இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலையாளக்கரையின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழாவான ஓணத்தன்று ஆளும் பி.ஜே.பி அரசின் அமைச்சரும், RSS முகாமில் வளர்ந்தவருமான அமித்ஷா கேரளமக்களுக்கு “வாமனஜெயந்தி” வாழ்த்துக்களென சொல்லப்போக, ஒட்டு மொத்த கேரளாவும் அதற்கெதிராக வெகுண்டெழுந்தது. தங்களது மதிப்பிற்குரிய மாமன்னன் மகாபலியை அவமானப்படுத்தியதாக சமூகவலைதளங்கள் எங்கும் அமித்ஷாவிற்கெதிராக கண்டன குரல் எழுப்பி, “போமோனேஷாஜி” என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டது. அமித்ஷாவின் இந்த வாழ்த்தை தங்கள் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே மலையாளிகள் உணர்ந்தனர். அந்த பண்பாட்டின் பின்னணி என்ன?, கடவுளின் தேசமான கேரளத்தின் உண்மை கடவுள் யார்? என்பதையே இந்நூல் ஆராய்கிறது.
தொன்ம கதைகளை மீளாய்வு செய்வதென்பது கடந்தகால வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களையும், சதிகளையும் நிகழ்காலத்திற்கு வெளிக்காட்டுவதாகும். எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வெற்றி கொண்டவர்களாகவே எழுதப்பட்டிருக்க தோற்கடிக்கப்பட்டவர்கள், ஒடுக்கு முறைக்குள்ளானோரது வரலாறு என்னவென்பதை எங்கனம் அறிந்துகொள்வது. அவை ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் இன்றைய சந்ததியினர் மத்தியில் வாய் மொழிகதைகளாகவும், அவர்களது வழிபாடுகளிலும் விரவிக்கிடக்கிறது. அதனை ஆய்வு செய்து வரலாற்றின் பக்கங்களை மறுவாசிப்பு செய்ய உந்தும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பெரும்பாலான தொன்மக் கதைகள் குல, இன பெருமைகளை பேசுவதை விட எதிர்ப்புணர்வு தன்மையை கொண்டதாக இருக்கின்றன. அப்படியான தொன்மக்கதைகள், காலங்காலமாக பண்பாட்டு வழக்கமென கற்பிக்கபட்டு வந்த பழக்க வழக்கங்களை கேள்விக்கு உட்படுத்துகின்றன. மேலும் அப்படியான தொன்மங்களை வெகுமக்கள் கைகொள்ளும் போது, அவை பண்பாட்டு மேலாதிக்கத்துக்கெதிராக மிகத் தீவிரமாக, அதன் அடித்தளத்தை அசைவிற்கு உட்படுத்த முயற்சிக்கிறது.
கேரளக்கரையின் ஓணம் பண்டிகையின் தொன்மக்கதைகள் அத்தகைய தன்மையை கொண்ட கதைகளுள் ஒன்று. ஓணத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் நோக்கில் கேரள பண்பாட்டின் ஆதி அடித்தள்ளத்தை வெளிக்கொணர இந்நூலின் ஆசிரியர் ஏ.வி. சசிதரன் முயற்சிக்கிறார்.
கடவுளின் வெற்றியை கொண்டாடும் வகையிலேயே பண்டிகைகளுக்கான காரணகதைகள் அமைந்திருக்கின்றன. ஆனால் ஓணத்திலோ தோல்வியுற்ற அசுர மன்னனான மகாபலியை மனதில் நினைத்து அவன் வருகைக்காக மக்கள் ஏக்கத்துடன் காத்திருப்பதாகவே ஓணத்தின் பின்னான தொன்ம கதைகள் உள்ளன. இப்படியான கதைகள் ஓணத்தில் மட்டுமல்ல இந்த நாட்டின் பல பகுதிகளிலும் விரிந்து கிடக்கிறது. இத்தகைய எதிர் கடவுள்களே இம்மண்ணின் உண்மையான பூர்வகுடியினரின் கடவுள்களாக இருக்கின்றனர். ஆரிய மேலாதிக்கத்தை எதிர்த்து நின்று தோற்கடிக்கப்பட்ட, நீதிதவறாத அரசனாகவே மகாபலியை கேரள மக்கள் வழிபட்டு அவனது வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஓணப்பாட்டுகள் எனப்படும் தொன்மை கதைகள் மகாபலி அரசின் சிறப்புகளை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளன. நீதி தவறாது, நேர்மையுடன் மக்களை அரவணைக்கும் பண்புடன் மகாபலி ஆட்சிபுரிந்ததாக அப்பாட்டுகள் பாடப்படுகின்றன. ஆரிய பார்ப்பனான வாமனன் வஞ்சனைமிக்க சதியின் மூலமாக அந்த அரசனை தோற்கடித்து அவனின் குடிகளை அடிமைபடுத்தியதையும் ஓணப்பாட்டுகள் எடுத்துரைக்கின்றன.
இந்திய நிலப்பரப்பில் கடவுளின் கதைகள் என்று கூறப்படும் அனைத்து புராணகதைகளின் பின்னும் கிளை கதைகள் நிறைய பரந்து விரிந்து கிடக்கின்றன. அசுர, தேவ யுத்தங்கள் என்று குறிப்பிடபடுவையாவும் சாதியை உருவாக்கி அங்கீகரித்த பார்ப்பனபண்பாட்டிற்கும், அதன் மேலாதிக்கத்தை ஏற்கமறுத்த பூர்வ மக்களுக்கும் இடையேயான பண்பாட்டு, அரசியல் யுத்தங்களேயாகும். இங்கு பொது உளவியளுக்குள் எதிர் கடவுள்களாக மாற்றப்பட்டுள்ள ஒவ்வொரு கடவுளும் தோற்கடிப்பட்ட பூர்வகுடி மக்களின் கடவுளர் ஆவர்.
மராட்டியத்திலும் மகாபலியின் தொன்ம கதைகள் உள்ளது. இன்றளவும் திராவிட மன்னன் என அறியப்படும் இராவணனின் தகன கொண்டாட்டம் கோண்டு பழங்குடியின மக்களுக்கு மனக்கஷ்டம் தரும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. கோண்டுகள் இரவணனை தனது மன்னனாக வழிபடுகின்றனர். பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒடுக்குமுறைக்குள்ளான சாதியினரும் தங்களது கடவுளை விட்டு விட்டு இராமனை கொண்டாடுகின்றனர். பார்ப்பன உளவியல் ஆக்கிரமிப்பின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இராமன்-இராவணின் தொன்ம கதைகள் ஆகும்.
இந்நூல் ஓணத்தின் வரலாற்றை மட்டும் மீளாய்வு செய்யவில்லை. பார்ப்பனிய கலாச்சாரம் அபகரித்த, அந்த அதிகாரத்தை எதிர்த்து நின்ற மற்ற சில கடவுள்களின் கதைகளையும் நமது கவனித்தில் நிறுத்துகிறது. கேரளத்தின் முக்கிய வழிபாட்டுத்தளமாக திகழும் ஐயப்பன் இன்று பார்ப்பன பிடியில் இருந்தாலும், அவனது பூர்வீகம்மல அரயர் என்னும் பழங்குடியினரிடம் இருக்கவே வாய்ப்புகள் அதிகமெனதரவுகளின் அடிப்படையில் இந்நூல் ஆசிரியர் வாதிடுகிறார்.
பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு நேரடி சவால் விடும் வகையில் “தெய்யங்கள்” எனப்படும் கலை வடிவங்கள் ஆரியமல்லாத தெய்வங்களை கொண்டாடுகின்றன. “தெய்யம்” ஒரு முக்கியமான எதிர்கலை, எதிர் அரசியல் வடிவமாகும். இப்படியான மக்கள் கலைகளை கம்யுனிஸ்ட் கட்சி அரசுக்கெதிரான எதிர்ப்பு வடிவமாக கேரளத்தில் பின்பற்றியிருக்கிறது. தெய்வ கதைகளின் மேலும் ஆரியமல்லாத எதிர் கடவுள்களின் கதைகள் மக்களுக்கு சொல்லப்படுகின்றன.
பார்பன மேலாதிக்கத்தின் எதிர் வடிவம் என்னும் போது அங்கு பௌத்தம், சமணம் குறித்து பேசாமல் இருக்க முடியாதல்லவே. கேரளத்தின் பௌத்த, சமண மரபு குறித்தும் இந்நூல் விவரிக்கிறது. கேரளத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையான துஞ்சத்து எழுத்தச்சன் வழியே கேரளத்தின் பௌத்த பண்பாடு இலக்கியமாக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தொன்ம கதைகள் இருந்தாலும் இன்றளவும் மத சடங்குங்களில் பார்ப்பனிய பண்பாடே தாக்கம்செலுத்துகிறது. பெரும்பாலான தொன்ம கதைகளில் பார்ப்பன இடைச்சொருகள் அதிகமாகியிருக்கின்றன.
பெருவாரியான மக்களின் பண்பாட்டின் மீது மேலாதிக்கம் செலுத்தி, அதை உட்செரித்து தனதாக்கி கொள்ள பார்ப்பனியம் என்றுமே தயங்கியது கிடையாது. அதன் பண்பும் அது தான். இருந்தாலும் காலந்தோறும் அதற்கு எதிரான கதையாடல்களும், அதை குறித்த ஆய்வுகளும் உண்மையை உரத்து கூறும் எண்ணத்துடன் எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்நூலும் அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. வெகுமக்களின் பண்பாட்டினை ஒற்றை அடையாளத்திற்குள் அடைக்க துடிக்கும் ஆட்சியாளர்கள் உள்ள இந்த நேரத்தில் இப்படியான நூல்களின் வாசிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
நூல்: எதிர் கடவுளின் சொந்த தேசம்
ஆசிரியர் : ஏ.வி. சசிதரன்
தமிழில்: சா. தேவதாஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு
– நவநீதன்