ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்காளீஸ்வரியின் உலகம்..

அந்தியில் மேற்கு வானம் சிவந்தபடி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனும் அடிவானத்தின் மேகக்கூட்டங்களுக்குள் ஒளிந்து ஒதுங்கி மெல்ல மெல்ல மலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. வெயில் கலைந்து செல்லத் துவங்கிய அந்தக் கணத்தில் வீசிய மெல்லிய காற்று வேப்ப மரங்களினூடே அவற்றின் கிளைகளை பிள்ளையின் தலையைக் கோதுவதுபோல மெல்ல அசைத்துவிட்டுக் கொண்டது. அவற்றின் வேப்பங்காய்களும் பழங்களும் தொட்டிலுக்கு ஆடுகிற குழந்தையைப்போல, குழந்தையின் காதில் ஊசலாடும் காதணியைப் போல நிதானமாக அசைந்தபடி இருந்தன. அது வேப்பம் பூக்கள் பூத்துக் குழுங்கிக் கொண்டிருக்கிற காலகட்டம். மத்திய வயது பெண்மணி ஒருவர் தன் மகளுடன் வேப்பமரத்திற்கு கீழே நின்றபடி வெள்ளாடுகள் எக்கி எக்கி கிளைகளை மடித்துத் திண்ண முயலுவதைப்போல வேப்பங்கிளைகளை எட்டிப் பிடித்து ஒடித்துக் கொண்டிருந்தார்.

சாலையோரமாக தாழ்வாரம் இறக்கப்பட்ட அந்த தையல்கார அம்மாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு காளீஸ்வரியைப் பற்றி விசாரித்த போதே அவர் கைகாட்டிய திசையிலிருந்து அவர்களிருவருமாக வரத் துவங்கியிருந்தனர். தாயும் பிள்ளையுமாக மஞ்சள் சிவப்பு கலந்த இறை நம்பிக்கையான ஆடைகளை உடுத்தியிருந்தனர். கழுத்தில் உருளுகிற சிவப்புப் பாசிமணி மாலையானது பசலைக்கீரையின் சிவப்புக்காய்களைப்போல கழுத்தில் அணி அணியாக படர்ந்திருந்தது. அவர்கள்தான் காளீஸ்வரியும் அவளது அம்மாவும் என்றால் அவர்களது வேண்டுதல் நிஜத்தில் எதற்கானதாக இருக்கும்? அந்த வேண்டுதல்கூட காளீஸ்வரியின் பேச்சு மீண்டு வருவதற்காகத் தான் இருக்குமா? அவர்களது விரதகாலமும், உடலை வருத்திக் கொள்கிற வேண்டுதல்களும் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்?

அந்த அம்மாவின் வேண்டுதல்கள்தான் அப்படியானதென்றால் இந்த உலகின் எந்த ஆசாபாசங்களையும் அறிந்திடாத இந்த அப்பாவி ஏழைக் குழந்தையின் வேண்டுதல்கள் தான் என்ன? தனக்குப் பேச்சு வரவில்லையென்றோ, காது கேக்காது என்றோ, அதுவெல்லாம் ஒரு குறையென்றோ, அதை இந்தக் கடவுள் குணப்படுத்திவிடுவார் என்றோ அல்லது இத்தகைய குறைபாட்டுக்கே இந்தக் கடவுள்தான் காரணமென்றோ அவளுக்குத் தெரியுமா? எதையும் என்னால் யோசித்து விளங்கிக் கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. நான் அந்த கட்டாந்தரையின் சாலையோரமாக நின்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகில் நெருங்கிவர என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் அவர்களையும் விசாரித்து நிச்சயப்படுத்திக் கொண்டேன்.

அவரது வெறுமை படிந்த முகத்தில் எந்தச் சலனமும் காட்டாது வெறுமனே ‘வாங்க சார்!’ என்றபடியே வீட்டை நோக்கி அழைத்துச் சென்ற பாவனை ஏனோ உள்ளுக்குள் உறுத்தவே செய்தது. ஒருவேளை இந்தப் பிள்ளைக்கும் நம்மால் ஏதும் செய்ய முடியாது போய்விடுமோ என்கிற பதட்டமும் பரிதவிப்புமாக மனதைப் போட்டு உலுக்கிக் கொண்டது. தாயின் பின்னே முகத்தை உரசியபடியே செல்கிற அதன் கன்னுக்குட்டியைப்போல அம்மாவின் சேலையைப் பிடித்தபடியே அவள் துள்ளிக் குதித்துக் கொண்டு செல்வதை தூரத்திலிருந்தே நான் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது குழந்தைத்தனமான செய்கைகளைக் கண்டு இரசிப்பதா அல்லது இந்தப் பிள்ளைகளையெல்லாம் போய் இப்படிப்பட்ட குறைபாட்டோடு காண வேண்டியதாயிற்றே என்று வருந்தித் துன்புறுவதா என்கிற அவஸ்தைக்குள் நான் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன்.

ஏதோ இவ்வுலகிலுள்ள எல்லா மனிதர்களும், பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் நன்றாகத்தான் இருப்பதாக நாம் எண்ணிக் கொள்கிறோமா அல்லது நம் பிரச்சனையே பெரிதாக இருக்கையில் இக்குழந்தைகளைக் கவனித்து அவர்களுக்காக அழுது பாராட்ட நமக்கு எங்கே நேரமிருக்கிறது என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு கடந்துவிடுகிறோமா என்று தெரியவில்லை. நம்மைச் சுற்றித்தானே இத்தனை நாளும் இத்தனை குழந்தைகளும் குறைபாட்டாடு பிறந்து யாருமே கவனிப்பாரற்று நிராதாதராவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தெருக்களிலும், பேருந்து மற்றும் இரயில்நிலையங்களிலும் கண்டும் காணாதவாறு கடந்து செல்ல நாம் எத்தனையோ முறையாக நல்லபடியாக பழகிக் கொண்டோம். அவர்களின் துயரம் நம் மீது படிந்துவிடாதவாறு தப்பிச் செல்ல நம்மால் இயன்ற எல்லா வழிமுறைகளையும் நாமும் கையாண்டபடியே தானே இருக்கிறோம்.

தலையை திருப்பிக் கொண்டால் நம் கண்களை மூடிக்கொண்டால் அவர்களின் துயரங்களை காணாது ஒருவேளை தப்பித்துக் கொள்ளக்கூடும் என்று நாம் நினைப்பது எத்தகைய அபத்தமான விசயம். அப்படித்தானே நாம் இன்றுவரையிலும் இக்குழந்தைகளை கடந்து வந்திருக்கிறோம். ஒரு சாலையை கடக்கின்ற போது வருகிற சிறு பதட்டம்கூட இக்குழந்தைகளைக் கடக்கையில் வருவதில்லையே! கண்களை மூடிக்கொண்டு இருளைக் காண்பதும் இருளில் விழித்துக் கொண்டே அந்த இருட்டைக் காண்பதும் ஒன்றாகிவிடுமா என்ன?

இக்குழந்தைகளைப் புரிந்து கொள்ள முயலுகிற ஒவ்வொரு செயலும் கண்களை மூடியபடி பார்வையற்றவனின் துயரத்தைக் காண முயலுவதைப்போல, காதுகளை பொத்திக் கொண்டு காதுகேளாதோரின் துயரங்களைக் காண முற்படுவதைப் போலவேதான் இருக்கின்றன. இப்படித்தானே இதுநாள் வரையிலும் நானும் சகமனிதருள் ஒருவனாய் இவர்களையெல்லாம் கண்டும் காணாததுமாய் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கையில் வெட்கத்தில் தலை தாழ்த்திக் கொண்டேன்.காளீஸ்வரியைக் கடந்து செல்கிற அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எவரது முகத்திலும் அவளது குறையைப் பற்றிய எந்தத் துயரமும் இல்லை. அவளை குறையுள்ள குழந்தையாகவே முழுமனதாக ஏற்றுக்கொள்ள அவர்கள் என்றோ முடிவு செய்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. அவர்களைப் பொறுத்தவரையிலும் இக்குழந்தையின் துயரம் அவர்களுடையது. ஆதலால் அக்குறைகளை போக்க போராட வேண்டியதும், அக்கறை கொள்ள வேண்டியதும், கவலைப்பட வேண்டியதும் எல்லாமே அவர்களுடைய பொறுப்புதான் என்பதாகவே அவளது மேல் எந்தக் கரிசனப் பார்வையுமின்றி அருகிலுள்ளவர்கள் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். குறைபாடுடைய எந்தக் குழந்தையுடனும் வாழப் பழகிவிட்டால் அப்படியே அவர்களை ஏற்றுக் கொண்டு வாழத் துவங்கிவிடுகிற உளவியலை எண்ணிப் பார்க்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது. அதேசமயத்தில் காளீஸ்வரியின் அம்மாவைச் சந்தித்த முதல் தருணத்திலேயே எங்களது இருவரது பார்வையும் சந்தித்துக் கொள்வதை தவிர்த்துவிட்டு அவர் எட்டித் தூர நகரத் துவங்கிய செயலை எண்ணி எண்ணி மேலும் குழம்பியவனாக நான் அவர்களைப் பின்தொடர்ந்தபடி சென்று கொண்டிருந்தேன்.

உண்மையில் ஒரு மருத்துவர் வீடு தேடி வருகிறபோது அடைகிற சிறு பதட்டம்கூட அவரிடம் இல்லை. தன் பிள்ளைக்காகத்தான் அவர் வந்திருக்கிறார் என்கிற சிறிய சலனம்கூட அவரிடம் தென்படவில்லை. அமைதியாக முன்னே நகர்ந்து கொண்டிருந்த அந்த அம்மாவைப் பார்க்கிற போதெல்லாம் தன் பிள்ளையைக் குணப்படுத்துவதற்காகத் தானே வலிந்து வருகிற மருத்துவருக்கு கொஞ்சம் உதவியாய் இருந்து தன் பிள்ளைக்கு எப்படியாவது ஒரு வழியைத் தேடி கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற இயல்பாகவே வரக்கூடிய உந்துதல் கூட ஏன் அவருக்கு வரவில்லை என்பதும் எனக்குப் புரியவில்லை. தன் மனக்கவலையெல்லாம் புலம்பல் மொழியில் பேசிவிட்டு தன் துயரத்தை ஆற்றிக் கொள்ளத் துடிக்கிற தாயைப்போலக்கூட ஏன் அவர் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் அமைதியாய் என்னைக் கடந்து சென்றுவிட்டார் என்கிற கேள்வியும் ஒருவித பதட்டத்தை என்னுள் உருவாக்கியிருந்தது.

வாசல் வெளியே படியில் அமர்ந்தபடி அவரது மூத்தமகன் நிலைக்கதவில் சாய்ந்து இனிமையான கனவொன்றை விழித்துக் கொண்டே காண்பதைப்போல மௌனமாக சிரித்துக் கொண்டிருந்தான். நெற்றியில் திருநீர் பட்டையுடன் மேல் சட்டையின்றி எதிரேயிருந்த சுவற்றையே அவன் வெறுமையாக பார்த்தபடி இருந்த தோற்றம் மீண்டும் அவன் கைக்குழந்தையாகிவிட்டதைப் போன்று அழகாயிருந்தான். எங்களது வருகையோ அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அவர்களது வீட்டின் முன்பு தேங்கி நின்ற சாக்கடையிலிருந்து மொய்த்தபடி வெளியேறிக் கொண்டிருந்த கொசுக்களை அவன் கைகளால் வீசிறியடித்துத் துரத்தியபடி அங்கேயே அமர்ந்திருந்தான். காளீஸ்வரியின் அம்மா அவனருகே சென்று முதுகில் ஓங்கி சப்பென்று ஒரு அடி வைத்து உள்ளே போகச் சொன்ன பின்புதான் அவன் வெற்றுடம்பிலான முதுகைத் தடவியபடியே எங்களைத் திரும்பிப் பார்த்தான்.

அதுவரையிலும் பச்சைக் குழந்தையைப்போல சாந்தமாய் தெரிந்த அவனது முகமோ விகாரமாக வெளுத்துப்போய் கண்ணங்களிரண்டும் உப்பிக் கொண்டு பூனை போன்ற கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாய் வழிய அவன் விசும்பி விசும்பி அழத் துவங்கினான். அவனால் கத்தி அழக்கூட முடியவில்லை. ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டபடி அவன் கண்களை மீண்டும் மீண்டும் துடைத்தபடி இருந்தான். தான் எதற்காக அடிபட்டோம் என்கிற குழப்பம் வேறு அவனைச் சூழந்து கொள்ளவே அவன் வெடுவெடுவென எல்லோரையும் விலக்கிக் கொண்டு வெளியே ஓடினான். அவனைப் பிடிக்க முயலுகிற அம்மாவின் கைகளைத் தட்டியபடி தட்டுத்தடுமாறி ஓடுகிற அவனை நான் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்த போதே அவன் பே..பே… வ்வே.. வ்வேவேவே என்று கத்திக் கூச்சலிட்டபடியே ஓட்டமும் நடையுமாக, அழுகையும் ஆர்ப்பாட்டமுமாக திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான்.

அடடா! காளீஸ்வரியைப் போலவே அவளது அண்ணனும்கூட வாய் பேசாத பிள்ளையா? அவர்களுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளுமே இப்படி குறைபாட்டோடு பிறந்த பச்சைக் குழந்தைகள் தானா? என்று புரியத் துவங்கும்போது எனக்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. தான் பெற்ற இரண்டுமே இப்படி பேச்சற்றுக் கிடக்கையில் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது என்றுதான் அவளும் எதுவுமே என்னிடம் பேசிவில்லையா? அப்போது யாரோ சுளீரென்று என் முதுகில் ஓங்கி அறைந்தார் போல பலமாக வலித்தது.

தூரத்தில் சென்று மறையும்வரை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனிடம் ஓடிச்சென்று தேற்றிச் சமாதானம் சொல்லி அழைத்து வருவதற்குக்கூட என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லையே என்று என்னையே நான் நொந்து கொண்டேன். எங்கோ வழிதெரியாத சுரங்கப் பாதையின் இருட்டுக் குகையில் மாட்டிக் கொண்டவனுக்கு வெளியிலிருந்து எதிர்கொள்கிற ஓர் அசரீரிக் குரல் அவனை மீட்டுவிட முயலுவதைப்போன்ற ஒரு பெண்ணின் குரல் என்னை அழைக்கவே அப்போதுதான் அந்த பிதற்றல் மனநிலையிலிருந்தே மீண்டு கொண்டிருந்தேன்.

“உள்ள வாங்க சார். என்னதையோ அப்போதிலிருந்தே யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க போல. நிதானமா கொஞ்சம் தண்ணிய குடிங்க சார்.”

அவரிடமிருந்து தண்ணீர் நரம்பிய குவளையை வாங்குவதற்கே அச்சமாக இருந்தது. அதுவெல்லாம் தண்ணீர்தானா அல்லது காலங்காலமாக அவர் வடித்து கலன் நிறைய சேமித்து வைத்திருக்கிற கண்ணீர் கோப்பைகளா என்று அவற்றை வாங்கும்போதே கைகள் நடுங்க ஆரம்பித்தன. நாக்கு வறண்டுபோய் அதிலிருந்து முதல் மிடரு குடிக்கும்போதே அவை தொண்டைக்குள் இறங்கவில்லை. அந்தத் தண்ணீரின் குளிர்ச்சியில் இன்னும் கூடுதலாக ஏதோவொன்று தொண்டையை அடைத்துக் கொள்வதாக அல்லது யாரோ ஒருவர் தண்ணீரின் வழியே உள்சென்று தொண்டையை இறுக பிடித்துக் கொள்வதாக தோன்றி அதைத் தொடர்ந்து கடுமையாக இருமல் வந்தது. பிறகு என்னை நானே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு இந்தக் கனவுலகிலிருந்து மீட்டுக் கொள்ள ஒரே மடக்கில் எல்லாவற்றையும் குடித்துவிட்டு அவரை ஏறிட்டுப் பார்த்தேன். அவரது முகத்தின் உதட்டோரத்தில் புன்னகை தவழ என்னையும் ஒரு குழந்தையாகப் பாவிப்பதைப்போல அந்த குவளையை கையில் வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“அவன் தான் சார் தலைப்பிள்ளை. அவனுக்கும்கூட காதும் கேக்காது, வாயும் வராது”

என்னிடம் பதிலுக்குப் பேச எந்த வார்த்தைகளும் இல்லை. நான் பேச வேண்டிய பேச்சுகளை இழந்து வெகுநேரமாகிவிட்டது. என்ன மருத்துவம் படித்து என்னவாகப் போகிறது? அதனால் இப்படியான பெற்றோர்களின் வலியை என்னால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. இந்தக் குழந்தைகளின் உணர்வுகளை என்னால் கண்டடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து கரைந்தபடியே இருப்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. இவற்றையெல்லாம் நினைத்து நினைத்தே கூடுதலாக என்னை கவலைகள் சூழ்ந்து கொள்கின்றன. இவர்களின் வாழ்வோடு ஒன்றிவிடாமல் அவர்களது வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் எப்படி இக்குழந்தைகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிற செயல்களை நான் ஆத்மார்த்தமாக தொடர்ந்து செய்யப் போகிறேனோ என்று வேறு தயக்கமாக இருந்தது.ஒருவேளை இதற்கு முன்பாக நான் பணிபுரிகிற மருத்துவமனைக்கு காளீஸ்வரியை அழைத்துக் கொண்டு என் பிள்ளைக்கு காது கேக்கவில்லை என்ற கோரிக்கையோடு இதே தாய் வந்திருந்தால்கூட நான் என்ன செய்திருப்பேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அவர்களிடம் காளீஸ்வரியைப் பற்றிய விரவரங்களைக் கேட்டுக் கொண்டு அதற்கான ஆரம்பகட்ட பரிசோதனைகளாகச் சிலவற்றைச் செய்து மேற்கொண்டு அவற்றையெல்லாம் காகித அறிக்கைகளாக தயார் செய்தபடி பக்கம் பக்கமாக எழுதி அதை அவர்களிடம் கிழித்துக் கொடுத்துவிட்டு மேல் சிகிச்சைக்கு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று பாருங்கள் என்று பரிந்துரை செய்ததோடு என் வேலை முடிந்ததென நான் சாவகாசமாக அடுத்த வேலையை பார்க்கச் சென்றிருப்பேன்.

ஆனால் இங்கு நான் காண்பது அக்குழந்தையின் நோயை மட்டுமல்ல அந்த நோயை குணப்படுத்துவதற்கான எந்த விழிப்புணர்வும், பொருளாதார வசதியும் இல்லாத அப்பாவி ஏழை மக்களையும்தான். தங்களது ஏழ்மையைக் காரணமாக வைத்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளின் குறைபாடுகளை கடவுளிடமும், விதிவசத்திடமும் விட்டுவிட்டு அடுத்த வேளை பிழைப்புக்காக கிளம்பிவிடுபவர்கள் இவர்கள். தங்களது பிள்ளைக்கு ஏதேனும் சிகிச்சையென்று போக அலைய வைத்து காசு பணம் கரந்துவிடுவார்கள் என்கிற அச்சத்திலும் மூடநம்பிக்கையிலுமாக தங்களை வலிய அதிலிருந்து தவிர்த்துக் கொள்பவர்கள். இவர்களை வெறுமனே மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்துவிட்டு இருக்கிற இடத்திலேயே நான் அமர்ந்திருந்தால் மேற்கொண்டு அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் எத்தனை காலம் வேண்டுமானாலும் இக்குழந்தைகளை அப்படியேதான் வைத்திருப்பார்கள் என்ற உண்மை இப்போதுதான் புரியவே ஆரம்பித்தது.

ஐந்தரை வருட மருத்துவப் படிப்புக் காலத்தில் கற்றுக் கொடுக்காத படிப்பினையை இக்கிராமத்துக் குடில்களும் சாமானிய மக்களும் நிறையவே கற்றுக் கொடுத்துவிட்டார்கள். அதேசமயம் எனது கடந்தகால மருத்துவப்பணியில் அசட்டையாக நான் நடந்து கொண்டதை எண்ணி கூச்சமும் குற்றவுணர்வுமாக இப்படி இன்னும் எத்தனை எத்தனைக் குழந்தைகளை தெரிந்தும் தெரியாமலும் தவறவிட்டிருப்பேனோ என்கிற உறுத்தலுமாக அங்கேயே பாறையாக இறுகிப்போய் அமர்ந்து கொண்டிருந்தேன். சமையல்கட்டில் இருந்தவாறே அந்தத் தாயின் தலை மட்டும் எட்டிப் பார்க்க அவரின் குரலுக்கு பதில் கேள்வியாவது கேட்டுவிட வேண்டுமென்ற யோசனையில் தட்டுத்தடுமாறி அவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

“அவன் எப்படி, நல்லபடியா தான் பொறந்தான், இல்லியா!”

“அதுவா, அவனைப் பத்தி சொல்லனும்னா அதுவே ஒரு பெரிய கதை சார்.”

“நான் கலியாணம் பண்ணிக்கிட்டது சொந்த அத்தை பையனைத்தான். கலியாணம் ஆகி பத்து மாசத்துலயே இவன் பெறந்துட்டான். அப்போல்லாம் பெறந்ததுல இருந்தே எந்நேரமும் அழுதுகிட்டே இருப்பான். நாங்க காதுல பொறை விழுந்துருக்குமோன்னு நெனைச்சு ஒரு மாசமா நல்லெண்ணையை வச்சு காதைத் தடவி தடவி விட்டுக்கிட்டே இருந்தோம். அதுவும் சரிபட்டு வராதப்போதான் ஆசுபத்திரிக்குப் போயி பாத்தோம். அவங்களும் காதுல ஏதோ புண்ணு இருக்குன்னு சொல்லி மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்து அனுப்பிச்சாங்க. அதுக்கப்புறமா அவனும் அழவேயில்லை. நாங்களும் எல்லாமே சரியாகிடுச்சுன்னு நெனைச்சு இருந்திட்டோம். அப்போதான் ஒருநாள் சூடா இருந்த காப்பி டம்ளர் கீழ டம்முன்னு விழவும் பதறியடிச்சுப்போய் அவன் மேல ஏதும் கொட்டிடுச்சோன்னு பாக்க ஓடுனா அவன் எதுவுமே நடக்காத மாதிரி அப்படியே அமைதியா படுத்துக் கெடந்தான். அப்படியே கல்லாட்டம் கெடக்கானேன்னு சந்தேகப்பட்டு நாங்க ரெண்டு பேருமா சேந்து கையைத் தட்டி பேரைச் சொல்லி மாத்தி மாத்தி பத்து இருபது தடவைக்கு மேலயாச்சும் பையித்தியம் மாதிரி கத்திக்கிட்டே கெடந்திருப்போம். தெருவே வந்து என்னா ஏதுன்னு எட்டிப் பாத்துச்சு. ஆனா இவன் மட்டும் திரும்பிப் பாக்கவே இல்லியே சார்.”

“எட்டு மாச பிள்ளையத் தூக்கிட்டு பெரிய பெரிய ஆசுபத்திரிக்குப் போனோம். அங்க இங்கன்னு ஸ்கேன் எடுக்கனும்னு சொல்லி மதுரை பக்கமா அனுப்பி வச்சாங்க. அதுக்கும் பிள்ளைய தூங்க வச்சுதான் ஸ்கேன் எடுக்கனுமாமே. கடைசிவரைக்கும் இவனும் தூங்கவே இல்ல. ரெண்டு மூணு தடவை சொல்லிச் சொல்லி திருப்பி அனுப்பிச்சிட்டாங்க. நாங்க மில்லு வேலைக்கு போனாதான் சார் சாப்பாடு. ரெண்டு நாள் போகலைன்னாலும் வேலைக்கு வர வேணாமுன்னு திருப்பி அனுப்பிச்சுடுவாங்க. அதுக்கு மேல எங்களாலயும் அலைஞ்சு திரிய முடியல. அதுக்கு எங்க ஒடம்புல சக்தியும் கொஞ்சம்கூட இல்ல. அவ்ளோ தொலைவுட்டு போயிட்டு வர கையில ஒத்த பொட்டு காசுமே இல்ல. இனி அலைஞ்சு அலைஞ்சு என்னவாகப் போகுதுன்னு அப்படியே சும்மா இருந்திட்டோம் சார். வேற என்ன பண்றது சார், அவனோட விதி அவ்ளோதான்னு விட்டுட்டோம்”

என்ன கொடுமை இது? எந்த படிப்பறிவுமற்ற விழிப்புணர்வுமற்ற இத்தகைய கிராமத்துப் பெற்றோர்கள் மருத்துவர் அறிவுறுத்துகிறவற்றைக் அரைகுறையாகக் கேட்டுவிட்டு ஊர் ஊராக அழைந்து திரிந்து செய்ய வேண்டிய பரிசோதனைகளைச் செய்கிற போது ஏதோ ஒரு காரணத்தை சொல்லிவிட்டு ஸ்கேன் மையங்களில் எப்படி அவர்களால் எளிதாக திருப்பி அனுப்பிவிட முடிகிறது? பேருந்தில் சென்று வருவதற்கே கையில் காசில்லாத இத்தகைய பெற்றோர்களும்கூட சின்னச் சின்ன தடைகள் வருகிறபோது அதையெல்லாம் பொருட்டாய் எடுத்துக் கொள்ளாமல் முன்னேறிச் செல்வதில்லை. இங்கே அவர்களுக்கு நடக்கிற எல்லா எதிர்வினைகளும் அவர்களுக்கு மட்டுமே விதிவசமாய் நடப்பதாக நினைத்துக் கொண்டு அதிலிருந்து முற்றிலுமாக விடுபடவே நினைக்கிறார்கள். மேற்கொண்டு அலைவதைத் தவிர்ப்பதற்கு ஏதாவது சின்னதாக சாக்குப்போக்கு கிடைத்தாலும் உடனே ஏதோ குகைக்குள் சென்று ஒளிந்து கொள்வதைப் போல, எவர் சொல்வதையுமே பொறுமையாக காது கொடுத்து கேட்க விரும்பாததைப்போல தங்களை ஒரேயடியாக ஒளித்துக் கொள்கிறார்கள்.

இவர்களின் நிலைமையை கொஞ்சமேனும் கருத்தில் கொண்டு பரிசோதனைக்கு சென்ற அன்றே அவர்களும் நிதானமாக ஸ்கேன் எடுத்து அனுப்பியிருந்தால் ஒருவேளை இந்தப் பையனும் முழுசிகிச்சை பெற்று இன்று என்னிடம் பேசியிருப்பான் தானே! அவனும்கூட அம்மாவிடம், ‘அப்படி நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்பதற்காக இப்படி அடிக்கிறாய், பார் ரொம்பவும் வலிக்கிறது’ என்று தன் பக்க நியாயங்களைக் கூட சொல்லி அழுவதற்கு இடமில்லாமல் போயிற்றே! இதற்கெல்லாம் இதுபோன்ற சின்னச்சின்ன சிக்கல்கள்தான் காரணமாக இருக்கிறதென்றால் என்னிடம் வருகின்ற ஒவ்வொரு நோயாளிகளையும் நான் எத்தகைய பொறுமையோடும் கவனத்தோடும் பார்க்க வேண்டியிருக்கிறது என்ற உண்மை இப்போதுதான் விளங்கவே ஆரம்பித்தது. நாம் ஏதோவொரு எளிய காரணங்களால் ஒரு நோயாளியைப் புறக்கணிக்கும்போது அதற்குப் பின்னே இருக்கிற அவர்களின் எதிர்கால வாழ்வும் ஏதோவொரு வகையில் கேள்விக்குறியாக்கப்பட்டுவிடுகிறது என்பதே அப்போதுதான் பிடிபட ஆரம்பித்தது.

“அப்போ காளீஸ்வரி..???”

என்னால் எந்த வார்த்தைகளையும் முழுவதுமாக பேசவும் முடியாமல் மென்று விழுங்கவும் முடியாமல் ஏதோ தொண்டையில் நெறி கட்டியதைப் போலத்தான் வலியுடன் பேச முடிந்தது. ஒவ்வொருமுறை பேச முடிந்த போதும் விளங்கிக் கொள்ளவே முடியாததொரு வேதனையில் உள்ளுக்குள் ஏதோவொன்று சுருக்கென்று குத்தவே செய்தது.

“அவ வேண்டாம்னு பெத்த புள்ள சார்!”

“என்னம்மா சொல்றீங்க”

“ஆமா சார். மூத்த பையனுக்கு நாலு வயசு ஆகுறப்போ நாப்பத்தைஞ்சு நாளா தேதி தள்ளிப் போயிடுச்சு. எனக்குன்னா ஒரே பயம். எங்க இன்னொரு புள்ளையும் இப்படி கொறையா பெத்துப் போட்டுருவோம்னு ஒரே சங்கடமா போச்சு. ஒடனே பக்கத்து ஊரு ஆசுபத்திரிக்குப் போயி டாக்டர் அம்மாகிட்ட எம் புள்ளைய கலைச்சிடுங்கன்னு போய் மள்ளுக்க நின்னேன். எதுக்குன்னு கேட்டாங்க. மூத்த புள்ளைதான் இப்படி கொறையா போச்சு, இந்தப் புள்ளைக்கும் இப்படி ஆயிடுமோன்னு பயமா இருக்கும்மான்னு சொல்லிச் சொல்லி அழமாட்டாம அழுதேன். அப்போ அந்த டாக்டரம்மாவுமே என் நெலமைய புரிஞ்சுக்கல. அதெல்லாம் எதுவும் கலைக்க மாட்டேன். ஜனிச்ச கருவை கலைக்கிறது மகா பாவம்னு தத்துவம்லாம் பேசுச்சு. அப்போவே ஸ்கேன்லாம் எடுத்துப் பாத்தாங்க. ஒன்னுமில்ல நல்லாதான் இருக்குன்னு சமாதானம் சொல்லி அனுப்பிச்சாங்க. ஆனா அது மட்டுமா? இவ பொறந்த பொறப்பே என்னோட உசுர பாதி கரைச்சுப் போட்டுருச்சு சார்.”

“ஏம்மா என்ன ஆச்சு!”

“இவங்க அப்பா ராத்திரி வேலைக்கு மில்லுக்கு போயிட்டாங்க. நானும் மூத்த பையனும் மட்டுமா தனியா படுத்துக் கெடந்தோம். நடுராத்திரி ஒரு மணி. அப்போ எனக்கு எட்டு மாசம்தான் ஆகுது. அந்த சமயத்துல ஏதோ படுக்கையெல்லாம் நசநசன்னு ஈரமா தெரியவும் என்னன்னு எழுந்து லைட்டைப் போட்டுப் பாத்தா பெட்டு முழுக்க இரத்தமா கெடக்கு. எனக்கு அப்படியே தலைசுத்தி கீழ விழுகிற மாதிரி ஆயிடுச்சு. பக்கத்துல தம்பி வேற நல்லா படுத்துத் தூங்குறான். அப்படியே உடுத்துன சேலையை மாத்திகிட்டு கையோட அவனையும் தூக்கிட்டு நடந்தே பக்குபக்குன்னு நெஞ்செல்லாம் அடிக்க அம்மா வீட்டுக்கு வந்து கதவை தட்டுனா இரத்தக்கறையோட நிக்குற என்னையப் பாத்து பதறியடிச்சுப் போய் ஒடனே ஆசுபத்திரிக்கு தூக்கிட்டுப் போனாங்க.”“அந்த நட்ட நடு ராத்திரியில ரெண்டு பாட்டில் இரத்தம் ஏத்தனும்னு வேற சொல்லிட்டாங்க. அப்புறமா மில்லுக்கு சொல்லியனுப்பி அவங்களையும் வரச்சொல்லி அவசரம் அவசரமா யார் யாரையோ அர்த்த ராத்திரில கூப்பிட்டு இரத்தம் கொடுக்க வச்சுத்தான் ஆபரேசன் பண்ணியே இவளை எடுக்க முடிஞ்சது. இவளும் கொறைப் பிரசவமா வேற பொறந்திட்டதுனால மூச்சுவிடவே ரொம்பவும் சிரமப்பட்டா. அவளைத் தட்டித்தட்டி அழ வச்சுத்தான் உசுரையே கொண்டாந்தாங்க. ரெண்டு நாளைக்கு அவசரப்பிரிவுல வச்சுதான் காளீஸ்வரியவே காப்பாத்துனாங்க.”

“பிரசவம் முடிஞ்ச வலி வேற அதிகமாக இருக்கு. இரத்தப்போக்குல மயக்கம் மயக்கமா வருது. புள்ளயும் வேற அரை உசுரா கெடக்குன்னு அடிக்கடி டாக்டர் நர்ஸூம் வந்து சொல்லிட்டு சொல்லிட்டுப் போறாங்க. ஆனா அந்த சமயத்துலயும் மயக்கத்துல டாக்டரம்மாகிட்ட கேக்குறேன். மேடம் மூத்த புள்ளைக்குத்தான் காது கேக்காம வாய் பேசாம போச்சு. இந்த பிள்ளைக்கும் காது கேக்குதா இல்லியான்னு செக்கப் பண்ணி பாருங்க மேடம். இந்தப் புள்ளையும் பேசிடும்மான்னு பாத்துச் சொல்லுங்க மேடம்னு. பிரசவம் முடிஞ்ச வலியிலயும்கூட இன்னொரு புள்ளையும் காது கேக்காத வாய் பேசாத புள்ளையா போயிடுமோன்னு பயம் இருந்துகிட்டே இருந்துச்சு. நான் கொழந்தை பெத்துருக்கேங்குற சந்தோசம் கொஞ்சம்கூட என்கிட்ட இல்லை. அப்புறமா டாக்டருங்க வந்து அதான் புள்ளை நல்லா பொறந்திருச்சுல்லம்மா ஏம்மா வீணா கவலைப்படுறன்னு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பிச்சாங்க. ஆனா என்ன ஆச்சு? கடைசியில இவளுக்கும் நான் பயந்த மாதிரியே ஆகிப் போச்சு. நான் பெத்த ரெண்டு புள்ளையும் இப்படி ஊனமா போச்சு. அப்பவே பாவம் புண்ணியம்னு பாக்காம கருவுலயே கலைச்சுப் போட்டுருந்தா இப்போ பாக்குற சனங்க எல்லாருமே அய்யோ பாவம்னு புள்ளையை சொல்லும்படியே ஆயிருக்காதே சார்..”

இவ்வளவு நேரமும் இறுக்கமாய் இருந்த பெண்ணா இவள்? இத்தனை நேரமும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெறுமையாய் பேசிக் கொண்டிருந்த தாய் தான் இவளா? அவள் அழுகையை அடக்கவும் முடியாமல் அழுது தீர்க்கவும் முடியாமல் குழந்தையைப் போல முரண்டு பிடித்தவாறு விசும்மி விசும்மி அழுத் துவங்கினாள். எதிரே முன்பின் பார்த்திராத ஆணொருவருக்கு முன்னால் இப்படி நிர்கதியாய் அழுகிறோமே என்கிற சுயஉணர்வும் இல்லாமல் அருகே நடப்பது எதுவும் புரியாத குழப்பத்தோடு பார்த்தபடி அமர்ந்திருக்கிற காளீஸ்வரியைக் கட்டிப் பிடத்து அவர் ‘ஓ’ வென்று கரைந்து அழத் துவங்கினாள்.

அவளைப் பார்த்து காளீஸ்வரியும் என்னவென்று புரியாமல் அம்மாவின் சேலையைப் பிடித்திழுத்து என்ன என்ன என்று கேட்பதைப்போல உரக்க கத்தியபடி அவளும் கூடவே பிதற்று மொழியில் அழத் துவங்கினாள். அங்கே நடப்பதென்னவென்று புரிந்து கொள்ள முடியாதொரு மனநிலையில் நான் அப்படியே பாறாங்கல்லைப்போல இறுகிப்போய் அமர்ந்திருந்திருந்தேன். பல்லாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்போன பாறையிலிருந்து கசிந்துருகிற சுனைநீரைப்போல வெறுமனே சலனமற்ற என்னுடைய முகத்திலிருந்து கண்ணீர் மட்டும் கசிந்து வந்து கொண்டே இருந்தது. நான் அழுகிறேனா என்ற சுயபிரக்ஜைகூட என்னிடம் இல்லாமல் தான் அவர்கள் முன்னே அமர்ந்தபடி நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தேன்.

அடப் பாவமே, இன்னும் இப்படியான துயரங்கள் நிறைந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை இருக்கின்றன. அவர்களெல்லாம் துன்பப்பட்டு, ஆற்றாமையின் வதை குழியில் விழுந்து நலிந்து போய் தனக்கென உதவுவார் யாருமின்றி எல்லாமே விதியென ஏற்கப் பழகிக் கொண்டு வாழ்ந்து கொண்டிந்த அதே நாட்களில்தானே நான் மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட ஒரு அறையிலே கால்மேல் கால்போட்டு சாவகாசமாக அமர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அன்றாட வாழ்விற்கே கஷ்டப்பட்டு பிழைப்பிற்காக மில் வேலைக்குச் செய்து வாழ்க்கையை ஓட்டுகிற அந்த சொற்ப பணத்தை வாங்கிக் கொண்டுதானே அவர்களுக்கு நாமும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தபோது துக்கம் தொண்டையை அடைத்தது. அந்த இடத்திலேயே உரக்க கத்தி அழ வேண்டுமென்று நினைத்தாலும்கூட மருத்துவன் என்கிற பட்டம் முன்னே வந்து அழாதே, நீயே அழுதுவிட்டால் அவர்களை யார் தேற்றுவது? என்று இதயத்திற்குள்ளிருந்து சன்னமான ஏதோ ஒரு குரல் தொடர்ந்து என்னுடனே பேசிக் கொண்டே இருந்தது. இந்த சமயம் யாராவது ஒரே ஒருமுறை கட்டிப்பிடித்து அழுவதற்கு அனுமதித்தால்கூட என்னால் இயன்ற அளவு அழுது தீர்த்துவிடுவேன் என்று தோன்றினாலும் அப்போதும்கூட அங்கே யாருமே இல்லை.

நான் வயிற்றில் கருவாய் இருந்த போது வீட்டு வறுமையின் முன்னிட்டு கருக்கலைப்பு மாத்திரைகள் சாப்பிட்டு அம்மா என்னைக் கலைக்க முயன்றதாய் நான் சேட்டைகள் செய்து அவரை கவலையுறச் செய்யும் போதெல்லாம் அதைச் சொல்லிக் காட்டியபடியே இருப்பார். அந்த வேதனைகளைக் கூட என்னால் ஒரு நகைச்சுவையைப்போல இப்போதெல்லாம் கடந்துவிட முடிகிறது. ஆனால் கருவாயிருக்கும்போதே இன்னொரு பிள்ளையும் குறையாய் பிறந்துவிடக்கூடாதே என்று அதை கலைக்கத் துணிகிற ஒரு தாயின் வேதனையைக் கடக்க எனக்கு ஒருவழியுமில்லாமல் போயிற்றே என்று நொந்து கொண்டேன். என்றோ ஒருநாள் தீட்டாய் கழிந்து போக வேண்டிய காளீஸ்வரிதான் இன்று வளர்ந்து குறைபட்ட சுமையோடு வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பே இருதயத்தை நொறுங்க வைத்தது. பெண்களுக்காவது அழுது தீர்த்துக் கொள்ள வழியிருக்கிறது. ஆனால் இந்த ஆணாய் பிறந்த பிறப்பு இருக்கிறதே மிகவும் கவலைக்கிடமானது. நானும் ஒரு சகமனிதன் தான் என்கிற உணர்ச்சிகர நிலையிலிருந்து எல்லா உணர்வுகளும் மரத்துப்போன மருத்துவனாக மீண்டு வருவதற்கு எனக்கோ நீண்ட நேரம் பிடித்தது.

“சரிம்மா, காளீஸ்வரிய டாக்டர்கிட்ட கூப்பிட்டுப் போயி பாத்தீங்களா?”

அக்குரலைக் கேட்கிறவரையிலும் அழுதுகொண்டிருக்கலாம் என்று நினைத்திருந்தாரோ என்னவோ? மூத்த பிள்ளை பிறந்த தருணத்திலிருந்தே முழுவதுமாக பிள்ளை பெற்ற சுகத்தை அறியாது வெறித்து வெறித்து பிள்ளைகள் பார்க்கிற பார்வையிலிருந்து தன்னை காலங்காலமாக ஒதுக்கிக் கொண்டும், வெளியே உறவினர்களின் ஏச்சுப் பேச்சிலிருந்து தப்பிக்கொண்டும் வாழ்ந்து வந்திருக்கிற இவர் எத்தனைக் காலமாக இப்படி அழுது கொண்டேயிருக்கிறார்? பெய்யும் மழைகூட பருவத்திற்கு வந்தபின் வற்றிவிடுகிற இயல்பு வாய்த்திருக்கிறது. ஆனால் பொழுதிற்கும் அழுதும்கூட இத்தனை பருவங்கள் கழிந்தும்கூட பிள்ளைகள் தோளுயுற வளர்ந்தும்கூட இப்படி குழந்தைபோல இன்னும் அழுது கொண்டே இருக்கிறாளே! இவளது கண்ணீர்ப் பை வற்றவே வற்றாதா? வாழ்வே வறட்சியாய் போகிற ஒவ்வொருவருக்குள்ளும் வறட்சியே காணாத ஒரு கண்ணீர் தெப்பக்குளம் இருக்கவே செய்கிறது போலும். மலையிடுக்கில் கோடைக்காலத்திலும் சுரக்கிற சுனைநீரை புனித நீரென்று தெய்வீகமாகக் கொள்வதைப்போல இதனை நாம் எந்த தெய்வீகத்தில் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம்??

“நாங்க காளீஸ்வரியையும் ஆசுபத்திரிக்கு கூப்பிட்டுப் போனோம் சார். அதே டெஸ்ட் ஸ்கேன் எல்லாம் எடுக்கச் சொல்லி மதுரைக்கு அனுப்பிச்சாங்க. மூத்த பிள்ளைக்கு மாதிரியே நாங்க இவளுக்கும் போகலை சார்.”

“உங்க பிள்ளைங்களுக்கு என்ன வயசும்மா ஆகுது”

“ஏன் சார், மூத்த பிள்ளைக்கு பத்து வயசு. காளீஸ்வரிக்கு அஞ்சு வயசு”

அதுவரை இறுக்கமாயிருந்த மனம் இலகத் துவங்கியது. பொக்குப்பாறை போலான இறுக்கம் உடைந்து சுனைநீர் போல இருதயத்திலிருந்து மகிழ்ச்சி பொங்கத் துவங்கயது. ஆம், இன்னும் காளீஸ்வரிக்கு ஆறு வயது ஆகவில்லை. அவளுக்கு இப்போது சிகிச்சை செய்தால்கூட கட்டாயம் இந்த பாவம் என்கிற பலிச்சொல்லை இன்னும் அவள் சுமந்து கொண்டு திரியத் தேவையில்லை. வீட்டிலே இரண்டு பிள்ளைகளுமே இப்படிக் குறையாய்ப் போன துயரத்திலிருந்து மீள்வதற்கு ஒரு பிடிமண்ணை இவளது பெற்றோர்களுக்கு இந்தச் சிகிச்சை வழங்கக்கூடும். என் மனம் மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்பே இவர்களை சந்தித்திருந்தால் அந்தப் பையனுக்கும் சிகிச்சை அளித்து சரி செய்திருக்கலாமே என்று வருத்தமாய் இருந்தது. கூடவே இவனும் சரண் வயதை ஒத்தவன்தானே! அப்படியென்றால் அந்தத் தாயைப்போலத்தானே இவளும் என்று சரணையும் அவனது அம்மாவையும் நினைத்துக் கொண்டேன். எங்கு சென்றாலும் இந்தக் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்களின் துயரம் ஒன்று போலத்தான் இருக்கிறது. இனி எதுவாய் இருந்தாலும் காளீஸ்வரியை எக்காரணம் கொண்டும் எந்த சாக்குபோக்குக்கும் விட்டுக்கொடுக்காமல் அவளுக்கு சிகிச்சை செய்தாக வேண்டும் என்று உறுதியாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

“அம்மா உங்க பிள்ளைக்கு ஆபரேசன் பண்ணா சரியாகிடும். அதுக்கு அரசாங்கமே இலவசமா காப்பீட்டு திட்டம் வழியா உதவி பண்ணுது. இதுக்கு நீங்க சென்னைக்குப் போனா அவளை சரிபண்ணி கூப்பிட்டு வந்திரலாம். தயவு செஞ்சு இந்த வாய்ப்ப விட்டுடாதீங்கம்மா” என்று கதறாத குறையாக அவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன்.அவர் ஏற்கனவே முன்பு பார்த்த மருத்துவரிடம் ஏதோ அறைகுறையாக கேட்ட தகவல்களை வைத்து ஏதோ ஒரு முடிவிற்கு வந்திருக்கக்கூடும் என்பது போல அமைதியாக கண்ணீரைத் துடைத்தபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள். கலைந்த தலைமுடியை முடிந்து கொண்டு விலகிய ஆடைகளை சரிசெய்து கொண்டாள்.

“இங்க பாருங்க சார். இவளுக்கு ஆபரேசன் அப்படி இப்படின்னுலாம் எதுவும் பண்ண மாட்டோம். ஆபரேசன்னா காதுக்கு பின்னாடி மண்டை ஓட்டை பிரிச்சு வைப்பாங்களாம். மண்டைக்குள்ள கம்பி வச்சு தப்பாங்களாம். ஆபரேசன் பண்ணுன பின்னாடி பந்துஸ்தா பாத்துக்கனுமாம். அப்படி கவனக் கொறைவா கீழ ஏதும் எசகுபிசகா விழுந்து தொலைச்சிட்டா மூளையை பாதிச்சிடுமாம். இந்த கம்பி போகப் போக துருப்படிச்சுப் போய் பிள்ளைங்களுக்கு பைத்தியமே பிடிச்சிருதாம். எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு சார். அதனால தான் எங்க புள்ளைங்களை எங்கேயும் நாங்க கூப்பிட்டுப் போகலை. எங்களை இதுக்கு மேல எந்த தொந்தரவும் பண்ணாதீங்க சார். நீங்க என்னோட புள்ளையப் பாத்து விசாரிக்க வந்தீங்க, சந்தோசம். எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன். அவ்ளோதான் சார்.”

“எங்க புள்ளைக்கு கொறை இருக்கு தான் சார். அதுக்காக எதாச்சும் ஏடாகூடமா பண்ணி எங்க கொழந்தைய இன்னும் கஷ்டப்படுத்த விரும்பல சார். நீங்க கிளம்புங்க சார்.”

அவர் வெடித்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவர் எதற்காக இக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் இருக்கிறார்? இந்தக் குழந்தைக்கு என்ன பிரச்சனையென்றே விளங்கிக் கொள்ள முடியாத படிப்பறிவற்ற காரணத்தினாலா, என்ன நோயென்று தெரிந்தும் அதற்கான தீர்வென்னவென்று தேடியும் கண்டுபிடிக்க முடியாத குழப்பத்தினாலா, பண வசதியில்லாததினாலா அல்லது சிகிச்சை பற்றிய அச்சத்தினால்தானா? எந்தக் காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. இதையெல்லாம் அவர்கள் விளங்கிக் கொண்டு குழந்தையை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதவரை இக்குழந்தையும் இன்னும் மூன்று மாதத்தில் ஆறு வயதைக் கடந்து ஏதுமே செய்ய முடியாததொரு கட்டத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்பது எனக்குத் தெரியுமே.

நிதானமாக யோசித்துப் பார்த்தால் இப்போதைய சூழலில் இந்தப் பெற்றோர்களைக் குறை சொல்வதா அல்லது அவர்களை எந்த வழியிலுமே கட்டாயப்படுத்தி சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைத்திட முடியாத என்னுடைய இயலாமையைக் குறை சொல்வதா? படிப்பறிவற்ற அப்பாவி ஏழைப் பெற்றொர்களின் மீது நான் ஒருபோதும் பழியைச் சுமத்த விரும்பவில்லை. எந்தப் பெற்றோரும் தன் பிள்ளை இப்படி குறைபாட்டோடு இருந்துவிடட்டுமே என்று இருக்கப் போவதில்லை. அவர்களின் எதிர்காலம் குறித்து இந்த பெற்றோர்களுக்கு இருக்கிற அச்சமும் பதட்டமும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாதது. உண்மையில் இந்த கிராமத்துப் பெற்றோர்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர்களது மொழியிலேயே இந்தக் குறைபாடு பற்றிய, மேற்படி சிகிச்சைகள் பற்றிய விசயங்களை பொறுமையாக எடுத்துச் சொன்னால் கட்டாயம் அவர்களும் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை நான் இப்போதுமே இழக்க விரும்பவில்லை.

ஆக, நான் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் முதலில் காது கேக்காத வாய் பேசாத குழந்தைகளின் எதிர்காலப் பிரச்சனையை இவர்களுக்கு புரிய வைக்க சாதாரண மொழியில் மருத்துவத்தை விளக்குவதும், அப்படி குறைபாடுடைய குழந்தைகளை காக்ளியார் சிகிச்சையளிக்கிற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிற போது அங்கே அவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகளை செய்கிறார்கள், மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்ததிலிருந்து சிகிச்சை பெற்று குணமாகி வெளியேறும் வரை அங்கே இக்குழந்தைகளை எப்படியெல்லாம் மருத்துவமனை ஊழியர்கள் கையாளுகிறார்கள் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல சொல்லிக் கொடுத்து தெளிய வைப்பதும்தான் என்பது புரிந்தது.

நான் அவ்விடத்திலிருந்து முகத்தை கவிழ்த்துக் கொண்டே அமைதியாய் இருந்த அந்த அம்மாவைத் தாண்டி வாசலுக்கு வெளியே சென்ற போது இருள் என்னைச் சூழ்ந்து கொண்டது. ஏனோ இன்று மட்டும் உலகமே அதிகமான இருளால் சூழப்பட்டுவிட்டதைப்போல இருட்டு கடுமையாக இருந்தது. தெருவிளக்கு வெளிசத்தில் எப்போதோ அம்மாவைவிட்டு ஓடிவிட்ட அந்தப் பையன் பக்கத்துவீட்டுக் குழந்தையைத் தூக்கி வார்த்தைகளற்ற பாவனையால் கொஞ்சிக் கொண்டிருந்தான். அந்த மொழியற்ற பிதற்றல் சப்தமே போதுமென்பதாக அக்குழந்தையும் அவனது தோளில் குழுங்கிக் குழுங்கி சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு குழந்தையின் பெயரைச் சொல்லி கொஞ்சுவதற்குகூட இப்பிள்ளைக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று அந்த நிமிடத்திலும் அழுகையாக வந்தது.

மனம் தன் போக்கிலே வெவ்வேறு யோசனையில் உழன்று கொண்டிருக்க வாகனமே ற்கனவே பழகிய பாதையிலே தட்டுத்தடுமாறியபடி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தது. அந்த அகால இருட்டில் வீட்டிற்குள் நுழைந்ததும் விளக்கை எரியவிட மனமில்லாமல் அப்படியே பொத்தென்று விழுந்து நீண்ட நேரமாக நாற்காலியிலேயே அமர்ந்திருந்தேன். நான் எப்படி தூங்கினேன், எப்போது தூங்கினேன் என்ற ஞாபகமே கொஞ்சம்கூட இல்லாமல் அதிகாலையில் விழித்துப் பார்த்த போது அப்போதும் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. எப்போது எழுந்து விளக்கைப் போட்டேன் என்கிற சுயநினைவே இல்லாமல் அதை அணைக்காமலே மறந்து தூங்கிவிட்ட ஞாபகம் வர எழுந்துப் பார்த்த போது என்னைச் சுற்றிலுமாக காதுகளைப் பற்றிய ஏதேதோ புத்தகங்கள் சுற்றிலுமாக சிதறிக் கிடந்தன.

நானோ விரைவில் காது மருத்துவம் பற்றி அவர்களுக்குப் புரியும்படியான எளிய மொழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். நீங்களுமே நம்முடைய காதுகளைப் பற்றியும் அது எப்படிக் கேக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

தொடரும்..தொடர் 1:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 2:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 3:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 4:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்
தொடர் 5:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 6:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்