ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை நகல் எல்லாம் எடுத்துக் கொண்டு போய்க் காண்பித்து, நீங்கள் இன்னார் தான் என்று நிரூபித்து ஒரு கவிதை புத்தகம் வாங்கி வந்த அனுபவம் உங்கள் யாருக்கேனும் உண்டா? இருக்கட்டும், அதைக் கடைசியில் பார்ப்போம்.
இருள் என்பது குறைந்த ஒளி என்னும் மகாகவியின் வாசகம் மிகவும் பிரசித்தம். உள்ளபடியே அது ஓர் அறிவியல் உண்மை. நாம் காணத்தக்க ஒளியும், கேட்கத் தக்க ஒலியும் ஒரு குறுகிய எல்லைக்குட்பட்டது. அவரவர் அனுபவ வெளிச்சம் என்பது இந்தக் குறுகிய குடையின் கீழ் தான். அதனாலேயே, பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்றெல்லாம் பாடி வைத்திருக்கின்றனர்.
நமது வெளிச்சம் இப்படி வெட்ட வெளிச்சம் ஆனபிறகு, பெருந்திரளாக இருக்கிற இருட்டை என்ன செய்ய? தொட்டால் ஒட்டிக்கிற கறுப்பு என்று வண்ணமயமான விவரிப்புக்குக் கூட இலக்கியத் தரம் சேர்ந்துவிடுகிறது. தப்பியோடி இருளில் மறந்துவிட்டனர் என்று கதைகளில் வருகிற வாக்கியங்கள் எத்தனையோ பேசுகின்றன. களவு வாழ்க்கைக்கு உளவு சொல்லித்தருகிறது இருட்டு.
இரவுகள் உண்மையிலே பெரிய கதை சொல்லிகள். பகலின் காதில் விழாமல் எத்தனையோ ரகசியக் கதைகள் இரவின் மடியில் பல தலைமுறைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. சோர்ந்து விழுபவர் உடலை முதலில் இருளே போர்த்தி விடுகிறது. உழைப்பாளியின் படுக்கை அருகே கரிசனத்தோடு அமர்ந்து இரவு முழுக்க வேறு யார் கையும் காலும் பிடித்து விடுகின்றனர், இருட்டு தான்.
திருட்டு சத்தியங்களையும் இருட்டு செரித்துக் கிடக்கிறது. உன்னதக் காதலையும் உளமாரத் தீண்டி ஆசீர்வதிக்கிறது. எதையோ, யாரையோ தேடி வரும் அவசர இரவில் நீங்கள் ஏந்திவரும் விளக்கிலிருந்து பாயும் வெளிச்சம் பட்ட மாத்திரத்தில் பதறி அடித்துக் கொண்டு போய்ப் பதுங்கிக் கொள்ளும் வெகுளி ஆளாக இருள் இருக்கிறது. உறக்கமற்று அலைமோதும் எத்தனையோ ஜோடி கண்களையும் ஒன்றுபோல் அரவணைத்து எப்படியாவது தூங்க வைத்துவிடும் பெருந் தாலாட்டுக்காரி இருட்டு.
இருளை ரசிக்கும் அருள் ஒருவருக்கு வாய்த்து விடுமானால், ஒரு நூறு கவிதைகள் பிறக்கின்றன, அந்தக் கும்மிருட்டில். அருள் வந்த சாமியாடி கவிஞர் ஏகாதசி அவர்களது கவிதை நூல் முழுக்க முழுக்க இருளே பளிச்சிடுகிறது.
சொல்லவியலா துயருற்றவர்களின்
தனிமை உதிர்த்த
மௌன திரட்டுதான்
மாபெரும் கதைப் புத்தகமான ‘
இந்த இருட்டு
என்கிறது ஒரு கவிதை. இந்தக் கவிதை நூலே, இருட்டின் சிறப்புத் தொகுப்பு தான்.
இருளைக் கொண்டாடும் வழிகளை வாழ்க்கை அனுபவத்தின் சாளரங்கள் ஒவ்வொன்றாகத் திறக்க, தன்னியல்பாகக் கொட்டுகின்றன கவிதைகள்.
காலை எழும்
சூரியனுக்கு
இருள்
தேநீர்
என்ன அழகான கவிதை…இதன் அடுத்த பார்வை வேறொரு கவிதையில் இருக்கிறது,
தேநீரின்
வெளிச்சத்தில்
இந்த இருட்டை
வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.
வீட்டை பத்திரமாகப் பூட்டிவிட்டு, பூட்டை இழுத்து வேறு பார்த்துப் போகிறவர்களை ஓர் எள்ளலோடு தொட்டுக் கேட்கிற இன்னொரு கவிதையின் கடைசி வரி, உள்ளே இருட்டிருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை என்று சிரிக்கிறது. குடையைத் தைத்தது என்னவோ வெளிச்சத்தில்தான், ஆனால், இருட்டை வைத்தல்லவா என்று வியக்கிறது இன்னொரு கவிதை.
தள்ளாடித் தள்ளாடி நடந்து போகும் குடிகாரன் நடையை இப்படி விவரிக்கிறது கவிதை ஒன்று:
காலடியில் கிடைக்கும்
இருட்டையெல்லாம் மிதித்து விடாமல்
தாண்டித் தாண்டிச் செல்கிறான்
ஒரு குடிகாரன்.
இருட்டு வண்ணம் கொஞ்சம் போல எடுத்துக் கொள்ளாமல் எந்த அழகிய கண்ணையும், பெண்ணையும் தீட்டி விட முடியாது யாராலும் என்கிறது வேறொரு கவிதை. வெளிச்ச அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குகிறது இருட்டு என்று அரசியல் பேசும் கவிதை ஒன்று!
ஓர் இசைஞனால்
தேர்வு செய்ய முடிகிறது
இரவோடு பேசும் வாத்தியத்தை
இரவும் மயங்குகிறது
எனும் கவிதை, அவரவர் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் உரிய வகையில் எண்ணற்ற கற்பனைகளுக்கு இடம் தரும் சிறப்பாகத் தெறிக்கிறது. இரவின் மடியில் உடன் பயணத்தை மேற்கொள்ளும் இசைப்பாடலின் பின்னணியில் ஒலிக்கும் இசைக் கருவியின் அதிர்வுகள் கேட்போரின் உள்ளத்தில் ஏற்படுத்தும் வேதியல் வினைகளை அது பேசாமல் பேசுகிறது.
இப்படியாக, இரவை, இருளை முன்வைத்து ஒரு நூறு கவிதைகளை 5 நாட்களில், அல்ல, 5 இரவுகளில் எழுதி இருப்பதை, “எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்’ எனும் தலைப்பில் தொகுத்திருக்கும் ஏகாதசி அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர். இருட்டைப் பேசும் சிற்பக் கூடத்தினுள் நுழைந்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே போகும்போது, அவற்றைப் பற்றி மென்குரலில் ஒருவர் பேசிக்கொண்டே செல்வது போல் விரிகின்றன ஒவ்வொரு கவிதையும். இருளின் ஒளிச் சிதறல்கள் என்று கூட ஒரு பெயர் சூட்ட முடியும்.
இந்தத் தொகுப்பை அருமையாக வெளியிட்டிருப்பவர், வேடந்தாங்கல் பதிப்பகத்தின் அய்யாசாமி கணேசன் அவர்கள். அவரை அழைத்து பணத்தை எப்படி அனுப்புவது என்று கேட்டேன். அவரோ, அஞ்சல் அட்டையில் முகவரி எழுதி அனுப்பினால் நான் இலவசமாகவே அனுப்புவேன் என்றார். சரி என்றேன், என்னவோ, அவராக அடுத்த உரையாடலில், இப்போதே முகவரி சொல்லுங்கள், குறித்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொண்டு, ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து பிரதிகள் உடனே உறையிலிட்டு எனக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பியும் விட்டார். அற்புத மனிதர்.
முகவரியில் ஏதோ ஒற்றை வரி சரியில்லை என்று நிறுத்தி வைத்துக் கொண்ட அஞ்சல் அலுவலக அதிகாரி, அலைபேசி எண்ணுக்கு அழைத்து, நீங்கள் நீங்கள் தானா என்று கேட்டார். எந்தக் கடிதம் நமக்கு வந்திருக்கும், ஏன் நேரில் வருமாறு சொல்கின்றனர் என்று யோசித்துக் கொண்டே சென்றால், ஏகாதசி அவர்களது கவிதை புத்தகங்கள்! வாக்காளர் அட்டையின் நகலை என் கையொப்பத்தோடு பெற்றுக் கொண்டபிறகே பார்சலை என்னிடம் தந்தார் அதிகாரி.
இந்தக் கவிதை புத்தகத்திற்காக பாஸ்போர்ட் நகல் கேட்டிருந்தால் கூட, எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்து வாங்கி வந்திருப்பேன். அற்புதமான தொகுப்புக்கு மரியாதை அது.
***************
எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்
ஏகாதசி
வெளியீடு: வேடந்தாங்கல் பதிப்பகம்.
விலை ரூ.80