காது கேளாதோரின் அக உலகத்திற்குள்..

பூங்காவின் மீது போர்த்தியிருந்த மென்பனி விலகத் துவங்கி வெயில் மெல்ல மேலேறத் துவங்கியிருந்தது. மேகங்கள் கலைந்து சூரியன் எட்டிப்பார்த்தும்கூட அதன் ஒளிக்கீற்றுகள் நுழைய முடியாததொரு வனாந்திர வெளியாக பூங்காவினுள் மரங்களாலும் செடிகளாலும் நிறைந்திருந்தன. நேற்றிரவு பெய்த சாரல் மழையில் மண் ஈரமேறிப் போயிருந்தது. மரங்களின் இலையிலிருந்து தொடுக்கிக் கொண்டிருந்த கடைசித் துளி நீரும் அந்த அதிகாலைப் பொழுதில் கசிந்து கீழிறங்கியிருந்தன. பட்டைகள் உறிந்து தழும்புகளேறிய உயரமான பன்னீர் மரத்தின் கீழே நாங்கள் இருவரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.

எங்கும் நிசப்தமாயிருந்தது. புத்த மடாலயங்களுக்குள் இருக்கற பேரமைதியைப்போல பூங்காவிற்கென்றே இருக்கிற மௌனம்கூட அலாதியானதுதான். அங்கிருந்த மரங்கள் சப்தங்களற்று காற்றிற்கு அசைந்து கொண்டிருந்தன. பறவையொன்று குதித்து எழுந்த இடம் மட்டும் கூடுதலாக அசைந்து அடங்கியது. எங்கோ தூரத்திலிருந்து விழுந்த பழுத்த இலையொன்று பேச்சற்று இருந்த எங்களுக்கு முன்னே வந்து அமர்ந்தது. பழுத்த அந்த இலையை தளர்த்துக் கொள்ளும்முன் அந்த மரத்தின் கிளை ஏதேனும் யோசித்திருக்குமா? அதன் கடைசி விடுபடலை எண்ணி ஒருகணமாவது கண்ணீர் சிந்தியிருக்குமா? தமிழ்ச்செல்வி அவர்கள் முப்பத்தொரு ஆண்டுகாலம் பணிபுரிந்து பழுத்த இலைபோல உதிர்ந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றவர் என்ற எண்ணம் அப்போதுதான் மனதிற்குள் தோன்றி மறைந்தது.

நான் யார்? நான் ஏன் இவ்வாறு சுற்றிக் கொண்டுத் திரிகிறேன்? எது எங்களை இழுத்து வந்து இங்கே நிசப்தமாக ஒருவரையொருவர் பேசிக்கொள்ள விடாமல் உட்கார வைத்திருப்பது? நாங்கள் இயங்குகிற புள்ளியின் மையம் தான் என்ன? நான் மருத்துவர் என்பதையே பல சமயங்களில் மறந்து போகிற குற்ற உணர்வு எனக்குள் அடிக்கடி வருவதையும் தவிர்க்க முடிவதில்லை. காது கேளாமலும் வாய் பேசாமலும் ஆங்காங்கே முளைத்திருக்கிற அபூர்வமான குழந்தைகளைத் தேடி பயணம் செய்து கொண்டிருக்கிற நான் மருத்துவத்திலிருந்து வெகுதூரத்தில் தள்ளி நிற்பதை எப்படி புரிந்து கொள்வது என்று சில நேரங்களில் தடுமாறியிருக்கிறேன். வெறுமனே குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளாக சுழல் நாற்காளியில் அமர்ந்தபடி பணிபுரிந்து கொண்டிருக்கிற மருத்துவரைப்போல நான் எப்போதும் இருக்க விரும்பியதில்லை. மருத்துவன் என்பவன் யார், மருத்துவமனை என்றால் என்ன என்பதன் புரிதலை நோக்கி சில நாட்களாகவே நான் என்னுள்ளே விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

பல சமயங்களில் மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளுக்கான தீர்வு மருத்துவனைக்கு வெளியேவும், மருத்துவம் என்று வரையறுக்கப்பட்ட ஒன்றிற்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். மருத்துவன் என்பவன் நோயுற்ற மனிதர்களை சந்திப்பவன், நோய்களைத் தீர்ப்பவன் என்றே வைத்துக் கொண்டால்கூட நோயுற்றவர்கள் எல்லாரும்கூட மருத்துவமனைக்கு வருவதில்லையே! ஏன், தான் நோயுற்றிருக்கிறோம் என்றுகூட பலருக்குத் தெரிவதில்லை. அப்படி வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிற நான் வாழுகிற சமூகத்தின் சொற்ப அளவிலானவர்களைத்தான் அன்றாடம் சந்திக்கிறேன் என்றால் நான் மருத்துவன் என்று சொல்லிக் கொள்வதிலும் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால் எப்போதும் மருத்துவமனைக்கு வெளியே ஏழ்மையிலிருக்கிற மனிதர்களிடம் சென்று அவர்களுக்கான தீர்வைக் கண்டறிய நான் முயற்சி செய்திருக்கிறேன்.

கடந்த முப்பத்தியொரு ஆண்டுகளாக காதுகேளாத வாய்பேசாத குழந்தைகளுடன் தன் பெரும் வாழ்வையே அர்ப்பணம் செய்துவிட்டு அத்தகைய குழந்தைகளைக் கண்டறிவதிலும் அவர்களின் துயரங்களிலிருந்து விடுபட்டு அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கித் தருவதிலும் தன் கணிசமான பங்கினை ஆசிரியர் தமிழ்ச்செல்வி ஆற்றியிருக்கிறார். அவர் முன்னால் அமர்ந்து கொண்டிருந்தபோது பழுத்த இலையொன்றின் அனுபவமும் அவரும் ஏனோ ஒன்றுதானோ என்று யோசிக்கத் தோன்றியது.

எவ்வளவோ மனிதர்களிருக்க இவர் மட்டும் ஏன் இப்படியொரு வழியைத் தேர்வு செய்தார்? எது இவரை இவ்வழியில் நடக்கத் தூண்டியது? அவரும் என்னைப்போல எந்தக் குழந்தையையாவது சந்தித்திருப்பாரா? அதுவே அவரது வாழ்வின் திருப்பத்தை தீர்மானித்திருக்குமா? அதற்காக வாழ்வையே அர்பணித்திருக்கும் அவருக்கும் எனக்குமான வித்தியாசம் என்ன? உண்மையாகவே அவருக்கென்று வேறு இலட்சியங்கள் ஏதுமே இல்லையா? திருமணமே செய்து கொள்ளாமல் நிராதாதரவான குழந்தைகளுக்காகவே வாழ்ந்து முடித்த தன் வாழ்வை எண்ணி என்றாவது அவர் பெருமை கொண்டிருப்பாரா? இப்படியாக நிறையவே கேள்விகள் மழைக் காளான்களைப்போல மனதில் முட்டி முளைத்துக் கொண்டிருந்தன.

ஒரு புத்தனின் சீடரைப்போல அவர் முன்னே அமர்ந்து அவரது சாந்தமான முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இம்முறை அவரிடம் எதுவும் கேட்கப்போவதில்லை என்றும் அவர் பேசுவதை மட்டுமே ஒரு அப்பாவிக் குழந்தையைப்போல ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமெனவும் மனதில் நினைத்துக் கொண்டேன்.

“என்ன தம்பி தெரிஞ்சுக்கனும்?”

“இந்தக் குழந்தைங்களால பேச முடியாது, யார் பேசுறதையும் கேக்கவும் முடியாது. இந்த சமூகத்தாலும் அவங்களை பெத்தவங்களாலும்கூட அவங்க நெனைக்குறத, பேச விரும்புறத புரிஞ்சுக்க முடியுறதில்ல. அப்படியிருக்க அந்தக் குழந்தைங்களோட பேச முடிஞ்ச, அவங்களோட ஆசைபாசங்கல பக்கத்துலயே இருந்து பாத்த உங்களுக்குத்தான் அவங்களோட வலி, வேதனை உணர்வுகளெல்லாம் தெரியும்.”

“அவங்களோட உலகம் எப்படி இருக்கும்? அவங்கள பத்தி அவங்களே என்ன நெனைக்குறாங்க? அவங்கள பத்தி மத்தவங்களும் பெத்தவங்களும் வித்தியாசமா பாக்குறத அவங்க எப்படி புரிஞ்சுக்குறாங்க? இல்ல, அவங்கள இந்த உலகம் எப்படி பாக்கனும்னு விரும்புறாங்க? இப்படி அவங்களோட மனசைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னு நெனைக்குறேன். நான் அவங்களோட பேச முயற்சி பண்ணி பாத்திருக்கேன். நான் பேசுறத அவங்களால புரிஞ்சுக்க முடியல, அவங்க பேசுறத என்னால சுத்தமா விளங்கிக்கவே முடியல. அவங்களோட அக உலகத்தைப் பத்தி நீங்கதான் எனக்குச் சொல்லிக் கொடுக்கனும்”

அவர் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பின்னால் சென்று இளவயது சீமாட்டியாக துள்ளித் திரிந்த நாட்களை அவர் நினைத்துப் பார்த்திருக்கக்கூடும். இந்த குறைபாட்டுடைய குழந்தைகளை தான் கண்டு துன்புற்றுக் கடந்து வந்த பாதைகளின் வெக்கையை நினைத்து ஒருவேளை அவர் பேச்சற்று நின்றிருக்கவும்கூடும். அப்படியே நிமிர்ந்து அந்த பன்னீர்பூ மரத்தை பார்த்துக் கொண்டார். அந்த மரமும் தானும் ஒன்றுதான், அந்த மரத்திலிருந்து விழுகிற பூவைப் போலத்தான் என் வாழ்வும் என்று அவர் சொல்லுவதைப்போல இருந்தது. அந்த பூக்களிலிருந்து கமழுகிற நறுமணத்தைப்போல அவர் கடந்தகால வாழ்விலிருந்து வாசமிக்க நாட்களை என்முன்னே அவிழ்க்கத் துவங்கியபோது நான் பேச்சற்று அருகே அமர்ந்து கவனிக்கலானேன்.



“முன்னாடிலாம் இந்தக் குழந்தைகளப் பத்தி பெருசா விழிப்புணர்வு கெடையாது. அப்படி தாமதமா கண்டுபிடிச்சாலும் அவங்க கொறைய அப்படியே ஏத்துக்கிட்டு அவங்களோட ஒன்னா இருந்து வாழ்ந்துட்டு போயிடுவாங்க. ஆனா இப்போ எல்லாரும் படிச்சு ஓரளவு விழிப்புணர்வு வந்ததுக்கு அப்புறமா கொழந்தைங்கள இப்போ மூணு, நாலு வயசிலயே இங்க அழைச்சுட்டு வந்திடுறாங்க.”

“ஆரம்பத்துல எல்லா குழந்தைங்க மாதிரியே இவங்களும் சத்தம்போட, அம்மா இல்லைனா கத்தி அழ, அம்மாவைப் பாத்ததும் பொங்கி சிரிக்கன்னு இருக்கவும் அவங்களுக்கு ஏதும் வித்தியாசமா தெரியுறதில்ல. போகப் போக அவனை பேரை வச்சு கூப்பிட்டு சத்தம் போட்டு பாத்து எதிலேயும் திரும்பிப் பாக்காதப்போ அதிர்ச்சியாகி அப்புறமாத்தான் கொழந்தைங்களோட குறைபாட்டையே புரிஞ்சுக்குறாங்க. அந்தக் குழந்தைகளை இங்க அழைச்சுட்டு வர்ற வரைக்கும் இந்த குழந்தைங்க என்ன கேக்குறாங்க, என்ன சொல்ல வர்றாங்கன்னு பெத்தவங்களுக்குப் புரியுறதில்ல. ஒரு புத்துமதிப்பாதான் இதா, இல்ல இதான்னு கேட்டு கேட்டு ஒரு சாய்ஸூலதான் அவங்களுக்கு கேட்டது கெடைக்குது. சில நேரத்துல அவங்க எது விரும்புறாங்களோ அது கெடைக்காம எதிரில இருக்கிறவங்க என்ன புரிஞ்சிகுறாங்களோ அதுதான் கெடைக்கிறப்போ இந்த கொழந்தைங்க நாம விரும்புறது எதுவுமே நமக்கு கெடைக்கிறதில்லன்னு ஆரம்பத்துலயே புரிஞ்சுக்க ஆரம்பிச்சுடுறாங்க.”

“இந்தக் குழந்தைங்களுக்கு அடம் பிடிச்சு அழக்கூட தெரியுறதில்ல. இவங்களால ‘அம்மா’ன்னு கத்தி அழத் தெரியாது. நம்மள மாதிரி ஹா.. ஹா.. ன்னு சத்தம் போட்டு சிரிக்கவும் தெரியாது. இவங்களோட சிரிப்புலயும் சரி, அழுகையிலும் சரி ஒரு மொளனம் இருந்துகிட்டேதான் இருக்கும். அப்படி என்னதான் இருந்தாலும் மூணு வயசு வரைக்குமே இந்தக் குழந்தைங்களால அம்மாவை விட்டு வேற யாரோடயும் ஒட்ட முடியாது. அம்மாதான் உலகமே. அவங்க மட்டும்தான் எல்லாமேன்னு இருப்பாங்க. அப்படியொரு சூழல்ல இருந்து வந்து பள்ளிக்கூடத்துல சேத்திட்டு போறப்போ இந்தக் குழந்தைங்க அழுதுப் பாப்பாங்க, சாப்பிடாம கொள்ளாம அடம் பிடிப்பாங்க. அப்புறம் ஒரு நாள் ரெண்டு நாள் கழிச்சு நம்மளை பாக்க இனி அம்மா வரமாட்டாங்க, இனி நமக்கு யாருமே கெடையாதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுருவாங்க. அந்த சமயத்துல அவங்க தங்களை ஒரு அநாதை மாதிரி உணருவாங்க.”

“அந்த பிஞ்சு மனம் மாறாத கொழந்தைய பாக்கும் போதுலாம் மனசுக்கு அவ்ளோ வேதனையா இருக்கும். அவனை மாதிரியே காது கேக்காம வாய் பேசாம இருக்கிற கொழந்தைங்களோடதான் அவனும் இருக்கிறதால மத்த குழந்தைங்க கூடயும் அவனால பேச முடியுறதில்ல. அந்தக் குழந்தைங்க கூட விளையாடுறதுக்குகூட ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாதே. அப்ப அவங்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை நாங்கதான். நாங்கதான் அவங்களுக்கு பசிக்குதா அதை இப்படி கைய வாய்கிட்ட வச்சு கேக்கனும், தாகமா இருக்கா விரல இப்படி வச்சு சொல்லனும்னு கத்துக் கொடுப்போம். ஆரம்பத்துல வாய வாய பாத்துக்கிட்டு இருப்பாங்க, என்னன்னே புரிஞ்சுக்கத் தெரியாம அழுவாங்க. அவங்களோட அழுகை சத்தம் மட்டும்தான் காதுல விழுந்துகிட்டே இருக்கும். அவங்களை சமாதானப்படுத்த எங்ககிட்ட எந்த வார்த்தையும் இருக்காது. எந்த போலி நம்பிக்கையும் அவங்களுக்கு சொல்லி சரிகட்ட முடியாது. அதுக்கு நெறைய பொறுமை வேணும்.”

“அவன் கொஞ்சம் கொஞ்சமா எங்களை புரிஞ்சுக்க ஆரம்பிப்பான். ஒவ்வொரு தடவையும் சாப்பாடு ஊட்டி விடும்போது சாடை போட்டு சாடை போட்டுத்தான் சொல்லிக் கொடுப்போம். ஒவ்வொரு சின்னச் சின்ன விசயமும் தெரிஞ்சுக்க மத்த சாதாரண குழந்தைங்களவிட ரொம்பவும் அவன் மெனக்கெடனும். மத்த டீச்சருங்களைவிட நாங்கதான் அதிகமா ஒழைக்கனும். அவன் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க ஆரம்பிச்சதும், அப்படி புரிஞ்சுக்கிட்டதை எங்ககிட்ட சாடை போட்டு பேச ஆரம்பிச்சதும் அவனுக்குள்ள அப்போ என்ன தோணுமுன்னா, நான் சொல்லுறத புரிஞ்சுக்குறவங்க, என்ன அப்படியே முழுசா ஏத்துக்கிட்டவங்க அப்படின்னு எங்க மேல அப்படியொரு பாசமா இருப்பான்.”

“உண்மையைச் சொல்லனும்னா பெத்தவங்களவிட டீச்சரைத்தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எங்களை அக்கா, அண்ணான்னுதான் இந்தக் குழந்தைங்க எல்லோருமே கூப்பிடுவாங்க. டீச்சருங்க மேல அவ்ளோ அன்பா இருப்பாங்க. அந்த அன்புள வெகுளித்தனம் மட்டும்தான் இருக்கும். அவங்க ரொம்பவும் வெள்ளந்தியா இருப்பாங்க. டீச்சருங்க யாராவது புதுசேலை கட்டிகிட்டு வந்தா பக்கத்துல போய் நீ ரொம்ப அழகா இருக்க, சேலை புதுசான்னு சொல்லி தொட்டுத் தொட்டு பாப்பான். இதை சொன்னா டீச்சர் அடிப்பாங்க திட்டுவாங்கன்னுலாம் அவனுக்குத் தெரியாது. அவங்களோட மனசுக்குள்ள ஒன்னுமே இருக்காது. அப்படியே மனசுக்குள்ள இருக்கிறதை கண்ணாடியா வெளிய காட்டிருவாங்க”.

“யாராவது எதாவது சொல்லிட்டா, திட்டிட்டா, அடிச்சுட்டா உடனே ஓடிவந்து அவனுக்கு புடிச்ச டீச்சருங்க கிட்டபோய் அவங்க சேலையை புடிச்சி இழுத்து, சட்டை புடிச்சு, கையத் தொட்டு, கண்ணத்தை தடவி, அவனைப் பாரு என்னை அடிக்குறான்னு அப்பாவியா சொல்லுவாங்க. அவங்களுக்கு அப்படி தொட்டுப் பேசக்கூடாதுன்னுலாம் தெரியாது. நாங்களும் செல்லமா அவன தட்டிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து வளப்போம்.”

“இந்தக் கொழந்தைங்க எப்பவுமே அன்புக்கு கட்டுப்பட்டவங்க. எப்பவுமே அன்புக்காக ஏங்கிட்டுதான் இருப்பாங்க. அவங்ககிட்ட அன்பா சொன்னா எந்த விசயத்தையும் முடிச்சுக் காட்டுவாங்க. ஏதாவது கோபமா சொல்லிட்டா அவங்களால அதை தாங்கிக்கவே முடியாது அப்படியே ஒடிஞ்சு போயிடுவாங்க.”

“இங்க இருந்து லீவுக்கு வீட்டுக்கு ஆசையா போகனும்னு போவாங்க. ஆனா போயிட்டு ரெண்டே நாளுல இங்க வர்றேன்னு அடம் பிடிப்பாங்க. இங்க வந்ததும் எங்ககிட்ட வந்து, வீட்டுல யாருமே என்கிட்ட பேச மாட்டேங்குறாங்கன்னு அழுவான். அம்மா அப்பா வேலைக்கு போயிடுறாங்க, கூடப் பெறந்தவங்க வெளியில வெளையாடப் போயிடுறாங்க, இவங்களும் விளையாடப் போனா உனக்கு காது கேக்காது நாங்க வெளையாடுற வெளையாட்டு உனக்குப் புரியாதுன்னு யாரும் விளையாட்டுல சேத்துக்க மாட்டேங்குறாங்க. அதனால எப்படா பள்ளிக்கூடத்துக்கு வரலாம்னுதான் தம்பி இருப்பாங்க.”

“பெத்தங்களும்கூட சில வீட்டுல சரியா இல்ல. இந்தக் குழந்தைங்க போனா அவங்களையும் வீட்டுல ஒருத்தவங்களா நெனைக்குறதில்ல. கூடப் பெறந்தவங்க பேசுறவங்களா இருக்குறப்போ அவங்க கூடவே பெத்தவங்க பேசிக்கிட்டே இருக்கிறதால, என்ன நீ அவன் கூட மட்டும் பேசுற என்கூடயும் பேசு, அவனுக்கு மட்டும் நல்ல நல்ல ட்ரெஸ்ஸா எடுத்துக் கொடுக்குற எனக்கு எதுவுமே வாங்கித்தர மாட்டேங்குறேன்னு சொல்லி அழுவாங்க.”

“பெத்தவங்களும் ஏதாவது விழாவுக்கு போனா இவங்களை அழைச்சுட்டுப் போறதில்ல. இவன் சேட்டை பண்ணுவான் சுத்தி இருக்கிறவங்க கேலி பண்ணுவாங்கன்னு வெளிய எங்கேயும் அழைச்சுட்டுப் போகாததுனால இயல்பாவே வீட்டப் பத்தி அவனுக்கு பெருசா மதிப்பு இருக்குறதில்ல. இங்க பள்ளிக்கூடத்துக்கு வந்ததுமே அவங்க என்ன ஒதுக்குறாங்க, என்ன தீட்டா பாக்குறாங்கன்னு கையைத் தொட்டு தொட்டு காண்பிப்பான். அப்போ அவனை கட்டிப்பிடிச்சு கூடவே அழனும்போல இருக்கும். ஆனா நாமதான் அவனுக்கு ஆறுதலா இருக்கனும்னு மனச தேத்திகிட்டு அவனை சமாதானப்படுத்தி நாங்க இருக்கோம் வாடா பாத்துக்கலாம்னு நம்பிக்கை கொடுப்போம்.”

“இப்படி ஒவ்வொரு விசயத்துலயும் நாங்க கவனமா இருந்து அவனுக்கு ஒவ்வொன்னா விளக்கி விளக்கி அவன தெளிவுபடுத்தி மேல கொண்டு வருவோம். அவனுக்கு அந்த தெளிவு வரலைன்னா அந்த இடத்தவிட்டு நகர மாட்டான். அந்த விசயத்தையே யோசிச்சு யோசிச்சு மனசு ஒடைஞ்சு போயிடுவான். அப்படி ஒருகாலமும் அவங்க ஒடைஞ்சுபோய் உக்காருற அளவுக்கு நாங்க விட்டதில்ல. ஏன்னா அவங்களுக்கு நாங்கதான் உலகம்குற மாதிரி எங்களுக்கும் அவங்கதானே உலகம்.”



“இவங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்குறப்போ ரொம்பவும் கவனமா இருக்கனும். மத்த பள்ளிக்கூடத்துல இருக்குற மாதிரி போர்டுல எழுதிப்போட்டு அதை நோட்டுல எழுதிக்க சொல்லிட முடியாது. அவனுக்கு காது கேக்காது, அவன எழுத வச்சுதான் அதை சரிபண்ணனும். அவன் எழுதுனதை வச்சுதான் அவனே படிச்சு கத்துக்குவான். அவன் சரியா எழுதாம இருக்குற சரி பண்ணலைன்னா கடைசிவரை தான் எழுதுனதுதான் சரின்னு நெனைச்சு தப்பாவே எழுதிட்டு இருப்பான். ஒருபக்கம் எழுதனும், இன்னொரு பக்கம் அந்த வார்த்தைங்களை உச்சரிச்சுகிட்டே இருக்கனும், அப்புறம் கையில சாடை காட்டி விளக்கனும். இத்தனையும் செஞ்சாதான் அந்தக் குழந்தைங்களுக்கு கொஞ்சமாவது புரியும். மத்த குழந்தைங்க ஒரு நாளுல புரிஞ்சுக்குறத இவங்க கத்துக்கிறதுக்கு ஒரு வாரம் ஆகும். ஆனா அதுக்காக நாங்க கவலைப்பட்டதோ தயங்குனதோ கிடையாது. எங்க பிள்ளைங்க எப்பவுமே எங்களுக்கு சூப்பர்தான்.”

“அவங்கள கண்காணிச்சுக்கிட்டே இருக்கனும். அவங்களோட கண்ணும் கண்ணுமா வச்சு பாத்துக்கிட்டே இருக்கனும். நம்ம கண்ணுதான் அவனுக்கு பெரம்புக்குச்சி. அவன் நம்ம கண்ணுக்குத்தான் பயப்படுவான். கண்ணுல இருந்துதான் நாம என்ன நெனைக்குறோம் சொல்ல வர்றோம்ங்குறதையும் புரிஞ்சுக்குவான். அதனால நம்ம கண்ண அவங்கட்ட இருந்து அகட்டவே கூடாது. இங்க பள்ளிக்கூடத்துக்கு முதல்ல வந்ததும் பிள்ளைங்கதான் எனக்கு சாடை பண்ண சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க தப்புத் தப்பா சொல்லிக் கொடுத்து நம்மளை அந்தக் கொழந்தைங்க விளையாட்டுக் காட்டுவாங்க. அதனால நாம தான் அவங்ககிட்ட உசாரா இருக்கனும்.”

“அது ஏன்னா மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ், கொங்குத்தமிழ்ன்னு இருக்குற மாதிரி இவங்களும் ஒவ்வொரு ஊருக்கும் அவனவனுக்கு ஏத்த மாதிரி சாடையை கத்து வச்சுருப்பான். பொதுவா பள்ளிக்கூடத்துல கொழந்தைங்க பேசுனா சத்தம் வந்தா கண்டுபிடுச்சுருவோம். ஆனா இவங்க பேசுனா சத்தமே வராது. கையை இப்படி அப்படி காட்டிக் காட்டி என்ன பேசனுமோ அதை நாலு அசைவுல சொல்லி முடிச்சுருவான். அதுனால வகுப்புல ரொம்பவும் கவனமா இருக்க வேண்டியிருக்கும்”

“எங்க பள்ளிக்கூடமே அமைதியாதான் தம்பி இருக்கும். சத்தம் போடாத, பேசாத படின்னு நாங்க சொன்னதே இல்ல. வகுப்பறையே அமைதியாதான் இருக்கும். ஆனா வகுப்பும் பாடமும் நடந்துகிட்டேதான் இருக்கும். தம்பி, பள்ளிக்கூத்துல சத்தத்த கேட்டுக்கிட்டே இருந்தாதான் புள்ளைங்க எவ்ளோ சத்தமா பேசுறாங்க, நாங்க எவ்ளோ சத்தமா பேசனும்னு தெரியும். பள்ளிக்கூடமே பறவைங்க சத்தம் கேக்குற அளவுக்கு அவ்ளோ அமைதியா இருக்கிறப்போ எங்களுக்கு மத்தவங்க கிட்ட பேசுறப்போ எவ்ளோ சத்தத்துல அவங்ககூட பேசுறதுன்னுகூட தெரியாது.”

“நாங்க டீச்சருங்களா ரூம்முல உக்காந்து பேசும்போது மட்டும்தான் சத்தம் வரும். மத்தபடி அங்க சத்தத்துக்கு இடமே இல்ல. என்ன டீச்சர், சத்தமா பேச மாட்டேங்குறீங்கன்னுகூட சிலர் சொல்லுவாங்க. எனக்கு அது வித்தியாசமா தெரிய மாட்டேங்குது. டீச்சருங்க நாங்க இந்தக் குழந்தைங்களோட பேசிப் பேசி நாங்களும் மத்தவங்ககிட்ட பேசும்போது கைசாடை வந்திரும். சாப்பிட்ட வாங்கன்னு கூப்பிடுறதுக்குள்ள கை வாய்சாடை போடுறதுக்கு போயிடும். என்ன தம்பி செய்யுறது, அந்தக் குழந்தைங்களுக்காகவே வாழ்ந்தாச்சு. நானும் சரி, என்ன மாதிரியான டீச்சருங்களும் சரி, மத்தவங்க கூட எதார்த்தமா பேசுற மொழியை எப்பவோ இழந்துட்டோம். அப்படி இழக்கலைனா இந்தக் குழந்தைங்க உலகத்துக்குள்ள நாங்க போயிருக்கவும் முடியாது. நாங்களும் இந்தக் குழந்தைகளோட உலகத்துல இப்போ ஒன்னாயிட்டோம். எங்களாலயும் மீள முடியிறதுல்ல. அப்படி மீள வேண்டிய அவசியமும் இல்லியே.”

எங்கோ தேன்சிட்டு பாடிக் கொண்டிருந்தது. தூரத்தில் வண்ணத்துப்பூச்சி காற்றில் வட்டமிட்டபடி நடனமாடிக் கொண்டிருந்தது. மரங்கொத்திப் பறவையொன்று விடாமல் மரத்தைக் கொத்திக் கொண்டிருந்தது. சற்று தொலைவில் பூங்காவின் காவலாளி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். இந்த பன்னீர்மரம்கூட அவர் வளர்ப்பாகத்தானே இருந்திருக்க முடியும். இந்த மரம்கூட அவரது பிள்ளைதானே. யாருமில்லா பொழுதுகளில் பிள்ளையை அரவணைப்போதுபோல் இந்த மரங்களையெல்லாம் கட்டிப்பிடித்து ஒருவேளை அவர் முத்தமிட்டிருக்கவும்கூடும். இந்த ஆசிரியையும் அப்படித்தானே குறைபட்ட விதைகளை பெற்றோர்கள் கொண்டுவந்து கொடுத்தபோது தரிசு நிலமென்றும் பாராமல் பக்குவப்படுத்தி இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் நீருற்றி பாதுகாத்து வளர்த்து இந்நிலத்தில் தன்னந்தனியாய் வேரூன்றி வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று தோன்றிய போது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஆங்காங்கே சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களோடு வந்து விளையாடிபடி இருந்தனர். ஊஞ்சலில் இருந்து கீழே தவறிவிழுந்த குழந்தை ‘அம்மா’வென்று வீறிட்டு அழுது கொண்டிருந்தது. நடைபயிலுகிற இடத்தில் தந்தையோடு ஒரு குழந்தை கைகோர்த்தபடி கதைகளைப் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தது. கர்ப்பம் தரித்த தன் மனைவியைப் பிடித்தவாறு ஒரு தம்பதியினர் மெல்ல நடந்து கொண்டிருந்தனர். அங்கே தவறிவிழுந்த குழந்தையை அள்ளி அரவணைத்தபடி இருந்ததையும் தந்தையுடன் குழந்தை உலாவிக் கொண்டிருந்ததையும் அந்த தம்பதிகள் குறுகுறுப்போடு பார்த்துச் சிரித்துக் கொண்டனர். எனக்கு அழுகையாக வந்தது. இந்த உலகம் எப்போதும் போலவே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படி நம்பியபடியேதான் எல்லாமும் இருக்கிறது என்று நாமும் அந்தப் பாதையிலேயே நடந்து கொண்டிருக்கிறோம். பாதை தெரியாமல், போகின்ற பாதை புரியாமல், பாதை தவறி வழிமாறிப் போனவர்களென இப்பூமியில் பிறப்பால் பார்வை தெரியாமல், காது கேளாமல், வாய் பேசாமல் போனவர்களைப் பற்றிய கவலைகள் நம்மை எதுவும் செய்வதில்லை.

தெருநாய்களுக்கு சோற்றை வைத்துவிட்டு நகர்வதைப்போல உடல் குறைபாட்டோடு தென்படுகிற பிள்ளைகளுக்கு சில்லரைகளை வீசிவிட்டு அந்த குழந்தையின் எதிர்காலம் பற்றிய எந்த உறுத்தலுமின்றி கடந்து போகிற மனிதர்களுள் நானும்கூட ஒருவனாய் இருந்திருக்கிறேன் என்றெண்ணும்போது அவமானமாக இருந்தது. என்னையறியாமலே தொலைவில் இசைத்துக் கொண்டிருக்கிற பாட்டிற்கு பாதங்கள் தாளமிடுவதை எண்ணி வருத்தமாக இருந்தது. இக்குழந்தைகளுக்காகவென்று ஆங்காங்கே சிதைந்து கிடக்கிற உதவிக் கரங்களை எது ஒன்றுசேரவிடாமல் தடுக்கிறது, ஒரு மருத்துவரும் பள்ளி ஆசிரியரும் சேர்ந்தியங்கும்போது ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இக்குழந்தைகளின் வாழ்வைப் பற்றிய, எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை அக்கறைகளை பரிமாறிக் கொண்டு நம்மால் ஏதும் செய்துவிட முடியாதா என்று பரிதவிப்பதைப்போல ஏனையோரும் ஒன்றுசேருகிற புள்ளி என்று வாய்க்குமோ அப்படி ஒன்றுகூடுகிற நாள்தான் இக்குழந்தைகளுக்கான விடிநாளோ என்று மனம் தவித்துக் கொண்டது. தமிழ்ச்செல்வி அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக தண்ணீரை எடுத்துக் குடித்துக் கொண்டார். அவரது உதட்டிலிருந்து எஞ்சி தொடுக்கி நின்ற அந்தத் துளி கீழே சொட்டிபோது எந்த விதையாவது இதைக் கிரகித்துக் கொண்டு வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

“தம்பி, இந்தப் புள்ளைங்க இங்க இருக்குற வரைக்கும் இந்த உலகம் நமக்காக இருக்குன்னு நம்புறாங்க. இங்க இருந்து படிச்சு வெளியேறுனுதுக்கு அப்புறமாதான் இந்த உலகம் நம்மள ஏத்துக்குறதில்லைங்குற உண்மையவே புரிஞ்சுகிறாங்க. இங்க படிக்கிற வரைக்கும் அவன் எங்களோட பேசுறான், பழகுறான், எல்லாத்தையுமே பகிர்ந்துகிறான். இவன மாதிரி குறைபாட்டோட இருக்குற குழந்தைங்களோட நட்பா பேசி பழகுறான். ஆனா பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேறுனதும் திரும்பவும் இந்த சமூகத்துக்குள்ளயும் அவனோட வீட்டுக்குள்ளயும் தான் போக வேண்டியிருக்கு. அப்போ அவன் என்ன நெனைக்குறான்னு வெளிப்படையா அவனால் வெளிய பேச முடியுறதில்ல. மத்தவங்க என்ன செய்யுறாங்க அவனைச் சுத்தி என்ன நடக்குதுன்னு யாரும் இவனுக்குப் புரியும்படியா பகிர்ந்துக்கிறதில்ல. அதனாலயே அவன் தன்னைத் தனியனா உணருறான். தனக்குன்னு யாருமில்லைன்னு திரும்பத் திரும்ப நெனைச்சு பொலம்புறான்.”



“இந்த சமூகம் அவனை குறைபாட்டோடதான் பாக்குது. அவனை ஒதுக்க நெனைக்குது. அவனால இந்த சமூகத்தோட ஒன்னாக முடியல. எதுலயும் கலந்துக்க முடியல. எந்த விழாவுக்கு போனாலும் அவன் தனியா ஒரு மூலையில போயிதான் உட்காருறான். அவனோட பேச, பழக, புரிஞ்சுக்க யாருமில்லாதப்போ தேம்பித் தேம்பி அழறான். நான் பொறந்ததே வேஸ்ட், நான் பயனில்லாதவன்னு நெனைக்குறான். அதுக்குலாம் காரணம் என்னான்னு தெரியுமா தம்பி?”

“இங்க நாங்க நல்லா சொல்லிக் கொடுக்குறோம். எல்லாரையுமே பாஸ் பண்ண வச்சுடுறோம். அவன் அதுக்கு மேலயும் காலேஜூக்குப் போய் இன்ஜினியரிங், டிகிரிலாம் படிக்குறான். ஆனா அவன் படிச்சு வெளியில வர்றப்போ அவன் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிறதில்ல. அரசு கல்லூரிகள்லகூட இவங்களுக்குன்னு இருக்கிற கொஞ்ச படிப்ப மட்டும் தான் படிக்க விடுது. என்ன படிச்சு முதல் மாணவனா வந்தாலும் பிள்ளைங்க அரசு வச்சுருக்க டிகிரியைத்தானே படிக்க வேண்டியிருக்கு. கடைசில அவங்க வெல்டிங், பிட்டர் வேலைக்குத்தான் போறாங்க. அப்படியே படிச்சு முடிச்சாலும் தனியாரோ அரசோ அவங்களுக்கு வேலை கொடுக்குறதில்ல.”

“தனியார் கம்பெனிங்க இவங்கள வேலைக்கே எடுக்க மாட்டேங்குறாங்க. இவங்கள வச்சு எப்படி நாங்க வேலை வாங்குறது, வெளிய நாங்க போயிட்டு ஏதாச்சும் அவசரம்னு போன் பண்ணி அவங்கட்ட ஒன்னு சொல்ல முடியுமான்னு கேக்குறப்போ நம்மளாலயும் எதுவும் பேச முடியுறதில்ல.”

“அரசு மாற்றுத்திறனாளிங்க கோட்டான்னு ஒன்னு வச்சுருக்கு. ஆனா இவங்களுக்கு தொண்ணூறு சதவீதம் குறைபாடுன்னாதான் மாற்றுத்திறனாளின்னே ஒத்துக்குது. அப்படி மாற்றுத்திறனாளின்னு சர்ட்டிபிகேட் வாங்குனாலும் அரசுகூட வேலை கொடுக்க மாட்டேங்குது. தம்பி, பார்வை இல்லாவதங்களுக்குகூட அய்யோ பாவம்னு வேலை கெடைச்சுருது. இவங்க மேல அந்த பரிதாப நிழல்கூட விழுறதில்ல.”

“நீங்க அரசு அலுவலகத்துல எங்க வேணும்னாலும் போயி பாருங்க தம்பி. பார்வையில்லாதவங்க இருப்பாங்க, கைகால் பாதிக்கப்பட்டவங்க இருப்பாங்க. ஆனா காது கேக்காம இருக்கிறவங்களை பாக்க முடியாது. ஏன்னா பார்வையில்லாதவங்களைகூட இங்க வாப்பான்னு கூப்பிட்டு வேலை வாங்கிற முடியுது. இவங்கள கூப்பிடனுமுன்னா பக்கத்துல போயிதான் கூப்பிட்டு வேலை வாங்க வேண்டியிருக்கு. இல்லைன்னா, பக்கத்துல இருக்குறவங்கள கூப்பிடச் சொல்லி வேலை பாக்க வேண்டியிருக்கு. இதனால அவங்க படிச்ச படிப்புக்கு வேலையும் கெடைக்காம, அரசு வேலையும் கெடைக்காம ஏதாவது கூலி வேலைக்குத்தான் தம்பி போறாங்க.”

“பசங்க, அவங்க அப்பாவோ சொந்தக்காரங்களோ பாக்குற கூலி வேலைக்குப் போயிருறாங்க. அதிலேயும் அடிமட்ட வேலைதான் அவங்களுக்குக் கெடைக்குது. இவங்களுக்குன்னு புரோமோசன், சமபள உயர்வுலாம் எதுவும் கெடையாது. அப்படியே காலம் பூராம் இதே வாழ்க்கைதான். பொண்ணுங்களும் என்ன படிச்சாலும் வேலை கெடைக்கிறதில்லைங்குறதால தையல்மிஷினை வாங்கி போட்டு கடைசில துணிய வாங்கி தச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.”

“இந்தக் கொழந்தைங்க எல்லாம் ரொம்பவும் சீக்கிரமாவே உணர்ச்சிவசப்பட்டு அழுதுருவாங்க, இளகுன மனசு அவங்களுக்கு. எதுனாலும் அவங்க எங்ககிட்டதான் வந்து சொல்லி அழுவாங்க. பாவம், எதையும் சொல்லி அழக்கூட அவங்களுக்குத் தெரியாது. கைசாடை போட்டு, அவங்க நெனைக்குறத நமக்குப் புரிய வச்சு, அதை முழுச புரியும்படியா சொல்லிட்டோமான்னு சந்தேகமா பாத்துகிட்டு, முகத்த முகத்த பாத்து அழுதுகிட்டே இருக்குங்க. இவங்கள பெத்தவங்களும்கூட முழுசா புரிஞ்சுக்குறதில்ல. இவங்களுக்கும் மனசு இருக்கு, இவங்களுக்கும் ஆசைபாசம் இருக்குன்னு ஏத்துக்குறதில்ல.”

“இவங்க படிக்கிற காலத்துல டீச்சருங்க நாங்களும் அவங்கள மாதிரியே இருக்கிற மத்த நண்பர்களும்தான் அவங்க உலகமா இருக்குது. இதுமட்டும்தான் அவங்களோட உலகம்னு இருந்துட்டு வெளியில போய் மத்தவங்க ஏத்துக்காதப்போதான் உண்மைய புரிஞ்சுக்கிறாங்க. என்னதான் இருந்தாலும் நாங்க டீச்சருங்கதான. எங்க கிட்டயும் அவங்க ஓரளவுதான் பேசிப் பழக முடியும். ஏன்னா நாங்களும் இந்த சமூகம் சொல்லிக் கொடுக்குறத கேட்டுப் பேசி வளந்தவங்கதானே.”

“அதனால அவன மாதிரியே இருக்கிற புள்ளைங்க மட்டுமே அவனோட உலகமா மாறிடுது. அவங்கதான் எல்லாமேன்னு நெனைக்க ஆரம்பிச்சுடுறான். அதுதான் உண்மையும்கூட. அவங்க மொழியே தொட்டுப் பேசுற பாஷைதான். அவங்க ஒவ்வொருக்குள்ளும் கைசாடை போட்டு தொட்டுப் பேசுறப்போ அவங்களை அறியாமலே அந்த தொடுதல் வழியா கெடைக்கிற அதீத அன்பை நேசிக்கிறாங்க. அப்படி தொட்டுப் பேசுறது மூலமா கெடைக்கிற ஆசுவாசத்த அவங்களால புரிஞ்சுக்க முடியுறதில்ல. அந்த மாதிரி கெடைக்கிற அன்பு தொடர்ந்து இருக்கனும்னு ஏங்குறாங்க. அந்த ஏக்கமே அவங்களை ஒருத்தரை ஒருத்தர் நேசிக்க வச்சுடுது.”

“ரொம்ப சின்ன வயசிலயே அவங்க ஒருத்தர ஒருத்தர் காதல் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அது காதல்னு அவங்களுக்குத் தெரியுறதில்ல. அவங்களுக்கு காதல்னா எப்படியிருக்கும்கூட தெரியாது. ஆனா அவங்களோட உலகத்துக்குள்ள இருக்கிறவங்களாலதான் தன்னை புரிஞ்சுகிட்டு தனக்காக வாழ முடியும்னு நம்புறாங்க. ஆனா படிச்சு வெளியில போனதும் இதையெல்லாம் இந்த சமூகமும், பெத்தவங்களும் ஒடைச்சு சுக்கு நூறாக்கிப் போட்டுறாங்க.”

“தம்பி, இந்தப் பிள்ளைங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறத இவங்க யாருமே ஏத்துகிறதில்ல. சாதி ஜாதகம்னு பாத்து இந்தப் புள்ளைங்கள வீட்டுல ஒரு பொருளா அப்படியே வச்சுருக்காங்க. புள்ளைங்க எதுனாலும் எங்ககிட்டதான் வந்து சொல்லி அழுவாங்க. அப்படி ஒருநாள் என்கிட்ட படிச்ச புள்ள வந்து என்னை கட்டி புடிச்சுகிட்டு, டீச்சர் என்னை யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்க, நீ எனக்கு மாப்பிள்ள பாரு, எனக்கு கலியாணம் பண்ணி வைன்னு சொல்லி அப்படி அழுதுச்சு. பெத்தவங்க ஏன் தான் இவங்களோட மனசை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்கன்னு அப்போ கோபம் கோபமா வரும்.”



“இந்தப் பிள்ளைங்களே இப்படி பொறந்திருக்காங்க. இவங்களுக்கும் ஏம்மா சாதி ஜாதகம்னு பாத்துக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டாலும் பெத்தவங்க ஏத்துக்கிறதில்ல. இந்தக் குழந்தைகளுங்களுக்கு இவங்கள மாதிரியே குறைபாட்டோட இருக்கிறவங்களுக்கு கலியாணம் பண்ணி வையுங்க. அவங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்குவாங்கன்னு சொன்னா.. இல்ல, அப்படி பண்ணி வச்சா புள்ளையும் இதே மாதிரி கொறையோடதான் பெறக்கும்னு சொல்லி ஒத்துக்கிறதில்ல.”

“இப்படி பள்ளிக்கு வெளியே போன குழந்தைங்க மத்த நண்பர்களோடயும் தொடர்புல இருக்க முடியுறதில்ல. இவங்களால போன் பண்ணிலாம் பேச முடியாது. பேசனும்னா நேர்ல போயி பேசுனாதான் உண்டு. இந்த குழந்தைங்களால வெளியில சகஜமாவும் போக முடியிறதில்ல. இப்போ வீடியோ கால் வசதி வந்ததுக்கு அப்புறமா பிள்ளைங்க போன் பண்ணி சாடை போட்டு பேசிக்குறாங்க. இப்படி இவங்களோட உலகத்துல இருக்கிற டீச்சர்களோட, நண்பர்களோட பேச முடியாம, தன்னோட உணர்வுகளை யாரோடயும் பகிர்ந்துக்கவும் முடியாம இருக்கிறப்போ அவங்கள சுத்தி இருக்கிற உறவினர்களும், சமூகமும் அவங்களை தவறா பயன்படுத்திக்குது. இந்தக் குழந்தைங்களை பாலியல் தொந்தரவு பண்ணா யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு வலுக்கட்டாயமா தொந்தரவு பண்றதும் நடக்கத்தான் செய்யுது. அதேசமயத்துல இவங்க தனிச்சுவிடப்படுறதுனால அன்புக்கு ஏங்கிக் கிடக்குற இந்த அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்தி சீரழிக்கிறதும் நடக்கத்தான் செய்யுது.”

“இப்படி அவங்களுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாம, படிச்ச படிப்புக்கு சரியான வேலை கிடைக்காம, நெலையான ஊதியம் ஏதும் இல்லாம ஏதோ தனிச்சு கெடக்குற தீவுபோல இந்த சமூகத்துல ஒடுங்கிப்போய் இவங்க எல்லாரும் வாழ்ந்துகிட்டு இருக்காங்க.”

“தம்பி, இவங்களுக்கு அரசு கொடுக்கிற மெஷின் ஒன்னத்துக்குமே ஆகுறதில்ல. தவறி ஒருமுறை விழுந்தாக்கூட அதை அப்படியே கீழ தூக்கிப்போட்டுற வேண்டியதுதான். அப்படியே சரிபண்ணலாம்னு பாத்தாலும் ஐயாயிரம் வரைக்கும் செலவாகுறதால அதுக்கும் இவங்ககிட்ட வசதியில்ல. அதனால கடைசி வரைக்கும் மெஷின் போடாமத்தான் படிப்ப ஓட்டுறாங்க. அதுவும் இந்த குழந்தைங்க மெஷினோட வெளிய போனா ஏதோ இவங்கள ஒதுக்குற மாதிரியே பாக்குறதால இவனும் இந்த மிஷினை போட்டு வெளிய போகுறத அவமானமா நெனைச்சுக்கிட்டு அதை பையில எடுத்துப் போட்டுக்கிறான். இது எல்லாம் மாறனும்மா இந்த சமூகம் நெனைக்கிறதும் கூடவே சேர்ந்து மாற வேண்டியிருக்கு.”

“தம்பி, இவங்கள பத்திச் சொல்ல என்னயிருக்கு??? அவங்கள சுத்தி எல்லாமே வெறும் சூன்யமாத்தான் இருக்கு. இப்படி முப்பத்தியொரு வருசம் இவங்களுக்காக வாழ்ந்து எதுவுமே மாறுன மாதிரி தெரியல. அவங்களோட வாழ்க்கையில எதையும் நான் மாத்தின மாதிரியும் தெரியல. எனக்கே இப்போ வெறுமையாதான் இருக்கு. அவங்களோட வாழ்க்கையே ஒரு சூன்யம்தான். நாம அவங்களுக்காக என்ன செஞ்சாலும் அது குறைபாட்டோட இருக்கிறதாதான் இருக்கும். இது எல்லாம் மாறனுமுன்னா அவங்களையே மாத்துனாதான் முடியும். இப்படிப்பட்ட குறைபாட்டோட பெறக்காமலே இருந்தாத்தான் முடியும். ஆனாலும் இப்படி பொறந்த குழந்தைகளை நாம அரவணைச்சு அவங்களும் இங்த உலகத்துல வாழ தகுதியானவங்கதான்னு ஏத்துக்க வச்சு வாழ வைக்க வேண்டிருக்கே!” என்று சொல்லி முடித்த போது ஒருதுளி கண்ணீர் இரண்டு கண்களிலும் துளிர்த்து நின்றது.

ஆம், அரசோ நாமோ அவர்களுக்காக என்ன செய்தாலும் அது குறைபாடுடையதாகத்தானே இருக்கும்! இந்தக் குழந்தைகளே பிறக்காமல் இருக்க போதிய ஜெனிடிக் கவுன்சிலிங் வசதிகளெல்லாம் வளர்ச்சியடைய வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இப்படி பிறந்த குழந்தைகளை பயிற்சி கொடுத்து படிக்க வைத்து எல்லாமே இறுதியில் சூன்யமாய் போவதைவிட இக்குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து காக்ளியார் சிகிச்சை செய்து கொண்டால் நிச்சயமாக இக்குழந்தைகள் நம்மைப்போல சாதாரண மனிதர்களாக இந்த சமூகத்தின் நீரோட்டத்திலேயே அவர்களும் ஒத்திசைவாக வாழ முடியுமென்று மனம் ஏனோ பெருமூச்செறிந்து கொண்டது.

கண்களில் துளிர்த்த கண்ணீர் நழுவி விழுந்து மண்ணுக்குள் புதைந்தது. இந்த இருதுளிகளிலிருந்தும் இருவிதைகள் முட்டி முளைக்கக்கூடும் என்று மனம் அப்போது சமாதானம் சொல்லிக் கொண்டது. அங்கிருந்து நகருகையில் தமிழ்செல்வி ஆசிரியை அவர்கள் என் தலைமீது கைவைத்து ஒரு வனாந்திரத்தையே உருவாக்கிய யானையின் ஆசீர்வாத்தைப்போல இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்து ஆசி வழங்கினார். அவரது கண்கள் மூடிய சாந்தம் வழிந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கடவுளை நாம் தேடிக் கொண்டிருக்கும்வரை நாம் எங்கும் கண்டடையப் போவதல்லை என்றே தோன்றியது. அவர் தன் பணிக்காலத்தில் எத்தனையாயிரம் குழந்தைகளின் வாழ்வை வழிப்படுத்தி ஒளியேற்றியிருக்கிறார் எனும்போது கடவுளை நேரில் கண்ட திருப்தியுடனும் இந்த குழந்தைகளின் வாழ்வு கண்முன்னே இருண்டு போய் கிடக்கிற உண்மையைக் கண்ட சோகத்திலுமாக விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.

சில வாரங்கள் நினைவிலும் கனவிலுமாக பகலிரவாக இக்குழந்தைகளின் ஞாபகத்திலேயே பிதற்றிக் கொண்டிருந்த நான் ஒருநாள் அப்படியொரு ஆறு வயத்திற்குள்ளாக பிரியா என்கிற குழந்தை இருப்பதை அறிந்து மீண்டும் உயிர்பெற்றெழுந்தேன். அப்படியாக அக்குழந்தையைச் சந்தித்த அனுபவங்களையும் அந்தக் குழந்தையை சந்தித்து சிகிச்சைக்குத் தயார் செய்ததன் வழியே நான் கண்டுகொண்ட உண்மையின் தரிசனங்களையும் நீங்களுமே தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

தொடரும்..

முந்தைய தொடர்களை படிக்க: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *