கல்வி சிந்தனையாளர்- 7 : கொமிநியஸ் (1592 – 1670) – இரா. கோமதி
Opnamedatum: 2010-01-04

கல்வி சிந்தனையாளர்- 7 : கொமிநியஸ் (1592 – 1670) – இரா. கோமதி( ஜான் அமோஸ் கொமன்ஸ்கி- Pansophy – Universal education)

யாரோ விதைத்த விதையின் பயனை நாம் இன்று உணவாக பெறுகின்றோம். யாரோ போராடி பெற்ற சுதந்திரத்தை நாம் இன்று சுவாசிக்கின்றோம். இவ்வாறு நாம் இந்த நவீன உலகில் பெற்றுள்ள அனைத்து வசதி வாய்ப்புகளுக்கும் யாரோ ஒருவர் காரணமாக இருந்திருக்கிறார். பாட புத்தகங்கள் நமக்கு அடையாளப்படுத்திய வரலாற்று நாயகர்களை தவிர வரலாறு பெரிதாக கொண்டாடாத பல நாயகர்களும் மகத்தான செயல்களை கொடையாக நமக்கு வழங்கியிருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.

கல்வி என்பது அதிகாரத்திற்கான இடம் அல்ல, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கான இடமாகும். அதில் குழந்தைகளே மையமாக ( child centered) கருதப்பட வேண்டும். அறிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே கல்வி எந்த வித வேறுபாடுகளும் இன்றி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். மிகுந்த கட்டுப்பாடு களோடு கூடிய குருட்டு மனப்பாடம் செய்யும் கல்வி முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.  இன்னும் சுருக்கமாகச் சொன்னால் இன்றளவும் எட்டப்படாமல் இருக்கும் ‘அனைவருக்கும் கல்வி ‘ என்ற  புரட்சிகரமான சிந்தனையை  கல்வியில் 1630 களில் முன்மொழிந்தவர் கொமிநியஸ் ஆவார். அது மட்டும் அல்ல, வெறும் எழுத்துக்களால் நிரம்பி வறட்சியாக காணப்பட்ட பாடப்புத்தகங்களை  படங்களால் நிரப்பியவர் கொமினியஸ்.இது நவீன கல்வி முறையின் நிகரற்ற பங்களிப்பாகும். இன்று பள்ளிகளில் நம் குழந்தைகள் படிக்கும் பாடப்புத்தகங்கள் வண்ணப் படங்களால் நிரம்பி இருப்பதற்கும், உயர்கல்வியில் கூட புரிந்து கொள்வதற்கு கடினமான பகுதிகளில் விளக்கப் படங்கள் பயன்படுத்துவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். அதனடிப்படையில் தான் இவர் நவீன கல்வியின் தந்தை என்று போற்றப்படுகிறார். 

‘ஆயிரம் வார்த்தைகள் விளக்காததை ஒரு படம் விளக்கி விடும்’. ஆதி மனிதனும் படங்கள் மூலமாகவே தன் உணர்வுகளை பதிவு செய்திருந்தான். இந்தச் சித்திரங்கள் வளர்ச்சி பெற்று ஒவ்வொரு மொழிக்குமான வரிவடிவம் கிடைத்தது‌. மொழிக்கு மொழி வரிவடிவம் மாறலாம் ஆனால் படங்கள் அனைத்து மொழிக்கும் பொதுவானதே. பள்ளிகளில்  கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் முக்கிய கருவியாக  கருதப்படும்  பாட புத்தகங்கள்  எவராலும்  புரிந்து கொள்ளும் வகையில்  இருக்க வேண்டுமாயின் அதில்  மாணவர்கள் தம் சுற்றுச்சூழலில் காணக்கூடிய பொருட்களில் படங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.  அப்படங்கள் மூலமாகவே  மாணவர்கள் தன் சூழலில் உள்ள பொருட்களையும் மொழியையும்  இயற்கையான முறையில்  தொடர்புபடுத்தி கற்றுக்கொள்ள முடியும்  என்று கொமிநியஸ் கூறினார். 

செக் குடியரசில் பிறந்து வளர்ந்த கொமிநியஸ் லத்தின் மொழி கற்பித்தலில் தான் கையாண்ட முறையின் மூலமாக பல நாடுகளிலும் வெகுவாக அறியப்பட்ட கல்வியாளர் ஆனார்.  1632 இல் இவர் எழுதிய The gate of tongues unlocked ( Janua Linguarum Reserata – மொழியின் கதவுகள் திறக்கப்பட்டன) என்ற நூல் கற்பித்தல் முறையில் புதுமையைப் புகுத்தியது. இந்நூலில் இவ்வுலகம் குறித்த பல தகவல்கள் லத்தீன் மொழியிலும் செக் மொழியிலும் படங்களுடன் விலகி கூறப்பட்டிருக்கும். இதன் மூலமாக குழந்தைகள் இரண்டு மொழிகளை ஒப்பிட்டு படங்களுடன் பொருத்திப் பார்த்து கற்கின்றனர். இந்த முறை அப்போது இருந்த  முறைசார் கல்வி( formal education) முறையில் இருந்து மாறுபட்டு இயற்கையின் வழியில் கற்றலை கொண்டு செல்லும் என்று கூறினார். இப்புத்தகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முதலில் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதனை தொடர்ந்து பல ஐரோப்பிய மொழிகளிலும் பின் ஆசிய மொழிகளிலும் இப்புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டது. கொமிநியஸ் தான் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை இப்புத்தகம் பெற்றது என்று குறிப்பிடுகிறார். குழந்தைகள் இவ்வாறு மொழியை கற்பதை ‘இயற்கை முறை’ என்று வாதிடுகிறார்.

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இயற்கையின் வழியே கல்வியை கொண்டு செல்ல வேண்டும். ஆசிரியர்கள் இயற்கையின் பாதையை கற்பித்தலுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது ஆசிரியர்கள் குழந்தைகளின் எண்ணத்தையும் அவர்கள் கற்கும் வழிமுறைகளையும் உற்று நோக்கி அதன் வழியே கற்றலை கொண்டு செல்ல வேண்டும். இதையே The great Didanctic என்ற தனது நூலின் முக்கிய கருப்பொருளாக  வைத்திருந்தார். குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியது தம்மைச் சுற்றியுள்ள இயற்கையான சூழலை தானே தவிர, எழுத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள இலக்கணத்தை அல்ல. தன் சூழலில் இருந்து மாணவர்கள் அனைத்தையும் கற்கின்றனர், அவ்வாறே மொழியையும் கற்கின்றனர். மொழியை புத்தகத்திலிருந்து கற்பதைக் காட்டிலும் சூழ்நிலையில் இருந்தே  சுலபமாக கற்க முடியும், அதுவே கற்றலுக்கான வழியும் கூட என்று கூறினார்.

Comenius

கல்வித் தத்துவம்: Pansophy- ‘உலகளாவிய கல்வி’ என்பதே இவர் உருவாக்கிய கல்வி தத்துவமாகும். தனது சிறுவயது முதலே உலகம் குறித்த அறிவு மற்றும் ஞானத்தைப் பெறுவதற்காக தனது ஆர்வத்தை விரிவாக்கிக் கொண்டே வந்தார். ‘உலகளாவிய கல்வி’ என்பது மக்களிடையே நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் கொண்டு வர உதவும் என்றார்.  ஆனால் இத்தத்துவத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தாரே தவிர அக்காலகட்டத்தில் அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல் போயிற்று.

நவீன கல்வியின் தந்தை:

தற்போது வெற்றிகரமான கற்றல் கற்பித்தல் முறைகள் என்று வளர்ந்த நாடுகளில்  பின்பற்றப்படும் கருத்துக்களில் பல பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கொமிநியஸ் அறிமுகப்படுத்தியதாகும். தான் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், தான் பணியாற்றிய பள்ளிகளில், இவர் பரிசோதித்த முறைகளையே நாம் தற்போது பின்பற்றி வருகிறோம். அதனடிப்படையில் பார்க்கப்போனால் ரூஸோ, பெஸ்டலோசி, புரோபெல் போன்ற கல்வியாளர்களுக்கு எல்லாம் இவர் முன்னோடியாக திகழ்ந்து நவீன கல்வியின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

Comenius Orbis Sensualium Painting by Granger

விளக்கப் படங்களோடு கூடிய பாட புத்தகம்:

‘உலகளாவிய கல்வி’, ‘இயற்கை வழி கல்வி’ என்று கல்விமுறையின் போக்கை மாற்றியவரும் இவர் தான். இதில் ‘உலகளாவிய கல்வி’ என்ற தனது தத்துவத்தை மக்கள் மனதில் வேரூன்ற செய்ய முடியவில்லை என்றாலும், இயற்கை வழி கல்வி என்பதை வெற்றிகரமாக செயல்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றார்.

அதுவரை மக்கள் பார்த்திராத முற்றிலும் புதிய முறையில் இவர் உருவாக்கிய பாடப்புத்தகங்கள் வழியே கல்வியை புதிய தளத்திற்கு இட்டுச் சென்றார். இந்த வரிசையில் இவர் வெளியிட்ட முதல் புத்தகம் ‘ஜானுவா லிங்குவாரம் ரெசரட்டா’ (1631). இதனைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட ‘வெஸ்டிபுலம்’ (Vestibulum) மட்டும் ‘ஏற்றியம்’ (Atrium) எனப் பல பாடநூல்கள் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக 1658 இல் ‘ஆர்பிக் பிக்டஸ்’ (Orbic Pictus) என்ற புத்தகம் பெரும்பாலும் அனைத்து பள்ளிகளும் பாடப் புத்தகமாக இடம்பெற்றது. உலக வரலாற்றில் மிக வெற்றிகரமான பயன்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான விளக்கங்களோடு கூடிய முதல் புத்தகம் (Orbic Pictus)இது தான்.

தனது மாணவர்களுக்காக இவர் தயாரித்த இந்த ‘ஆர்பிக் பிக்ஸட்’ பாடநூலை  அச்சிட தேவையான அச்சு கட்டைகள், அச்சு கோப்புகள் இல்லாத காரணத்தால் இதன் கையெழுத்துப் பிரதியை தன்னுடன் வைத்திருந்தார்.

பின்னர் கையெழுத்து பிரதியை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தார்.அங்கு தேவையான கட்டைகள் வார்க்கப்பட்டு ‘ஆர்பிஸ் சென்சுவாலியம் பிக்டஸ்’ (1658; The Visible World in Pictures) என்ற பாடப் புத்தகமாக இது வெளிவந்தது. பாடபுத்தகம் ஐரோப்பாவில் மட்டுமே சுமார் 2 நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இரண்டு நூற்றாண்டுகள்  ஒரு புத்தகம்  உலகப் பள்ளிகளில்  தன் ஆளுமையை செலுத்தியது என்றாள்  அதை ஒரு புத்தகமாக அல்ல; ஒரு புரட்சியாகவே நான் பார்க்கிறேன். இப்புத்தகத்தின் வரவு, அதுவரை பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த பாடப்புத்தகங்களில் பரிமாணங்களை மாற்றியது.

Orbis Pictus: The earliest picture textbook for children | Brainstorm in  Progress

கொமிநியஸ் பாடப்புத்தகத்தின் அடிப்படை தத்துவங்கள்:

இவரின்  முதல் புத்தகமான ‘ஜானுவா’முதல் இவரின் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ‘ஆர்பிக் பிக்டஸ்’வரை இவர் தயாரித்த அனைத்து பாட புத்தகங்களும் பின்வரும் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

1) உள்ளூர் பேச்சுவழக்கு மொழிகளை அடிப்படையாகக் கொண்டு அண்டைய மொழிகளை கற்றுக்கொள்ளுதல்.

2) வார்த்தைகளைக் காட்டிலும் படங்கள் மூலமாக கருத்துகளை எளிமையாக புரிய வைத்தல்.

3) குழந்தைகளுக்கு மிகவும் தெரிந்த பழக்கப்பட்ட பொருட்களின் வழியாக ஒரு புதிய மொழியை கற்றுத் தருதல். அதேவேளையில் அக்குழந்தை இதுவரை அறிந்திராத உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள ஒரு புதிய பொருளை பற்றியும் அறியலாம். சுருக்கமாகச் சொன்னால் ‘தெரிந்ததில் இருந்து தெரியாததை அறிதல்’ மற்றும் எளிமையானவற்றிலிருந்து கடினமானவற்றை அறிதல்.

4) குழந்தைகள் தங்கள் சுற்றுச்சூழல் பற்றிய அறிவையும், தன்னை சுற்றியுள்ள பொருட்கள் மற்றும் சமூகம்,அதனோடு சேர்த்து மத போதனைகள், விழுமியங்கள் மற்றும் கலைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அறிவை பெற வேண்டும்.

