1994 – 1998 ல் கலிபோர்னியா மாகாணத்தில், லாங் பென்ச் நகரின் உட்ரோ வில்சன் உயர்நிலைப் பள்ளியில் ‘ரூம்- 203’ மிகவும் பிரசித்தி பெற்றது. ஒட்டுமொத்த பள்ளியும் ஒருமனதாக முடிவு செய்து நிராகரித்த 150 மாணவர்கள் அடங்கிய வகுப்பறை தான் ரூம்- 203 ஆகும். ஓர் ஆசிரியை அவருடைய 150 மாணவர்கள் வாழ்வை மாற்றியமைத்த வரளாறு இது.
எரின் குரூவெல் புதிய பயிற்சி ஆசிரியராக வகுப்பிற்குள் நுழைகிறார். இனவெறி, நிறவெறி,உடைந்து போன குடும்ப பின்னணி, வன்முறை, சிறார் குற்றவாளிகள், மற்றும் போதைப் பழக்கம் என சமூகத்தில் உள்ள அனைத்து தடுமாற்றங்களும் தங்கள் முகங்களாக கொண்ட மாணவர்கள் நிறைந்து இருந்தது அந்த அறை. எரின் குரூவெல்லை தனியாக அந்த வகுப்பிற்குள் விட்டு விட்டு வெளியேறுகிறார் அவருடைய வழிகாட்டி ஆசிரியர். திக்குத் தெரியாத காட்டில் தனியே விடப்பட்ட அனுபவம்தான் குரூவெல்லிற்கு. மாணவர்கள் பள்ளியில் தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்த வெறுப்பை குரூவெல் மீது காண்பித்தனர். தங்கள் வாழ்க்கையோடும் வாழ்க்கை முறையோடும் தொடர்பில்லாத பிற ஆசிரியர்கள் போலவே குரூவெல்லையும் அவர்கள் பார்த்தனர். அந்த வெறுப்பை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் மாணவர்கள் வெளிப்படுத்தியது குரூவெல்லை யோசிக்க வைத்தது. முதலாமாண்டு ஆசிரியர் பயிற்சி மாணவரான தன்னை இம்மாணவர்கள் ஏன் இவ்வளவு வெறுக்க வேண்டும், படிப்பின் மீது ஏன் அவர்கள் ஆர்வம் கொள்ளவில்லை என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
தன் மாணவர்களை புரிந்துகொள்ள முயற்சி எடுக்கிறார் அதன் முதல் கட்டமாக மாணவர்களின் குடும்ப பின்னணி பற்றியும் அவர்கள் வாழும் பகுதியை பற்றியும் தெரிந்து கொள்கிறார். இரண்டாவதாக பொறுமையும் தைரியத்தையும் துணைகொண்டு குழந்தைகள் இடையே காணப்பட்ட இனபாகுபாட்டையும் முன் மதிப்பீடுகளையும் உடைத்தார். பள்ளியை பொருத்தவரை ‘பாதுகாப்பான வட்டங்கள்’ என்ற தனித்தனி குழுக்களாக இருக்கக்கூடாது என்பதை நடைமுறை படுத்தினார். இந்த முயற்சி மூலமாக மாணவர்கள் பள்ளியில் சிறுசிறு குழுக்களாக செயல்படுவது நிறுத்தப்பட்டது.
தன்னுடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நிர்வாகத்திடம் இருந்து இவருக்கு எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. மற்ற மாணவர்களுக்கு வழங்குவதைக் காட்டிலும் இம்மாணவர்களுக்கும், இவ் வகுப்பிற்கும் குறைவான வசதிவாய்ப்புகளே வழங்கப்பட்டது. குரூவெல் இந்த பற்றாக்குறையை போக்க பகுதி நேர வேலைக்குச் சென்று அதில் வரும் வருமானத்தில் தன் படிப்பு செலவையும், மீதமுள்ள பணத்தில் தம் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நாவல்களை வாங்கினார். மாணவர்களிடையே பேசுவதற்கு சிறப்பு அழைப்பாளர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கான செலவுகளையும் தானே சமாளித்துக் கொண்டார்.
ஒரு தலைவராக தன் மாணவர்களின் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை வென்றார். வகுப்பிலுள்ள மாணவர்கள் பெரும்பாலானவர்கள் கற்றல் குறைபாடு மற்றும் நடத்தை பிழர்வு உடையவர்களாக காணப்பட்டனர். கவனச்சிதறல் குறைபாடு அவர்களிடம் காணப்பட்டது. வாழ்க்கையில் இம்மாணவர்கள் கடந்து வந்த பாதை,அவை ஏற்படுத்திய ரணங்கள், ‘கல்வி, பள்ளி, கல்லூரி, பணி’ போன்ற சொற்களை இவர்களிடமிருந்து அன்னிய படுத்தின. ‘நான் ஏன் கல்வி கற்க வேண்டும்?’ என்ற கேள்வி அவர்களிடம் தொக்கி நின்றதை உணர்ந்தார். மாணவர்களின் தேவையையும், அவர்களது வாழ்க்கைமுறை சிக்கல்களையும் செவிமடுக்காத கல்விமுறை மாணவர்களை கல்வியிடமிருந்து விலக்கி வைத்துவிடும்.
எனவே தம் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தையும், கற்பித்தல் முறையையும் அவரே வரையறுத்தார். அவ்வாறு செய்யும்போது கல்வி நிறுவனங்கள் பரிந்துரைக்கும் கல்வி தத்துவங்களும் எதார்த்தமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் இருப்பதை உணர்ந்தார். இப்பணியில் பயிற்சி ஆசிரியராக தான் தொடர்ந்து நீடிக்க கற்பித்தலில் யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுத்தார். தன்னுடைய பேராசிரியரான டாக்டர் மேரி எலன் வோட் அவர்களின் ‘காட்சிப்படுத்துதல் மூலமாக ஆங்கிலம் கற்றல் முறையை’ தன் வகுப்பறைக்கு கொண்டு வந்தார்.
புலனுணர்வு சார்ந்த கற்றல் முறைகளை இவர் தேர்ந்தெடுத்தார். கற்றல் என்பது அனைத்து புலன்கள் வாயிலாகவும் நிகழவேண்டும், வெறும் புத்தகத்திற்கும் மாணவர்களுக்குமான தொடர்பாக கற்றல் முடிந்து விடக்கூடாது. அதுவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக ஏற்றத்தாழ்வுகளில் அடிபட்டு வந்த இந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உதவாது என்று கூறினார். மாணவர்கள் தாங்கள் கற்க விரும்புவதையும் கற்றதையும் படங்களாக காட்சிப்படுத்தும் முறையை ஊக்குவித்தார். அதனோடு சேர்ந்து மாணவர்களின் மொழி அறிவையும் ஆளுமையையும் வளர்க்க அவர்களுடைய கசப்பான அனுபவங்களை டைரி குறிப்பாக எழுத வைத்தார். இந்த டைரி எழுதும் பழக்கத்தினால் மாணவர்களுக்கு எழுதுதல் மீது நன்மதிப்பு உருவானது. எழுதுவதை தொடர் நிகழ்வாக மதித்தனர். இளம் எழுத்தாளர்களாக உருவெடுத்தனர்.
எந்தவித பயமுமோ, விமர்சனமுமோ அல்லது தீர்ப்போ இல்லாமல் மாணவர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக எழுத குரூவெல் ஊக்குவித்தார். தங்கள் வாழ்வில் நடந்த உண்மைகளை எவ்வளவு கசப்பானதாக அல்லது வலி நிறைந்ததாக இருந்தாலும் மாணவர்கள் அவற்றை தயங்காமல் வெளிப்படுத்தினர். ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான எழுத்துநடையை கொண்டு இருந்தனர். ஒருவர் எழுதியதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல், சரிபார்த்தல் சமூக சிக்கல்கள் குறித்து வகுப்பில் விவாதித்தல் என மாணவர்கள் தனித்தனியாக வளராமல் ஒரு எழுத்தாளர் சமூகமாக உருவாக்கினார். இந்த எழுத்தாளர்கள் தங்களை ‘விடுதலைக்கான எழுத்தாளர்களாக” ( The Freedom Writers) அடையாளப்படுத்திக் கொண்டனர். ஒன்றுமே இல்லை என்று ஒதுக்கப்பட்ட மாணவ சமூகத்தை ஃப்ரீடம் ரைடர்ஸ் என்ற எழுத்தாளர் சமூகமாக மாற்றுவது சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை.
இம் மாணவர்களை முதன்முதலாக ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் ‘ படத்திற்கு அழைத்து செல்கிறார். சமூகத்தை பற்றி எந்தவித அக்கறையும் இல்லாத ஊதாரியான பெரும் பணக்காரன் இக்கதையின் நாயகன். நாசிகள் பகுதியில் ஒரு பெரும் தொழிற்சாலையை நிறுவி பணம் ஈட்ட வருகிறான்.அந்த படம் முடியும் வேளையில் நாசிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து போராடும் ஒரு போராளியாக அவன் மாறுகிறான். இதுவே அப்படத்தின் ஒருவரி கதையாகும். இந்தக்கதையை பார்த்த மாணவர்களிடம் முதன்முறையாக மாற்றத்தை காண்கிறார் எரின் குருவெல். படம் பார்த்துவிட்டு பள்ளிக்கு திரும்பியபின் அப்படத்தோடு தங்கள் வாழ்க்கையை தொடர்புபடுத்தி மாணவர்கள் தாமாகவே எழுத ஆரம்பிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தாங்களாகவே தங்கள் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரிடம் பேச வைக்கின்றனர். இதுவரை பள்ளிக்கே வந்திராத மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது வந்துள்ளது குரூவெல்லிற்கு ஒரு நல்ல முன்னேற்றமாக தெரிந்தது. தன் மாணவர்களை அவர்களுக்கு உள்ள தடைகளை தாண்டி படிப்பின் பக்கம் ஆர்வத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது. அடுத்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ‘ஹாலோ காஸ்ட் ‘ அருங்காட்சியகத்திற்கு (Holocaust museum) தம் மாணவர்களை அழைத்து செல்கிறார். அங்கு ஜெர்மானிய நாசி ஆட்சியால் ஏற்படுத்தப்பட்ட ‘பெரும் இன அழிப்பு’ குறித்த பல பொருட்களும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த இன அழிப்பில் உயிர் பிழைத்தவர்களையும் இம் மாணவர்களுடன் உரையாட வைக்கிறார் குரூவெல். தங்களுக்கு நிகழும் அநீதிகளை நினைத்து வன்முறையில் ஈடுபடுவது அல்ல வீரம், தங்கள் பலவீனங்களையே பலமாக மாற்றி போராடுவது தான் வீரம் என்று உணர்ந்தனர் மாணவர்கள்.
பெரும் போர்க்காலங்களில் தங்கள் வாழ்க்கையை கழித்த அனுபவத்தை டைரி குறிப்பாக எழுதிய ‘ஆன் பிராங்க்’ மற்றும் ‘ஸ்லாடா’ டைரி குறிப்பு புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்கிறார். போர்க்காலத்தில் பயந்துபோய் புலம்பல்களில் ஒன்றுமில்லாமல் போவதை விட அவற்றை டைரிக் குறிப்புகளாக எழுதி எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்று ஆவணமாக தந்துள்ள இந்த இரண்டு சிறார் எழுத்தாளர்களை கண்டு இம்மாணவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் போராட்டங்களையும் தொடர் குறிப்புகளாக எழுதுவது என்று முடிவெடுத்து டைரிக் குறிப்புகள் எழுத ஆரம்பித்தனர் இந்த எழுதும் பழக்கம் அவர்களிடம் இருந்த மன அழுத்தத்திற்கு ஒரு ஆக்கபூர்வமான வடிகால் அமைத்துக் கொடுத்தது.
முந்தைய காலகட்டங்களில் அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்தாடியது நாம் அறிந்ததே.அப்போது ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் வாழும் பகுதிகள், மற்ற இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு போக்குவரத்து வசதிகள் பேருந்து வசதிகள் வழங்கப்படமாட்டாது. இதை எதிர்த்து ஆப்பிரிக்க-அமெரிக்கா மாணவர்கள் மற்றும் வெள்ளை இனத்தை சேர்ந்த மாணவர்களும் ஒரு குழுவாக சேர்ந்து ‘ஃப்ரீடம் ரைடஸ்'( The freedom riders) என்ற பெயரில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து அப்பகுதிகளுக்கு போக்குவரத்து வசதிக்கான உரிமையை பெற்றுத் தந்தனர். இவர்களை சந்தித்த பின்னர் இவர்கள் கதையால் உந்தப்பட்ட குரூவெல்லின் மாணவர்கள் தங்கள் எழுத்தாளர் சமூகத்தை ‘The freedom writers’ என அடையாளப்படுத்திக் கொண்டனர்.
அதுவரை தனித்தனி குழுக்களாக இயங்கி வந்த மாணவர்கள் டைரி குறிப்புகள் எழுத ஆரம்பித்த பின் அவர்கள் தங்கள் கருத்துக்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் போதும் தங்களிடையே உள்ள ஒத்த உணர்வுகளை புரிந்துகொள்ளும் வாய்ப்புகளை பெற்றனர். இந்த டைரி குறிப்பில் ஒரு சிறப்பம்சமானது எந்த குறிப்பு யாருடையது என்ற பெயர் குறிப்பிடப்படாமல் அவை பாதுகாக்கப்பட்டன. ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் குறிப்புகளை விட்டுச் செல்வதற்கான ஒரு பிரத்தியேக அறையை ஒதுக்கி வைத்திருந்தார் எரின் குரூவெல்.மாணவர்கள் அவர்களுடைய டைரி குறிப்புகளை அந்த இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிடுவர். ஒவ்வொரு நாளும் குரூவெல் குறிப்புகளை படித்துப் பார்ப்பார். படித்துவிட்டு தன்னுடைய குறிப்பையும் அதில் எழுதுவார் அவ்வாறு குறிப்பு எழுதும் பொழுது மிகவும் கவனமாக தேவையில்லாத பாராட்டுதல்களை தவிர்ப்பார். ஏனெனில் இந்த டைரிக்குறிப்பு என்பது மாணவர்களுடைய உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதிகப்படியான பாராட்டுதல்கள் மாணவர்களின் நோக்கத்தை பாராட்டுகளுக்கு எழுதுவதாக திசைதிருப்பிவிடக் கூடாது என்று அவர் எண்ணினார். இந்த குறிப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘ The Freedom Writers Diary’ என்ற புத்தகமாக வெளிவந்தது. இம்மாணவர்கள் பற்றிய செய்திகள் அமெரிக்க முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பரவலாக பதிவு செய்யப்பட்டன. இப்புத்தகத்தில் வந்த லாபத்தை குரூவெல் மாணவர்களின் கல்லூரி படிப்பிற்காக செலவு செய்தல் என்று ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அதுமட்டுமல்லாமல் பணத்தைக்கொண்டு ‘ஃப்ரீடம் ரைட்டர்ஸ் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை நிறுவினார். அந்த அறக்கட்டளையை தற்போது ப்ரீடம் ரைட்டர்ஸ் குழுவே நிர்வகித்து வருகின்றனர். தற்போது குரூவெல் ‘Freedom Writers Institute’ என்னும் நிறுவனத்தை நிறுவி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றார்.
குரூவெல்லை பொருத்தவரை ஓர்ஆசிரியர் என்பவர் மாற்றத்தை விதைப்பவர். தற்போது உள்ள கல்வி முறை நம் மாணவர்களை தாழ்த்தி அவர்களை தனிமைப்படுத்தும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் ஒரு இயந்திரமாகவே ஆசிரியர்கள் கருதப்படுகின்றனர். ஆனால் ஏழை எளிய மாணவர்களுக்கு இவ்வாறான தேர்வுகள் சோதனைகள் அவசியம் இல்லாதவை. அவர்களின் தேவையே வேறு. அவற்றை முற்றிலும் புறம்தள்ளி மாணவர்களை மனிதனாகப் பார்க்காமல் வெறும் எண்ணிக்கையாகவும், புள்ளிவிவரங்களாகவும் பார்க்க வைப்பதே இந்த தேர்வு முறைகளில் இருண்டு முகங்களாகும். ஆசிரியர் என்பவர் பாடங்களை வாசிக்கும் ஒரு எந்திரனாக இல்லாமல் மாற்றத்தை விதைப்பவராக இருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் மதிப்பெண்கள் என்ற கட்டுகளை ஒழிக்க வலுவான போராட்டம் தேவைப்படுகிறது அப்போராட்டம் அதிகாரத்திற்கு எதிராக போராட்டம் எனவே ஆசிரியர்கள் அனைவரும் தனி நபர்களாக செயல்படுவதை நிறுத்திவிட்டு ஆசிரியர் குழுக்களாக ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். ஒரு வலுவான ஆசிரியர் கூட்டமைப்பாக ஒன்றிணைவதன் மூலமாகவே கல்வியிலும், சமூகத்திலும்,ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை விதைக்க முடியும் என்கிறார் எரின் குரூவெல்.
கட்டுரையாளர்: இரா. கோமதி, ஆசிரியை.
தொடர் 1ஐ படிக்க:
https://bookday.in/educational-thinker-1-sylvia-ashton-warner/
தொடர் 2ஐ படிக்க:
https://bookday.in/educational-thinker-2-hesintha-charwaha-schools-era-gomthi/
தொடர் 3ஐ படிக்க:
https://bookday.in/kalvi-sindhanaiyalar-booker-t-washington/
Great Gomathy