தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது – உதித் மிஸ்ரா

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது
(இடமிருந்து வலமாக) டேவிட் கார்ட், ஜோசுவா டி ஆங்க்ரிஸ்ட், கைடோ டபிள்யூ இம்பென்ஸ்ஆல்பிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருதைப் பெற்றுள்ள டேவிட் கார்ட், ஜோசுவா டி ஆங்க்ரிஸ்ட், கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோர் கல்வி மற்றும் எதிர்கால வருவாய், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளைப் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படுகின்ற பொருளாதார அறிவியலுக்கான 2021ஆம் ஆண்டிற்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருதை – பெரும்பாலும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு என்று தவறுதலாகக் குறிப்பிடப்படுகின்ற – ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் திங்களன்று (11/10/2021) அமெரிக்காவில் உள்ள பொருளாதார நிபுணர்கள் மூவருக்கு வழங்கியுள்ளது. அந்த விருதின் ஒரு பகுதி பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வருகின்ற டேவிட் கார்ட், மற்ற பாதி எம்ஐடியின் ஜோசுவா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கைடோ டபிள்யூ இம்பென்ஸுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ஸ்வீடிஷ் குரோனர் என்ற அளவில் இருக்கின்ற அந்த விருதுத் தொகை (சுமார் 8.60 கோடி ரூபாய்) அதன்படி பிரித்துக் கொடுக்கப்படும். விருதைப் பெற்றிருக்கும் இம்பென்ஸ் தனது நீண்டகால நண்பர்களுடன் சேர்ந்து விருதைப் பெற்றுக் கொள்வதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

காரணமும், விளைவுகளும்

‘இந்த ஆண்டிற்கான விருதைப் பெறுபவர்கள் தொழிலாளர் சந்தை குறித்த புதிய நுண்ணோக்கை வழங்கியுள்ளனர். காரணம், அதற்கான விளைவுகள் குறித்து  என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க முடியும் என்பதை அவர்கள் நடைமுறை  சோதனைகளின் மூலம் காட்டியுள்ளனர். மற்ற துறைகளுக்கும் அவர்களுடைய அணுகுமுறை பரவி, அனுபவ ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்று விருதிற்கான மேற்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுடைய ஆய்வுகளைப் புரிந்து கொள்வதற்கு ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புகளை குடியேற்றம் பாதிக்கிறதா? பள்ளிக்கல்வியில் முதலீடு செய்வது மாணவர்களுடைய எதிர்கால வருவாயை மேம்படுத்துமா? குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது வேலைவாய்ப்பு குறைவிற்கு வழிவகுக்குமா? என்பது போன்ற இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கின்ற மிக முக்கியமான சில கேள்விகளை நாம் கவனிக்க வேண்டும்.

காலகாலமாக, பல்வேறு நிலப்பரப்புகளில் தொடர்ந்து இருந்து வருகின்ற இந்தக் கேள்விகள் அனைத்தும் இன்றைக்கும் பொருத்தமானவையாகவே உள்ளன. ஆனால் சமவாய்ப்புடனான கட்டுப்பாடு கொண்ட சோதனையை நம்மால் உருவாக்க இயலாமையே இதுபோன்ற எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதில் இருந்து வருகின்ற சிக்கலுக்கு காரணமாக இருந்து வருகிறது. அதாவது பள்ளிக்கல்வி குறித்த சமவாய்ப்புடனான கட்டுப்பாடு கொண்ட சோதனையில் சில குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி வழங்கப்படுகின்ற அதே வேளையில் அவர்களுடன் ஒப்பிடுவதற்காக வேறு சில குழந்தைகள் பள்ளிக் கல்வியை இழந்து நிற்க வேண்டியிருக்கும் என்பதால் அதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ள முடிவதில்லை.

இந்த ஆண்டு விருதைப் பெற்றிருப்பவர்கள் தனித்து நிற்கும் இடமாக அது இருக்கிறது. தாங்கள் அடிக்கடி கவனித்து வந்த தொடர்புகளுக்குள் நுழைவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து, அந்த தொடர்புகள் காரணத்தை வெளிப்படுத்தினவா அல்லது வெளிப்படுத்தவில்லையா என்பதை அவர்கள் நிறுவியுள்ளனர். இந்த தொடர்பு என்பது ஒன்றாக நிகழ்கின்ற இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் இருப்பது. ஆனால் அந்த இரண்டிற்குமிடையே வெறுமனே இருக்கின்ற தொடர்பு மட்டுமே அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டாது (காரணத்தைக் கண்டறிவதற்கு ஒரு நிகழ்வு மற்றொன்றை ‘ஏற்படுத்துகிறது’ என்பதற்கான தெளிவான புரிதல் தேவைப்படும்).

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது
கல்விக்கும் வருமானத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு

டேவிட் கார்ட்: ஊதியங்களும், வேலைகளும்

டேவிட் கார்டின் ‘நடைமுறை சோதனைகளின்’ (சமவாய்ப்புடனான சோதனைகளை ஒத்ததாக நிஜ வாழ்க்கையில் எழுகின்ற சூழ்நிலைகள்) பயன்பாடு அந்த தொடர்பை நன்கு விளக்குவதாகவும், முன்மாதிரியானதாகவும் இருக்கிறது.

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

பொதுவாக அதிக அளவில் தரப்படுகின்ற ஊதியம் நிறுவனங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும் என்பதால் அது முதலாளிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் நபர்களை வேலைக்கு அமர்த்துவதற்கே வழிவகுத்துத் தரும் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது வேலைவாய்ப்புக்கு குறைவிற்கே வழிவகுக்கும் என்று கருதப்பட்டு வருகிறது. அப்படியென்றால் அதிக அளவிலே வழங்கப்படுகின்ற ஊதியம் வேலைவாய்ப்பை ‘வீழ்த்துவதற்கான’ காரணம் ஆகி விடுகிறதா? அதிக ஊதியம், குறைவான வேலை வாய்ப்பு என்று இந்த இரண்டு விஷயங்களும் பல சமயங்களில் ஒன்றாக நிகழ்ந்திருப்பதால் அதிக ஊதியம் குறைந்த வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என்ற தவறாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

இந்தக் கருத்தைப் பரிசோதிக்க டேவிட் கார்ட் ‘நடைமுறை சோதனையைப்’ பயன்படுத்தினார். நியூஜெர்சியில் ஒரு மணிநேர குறைந்தபட்ச ஊதியம் 4.25 டாலர் என்ற அளவிலிருந்து 5.05 டாலர் என்பதாக 1992ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது.  நியூஜெர்சியில் இருந்த வேலைவாய்ப்பின் தாக்கத்தை ஆலன் க்ரூகருடன் இணைந்து ஆய்வு செய்த டேவிட் கார்ட், அதனை கிழக்கு பென்சில்வேனியாவின் அண்டைப் பகுதிகளில் இருந்த வேலைவாய்ப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அவர்களுடைய ஆய்வின் முடிவுகள் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது வேலைவாய்ப்பு குறைவிற்கு வழிவகுக்காது என்பதையே காட்டின என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி குறிப்பிடுகிறது. மேலும் 1990களின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டேவிட் கார்டின் ஆய்வு முடிவுகள் ஏற்கனவே வழக்கமாக இருந்து வந்த அறிவிற்கு எதிராக இருந்தன என்றும் புதிய பகுப்பாய்வுகள் மற்றும் கூடுதல் நுண்ணோக்குகளுக்கு அவை வழியெற்படுத்திக் கொடுத்தன என்றும் அகாடமி குறிப்பிடுகிறது.

ஆங்க்ரிஸ்ட், இம்பென்ஸ்: கல்வியும், ஊதியமும்

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

ஆங்க்ரிஸ்ட், இம்பென்ஸ் ஆகியோர் காரணத்திற்கான தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான முறையான பங்களிப்புகளுக்கான அங்கீகாரம் கொண்டுள்ளனர். நடைமுறை சோதனைகளில் கிடைத்த தரவைப் புரிந்து கொள்வதற்கு அவர்கள் உதவினார்கள். மருத்துவ சோதனை அல்லது சமவாய்ப்புடனான கட்டுப்பாடு கொண்ட சோதனையைப் போல நடைமுறை சோதனையில் ஆய்வாளர் சோதனையின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் துல்லியமான முடிவுகளை எடுப்பது, காரணங்களைத் தொடர்புபடுத்துவது கடினமாகிறது. எனவே அவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு குழுவாக இருக்கின்ற மாணவர்களுக்கு கட்டாயக் கல்வியை ஓராண்டிற்கு நீட்டிப்பது (ஆனால் மற்றொரு குழுவிற்கு அல்ல) குழுக்களில் உள்ள அனைவரையும் ஒரே மாதிரியாகப் பாதிக்கலாம் அல்லது பாதிக்காமலும் போகலாம். ‘சில மாணவர்கள் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களைப் பொறுத்தவரை கல்வியின் மதிப்பு பெரும்பாலும் அந்தக் குழுவைப் பிரதிநிதிப்படுத்துவது மாதிரி இருக்காது. எனவே அந்தக் கூடுதல் ஆண்டின் விளைவுகளைப் பற்றி ஏதேனும் முடிவுகளை எடுக்க முடியாது. 1990களின் நடுப்பகுதியில் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைத்த ஆங்க்ரிஸ்ட், இம்பென்ஸ் இருவரும் காரணம் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றிய துல்லியமான முடிவுகளை நடைமுறை சோதனைகளின் மூலம் எவ்வாறு எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர்’ என்று அகாடமி குறிப்பிட்டுள்ளது.

இந்தியச் சூழல் 

இந்தப் பொருளாதார வல்லுநர்களின் வழிமுறை, ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் தொன்னூறுகளின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலுமாக இருந்தன. அவை ஏற்கனவே இந்தியா போன்ற பல வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

எடுத்துக்காட்டாக குறைந்த பட்ச ஊதியங்களை அதிகரிப்பது தொழிலாளர்களைப் பொறுத்தவரை எதிர்மறையாகவே இருக்கும் என்று இந்தியாவிலும் பொதுவான நம்பிக்கை நிலவி வருகிறது. கடந்த ஆண்டு கோவிட் தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கங்களை அடுத்து குறைந்தபட்ச ஊதியத்தை ஒழுங்குபடுத்துவது, பல தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிராக மனித மேம்பாட்டு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு ஆய்வு மையத்தின் இயக்குனரான பேராசிரியர் ரவி ஸ்ரீவஸ்தவா, சர்வதேச பொருளாதார உறவுகள் பற்றிய ஆய்வுகளுக்கான இந்திய கவுன்சிலில் உள்ள ராதிகா கபூர் போன்ற முன்னணி தொழிலாளர் பொருளாதார நிபுணர்கள் வாதிட்டனர்.

ஸ்ரீவஸ்தவா ‘அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதற்கான நியாயத்தை ஆய்வுகள் வழங்கிய போதிலும் அதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் தங்களுக்குள் பிளவுபட்டே இருந்தனர். நான் அதை மற்ற ஆய்வுகளுடன் இணைத்து தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொண்டேன்’ என்று கூறினார்.

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவதைப் பற்றி கவலை எதுவும் கொள்ளாமல் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க முடியும் என்பதே டேவிட் கார்டின் ஆய்விலிருந்து முக்கியமாக கற்றுக் கொள்வதாக இருக்கிறது என்று கபூர் கூறுகிறார். இந்தியாவில் தேசிய குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 180 ரூபாய் என்ற அளவிலே மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டவும் அவர் தவறவில்லை. மேலும் அவர் இப்போது ​​இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உள்ளது; அது அமைப்புசாராத் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், அமைப்புச்சாராத் துறைகளின் வருமானத்தை மேம்படுத்த குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

இந்தியப் பொருளாதாரத்தில், குறிப்பாக வருமான விநியோகத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த தேவைகளுக்கான தடைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது வேலைவாய்ப்பைத் தடுத்து நிறுத்திடாது என்பதைக் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானதாகவே இருக்கும்.

https://indianexpress.com/article/explained/explained-top-prize-for-labour-economics-7566828/

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021 அக்டோபர் 12 

தமிழில்: தா.சந்திரகுரு 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.