5) இவ்வாறான அறிவைப் பெறுதல் என்பது குழந்தையின் வாழ்வில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளாக இல்லாமல், கற்றலின் பேரானந்தத்தை அடைவதை நோக்கமாக இருக்க வேண்டும்.

6 ) கல்வி, கற்றல்-கற்பித்தல் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

இக்கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரின் புத்தகங்கள்கங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டை வென்றெடுத்தது.

‘பேனசோபிசம்’ என்ற இவரின் கல்வி தத்துவம் இவர் வாழும் காலத்திலோ அல்லது அதற்கு பின்னரும் கூட கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இத்தத்துவத்தை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு அப்போதைய உலகம் தயாராக இருந்திருக்க வில்லை. பொருள்முதல்வாதம் நோக்கி பயணித்த பதினெட்டாம் நூற்றாண்டில் உலக நல்லிணக்கம் என்ற பேச்சுக்கள் கவனிப்பார் அற்று போனது.

Johann Amos Comenius - Neuer Orbis Pictus für die Jugend - Catawiki

1657 இவரின் கல்வி சார்ந்த நூல்கள் அனைத்தையும் தொகுத்து ‘டைடாக்டிக்கா ஓபெரா ஓம்னி’ என்ற புத்தகமாக வெளியிட்டார். அதன்பின்னர் அவர் வாழ்நாளை கன்சல்டேஷன்(Consultation) என்ற தனது முக்கியமான படைப்பை உருவாக்க செலவிட்டார். மிகவும் கடினப்பட்டு அதன் ஒரு பகுதியை மட்டுமே இவரால் வெளியிட முடிந்தது. 1670 தான் இறக்கும் தருவாயில் இப்புத்தகத்தின் மீதமுள்ள பகுதிகளை வெளியிடுமாறு தனது நெருங்கிய நண்பர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் அப்புத்தகம் வெளிவராமலேயே  போய்விட்டது.

மேற்கத்திய நாடுகளில் 400 ஆண்டுகளுக்கு முன்பு  நடைமுறைப்படுத்திய கல்விமுறையை நாம் இன்று தான் பேசிக் கொண்டிருக்கிறோம். கற்றல் கற்பித்தல் முறைகளிலும், பாடப்புத்தகங்கள் உருவாக்குவதிலும் போதுமான அளவு சமூக- பொருளாதார- கலாச்சார அரசியல் புரிதல் இல்லாமலேயே இருக்கிறது. இதன் வெளிப்பாடே பாடப்புத்தகங்களில் சிறுபான்மை மதத்திற்கு எதிரான கருத்துக்களை வைப்பதுவும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முறைக்கு குறைவான மதிப்பீடுகள் கொடுப்பதுவும், பாலின சமத்துவம் வகுப்பறையில் போற்ற படாமல் இருப்பதுவுமாகும். கல்வி முறையில் மாற்றமும் முன்னேற்றமும் வராமல் இருப்பது என்பது சமத்துவம் ஏற்படுவதை இன்னமும் காலம் தள்ளி போடுவதாகவும். கல்வியின் நோக்கம் பிரிவினையை உண்டாக்குவது அல்ல. சமத்துவத்தையும், மனிதநேயத்தையும் வளர்ப்பதாகும்.உலகளாவிய கல்வி, சமூக நல்லிணக்கம் போன்ற கருத்துக்கள் அடங்கிய கொமிநியஸின் கல்வி முறைகள் தற்போதைய இந்திய கல்வி வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

கட்டுரையாளர்: இரா. கோமதி, ஆசிரியை.தொடர் 1ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்-1: சில்வியா ஆஷடன் வார்னர் – கோமதி

தொடர் 2ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்-2: ஹெசிந்தா- ‘மேய்ப்பர் பள்ளிகள்’ (Charwaha schools) | இரா. கோமதிதொடர் 3ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்- 3 : புக்கர் டி வாஷிங்டன் (Educating the hands ,head and  the heart) – இரா. கோமதி

தொடர் 4ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்- 4 : எரின் குரூவெல் ( The Freedom Writers Institute) – இரா. கோமதி

தொடர் 5ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்- 5 : ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). – இரா. கோமதி

தொடர் 6ஐ படிக்க: 

கல்வி சிந்தனையாளர்- 6 : டான் லாரன்ஸ் மிலானி – இரா. கோமதி

 Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *