ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்மருத்துவப் பித்தம் தெளிதல்

இரவெல்லாம் குளிர்பனி பொழிந்து அறையின் ஜன்னல்களில் அவை துளிர்த்துப் படிந்திருந்தன. இருள் கலைந்து அதிகாலை கூடல் கொள்ளத் துவங்கிய அந்திம பொழுதில் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். சேலையை விலக்கி காம்பைத் தேடுகிற சிறுகுழந்தையைப்போல இருள்திரையை விலக்கியபடி மெல்ல மெல்ல சூரியனின் மஞ்சள் கதிர்கள் வெளிப்பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவை ஜன்னல் கண்ணாடியில் படிந்த பனித்துளிகளை துடைத்தபடி அறைக்குள்ளே கள்ளமாக எட்டிப் பார்த்தது. அதன் மினுமினுக்கிற பொன்னிற துகள்கள் ஜன்னல் கதவிடுக்கின் துளைகளின் வழியாக நுழைந்து தரையிலே கலைந்து கிடந்த புத்தகங்களின் மேல் அது நெடுஞ்சாண்கிடையாய் வந்து விழுந்தது.

சூரிய ஒளியின் விரல்கள் காற்றிலே திறந்தபடி அலைபட்டுக் கிடந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் புரட்டி எதையோ தேடி வாசிக்க முயலுவதைப்போல காகிதத்தின் மீது ஊர்ந்து தவழ்ந்தபடி இருந்தது. அது நல் இரவினது வானிலிருந்து விழுகிற எரிநட்சத்திரத்தைப் போல இருட்டு அறைக்குள்ளாக ஒரு கோணத்தில் வந்து பெரும் புள்ளியாய் விழுந்தது. புத்தகத்தின் மீது விழுந்த வெளிச்சத்திலிருந்து ஒளியோ பெருகிப் பெருகி அறைக்குள்ளே பெருமழையைப்போல சுவரெங்கும் பரவி அதன் விளக்கொளியால் அறையையே ஒரு தேர்ந்த  நடன அரங்கைப்போல மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் காற்றிலே துருவித்துருவி படுக்கையின் மேலே வந்து முகத்தின் மீது விழுந்தபோது யாரோ முகத்திற்கருக்கே வந்து பெருமூச்சு விடுவதைப் போல இருந்தது.இரவு முழுவதும் நீடித்த கனவுகளாலும் கலைந்து போன தூக்கத்தாலும் சோர்ந்து போன உடலின் அசதியால் மேற்கொண்டு கண்களைத் திறக்க முடியாமலே தான் படுக்கையில் நான் படுத்துக் கிடந்தேன். யாரோ என்னைச் சுற்றிலுமாக நின்று கொண்டு கைகொட்டி சிரிப்பதைப் போலவும், சில நேரங்களில் யாரோ எதற்காகவோ அவசர அவசரமாக தட்டி எழுப்ப முயலுவதைப் போலவும், அதல பாதாளத்தில் வீழ்ந்துவிடப் போகிறவர்களைக் காப்பாற்றச் சொல்லி யாரோ அரற்றி அழுகிறவர்களைப் போலவுமாக அடிக்கடி கனவுகளில் வருவதும் போவதுமாக இப்போதெல்லாம் எதையெதையோ நினைத்து மனம் பிதற்றியபடியே ஒவ்வொரு இரவும் கடந்து கொண்டே இருக்கிறது. என்றாவது ஒருநாள் நாம் புத்தி பேதலித்தவனாக ஆகிவிடுவோமோ என்கிற பயம் வேறு மெல்ல மெல்ல என்னை பற்றிக் கொள்வதைப் போலிருந்தது.

வெயிலின் கதகதப்பையும் மீறி முகம் சூடேறி வெளிறிப்போய் உடலும் மயிர்க் கூச்சமடைந்து உறைக்கத் துவங்கியபோதுதான் பட்டென்று கனவுகள் கலைந்து எழுந்து கண்விழித்துப் பார்த்தேன். நேற்றிரவு எத்தனையோ முறை எழுந்து பார்வையற்றவனைப் போல காற்றிலே துளாவித் துளாவி அறைக்குள்ளாக நடந்து கொண்டிருந்த ஞாபகம் இன்னும் நினைவிலேயே தங்கியிருக்கிறது. சோர்வு கலையாத தூக்கக் கலக்கத்தில் ஒவ்வொரு புத்தகங்களாக தரைமீது கலைத்துப் போட்டு இரவுப்பூனை போல எதையெதையோ புரட்டிக் கொண்டிருந்த சுவடுகள் இப்போது வெயில் போர்த்தியபடி கிடந்த புத்தகங்களைப் பார்த்தவுடனே எல்லாம் நினைவுக்குள் வந்து விழுகின்றன. அவையெல்லாம் குறும்புக் குழந்தைகள் விளையாடித் தூக்கிப் போட்ட பொம்மைகளைப் போல ஆங்காங்கே தரையிலே சிதறிக் கிடந்தன.

படுக்கையிலிருந்து எழுந்து ஒரு தாயின் பேரன்போடு புத்தகங்களின் அருகாமையில் போய் அமர்ந்து கொண்டேன். கல்லூரிக் காலம் முடிந்த பின்னால் கத்தை கத்தையாக பெட்டிகளில் அடுக்கப்பட்டு பரணில் தூக்கிப் போட்ட மருத்துவ புத்தகங்கள் யாவும் இன்னும் தூசி களையாமல் கலையிழந்து போய் அப்படியே கிடந்தன. அழகாய் துயில் கொள்கிற பிள்ளையை அள்ளியெடுத்து மடியில் கிடத்துவதைப் போல ஒவ்வொரு புத்தகமாய் எடுத்து மடியில் வைத்தபடி அவற்றை வாஞ்சையோடு தொட்டுத் தடவிப் பார்த்தேன். தாயின் சேலை முந்தானை நுனியால் அழுத பிள்ளையின் கண்ணீரைத் துடைத்துவிடுவது போல ஆசை ஆசையாய் அவற்றின் மேல் படிந்த கசடுகளை எனது சட்டை முகப்பால் துடைத்துவிட்டேன்.

மலைக்குவியல் போல சரிந்து கிடக்கிற இந்த மருத்துவப் புத்தகங்களிலிருந்துதான் என்னுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடைய பரிதாபப்பட்ட அம்மாக்களுக்கும் நான் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டும் என்கிற நினைப்பே பெரும் மலைப்பாக இருந்தது. முதலில் இத்தகைய சலிப்பிலிருந்து விடுபடுவதற்கான வழியை நான் தேடியாக வேண்டும். இப்போது ஒரு மருத்துவராக இருந்து மட்டுமே இப்பெற்றோர்களுக்கான விழிப்புணர்வை தயாரித்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குறைபட்ட குழந்தைக்கு நேசமான தந்தையாகவோ, சகோதரனாகவோ, தோழனாகவோ இருந்துதான் அவர்களுக்கான மருத்துவத்தை எளிமைப்படுத்துவதற்கான வேலையை நான் துவக்கியாக வேண்டும். அப்படியாக நான் காலம் தாழ்த்துகிற ஒவ்வொரு நாளும், அவர்களுக்குப் புரியும்படியாக மருத்துவத்தை விளக்க முடியாமல் போகிற ஒவ்வொரு பொழுதும் அக்குழந்தைகளை இனி சரிசெய்யவே முடியாது என்கிற ஆறு வயதின் விளிம்பை நோக்கிய ஆபத்தில் தள்ளிக் கொண்டேயிருக்கும் என்பதை முக்கியமாக நான் மனதில் பதிய வைத்துக் கொண்டாக வேண்டும்.

எப்போதும் நான் எதற்காகவும் ஆசுவாசமடைந்துவிடக் கூடாது. எந்த சூழலிலும் மனமோ இளகிக் கொடுத்துவிடக் கூடாது. நான் எவ்வளவுக்கு எவ்வளவு என் அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டங்களிலிருந்தும் மகிழ்ச்சியூட்டும் அற்ப செயல்பாடுகளிலிருந்தும் என்னை விலக்கியே வைத்திருக்கிறேனோ அதேபோல எந்த அளவிற்கு இத்தகைய குழந்தைகளை எனக்குப் பிறந்த குழந்தைகளாக மனதில் இருத்திக் கொண்டு மனதை இறுக்கமாய் வைத்திருக்க முடிகிறதோ அந்த அளவிற்கு என்னால் ஆத்மார்த்தமாக இக்குழந்தைகளுக்காக எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற துடிப்பு என்னுள்ளே இருந்து கொண்டே இருக்கும். அதனால் இப்போதெல்லாம் வீட்டை விட்டு எங்கும் நான் செல்வதில்லை. அப்படியே விரும்பினாலும் எந்த கேளிக்கையான விசயங்களிலும் என்னால் முழுமனதாக ஈடுபடுத்திக் கொள்ள முடிந்ததில்லை.ஏனோ இப்போதெல்லாம் சட்டென்று அறைக்குள் இருள் தன் வலையை விரித்துக் கொள்ளும்போது வெறுமனே விளக்கை எரியவிடாமல் அப்படியே அமர்ந்திருக்கவே பிடித்திருக்கிறது. அடர்ந்த இருட்டு என்னைச் சூழ்ந்திருக்கும்போது எல்லாமுமே கண்முன்னே சூன்யமாய் மறைந்துவிடுகிற பொழுதில் இப்படித்தானே ஒரு பார்வையற்ற குழந்தையும் எங்கோ ஒரிடத்தில் எப்படியோ தட்டுத்தடுமாறி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கக் கூடும் என்ற நினைவுகள் எழும்பி மனமோ வேதனைகள் கொள்ளத் துவங்கிவிடும். சட்டென்று அடுத்த கணமே என்னுடைய காது கேளாத குழந்தைகளையெல்லாம் நினைத்து துக்கமோ தொண்டையை அடைத்துக் கொள்ளும். உடனே இரண்டு கைகளையுமே காதுகளில் இறுக்கமாக வைத்துக் கொண்டு வெளி உலகத்தின் எந்த சப்தங்களும் எனக்குள் சென்றுவிடாமலிருக்க முயன்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருவேளை காது கேளாமல் இருப்பதன் துயரத்தை அனுபவிக்காமல் என்னால் ஆத்மார்த்தமாக இப்பணியில் செயல்பட முடியாதோ என்று வேறு மனம் அப்போது அவஸ்தையும் தடுமாற்றமும் கொள்ள ஆரம்பித்துவிடும்.

எவ்வளவுதான் இறுக்கமாக கச்சிதமாக காதுகளை மூடினாலும் நாம் விடுகிற மூச்சுக்காற்றும் படபடக்கிற இதயத்துடிப்பும் காதுக்குள்ளே சலசலத்து ஓடுகிற இரத்தக் குழாயின் துடிப்போசையும் இன்னும் சத்தமாக நமக்குள்ளாக கேட்டபடியேதான் இருக்கும். காதுகளை இறுகப் பொத்திக் கொண்டால் பிறவியிலிருந்தே காது கேளாமல் போகிறவர்களின் துயரங்களை ஒருவர் அனுபவித்துப் பார்த்துவிடலாம் என்கிற எண்ணம் எவ்வளவு கேலிக்குரிய விசயம் என்பதன் சாட்சியமாய் அப்போது நான் இருட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பேன்.

பிறவிக் குறைபாட்டுடைய குழந்தைகளைத் தேடியலைகிற நாட்களில் இந்த உலகின் சப்தங்கள் யாவும் எனக்கு கூடுதலான துன்பத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. அறையின் சிறு கடிகார முட்கள் நகருதலும்கூட எரிச்சலூட்டுவதாய் அமையும். குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி அவதியுறுகிற பொழுதில் அவ்வப்போது தூரத்தில் சொட்டிக் கொண்டிருக்கிற குழாயின் சப்தமும்கூட என்னுடைய வேதனையை துரிதப்படுத்துவதாய் இருக்கும். துயரத்தைத் தருகிற இந்த சப்தங்களில் இருந்தெல்லாம் என்னால் ஒருபோதும் துண்டித்துக் கொள்ளவே முடியாதா என்கிற கோபமும் எரிச்சலுமாக அவை ஒவ்வொன்றும் என்னை சித்திரவதை செய்வதைப் போலிருக்கும்.

இந்தப் பிஞ்சுக் குழந்தைகளால் மகிழ்ச்சியின் சிறு சப்தங்களைக்கூட கேட்டு இரசிக்க முடியாது என்பது எத்தகைய துயரமான விசயம்? பெற்ற தாயின் குரலைக் கூட கேட்டுச் சிரிப்பதற்கு உரிமையில்லாத குழந்தைகளா இவர்கள்? தங்களின் சொந்த மூச்சுவிடுகிற சப்தங்களையும் இருதயம் துடிக்கிற துடிப்பொலியையும்கூட இவர்களால் கேட்டு உணர முடியாமல் போய்விட்டதா? கருவாய் உருக்கொண்ட தருணத்திலிருந்தே அவர்களுக்கென்ற தனித்த உலகில் மீட்டப்படுகிற இசையாகவும் புரிந்து கொள்ளப்படாத மொழியாகவும் இறுதிக் காலம் வரையிலும் அவர்களோடே தொடர்கிற நுரையீரலினுடைய அந்த குட்டி இதயத்தினுடைய குரல் மட்டும்தான் இவர்களது ஒட்டு மொத்த வாழ்க்கையின் ஓசைகளின் உலகமா? இப்படி யோசித்து யோசித்து இன்னும் எத்தனைக் காலம் தான் வலியிலும் வேதனையிலும் என்னை நானே துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கப் போகிறேனோ என்று எனக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் இப்படி பைத்தியக்காரத்தனமாக சிந்திக்கிற போதுதான் இத்தகைய குழந்தைகளுக்கென்று என்னால் இயன்ற ஏதாவது ஒன்றை செய்துவிட முடியாதா என்கிற ஏக்கமும் பரிதவிப்பும் என்னோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

மஞ்சள் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அறைகளை வண்ணங்களால் நிரப்பிக் கொண்டிருந்த தருணத்தில் பகல் பொழுது மெல்ல உதயமாகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் நான் அடிக்கடி எங்கே இருக்கிறேன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. விடியற் பொழுதிற்கென வீசுகிற புங்கை மரத்தினூடே நுழைந்து வருகிற மெல்லிய தென்றல் காற்று நாசித்துவாரம் வழியே நெஞ்சுக்குள் இதமாய் இறங்குகிறது. ஜன்னலுக்கு வெளியே காட்டு ரோஜாக்கள் சிவப்பாயும் மஞ்சளாயும் வெள்ளையாயும் வண்ண வண்ணமாய் பூத்துச் சிரித்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது நான் நிதானத்திற்கு வருவதற்கான வழிகள்தான் இவையெல்லாம்.என் பள்ளிக் காலத்தில் பெரியவர்களாக ஆவது பற்றிய கற்பனைகளும் ஆசைகளையும் போல வகுப்பில் நன்றாக படிப்பவர்களிடையே மருத்துவர்கள் ஆவது பற்றிய கட்டுக்கதைகள் தான் அதிகமாயிருக்கும். மாளிகை வீடும் காரும் வைத்திருப்பவர்களால் மட்டுமே டாக்டராக முடியும், மருத்துவம் படிக்கப் போகிறவர்களை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றுதான் பாடம் நடத்துவார்கள், உயிரோடு ஒருவரை அறுத்துப் பார்த்துத்தான் படித்து தேர்ச்சியாக வேண்டியிருக்கும், நோயளிகள் இறந்து போனவுடன் அவர்களின் ஆவியுடன் மருத்துவர்கள் பேசுவார்கள், அவர்களுக்கு ஆவியின் பாஷை தெரியும் என்பன போன்ற கத்தை கத்தையான கதைகளோடும் நெஞ்சிலே தங்கிவிட்ட பதட்டத்தோடும் தான் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று நான் படிப்பில் சேர்ந்தேன்.

அன்றாடம் மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளெல்லாம் அவர்களுடைய நோய்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கிச் சொல்வதை சரியாக புரிந்து கொள்வதில்லை, அதன்படி நடந்து கொள்வதில்லை என்று பரிகாசம் செய்கிறவர்களைப் போலத்தான் நானும் ஒரு மருத்துவனாய் ஆரம்பத்தில் இருந்தேன். ஆனால் மருத்துவம் பற்றிய எவ்வித முன் அறிமுகமும் இல்லாமல் மருத்துவக் கல்லூரி சென்று அங்கே நான் படித்துத் தெளிந்து புரிந்து கொள்வதற்கு பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சியடைந்த எனக்கே ஐந்தரை ஆண்டுகளாகிற போது கிராமத்தின் படிக்காத பாமர மக்களாகிய இந்த பெற்றோர்களெல்லாம் நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்வதற்கு அதிகமான காலமும் கூடுதல் புரிதலும் தேவையானதாகத்தானே இருக்கும் என்று விளங்கிக் கொள்ளவே எனக்கு இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது.

ஆனாலும் தமிழ்வழி கல்வி கற்ற, அதிலும் கிராமத்தின் பின்புலத்திலிருந்து வந்த என்னால் வெகுசீக்கிரமாகவே மக்களின் மொழியில் எளிதாக மருத்துவத்தைக் கொண்டு சேர்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இன்னும் எனக்குள் வலுவாகவே இருக்கிறது. இப்போது நான் செய்ய வேண்டியதெல்லாம் பள்ளி மாணவனாக கல்லூரி சென்ற போது இருந்த மனிநலையிலிருந்தே மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அதுதான் சரியானதாகவும் இருக்கக்கூடும் என்று ஆழ்மனதின் குரல் என்னிடம் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

மருத்துவக் கல்லூரிக் காலமானது கூட்டுப்புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் பறப்பது வரையிலான பருவங்களைப் போல அழகழனாக வசந்தகால பருவங்களாக இருக்கும். அங்கே படிப்பு என்பதே முழுக்க முழுக்க மனிதர்களைப் பற்றியே பகுத்துப் பார்க்கிற படிப்பாக முற்றிலும் வேறானதாக இருக்கும். ஐந்தரை ஆண்டுகாலம் கொண்ட மருத்துவப் படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் படித்து தேர்ச்சியடைவதாகவும், இறுதியில் ஓராண்டானது மருத்துவமனையில் பணிபுரிகிற பயிற்சிக் காலமாகவும் சேர்ந்தே இருக்கும். முதலாம் ஆண்டில் மனிதனைப் பற்றிய மருத்துவத்தின் அடிப்படை பாடங்களான உடலமைப்பு, அதன் இயக்கங்கள், அப்படி உடல் தொடர்ந்து அயராமல் ஓடுவதற்குத் தேவையான உள்ளே நடக்கிற வேதியல் மாற்றங்கள் போன்ற பாடங்களைப் பற்றித்தான் நன்றாக படிக்க வேண்டியிருக்கும். முதலாம் ஆண்டின் மருத்துவ மாணவர்களாகிய நாங்கள் அந்த வருடத்தில் நேரிடையாக நோயாளிகளைச் சந்திக்கவே வாய்ப்பிருக்காது. கல்லூரியின் இரண்டாம் ஆண்டில்தான் நுண்ணியிரிகள், மருந்துகள், உடல் கோளாறுகள், போஸ்ட் மார்டம் பற்றியும் அதே சமயம் மருத்துவமனைக்குச் சென்று வார்டுகளில் நோயாளிகளை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அறிகுறிகளைக் கேட்டு அவையெல்லாம் என்ன நோயென்று படித்த புத்தகங்களின் வழியே தேடிக் கண்டுபிடிக்கிற படிப்பினையும் துவங்கும்.நாங்கள் மூன்றாவது ஆண்டில் கால் வைத்த போதுதான் காது மூக்கு தொண்டைக்கென தனியொரு படிப்பும், அதற்கான தனித்துறையும் இருப்பதை அறிந்து அங்கே தினந்தினம் வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்தோம். அப்போதெல்லாம் அங்கே வரும் பெரும்பாலான குழந்தைகள் யாவும் காதுகளில் அழுக்குப் படிந்திருக்கிறது, சீழ் வடிகிறது, காதுக்குள் எறும்பு போய்விட்டது இப்படியாகத்தான் வருவார்கள்.  அவர்களின் குறைகளைக் கேட்டுப் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவதோடு எங்களது கடமைகள் முடிந்துவிடும். ஆனால் படிக்கிற அந்த ஐந்தரை ஆண்டுக் காலத்திலே காது கேளாமலோ வாய் பேசாமலோ பிறவிக் குறைபாட்டோடு வருகிற, அவர்களைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிற ஒரு குழந்தையைக் கூட அப்போது நான் கண்டதில்லை. அதனாலேயே இது மிகவும் அபூர்வமாக தோன்றக்கூடிய நோயென்றும், ஆகையால் அதுவொன்றும் அவ்வளவு முக்கியமான பாடமில்லை போல என்றுமே புரிந்து வைத்திருந்தேன். ஆனால் இன்று மக்களிடையே சென்று பார்க்கிற போதுதான் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இச்சமூகத்திலே இக்குறைபாட்டைக் கண்டறிந்தும், இன்னும் கண்டறியப்படாமலும், சிகிச்சை கிடைக்காமலும், கிடைத்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ள இயலாமலும் இருக்கிறார்கள் என்கிற உண்மையை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு மருத்துவராக நோயாளிகளைக் காண்கின்ற போது எனது மருத்துவப் பாடங்களில் சொல்லப்பட்ட அறிகுறிகள் யாவும் அந்த குறிப்பிட்ட நோயாளியிடம் இருக்கிறதா என்று புத்தகங்களையும் நோயுற்ற அந்த மனிதனையும் பொருத்திப் பார்த்தே படிக்கவும் சிகிச்சையளிக்கவும் துவங்கியிருந்தேன். அந்த புத்தகங்களையும் தாண்டி ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்கு அவர்களின் குடும்பச் சூழலையோ, வருமானத்தையோ அவர்களது படிப்பறிவற்ற நிலையையோ கணக்கில் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் கிராமத்திற்கு அரசு மருத்துவராக பணிக்கு வந்துவிட்ட இந்த ஐந்தாண்டுகால அனுபவத்தில் அவற்றையெல்லாம் விளங்கிக் கொள்ளும்படியான எத்தனையோ சூழல்களை நான் சந்தித்திருக்கிறேன்.

அதிகாலையில் மில் வேலைக்கும், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் செல்வதற்கு முன்பாக அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு அரைவயிற்றோடு வேலை பார்க்கக் கிளம்புகையில் ஏதோ ஒரு ஊசி போட்டால் போதும் உடல் அசதியின்றி சுலகுவாக வேலையை முடித்துவிடலாம் என்று மருத்துவமனைக்கு வருபவர்களை நான் சும்மா சும்மா ஊசி போட்டுக் கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகாது என்று சத்தம் போட்டு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் தினமும் மருத்துவமனைக்கு வந்து வரிசையில் நிற்கையில் அன்றாடம் வந்து ஊசியை போட்டுக் கொண்டால் அப்படியே கிட்னியை கழற்றி வெளியே வைத்துவிட வேண்டியதுதான் என்று ஊசியின் மீதான பயத்தை ஏற்படுத்தி அவர்களை சமாதானப்படுத்தவே முயன்றிருக்கிறேன். ஆனாலும் அப்படி அவர்கள் ஊசியைப் போட்டுக் கொள்ள வருவதற்கும் தினக்கூலியாய் வேலை செய்து அன்றாட வாழ்வை ஓட்டுவதற்குமான புரிதலை இப்போதுதான் நான் உணரவே ஆரம்பித்திருக்கிறேன்.

இப்படி கிராமத்திற்கு வந்து மக்களிடையே பணிபுரிந்த அனுபவத்திற்குப் பின்னால் தான் நாம் வெறும் புத்தகத்தின் பக்கங்களை வைத்துக் கொண்டு மட்டும் மருத்துவத்தை அளித்துவிட முடியாது. அப்படி முழுமையான மருத்துவத்தை வழங்குவதற்கு மக்களின் வாழ்க்கையும் அவர்களது அடிப்படையான குடும்பச் சூழலையும் நாம் நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே விளங்கத் துவங்கியது.நன்றாக பொழுது புலரத் துவங்கிய அதிகாலை வேளையில் வெயிலும் உக்கிரம் கொள்ளத் துவங்கியிருந்தது. புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க வாசிக்க கல்லூரிக்கால நினைவுகளும் பால்யகால ஞாபகங்களும் அத்தோடு அந்த பால்யகாலமே கேள்விக்குறியாக்கப்பட்ட காது கேளா குழந்தைகளுமாக நினைவுகள் மாறிமாறி வந்த வண்ணமாகவே இருந்தது. அது என்னவோ கண்முன்னே சிதறிக் கிடந்த கல்லூரிக்கால புத்தகங்களைப் பார்க்கிற போதே கடந்த கால வாழ்க்கைக்குள் மனம் சிறகடித்துப் பறக்கத் துவங்கிவிடுகிறது. பல வருடங்களுக்குப் பின்பாக இந்த மருத்துவப் புத்தகங்களுள் ஒன்றாக கிடந்த காது மூக்குத் தொண்டை புத்தகத்தை எடுத்து அதன் பக்கங்களை விரல்களில் ஓடவிட்டு நுகர்ந்து பார்த்தேன். இதுவரையிலும் தெரிந்த புத்தக வாசம் மாறி முகம் புதைத்து அழுது நனைந்த ஈரம் படிந்த தலையணையின் வாசம் போல துக்கத்தின் மணம் மூக்கை நிறைத்தது. 

அதன் ஒவ்வொரு பக்கங்களாக நகர்த்தி நகர்த்தி பிறவியிலயே காது கேளாத நோய்களைப் பற்றிய பக்கங்களைத் திறந்த போது அன்று நான் மருத்துவனாக படித்ததற்கும் இப்போது நான் சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்து படிப்பதற்குமான பார்வை முற்றிலுமாக வேறுபட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அப்போதெல்லாம் கல்லூரியில் அபூர்வமான நோயென்ற புரிதலில் இருந்த பிறவியிலியே காது கேளாத குழந்தைகளைப் பற்றிய பாடங்களெல்லாம் ஏனோ தேர்வுக்குத் தயாராக வேண்டிய பகுதியாகவும் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்குரிய பக்கங்களாகவும்தான் நினைத்துக் கொள்ளவே மனமோ இடமளித்திருந்தது. ஆனால் இப்போது இத்தகைய குறைபாட்டுடைய குழந்தைகளை நேரில் சந்தித்து வீடுகளுக்குச் சென்று களப்பணியாற்றிய பின்புதான் இவையெல்லாம் வெறுமனே சாதாரண பக்கங்கள் அல்ல, அவர்களின் எதிர்கால வாழ்க்கையே மாற்றிவிடக்கூடிய துருப்புச்சீட்டுகள் என்பதே புரிகிறது.

ஐந்தரை ஆண்டுகளாக படித்து தேர்ச்சியடைந்த போது நடுங்காத இந்த மருத்துவனின் கைகள் இன்று அதே காது மூக்கு தொண்டை பாடப் புத்தகத்தை திரும்ப வாசிக்கிற போது அதீதமாக நடுக்கம் கொள்கிறதென்றால் உண்மையில் இப்போதுதான் நான் ஒரு மருத்துவனாகவே தேர்ச்சியடைந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது. மருத்துவராவதற்கு முன்பாக நானும் ஒரு சாதாரண மனிதனாகத் தானே இருந்திருக்கிறேன் என்கிற புரிதலோடு காதுகளைப் பற்றிய மருத்துவத்தை எளிமையாக்குவது பற்றிய பணியை விரைவிலே நான் துவக்கியாக வேண்டும். இந்த புரிதல் வந்துவிட்ட பின்னால் தான் என்னால் தீர்க்கமான முழுநம்பிக்கையோடு புத்தகங்களிலிருந்து குறிப்புகளை எடுக்கவே முடிந்தது. அப்போது என்னிடமிருந்த எல்லா விதமான தயக்கமும் நடுக்கமும் அப்படியே முற்றிலுமாக கரையத் துவங்கிருந்திருந்தது.

அடுத்த பகுதியில் காதுகளைப் பற்றியும் அதன் இயங்களைப் பற்றியும் அதன் இயக்கம் தடைபடுவதால் நோயுறுவதால் ஏற்படுகிற பாதிப்புகள் சிகிச்சைகள் பற்றி விரிவாக பார்க்கலாமா..

தொடரும்..தொடர் 1:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 2:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்தொடர் 3:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 4:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்
தொடர் 5:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தொடர் 6:

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்