை கற்றுக் கொண்டிருந்தது.

அந்த மேசை மீது குட்டி மைக்கும் கேட்பதற்காக தடித்த ஹெட்செட்டும் இருந்தன. ஆசிரியர் சில கவரிடப்பட்ட புகைப்பட ஆல்பங்களை எடுத்து அவனிடம் கையில் கொடுத்தபடி அவனது காதில் ஹெட்செட்டை பொறுத்திவிட்டு கையில் மைக்கை எடுத்துக் கொண்டார். முகசாடையை இம்முறை சேலை முகப்பால் மறைத்துக்கொண்டு பா..ப்..பா என்று சப்தமாக உச்சரிக்க அந்தப் பையன் அந்த சப்தத்தின் அர்த்தத்தை கேட்டுப் புரிந்து கொண்டு ஆல்பத்தை புரட்டிப் புரட்டி பார்த்து ஒரு சிரிக்கிற மழலையின் புகைப்படத்தை எடுத்து ஆசிரியரிடம் நீட்டினான். இது குழந்தைகளுக்கான கேட்டல் பயிற்சி.

வெரி குட்..! என்று ஆசிரியர் கண்ணத்தைக் கிள்ளவே, அவன் வெட்கத்தில் கழுத்தைச் சாய்த்தபடி கிச்சுகிச்சு மூட்டுவதுபோல கூசிச் சிரித்தான்.

சொட்டுத் தண்ணீரும் கடிகார முள் நகர்வும்கூட தூக்கத்தை கலைத்துவிடுகிற எனது இரவுகளை நினைத்துப் பார்க்கையில் மைக் சப்தத்தை முழுக்க ஹெட்செட் உதவியால் கேட்டுக் கொண்டு அவன் கேட்கவும் பேசவும் கற்றுக் கொள்கிற காட்சி என்னை நிலைகுலையச் செய்தது.

“எல்லா கொழந்தைக்கும் இதே மாதிரிதான் பயிற்சி கொடுப்பீங்களா சார்?”

“அப்படி இல்ல, ஒண்ணுல இருந்து மூணாங் கிளாஸ் வரைக்கும் கொழந்தைங்களுக்கு காது கேக்க, வாய் பேச வைக்க நாங்க இப்படி பயிற்சி கொடுக்குறோம். அப்புறமாதான் அவங்களோட பாடத்திட்டம் ஆரம்பிச்சுறுதே. அதனால அவங்க இதையே பிக்கப் பண்ணி மேல படிச்சி வந்துருவங்க.”

“அப்போ இவங்க எல்லாருக்கும் காது கேட்க ஆரம்பிச்சுடுமா சார்?”

“இல்ல.. இல்ல.. அதுக்கு கியரிங் எய்டு மெஷின் மாட்டியிருக்கணும். அது மாட்டியிருந்தாதான் காது கேட்கும்!”

அந்த நீண்ட வராண்டாவில் மௌனமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தேன். சிறுமிகள் பெரிய காதணிகளைப்போல ஏதாவதொரு பக்கம் காது கேட்கும் கருவியை மாட்டியபடி இருந்தனர். சிலசமயம் அது பிரத்தியேகமான ஹேர்பின்களைப்போல, செயற்கையான ஒரு அழகிய பூவைப்போல தோற்றமளித்தன. எந்தப் பக்கம் அந்தக் கருவி இருக்கிறதோ அந்தப் பக்கமே எதிரே நின்று பேசுவோர் இருக்குமாறு நகர்ந்து நகர்ந்து அவர்கள் பேசுவதை அருகே உற்றுக் கேட்டவாறும், வாய் அசைவுகளை அவதானித்தவாறும் உரக்க அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.



தூரத்தில் ஒரு சிறுமி கை விரல்களை பரதநாட்டியத்தின் நுட்பமான அசைவுகளைப்போல இரு கைகளையும் குவித்து, விரித்து ஏதோ பேசிவிட்டு முகத்தை மூடியபடி சிரிக்கவும் சுற்றியிருந்த எல்லா குழந்தைகளும் சப்தமாக சிரித்துக் கொண்டன. அழுகையும், சிரிப்பும் மட்டுமே ஒருவரின் மொழியாக இருக்கிற போது பேசுவதற்கு வேறெதற்காக மொழி தேவை என்று அந்த சமயம் தோன்றியது. அந்த இரண்டு மொழிகளுமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அது அவர்களுடைய உலகம், நம்மால் புரிந்து கொள்ள முடியாத இன்னொரு உலகம். தொட்டில் குழந்தைகள் துயில் கொண்டவாறே சிரிக்கையில் அவர்களிடம் இப்போது கடவுள் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்களே ஒருவேளை இந்தக் குழந்தைகள் வாழ்கின்ற உலகமும்கூட இதுபோன்ற ஒன்றில்தானா!

“அதாவது சார், இவங்களுக்கு மாநிலத் திட்டப்படி எல்லா பாடமும் சொல்லித் தர்றோம். ஆனா இவங்களுக்கு ஒரே ஒரு மொழிப்பாடம் மட்டும் தான். தமிழ், ஆங்கிலம் அல்லது மலையாளம் இப்படி ஏதாவது ஒரு மொழி வழியாத்தான் பாடத்தை கத்துக்குறதுக்கு சொல்லித் தர்றோம். இந்த கொழந்தைங்களால ரெண்டு மூணு மொழியெல்லாம் கத்துக்க முடியாது சார்”

“அது ஏன் சார்! தமிழ் பாடத்தோட ஆங்கிலம் கூடவா சொல்லிக் கொடுக்குறதில்ல?”

“அவன் படிக்கணும். அதுக்கு ஒரு மொழி வேணும். அது அவனோட தாய்மொழியா இருந்தா பள்ளிக்கூடத்துல படிக்குறத வீட்டுல போய் பெத்தவங்க பேசுற மொழிய வச்சும் கத்துக்குவான். ஒரு மொழிய புரிஞ்சுக்குறதுக்கே இந்தக் கொழந்தைங்க உதட்டப் பார்த்து, கைசாடை போட்டு, மொக சாடையில கத்துக்கிறாங்க சார். இந்த சமயத்துல போய் வேற ஒரு மொழிய கத்துக்கனும்னா, இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாம பாவம் கொழந்தைங்க கொழம்பி போயிடுங்க சார்”

“இங்க கைசாடையும் சொல்லித் தர்றீங்களா சார்!” 

“இப்படித்தான்னு ஒரு வழியில மட்டும் நாங்க சொல்லிக் கொடுக்குறது கெடையாது. கைசாடைன்னு குறிப்பிட்டு ஏதும் கிடையாது. பசங்க அவங்களுக்குள்ள இரகசியமா பேசுறதுக்கு கண்டுபிடிக்கிற கைசாடையைத் தான் நாங்க கேட்டுப் படிக்கிறோம்.”

“அப்போ இந்த கை சாடைலாம் அவங்கட்ட இருந்து நீங்க கத்துக்கிட்டது தானா சார்?”

“ஆமா, அவங்க பேசுற கைசாடை பாஷையத்தான், டீச்சருங்க நாங்க எல்லாம் இந்த சாடைக்கு இதான் அர்த்தம், இதுதான் எழுத்து, இதுதான் பாஷை, இப்படித்தான் இதை உச்சரிக்கணும்னு கத்துக் கொடுக்குறோம்.”

“ஓ ! அவனா ஒரு சாடையில கத்துக்கிட்டு பேசுற மொழிய நீங்க முறைப்படுத்தி அந்த சாடைக்கான வார்த்தையும் அர்த்தத்தையும் சொல்லிக் கொடுக்குறீங்க, அப்படித்தானே!”

ஆமோதிப்பதைப்போல் அவர் தலையாட்டிக் கொண்டார்.

நடந்து கொண்டிருந்த வராண்டாவில் வகுப்பறையின் வாசல் வரவே சட்டென்று நின்று ஒரு வகுப்பறைக்கு வெளியே நின்று பாடம் சொல்லிக் கொடுக்கிற நுட்பத்தை பார்த்துக் கொள்ள எனக்கு அனுமதி வழங்கினார். சிறைச்சாலைக் கம்பிகளுக்கு உள்ளே வேறொரு வாழ்க்கை இருப்பதைப்போல அந்த ஜன்னலுக்கு மறுபுறமாக நாம் பள்ளிகளில் இதுவரை கண்டிராத பாடம் ஒன்றும் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கரும்பலகையில் பாடத்தை எழுதிவிட்டு அதன் முன்னால் நின்றபடியே ஒவ்வொரு வார்த்தைகளையும் புரியும்படியாக உச்சரிக்க வைக்க தன் முகபாவனைகளையும் கைசாடைகளையும் பிரத்தியேகமான உடல் மொழியையும் ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பாடத்தின் தன்மைக்கேற்ற அவர் முன்னும் பின்னும், இடமும் வலமுமாக நகர்ந்து நகர்ந்து கை கால்களை பொம்மலாட்ட காட்சியைப்போல அசைத்தபடி சுழன்று சுழன்று ஒரு பாடத்தை புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார். அவரது செய்கை ஒவ்வொன்றும் அங்கே ஐரோப்பிய நடன அசைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

குழந்தைகள் ஆசிரியரின் ஒவ்வொரு அசைவிற்கும் முகத்தில் சிரிப்பை வரவழைத்தபடி ஆனால் அந்த ஒவ்வொரு அசைவிற்குமான அர்த்தம் தனக்குத் தெரியும் என்பதைப் போல தன் பாட நோட்டையும், ஆசிரியரையும், கரும்பலகையும் ஒவ்வொன்றாக மாறி மாறி பார்த்தபடி கவனித்துக் கொண்டிருந்தனர்.



“பிள்ளைங்களுக்கு கண்ணு ஒண்ணுதான் சார் எல்லாமே. அவங்களுக்காக இங்க அதிகமா வேலை செய்யுறது அந்த ரெண்டு கண்ணும்தான். காது கேக்காம எல்லாத்தையும் கண்ணு வழியாவே கத்துக்க அவங்க கண்ண கண்ண உருட்டிக்கிட்டு மேல கீழ பாத்துக்கிட்டு சீக்கிரமாவே அவங்களுக்கு கண்ணு வலி வந்துரும். அதனால கொஞ்ச நேரத்துலயே சோர்ந்து போய் அவங்களுக்கு தூக்கமும் வந்துரும். அதுக்காகத்தான் நாங்க மதியத்துக்கு அப்புறமா சின்னப் பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வச்சுறுவோம். பாவம் சார், இந்தக் கொழந்தைங்கல்லாம்!”

 

‘பாவம்!’ பொதுவாக எந்த மாற்றுத்திறனாளி குழந்தையும் தன் மேல் யாரும் கருணை காட்டவோ பரிதாபம் காட்டவோ நினைப்பதில்லை. தனக்கும் இச்சமூகத்தில் தன் வயது ஒத்த சாதாரண குழந்தைக்கு வழங்கப்படுகின்ற அதே சலுகையும் அதே மரியாதையும் தனக்கும் கிடைக்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கமும் கோபமும் இருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆசிரியரின் அந்த வார்த்தை என்னை கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வரவழைத்து அவர்களுக்கான எதிர்காலம் பற்றிய தூண்டலை ஏற்படுத்தியது.

“இந்த குழந்தைங்க காலேஜ், வேலைக்குலாம் போறாங்களா சார்??”

அந்தக் கேள்வியே தவறென்பதுபோல என்னை அலட்சியமாக பார்த்துவிட்டு மெல்ல அந்த வராண்டாவில் நடக்க அவரைப் பின் தொடர்ந்தபடியே நான் வகுப்பறைகளை பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தேன்.

“இங்க படிச்ச புள்ளைங்க டிகிரி எல்லாம் முடிச்சு அரசு வேலைக்குன்னு நிறைய போயிருக்காங்க. யாரும் யாரையும் சார்ந்து வாழாம சொந்தக் காலுல நிக்கிற பிள்ளையா நாங்க வளத்து விட்ருக்கோம். அவங்களுமே ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சு பிள்ளைங்களோட குடும்பத்தோட நல்லபடியா வாழ்ந்துகிட்டு இருக்காங்க.”

“அப்படி கல்யாணம் பண்ணி பொறந்த கொழந்தைங்க அவங்க மாதிரி இல்லாம, எந்தக் கொறையும் இல்லாம நல்லாவும் இருக்காங்க. ஆனா என்ன, குழந்தைங்க ஆசையா ‘அம்மா’ ‘அப்பா’ ன்னு கூப்பிடுறப்போ அதைக் கேக்குறதுக்கு இந்தப் பிள்ளைங்களுக்கு கொடுத்து வைக்கிறதில்ல.. ரொம்பவும் கொடுமைல சார்”

உண்மையில் இந்தக் குழந்தைகளின் கடவுள் யார்? கடவுளென்று ஒருவர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் குழந்தைகளைப் படைத்து ஒருவர் திட்டமிட்டு வதைக்க முடியுமா? இப்படியொரு குரூர மனம் சாதாரண மனிதனுக்குக்கூட வராதபோது கடவுளுக்கு மட்டும் ஏன் அப்படியொரு எண்ணம் வந்தது? அதை ஏன், ஏதுமறியா பிள்ளைகளின் மேல் பிரயோகித்தபடி இப்படி விளையாட்டுக் காட்ட வேண்டும்? இதுவரை நாம் கண்ட பெருங் கடவுள்களெல்லாம், மனிதர்களைப் படைக்கிற கடவுள்களெல்லாம் ஆண் கடவுள்களாகவே இருக்கிற காரணத்தினால் தான் குழந்தைகளைப் பற்றிய உலகம் அக்கடவுள்களுக்குத் தெரியாமல் போனதா? ஒருவேளை பெருங் கடவுள்களாக பெண்களாய் மட்டுமே இருந்திருந்தால் அந்த கருணைமிகு பெண் கடவுள்களால் எந்தக் குழந்தையும் இப்படியான குறைபாடுகளோடு, கொடுந் துயரத்தோடு பிறந்திருக்க மாட்டார்கள் அல்லவா? எங்கே மனம் சென்றாலும் இறுதியில் ஆதங்கமெல்லாம் இறை நம்பிக்கை மீதே வந்து விழுகிறது.

சாமானிய மனிதர்களே அன்றாட வாழ்க்கைப்பாட்டிற்கு போராடி வருகிற இச்சமூக சூழலில் இத்தகைய புலன் குறைபாட்டால் எதிர்காலத்தில் இவர்களெல்லாம் எவ்வகையில் எதிர்காலத்தை தாக்குப்பிடித்து இயல்பான வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்ற பயமோ இன்னொரு பக்கம் மூளைக்குள் உதித்தபடியே இருந்தது.

“இந்த கொழந்தைங்களும் மத்த கொழந்தைங்க மாதிரி இந்த உலகத்துல இயல்பா வாழ முடியாதா சார்?”

நான் ஒரு மருத்துவன் என்கிற இயல்பை மீறிய உணர்வுகளோடு ஒரு அப்பாவியைப் போல கேள்விகளை தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இவர் நிச்சயம் ஒரு மருத்துவர் தானா? இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரே? என்றுகூட அவர் நினைத்திருக்கலாம்.

பிறவியிலே காது கேட்காத வாய் பேசாத குழந்தைகளின் செவித்திறன் பிறந்த அந்த நிமிடமே ஒட்டு மொத்தமாக செயலிழந்து விடுவதில்லை. ஆரம்பத்தில் ஐம்பது, அறுபது என்று அந்தந்த குழந்தைகளுக்கேற்ப இருக்கிற கேட்கும் திறன், வயதாக ஆக அத்தகைய திறனும் செயலிழந்து பெரியவர்களாகிற சமயத்தில் ஒட்டுமொத்தமாக நூறு சதவீத கேட்கும் திறனையும் இழந்துவிடுகிறார்கள். குழந்தைகள் தங்களது இயல்பான கேட்கும் திறனை தக்க வைத்துக் கொள்கிற வரையில்தான் ஹியரின் எய்டு கருவி வெளியே சப்தத்தைக் கேட்டு அதற்கேற்ப அதிகரித்துக் கொடுத்து கேட்க வைக்கும். ஆனால் நூறு சதவீத அந்த குழந்தைகளினுடைய காது கேட்கிற நரம்புகளின் செயலிழப்புக்குப் பின்னே ஹியரிங் எய்டு கருவிக்கு அந்தக் குழந்தையிடம் எந்த வேலையும் இல்லாமல் போய்விடுகிறது.

இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சை தான். ஆனால் அதற்கு பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளை ஆறு வயதிற்குள்ளாகவே கண்டுபிடித்தாக வேண்டும் என்று புத்தகங்களில் படித்தது ஏனோ அப்போது நினைவிற்குள் வராமல் போய்விட்டது. ஒரு மருத்துவன் உணர்ச்சிக்குள்ளாகும் போது தன் அறிவை இழக்க நேரிடுவதால் ஒரு நோயாளியை மருத்துவர்கள் எப்போதும் அவர்களை அறிவுத் தளத்திலிருந்தே அணுக வேண்டும் என்று கல்லூரி ஆரம்ப நாட்களில் அறிவுறுத்தியதும்கூட இப்போது தான் புரிகிறது.



“அது உங்க கையில தானே டாக்டர் இருக்கு! அதுக்கு நீங்க தான் பதில் சொல்லனும்” என்று சொல்லிவிட்டு வெளியே நடக்கலானார்.

இந்த நிமிடம் பிறவிலேயே காது கேளாத வாய் பேசாத குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வு அத்தகைய பெற்றோர்களுக்குத் தெரியவில்லை என்பதும், விழிப்புணர்வுக்கான முன் முயற்சிகள் யாவும் நம்மிடம் போதாமையாக இருக்கிறது என்பதுமே இப்போதைய பிரதான பிரச்சனை என்பது புரிகிறது. அதைவிடக் கொடுமையாக காது கேளாத பள்ளியில் படிக்கிற நூற்றுக்கணக்கான அத்தனை குழந்தைகளுக்கும் மருத்துவரான என்னால் இப்போது ஏதும் செய்ய இயலாது என்கிற இயலாமையும் புரிந்தது. ஆனால் இவற்றையெல்லாம் அறிந்து கொண்ட பிறகு ஒரு குழந்தைகூட இத்தகைய குறைபாட்டோடு ஆறுவயதைக் கடந்து அதற்குரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரு மாற்றுத்திறனாளியாகிவிடக் கூடாது என்று எனக்குள் நானே வைராக்கியமாக சொல்லிக் கொண்டேன்.

அப்போதுதான் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற செல்வி என்கிற ஆசிரியரை எதார்த்தமாக சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பின் வழியே இக்குழந்தைகளின் அகஉலகைப் பற்றி நான் கண்டுணர்ந்த அதிர்ச்சி இன்னமும்கூட என்னைவிட்டு அகலவில்லை. நீங்களுமே அந்த ஆசிரியரை சந்திக்க விரும்புகிறீர்களா?

தொடரும்..



தொடர் 1:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 2:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 3:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *