ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள்

1.வானம் சொட்டும் நீர்மெய்.

பனி படர்வான வருடலில்
மேனி சிலிர்க்கவில்லை
பூமிக்கு.
தூறலில்
முளைவிட்ட எதிலும்
காதல் இல்லை.
திரண்டெழுந்து கொட்டிய காதலையும்
நிராகரித்து
ஓடையாக
ஓட விட்டிருக்கக் கூடாது
ஆற்றுப்படுத்தவியலாத வெறுமையின்
கரிப்பான கடலாக
மாறுவதற்கு.

***
2.சகிப்பின் ஆற்றுப்படுதல்.

மேவித் திளைத்த அன்பில்
மெய் மறந்து நிகழ்ந்த
சூழ்நிலையின் கோபத்திற்கு
வடிகாலாயின வார்த்தைகள்
உக்கிரமாக.
ஒலிந்து கொண்ட ஆதுரங்கள்
உதவவில்லை
சந்தர்ப்பச் சர்ப்பத் தீண்டலுக்கு.
கைப் பிடித்து மிதந்த அன்றாடத்தில்
தைத்த ஊசியால்
வெடித்துச் சிதறிய காதலை
எதைக் கொண்டு சேகரமாக்குவது
இதையொரு
பொய்க் கோபமென
புரியாமல் போய்விட்ட
சாபத்தை!

***
3.நனைதலின் சிலிர்ப்பு.

விரும்பிய மழை
வேலைகளுக்கு இடையில்
விடாமல் பெய்ததால்
வெறுப்புகள் வழிந்தோடின
முகமெங்கும்.
கைபேசி அழைப்பு
கடுப்பேத்தி
ஒதுங்க வைத்தபொழுது
மழை
பயணத்தை நிறுத்திவிட்டது
மறுபடியும்
என்னை
மீட்டு.

***
4.நிறைந்தோடும் அன்பு.

வறண்ட நதிக்கரையில்
வந்தமர்ந்து செல்லும்
கொக்கிற்கும் தெரியும்
ஆகாரம் கிடைக்காத பொழுதுகள்
இவையென.
வேதனைகள் புரண்டோடும்
நதியின் இயலாமையில்
மூக்கை நுழைத்து
முங்கிவிட்டுதான்
பறக்கிறது
பால்ய சிநேகத்தில்.

***

5.கரையேறாத கதைகள்.

நெகிழ்ந்து கிடக்கும்
மணலிற்குள்
நிறைந்து கிடக்கிறது
கால் தடங்கள்
அரூபமாக.

***

6.பிராப்த கணங்களின் நழுவல்.

கிளம்பும் நேரத்தின்
அணுக்கம் வர
சோகம் தாளாது துடிக்கிறது
முகம்
கண்ணீரை எதிர்நோக்கி.
இந்தப் பாதையேன்
இத்தனை தூரமாக
இருக்கிறது
களைப்பற்ற ஆசுவாசத்தின்
நிரந்தர தங்குமிடமற்றென
நினைத்த வண்ணமே
கடக்கிறது
கணங்கள் தோறும்
பற்றுக்கோட்டின் வழுக்கலின்
ஆறுதலில் பற்றிவிட.

***

7.எனக்குள்ளான நான்.

குமிந்து கிடந்த வார்த்தைகளுக்குள்
குந்தியவாறு
கொட்டிக் கொண்டே இருந்தார்கள்
எனக்குத்தான்
கொட்டவும் தெரியவில்லை
கூட்டவும் தெரியவில்லை
படிந்துவிட்ட
கறைகளைத்தவிர.

துவைக்கச் சென்ற இடத்தில்
தொலைந்த போன என்னைத்
துழாவிக் கொண்டிருக்கிறேன்
கிடைக்காதெனத் தெரிந்தும்.

எப்பொழுதாவது
என்னை அழைக்க நேர்ந்தால்.
நான் திரும்பாதிருப்பின்
நீங்கள் நினைக்கும்
நானில்லை என்பதை
அறிக.

***

8.நாலாந்தர நயனத்தின் சொற்பச் சிலிர்ப்பு.

வாக்குறுதியில் வடிந்த கண்ணீரை
கோர்த்துக் கொண்டிருந்தேன்
மாலையாக
கரையாத நம்பிக்கையில்
சூடிவிட.

இணைக் கோட்டின்
சொற்பச் சாத்திய
நீள் பயணத்தின்
சந்திப்பொன்றில்
சிரித்துவிட்டு மட்டும்
சென்று விடாதே.

சாதுர்யமாக
தரித்த
அற்ப காரணங்களின்
முகப்பூச்சென
என்னால்
புரிய வைக்கவே முடியாது
இந்த
குரங்கிடம்
குடித்தனம்
நடத்தம்
எஞ்சிய நாட்களில்.

***

9.இணை இயக்க வடுக்கள்.

சுருளாகச் சுழன்ற
வாழ்க்கையை
வண்ணமாக மாற்றுவதாக
நுழைந்த
டிஜிட்டல்
கை
யாருடையதாகவும் இருக்கட்டும்
வாசல் திறக்கும்
வாக்குத் தத்த துயரில்.
காத்திருத்தலின் ரணத்தில்
சாளரம் உடைத்து
வெளிவந்து வென்றவனை
கை குலுக்கி மகிழ்கிறது
ஆயிரமாயிரம்
டிஜிட்டல் கைகள்
துரோகங்களை
மறந்து
எப்பொழுதும் போல
இயல்பாக.

எழுதியவர் : 

✍️ – ரவி அல்லது
ravialladhu@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *