எல்.திருநாவுக்கரசு (El.Thirunaavukkarasu) Short Story Thirumangalyam Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day

கதைச்சுருக்கம் 59: எல். திருநாவுக்கரசுவின் *திருமாங்கல்யம்* சிறுகதை



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

வெகுஜன பத்திரிக்கை வளையத்திற்குள் பிரவேசிக்காமல் இருந்தாலும் ஜனரஞ்சகமாக அதே தருணத்தில் பிரச்சனைகளை பொதுமைப்படுத்தாத படைப்பாளி இவர்.  ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து வரக்கூடிய தீவிரமான பிரச்னையை கதைக் கருவாக கொண்டிருப்பது  இவரை நிமிர்ந்து பார்க்கச் செய்கிறது.  

திருமாங்கல்யம்

எல். திருநாவுக்கரசு

சகாயம் குளியறையை விட்டு வெளியே வந்ததும் துணி துவைத்துக் கொண்டிருந்த ஜாஸ்மின் சிரித்தாள்.  வாயில் நுரை ததும்ப பல் விளக்கியபடி இருந்த ரூபியுடள், தோளில் துண்டோடு நின்றிருந்த ஜெமிமாவும், “அக்கா, சீக்கிரம் சீக்கிரம்” என்று நமட்டலாக சிரிக்க அதை பொருட்படுத்தாதவளாக படியேறி வராண்டாவில் நுழைந்தாள்.  பக்கெட்டில் இருந்த ஈரமான துணிகளை கொடியில் போட்டுவிட்டு செல்லலாம் என்று நினைத்தவளாக தனது அறையின் பக்கமாக சென்றவள் திரும்பி வடக்காக மாடிப் படிக்கட்டை நோக்கி நடந்தாள்.

ஒரு நாள் உன்னை பிரியேன் என்று ஒரு நாள் கூறினேன் என்று சட்டென மனதுக்குள் தோன்றியப் பாடலை உதடுகளில் பொருத்தி முணுமுணுத்தாள்.  சகாயம் அவளுக்குப் பிடித்த நிறைய பாடல்களை பிரார்த்தனைக் கூடத்தில் ஆழ்ந்து அனுபவித்துப் பாடுவாள்.  சங்கீதத்தால்தான் மனம் லேசாக மாறி, தினமும் உறக்கம் தகைகிறது என்று மனதார நம்புகிறாள்.

அவள் வீட்டிலிருந்த காலங்களில் இளையராஜா பாடல்களை சப்தமாக வைத்துக் கேட்டுக் கொண்டேயிருப்பாள்,  பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும்போதோ வெளியில் போய்விட்டு திரும்புகிறபோதோ எங்கேயாவது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தால் நின்று ஒருமுழுப் பாடலையாவது கேட்டு முடித்துததான் இடத்தை விட்டு நகருவாள்.  

ஞாயிற்றுகிழமை ஆராதனை முடிந்து வீட்டிற்கு வந்தவள், வானொலியைப் பார்த்து குதித்து மகிழ்ந்ததும் அதற்காக காத்திருந்தவராக அப்பா திருப்தியாக தனக்குள் உருகிக் கொண்டார்.  வானொலியை வாங்கி வந்த காசில் வாரம் பத்துநாள் பிள்ளைகளுக்கு நல்லச் சாப்பாடு பொங்கிப் போட்டிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு அம்மாவின் கோபத்தில் இருந்தது.  அம்மாவே பிற்பாடு அதிகாலையில் இலங்கை வானொலி ஒலிபரப்பியப் பிரார்த்தனையை தினமும் கேட்கிறவளாக மாறிப்போனாள்.  இப்போது அவளுடைய வீட்டில் வெளிநாட்டு தொலைக்காட்சி இருக்கிறது.  மூன்று மாதங்களுக்கு முன்புதான் பொறியியல் படிக்கிற தங்கைக்கு மடிக்கணினி வாங்கிக் கொடுத்திருந்தாள்.  

மாமரத்திலிருந்த கிளிகளின் சப்தம் அவன் நினைவைக் கலைத்தது.  மரம் காய் பிடிக்கும் நாட்களில் முழுவதும் பட்சிகளின் ஒலிரிதம் விதவிதமாக கேட்டுக்கொண்டே இருக்கும். கொடியில் துணி உதறிப் போட்டு, கொடியிலும் தரையிலும் சிதறி கிடந்த கிளிப்களைப் பொறுக்கி துணியின் மீது பொருத்தினாள்.  காலை கூட்டு பிரார்த்தனை முடிந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம். காயும் வெயிலில் அதற்கள்ளாகவே காய்ந்துவிடும்.  

வராண்டாவைப் பெருக்கிக் கொண்டிருந்த ஷீபா வழிவிட நிமிர்ந்து துடைப்பத்தை தட்டிக் கொண்டே “இன்னைக்கு புதன்கிழமை” என்றாள்.  அதை அவளும் ஆமோதிப்பவளாக தலையசைத்தாள்.  சகாயம் அறைக்கதவைத் தாழிட்டுவிட்டு மின் விசிறியைப் போட்டாள்.  அவள் அணிந்திருந்த நைட்டியை ஜன்னல் ஓரம் இருந்தக் கொடியில் உலர்வதற்காக பிரித்துப் போட்டுவிட்டு  பெரிய துண்டை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டு, தலையிலிருந்த டவலை எடுத்து அனிச்சையாக மீண்டும் தலையை துடைத்துக் கொண்டாள்.  உடலில் பவுடர் அடித்து முகப்பூச்சுக் களிம்பைப் பூசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. களிம்பு வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இப்போதும் நினைத்தாள். அது தீரும் மட்டும் பயன்படுத்திவிட்டுப் புதிதாக வாங்கக்கூடாது என்று நினைப்பதை அவள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என மிகப்பெரிய அங்காடி மாளிகையில் நுழையும் போதும் வேண்டுமென்றே மறந்து விடுகிறாள். அவள் அழகாக இருப்பதால் அதை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

Couple Man Woman - Free vector graphic on Pixabay

சகாயம் இயற்கையாகவே வசீகரமான தோற்றத்தை அம்மாவின் வழிப் பெற்றிருந்தாள். கண்கள் எப்போதும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறது என்று முதுகலை தமிழிலக்கியம் படித்த சாம் அவளை தனியேப் பார்க்கும்போதெல்லாம் கூறிக் கொண்டிருப்பான். அவனுக்கு அவள் எங்கேப் போனாலும் பின் தொடர்ந்து வரும் வேலை பிடித்திருந்தது. கல்லூரி விடுமுறை நாட்களில் ஊர் வந்திருந்தப்போது வீட்டின் மொட்டை மாடியில் படர்ந்திருந்த மல்லிகை மொட்டுக்குகள் பறித்து சுவரில் சாய்ந்தபடி நின்றவாக்கில்  பூக்கட்டிக் கொண்டிருந்தபோது ரோஜா தொட்டிக்கு நீர் ஊற்றிவிட்டு பேசிக்கொண்டே அருகில் வந்தவன் திடுமென முத்தமிட்டபோது அவளும்தான் உடன்பட்டாள்.

இயேசப்பா அவள் உடல் சிலிர்த்திருந்தது. காலையிலேயே அவன் ஞாபகம் ஏன் வந்தது,  சகாயம் கைகளில் சிலிர்த்து நின்ற ரோமங்களை கண்கொட்டாது பார்த்தாள்.  இடுப்பும் முதுகுத் தண்டும் கூட குளுமையாக இருந்ததை அவளால் சட்டென்று உணர முடிந்தது. அவனைப் பற்றியும் அதைப்பற்றியும் நினைக்கக்கூடாது என்றுதான் எப்போதும் நினைக்கிறாள்.  அவளுடைய தனித்த நேரங்களில் அதை நினைக்காமல் இருக்கவே முடிவதில்லை. சுவரில் மாட்டியிருந்த மாத நாட்காட்டியை அவள் பார்த்தாள். மாதம் இரண்டாவது சனிக்கிழமை அவர்களுக்கு விருந்தினர்கள் கிழமை. ஞாயிறு காலை குழு ஆராதனை  முடிந்தவுடன் விருந்தினர்கள் நேரம் தொடங்கிவிடும். அன்றைக்கென்று சிலபேர் ஆராதனைக்குகூட வருவதில்லை.

அம்மாவுடன் ரெகேமியா கண்டிப்பாக வருவாள், பத்தாவது படிக்கும் கடைசி தங்கை. அவளுக்கு நன்றாக படிப்பு வருகிறது என்று அம்மா சொல்லும்போது சகாயத்திற்கு பயமாக இருந்தது. அவளும் தன்னைப் போல் ஆகிவிடக்கூடாது என்று உள்ளுக்குள் பதைப்பதைப்பாக இருந்தது.

படுக்கையில் நாளிதழை விரித்தாள்.  சகாயம் இன்றைக்கு எத்தனைப் பக்கம் விளம்பரம் வந்திருக்கிறது என்பதைப் பார்த்தாள்.  அவள் வரிசையாக படிக்கும் வழக்கமில்லாதவள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்வையில் பட்டதைப் படிப்பாள்.  சில நேரங்களில் மனம் தோன்றியபடி வரிசையாகவும் படிப்பாள்.  அது அவள் மனோநிலையைப் பொறுத்தது.

பெண் வயது நாற்பத்தியந்து.  அழகான இருபது வயது தோற்றம்.  ஜாதி மதம் தடையில்லை. சொந்த வீடு வங்கி சேமிப்பு முதல் மணம்  மறுமணம் வீட்டோடு மாப்பிள்ளை சம்மதம் விளம்பரத்தைப் பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு பூத்தது.  அந்தப் பெண்ணிற்கு இப்போது எதற்காக திருமணம் என்ன நிர்ப்பந்தம் வந்தது.  இந்த வயதிலும் உடல் தேவைக்காக இருக்குமோ.  அப்படி இருக்காது.  சட்டென்ற சகாயத்திற்கு ஊழியத்திற்கென்று போகும் கடற்கரைப்பகுதி குப்பங்களில் வாழும் மக்கள் நினைவுக்கு வந்தார்கள்.  அவர்களின் சூழ்நிலையைப் பார்த்து அவள் மனம் பரிதவித்துப் போவாள்.  

போனவார விளம்பரம் ஞாபகத்திற்கு வந்தது.  கண்பார்வையற்ற அரசு வேலையில் இருந்தவர் கண்டிப்பாக பார்வையற்ற பெண்கள் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள் என்ற அவரது நேர்மை பிடித்திருந்தது. அந்த முகமறியா சகோதரருக்காக அவள் இரண்டொரு நாள் தொடர்ந்துப் பிரார்த்தனை செய்தாள்.  

கிறித்துவ விளம்பரங்களில் கிளைப் பரப்பியிருந்த உட்சாதிகளைப் பார்த்ததும் அவளுக்கு அருவருப்பாக இருந்தது.  சகாயம் நாளிதழ் மணப்பந்தல் விளம்பரத்தில் மணமகன் தேவையை மட்டும்தான் படிப்பாள்.  ஆண்கள் விரும்பும் தகுதிகளை அறிந்து கொள்வதில் அவளுக்கு பெரியதாக விருப்பம் இருக்காது.  

नवाबिहान: Wedding & Other Cliparts | Wedding symbols, Bridal mehendi  designs, Bridal mehendi designs hands

இரண்டு அறைகள் தள்ளி உள்ள அக்காவின் பெயர் மல்லிகை என்று கூப்பிட்டதை கேட்டு வந்தப் புதிதில் அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.  ஒரு வேளை ஜாஸ்மின் என்ற பெயரேதான் மல்லிகை என்ற கூப்பிடுகிறார்களோ என்று கூட நினைத்திருந்தாள்.  அந்த அக்கா விடுதிக்கு வந்தப் புதிதில் தான் வீட்டில் பெருவிருப்பத்தோடு வளர்த்து வந்த ஜாதிமல்லி பந்தலைப் பற்றி சிலாகித்துப் பேசுவாள் என்றும் சில நேரங்களில் வீட்டு ஞாபகம் தலைதூக்க அழுவாள் என்றும் ஊழியத்திற்காக வெளியே செல்லும்போது ஜாதிமல்லி மட்டுமல்லாமல் மல்லிகைப் பூக்களைப் பார்த்தால் வாங்கி பைக்குள் மறைவாக வைத்துக் கொண்டு வந்து அறையில் இரவுப் படுக்கும்போது வைத்துக் கொள்வாள் என்றும் தெரிந்தது.  பெரிய குடும்பத்தில் பிறந்த அவளும் படிப்பதற்காகத்தான் வார்த்தைப்பாடு ஏற்றுக் கொண்டாள் என்று தெரிந்ததும் அவளை நினைத்துப் பரிதாபமாக இருந்தது.  

அக்காவை நினைத்ததும் அவளுடைய கண்கள் அனிச்சையாக உடுத்தியிருந்த  வெள்யையங்கியைப் பார்த்தது.  சகாயம் வார்த்தைப்பாடு ஏற்றுக் கொள்வதற்கு முன்தின இரவு அழுத அழுகை அவள் கண்முன் வந்து நிழலாடி கண் நிறைந்து மனது கனத்தது.  அவளுடன் படித்த தோழிகள் பிரசவித்த பிள்ளைகளோடு தேவாலய ஆராதனை பங்குக்கு வரும்போது இதயம் பொருமி அழுகை வெளிவரத் துடிக்கும்.  

இந்த விடுதியில் அவளையும் சேர்த்து இருபதுபேர் வார்த்தைப்பாடு ஏற்றுக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.  ஒவ்வொருத்திக்கும் லயிக்க முடியாத கதை ஒன்ற இருந்தது,  தேவாலயத்தின் மூத்த உறுப்பினர்கள் ஆசிர்வதிக்கும்படி கட்டிப்பிடிக்கும்போது அவளுக்குள் ஒரு மாதிரி இருக்கும்,  அவர்களுக்கு உடல் பிரக்ஞை பற்றி பொருட்படுத்தக்கூடாது என்று மூத்தவர்கள் சொல்லும்போதுஅமைதியாக இருப்பாள்.  

பிரார்த்தனையில் மனம் ஒன்றி பழைய ஞாபகங்கள் பெருக்கெடுக்க விசித்து அழுவதில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.  அப்படியில்லையெனில் குளியலறையில் சப்தமில்லாமல் வெடித்து அழும் நேர்த்திசை மற்றவர்களைப் போலவே அவளும் பழகியிருந்தாள்.  

ஒருமுறை அவளுடைய கால் பாதங்களையும் கணுக்கால் ரோமத்தின் அடியில் நீண்டு செல்லும் பச்சை ரேகையையும் ஒருவன் உற்றுப்பார்த்தபோது அவளுக்கு வெட்கம் கூடி கிளர்வாக இருந்தது.  அவளுக்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு சாதாரணமாக வாழ வேண்டும் என்று மிகுந்த ஆசையாக இருந்தது.  அன்றைக்கான அவள் அழுகை வெளியேறத் துடித்த நேரத்தில் அவளது அறையின் கதவு தட்டப்பட்டு அவளதுப் பெயரை உச்சரித்து பாதர் கூப்பிடுவதாகக் குரல் வந்தது.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *