சிறுகதை: எடைக்கு எடை தங்கம் – இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை: எடைக்கு எடை தங்கம் – இராமன் முள்ளிப்பள்ளம்

ஆண்டு: 2020

தாமோதரசாமியின் மிகப் பெரிய கப்பல் கார் அந்த சிறிய பிள்ளையார் கோவில் முன் நின்றது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்த அந்த கோவில் முன் கூட்டம் அலை மோதியது. ஒலி பெருக்கியில் அறிவிப்பு வந்தது.

’’இன்னும் சற்று நேரத்தில் கொடை வள்ளல் அய்யா மதிப்பிற்குரிய தாமோதரசாமி அவர்கள் கோவிலுக்கு வர இருக்கிறார்கள்!. தன் எடைக்கு எடை தங்கம் தர உள்ளார்கள்!’’

அந்த அறிவிப்பாளனுக்கு தெரியாது தாமோதரசாமி அவர்கள் ஏற்கனவே வந்து விட்டார் என்பது. எட்டு காவலர்கள் அந்த பெரும் புள்ளி தாமோதரசாமி காரில் இருந்து இறங்கியதும் அவரை சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டனர். கைகுவித்தவாறே புன்முறுவலுடன் கொடை வள்ளல் தாமோதரர் துலாபாரம் நோக்கி. நடந்தார். அவர் ஒரு தட்டில் அமர்ந்தார். மறு தட்டின் அருகே ஒரு பலத்த பாதுகாப்பு மிக்க கவச வண்டி பின் நகர்வில் வந்து நின்றது. சிலர் கிசுகிசுத்தார்கள்.

’’அந்த வண்டிக்குள்ளாறதான் தங்கம் இருக்கு’’

கவச வண்டியின் பின் புறத்தில் ஆயுதம் தாங்கிய காவலர் எட்டு பேர். ஒரு தன வந்த நகைக்கடைக்காரர் ஒரு ரசீதை தாமோதரசாமியிடம் கொடுத்தார். அதை அவர் ஒரு காவல் உயர் அதிகாரியிடம் கொடுத்தார். பின் உயர் அதிகாரி கவச வண்டியின் பாதுகாவலரிடம் ரசீதை கொடுத்தார். தங்க வண்டி திறக்கப்பட்டது.

மக்கள் கூவினார்கள்

’’தங்கம்!! தங்கம்!!’’

வண்டியிலிருந்து தங்க கட்டிகள் இறக்கப்பட்டு தாமோதரசாமி அமர்ந்திருந்த தட்டின் எதிர் தட்டில் வைக்கப்பட்டது. கணிணிமயமாக்கப்பட்ட துலாபாரத்தின் மையத்தில் எண்கள் ஓடின. தாமோதரர் கைகூப்பி கண்களை மூடி அமர்ந்திருந்தார். எண்கள் ஏறுவரிசையில் ஓடி எண்பதில் நின்றது. மக்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். தாமோதரசாமியின் கண்களில் நீர் வெள்ளமாக வடிந்தது. கூட்டத்தில் ஒருவர் கூறினார்

’’இவர்தான் தெய்வம்! யாரு முப்பத்தி எட்டு கோடி மதிப்பு என்பது கிலோ தங்கத்த இந்த மாதிரி கடவுளுக்கு கொடுப்பாங்க?’’, சொன்னவர் கண்களிலும் நீர் வெள்ளம்.

வெடிகள் வெடிக்கப்பட்டன. தாமோதரர் விநாயகர், கணேசன், பிள்ளையார், கணபதி என பல பெயர்களால் போற்றப்பட்ட கடவுள் சிலை முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். மக்கள் மீண்டும் ஆரவாரம் செய்தனர்.

‘’இந்த தங்கத்த உருக்கி விநாயகருக்கு கவசம், காப்பு, கிரீடம் எல்லாம் போடுவாங்க’’ என்றார் தாமோதரர். பளிச் பளிச்சென வீடியோ கேமராக்கள் அந்த காட்சியை படம் பிடித்தன. சுமார் இருபது தொலைக்காட்சிகள் தங்கள் செய்தி சேகரிப்பாளர்களை அனுப்பி வைத்திருந்தன. மீண்டும் கை கூப்பியவாறே புன்முறுவலுடன் தன் கப்பல் காரில் ஏறினார் தாமோதரர். பாதுகாப்பு வளையம் அவர் காரினுள் அமர்ந்தததும் நேர் கோடாகி பின் வாங்கியது. காவலர் வண்டியை சுற்றி நின்ற மக்களை விலக்கி காருக்கு வழி ஏற்படுத்தினர்.

ஆண்டு: 1980

ஒரு நள்ளிரவு. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்த அந்த கோவில் முன் இருந்த உயர் கம்ப விளக்கு திடீரென அணைந்தது. ஒரு பெரிய கம்பத்தின் மீது இருந்த அந்த விளக்கு இப்படி திடீரென அணைய வாய்ப்பில்லை. அந்த கிராமத்து மக்களுக்கு இரு போக நெல் வயல்கள் ஐநூறு ஏக்கர் இருந்தது. எல்லா வேளாண் மக்களும் பரந்து விரிந்த மனம் கொண்டவர்கள்,. கோவிலுக்கு போதுமான நன்கொடை கொடுத்தனர். அதிகம் படிக்காத விவசாய பெருங்குடி மக்கள் ஒரு பெரிய ராட்சத உண்டியல் செய்து கோவில் முன் அதை நிறுத்தியிருந்தனர். அறுவடையை விற்ற கையோடு பணத்துடன் திரும்புகையில் முதலில் பிள்ளையாரின் உண்டியலில்  நன்கொடையை போட்டு விட்டுதான் வீட்டுக்கு செல்வார்கள். அப்படி  பிள்ளையாருடன் பந்தம். சிறப்பு நாட்களில் அன்னதானம் உண்டு. வருடம் ஒரு முறை ஒலி பெருக்கியில் எல்லா விநாயகர் பாடல்களையும் போட்டு திருவிழா எடுப்பார்கள். ஆகவே இவ்வளவு நிதி ஆதாரம் பெற்ற கோவில் நிர்வாகத்தினர் நல்ல மின்வேலைகள் செய்து உயர்கம்பத்திற்கும் அதில் விளக்கிற்கும் வழி வகை செய்திருந்தனர். அந்த உயர் ஒளி விளக்கு அணைந்தது என்றால் அதன் பின் தெய்வத்தை தோற்கடித்த மனிதச் செயல் இருக்க வேண்டும்.

கம்பத்தின் மின் விளக்கின் இணைப்பை துண்டித்த தாமோதரன் கருப்பு உடையில் இருந்தான். எதோ சைகை செய்தான். உடனே பெரும் சத்தம் வந்தது. அருகில் ஒரு இளைஞன் ஒரு பைக்கை ஸ்டார்ட் செய்து ஓசை எழுப்பினான். மூன்று நிமிடங்கள். உண்டியல் உடைக்கப்பட்டது. இரு நிமிடங்கள் கழித்து உயர் கம்பத்தின் விளக்கு ஒளிர்ந்தது. சற்று தொலைவில் இருந்த பைக்  ஓட்டம் எடுத்தது.

‘’தாமோதரா,  நான் பைக்க வேகம் பண்ணின சத்தத்துல நீ உண்டியல் பூட்ட ஒடச்ச சத்தம் கேக்கல’’

’’ஆமா கேக்கல. நான் திரும்பவும் விளக்கு எரிய வச்சதால யாருக்கும் சந்தேகம் வராது. விடிஞ்சி அவங்க பாக்கும் போது நாம பெங்களூர்ல இருப்போம்.’’

ஆம் பெங்களூர், அன்று ஓய்வூதியர்கள் சொர்க்கம். ரியல் எஸ்டேட் சூடு பிடித்த காலம். உண்டியலில் கிடைத்த ஒரு லட்சத்து ஐந்து ஆயிரத்தில் ஐந்தரை செண்ட் வீட்டு மனை ரூபாய் இருபத்தைந்தாயிரத்தில் வாங்கப்பட்டது. எண்பதாயிரத்தில் ஆயிரம் சதுர அடி வீடு கட்டப்பட்டு பின் ஆறு மாதம் கழித்து எட்டு லட்சத்திற்கு விற்கப்பட்டது. தாமோதரன் நல்ல காலம் பைக்கை ஓட்டியவன் விபத்தில் இறந்தான். எட்டு லட்சத்தில் ஏழு வீடுகள் கட்டினான் தாமோதரன். எண்பது லட்சத்திற்கு அவற்றை விற்றான். அலுவலகம் தொடங்கினான். ஐந்து வருடங்கள் கழித்து பெங்களூர், சென்னை, கோவை, மைசூர், எர்ணாகுளம், மங்களூர் இப்படி தென் இந்தியாவின் பெரு நகரங்களில் பூஞ்சோலை அடுக்கு மாடி வீடுகளும், வில்லா மாளிகைகளும் புகழ் பெற்றன, அந்த சொப்பனபுரிகளை ஏற்படுத்தியவன் பல்லாயிரம் கோடிகளை ஈட்டினான். நாடு முழுதும் கிளைகள் நூறு நகர்களில் லட்சம் வீடுகள் விற்கையில் நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. எண்பது கிலோ தங்கம் அந்த தாமோதரனுக்கு சல்லிக் காசு போல. அட சல்லிக்காசுன்னா என்ன கணிணிமய சமூகத்துல தோராயமா வேணாம் துல்லியமா பார்த்தோமுன்னா இந்த சல்லிக்காசு 0.0198 விழுக்காடு ஆகும். எது மேல விழுக்காடுன்னா தாமோதரர் சொத்து மேல இந்த விழுக்காடு வருது. பத்தாயிரம் கட்டிட தொழிலாளர்கள் உருவாக்கி கொடுத்த தாமோதரன் அனுபவிக்கிற சொத்து மதிப்பு இருபதாயிரம் கோடி. ஒவ்வொரு உழைப்பாளிக்கும் பிரிச்சு கொடுத்தா  ஆளுக்கு ரெண்டு கோடி வரும். ஆனா பிள்ளையாருக்கு கொடுத்த தங்கம் திருட்டுக்கு மன்னிப்பு. சரி இந்த கணக்கு விளக்கமெல்லாம் எதுக்கு ? இந்த தாமோதரன் வேற அந்த தாமோதரன் வேற. எதோ பேரு ஒரே மாதிரி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ஒரே ஆள் ஆயிருவாங்களா என்ன?. நம்பலயா ? சரி நம்ப வேணாம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *