புவியின் ஆதி விவசாயிகள் – எறும்புகள்!
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 10
விவசாயத்தினை சொந்தம் கொண்டாட நம்மை விட எறும்புகளுக்கு அதிக உரிமையுண்டு என்கிறது புதிய ஆய்வு. சில ஆயிரம் ஆண்டுகளாக நாம் விவசாயம் செய்து வருகிறோம். எறும்புகளோ சில கோடி ஆண்டுகளாக அதை செய்து வருகின்றன என்கிறது இந்த ஆய்வு.
விவசாயம் ஒரு சிக்கலான செயல்முறை மட்டுமல்ல, ஒரு பெரிய முயற்சியும் கூட… பயிர்கள் நடப்பட வேண்டும், களை எடுக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும், மேலும் இந்த அறிவு ஒரு தலைமுறை விவசாயிகளிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு பரப்பப்பட வேண்டும்.
புதிய ஆய்வின்படி, எறும்புகளின் குழுக்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களை அழித்த சிறுகோள் பூமியில் மோதியபோது பூஞ்சைகளை விவசாயம் செய்யத் தொடங்கின.

இந்த சிறுகோள் தாக்கம் உலகளாவிய பெரும் அழிவை ஏற்படுத்தியது, ஆனால் பூஞ்சைகள் செழித்து வளர சரியான சூழ்நிலைகளையும் உருவாக்கியது.
புதுமையான எறும்புகள் பூஞ்சைகளை வளர்த்து, 2.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் நெருக்கமாக பின்னிப் பிணைந்த ஒரு பரிணாம கூட்டணியை பூஞ்சைகளோடு உருவாக்கின. பூஞ்சைகளுக்கும், எறும்புகளுக்குமான இந்த தொடர்பு இன்றும் தொடர்கிறது
அக்டோபர் 3, 2024 அன்று, சயின்ஸ் இதழில் ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விஞ்ஞானிகளால் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
நூற்றுக்கணக்கான பூஞ்சை மற்றும் எறும்பு இனங்களின் மரபணு தரவுகளை பகுப்பாய்வு செய்து விரிவான பரிணாம மரங்களை (Evolutionary trees) இந்த விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
பரிணாம மரம் என்பது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்சிப்படுத்தும் ஒரு வரைபடம் போன்றது. இது ஒரு குடும்ப மரத்தைப் போல, வெவ்வேறு உயிரினங்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றி, காலப்போக்கில் எவ்வாறு மாறி வந்தன என்பதை காட்டுகிறது.
இந்த பரிணாம மரங்களை ஒப்பிடுவதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் எறும்பு விவசாயத்தின் பரிணாம காலவரிசையை உருவாக்க முடிந்தது மற்றும் எறும்புகள் முதன்முறையாக பூஞ்சைகளை வளர்க்கத் தொடங்கியது எப்போது என்று சரியாக குறிப்பிட முடிந்தது.
“மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னரே எறும்புகள் பூஞ்சை விவசாயத்தை செய்து வருகின்றன” என்று அருங்காட்சியகத்தின் எறும்புகளின் கியூரேட்டர் மற்றும் இந்த ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியர், பூச்சியியல் நிபுணர் டெட் ஷுல்ட்ஸ் கூறினார்.
“நாம் எறும்புகளின் கடந்த 6.6 கோடி ஆண்டு கால விவசாய வெற்றியிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியும்.” என்றும் அவர் கூறுகிறார்.
அமெரிக்கா மற்றும் கரீபியனில் கிட்டத்தட்ட 250 வெவ்வேறு இன எறும்புகள் பூஞ்சைகளை விவசாயம் செய்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் இந்த எறும்புகளை அவற்றின் சாகுபடி உத்திகளின் அடிப்படையில் நான்கு விவசாய அமைப்புகளாக ஒழுங்கமைக்கின்றனர்.
இலை வெட்டும் எறும்புகள் உயர் விவசாயம் என்றும் அழைக்கப்படும் மிகவும் மேம்பட்ட உத்தியை மேற்கொள்பவர்களில் அடங்குபவை. இந்த எறும்புகள் தங்கள் பூஞ்சைகளுக்கு உணவளிக்க புதிய தாவரத்துண்டுகளை அறுவடை செய்து கொண்டுவருகின்றன. இதற்கு மாறாக பூஞ்சைகள் எறும்புகளுக்காக கோங்கிலிடியா (gongylidia) என்று அழைக்கப்படும் உணவை வளர்க்கின்றன. இந்த உணவு அக்குழுவில் லட்சக்கணக்கில் இருக்கக்கூடிய இலை வெட்டும் எறும்புகளுக்கு உணவாகிறது.
கோங்கிலிடியா என்பது எறும்புகளுக்கு ஊட்டச்சத்து மிக்க ஒரு உணவாகும். இது எறும்புகளின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு அவசியமான புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உள்ளடக்கியது.
ஷுல்ட்ஸ் 35 ஆண்டுகளாக எறும்புகள் மற்றும் பூஞ்சைகளுக்கு இடையிலான பரிணாம உறவை ஆய்வு செய்து வருகின்றார். பல ஆண்டுகளாக, ஷுல்ட்ஸ் மற்றும் அவரது சக ஊழியர்கள் வெப்பமண்டலப் பகுதிகள் முழுவதிலும் எறும்புகள் மற்றும் பூஞ்சைகளின் ஆயிரக்கணக்கான மரபணு மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
பெருமளவிலான இந்த மாதிரிகள் இந்த ஆய்விற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.

“இந்த தொடர்பு காலப்போக்கில் எப்படி உருவாகியுள்ளது என்பதை உண்மையிலேயே கண்டறிய, எறும்புகள் மற்றும் அவை பயிரிடும் பூஞ்சைகளின் நிறைய மாதிரிகள் உங்களுக்குத் தேவை” என்று ஷுல்ட்ஸ் கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்களின் குழு, 475 வெவ்வேறு பூஞ்சை இனங்கள் (இவற்றில் 288 இனங்கள் எறும்புகளால் பயிரிடப்படுகின்றன) மற்றும் 276 வெவ்வேறு எறும்பு இனங்களின் ( இவற்றில் 208 இனங்கள் பூஞ்சைகளை வளர்க்கின்றன) மரபணுத் தரவைப் பயன்படுத்தியது.
இத்தகைய மிகப்பெரிய மரபணு தரவுத்தொகுப்பு அவற்றிற்கிடையே உள்ள பரிணாம தொடர்பினைக் கண்டறிய உதவியது. இது ஆராய்ச்சியாளர்கள் பரிணாம மரங்களை இரண்டு குழுக்களாக பிரித்து உருவாக்கினர்.
இதன் மூலம் காட்டு பூஞ்சை இனங்களை, எறும்புகளால் பயிரிடப்பட்ட அவற்றின் உறவினர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர். எறும்புகள் பூஞ்சைகளை எப்போது பயன்படுத்தத் தொடங்கின எனத் தீர்மானிக்க இது உதவியது.
எறும்புகள் மற்றும் பூஞ்சைகள் 6.6 கோடி ஆண்டுகளாக பின்னிப் பிணைந்திருப்பதைத் தரவுகள் காட்டின. இது கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவில் ஒரு சிறுகோள் பூமியில் மோதிய காலத்திற்கு அருகில் உள்ளது.
இந்த பேரழிவு மோதல் பூமியின் வளிமண்டலத்தை தூசி மற்றும் சிதறல்களால் நிரப்பியது, இது சூரியனைத் தடுத்து பல ஆண்டுகளாக ஒளிச்சேர்க்கையைத் தடுத்தது. இதன் விளைவாக ஏற்பட்ட பெரும் அழிவில், அப்போது பூமியில் உள்ள மொத்த தாவர இனங்களில் பாதிக்கும் அதிகமாக அழிந்தன.
இருப்பினும், இந்த பேரழிவு பூஞ்சைகளுக்கு ஓர் வரமாக இருந்தது. பூஞ்சைகள் தரையில் கிடக்கும் ஏராளமான இறந்த தாவரப் பொருளை உட்கொண்டதால் பல்கிப் பெருகின.
“அழிவு நிகழ்வுகள் பெரும்பாலான உயிரினங்களுக்கு பெரும் பேரழிவாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அது உண்மையில் நேர்மறையாக இருக்கலாம்” என்று ஷுல்ட்ஸ் கூறினார்.
“கிரெட்டேசியஸ் முடிவில், டைனோசர்கள் அழிவின் உச்சத்திற்குச் சென்றன. ஆனால் பூஞ்சைகளோ பல்கிப்பெருகுவதில் உச்சத்தை அடைந்தன.”
இந்த காலத்தில் பெருகிய பூஞ்சைகளுக்கு பல அழுகிய இலை குப்பைகள் விருந்தாக அமைந்தன. இது அவற்றை எறும்புகளுடன் நெருக்கமாக தொடர்பு கொள்ள வைத்தது.
எறும்புகளோ உணவுக்காக ஏராளமான பூஞ்சைகளைப் பயன்படுத்தின. அழிவு நிகழ்விலிருந்து வாழ்க்கை மீளும்போது, எறும்புகள் பூஞ்சைகளைப் பெரிதும் நம்பியிருந்தன.
இதிலிருந்து எறும்புகள் உயர் விவசாய முறையினை உருவாக்க 40 மில்லியன் ஆண்டுகள் ஆனதாக புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த மேம்பட்ட விவசாய நடைமுறையின் தோற்றம் சுமார் 2.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்களால் தடயம் கண்டறிய முடிந்தது.
இந்த நேரத்தில், விரைவாக மாறிய காலநிலை உலகெங்கிலும் உள்ள சூழலை மாற்றியது. தென் அமெரிக்காவில், சவான்னா புல்வெளிகள் போன்ற வறண்ட வாழ்விடங்கள், ஈரமான வெப்பமண்டல காடுகளின் பெரும் பகுதியை சுருக்கின.
எறும்புகள் ஈரமான காடுகளிலிருந்து வறண்ட பகுதிகளுக்கு பூஞ்சைகளை வெளியே எடுத்துச் சென்றபோது, அவை அப்பூஞ்சைகளை அவற்றின் காட்டு மூதாதையர்களிடமிருந்து தனிமைப்படுத்தின.
தனிமைப்படுத்தப்பட்ட இந்த பூஞ்சைகளோ வறண்ட நிலைமைகளில் வாழ எறும்புகளை முற்றிலும் நம்பியிருந்தன. இது இன்று இலை வெட்டும் எறும்புகளால் பயன்படுத்தப்படும் உயர் விவசாய அமைப்பிற்கான பாதையை அமைத்தது.

அதாவது, காலப்போக்கில், சில எறும்புகள் தங்கள் பூஞ்சை உணவுகளுடன் மிகவும் பன்முகப்பட்ட உறவுகளை உருவாக்கின. இன்று இலை வெட்டும் எறும்புகள், இலைகளை வெட்டி எடுத்துச் சென்று, தாங்கள் வளர்க்கும் பூஞ்சைகளுக்கு உணவாக வைப்பதைப் போல… நிபுணர்கள் இதை “உயர் விவசாயம்” என்று குறிப்பிடுகின்றனர்.
“மனிதர்கள் பயிர்களை வளர்த்ததைப் போலவே எறும்புகள் இந்த பூஞ்சைகளை வளர்த்தன”
“அற்புதமான விஷயம் என்னவென்றால், இப்போது நம்மால் எறும்புகள் பூஞ்சைகளை முதலில் வளர்த்த காலகட்டத்தினைக் கூற முடியும்.”
“ஒரு மகள் ராணி எறும்பு, தனது தாயின் கூட்டை விட்டு வெளியேறி தனது சொந்த கூட்டைத் தொடங்க தயாராகும்போது, அவள் தனது தாயிடமிருந்து பூஞ்சையின் சிறிய பகுதியை தனது வாயில் எடுத்துச் செல்கிறாள்”
“எறும்புகள் மற்றும் பூஞ்சைகள் ஒருவருக்கொருவர் உதவுகின்றன, ஆனால் அவை மனித விவசாயிகளுக்கும் கூட உதவ முடியும்.”
“மனிதர்கள் 12,000 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். எறும்புகளோ 6.6 கோடி ஆண்டுகளாக.” என்று ஷுல்ட்ஸ் கூறுகிறார்.
மனிதர்கள் பழங்காலத்தில் மரங்களில் பழங்களைத் தேடி அலைந்தபோது, எறும்புகளோ, தங்கள் சொந்த தோட்டங்களை உருவாக்கி வைத்திருந்தன அதற்கும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே…
எறும்புகள் தங்கள் பூஞ்சை பயிர்களை நோயிலிருந்து காப்பாற்றி, ஆரோக்கியமாக வைத்திருக்க, சிலவகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்துகின்றன. மேலும் மனித விவசாயிகள் தங்கள் பயிர்களுடன் பெறுவதைக் காட்டிலும், பெரும்பாலும் அதிக வெற்றியைப் பெறுகின்றன.
எறும்புகள் அதை வெற்றிகரமாக எப்படி செய்து வருகின்றன என்பதை நாம் கண்டுபிடிக்க முடிந்தால், அது நமது விவசாய நடைமுறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வாய்ப்பிருப்பின் உங்கள் காலடியில் ஊர்ந்து செல்லும் அந்த குட்டி எறும்பிடம் கேட்டுச் சொல்லுங்களேன்!
தொடர்ந்து அறிவியல் பேசலாம்!
ஆய்வுக்கட்டுரை இணைப்பு :
https://dx.doi.org/10.1126/science.adn7179
கட்டுரையாளர் :

த. பெருமாள்ராஜ்
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் தொடரின் முந்தைய கட்டுரையைப் படிக்க : பூஞ்சைகள் ஒலியைக் கேட்டு வளருமா? சூழல் மீட்பில் புதிய நம்பிக்கை!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: ஓவியக் காட்சியில் ஒரு சுவாரசிய ஆய்வு - Book Day