‘ஏகன் – அநேகன்’ :  கலாச்சார முரண்பாடு குறித்த ஓர் உரையாடல் – பேரா.மு.ராமசாமி | பெ.விஜயகுமார்பேராசிரியர் மு.ராமசாமி தமிழகம் நன்கறிந்த நாடகவியலாளர், திறனாய்வாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியாரகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்ளார். தமிழ் நாடகத்துறைக்கு இவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியது. தான் நிறுவிய  நிஜ நாடக இயக்கத்தின் மூலம் பல நாடகங்களை இயக்கி, அரங்கேற்றி, முக்கிய கதாபாத்திரமாக நடித்து சாதனைகள் பல புரிந்துள்ளார். ‘நந்தன் கதை’, ’தோழர்கள்’, ’கலகக்காரர் தோழர் பெரியார், ’கலிலியோ கலீலீ’, ’துர்கிர அவலம் (கிரேக்க நாடகம் ’அண்டிகோனி’யின் தமிழாக்கம்)’, ’ஸ்பார்ட்டக்கஸ்’ (வங்க எழுத்தாளர் பாதல் சர்க்கார் நாடகத்தின் தமிழ் வடிவம்), ’கட்டுண்ட பிரமோதியஸ்’ ஆகிய நாடகங்களை தமிழகத்தில் பல முறை அரங்கேற்றியுள்ளார். நாட்டார் கலைகள் ஆய்வுத் தளத்தில் இவரின் தோற்பாவை நிழற் கூத்து பற்றிய ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

C:\Users\Chandraguru\Desktop\unnamed.jpg

நாடகத்தை பல கலைகளின் ஒருங்கிணைந்த வடிவமாகக் கருதும் ராமசாமி ரஷ்ய நாடகவியலாளர் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாடு பற்றி ‘ஸ்தானிஸ்லாவ்ஸ்கிய முறைமை’ என்ற நூலில் எழுதியுள்ளார். ஸ்தானிஸ்லாவ்ஸ்கி உணர்வு நிலையிலிருந்தும், ஜெர்மானிய எழுத்தாளர் ப்ரக்டோல்ட் ப்ரக்ட் கருத்து நிலையிலிருந்தும் நடிப்பை பார்க்கின்றனர் என்பது ராமசாமியின் நிலைப்பாடு. காலங்கள் தோறும் நாடகத்துறை பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி வளர்ந்துள்ள வரலாற்றை நினைவூட்டுகின்ற வகையில் பெரியாரின் சீடரான நடிகவேள் எம்.ஆர்.ராதா சந்தித்த சவால்களை ‘1954- ராதா நாடகத் தடையும், நாடகச் சட்டமும்’ என்று எழுதியுள்ள இவரின் நூல் கருத்துரிமை, நாடகத்துறை மீதான சவால்கள் பற்றிய காத்திரமான படைப்பாகும்.

சமூகத்தை விழிப்போடு வைத்திருப்பதற்கான கருவிகளே கலைகள் என்றெண்ணும் ராமசாமியின் நாடகங்கள் சமகால சமூக, அரசியல் பிரச்சனைகளைப் பேசுகின்றன. துர்கிர அவலம் நாடகம் 1975-76 எமர்ஜென்சி கால அடக்குமுறைகளைப் பேசுகிறது. ‘கட்டுண்ட பிரமோதியஸ்’ நாடகம் 2002இல் குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடூரத்தைச் சித்தரிக்கிறது.

மு.ராமசாமியின் சமீபத்திய நாடகம் ‘ஏகன் – அநேகன்’ கணையாழி நவம்பர் -2020 இதழில் வெளிவந்துள்ளது. “வைதீகக் கலாச்சார அரசியலின் ஒரு பால பாடம்” என்ற பிரகடனத்துடன் எழுதப்பட்டுள்ள இக்குறு நாடகம் சமகால மதவெறி அரசியலையும், சித்தாந்த மோதலையும் வெளிப்படையாகப் பேசிடும் ’அரசியல் மிகை’ நாடகம் (A Political Extravaganza).

இந்திய ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் பாஜக தன்னுடைய எஜமானரான ஆர்எஸ்எஸ் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி இந்திய சமூகப் பொருளாதார அரசியல் சூழலைச் சீரழித்து வருவதன் சிரமங்களை நாள்தோறும் அனுபவித்து வருகின்றோம். இந்தியாவின் பெருமையான பன்முகக் கலாச்சாரத்தை புறந்தள்ளிவிட்டு ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் அராஜகத்தையும் காண்கிறோம். இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், ஒரே கல்விக் கொள்கை என்று ஒற்றைத்தன்மை தொடர்ந்து புகுத்தப்படுவதைக் காண்கிறோம். ஆட்சியாளர்களின் தாரக மந்திரமாக ‘ஏகம், புனிதம், ஒற்றை’ என்பன ஓங்கி ஒலிக்கக் கேட்கிறோம். இவற்றையே தனது நாடகத்தின் கருப்பொருளாக்கியுள்ளார் மு.ரா.

இச்சிறு ஓரங்க நாடகம் இந்துக் கலாச்சார தேசியத்தைக் கட்டமைக்கும்  சங்பரிவாரத்தின் முயற்சியைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆட்சி அதிகாரம் எனும் ஊர்தியின் ஓட்டுனர் இடத்தில் பாஜகவை அமரவைத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஆர்எஸ்எஸ் ஆட்சியை இயக்கிக் கொண்டிருப்பதை அப்பாவி மக்கள் அறிந்திலரே!  டெல்லியிலிருந்து மோடி தலைமையிலான அமைச்சரவை ஆட்சி செய்து வந்த போதிலும்,  பின்னிருந்து அந்த ஆட்சிக்கு வழிகாட்டுவது நாக்பூரிலிருக்கும் மோகன் பகவத் தலைமையிலான ஆர்எஸ்எஸ் என்பதைப் புரிந்து கொண்டோர் எத்தனை பேர்? இவ்வுண்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு நாடகத்தைவிட வேறு நல்ல வடிவமேது? நாடகம் வாசகன் கையில் நல்ல நூலாகவும், அரங்கத்தில் அமர்ந்திருக்கும் பார்வையாளானுக்கு காட்சிவழி உணர்த்திடும் ஊடகமாகவும் திகழும் சிறப்பானதொரு இலக்கிய வடிவமல்லவா? அதனை வெற்றிகரமாகப் பயன்படுத்தி சாதித்துள்ளார் மு.ரா.

C:\Users\Chandraguru\Desktop\drama.jpg

‘ஏகன் – அநேகன்’ நாடகம் ’தொல்குடி’, ’மூப்பர்’, ’வேதக்குடி’ என்ற மூன்றே  கதாபாத்திரங்கள் வழி அரிய செய்திகளை எளிய முறையில் வாசகரிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. கிரேக்க நாடகங்களில் மேடையின் ஓரத்தில் நின்று  கதாபாத்திரங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து நாடகத்தை நகர்த்திச் செல்லும் ’கோரஸ்’ (Chorus) எனும் உத்தியை மிகவும் சிறப்புடன் இந்த நாடகத்தில் மு.ரா பயன்படுத்தியுள்ளார். கதாபாத்திரங்களின் உரையாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே கதையின் போக்கைச் சொல்லிச் செல்லும் ‘குரல்’ ஒன்று உறுத்தல் ஏதுமின்றி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுவே நாடகத்தின் கருப்பொருளை அறிமுகப்படுத்தி வாசகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது. பெருங்கூட்டமாக மூப்பரை நோக்கி தொல்குடியினர் ஓடோடி வருவதை அந்தக் குரலே அறிவிக்கிறது. சனாதன மதத்தின் வன்முறையில்  பாதிக்கப்பட்ட தொல்குடியினர் வலி பொறுக்காமல் தங்களின் குறைகளை முறையிட்டு மூப்பனிடம் ஆறுதல் பெறுவதற்கு ஓடோடி வருவதைப் பறைசாற்றுகிறது.

தங்கள் குலத்தின் ஆதிக் குடும்பனை, பெரியவரை முக்காலத்தையும் அறிந்த பெரியாரை தொல்குடியினர் வணங்கி நிற்கின்றனர். (தந்தை பெரியாரையே இங்கே நாடக ஆசிரியர் குறிப்பிடுகிறார் என்பதை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்) தம் குலக் கொழுந்துகள் குறை தீர்க்க, வலிக்கு மருந்திட்டு ஆற்றிட மனமுவந்து “உங்கள் குறையென்ன குழந்தைகாள்?” என்று மூப்பன் வினவுகிறார். “எங்கள் மொழியே சிறைப்பட்டுள்ளது தலைவா! என் செய்வோம்? வைதீகக் கலாச்சார அரசியலின் மேலாதிக்கம் எங்களை விளிம்பிற்கும் வெளியே தள்ளியுள்ளது. மனவேதனையில் நொந்து போயுள்ளோம்” என்று அழாத குறையாகச் சொல்லி நிற்கின்றனர். ஏகம், புனிதம், ஒற்றை என்று பசப்பி எம்மை ஒதுக்கவும் ஒடுக்கவும் செய்கின்றனர் என்று அவர்கள் முறையிட்டதும், மூப்பன் அவர்களைச் சாந்தப்படுத்தி அமரச் செய்து, ”அநேகராய் சிதறிக் கிடக்கும் நீங்கள் ஒன்றுபட்டு நின்று அவர்களின் அதிகார அரசியலை எதிர்கொள்ளுங்கள். பிறப்பொக்கும் என்பது நம் கணக்கு. அவர்களுடைய அரசியல் உங்களுடன் முரண்வயப்பட்டதோடு,  புனிதம்-அபுனிதம், சுத்தம்-அசுத்தம். என்று சொல்லி தீண்டாமைத் தீயை வளர்ப்பதாக உள்ளது. அவர்களின் மநு தர்மசாஸ்திரம் ஒழுக்கம் என்று சொல்வதும் இதைத்தான்” என்று விளக்கம் அளிக்கிறார்.

தொல்குடியினர் தங்களின் மூத்தகுடியின் முன்பு முறையிட்டு நிற்கும் இந்நேரத்தில் சும்மா இருக்குமா வேதக்குடி. கைபர்- போலன் கணவாய் வழிவந்த வேதக்குடி காலங்காலமாய் கோலோச்சிய இம்மண்ணின் அனைத்துப் பூர்வகுடிகளையும் ஓரங்கட்டும் அரசியலை முன்னெடுக்கிறது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டும் கதையாகிறது. வேதங்கள் எனும் புதுமைகள் பேசி தொல்குடிகளை மட்டம் தட்டி ஒதுக்க நினைக்கிறது வேதக்குடி. இந்திரன், வருணன், வாயு, சூரியன், சந்திரன், அஸ்வினி, மாருதி போன்ற வானத்துத் தெய்வங்களை மகிழ்விக்க நடத்தும் யாகம், சடங்குகளை விளக்குவது தானே வேதங்கள். ”வேதங்கள் சாஸ்வதமானவை” என்கின்றனரே வேதக்குடிகள் என்கிறது ’குரல்’. ”எது சாஸ்வதம்? மாற்றம்தானே நிரந்தரம். மாற்றத்தை நோக்கி நகருங்கள்! கேள்வி கேளுங்கள்! கேள்விகளே பூட்டிய கதவுகளைத் திறக்கும் திறவுகோல்கள். ”எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதை நமக்கு அய்யன் சொல்லிக்கொடுத்த மந்திர பாடம் உள்ளதே! என்கிறார் மூப்பன்.

மண்ணைக் கொண்டாடுவது நம்முடைய மரபு. அவர்களின் கடவுள் வானத்தில் இருக்கிறார். யாகத்தில் வளர்க்கும் அக்கினி மூலம் வானத்தில் இருக்கும் கடவுளர்களுக்குத் தங்களின் வேண்டுதலைத் தெரிவிக்கிறார்கள். யாகத்தீயில் இடும் பொருட்களை உண்ணுமாறு வேண்டி போற்றிப் பாடும் பாடல்களே வேதக்குடிகளின் நான்கு வேதங்களாகும்.

ஓரிடத்தில் நிலையாய் தங்கி வாழும் தொல்குடிகள் கொண்டாடுவது அவர்கள் வாழும் நிலம், காடு, மலை ஆகியனவே. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தின் அடிப்படையில் அதற்கேற்ற மரம், செடி, கொடி, பறவை, விலங்குகளைப் போற்றி பாதுகாத்து நிலத்தில் காலூன்றி வாழும் வாழ்வே தொல்குடிகளின் வாழ்வாகும்” என்கிறார் மூப்பன். ”அப்படியென்றால் வேதக்குடிகளுக்கு நிலம் இல்லையா”?  என்று வியப்புடன் கேட்கின்றனர் தொல்குடிகள். “நாடோடி மக்களுக்கு ஏது இடம். ஆதிக்குடியினரைப் போல் ஓரிடத்தில் வாழாதவர்கள் அவர்கள். ஆதிக்குடி மனிதர்களிடமிருந்து தங்களைத் தனிப்படுத்தி மனதளவில் வேறுபட்டவர்களாக காட்டிக் கொண்டார்கள். தங்களை அவதாரிகள் என்று சொல்லிக் கொண்டார்கள்” என்று மூப்பன் உரையை முடிக்கும் முன்பாக “கபடதாரிகளா? அவதாரிகளா?” என்று தொல்குடிகளில் கோபத்துடன் கேட்கின்றனர்.ஆதிக்குடியினரிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை நிலைநிறுத்தவே ‘புனிதம்’ பற்றி அவர்கள் பேசுகிறார்கள். வேதகால ஆரியர்கள் தமது அடையாளங்கள் பிறமக்களோடு கலந்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தனர். தீட்டு, புனிதம் என்று கூறி தள்ளியே நின்றனர். ஆதிக்குடியினரைத் தள்ளி வைத்தனர்.

அவர்களின் இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் ஆரியர்களுக்கும், பூர்வீக ஆதிக்குடிகளுக்கும் இடையிலான மோதல்களைச் சித்தரிக்கும் காவியங்களே. அவர்களின் புனித நூலாம் பகவத்கீதை புரோகிதத்தைப் பேணிப் பாதுகாக்கும் அரசியல் கடமையையும், பண்பாட்டுக் கடமையையும், பொருளாதாரக் கடமையையும் சத்திரியர்களுக்கு உணர்த்துகிறது. அதுவும் பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் பணிக்கிறது. சாதுர்யமாகப் பேசி இதுபோன்று ஏராளமான கலாச்சாரக் கடமைகள் சத்திரியர்களைச் சேர்ந்தது என்று நம்ப வைத்தது. இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற சத்திரியர்கள் இதைத்தானே சிரமேற்கொண்டு செய்கின்றனர். சமஸ்கிருதமயமாக்குவதைத்தானே செய்கின்றனர்.

வேதக்குடியினர் தேவைப்பட்டால் பூர்வகுடிகளின் சடங்குகளையும் அனுஷ்டிக்கத் தயங்க மாட்டார்கள். வேலாயுதத்தைக் கையிலெடுத்து அலகு குத்தி காவடியும் எடுப்பார்கள். வேல் யாத்திரையையும் நடத்துவார்கள். கபடதாரிகள் தானே! சமணம், பௌத்தம் எனும் இரண்டு சத்திரிய தத்துவங்கள் தோன்றி வணிகம், அறவியல் மற்றும் கல்வி அடிப்படையிலான சான்றோர் வர்க்கம் உருவாகி வளர்ந்ததைத் தடுத்து நிறுத்தியதும் இந்த சனாதன அரசியல்தானே” என்று ’குரல்’ நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்ததும், மூப்பன், “ஆகா! என்னவொரு அழகான தர்க்கம்” என்று அசரீரியாக கேட்கும் ‘குரலை’ மனமாறப் பாராட்டுகிறார்.

மூப்பனின் பாராட்டு மழையில் நனைந்த ‘குரல்’ மேலும் உற்சாகம் கொண்டு, “மகேசனின் ஏகத்திற்கு எதிரானது அநேகத்தின் அதிகாரம்! பிரம்மத்தின் புனிதத்திற்கு எதிரானது அபுனிதத்தின் அதிகாரம்! வேதத்தின் ஒற்றைக்கு எதிரானது பன்முகத்தின் அதிகாரம்!” என்று உணர்ச்சி மேலிடச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறது. ”ஆம்; அனைத்து அதிகாரமும் மக்களுக்கே! உழைக்கும் மக்களுக்கான அதிகாரம்! ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம்! மக்கள் ஜனநாயகம் என்பதும் அதுவே” என்று மூப்பன் வழிமொழிகிறான். மூப்பனின் அறிவுரை, அறவுரை கேட்டுத் தெளிவு பெற்ற தொல்குடியினர் மகிழ்ச்சியுடன் முழுக்கமிடுகிறார்கள். மக்களின் அதிகாரம் பிறக்கட்டும்! மக்கள் ஜனநாயகம் மலரட்டும்! என்று முழக்கமிடுகிறார்கள். திரை கீழே விழுகிறது.

பேராசிரியர் மு.ரா.வின் கற்பனையில் உதயமாகிய இந்த உரையாடல் சமகால அரசியலின் அச்செடுத்த நகலாக விளங்குவதில் யாருக்கும் சந்தேகம் எழப் போவதில்லை. இன்றைய கலாச்சார அரசியலின் முரண்பாட்டை, மோதலை மு.ரா கலை வடிவமாக்கித் தந்துள்ளார். சம்பவங்கள் ஏதுமின்றி உரையாடலால் மட்டுமே நகர்ந்து செல்லும் இந்நாடகத்தை அரங்கேற்றுவதில் சிரமம் இருக்கலாம். ஆனாலும் சமகால வைதீக சனாதன அரசியலை மிக நுணுக்கமாகவும், எளிதாகவும் பாலபாடம் போல் எழுதி வெற்றியடைந்துள்ளார் மு.ரா. ஒருவேளை தன்னுடைய தேர்ந்தெடுத்த நாடக உத்திகளைக் கொண்டு மு.ரா. இந்த நாடகத்தை அரங்கேற்றவும் செய்யலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

பெ.விஜயகுமார்

                ——————————————–

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)