எடி ஜேக்கூ எழுதிய (The Happiest Man on Earth) - நூல் அறிமுகம் - நாஜி வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருவரின் அருமையான வாழ்க்கை - https://bookday.in/

உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth) – நூல் அறிமுகம்

தேசியவாதம், இராணுவவாதம், ஏகாதிபத்தியம், கூட்டணித் தத்துவம் என பல காரணங்கள் இருந்தாலும், ஆஸ்திரிய- ஹங்கேரிய இளவரசர் “பிரான்ஸ் பெர்டினண்டின்”(Archduke Franz Ferdinand) படுகொலையே முதலாம் உலகப் போருக்கான உடனடித் தீப்பொறியை கிளப்பிவிட்டது. கொலைக்கு காரணமான செர்பியா மீது ஆஸ்திரியா போர் தொடுத்தது.ஆஸ்திரிய -ஹங்கேரியுடன் கூட்டணியில் சேர்ந்த ஜெர்மானிய பேரரசு,ருதுமானிய பேரரசு மற்றும் பல்கேரியா போன்ற நாடுகள் இணைந்து மைய சக்திகள்,(Central Powers)என்று உருவானது.செர்பியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ்,இத்தாலி, ருசியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒன்று கூடி நேச நாடுகள்(Axis power )என்று தனிப் பிரிவாக உருவானது. இவ்வாறு உலக நாடுகள்,இரு பிரிவுகளாக பிரிந்து போரிட்டனர்.

ஜூலை 28,1914 முதல் நவம்பர் 11, 1918 வரையிலான,4 வருட காலகட்டங்களில் நடைபெற்ற போரினால் 90 லட்ச ராணுவ வீரர்களும், 50 லட்ச குடிமக்களும் என மொத்தம் 1 கோடியே 40 லட்ச மனித உயிர்கள் பலியிடப்பட்டன.மானுட வரலாற்றில் போர்கள் என்பது, மனித இனத்தை அரித்தழிக்கும் செல்களாக இருந்து வந்திருக்கிறது.

கோர விபத்துகளுக்கு ஒப்பானவை போர்கள். வாழ்நாள் முழுவதும் விபத்தின் உபத்திரவத்தை அனுபவிக்கும் உடலும், போருக்கு பிறகான நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவை.பசி,ஏழ்மை, பஞ்சம், திருட்டு, நோய், வேலையின்மை,பணவீக்கம், அமைதியின்மை என பல பின்விளைவுகளை போர் சம்பாதித்து தந்துவிடுகிறது.

ஆஸ்திரேலிய அரசியல்வாதியும்,ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (National University of Australia ) பொருளாதாரத் துறை பேராசிரியருமான ஆண்ட்ரூ கீத் லீ(Andrew keith leigh) பொருளாதாரத்தின் மிகச் சுருக்கமான வரலாறு (The Shortest history of Economics) என்கிற நூலை எழுதியுள்ளார். மொத்தம் 14 தலைப்புகளை கொண்ட நூலில் 7-வது தலைப்பான “முதலாம் உலகப் போரும் பொருளாதார மந்த நிலையம்” (World War 1 and the depression ) என்கிற தலைப்பில், போருக்கு பிரகான ஜெர்மனியின் நிலைமையை பின்வருமாறு விளக்கியுள்ளார்.1923-ஆம் வருடம், நவம்பர் மாதங்களில் ஒரு ரொட்டியின் விலை காலையிலிருந்ததை விட மாலையில் ஏழு மடங்காக உயர்ந்து இருக்கிறது. இதனை அதீத பணவீக்கம் (Hyper inflation ) என்பர். அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஜெர்மனியை, போர் இழப்பீடாக “132 பில்லியன் தங்க மார்க்குகளை” செலுத்த நேச நாடுகள் நிர்பந்தித்தன. இந்தத் தொகையானது போருக்கு முந்தைய ஜெர்மனியின் பாதி தேச வளங்களுக்கு ஒப்பானவை. பணத் தேவையை சமாளிக்கவியலாத ஜெர்மனி அரசு அதிக பணத்தாள்களை அச்சடித்து வெளியிட்டது. இதுவே அதீத பண வீக்கத்துக்கு வழிகோலியது. இந்தப் பொருளாதார சீரழிவிற்கு மத்தியில், தான் ஒரு தீர்வு வழங்குவதாக ஹிட்லரும்,நாஜி கட்சியும் வாக்குறுதி அளித்தனர். அதற்காக, அவர்கள் ஒரு எதிரியையும்(யூதர்கள்) உருவாக்கினர். அதன் பிறகு ஹிட்லரும், அவருடைய கூட்டாளிகளும் அரங்கேற்றிய நாச வேலைகள் எல்லாம் நாம் கற்பனையிலும் நினைத்து பார்க்கமுடியாதவை.

மானுட அரக்கனான ஹிட்லரின் அட்டூழியங்களை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியதில் “அன்னா பிராங்கின் தினசரி குறிப்பு”(The diary of an Young girl) என்கிற நூலுக்கு முக்கியப் பங்குண்டு. அந்த நூல் உலக மக்களின் மனசாட்சியை உளுக்கியது.அன்னாவின் நூல் ஏற்படுத்திய அதே அதிர்வை ஏற்படுத்தியது தான் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன்” (The happiest Man on the Earth) என்கிற எடி ஜேக்கூவின் (Eddie Jaku) இந்த நூல்.

ஆசிரியர் மற்றும் மொழிபெயர்பாளர் குறித்து : 

ஆபிரகாம் சாலமன் ஜேக்கூ போவச் (Abraham Salomon Jakubowicz) என்பது எடியின் இயற்பெயர் ஆகும்.ஏப்ரல் 14,1920 ஆம் ஆண்டில் இசிடோர் -லீனா தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஜெர்மனியின் லைசிக் நகரில் எடி பிறந்தார்.நூறு வயதை கடந்த எடி,ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து, தனது 101-வது வயதில் அக்டோபர் 12,2021-இல் இயற்கை எய்தினார்.இரண்டாம் உலகப்போரில் யூத இன அழிப்பின் நேரடி சாட்சியமாக உயிர் வாழ்ந்த எடி,தனது வதை முகாம் அனுபவங்களை, உலக மக்களுக்கு கதைகளாக கூறி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்து வந்தார்.இவரது சமூகப் பங்களிப்புக்கான அங்கீகாரமாக, 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா”( Order of Australia ) என்கிற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.தனது நூறாவது வயதில் பான் மாக்மில்லன் (Pan MacMillan ) பதிப்பகத்தாரின் கோரிக்கைக்கு இணங்க, எழுத்தாளர் லியாம் பைப்பரின் உதவியோடு, அவரது போர் வாழ்வு அனுபவத்தை “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன்” என்கிற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

டி ஜேக்கூவின் (Eddie Jaku)
  எடி ஜேக்கூவின் (Eddie Jaku)

தேர்ந்த மொழிபெயர்ப்பாளரான நாகலட்சுமி சண்முகம் இதுவரையில் 80-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். திருப்பூர் தமிழ் சங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு துறைக்கான சிறப்பு விருது (2014), நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது(2014), தமிழக அரசு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2017) போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.

நூல் குறித்து :

நூல் அறிமுகம் என்பது ஒரு கலை, அதற்கென்று சில வழிமுறைகள் உண்டு. அதில் முக்கியமானவை நூலின் மொத்த விஷயங்களையும் கூறாமல் /எழுதாமல் இருப்பது. அதை கவனத்தில் கொண்டு நூலின் முக்கிய சாராம்சங்கள் சிலவற்றை மட்டும் இங்கு எழுதிச் செல்கிறேன். மேலும், கூடுதல் விஷயங்களை தெரிந்துகொள்ள வாசகர்கள் அவசியம் இந்த நூலை வாசித்து அறிந்து கொள்வீர்களாக.

“யூதர்களாகிய எங்களுக்கு எதிராக திரும்பியவர்கள் நாஜி இராணுவத்தினரும், பாசிச குண்டர்களும் மட்டுமல்லர். சாதாரண பொது மக்களும், எங்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆகியோரும் எங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்” (ப.எண்=35)…

மேற்கண்ட எடியின் கூற்றுப்படி ரணம் பொருந்திய அவருடைய நாட்கள், ஜெர்மனியின் லைசிக் இல்லத்தில் இருந்து தொடங்கியிருக்கிறது. எடி, அவரது இல்லத்திலிருந்து எஸ். எஸ். குண்டர்களால் புங்கென்வால்டு வதை முகாமுக்கு (Buchenwald concentration camp) அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு வழியாக தப்பித்து, நெதெர்லாந்து வழியாக பெல்ஜியத்திற்கு சென்றார். பெல்ஜியத்திலும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார்.

பின்பு அங்கிருந்து பிரான்சுக்கு தப்பிச்சென்றார். பிரெஞ்சு அரசாங்கம் எடியை கைது செய்து, அகதிகள் முகாமில் அடைத்தது. ஜெர்மனியால் கைது செய்யப்பட்ட பிரெஞ்ச் மக்களுக்கு ஈடாக ஜெர்மனியில் இருந்து தப்பிய யூதர்களை கைமாற்றிக் கொண்டது பிரெஞ்சு அரசாங்கம். இவ்வாறு எடி ஜெர்மனியிடம் பிரெஞ்சு அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டார். மீண்டும் ஜெர்மனியிடம் இருந்து தப்பிய எடி, பெல்ஜியத்திற்கு தப்பி ஓடினார். பெல்ஜியத்தில் தனது குடும்பத்துடன் ஓராண்டு காலம் கஷ்ட ஜீவனம் செய்தார்.இறுதியாக பெல்ஜிய காவல்துறையால், குடும்பம்பத்தாருடன் எடி கைது செய்யப்பட்டடு, நாஜிக்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.நாஜிக்களிடம் சிக்கிய எடி குடும்பத்தாரும், ஏனைய யூத மக்களும் போலந்து நாட்டில் இருக்கும் ஆஷ்விட்ஸ்(Auschwitz) வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர் .அஸ்விட்ச் வதை முகாமில் எடியின் தந்தை,தாய் இருவரும் விஷவாயு(Zyklon B) பாய்ச்சிக்கொள்ளப்பட்டனர்.எடி வேலை பார்த்த அதே வதை முகாம் தொழிற்சாலையில், அவருடைய சகோதரி ஹென்னி மொட்டையடிக்கப்பட்டு அடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டார். இறுதியாக போர் நாஜிகளின் கைகளை மீறிப் போகும் தருவாயில், எஞ்சியிருந்த யூத கைதிகள் பேரணியாக நடக்க வைக்கப்பட்டு ஜெர்மனியின் பூக்கென்வால்டு வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த பேரணிக்கு வரலாற்றில்“ மரணப் பேரணி” (Death Rally) என்று பெயர். இந்த மரணப் பேரணியில் 15,000 யூதர்கள் மரணித்தனர்.

பேரணியில் இருந்து தப்பிய எடி, அமெரிக்க இராணுவ படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.வெறும் 28 கிலோ உடல் எடையும், பிழைப்பதற்கு 35% மட்டுமே வாய்ப்பு இருந்ததை அறிந்து கொண்ட எடி அந்த கணம் “உயிர் பிழைத்துக்கொண்டால், நான் இவ்வுலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருக்க விரும்புகிறேன். என்னை பொறுத்தவரையில் இதுதான் மிகச்சிறந்த பழிவாங்கலாகும் ” என்ற சங்கல்பத்தை செய்து கொள்கிறார்.அந்த சங்கல்பத்தின்படி தனது 101-வது வயது வரை ஆஸ்திரேலியாவில் பிள்ளை, பேரன்பேத்திகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து முடித்தார்.யூத இன ஒழிப்பில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களின் சார்பாக,தன் வாழ்நாள் முழுவதும்,தனது போர்காலத்து அனுபவங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கதையாக கூறி மானுட அறத்தை மீட்டெடுத்து வந்தார்.

“ஒரு நல்ல தலைவர் வாய்க்கும் பட்சத்தில் உலகிலேயே தலை சிறந்த நாடாக ஜெர்மனி திகழும் ; ஆனால் ஒரு மோசமான தலைவர் அவர்களை வழிநடத்தும் பட்சத்தில் அவர்கள் அரக்கர்களாக மாறிவிடுவர்.
– பிஸ்மார்க்.

ஒருங்கிணைந்த ஜெர்மனியின் தலைவர் பிஸ்மார்க்கின் மேற்கண்ட கூற்று, ஜெர்மனிக்கென்று மட்டும் இல்லாமல்,எல்லா தேசங்களுக்கும் பொருந்தும். போரில் தோற்ற ஜெர்மானிய மக்கள் கோபத்தில் இருந்தனர். அந்த கோபம் பயத்திற்கும், பயம் வெறுப்புக்கும், வெறுப்பு அழிப்புக்கும் இட்டுச் சென்றுள்ளது.

“வெறுப்பு என்பது ஒரு நோயின் தொடக்கம்.புற்றுநோயைப் போல அது உங்களுடைய எதிரியை அழிக்கக்கூடும், ஆனால் அதே வேளையில் அது உங்களையும் அழித்துவிடும் (ப.எண்=199)..

இலக்கியம் என்பது காலப்பெட்டகம் என்பார் சாமி சிதம்பரனார். இலக்கியத்தினுள் தன் வரலாற்று நூல்களும் ஒரு வகைமையாகும். இந்தப் புத்தகம் வெறுமனே எடியை பற்றியது மட்டுமல்ல. இது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் பொக்கிஷம். அக்காலகட்ட மக்களின் மௌனத்தை படம்பிடித்து காட்டி இருக்கிறது. இத்தகைய இன அழிப்புக்கு வெறுப்பும்,பலவீனமும் மட்டுமே காரணமாக இருந்ததை, இப்புத்தகம் அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறது. கதே, நீட்சே போன்ற சிந்தனையாளர்கள் வாழ்ந்த பூமி ஜெர்மனி. அறிவியல், தொழில்நுட்பம், இதழியல், நவீனம், கல்வி, பண்பாடு என சகலத்திலும் முன்னேறியிருந்த நாட்டில் தான், இவ்வளவு கொடுமையும் நடந்தேறி இருக்கிறது. சுய சிந்தனையும், உயிர்களிடத்தில் அன்பும் இல்லாத மக்கள் எவ்வளவுதான் நவீனப்பட்டு இருந்தாலும், “வெறுப்பு” சகலத்தையும் எரித்து தரைமட்டமாகிவிடும் என்பது வரலாறு இதன் மூலம் நமக்கு உணர்த்தும் பாடமாகிறது. வரலாற்றை அறிந்துகொள்வதென்பது, அந்த வரலாறு மீண்டும் நிகழாமல் இருப்பதில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள உதவும்.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய பிரபலமான நாவல் “ஆடு ஜீவிதம்”.அதன் நாயகன் நஜீப், சுட்டெரிக்கும் பாலைவனத்தின் நடுவில் கந்தல்பட்ட காலத்திலும் தன்னைவிட கீழான பாவப்பட்டவர்களை நினைத்து, மனதை தெம்பேற்றிக் கொள்வது போல் ஒரு இடத்தில் சுயத்தேற்றளில் ஈடுபடுவான். ஒரு நல்ல எழுத்தின்/ படைப்பின் நோக்கமும் அதுதான்.60 லட்ச யூதமக்களின் இன அழிப்புக்கு சாட்சியமாக,7-ஆண்டு கால வதை முகாம் கொடுமைகளை அனுபவித்த எடியுடன் ஒப்பிட்டால்,நம் வாழ்வின் பாடுகள் எல்லாம் தூசுக்கு சமானம். எடி போன்றவர்களின் வாழ்வில் நாமும் பாடம் படித்து, நம்மையும் நாம் சேர்ந்த சமூகத்தையும் நேசித்து வாழ வேண்டும் என்பதே எடியின் ஆசை ஆகும். உலக மக்கள் எல்லோரும் அன்பும், அமைதியும் கூடிய வாழ்வு வாழ்ந்திட வேண்டிய எடியின் நெடும் பயணம், அவரது மறைவுக்கு பிறகும், எழுத்தின் வழி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.மானுடம் வெல்லும்!
நன்றி!

நூலின் தகவல்கள் :


நூலின் பெயர் : உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth)
நூல் ஆசிரியர் : எடி ஜேக்கூ (Eddie Jaku)
மொழிபெயர்ப்பாளர் : நாகலட்சுமி சண்முகம்
வெளியீடு : மஞ்சுல் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள் : 216
விலை : 399

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

நந்தசிவம் புகழேந்தி

உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth) – நூல் அறிமுகம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Masilamani Ramasamy

    நாஞ்சிலின் யூத படுகொலையை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறோம் ஆனால் தற்போது கடந்த 40 50 ஆண்டுகளாக யூதர்கள் பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கும் கொடுமைகளை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *