கல்வி சிந்தனையாளர்- 5 : ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). – இரா. கோமதி

கல்வி சிந்தனையாளர்- 5 : ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). – இரா. கோமதி

ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). 

குழந்தைகளின் மென்மையை உணர்ந்தவர் ஃப்ரோய்பெல். 1840 ஆம் ஆண்டு ‘மழலையர் தோட்டம்’ என்ற ‘கிண்டர்கார்டன்’ பள்ளியை தொடங்கினார். அதற்கு முந்தைய காலகட்டத்தில் முன் மழலையர் கல்வி என்பது கிடையாது. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்லும்  ஒரு பராமரிப்பு மையமாகவே இருந்தது. அதுவரை 0 முதல் 7 வயது குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த மற்றும் மன எழுச்சி திறன் கிடையாது என்றே நம்பப்பட்டது வந்தது.

ஜெர்மானிய கல்வியாளரான ஃபெடரிக் ஃப்ரோய்பெல் உலகம் முழுவதும் மழலையர் கல்வி முறையை அறிமுகம் செய்தவர்.  இவர் 9 மாத குழந்தையாக இருந்த போதே தனது தாயை இழந்தார். தன்னுடைய தாய்மாமனின் அரவணைப்பில் இவர் வளர்ந்தார். திருமணமாகி தான் ஒரு குழந்தைக்கு தந்தையாகும் போது குழந்தைமையை மதிக்காத இச்சமூகம் இவர் கண்முன் நின்றது. தனது கையில்  பூப்போல தவழும் சிறுகுழந்தை பள்ளியில் அதட்டப்படும் காட்சியை நினைத்துப் பார்க்கிறார். குழந்தைகளின் இயல்புக்கு ஏற்றார் போன்ற ஒரு முறைசாரா கல்வி அமைப்புத் தேவை என்பதை பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.‌‌‍இதற்கு முன்பாகவே பெஸ்டலாசியின் கல்விச்சிந்தனை இவரை ஈர்த்திருந்தது.பெஸ்ட்டலாஸியின் பிராங்போர்ட் பள்ளியில் மழலையர் பள்ளி ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உதவியாக இருந்தது.

அக்காலங்களில் குழந்தைகளை களிமண் போன்றவர்கள் என்றும், நாம் எப்படி உருவாக்குகிறோம் அப்படி அவர்கள் உருவாவார்கள் என்பன போன்ற வசனங்கள் நாம் கேட்டுள்ளோம். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஏற்புத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்கப்படுவது தான் கல்வியாகுமே தவிர பெரியவர்களின் கருத்துக்களை அவர்கள் மீது திணிப்பது கல்வியல்ல என்றார்.பண்பாடு மற்றும் கலாச்சாரத் திணிப்புகள் குழந்தைகள் மீது செலுத்தப்படும் வன்முறை என்று கூறினார். 

The Educational Philosophies of the World's Greatest Philosophers

ஃப்ரோய்பெல்லின் பார்வையில் குழந்தைகளை அன்போடும் போற்றுதலோடும் வளர்த்து எடுப்பதற்கான ஒரு சிறிய உலகம் தேவைப்பட்டது. அங்கு அவர்கள் தங்கள் ஒத்த வயதுடைய சகாக்களோடு சேர்ந்து சுதந்திரத்தை சுவாசிக்க வேண்டும் என்று எண்ணினார். அவ்வாறான ஒரு உலகத்தை அவர் உருவாக்கினார்.அந்த உலகத்திற்கு அவர் வைத்த பெயரே கிண்டர்கார்டன் என்னும் மழலைகளின் தோட்டம்

இந்த குழந்தைகளுக்கான சிறிய உலகை கட்டமைக்க ஃப்ரோய்பெல் கல்வித் தத்துவம் உதவியது.அது நான்கு அடிப்படை கூறுகளை கொண்டுள்ளது.  அவை

  1. சுய செயல்பாடுகள் (self activity)
  2. படைப்பாற்றல் (creativity)
  3. சமூக பங்கேற்பு (social participation)
  4. புலனுணர்வு வெளிப்பாடு.(motor expression)

சுய செயல்பாடுகள்: தூண்டில்கள் வாயிலாக குழந்தைகள் தாமாகவே முன்வந்து சுய செயல்பாடுகளில் ஈடுபடுவது என்பது மழலையர் கல்வியின் ஒரு முக்கிய அம்சமாகும். அவ்வாறான சுய செயல்பாடுகளில் குழந்தைகள் ஈடுபட அதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அத்தேவையை  குழந்தை எவ்வாறு பூர்த்திசெய்யும் என்பதற்கான திட்டமிடல்களையும் ஒரு ஆசிரியர் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் உருவாக்கி வைத்த தேவையை நோக்கி குழந்தை தாமாகவே அந்த செயலை செய்ய எத்தனிக்கும். இங்கு ஆசிரியர் என்பவர் குழந்தை சுய செயல்களில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து குழந்தையின் வளர்ச்சியை திட்டமிட்டு எடுத்து செல்பவராக இருப்பார். குழந்தைகளின் மண்டைக்குள் தகவல்கள்  அனைத்தையும் கடத்துபவராக இருக்க மாட்டார்.

குழந்தைகளின் உலகில் தானே கற்றலுக்கான ஒரே வழியாக விளையாட்டை தேர்வு செய்தமை மழலையர் கல்விக்கு ஃப்ரோய்பெல் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பாகும்.  இவர் விளையாட்டையும் கற்றல் செயல்பாடுகளையும் ஒன்றினைத்தார். 

படைப்பாற்றல்: 

தொடர் கற்றலுக்கான பொருட்கள்: இப்பொருட்களை ‘பரிசுகள் மற்றும் பணிகள்’ (gifts and occupations) என்று கூறுகிறார் ஃப்ரோய்பெல். இந்த உபகரணங்களை வைத்து விளையாடுவதன் மூலம் குழந்தைகள் ஒப்பிடுதல், பரிசோதித்தல் மற்றும் படைப்பாற்றலை தாமாகவே பெறுகின்றனர்.

பரிசுகள்:  இவை குழந்தைகளுக்கு வழங்கப்படும் கவனமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பொருட்களாகும். அவை கோளம், உருளை, கன சதுரம் போன்ற கணித வடிவங்கள் ஆகும். இவற்றை கொண்டு விளையாடுவதன் மூலமாக குழந்தைகள் பொருட்களின் தன்மை, வடிவங்கள், பரிமாணங்கள், அளவு, ஒன்றோடு ஒன்றிற்கு உள்ள தொடர்பு போன்றவற்றை தாமாகவே அறிந்து கொள்கின்றனர்.

பணிகள்:  பணிகள் என்பவை படம்வரைதல், களிமண் விளையாட்டு,மணிகளைக் கோர்த்துக், காகிதம் மடிப்பு போன்றவையாகும். இவற்றைக்கொண்டு மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களுக்கு படைப்பாற்றல் மூலமாக உருவம் தருவர்.

இவ்வாறாக பரிசுகள்( gifts),மாணவர்களின் சுய செயல்பாடுகளுக்கும், பணிகள் (occupation), மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதற்கும் உதவுகின்றன.

சமூகப் பங்கேற்பு :  குடும்பமே குழந்தையின் முதல் சமூகமாகும். பெற்றோர்களே குழந்தைகளின் கற்றலில் முதல் தாக்கத்தை ஏற்படுத்துவர். குடும்ப சூழலில் குழந்தை கற்கத் துவங்குகிறது. தானே கற்றல் மூலமாக, குழந்தை தன் குடும்ப உறவுகள் மற்றும் தான் பார்க்கும் பொருட்களை போல செய்து கற்கிறது. எனவே வகுப்பறையில் ஒரு குடும்பத்தில் உள்ள இயல்பான பாதுகாப்பு உணர்வை கொண்டு வருவதன் மூலமாக மாணவர்களிடம் பயத்தை போக்க முடியும். அவ்வாறான பாதுகாப்பான சூழலே மாணவர்களை நேர்மறையாக மேல் வகுப்புகளுக்கு தயார்படுத்தும் என்கிறார் ஃப்ரோய்பெல்.

The Architect of Kindergarten System

 புலனுணர்வு வெளிப்பாடு:  இது செய்து கற்றலை குறிக்கின்றது. பொருள் புரியாமல் வெறும் மனப்பாடம் செய்து கற்றலை ஃப்ரோய்பெல் கடுமையாக எதிர்த்தார். கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப குழந்தைகள் தம்மை தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர இச்சமூகம் அதன் தேவைக்கு ஏற்றாற்போல் அவர்களை உருவாக்கக் கூடாது என்றார்.

நாம் செடி கொடிகளையும் விலங்கினங்களையும் அவைகளுக்கு உரிய இயற்கை நியதியின் அடிப்படையில், ஏற்ற சூழலில் வளர அனுமதிக்கிறோம். அவைகள் வளர போதிய அவகாசம் கொடுக்கிறோம். அந்த இயற்கை விதிகளுக்கு புறம்பாக நாம் குறுக்கீடு செய்யும் போது அவற்றின் வளர்ச்சி தடைப்படும் என்பதை நாம் அறிந்துள்ளோம். ஆனால் ஏனோ  குழந்தைகளை மட்டும் நாம் தொடர்ந்து நம் கையில் தரப்பட்ட இலகுவான களிமண்களாகவே பார்க்கிறோம். குழந்தைகளுக்கு மட்டும் இயற்கை நியதிகள் இல்லையா? ஏன் அவர்களை மட்டும் நம் விருப்பப்படி உருவாக்க முயல்கிறோம்? என்கின்றார் ஃப்ரோய்பெல்.

இன்று ஒவ்வொரு நகர்ப்புறங்களிலும் புற்றீசல் போல் செயல்பட்டு வரும் எண்ணற்ற மழலையர் பள்ளிகள் ஃப்ரோய்பெல் வழங்கிய ‘கிண்டர்கார்டன்’ என்ற பெயரைத் தவிர, அவருடைய கல்விக்கொள்கை ஒன்றையும் பின்பற்றுவதாக தெரியவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் கற்கும் ஆற்றல் உண்டு என்கிறார் ஃப்ரோய்பெல். ஆனால் தற்போது என்ன நடக்கிறது? மழலையர் பள்ளி குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர்களை அழைத்து குறைகூறும் பள்ளிகளே அதிகம். ஃப்ரோய்பெல்லின் கல்வி முறைப்படி  விளையாட்டு கூட சுய செயல்பாடாகவே  இருக்க வேண்டுமே தவிர, ஆசிரியரின் அறிவுறுத்தலாகவோ, கட்டளையாகவோ  இருக்கக்கூடாது.  குழந்தைகள் தானே செயல்களில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கி அதைப் பின்தொடர்ந்து மாணவர்கள் கற்றலை உறுதிப்படுத்துவதே மழலையர் பள்ளியில் உள்ள ஆசிரியரின் கடமை என்கின்ற ஃப்ரோய்பைல். ஆனால் இன்றோ கரும்பலகையில் 1 முதல் 100 வரை எண்களை எழுதி வைத்து அவற்றை வாசிக்க வைப்பதும், மழலையர் பள்ளி முடித்து வருவதற்குள் ஒரு குழந்தை குறைந்தது 1000 ஆங்கில வார்த்தைகளிள் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதும், எல்லைகளே இல்லாமல் இயங்கக்கூடிய பிஞ்சுக் கைகளில் எந்த முன்னேற்பாட்டு செயல்களும் அளிக்காமல் நேரடியாக பென்சிலை திணித்து நான்கு வரிகளுக்குள் எழுது! எழுது! என்று பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், தங்கள் குழந்தை கஷ்டப்பட்டு படித்தால்தான், எழுதினால்தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்று மழலையர் வகுப்பிலேயே தயார்படுத்தும் பெற்றோர்களையும் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். மழலையர் பள்ளியில் குழந்தைகளின் படைப்பாற்றலுக்கு என்ன செயல்பாடுகள் வழங்கப்படுகின்றன என்று நாம் யோசித்தது உண்டா? பள்ளிகளும், ஆசிரியர்களும் குழந்தைகள் போற்றப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படை சித்தாந்தத்தை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். 

இவ்வாறு குழந்தைகளை குழந்தையாக பாவிப்பதற்கும், குழந்தைகளின் தனித்துவத்தை சிதைக்காமல் இருப்பதற்கும் ஏற்ற கல்வி முறை தேவை என்றால் அதை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டிய சூழ்நிலை பல நாடுகளில் உள்ளது. அந்தப் பட்டியலில் நம் நாடும் இருந்து வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 ல் முன் மழலையர் கல்வியின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது. ஃப்ரோய்பெல்லின்  தத்துவ அடிப்படைகளை புரிந்து செயல்படுமாயின் அவை குழந்தைகளுக்கும் நம் நாட்டிற்கும் பயன்படும். அவ்வாறு அல்லாமல் ஏற்கனவே நடைபெற்றுவரும் முன் மழலையர் கல்வி வியாபாரம் தற்போது அரசு அங்கீகாரத்தோடு படுஜோராக நடக்க வழிவகுக்குமாயின் வருத்தமே மிஞ்சும்.

அதே போல் மற்றொருபுறம் ஐந்தாண்டு அடிப்படை கல்வி முடிந்த உடனேயே  தங்கள் முதல் பொதுத் தேர்வை இப்பிஞ்சு குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. சுதந்திரமான கற்றலும் தேர்விற்கு குழந்தைகளை தயாரித்தலும்  முரண்பட்டு நிற்கின்றன.  தற்போது மட்டும் ஃப்ரோய்பெல் இருந்திருந்தால் கண்ணீர் விட்டிருப்பார். 

கட்டுரையாளர்: இரா. கோமதி, ஆசிரியை.

தொடர் 1ஐ படிக்க: 

https://bookday.in/educational-thinker-1-sylvia-ashton-warner/

தொடர் 2ஐ படிக்க: 

https://bookday.in/educational-thinker-2-hesintha-charwaha-schools-era-gomthi/

தொடர் 3ஐ படிக்க: 

https://bookday.in/kalvi-sindhanaiyalar-booker-t-washington/

தொடர் 4ஐ படிக்க: 

https://bookday.in/educational-thinker-4-erin-crowell-the-freedom-writers-institute-era-gomathi/

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *