Ecology of poor people science article by Theni Sundar TNSF. Book Day Website is Branch Of Bharathi Puthakalayam.பொதுவாக சுற்றுச் சூழலியல் குறித்த ஆர்வமும் அறிவும் அதற்கான செயல்பாடுகளும் வளர்ந்த நாடுகளில் தான் இருக்கும் .. அவர்கள் ஏற்கனவே வளர்ச்சியின் பெயரால் இயற்கையைப் பாழடித்த காரணத்திற்கு பரிகாரம் செய்வது போல செயல்படுவதும் உண்டு.. வளர்ந்த நாடுகளுக்கு தான் அதற்கான பணமும் செயல்படுவதற்கான ஆற்றலும் தேவையும் உண்டு.. ஏனெனில் அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.. ஏழை நாடுகளின் மீது சூழலியல் கட்டுப்பாடுகளைச் சுமத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு எதிரான கருத்து ஆகும்.. அதே போல படித்த, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் அது குறித்து சிந்திப்பர், எழுதுவர், பேசுவர் என்கிற பார்வையும் இருக்கிறது.. சுற்றுச் சூழல் சிந்தனை என்றாலே துருவப் பகுதிகளில் பனி உருகுவதும், பனிக் கரடிகள் பரிதாபமாக நிற்பதுவும் ஓசோன் படல ஓட்டையும் தான் நினைவுக்கு வருகிறது.. அவற்றிலும் கூட உலகளாவிய சிந்தனை உள்ளூர் அளவிலான செயல்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன..

உலகளாவிய அளவில் கவனம் பெற்ற சில சூழலியல் போராட்டங்கள் உள்ளன. இவையாவும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குறிப்பாக 1970களில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்றவை. வளர்ந்த நாடுகளில் நடைபெற்றவை அல்ல.. உயர் நடுத்தர வர்க்கத்தினர் முன்னெடுத்த போராட்டங்களும் இல்லை.. அந்த போராட்டங்கள் இன்றளவும் உலக சூழலியல் செயல்பாட்டாளர்களுக்கு ஊக்கம் தருபவையாக, முன்னுதாரணமாக விளங்குகின்றன..

முதலாவது போராட்டம், மலேசியாவில் வனப் பகுதிகளில் வாழ்ந்த பெனான் சமூக மக்கள் நடத்திய போராட்டம்.. மிக குறுகிய எண்ணிக்கையிலான மக்கள் தாங்கள் வாழ்ந்த வனப்பகுதி அரசு ஆதரவோடு மர வணிகர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு எதிராக நடத்திய போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. அது குறித்து யூடியூப்-பில் கூட வீடியோக்கள் உள்ளன. திரைப்படங்களும் கூட வந்திருக்கின்றனவாம்..

இரண்டாவது, தாய்லாந்து நாட்டின் வனப் பகுதிகளை அந்த நாட்டு அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டது. அந்தப் பகுதி வனவாழ் மக்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அந்தப் பகுதியின் இயல்பான மரங்கள், தாவரங்கள் அழிக்கப்பட்டு ஓரினப் பயிர் சாகுபடிக்கு, யூகலிப்டஸ் பயிரிடுவதற்கு பல்லாயிரம் ஏக்கர் வனப் பகுதி பயன்படுத்தப்பட்டது. அதற்கு எதிரான மக்களின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கின்றது.. அரசு அதனால் கிடைக்கும் அந்நிய செலாவணியை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருந்த வேளையில் யூகலிப்டஸ் இலைகளை எங்கள் குழந்தைகளுக்கு உணவாக கொடுக்க முடியாது என்று அந்த தாய்மார் போராடி இருக்கின்றனர்..

மூன்றாவது, பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளை அரசு உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் செல்வக் குவிப்பிற்காக அழித்தொழித்த போது அங்கு இருந்த மக்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அங்கு இருந்த இரப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டன. அதைச் சார்ந்த மக்கள் வாழ்விழந்து நின்றனர்.. பின் சூழல் உணர்ந்து, எழுந்து, ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட சாதாரண மக்களின் போராட்டங்கள் ஏராளமான ஏக்கர் பரப்பளவிலான காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றினர். நிறுவனங்களைத் துரத்தியடித்தனர். நிலச்சமன்படுத்தும் வாகனங்களை முற்றுகை இட்டனர்.. தங்கள் மண்ணுக்கு ஒவ்வாத புதிய பயிர்களைப் பிடுங்கி எறிந்தனர்.. தங்களின் இயல்பான தாவரங்களை மீண்டும் நட்டுப் பாதுகாத்தனர்.. போராட்டத்தில் அந்த மக்கள் நிறைய இழப்பீடுகளையும் கொடுக்க நேர்ந்தது.. சூழலியல் செயல்பாட்டாளர் சிகொ மெண்டீஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.. அந்தச் சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்தது.. அந்த மக்களின் போராட்டங்களுக்கு உலக அளவில் ஆதரவுக்கரங்கள் நீண்டன.. இது குறித்து காடுகளுக்காக ஒரு போராட்டம் என்று நூலும் தமிழில் கிடைக்கிறது..அடுத்ததாக, நைஜிரியா நாட்டின் ஓகோனி மக்கள் நடத்திய போராட்டம்.. அந்தப் பகுதியின் எண்ணெய் வளம் முழுக்க ஒட்டச் சுரண்டப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் வாழ்விழந்து தவித்தனர். பாதிப்பிலிருந்து மீள தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினர்.. அவர்களின் நாயகனாக அறியபப்பட்ட கென் சரோ விவா சர்வாதிகார ராணுவத்தால் தூக்கிலிடப்பட்டார்.. உலகின் கவனம் ஈர்த்த மிக முக்கியமான போராட்டம்.. பூவுலகின் கடைசிக்காலம் நூலை வாசிக்கலாம்.. யூடியூப்-ல் அவரது ஏராளமான பதிவுகள் கிடைக்கின்றன..

இவை யாவும் அரசின், தனியார் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பியக்கங்களாக நடைபெற்ற எளிய மக்களின் சூழலியல் நடவடிக்கைகள் என்றால் கென்யாவில் நடைபெற்றது வித்தியாசமான ஒன்று.. முதல் பெண் பேராசிரியராக இருந்த வங்காரி மாத்தாய் தனது பணியைத் துறந்து விட்டு மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வெறும் 7 மரக்கன்றுகள் நடுவதில் தொடங்கி கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்ட மக்கள் இயக்கமும் குறிப்பிடத் தக்க ஒன்று.. வங்காரி மாத்தாய் மரங்களின் தாய் என்று அறியப்பட்டார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.. இந்த இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள்.. குறிப்பாக பெண்கள்..

அடுத்த இரண்டும் நமது நாட்டின் உதாரணங்கள்.. ஒன்று இமயமலைத் தொடரில் மண்டல் கிராம மக்கள் முன்னெடுத்து சிப்கோ போராட்டம்.. விளையாட்டுப் பொம்மைகள் செய்யும் நிறுவனங்களுக்கு அந்தப் பகுதி வனங்களை தாரை வார்த்தது அரசு.. மரங்களை வெட்ட வந்த போது அந்தப் பகுதி மக்கள் மரங்களை கட்டியணைத்தும் வெட்ட வந்தவர்களை விரட்டியடித்தும் காடுகளைக் காப்பாற்றினர்.. இந்த போராட்டம் நம் நாட்டில் மிக சிறந்த முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.. இந்த இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான சுந்தர்லால் பகுகுணா சமீபத்தில் தான் மறைந்தார் என்பதும் குறிப்பிடட வேண்டிய ஒன்று..

சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்கு எதிராக, அதன் மூலம் மூழ்கடிக்கப்படும் 250 கிராம மக்களையும் உள்ளடக்கி பல்வேறு விதமான வகைகளில் நடைபெற்ற போராட்டம்.. அதன் முக்கிய ஆளுமையாக அறியப்படக் கூடியவர் மேதாபட்கர்.. இந்த போராட்டமும் சாதாரண மக்களின் போராட்டம்.. ஆனால் சரித்திரம் படைத்த போராட்டம்..

இவை அனைத்தும் சாதாரண மக்களின் , எளிய மக்களின் போராட்டங்கள்.. வணிக முறையில் வனங்களை அழித்தல், ஓரினப் பயிர் சாகுபடி செய்தல் போன்றவற்றிற்கு எதிரான மக்களுடன் மாபெரும் அணைத் திட்டங்களால் வெளியேற்றப்பட்ட மக்களின் போராட்டங்கள், சுண்ணாம்புக்கல், கிரானைட் சுரங்கங்களால் தங்கள் விளை நிலங்களை இழந்த மக்கள், மேய்ச்சல் நிலங்களை இழந்தவர்கள், விவசாயிகள், மீன் இனங்களை அழித்துவிடக்கூடிய விசைப்படகு முதலாளிகளுக்கு எதிராக போராடும் மீனவர்கள், ஆற்றின் அழகையும் நீரையும் மாசுபடுத்தக் கூடிய ஆலைகளுக்கு எதிராக திரளும் மக்கள் ஆகியோரின் போராட்டங்களும் ஏழை மக்களின் சுற்றுச்சூழலியல் செயல்பாடுகள் தாம்..

பெருவிய நாட்டுச் செயல்பாட்டாளர் ஹூகொ பிளாங்கோ சொல்கிறார்.. “சுரங்கத் தொழிலினால் தமது குடிநீர் மாசடைவதை எதிர்த்து மீண்டும் மீண்டும் கடுமையாகப் போரிட்ட பாம்பாமராக்கா கிராமத்தினர் உண்மையிலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் இல்லையா? பெரு தாமிரப் பொருட்கள் உற்பத்திக் கழகத்தில் சுற்றுச்சூழல் மாசடைந்ததை எதிர்த்த இலோ நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுற்றுச் சூழலியலாளர்கள் இல்லையா? பியூராவின் தம்போ கிராண்டே கிராம மக்கள் தமது பள்ளத்தாக்கில் சுரங்கம் வெட்டப்பட்டதை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து தமது உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்களே, அவர்கள் சுற்றுச் சூழலியாளர்கள் இல்லையா? லா ஓராயோ உலோகம் பிரித்தெடுக்கும் உருக்கு உலைகளிலிருந்து வெளிப்பட்ட ஆவியால் இறந்து போன மறிகளுக்காகப் போராடிய மாந்தரோ பள்ளத்தாக்கு மக்களும் கூட சுற்றுச்சூழலியலாளர்கள் தாம்.. தமது வனங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்து அவற்றைப் பாதுகாப்பதற்காக தமது உயிரை ஈந்த அமேஷோனியா மக்களும் சுற்றுச் சூழலியாளர்களே.. கடற்கரை நீர் மாசடைவதை எதிர்த்து முறையிடுகின்ற லிமா ஏழை மக்களும் சுற்றுச் சூழலியாளர்கள் தாம்..”நமக்கும் சொல்வதற்கு தமிழ்நாட்டில் பல உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம், ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம், தற்போது காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிரான மக்களின் எழுச்சி என நிகழ்கால உதாரணங்கள் இருப்பதில் மகிழ்ச்சி தான்..

வனவாழ் மக்களின் வாழ்வை, பண்பாட்டை பாதுகாத்தல் போன்றவையும் மேற்சொன்ன போராட்டங்களில் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.. வெளியேற்றப்படுகின்ற மக்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தை மட்டும் இழப்பதில்லை.. தங்கள் வாழ்க்கையையும் இழக்கின்றனர்.. ஏனைய போராட்டங்களோடு ஒப்பிடுகையில், குறிப்பாக இந்தியாவில் இந்த மக்களின் போராட்டங்களில் சூழலியல் மட்டுமின்றி சமூக நீதிக்கான போராட்டமும் இரண்டறக் கலந்து இருக்கிறது..

மற்றொரு முக்கிய அம்சம், உலகில் ஏற்பட்டுள்ள சூழலியல் சீர்கேடுகளுக்கு காரணம், பெருகி வரும் மக்கள் தொகை அல்ல.. சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளே பிரதான காரணம் என்பதை உணர்த்துகின்றன..

இந்தப் போராட்டங்கள் எடுத்தவுடன் மின் ஊடகங்கள் வழியாக உலகின் கவனத்திற்கு வந்துவிடுவதில்லை.. உள்ளூர்ச் சமூகம், இனம், மரபார்ந்த தன்மைகள் மூலம் கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.. ஒத்த கருத்துகள் உடையவர்கள் ஒருங்கிணைந்து பலம் பெருகும் போது போராட்டத்தின் தன்மை மாறுகின்றது.. பொதுவாக இந்த போராட்டங்கள் தர்ணா, உண்ணாவிரதம், சாலை மறியல், கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம், பேரணி போன்ற தன்மைகளில் நடக்கின்றன..

இந்த போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு மகத்தானதாக இருக்கின்றது.. சூழலியல் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பும் பெண்கள் பங்கேற்பால் போராட்டத்திற்கு கிடைக்கின்ற பெரும் வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை.. பெண்களுக்கு மட்டுமே உரித்தான மறு உற்பத்திக்கான திறன் இயற்கையை, சூழலை அவர்கள் மிக நெருக்கமாக உணர்வதற்கு ஒரு காரணம்.. மேலும் குடும்பங்களில் இருக்கின்ற குடி தண்ணீர் எடுத்து வருதல், விறகு எடுத்தல், விலங்குகளைப் பராமரித்தல் போன்ற பணிப் பகிர்வுகள் சூழலியல் சிக்கல்களை அவர்கள் எளிதில் உணரக் கூடியதாக இருக்கின்றது.. மேலும் பூமித் தாய் என்பது, நதிகள், ஆறுகளை பெண்ணாக உருவகிப்பது போன்றவையும் உளவியல் ரீதியாக சூழலியல் பாதுகாப்பில் அவர்களை ஒன்றச் செய்யக்கூடும்..

சரி, இந்தப் போராட்டங்கள் எதனால் உருவாகின்றன.. அரசுகள் வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் தான் அடிப்படையாக இருக்கின்றன.. எனில் வளர்ச்சி மிக முக்கியமானது என்றால் அது யாருடைய வளர்ச்சி? யாருடைய நலனுக்காக? யாருடைய தியாகத்தால் கிடைக்கின்ற வளர்ச்சி ? என்பன போன்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன..மனிதகுல வரலாற்றில் ஜான் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதிய மனிதனும் இயற்கையும் என்ற நூலின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சில மாற்றங்கள் நடைபெற்றன.. அது வனப் பாதுகாப்புச் சட்டங்கள், வனத் துறை உருவாக்கம், அந்தந்த சமுதாய மக்களின் பொறுப்பில் இருந்த இயற்கை வளங்கள் அனைத்தும் அரசின் கைகளுக்கு கொண்டு வரப்பட்டன.. காப்புக் காடுகள் உருவாக்குவது, தேசிய வனவிலங்கு பூங்காக்கள், சரணாலயங்கள் உருவாக்குவது போன்றவை அவற்றின் தொடர்ச்சியே..

இயற்கை வளங்கள் மேலாண்மையில் அவற்றிற்கு அண்மையில் வாழும் மக்கள் ஈடுபடுத்தப்பட வில்லை எனில் அது மேலாண்மையாகவே இராது.. முற்காலத்தில் பொது வான இயற்கை வளங்கள் பலதரப்பட்டவையும் பரவலாக்கப்பட்டவையுமான சமூகக் கட்டுப்பாடுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு வந்தன. ஆனால் படிப்படியாக, பொதுமக்களுடைய வள ஆதாரச் சொத்துகளை அரசின் வள ஆதாரச் சொத்துகளாக மாற்றியமைத்த அரசின் கொள்கை அவற்றை அதிகார வர்க்கத்தினரின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அவர்கள் அவற்றை வல்லாதிக்கம் படைத்தவர்களூக்கு உரியதாக மாற்றி விட்டனர்..

இன்றைய உலகமயச் சூழலில் அனைத்தும் தனியார்மயம், எல்லாம் இலாபமயம் என்கிற போக்கு பிரதானமாக இருக்கையில் இந்தியாவில் பல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான வல்லுநர் அறிக்கைகள் வெளிவருகின்றன.. அறிஞர்கள், இயக்கங்கள் மட்டத்தில் அவை விவாதிக்கப்படுகின்றன.. இன்றைக்கு இயற்கை வளங்களைப் பேணீக் காப்பதில் பொதுமக்களுடைய பங்கு ஒன்றுமில்லை என்றாகிவிட்ட நிலையில் ஏழை எளிய மக்கள் நமது இயற்கைச் சூழலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்டு விட்டனர்.. அவர்களின் கருத்துகளை கேட்காமலேயே வனங்களை, தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தலாம் என சரத்துகள் கூறுகின்றன..

எனவே “அந்நிய ஆதிக்க காலத்தில் தொடங்கப்பட்ட இயற்கை வளங்கள் மீது அரசு கட்டுப்பாடு செலுத்தும் முறை திரும்பப் பெறல் வேண்டும்.. தொடக்க கால சமுதாயக் கட்டுப்பாட்டு முறை நீதிநெறிக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.. மாற்றமடைந்துள்ள சமூக, பொருளாதார சூழ்நிலையையும் இயற்கை வள ஆதாரங்களின் பாதுகாப்பிற்கு பெருமளவிலான வலியுறுத்தல்கள் அளிக்க வேண்டும்.. மிகவும் உயர்ந்த வகையில் ஒருங்கிணைப்புக் கொண்டதாகவும் அறிவியல் நுட்பங்களுடன் சம உரிமை அளிக்கும் விதத்திலும் நீடித்து நிலைக்க கூடியதாகவும் புதிய சமூக கட்டுப்பாட்டு அமைப்பு முறையினை நிறுவ வேண்டும்” – என்று 1985ஆம் ஆண்டில் இந்தியச் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த அறிஞர்கள் மற்றும் இதழியலாளர்களின் அறிக்கை வலியுறுத்திய அம்சங்கள் மீண்டும் அழுத்தம் பெற வேண்டும் என்பதை காலம் உணர்த்துகிறது..

நன்றி : சுற்றுச்சூழலியல் வரலாறு – இராமச்சந்திர குஹாஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 2 thoughts on “ஏழை மக்களின் சுற்றுச் சூழலியல் – தேனி சுந்தர்”
  1. உலக அளவில் போராட்டம் குறித்து வாசிக்க வாய்ப்பாக இருந்தது நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *