ஏற்றதாழ்வுயில்லா விமர்சன கல்விமுறை

1923ஆம் ஆண்டு ஓர் உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் டான் லாரன்ஸ் மிலானி. இவரின் தந்தை ஒரு கல்லூரிப் பேராசிரியர். பாட்டனார் ஒரு தொல்லியலாளர். 1943 இல் மிலானி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதனைத் தொடர்ந்து 1947ஆம் ஆண்டு அவர் துறவறம் பூண்டார். பின்னர் இவர்  ஃப்ளோரன்ஸ் நகரில் பொனாடோ என்னும் இடத்திற்கு டான் புகின் என்பவருக்கு உதவியாளராக பணி செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். 

ஒரு கிறிஸ்தவ மத போதகராக இருந்த மிலானி  மக்களின் நிலையை கண்டு  அதை மாற்ற  மதத்தைவிட  கல்வியே சிறந்த ஆயுதம் என்று   தேர்ந்தெடுக்கிறார். பொனாடோவில் ‘மக்களின் பள்ளி’ என்ற தனது முதல் பள்ளியை அவர் நிறுவினார். இப்பள்ளி சமூகத்தின் அனைத்து  பிரிவினருக்குமானதாக இருந்தது‌. மேலும் உழைக்கும் மக்களுக்கென்று இரவு பள்ளியைத் துவக்கினார். இது போன்ற செயல்கள் பழமைவாதத்தில் மூழ்கி இருந்த மதபோதகர்களின் கடும் எதிர்ப்பைப் பெற்றது. டான் புகியின் மறைவிற்குப் பிறகு மிலானி சான் பொனாடோ நகரிலிருந்து பார்பியானாவிற் நாடுகடத்தப்பட்டார்.இத்தாலி நாட்டின் ஒரு பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் பார்பியானாவாகும். 

அப்போதைய காலகட்டத்தில் மலிந்து கிடந்த சமூக ஏற்றத்தாழ்வுகள், இனப் பாகுபாடுகள் போன்ற அவலங்களை கலைந்து சமூக நீதியை நிலைநாட்டுவதே கல்வியின் அணுகுமுறையாக கொண்டு இருந்தார். 

மெய்யியல் கல்வி கோட்பாடு:

மிலானி மெய்யியல் கல்வி கோட்பாட்டை முன்மொழிந்தார் . அக்கோட்பாட்டின் படி அதுவரை கல்வியின் நோக்கமாக பின்பற்றப்பட்டு வந்த பழமை வாதங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது.தனிமனிதனே வாழ்வின் மையம் ஆகிறான். கலாச்சாரம்  சடங்குகள் சம்பிரதாயங்கள்  இவற்றின் பெயரால்  தனிமனிதர்கள் மீது  செலுத்தப்படும் அடக்குமுறைகள் அனைத்தும் தவறானவை. வாழ்க்கையில் சரி, தவறு; உண்மை, பொய்; அழகு, அழகின்மை போன்ற எதுவாயினும் அதை தனிமனிதனே தீர்மானிக்க வேண்டும். உலகிற்கு என்று ஒரு பொதுமறையோ, நீதியோ கிடையாது. தனக்கு பொருத்தமான படி உலகை தானே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் நம் அனைவருக்கும் உண்டு என்பதே  மெய்யியல் கோட்பாடாகும் .

இதன்படி பள்ளியின் பாடத்திட்டமானது மனிதநேயத்தை வலியுறுத்துவதாக இருக்கும். உதாரணமாக வகுப்பில் வரலாற்றுக் கதைகளை கூறாமல் வரலாற்று நாயகர்கள் சூழ்நிலையை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை கூறுவர். இதன் மூலம் மாணவர்கள் சுய உள்ளொளிப் பயணம் மேற்கொள்ள வழி வகுக்கப்படும். மேலும் மெய் உணர்வை பிரதானமாக வைக்கப்பட்டு, மனித நேயமும் தனிமனித சுதந்திரமும் கல்வியின் உயரிய நோக்கமாக போற்றப்பட்டது.

Don Lorenzo Milani: il comunismo e le altre profezie

விமர்சன கற்பித்தல் முறை:

மிலானி சமூக புரிதலை அடிப்படையாகக் கொண்ட விமர்சன கற்பித்தல் முறையை உண்டாக்கினார். சமூகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் பெரும்பாலும் பள்ளி தேர்வுகளில் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது பள்ளியில் பின்பற்றப்படும் கற்றல் கற்பித்தல் முறைகளால் கல்வியின் மீது எதிர்மறை எண்ணத்தோடு கற்றலை பாதியில் விட்டவர்களாகவே இருந்தனர்.

கல்வியின் நோக்கம் தேர்வுகளை எதிர்கொள்வதாக இல்லாமல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை விமர்சனப் பார்வையோடு அனுகி ஏன்? எதற்கு?போன்ற கேள்விகள் கேட்டு, முடிவுகளை மறுசீராய்விற்கு உட்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதை கற்றல் கற்பித்தல் முறையில்  நடைமுறை படுத்தினார். 

விமர்சன கற்பித்தல் முறையின் முதல் படியாக 11 முதல் 13 வயதுடைய 10 சிறுவர்களை ஒன்றாகத் திரட்டினார் மிலானி. நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் என வாரத்தின் ஆறு, ஏழு நாட்களுக்கான கால அட்டவணைப்படி வேலையைத் தொடங்கினார்கள். பின்னர் மாணவர் எண்ணிக்கை பத்து என்பது 20 ஆனது. இதில் பெரிய மாணவர்கள் தங்கள் கற்றல் நேரத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவு சிறியவர்களுக்கு கற்றுத் தருவார்கள். நாட்கள் செல்லச் செல்ல இவருடைய கற்பித்தல் முறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது‌.சிறியவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அவர்களுக்கு உள்ள திறன்களையும் அவர்கள் அறிந்த தொழில்களையும் மற்றவர்களுக்கு கற்றுத் தர முன்வந்தனர். பாபிலோன் பள்ளியில் வேளாண்மை முதல் ஓவியம் வரை அனைத்தும் பல பிரிவுகளில் மாணவர்கள் கற்றனர். 

மேலும் பத்திரிக்கை ஊடகங்களை தனது ‌கற்பித்தலுக்கு பயன்படுத்தினார். செய்தித்தாள்களில் வரும் உண்மை சம்பவங்களை படித்து அவற்றை ஆராய்ந்து பார்க்க செய்வார். இதன் மூலமாக மாணவர்களை வாழ்க்கைக்கு தயார் படுத்தினார். இந்த அனுபவம் மூலமாக மாணவர்கள் வாழ்க்கையை அணுகும் தைரியம் மற்றும் வாழ்வில் வரும் சோதனைகளை முடிவாக பார்க்காமல் வாழ்வை எதிர் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்க கற்றுத் தந்தார். மிலானியின் சம காலத்தில் வாழ்ந்த கல்வியாளரான பவுலோ ஃபிரைரேவும் ஒரு மெய்யியலாளர். அவரும்  விமர்சன கற்பித்தல் முறையை பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிலானியின் மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ‘லெட்டர் டூ டீச்சர்’ (Letter to Teacher) தமிழில் ‘என்னை ஏன் டீச்சர் ஃபெயிலாக்கினீங்க’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்கள்.  வர்க்க பேதம் உள்ள கல்வி முறையால் பணக்கார குழந்தைகள் பயன்பெறுவதும் குழந்தைகள, ஏழை குழந்தைகள் கேட்பாரற்று போவதும் என்ற அன்றைய கல்வி முறை சிக்கலை அந்த புத்தகம் பேசியதும்.  சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கல்வி சார்ந்த காவியமாகும். பாபிலோன் பள்ளியை சேர்ந்த 8 சிறுவர்கள் மிலானியின் வழிகாட்டுதலின்படி ஓராண்டுகாலம் எழுதிய புத்தகம் ஆகும்.

இப்புத்தகத்தின் முகவுரையில் கூறப்பட்டிருப்பது ‘Letter to a teacher என்ற தலைப்பை தாங்கியதால் இப்புத்தகம் ஆசிரியர்களுக்காக எழுதப்பட்டது என்று நினைக்க வேண்டாம் இது ஏழை மாணவர்களால் இத்தாலியிலுள்ள ஏழை பெற்றோர்களுக்காக எழுதப்பட்டது’ என்பதாகும். எனவே இந்நூல் அனைத்து ஏழைகளின் ஒருமித்த குரலாக ஒலித்தது. அந்தக் குரல்கள் கல்வி பெற முடியவில்லை என்ற கோபத்தையும், கல்வியில் வர்க்க பேதங்கள் உள்ளதை சுட்டிக் காட்டுவதாகவும், கல்வி என்பது எப்போதும் ஏன் ஏழைகளுக்கு மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது என்ற வருத்தத்தையும் உரக்கக் கூறியது. பெற்றோர்களுக்கான ஓர் அறைகூவலாக எழுதப்பட்டிருக்கிறது. 1967ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்ட சில மாதங்களில் மிலானி இறந்துவிட்டார் அவரோடு சேர்ந்து அவரது பாபிலோன் பள்ளியும் மறைந்துபோனது. தற்போது மீண்டும் மிலானியின் பள்ளி மற்றும் அவர் கல்லி சிந்தனையை, சமத்துவத்திற்கான பயணத்தை இந்தாலியில் மட்டுமில்லாமல் உலகம்முழுக்க பின்பற்ற துவங்கியுள்ளனர். 

Faccio scuola perché». L'attualità di don Milani | Messaggero di  Sant'Antonio

மிலானியும் அவரது மாணவர்களும் விடுத்த அறைகூவல் தற்போது நம் நாட்டில் இன்னும் ஆழமாக ஒழிக்க வேண்டிய தேவை உள்ளது. ஏழை எளிய மாணவ மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உரிமைகள் தரத்தின் பெயரால் மறுக்கப்பட்டு வருவதை நம் பெற்றோர்கள் உணர வேண்டிய தேவை உள்ளது. இது நம் தலையெழுத்து, என் பிள்ளைக்கு அவ்வளவுதான் திறமை உள்ளது,படிப்பதற்கெல்லாம் நமக்குத் தகுதி இல்லை போன்ற பல சித்தாந்தங்களை நோக்கி நம் மக்களை தள்ளும் முயற்சிகளே இந்த நீட், தேசிய கல்வி கொள்கை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகும். கல்வியில் ஏற்றத்தாழ்வு நிகழ்வதை கண்கூடாகக் காண்கிறோம். ஏற்றத்தாழ்வுகளை கலையாமல் வாய்ப்பு உள்ளவர்களின் வசதிகளை பெருக்குவதையே நோக்கமாக இந்த கல்வி கொள்கை கொண்டுள்ளது.தனிமனித சுதந்திரம் குழந்தைகளை குழந்தைகளாகவே பார்க்க வேண்டும் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கவேண்டும் தன்னை சுற்றியுள்ள மொழி தன்னை சுற்றியுள்ள சூழல் மூலமாக தான் குழந்தையின் கற்றல் நிகழும் என எதைப்பற்றியும் கவலைப்படாத திட்டங்களாகவே இந்த நீட் தேர்வும், தேசிய கல்வி கொள்கையும் உள்ளது.

உலக அளவில் கல்வியில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை களைய போராடிய மிலானி, பவுலோ ஃபிரைரே   போன்றோர் தொடங்கி, நம் நாட்டில் சமூக நீதியை நிலை நாட்ட பெரும் போர் புரிந்த ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய், டாக்டர் அம்பேத்கர், முதல் தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டிய தந்தை பெரியார் வரை, அனைவர்களின் போராட்டங்களையும் பின்னுக்கு இழுக்கும் முயற்சிகள் தற்போது நிகழ்ந்து வருகிறது. இம் முயற்சிகளை முறியடிக்க அதைவிட வலிமையான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கட்டுரையாளர்: இரா. கோமதி, ஆசிரியை.



தொடர் 1ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்-1: சில்வியா ஆஷடன் வார்னர் – கோமதி

தொடர் 2ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்-2: ஹெசிந்தா- ‘மேய்ப்பர் பள்ளிகள்’ (Charwaha schools) | இரா. கோமதி



தொடர் 3ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்- 3 : புக்கர் டி வாஷிங்டன் (Educating the hands ,head and  the heart) – இரா. கோமதி

தொடர் 4ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்- 4 : எரின் குரூவெல் ( The Freedom Writers Institute) – இரா. கோமதி

தொடர் 5ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்- 5 : ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). – இரா. கோமதி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *