கல்வி சிந்தனையாளர்-1: சில்வியா ஆஷடன் வார்னர் – கோமதி

கல்வி சிந்தனையாளர்-1: சில்வியா ஆஷடன் வார்னர் – கோமதி

கல்வி சிந்தனையாளர் _சில்வியா ஆஷடன் வார்னர்_ ‘இயற்கை கற்பித்தல் முறை'(Organic Teaching)

மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்பது என்பது அவசியமானதே. ஆனாலும் வாசித்தல் மற்றும் எழுதுதலில் குழந்தைகளின் தாகத்தை அவர்கள் அன்றாட வாழ்வின்  நிகழ்வுகளாலேயே பூர்த்தி செய்ய முடியும்.

“நான் குழந்தைகளின் ஆழ் மனதிற்குள் பயணித்து கைநிறைய பொக்கிஷங்களை அள்ளி வருகிறேன். அவற்றைக்கொண்டு அவர்களுக்கு கற்பிக்கத் துவங்குகிறேன்” என்கிறார் சில்வியா..

நியூசிலாந்து நாட்டின் மௌரி பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு தனது புதிய கற்பித்தல் முறையின் மூலம் எழுத்தறிவித்து உலகெங்கிலும் புகழ்பெற்ற கல்வியாளராக இவர் திகழ்ந்தார். இந்த மாறி வரும் உலகில் வார்த்தைகள் மட்டுமே பொருள் பொதிந்தவை. வார்த்தைகளே வாசிப்பின் மீது நம் காதலை ஏற்படுத்தும். ‘முதல் வார்த்தையில்’ தான் ஒரு குழந்தையின் வாசிப்பின் மீதான காதல் பிறக்கிறது. கற்றல் இயல்பாக நிகழும் போது வாசித்தல் உறுதி பெறுகிறது. இந்த இயல்பான வழி கற்றல் குழந்தைகளை புத்தகம் வாசித்தல் என்னும் புதிய பரிமாணத்திற்கு இட்டுச்செல்கிறது. அவ்வாறு செல்லும்போது வாசித்தல் என்பது கடினமான ஒரு வேலையாக இல்லாமல் மகிழ்வான அனுபவம் ஆகிறது என்கிறார் சில்வியா.

பொதுவாக கற்றல் என்பது மூன்று படிநிலைகளில் நிகழ்வதாக உலகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். முதலாக,  மாணவர்கள் தங்கள் சூழ்நிலையில் இருந்து தூண்டல்களை பெறுகின்றனர், இரண்டாவதாக அந்த தூண்டலுக்கு ஏதுவான துலங்கலை பல்வேறு செயல்பாடுகள் மூலமாக நிகழ்த்துகின்றனர், மூன்றாவதாக,  அதன் மூலமாக தாங்கள் பெற்ற அறிவை ஒருங்கிணைத்து தங்கள் வாழ்வில் பயன்படுத்துவதனாலும். 

தனக்கென்று  திட்டமிட்டு கொண்டு வந்த புது பாணி அல்ல  இந்த இயற்கை கற்பித்தல் முறை. தன் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பித்தால் ஏற்புடையதாக இருக்குமோ அதையே  தான் செய்ததாக கூறுகிறார்  சில்வியா.  மேலும் இயற்கை கற்பித்தல் முறை என்பது டால்ஸ்டாய் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது. பஞ்சத்தில் அடிபட்டு உள்ள மக்களுக்கு கற்பிக்க முற்படும்போது பசி,மண், மழை போன்ற வார்த்தைகளில் இருந்தே நாம் துவங்க முடியும். அவர்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய அந்த ‘முதல் வார்த்தைகள்’ தான் அவர்களை கற்றலில் நிலைபெறச் செய்யும்.

Photograph of Sylvia Ashton-Warner te… | Items | National …

சில்வியாவின் இயற்கை கற்பித்தலில் (organic teaching) இந்த ‘முதல் வார்த்தை’ (First word) முக்கியத்துவம்  பெறுகின்றன.  ஒவ்வொரு குழந்தையின் முதல் வார்த்தையும்,  அக்குழந்தையின் முதல் விருப்பத்தின் பிரதிபலிப்பாகும். இந்த ‘முதல் வார்த்தை’ என்பன குழந்தைகளின் உணர்வுகளோடு நேரடி தொடர்புடையன. சில்வியா தனது அனுபவத்திலிருந்து பெரும்பாலான குழந்தைகளின் முதல் வார்த்தை இரண்டு உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக கூறுகிறார். அவை ‘பயம் மற்றும் காதல்’. இந்த இரு உணர்வுகள் சார்ந்த வார்த்தைகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும்.  உதாரணமாக பயம் என்ற உணர்வுக்கு ‘பேய், புலி, நாய், காட்டுப்பன்றி, முதலை, போலீஸ்’  என குழந்தைகளின் முதல் வார்த்தை நீளுகிறது.அதைப்போல் அன்பு என்ற உணர்விற்கு குழந்தைகளின் வார்த்தை ‘அம்மா , அப்பா, முத்தம்’ என நீள்கிறது. இந்த முதல் வார்த்தைகளின் தொகுப்பை சில்வியா ‘ஆதார சொற்களஞ்சியம்’ என குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். உள்ளார்ந்த பார்வை என்பது குழந்தைக்கு குழந்தை வேறுபடும். இந்த வேற்றுமைகள் வளர்ந்த மெத்தப்படித்த கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்களுக்கு புரியாது. அதுவும் மௌரி குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட யூரோப்பிய பாடத்திட்டம் அவர்களுக்கு முற்றிலும் அன்னியப்பட்டு நின்றது. இதன் விளைவு மௌரி குழந்தைகள் உயர்நிலை வகுப்புவரை முட்டிமோதி சென்றும் அதற்கு மேல் அவர்களால் கல்வியை தொடர முடியவில்லை. எனவே இந்த முரண்பாடு பள்ளி முதல் நாளிலிருந்தே களைய முயற்சி செய்தார் சில்வியா ஆஷடன் வார்னர்.

சில்வியாவின் இயற்கை கற்பித்தல் முறையில் ஒவ்வொரு குழந்தையிடமும் உங்களுக்கு என்ன வார்த்தை கற்க வேண்டும் என்று கேட்கிறார். குழந்தைகள் வீடு ,விமானம்,அப்பா, அம்மா, வெடிகுண்டு , முத்தம்,  அண்ணன்,கத்தி, அன்பு, நடனம்,  அழுகை, சண்டை, நாய் என குழந்தைகளின் முதல் வார்த்தைகளை பட்டியலிடுகின்றனர். இந்த வார்த்தைகள் அவ்வகுப்பின் ‘ஆதார சொற்களஞ்சியம்’ ஆகின்றன. குழந்தைகள்  கூறிய ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் ஒரு கதை இருப்பதை சில்வியா  மாணவர்களோடு உரையாடி அறிந்து கொள்வார்.  இந்த ‘முதல் வார்த்தைகளை’ மாணவர்கள் தங்களோடு வைத்திருப்பர், ஆடுவர், விளையாடுவர், சண்டை இடுவர், அதனோடு தூங்குவர்.  ஏனெனில் அவை தங்களுடைய வார்த்தைகள் என்று அவர்கள் நம்புகின்றனர்.  அந்த வார்த்தைகளை லேசான காகிதத்தில் எழுதி தரக்கூடாது. அவை கிழிந்து விடும். எனவே அவற்றை மொத்தமான அட்டைகளில் எழுதித்தர வேண்டும் என்கிறார் சில்வியா.அதை வாங்கிக் கொண்ட மாணவர்கள் ” இது என்னுடைய வார்த்தை” என்ற மகிழ்ச்சியில்  குதிப்பார்கள். 

organic reading | An A-Z of ELT

அடுத்த நாள் மாணவர்கள் வகுப்பிற்கு வரும்போது அவ்வட்டைகளை  பரப்பி வைத்துவிடுவார். அவரவர் அட்டைகளை எடுங்கள் என்றவுடன் மாணவர்கள் உற்சாகத்தோடு தங்களுடைய வார்த்தைகளை தேடி எடுப்பர். இப்போது அவர்களுடைய வார்த்தைகளை அவர்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வர். கற்றல் விரிவடைகிறது. அடுத்த நாள் அவருடைய வார்த்தைகளின் கதைகளை கூறச் சொல்வார் சில்வியா.  மாணவர்கள் கூறும் கதையை கரும்பலகையில் எழுதுவார், அவற்றை மாணவர்களைப் படிக்க வைப்பார். மாணவர்கள் தங்களுடைய கதையை எளிதில் படிப்பார்கள். இதற்குப்பின் அக்கதையை படமாக வரையச் சொல்வார். வகுப்பறை முழுவதும் மாணவர்களின் படங்கள் பேசிக் கொண்டு இருக்கும். படங்களோடு நின்றுவிடாமல் பாடல், நடனம், நாடகம், என பல கலை வடிவங்களின் கற்றல் தொடரும்.

சில்வியாவின் பார்வையில் கற்றல் என்பதை வெகுமதியோடு தொடர்பு படுத்துகிறார். பாராட்டுகள், பரிசுகள், வெகுமதிகள் இவை கற்றலுக்கு மிக முக்கியம் என்கிறார். எளிமையானவற்றிலிருந்து கற்றலை துவங்குகிறார். அவற்றுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் வழங்குகிறார். வார்த்தைகள்,பத்திகள், பக்கங்கள் எழுதுதல் என படிப்படியாக குழந்தைகள் முன்னேற இந்தப் பாராட்டுகளும் பரிசுகளும் உதவுகின்றன. இந்த சிறுசிறு வெகுமதிகள் குழந்தைகளை  நாடகம் உருவாக்குதல், நடித்தல் போன்ற பெரிய செயல்பாடுகளை நோக்கி கொண்டு செல்கிறது என்கிறார் சில்வியா.

சில்வியாவை  பொருத்தவரை  ஒவ்வொரு குழந்தையும் இரண்டு துளைகள் கொண்ட ஒரு எரிமலையை போன்றவர்கள். ஒரு துளை அழிவிற்கானது, மற்றொன்று ஆக்கத்திற்கானது. மாணவர்களின் படைப்பாற்றல் திறன்களை வளர்ப்பதன் மூலம் ஆக்கங்களை நாம் விரிவுபடுத்துகிறோம். ஆக்கத்திற்கான வாய்ப்புகள் விரிவடைய விரிவடைய அழிவின் துளை தானாகவே காணாமல் போய் விடுகிறது என்கிறார்.

S is for Sylvia (Ashton-Warner) | An A-Z of ELT

 அவருடைய பாணியில் கற்றல் என்பதை உயிரோட்டமானதாகவும், நிஜ வாழ்வோடு தொடர்புடையதாகவும், வெகுமதிகள் மூலமாக நிலைபெற செய்வதாகும் வரையறுக்கிறார். மேலும் அவர் கற்றல் என்பது மாணவர்களின் அனுபவத்தில் இருந்தே தொடங்க வேண்டும், அதுவே கற்றலை வேகப்படுத்தி வளரச் செய்யும், மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வலுப்பெறச் செய்யும் என்று நம்பினார்.

தன்னுடைய கற்பித்தல் அனுபவங்களை  ‘டீச்சர்’ என்ற புத்தகமாக  வெளியிட்டுள்ளார். இவருடைய சொந்த நாடான நியூசிலாந்தில் இவருக்கு பெருமளவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றாலும் உலக அளவில் இவருடைய கற்பித்தல் முறைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. உலகமே புகழ்ந்த இவரை அவருடைய தாய் நாடும் தாமதமாக அங்கீகரித்தது.

இரா. கோமதி 

ஆசிரியை

சவராயலு நாயகர் அரசு பெண் தொடக்கப்பள்ளி.,புதுச்சேரி 

 

Keywords:

#Sylvia Ashton Warner

#Organic teaching_ இயற்கை கற்பித்தல் முறை

#First word_ முதல் வார்த்தை

#Key vocabulary_ ஆதார சொற்களஞ்சியம்

 

Show 2 Comments

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *