சூழலியல் என்றால் என்ன?
ஜெர்மானிய அறிவியல் அறிஞர் எர்னஸ்ட் ஹேக்கல் (Ernst Heinrich Philipp August Haeckel :1834-1919) என்பவரால் முதன்முதலாக உருவாக்கப்பட்ட ‘சூழலியல்’ (ecoloy) என்ற சொல், இன்று உலகின் எப்பகுதியிலும் புறக்கணிக்கப்பட முடியாத அறிவியல் துறையாக வளர்ந்துள்ளது. இது ‘வீடு’ அல்லது ’இயற்கையான வாழிடம்’ என்ற பொருள் தரும் ‘oikos’என்ற கிரேக்க வேர்சொல்லிருந்து பிறந்ததாகும். உயிரினங்களுக்குள்ளேயே ஒன்றுக்கொன்றுள்ள உறவு; உயிரினங்களுக்கிடையே ஒன்றுக்கொன்றுள்ள உறவு; உயிரினங்களுக்கும் அவற்றின் சுற்றுச்சார்புகளிலுள்ள உயிருள்ள, உயிரற்ற கூறுகள் அனைத்துடனும் கொண்டுள்ள உறவு ஆகியன பற்றிய அறிவியல் ஆய்வுதான் ‘சூழலியல்’.
முதலாளியமும் சூழலியலும்
இன்றைய முதலாளிய பொருளாதார அமைப்பில் பொருளுற்பத்தி நேரடியாக மானுடத் தேவைகளுக்கோ, சுற்றுச்சூழல் தேவைகளுக்கு ஏற்ற வகையிலோ நடைபெறுவதில்லை. மாறாக, இலாபங்களைத் திரட்டவே நடைபெறுகிறது. இதன் காரணமாக, அடிப்படையான மனித மற்றும் சுற்றுச்சூழல் (இயற்கை) தேவைகள் பூர்த்தி செய்யப்படாததுடன், உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் கணிசமான பகுதி விரயமாக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக வணிகத்திலும் நிதியிலும் மூலவளங்கள், பொருள்களை வாங்குவதிலும் விற்பதிலுமே பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி, கணிசமான மூலவளங்கள் ஆயுத, இராணுவ தளவாடங்களைளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன மேலும், முதலாளிய அரசுகள், தொழில்நிறுவனங்கள் ஆகியன மட்டுமல்லாது தனிநபர்களும்கூட போட்டி போட்டுக் கொண்டு தங்கள் உற்பத்திப் பொருள்களை வெளியே தள்ளும்படி , அதாவது வேண்டாத,விரயமாகிற பொருள்களையும் கழிவுப் பொருள்களையும் சுற்றுச்சூழலில் கொட்டும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.இந்த முதலாளிய அமைப்பு முழுவதுமே- பொருளுற்பத்தி முறையிலிருந்து, என்னென்னெ பொருள்களை உறத்தி செய்ய வேண்டும் என்பது வரை, மூலதனத் திரட்டல் நோக்கத்துக்குத்தான் இயங்குகின்றது; மனிதஇனத்தின் இருப்பையும் மட்டுமல்ல, மற்ற உயிர் ராசிகளின் இருப்பையும் சுற்றுசூழலில் ஜீவாதாரரமானவையாக இருக்கின்றவற்றைப் பற்றியும் கவலைப்படாமல், அவற்றை அழிக்கின்றன. கண்மூடித்தனமான பொருளாதார சக்திகளின் ஆளுகைக்குப்ட்பட்ட பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால், உற்பத்தி, விற்பனை ஆகியவற்றைப் பற்றிய முடிவு எடுப்பவர்கள், அவர்களுக்குள்ள தனிப்பட்ட உணர்வுகள், கருத்துகள் எவையாக இருந்தாலும் –இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தவும், விரயங்களைச் செய்பவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.
புவி வெப்பமாதல்
சூழலியல் கேட்டின் பெரும் விளைவுதான் புவி வெப்பமாதல் ( Global Warming) என்பதாகும். உலகெங்கும் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள், மோட்டர் வாகனங்கள், குளிர்பாதன சாதனங்கள் எல்லாவற்ற்க்கும் மேலாக புதை படிவ எரிபொருள் (fossil feuel) , அதாவது பெரோல் , டீசல் முதலியன வளிமண்டலத்திற்குள் கார்பன் டை ஆக்ஸைட், மீத்தேன், நைட்ரஸ் டை ஆக்ஸைட், சல்ஃபர் டை ஆக்ஸைட் போன்ற வாயுக்களை இடைவிடாமல் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், ஓசோன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோபுளோரோகார்பன்கள், நீராவி முதலிய முக்கிய பசுமை இல்ல வாயுக்கள்.( இதில் நீராவியின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காது ; மழையாக பொழிந்து விடும்). இந்த வாயுக்கள்தான் பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gases ) என்றழைக்கப்படுகின்றன. இவற்றின் விளைவாக புவிக் கோளம் சூடாவது பசுமை இல்ல விளைவு (Green House Effect ) என்றழைக்கப்படுகிறது. பசுமை இல்ல விளைவு என்பது ஒரு எல்லை வரை அவசியமானதுதான்.
சூரியனிலிருந்து வரும் ஒளி போன்ற மின்காந்த அலைகள் பூமியின் தரையில் படும்போது அதன் ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. சூடான பாத்திரம் அனல் அலைகளை வெளியிடுவது போல பூமியின் தரையும் உறிஞ்சிய ஆற்றலை வெளியே உமிழ்கிறது. உமிழப்படும் ஆற்றல் அக சிவப்பு கதிர்களாக வெளிபடுகிறது. நீரை ஸ்பான்ஜ் உறிஞ்சிக்கொள்வது போல வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அகசிவப்பு கதிர்களை உறிஞ்சிக்கொள்ளும். அந்த ஆற்றலை மறுபடி கார்பன் அணு அக சிவப்பு கதிர்களாக உமிழும். மறுபடி உமிழப்படும் ஆற்றல் எல்லா திசைகளிலும் உமிழப்படும்.எனவே இதன் ஒரு பகுதி பூமியை நோக்கி திரும்ப வரும். இதே போல தான் ஏனைய பசுமை இல்ல வாயுக்களும் பூமி வானம் நோக்கி உமிழும் அகசிவப்பு கதிரை உறிஞ்சி அதன் ஒருபகுதியை பூமி நோக்கி திருப்பிவிடும்.
அதாவது பசுமை இல்ல வாயுக்கள் ஒரு கம்பளிப் போர்வை போல வளிமண்டலம் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்வதால்தான் புவிக் கோளம் கதகதப்பாக உள்ளது; தண்ணீர் திரவ நிலையில் இருக்கிறது; பூமியில் உயிரினங்கள் வாழ முடிகிறது. இந்தப் பசுமை இல்ல விளைவு இல்லாவிட்டால் பூமி அதன் தற்போதைய வெப்பநிலையைவிட மிகவும் குறைந்து குளிரால் உறைந்து போயிருக்கும்.
சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் எக்ஸ் கதிர்கள் புறஊதா கதிர்கள் முதலிய பூமியின் வளிமண்டலம் வடிகட்டி விடுகிறது. ஆபத்து விளைவிக்கும் புற ஊதா கதிர்களை ஓசான் படலம் தடுத்து நிறுத்தி விடுகிறது.ஆபத்தான புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் போர்வையாக பூமியைச் சுற்றிலும் அமைந்துள்ள வளிமண்டத்திலுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.அதன் பின்னர் நுணுக்கமான அறிவியல் ஆய்வு மூலம் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தும் வேதிப் பொருள்களை இனம் காணுதல், இந்த வேதிப் பொருள்களை ஒதுக்கிய மாற்றுத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், பரந்துபட்ட மக்கள் போராட்டம், சர்வதேச உடன்படிக்கை, மக்கள் நல அரசுகளின் (Welfare states) முயற்சிகள்,உலகம் தழுவிய கட்டுப்பாட்டு விதிகள், கண்காணிப்பு, மொன்ட்ரியல் ஒப்பந்தத்தின்படி உலகம் தழுவிய குறை களைவு நடவடிக்கை போன்றவற்றின் காரணமாக அபாயகரமாக விரிந்து சென்ற ஓசான் ஓட்டை மேலும் சீரழிவது தடுக்கப்பட்டுள்ளது.
எனினும் மனிதகுலம் ஒன்பது அபாயங்களை எதிர்கொண்டுள்ளது: வளிமண்டல கார்பன் செறிவு கூடும் அபாயம் உளபட ஓசான் படலத்தில் ஓட்டை விழுதல், கடல் அமிலமாதல், நிலப் பயன்பாடு மாறுதல், நன்னீர் கிடைப்பது குறைதல், காற்றில் நுண்தூசிப்படலம் படர்தல், சுற்றுச்சூழலில் புதிய வேதிப்பொருள்கள் மற்றும் உயிரிப் பொருள்கள் புகுதல், பல்லுயிரிய அழிவு, சுற்றுச்சூழலில் நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற வேதிப்பொருள்களின் சுழற்சி பிளவுபடல் ஆகிய சுற்றோட்டங்களே (cycles) அவை. இந்த அபாயங்களை முற்றிலுமாக அகற்றுவது அறிவியாலால் மட்டும் சாத்தியப்படாது. மாறாக மனித உழைப்பைச் சுரண்டுவதுடன், இலாப நோக்கத்திற்காக இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் முதலாளிய உற்பத்தி முறைக்கு முடிவு கட்டினால்தான் சாத்தியம்.
சூழலியல் ,சுற்றுச் சூழல் கேடுகள் பற்றி பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துகள்
இங்கிலாந்து அரசாங்கமும் ரோதம்ஸ்டெட் ஆராய்ச்சி மையமும் (Rothamsted Research – 1843இல் நிறுவப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் உலகிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகப் பழமையானவற்றில் ஒன்று) வெளியிட்ட அறிக்கைகள் மண் வளம் எவ்வளவு முக்கிய்மானது என்பதையும் அது எவ்வாறு சிதைக்கப்பட்டு வருகிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளன.
ரோதம்ஸ்டெட் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை, மிக அதிக அளவிலான வேதி உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வது மண்ணில் இயற்கையாக உள்ள உயிரினங்களையும் (விலங்குகள், நுண்ணுயிர்கள் , மண்ணின் கட்டமைப்பையும் (மண்ணிலுள்ள அடுக்குகளையும் மண், வண்டல்,களிமண் ஆகியவற்றின் தனித்தனித் துகள்கள் ஒன்றிணைந்து மண் ’துணுக்களை’ உருவாக்க்கும் முறையையும்) மிகவும் பாதித்து மண்ணிலுள்ள கரிமத்தை வளிமண்டலத்துக்குச் செலுத்தி கணிசமான அளவில் புவி வெப்பமயமாதலுக்குக்கு (Global warming) பங்களிக்கின்றன என்று கூறுதிறது. இந்த அறிக்கை பலவிதங்களில் 50 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசங்கத்தின் வேளாண், மீன்வள, உணவுத் துறையால் வெளியிடப்பட்டதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ’ நவீன வேளாண் முறையும் மண்ணும்’ என்ற அறிக்கையிலுள்ள விவரங்களை இன்று கிடைத்துள்ள ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு செழுமைப்படுத்தியுள்ளது. மேலும் ,வேளான்மை செய்வதில் பயன்படுத்தப்படும் உரங்கள் மீது மட்டுமின்றி கனரக இயந்திரங்கள் மீதும் இந்த அறிக்கை கவனம் குவித்து அவற்றுக்கு அழுத்தம் தந்து, இவற்றின் விளைவாக மண்ணின் (குறிப்பாக வண்டல் மண்) கட்டமைப்பு சீர்குலைவதையும் மண் ணரிப்பு எற்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது.
மண் வளம் பற்றிய அக்கறை இந்த அறிக்கைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியது. 1843இல் எங்கெல்ஸ் எழுதிய ‘அரசியல் பொருதாரம் பற்றிய விமர்சனத்துக்கான குறிப்ப்புரை (Outlines of a Critique of Political Economy) என்ற கட்டுரையில் ”நமது வாழ்க்கைக்கான முதல் நிபந்தனையாக உள்ள ஒரே ஒரு புவி மண்டலத்தை முதலாளியம் கூவி விற்கப்படகூடிய ஒரு வணிகப் பொருளாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டார். அடுத்த ஆண்டில்( 1844) எழுப்பட்ட ‘பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிககளில் மார்க்ஸ் கூறினார்: “ நமது வாழ்க்கை இயற்கையிலிருந்து பெறப்பட்டது. எனவே நாம் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதனுடன் நாம் இடையறாத உரையாடலைச் செய்ய வேண்டும். நமது பெளதிக, ஆன்மிக வாழ்க்கை இயற்கையுடன் பிணைக்கபட்டுள்ளது என்பதன் பொருள், இயற்கை தன்னுடன் தானே பிணைக்கபட்டுள்ளது என்பதாகும். ஏனெனில் நாம் இயற்கையின் பகுதி.”
[ 1.Marxism and ecology: Does the answer ‘lie in the soil?’Morning Star Online, 27 May, 2024
2.F. Engels, ‘Outlines of Ploitical Ecinimy’ –Appendix to Karl Marx, Economic and Philosophic Manuscripts 1844, Progress Publsidhers, Moscow, 1961]
24 வயதில் எங்கெல்ஸும் 26 வயதில் மார்க்ஸும் கூறியவை முதிச்சியடைந்து இயற்கைச் சுற்றுச் சூழல் மீது மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கம், அந்தத் தாக்கத்திற்கும் இயறகைச் சுற்றுச் சூழலுக்குமுள்ள பரஸ்பரத் தொடர்பு ஆகியன பற்றிய அவர்களது விழிப்புணர்வை வளர்ச்சியடையச் செய்தது. ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யில் அவர்கள், முதாளியத்தின் இயங்கு விசை எவ்வாறு இலாபத்தை அடையும் பொருட்டு உலகத்தை இடைவிடாது மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மக்களின் நலனுக்காக சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டியது தேவை என்பதையும் அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றனர். ’மூலதனம்’ நூலின் முதல் பாக்த்தை எழுதும் போதும், குறிப்பாக அது வெளியிடப்பட்ட பிறகும் மார்க்ஸும் எங்கெல்ஸும் மனிதர்களுக்கும் இயற்கைக்குமுள்ள உறவுகளின் இயங்கு விசை, முதலாளியத்தால் எற்படுத்தப்படும் சூழலியல் கேடுகள் ஆகியயற்றின் மீது ஆழமான அக்கறை காட்டி வந்தனர்.’மூலதனம்’ நூலில் பகுத்தாய்வுக்கு உள்படுத்தப்படுவது முதலாளியப் பொருளாதாரம்தான் என்றாலும், அதிலுள்ள சில முக்கியமான பல பத்திகள் மனித்ர்களின் பரிணாம வளர்ச்சி, அவர்களின் உயிரியல் தன்மை , மனித்ரகளால்லாத உலகுடன் (அதாவது இயற்கையுடன்) அவர்களுக்குள்ள உறவுகள்) ஆகியன பற்றிய அவரது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
[3.Kar Marx, Economic and Philsophic Manuscripts, 1844.
4.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மேம்படுத்தப்பட்ட பதிப்பு, தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை, பாரதி புத்தகாலயம், சென்னை, 2023.]
மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவருமே சுற்றுச்சுழல் சீரழிவு என்பது, முதலாளியத்தின் கீழ் மனிதர்கள் இயற்கையிலிருந்துஅந்நியமாகி வருவதன் பின்விளைவே என்பதைச் சுட்டிக் காட்டி வந்தனர். முக்கியமாக மார்க்ஸ் மண் வளம் மீது கவனம் குவித்து வந்தார். ‘மூலதனம்’ நூலை எழுதுவதற்கான அவரது ஆராய்சசியில் உள்ளடங்கிய முக்கியமான விஷயங்களிலொன்று அன்றைய அறிவியலாளர்களிலொருவரான யுஸ்டஸ் ஃபான் லீபிக் ( Justus Von Liebig), வேளாண் வேதியியல் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளாகும்.லீபிக்கின் கருத்துகளில் சில ‘மூலதனம்’ முதல் பாகத்தில் காணப்படுகின்றன. வேளாண்மை வேதியியல், மண்ணரிப்பு, கால் நடை வளர்ப்பு முதலியவற்றில் முதலாளியம் மேற்கொண்ட முறைகளையும் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி நூல்களையும் மார்க்ஸ் படித்து வந்ததையும் பற்றி தமிழில் அறிவியல் அறிஞர் த.வி.வெங்கடேஸ்வரன் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய மூன்று கட்டுரைகளையும் , மார்க்ஸிய அறிஞர் மு.வசந்தகுமர் எழுதிய கட்டுரையையும் அதேபோல சூழலியல் பற்றிய மார்க்ஸின் ஆழமான பார்வையை வெளிப்படுத்திகிற வகையில் அமெரிக்க மார்க்ஸிய அறிஞர் எழுதி 2000ஆம் ஆண்டில் வெளிவந்த ‘Marx’s Ecology’ என்ற நூலையோ ’ மார்க்ஸும் சூழலியலும் ‘என்ற தலைப்பில் மு.வசந்தகுமார் செய்துள்ள தமிழாக்கதையோ முற்போக்கு இடதுசாரி எண்ணம் கொண்டவர்கள் படிப்பதும் அவசியம்.
[5. த.வி.வெங்கடேஸ்வரன், கார்ல் மார்க்ஸும் இயற்கை அறிவியலும்; மண்ணும் மார்க்ஸும்: விவசாயம் குறித்த அறிவியல் பார்வைகள்; மார்க்ஸும் சூழலியலும்; மு.வசந்தகுமார், இயற்கக்கு மதிபளிக்கவில்லையா மார்க்ஸ்?, கார்ல் மார்க்ஸ் 200: உயிர் எழுத்து கட்டுரைகள் ( பதிப்பாசிரியர்) எஸ்.வி.ராஜதுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை, 2029ப.156-175,431-465,480-395, 496-541; ஜான் பெல்லாமி ஃபோஸ்டர், மார்க்சும் சூழலியலும் , தமிழாக்கம் : மு .வசந்தகுமார், விடியல் பதிப்பகம், கோவை, 2011.]
மனிதர்களின் செயல்பாடுகள் வளிமண்டலத்தில் பெருமளவில் கார்பன டை ஆக்ஸடையும் உயிர் மண்டலத்தில் (biosphe) நைட்ரஜனையும் செலுத்தி பருவநிலை மாற்றத்துடன் இணைந்து உயிர் பன்மயம் (biodiversity) உணவுப் பாதுகாப்பு, மனிதர்களின் உடல் நலம், தண்ணீரின் தன்மை ஆகியன மாற்றமடையும் பருவநிலையால் பாதிக்கப்படுவதைப் பற்றிய ஆராய்ச்சிகள் ஏதும் இருக்கவில்லை. ஆனால், இன்று அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மேற்சொன்ன பாதிப்புக்கான தீர்வுகளை விஞ்ஞானிகள்கண்டு பிடித்து வருகின்றனர்.
இருப்பினும் தங்கள் காலத்தில் இருந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளை ஆழமாகப் படித்தும் அவர்களில் சிலரோடு நேரடியான தொடர்பு கொண்டும் சூழலியல் கேடுகளுக்கான காரணங்களை மார்க்ஸும் எங்கெல்ஸும் கண்டறிவதில் மிகுந்த முணைப்புக் காட்டினர். அன்று மான்செஸ்டர் நகரில் வசித்து வந்த எங்கெல்ஸ் மீது தாக்கம் ஏற்படுத்தியவர் ‘சிகப்பு வேதியிலாளர்’ என்றழைக்கப்பட்டவரும் எங்கெல்ஸின் நெருக்கமான நண்பருமான கார்ல் ஷாலமெர் (Carl Schorlemmer) . தனக்கு வரும் முக்கியமான கடிதங்கள், காவல் துறையின் கைகளில் சிக்காமலிருக்கும் பொருட்டு பல சமயம் எங்கெல்ஸ் ஷால்மெரின் முகவரியைப் பயன்படுத்தி வந்தார். நகைச்சுவை உணர்வு மிக்க அவருக்கு மார்க்ஸ் ஜாலி மெய்ர் (Jollymeir) என்ற செல்லப் பெயரிட்டார். ‘மூலதனம்’ நூலின் முதல் பாகம் 1867இல் வெளிவந்தது. அடுத்த பாகங்கள், மார்க்ஸின் குறிப்புகளின் அடிப்படையில் எங்கெல்ஸாலும் கார்ல் காவுட்ஸ்கியாலும் பதிப்பிக்கப்பட்டு அடுத்த பதினைந்து ஆண்டுக் காலத்தில் வெளிவந்தவையே. இடைப்பட்ட காலத்தில் மார்க்ஸ் இயற்கை அறிவியல், உயிரியல், வேதியியல், நிலவியல், கனிமவியல் முதலியவை குறித்து ஆழமாகப் படித்ததற்கான சான்றுகள் அவரது பல்வேறு குறிப்பேடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக வேளாண்மை வேதியியல், மண்வளம் ஆகியன பற்றி அவர் எழுதிவைத்த ஏராளமான குறிப்புளை உள்ளடக்கியிருப்பவைதான், அவரது சிந்தனை வளர்ச்சியை எடுத்துரைக்கும் சான்றுகளிலொன்றான ‘சூழலியல் குறிப்பேடுகள்’ (Ecological Notebooks) எனப்படும் ஆவணமாகும்.
ஆங்கிலேய விவசாயப் புரட்சி தொடர்பாக ஃபான் லீபிக் (Justus von Liebig) மேற்கொண்ட ஆய்வுகள்தாம் மண்வளம் குறித்துச் சிந்தனை செய்ய மார்க்ஸைத் தூண்டின. 16,17ஆம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பிய நகரங்கள், தமக்கு வேண்டிய மூலவளங்களுக்காக அவற்றைச் சுற்றியிருந்த கிராமங்களைச் சார்ந்திருந்தன. அப்போது, பொருளுற்பத்திக்கும் கனிம வளங்களைத் தோண்டியெடுப்பதற்கும் தேவையான தொழில்நுட்பம் குறைந்த வளர்ச்சியே கண்டிருந்தது. எனவே பெருமளவில் நகரமாயமாதல் நடைபெறவில்லை. தொடக்ககால நகரங்களிலிருந்த மனித, விலங்குக் கழிவுகள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு அவை மறுசுழற்சியின் மூலம் நிலங்களுக்கான உரமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் முதலாளியத்தின் வளர்ச்சியுடன், நகரங்களின் பரப்பளவும் மக்கள் தொகையும் அதிகரித்தன. பெருவீதத் தொழிலுற்பத்திக்குப் பெரும் தொழிற்சாலைகள், மேலதிக மூலப் பொருள்கள், கூடுதலான தொழிலாளர்கள், நகர மக்களுக்குத் தேவையான கூடுதலான உணவுப் பொருள்கள் ஆகியன தேவைப்பட்டன. எனவே நகரங்கள் சுற்றுப்புற கிராமங்களைச் சார்ந்திருக்கும் நிலை மாறி, தமக்கு வேண்டிய மூலவளங்களைப் பெறுவதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் மரபுவழியாகப் பெற்றிருந்த ஏற்பாடுகளைக் குலைந்தன. அறுவடை செய்யப்படும் பயிரில், தான் வளர்வதற்காக அது எடுத்துக்கொண்ட மண்ணின் சத்து உள்ளது. ஆக, விவசாய விளைச்சல் நகர்ப்புறத்துக்கோ, வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதியாகும்போது அந்த மண் வளமும் அங்கே சென்றுவிடுகிறதேயன்றி, அந்தப் பயிர் சாகுபடி செய்யப்பட்ட அதே மண்ணுக்குத் திரும்புவதில்லை. எரு அல்லது பறவைகளின் எச்சம் போன்ற பொருள்களையும் வேதி உரத்தையும் பயன்படுத்தி மண் இழக்கும் கனிமப் பொருள்களைத் திரும்ப நிலத்துக்குத் தந்துவிடலாம் என்று முதலில் கூறிய லீபிக், பின்னாளில் உற்பத்திப் பெருக்கம் என்ற பெயரில் கண்மூடித்தனமாகக் விளைச்சலைப் பெருக்குவது, மண் வளத்தைச் சீரழிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார். நவீன விவசாயத்தில் கூடுதல் உற்பத்திக்காக இரண்டு அல்லது மூன்று போகம் பயிர் சாகுபடி செய்யும்போது மண் வளம் விரைவாகக் குறைந்து போகிறது; இது ஒரு வகைத் ‘திருட்டு’ விவசாய முறை என லீபிக் விமர்சித்தார். லீபெக்கின் கருத்துகளையொட்டி மார்க்ஸ், நகரங்களில் ஏற்பட்ட சூழல் கேடுகளை மார்க்ஸ் மண் வளம் குன்றும் நெருக்கடியுடன் இணைத்துப் பார்த்தார். நகரத்துக்கும் கிராமப்புறத்திற்கும் ஏற்பட்ட பகைத்தன்மையுள்ள முரண்பாட்டின் விளைவுதான் ‘ பருப்பொருள் பரிமாற்றச் செயல்பாட்டில் ஏற்பட்ட பிளவு’. இக் கருதாக்கத்தை, இங்கிலாந்தில் 1815-1880 இல் நடந்த ‘இரண்டாவது வேளாண் புரட்சி’க் காலகட்டத்தில் வளர்த்தெடுத்தார். அன்று வளர்ந்து வந்த முதலாளிய அமைப்பில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள ‘பருப்பொருள் பரிமாற்றச் செயல்பாட்டில் ஏற்பட்ட பிளவு’தான் (metabolic rift) சூழலியலிலுள்ள முக்கியப் பிரச்சினை என்பதை மார்க்ஸ் மிகச் சரியாகப் புரிந்துகொண்டார்.
நாம் இன்று காணும் சூழலியல் நெருக்கடிகளைப் புரிந்துகொள்ள மார்க்ஸின் இந்தக் கருத்தாக்கம் பெரிதும் உதவுகிறது. ’பருப்பொருள் பரிமாற்றச் செயல்பாடு’ என்பது உயிர்ராசிகள் தம் வாழ்க்கையை நீடித்து நிலைக்க வைப்பதற்காக அவற்றின் சுற்றுச்சூழலிருந்து தமக்கு வேண்டிய பொருள்களையும் சக்தியையும் எடுத்துக்கொள்ளும் நிகழ்முறையாகும். இதனை மார்க்ஸ் ’மூலதனம் நூலின் முதல் பாகத்தின் ஏழாம் அத்தியாயத்தில் மனிதனுக்கும் இயறகைக்குமுள்ள உறவுக்கும் பொருத்திக் காட்டுகிறார் : “உழைப்பு என்பது, எல்லாவற்றுக்கும் மேலாக, இயற்கையும் மனிதனும் பங்கேற்கிற இயக்கமாகும். இந்த இயக்கத்தில் மனிதன், தன் செயல்பாடுகள் மூலம் இயறகைக்கும் தனக்குமுள்ள பருப்பொருள் பரிமாற்றச் செயல்பாட்டை (metabolism) முறைப்படுத்தி, வரன்முறைப்படுத்தி, கட்டுப்படுத்துகிறான். தானே ஓர் இயற்கைச் சக்தி என்னும் முறையில் அவன் இயற்கைப் பொருள்களை எதிர்கொள்கிறான். அவனது உடல், முழங்கைகள், கால்கள், தலை, கைகள் ஆகியற்றுக்குரிய இயல்பான சக்திகளை இயக்குவித்து, அதன் மூலம் இயறகைப் பொருள்களைத் தன் தேவைக்கேற்ற வடிவத்தில் தன்வயப்படுத்திக்கொள்கிறான். இந்த இயக்கத்தில் அவன் புற இயற்கையின் மீது செயல்பட்டு அதை மாற்றுகிறான். அதேவேளை அவன் தன்னத்தானே மாற்றுகிறான். இயற்கைக்குள் உறங்கிக்கிடக்கும் உள்ளுறையாற்றல்களை வளர்த்தெடுத்து இயற்கைச் சக்திகளைத் தனது உயரிய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியச் செய்கிறான்… உழைப்பு என்பது மனிதனின் தேவைகளுக்காக இயற்கையில் இருப்பதைத் தன்வயப்படுத்திக் கொள்வதாகும். அது மனிதனுக்கும் இயற்கைக்குமுள்ள பருப்பொருள் பரிமற்றச் செயல்பாட்டுக்கான உலகுதழுவிய நிபந்தனை. மானுட வாழ்க்கைக்கான இயற்கையால் சாசுவதமாக விதிக்கப்பட்ட நிபந்தனை”.
மேற்சொன்ன சாசுவதமான நிபந்தனையை மீறுகின்ற வகையில், முதலாளியம் இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒரு பகைத்தன்மையுடைய உறவைத் திணிக்கிறது. மனிதனுக்கும் இயற்கைக்குமுள்ள பருப்பொருள் பரிமாற்றைச் செயல்பாட்டில் பிளவை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் உடல் உழைப்பில் மட்டுமே ஈடுபட்டிருந்தவரை, இந்தப் பிளவு, இயற்கையால் தாங்கிக் கொள்ளும் ஆற்றலுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தொழில்புரட்சியுடன் எரிசக்தி, இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு உழைப்பு மும்முரப்படுத்தப்பட்ட நாள் முதல் இந்தப் பிளவு மேன்மேலும் அகலப்படுத்தப்பட்டு வந்துள்ளது. தொழிலுற்பத்திக்காக இயற்கையிலிருந்து பெறப்படும் மூலப் பொருள்களை முதலாளிய அமைப்பு இலவசப் பொருள்களாகக் கருதியது. அவற்றுக்கு சந்தையில் பரிவர்த்தனை மதிப்பை வழங்கிய முதலாளியம் சூழலமைப்புகளில் (ecosystems) அவற்றின் இருப்புக்குள்ள உள்ளார்ந்த மதிப்பை அலட்சியப்படுத்தியது. இயறகையில் அந்த மூலப் பொருள்கள் குறைந்து வருவதற்குத் தரப்பட வேண்டிய சமூக, சுற்றுச்சூழல் விலைகளை அது கருத்தில் கொள்ளவில்லை. இதை ‘இயற்கையைக் கொள்ளையடித்தல்’ என்றும், அது இயற்கை மீதான சமுதாயத்தின் அணுகுமுறையை வடிமைக்கிறது என்றும் மார்க்ஸ் கருதினார்.
[6. Karl Marx, Capital: A Critique of Political Economy. Volume I (translated by Ben Fowkes), Penguin Books in Assocaiation with New Left Review, Lomdon, Reprinted 1982, p.284, 291.]
‘மூல்தனம்’ நூலின் முதல் பாகத்தில் மார்க்ஸ் வளர்த்தெடுத்த இன்னொரு முக்கிய கருத்தாக்கம் அந்த நூலின் மூன்றாம் அத்தியாயத்திலுள்ள ‘சரக்குகளின் உருமாற்றம்’ (Metamorphosis of the Commodities) என்ற பகுதியில் காணப்படுவதுமான ‘சமூகப் பருப்பொருள் பரிமாற்றச் செயல்பாடு’ ( social metabolism) என்பதாகும். மார்க்ஸ் கூறுகிறார்: “ பரிவர்த்தனை நிகழ்முறை, பயன் மதிப்பற்றவையாக ஒருவர் கையில் இருக்கும் சரக்குகள், எந்த அளவுக்கு அவற்றைப் பயன் மதிப்புககளாக இன்னொருவர் கைக்கு மாற்றுகின்றதோ அந்த அளவிற்கு அது சமூகப் பருப்பொருள் பரிமாற்றச் செயல்பாடு”. அதே பகுதியின் இன்னோர் இடத்தில் கூறுகிறார்: “நாம் இங்கு ஒருபுறம் சரக்குகளின் பரிவர்த்தனையானது, பொருள்களை நேரடியாகப் பரிவர்த்தனை யெதுகொள்ளும் முறையில் தனிநபர் அளவிலும் உள்ளூர் அளவிலும் உள்ள வரம்புகளைத் உடைத்துக் கொண்டு சென்று மனித உழைப்பின் பருப்பருள் பரிமாற்றச் செயல்பாட்டை (metabolic process of human labour) வளர்த்தெடுக்கிறது என்பதைப் பார்க்கிறோம். மறுபுறம், மனிதர்களின் கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாக உள்ளதும் இயற்கையான மூலாதாரங்களைக் கொண்டவையுமான சமூகத் தொடர்புகளின் முழு வலைப்பின்னலை (சரக்குப் பரிவர்த்தனை உருவாக்குவதைக்) காண்கிறோம்”
முதலாளியத்தால் உருவாக்கப்பட்ட சமூக- சூழலியல் உறவுகள் இறுதியில் நிலைத்துநிற்க முடியாமல் போகும் என்பதை மார்க்ஸ் விளக்கினார். லீபெக்கின் கருத்துகளைப் பயன்படுத்தி, ’மூலதனம்’ நூலின் முதல் பாகத்தில் ‘ பெருவீதத் தொழிலுற்பத்தியும் வேளான்மையும்’ (The Large-scale Industry and the Agriculture) என்ற பகுதியில் கூறுகிறார்: “பெரும் கேந்திரங்களில் மக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் நகர மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையை மேன்மேலும் அதிகமாக்குகிறது. இது இரு விளைவுகளை உருவாக்குகிறது. ஒருபுறம் சமுதாயத்தின் வரலாற்று விசையை ஒன்றுகுவியச் செய்கிறது; மறுபுறம் மனிதனுக்கும் மண்ணுக்குமிடையில் நடைபெறும் பருப்பொருள் பரிமாற்றச் செயல்பாட்டைக் குலைக்கிறது; அதாவது உணவு, உடை ஆகியவற்றின் வடிவில் மனிதனால் நுகரப்பட்ட மண்ணின் கூறுகள் மண்ணுக்குத் திரும்பிச் செல்வதைத் தடுக்கிறது; ஆகவே மண்வளம் நிலைத்து நீடிப்பதற்கு அவசியமான நிலைமைகளைக் குலைக்கிறது. இந்தச் செயலின் மூலம் நகர்ப்புறத் தொழிலாளியின் உடல் ஆரோக்கியத்தையும் அதேவேளை கிராமப்புற உழைப்பாளியின் அறிவாற்றலையும் ஒரே சமயத்தில் நாசப்படுத்துகிறது”. மண்ணின் சத்துகள் ஒருவழிப்பதையில் செல்கின்றன என்ற லீபெக்கின் கருத்தை இன்னொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்துகிறார் மார்க்ஸ்: “இலண்டனில் பெரும் செலவு செய்து தேம்ஸ் நதியை மாசுபடுத்துவதைத் தவிர, அங்குள்ள நாற்பத்தைந்து இலட்சம் மனிதர்களின் கழிவுகளைப் பயன்படுத்த வேறு சிறந்த முறையை அவர்களால் கண்டறிய முடியவில்லை”.
சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் மான்செஸ்டெர் கிளைக்காக 1872 மார்ச்-ஏப்ரலில் எழுப்பப்பட்ட ஒரு பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட ‘நிலத்தை தேசவுடைமையாக்குதல்’ The Nationalisation of the Land} என்னும் கட்டுரையில் மார்க்ஸ் கூறுகிறார்: “எல்லாச் செல்வங்களுக்கும் ஆதிப் பிறப்பிடம் நிலத்தில் உள்ள உடைமையே. இந்த மாபெரும் பிரச்சினையைத் தீர்ப்பதைப் பொறுத்தே தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் இருக்கிறது. நிலத்தை தேசவுடைமையாக்குதல் உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையே உள்ள உறவுகளில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும், கடைசியில் முதலாளிய உற்பத்தி முறையை- தொழிற்துறையிலும் வேளாண் துறையிலும் – ஒழித்துவிடும். பின்னர் வர்க்க வேறுபாடுகளும் தனிச் சலுகைகளும், அவற்றுக்கு ஆதாரமாக இருக்கின்ற பொருளாதார அடிப்படையுடன் சேர்ந்து மறைந்துவிடும். அடுத்தவருடைய உழைப்பைச் சுரண்டி வாழ்வது பழங்கதையாகிவிடும். சமுதாயத்திலிருந்து தனியாக இருக்கின்ற எந்த அரசாங்கமோ, அரசு அதிகாரமோ இனி இருக்காது! வேளாண்மை, சுரங்கத் தொழில், ஆலை உற்பத்தி, சுருங்கச் சொன்னால் உற்பத்தியின் எல்லாத் துறைகளும் மிகச் சாத்தியமான முறையில் படிப்படியாக அமைக்கப்படும். உற்பத்திச் சாதனங்களின் தேசிய மையப்படுத்துதல் சமூக நடவடிக்கையைப் பொதுவான மற்றும் அறிவுபூர்வமான திட்டத்தின்படி நடத்துகின்ற சுதந்திரமான, சமத்துவமான உற்பத்தியாளர்களின் சங்கங்களைக் கொண்ட சமூகத்தின் தேசிய அடிப்படையாக மாறும்”
இயற்கையை அளவுக்கு மீறி சுரண்டுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி 1876 ஆம் ஆண்டில் எங்கெல்ஸ் ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ’மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பின் பாத்திரம்’ என்ற கட்டுரையில் கூறுகிறார்: “விலங்கு, புற இயற்கையை வெறுமனே பயன்படுத்திக்கொண்டு, தான் அங்கே இருப்பதன் மூலமாக மட்டுமே இயற்கையில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. மனிதனோ தான் ஏற்படுத்தும் மாற்றங்களின் மூலமாக இயற்கையைத் தனது குறிக்கோள்களுக்குப் பணியும்படி செய்கிறான். அதைத் தன் வசப்படுத்துகிறான். மனிதனுக்கும் இதர விலங்குகள் அனைத்துக்கும் உள்ள இறுதியான, அடிப்படையான வேறுபாடு இதுதான்; இந்த வேறுபாட்டை நிகழ்த்துவது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு முறை குறிப்பிட வேண்டும். இருந்தபோதிலும், இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நாம் அளவுகடந்த தற்புகழ்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இத்தகைய வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதல் முறை நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானாலும், இரண்டாவது மூன்றாவது முறைகளில் நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட விளைவுகளையும் தருகிறது; இவை பலமுறை, முதலில் ஏற்பட்ட விளைவைத் துடைத்தெறிந்துவிடுகின்றன. மெஸோபொடேமியா, கிரீஸ், ஆசியா மைனர் ஆகியவற்றிலும் இன்னும் பிற இடங்களிலும் சாகுபடி நிலங்களைப் பெறுவதற்காகக் காடுகளை அழித்த மக்கள், காடுகளை அழித்ததன் கூடவே ஈரப்பதம் ஒருங்குசேரும் இடங்களையும் நீர்த்தேக்கங்களையும் ஒழித்ததன் மூலம் தாங்கள் அந்த நாடுகளின் தற்போதைய அவல நிலைக்கு அடிகோலியதாகக் கனவும்கூடக் காணவில்லை.
[7. ”Karl Marx, The Nationalisation of Land, The International Working Men’s Association, Marxist Internet Archive, ,https://www.marxists.org/archive/marx/works/1872/04/nationalisation-land.htm]
இத்தாலியர்கள், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் வடபகுதிச் சரிவுகளில் அத்தனை பரிவுடன் பேணிக்காக்கப்பட்ட ஊசியிலை மரக் காடுகளைத் தென்பகுதிச் சரிவுகளில் முழுமையாக வெட்டிப் பயன்படுத்தியதன் மூலம், அப்பகுதி பால் பண்ணைத் தொழிலின் அடிவேர்களையே வெட்டிவிட்டனர் என்பதையோ, அந்த மரங்களை வெட்டியதன் மூலம் ஆண்டின் பெரும் பகுதியில் மலையிலுள்ள ஓடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செய்துவிட்டதையும், அதன் காரணமாக மழைக் காலங்களில் அவை கூடுதலான வெள்ளத்தைச் சமவெளியில் பாய்ச்ச வகை செய்தனர் என்பதையும் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. ஐரோப்பாவில் உருளைக்கிழங்கை யார் பரவ வைத்தனரோ அவர்கள் அந்த மரச்சத்துள்ள கிழங்குகளுடன் கூடவே கண்டாமாலை நோயையும்கூடப் பரப்பக் காரணமாயினர் என்பதை அறியவில்லை. இவ்வாறு, அயல்நாட்டு மக்கள் மீது வெற்றி வாகை சூடியவனைப் போல, இயற்கைக்குப் புறத்தில் நிற்கும் ஒருவனைப் போல, இயற்கையின் மீது எவ்வகையிலும் நாம் ஆளுகை புரியவில்லை என்பதும், அதற்கு மாறாக நமது சதை, இரத்தம், மூளை ஆகியவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்களாகிய நாம், அதன் நடுவில் வாழ்கிறோம் என்பதும், இயற்கையின் விதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைச் சரியான முறையில் பிரயோகிப்பதில்தான் இதர விலங்குகள் அனைத்தையும் காட்டிலும் நமக்கு அனுகூலம் இருக்கிறது என்னும் அளவிற்கே அதனை நாம் ஆளுகை செய்கிறோம் என்பதும் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது. பூர்ஷ்வா வர்க்கத்தின் சமூக அறிவியலான செவ்வியல் அரசியல் பொருளாதாரம் (classical political economy), நடைமுறையில் திட்டமிடப்பட்டுள்ள உற்பத்தி, பரிவர்த்தனை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் மனிதச் செயல்பாடுகள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை மட்டுமே முதன்மையாக ஆராய்கிறது. அது எந்த சமூக அமைப்பின் கோட்பாட்டுரீதியான வெளிப்பாடாக உள்ளதோ, அந்தச் சமூக அமைப்புக்கு முற்றிலும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. தனிப்பட்ட முதலாளிகள் உடனடியான இலாபத்திற்காக உற்பத்தியிலும் பரிவர்த்தனையிலும் ஈடுபட்டிருப்பதால், முதலில் அவர்கள் மிகவும் அருகிலுள்ள, மிகமிக உடனடியான விளைவுகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.
தனிப்பட்ட உற்பத்தியாளன், தான் உற்பத்தி செய்த சரக்கை விற்கையிலோ, தனிப்பட்ட ஒரு வணிகன் ஒரு சரக்கை வாங்குகையிலோ அவனவனும் தான் அடைய விரும்பும் இலாபத்தில் மட்டுமே திருப்தியடைகிறானேயன்றி, அதன் பிறகு அந்தச் சரக்குக்கோ, அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கூபாவில் மலைச் சரிவுகளிலிருந்த காடுகளை எரித்து அதிலிருந்து கிடைத்த சாம்பலை மிக இலாபகரமான காப்பிச் செடிகளுக்கு ஒரு தலைமுறைக்குப் போதுமான உரத்தைப் பெற்ற ஸ்பானிய காப்பித் தோட்ட முதலாளிகளுக்கு, பின்னாளில் வெப்பப் பிரதேசக் கன மழை பாதுகாப்பற்ற மேல்படிவ மண் முழுவதையும் அடித்துக்கொண்டு போய் பாறைகளை மொட்டையாக விட்டுச் சென்றதைப் பற்றி என்ன கவலையிருந்திருக்கும்! சமுதாயத்தைப் போலவே இயற்கையைப் பொருத்தவரையிலும்கூட இன்றைய உற்பத்தி முறையின் முதன்மையான அக்கறை உடனடியான, மிகவும் திடமான விளைவுகளைப் பெறுவதுதான்.”
எனவே இயற்கைப் பேரழிவுக்குக் காரணமாக இருப்பது இலாப வெறியின் அடிப்படையில் இயங்கும் முதலாளிய உற்பத்திமுறைதான் என்பதை மார்க்ஸைப் போலவே எங்கெல்ஸும் பதிவு செய்துள்ளார். எனவே, முதலாளிய உற்பத்திமுறையை ஒழிக்காமல் இயற்கையையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியாது என்பதுதான். தமது காலத்திய முதலாளிய வளர்ச்சி, இயற்கையின் மீது ஏற்படுத்திய அழிவுகளைக் கண்ணுற்ற மார்க்சின் கருத்துதான் அது. இன்றைய முதலாளிய வளர்ச்சி இயற்கையின் மீது ஏற்படுத்தி வரும் அழிவுகளைப் பார்க்கும்போது மார்க்ஸின் காலத்திய முதலாளிய வளர்ச்சி இயற்கையின் மீது ஏற்படுத்திய அழிவுகள் ஒப்பீட்டு அளவில் மிகக் குறைவானவையே எனக் கூறலாம். ஆயினும் முதலாளிய உற்பத்திமுறை இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரானது என்ற அடிப்படைக் கோட்பாட்டை அன்றே மார்க்ஸ் கொண்டிருந்தார். மார்க்ஸ் மனிதனின் இயல்பான தேவைகளைப் பற்றித்தான் கூறுகிறாரே தவிர எங்கும் வரம்பற்ற நுகர்வு என்ற கருத்தை வைப்பதில்லை.
[8.F. Engels, Dialectics of Nature, pp 170- 183, Progress Publishers, Moscow, 1986, pp 170-183.]
இயற்கை சூழலுக்கு உகந்த வகையில் நமது தேவைகளை நிறைவு செய்யவேண்டுமானால், பொருளுற்பத்தியின் மீது கட்டுப்பாடு செலுத்தக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டூம். அதாவது இயறகையின் ஒரு பகுதியான மனிதர்கள் அல்லாத, இயற்கையின் பிற பகுதியுடன் நமக்குள்ள உறவை உணர்வுபூர்வமாக ஒழுங்குமுறைக்கு உள்படுத்த வேண்டும். இதைச் செய்வதற்கான ஒரே அடிப்படை, உற்பத்தி சாதனங்கள் பொது உடைமையாக இருப்பதும், மனித, சுற்றுச்சூழல் தேவைகள் நிறைவு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் உற்பத்தி சாதனங்கள்மீது ஜனயாகரீதியான கட்டுப்பாடு செலுத்துவதும் ஆகும். இலாபபத்தை மட்டுமே நோக்க்மாகக் கொண்ட முதல்லாளியத் தனியுடைமை உற்பத்திமுறைகுப் பதிலாக அதாவது,சுதந்திரமான உற்பத்தியாளர்களின் ஒன்றிணைப்பு கொண்ட உற்பத்திமுறையை – அதாவது கம்யூனிசத்தை – உருவாக்க வேண்டும்.
’மூலதனம்’ நூலின் மூன்றாம் பாகத்தில், புவிக்கோளத்தின் மீது தனக்கிருந்த ஆழமான அக்கறையை வெளிப்படுத்துகிறார் மார்க்ஸ்: ”…அடிமையுடையாளர் தாம் விலைக்கு வாங்கியுள்ள நீக்ரோவை தமது உடைமையாகக் கருதுகிறார். அடிமையுடைமை அமைப்பே அந்த நீக்ரோ மீது அவருக்கு உடைமையுரிமையை வழங்குகிறது என்றல்லாமல் வேறெந்தச் சரக்கையும் போலவே விற்றல்-வாங்கலின் மூலமே அந்த நீக்ரோ கிடைத்திருப்பதால்தான் தமக்கு அந்த உடைமையுரிமை இருப்பதாகக் கருதுகிறார். ஆனால் உடைமையுரிமையுங்கூட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கைம்மாற்றம் செய்யப்பட்டதுதானேயன்றி விற்பனையால் உருவாக்கப்பட்டது அல்ல. உடைமையுரிமை ஏற்கெனவே இருந்தால்தான் அதை விற்க முடியும். இந்த உடைமையுரிமையை தனியொரு விற்பனையால் உருவாக்க முடியாதது போலவே, திரும்பத் திரும்ப நடைபெறும் தொடர்வரிசையான விற்பனைகளாலும் உருவாக்க முடியாது. முதலில் அதனை உருவாக்கியவை உற்பத்தி உறவுகளேயாகும். இந்த உறவுகள் மாற்றமடைய வேண்டிய கட்டத்தை அடைந்தவுடனேயே, உடைமையுரிமையின் பொருள்வகை ஆதாரம் – பொருளாதாரவகையிலும் வரலாற்றுவகையிலும் நியாயப்படுத்தப்படக்கூடியதும், சமூக வாழ்க்கையை உருவாக்கும் நிகழ்முறையிலிருந்து தோன்றுவதுமான இந்த ஆதாரமும், அதன் அடிப்படையில் நிகழும் பரிவர்த்தனைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. மேலும் உயர்ந்ததொரு சமூகப் பொருளாதார அமைப்பின் கண்ணோட்டத்தில், புவிக்கோள் குறிப்பிட்ட தனிநபர்களின் தனியுடைமையாக இருப்பதென்பது ஒரு மனிதன் இன்னொருவனின் தனியுடைமையாக இருப்பது போலவே அபத்தமானதாகத்தான் தெரியும். ஒரு முழுச் சமுதாயமோ, ஒரு தேசமோ, ஏன் ஒரே காலகட்டத்தில் நிலவுகின்ற சமுதாயங்கள் அனைத்துமோ புவிக் கோளத்தின் உடைமையாளர் அல்ல. புவிக்கோளத்தின் மீது இவற்றுக்கு அனுபோக உரிமை, அதில் எந்த அடிப்படையான மாற்றமும் செய்யாமல் அதை அனுபவிக்கும் உரிமை மட்டுமே உண்டு. இவை, பழங்கால ரோம சமுதாயத்தில் குடும்பங்களின் மூத்த ஆண்கள் குடும்பச் சொத்தை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றது போலவே, அடுத்துவரும் தலைமுறைகளிடம் இந்தப் புவிக்கோளை இன்னும் மேம்படுத்தப்பட்ட நிலையில் ஒப்படைத்துச் சென்றாக வேண்டும்”.
இங்கு, அறிவியல் மீதும் சூழலியல் மீதும் மார்க்ஸுக்கு தன் இறிதி நாள்கள் வரை இருந்த் அக்கறையும் ஆர்வத்தையும் பற்றிய தவல்களை மார்க்ஸிய அறிஞர் மார்செல்லோ முஸ்டோ எடுத்துரைப்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். மார்செல்லோ முஸ்டோ கூறுகிறார்: மார்க்ஸ், தனது மனைவின் இறப்புக்குப் பிறகு ஏற்பட்ட துயரகரமான சூழ்நிலையிலும், எப்போதெல்லாம் சாத்தியமோ அப்போது தனது ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். எழுதி முடிக்கப்படாத ’மூலதனம்’ நூலை முழுமையாக்கும் பணிக்கு திரும்ப முடியாத நிலையில் இருந்த அவர், பல்வேறு அறிவியல், பொருளாதார விஷயங்களில் அண்றன்று வரை தனது அறிவை வளர்த்துக் கொண்டு வந்தார். அவற்றில் முக்கியமானவை எடுவர்ட் ஹாஸ்பிடேலியே (Édouard Hospitalier) என்ற அறிவியலாளர் பிரெஞ்சு மொழியில் எழுதி 1882இல் வெளிவந்த ‘நவீன இயற்பியல். மின்சாரத்தின் முக்கியப் பிரயோகங்கள்’ (La physique moderne. Les principales applications de l’électricité) என்ற பிரெஞ்சு நூலிலிருந்து தனக்கு முக்கியமாகப் பட்ட சில பகுதிகளை எடுத்தெழுதி வைத்துக் கொண்டதும் ’ மின்சாரத் துறையில் ஏற்பட்ட கண்டுபிடுப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சியில்’ ஆர்வம் காட்டியதும், அந்த ஆர்வத்தின் பகுதியாக மார்செல் டெப்ரே (Marcel Deprez ) என்ற பிரெஞ்சு அறிவியலாளரின் நூலைப் படித்து முடித்ததும் ஆகும். மார்க்ஸ் மேற்கொண்ட ஆய்வுகளைப் பற்றி எங்கெல்ஸ் கூறினார்: மார்க்ஸைப் பொருத்தவரை ”அறிவியலானது வரலாற்றுரீதியான இயங்குவிசை கொண்ட, புரட்சிகரமான சக்தி”. சில கோட்பாட்டு வகை அறிவியலில் (Theretical Science) ஏற்பட்ட ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பையும் – அதை நடைமுறையில் பிரயோகிக்கூடிய சாத்தியப்பாடு உள்ளதாகக் கருத முடியாவிட்டாலும் – மகிழ்ச்சியுடன் வரவேற்ற அதே வேளை, கண்டுபிடிப்புகள் தொழிலுற்பத்தி, பொதுவாக வரலாற்று வளர்ச்சி சம்பந்தப்பட்டதாக இருப்பின் முற்றிலும் வேறுவிதமான மகிழ்ச்சியையும் அனுபவித்தார்” . சூழலியல் பற்றிய ஆய்வுகளிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஏற்கெனவே அவர்,உக்ரேனிய சோசலிஸ்டான செர்ஜெய் போடோலின்ஸ்கி ((Sergei Podolinsky) , ’சோசலிஸ்ட் ரெவ்யூ’ என்ற ஏட்டில் எழுதியிருந்த ‘ மனித உழைப்பும் ஒன்றுபட்ட சக்தியும்’ என்ற கட்டுரையைப் படித்திருந்தார். மார்க்ஸுக்கும் போடோலின்ஸ்கிகும் பொதுவான நண்பராக இருந்த பியோதர் லாவ்ரோவின் (Pyotr Lavrov) மூலம் போடோலென்ஸ்கி மார்க்ஸுக்கு 1872இல் அறிமுகமாயிருந்தார். தனது கட்டுரையின் கையெழுத்துப் படிகளை மார்க்ஸுக்கு அனுப்பியிருந்த போடோலென்ஸ்கி, தனது கட்டுரைக்கான முதல் தூண்டுதல் ‘மூலதனம்’ நூலைப் படிததிலிருந்து தோன்றியது என்றும் தனது கட்டுரை பற்றிய மார்க்ஸின் கருத்து என்ன என்பதை உடனடியாக அறிந்துகொள்ள வேண்டும் என்று பொறுமையின்றி காத்திருப்பபதாகவும் அவர் எழுதியிருந்தார். அவரது குறிக்கோள் , மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த சமூக அமைப்பு சோசலிசம்தான் என்று காட்டுவதாகும் .’உபரி உழைப்பையும் தற்போதுள்ள இயற்பியல் கோட்பாடுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்தமானதாகக் காட்டும் கடமை தனக்கு இருப்பதாக’ மார்க்ஸுக்கு எழுதியிருந்தார். இந்த விஷயம் குறித்து எங்கெல்ஸ் மார்க்ஸுக்கு டிசம்பர் 1882இல் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.
[9. மூலதனம், மூன்றாம் பாகம், புத்தகம் 2 (தமிழாக்கம் : தியாகு) ,, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) பிமிடெட், சென்னை, ஆறாம் பதிப்பு, ஜனவரி 2022, ப.1101101.]
”பூமியின் மேற்பரப்பில் சூரிய சக்தியை – பொதுவாகக் கருதப்படுவதைக் காட்டிலும் – நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்ளும் ஆற்றல் மனித உழைப்புக்கு இருப்பதாக போடோலென்ஸ்கி கருதுகிறார்” என்றும், ”ஆனால் இதிலிருந்து அவர் தருவித்துக் கொள்ளும் பொருளாதாரரக் கருத்துகள் முற்றிலும் தவறான”வை என்றும் எழுதிய எங்கெல்ஸ், ’போடோலென்ஸ்கி , சோசலிசத்தின் பொருத்தப்பாட்டுக்கான சான்றுகளை இயற்கை அறிவியலிலிருந்து கண்டறிய முயன்று வழி தவறிப் போய்விட்டார்’ என்றும் எனவே இயற்பியல் விஷயங்களை பொருளாதார விஷயங்களுடன் சேர்த்துக் குழப்பிக் கொள்கிறார்’ என்றும் எழுதினார்.
எங்கெல்ல்ஸின் நீண்ட கடிதத்திற்கு பதில் எழுதும் சக்தியற்றுப் போயிருந்த மார்க்ஸ், போடோலென்ஸ்கியின் கருத்துகளை ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக யொஹான்னெஸ் ராங்கெ (Johannes Ranke) என்ற அறிவியலாளர் எழுதிய ’மக்களின் உடல் நலப் பாதுகாப்பு, மருத்துவரின் தேவைகள் தொடர்பான மனித உடலியல்’ என்ற நூலைப் படித்தார். 1880இல் போடோலென்ஸ்கியின் கட்டுரையிலிருந்து எடுத்தெழுதி வைத்துக்கொண்ட பகுதிகள், அவர் போடோலென்ஸ்கியின் கட்டுரையிலிருந்தவை போன்ற விஷயங்களைக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதைக் காட்டுகின்றன.( ஆனால் மார்செல்லொ முஸ்டோ குறிப்ப்டாத விஷயம் என்னவென்றால் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவருமே போடோலென்ஸ்கியின் கருத்துக்ளை முற்றிலுமாக மறுத்தனர் என்பதாகும்) அதேபோல ருடால்ஃப் கிளாஸியஸ் (Rudolf Clausius )என்ற வெப்ப இயக்க இயல் (thermodynamics) அறிஞரின் நூலையும் படித்தார். தனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவர் இயற்கை அறிவியல்களை – குறிப்பாக விலங்கியல், உயிரியல், சூழலியல் ஆகியவற்றைப் பொருத்தவரை – திறந்த மனத்துடன் இருந்தார். சூழலியலில் அவரது அக்கறையைத் தூண்டியது எட்வின் ரே லங்காஸ்டர் (Edwin Ray Lankester)என்னும் அறிவியலாளருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு ஆகும். லங்காஸ்டர் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தை ’மிகுந்த மகிழ்ச்சியோடும் அறிவுரீதியகப் பயன்பெறும் வகையிலும் படித்ததாக’ குறிப்பிட்டிருந்ததுடன் மார்க்ஸுடன் அறிவுசார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டு வந்ததுடன் , அவருடைய நெருக்கமான குடும்ப நண்பராகி, அவரது குடும்பத்தைத் துயரத்துக்கு ஆளாகியிருந்த அவரது உடல்நலப் பாதிப்புகளை குணப்படுத்துவதற்குப் பொருத்தமான மருத்துவர்களைக் கண்டறிவதில் உதவினார்.
[10. PAUL BURKET and JOHN BELLAMY FOSTER, Metabolism, energy, and entropy in Marx’s critique of political economy: Beyond the Podolinsky myth, Theory and Society (2006) 35: 109–156, DOI:10.1007/s11186-006-6781-2 (Accessed on 20.6.2024)]
மார்க்ஸித்தைக் கற்க விரும்புவோர் இயற்கை அறிவியல்களையும் கணிச்மான அளவுக்கு அறிந்திருக்க வேண்டும் என்ப்தை மார்க்ஸ், எங்கெல்ஸின் ஆழமான படிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
தரவுகள்:
1.Karl Marx, Economic and Philosophical Manuscripts 1844, Progress Publishers, Moscow, 1967.
2.Karl Marx, Capital, Volume I (translated by Ben owkes), Penguin in association with New Left review, London, 1972.
3. கார்ல் மார்க்ஸ், மூலதனம் மூன்றாம் பாகம் இரண்டாம் புத்தகம் ( தமிழாக்கம்: தியாகு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை, 1998.
4. F.Engels, The Part Played by Labour in the Transition from Ape to Man in Dialectics of Nature, in Karl Marx and Frederick Engels, Collected Works, , Vol 25, Progress Publishers, Moscow.
5. John Bellamy Foster, Marx’s Ecology, Monthly Review Press, New York, 2000.
5.மாஎக்ஸும் சூழலியலும் ( தமிழாக்கம்: மு.வசந்தகுமார்), விடியல் பதிப்பகம், கோவை, 2011.
[11. Marcello Musto, The Last Years of Karl Marx 188101883: An Intellectual Biography, Stanford University Press, California,2020, pp 116-118.
குறிப்பு; இக்கட்டடுரையில் அறிவியல் தொடர்பான பல விஷயஙகள் அறிவியல் அறிஞர் த,வி.வெங்கடேஸ்வரன், வேளான் துறை அறிஞரும் மார்க்ஸியக்களப் பணியாளருமான மு.வசந்த குமார் ஆகீயொரிடமிருந்து கற்றுக் கொண்டவை. அவர்களுக்கு என் நன்றி.]
கட்டுரையாளர் :
எஸ்.வி.ஆர்.
மார்க்ஸியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மேலை நாட்டுத் தத்துவ மரபுகள், கலை இலக்கியம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் ஆக்கியுள்ள 84 வயது தோழர் எஸ்.வி.ராஜதுரை, ஏறத்தாழ 60 ஆண்டுக் காலம் இந்தியக் கம்யூனிச இயக்கத்துடன் பயணம் சென்றிருக்கிறார். 20 ஆண்டுக் காலம் மனித உரிமை, மரண தண்டனை எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில் களப்பணி ஆற்றியுள்ள அவர், இதழியலாளராகவும் இருந்திருக்கிறார். இரண்டாண்டு காலம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ள அவர், தற்போது பல்வேறு இடதுசாரி இயக்கங்கள், சாதி ஒழிப்பு இயக்கங்கள் ஆகியவற்றுடன் தோழமை கொண்டுள்ளார். பத்தாண்டுகளுக்கு முன் இடது கண் பார்வையை இழந்து, பின்னர் வலது கண்ணில் 60 விழுக்காடுப் பார்வையை மட்டுமே கொண்டுள்ள அவர், கடந்த நான்காண்டுகளாகக் கடும் முக நரம்பு வலியால் அவதிப்பட்டு வரும் போதிலும் மன வலிமையைக் கொண்டு அண்மையில் படைத்துள்ள முக்கிய ஆக்கங்கள் :
1.பொருளாதாரத்தை என் மகளுக்குக் கற்பித்தல் (தமிழாக்கம்); 2. ஸரமாகோ: நாவல்களின் பயணங்கள்; 3. அந்நியமாதல்; 4. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கால முதலாளியமும் இன்றைய முதலாளியமும்; 5. இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா? (கட்டுரைத் தொகுப்பு); 6. மார்க்ஸியக் கலைச்சொற்கள். அவரது ஆங்கில நூலொன்று 2024 தொடக்கத்தில் டெல்லியில் வெளியிடப்படவுள்ளது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.