எலைன் சியா ஹைட் (Elaine Chia Hyde) என்பவர் ஒரு தொழில் முனைவோர், இயற்பியலாளர், விஞ்ஞானி மற்றும் விமானி ஆவார். இவர் செய்தி மற்றும் ஊடக நிறுவனமான சிகாகோ ஸ்டார் மற்றும் AI- உதவி ஊடக தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக ஈஸ்ட்சைட் எண்டர்பிரைசஸ் ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். இவர் விண்வெளியை அடைந்த முதல் ஆஸ்திரேலியப் பெண் என்ற வரலாற்றை அதிகாரப்பூர்வமாகப் படைத்தார்.
ஆரம்ப வாழ்க்கை

இவர் சிங்கப்பூரில் பிறந்தார். இவரது தாயார் மார்க்கோனி என்பவர் கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தரக் காட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணிபுரிந்தார. மேலும் இவரின் தந்தை ஒரு தொலைத்தொடர்புப் பொறியாளராக இருந்தார். இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் கணினி விநியோகத் தொழிலைத் தொடங்க ஆஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தனர். அப்போதுதான் கணினித் தொழில் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது.
இவர் விக்டோரியாவின் பர்வுட்டில் உள்ள பிரஸ்பைடிரியன் மகளிர் கல்லூரியில் பயின்றார். தனது கல்லூரியின் ஒரு பகுதியாக பல வெளிப்புற முகாம்களில் பங்கேற்றார். ஆஸ்திரேலிய வெளிப்பகுதிகளை ஆராய்வதிலும் அவர் மணிக்கணக்கில் செலவிட்டார். இவர் விண்வெளியில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளைக் கண்டுபிடிக்கும் குறிக்கோளுடன் வணிகம் மற்றும் இயற்பியலைப் படித்தார்.

இவர் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு பென்சில்வேனியா பல்கலைகத்தில் உள்ள வானியற்பியல் ஆய்வகங்களில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானியானார். இதன் மூலம் அவரது விண்வெளி மீதான ஆர்வம் வளர்ந்தது.
தொழில்
இவர் சிகாகோ ஸ்டார் மீடியாவை நிறுவினார். இது உள்ளூர் அச்சு செய்தித்தாளாகத் தொடங்கப்பட்டது. இவரது தலைமையின் கீழ் சிகாகோ ஸ்டார் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு தகவல் தொடர்பு சேவை நிறுவனமாக வளர்த்தது. இவர் தற்போது AI- உதவி ஊடக தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ஈஸ்ட்சைட் எண்டர்பிரைசஸை நிர்வகிக்கிறார்.
விண்வெளிப் பயணம்
இவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு விண்வெளி வீரர் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது எலைன் சியானுக்கு வயது 10 தான். அன்று முதல் விண்வெளிக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் 16 வயதில் அலபாமாவில் உள்ள அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் மையத்தில் உள்ள விண்வெளி முகாமில் கலந்து கொண்டார். அந்த அனுபவம் விண்வெளியை அடைய வேண்டும் என்ற அவரது உறுதியை மேலும் ஆழப்படுத்தியது.
தனியார் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் தனது NS-30 பயணத்தில் பறக்கும் ஆறு பேரின் பெயரை வெளியிட்டது. அந்தக் குழுவில் இயற்பியலாளர் எலைன் சியா ஹைட்டின் பெயரும் இடம் பெற்றிருந்தது. மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துஷார் ஷாவும் (Tushar Shah) இடம் பெற்றிருந்தார். ப்ளூ ஆரிஜினின் இந்த 10 ஆவது மனித விண்வெளிப் பயணம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று வெற்றிகரமாக நடந்தது.
இவரது பயணம் ப்ளூ ஆரிஜினின் யூடியூப் சேனல் மற்றும் ப்ளூ ஆரிஜினின் வலைத்தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இவர் விண்வெளிக்குச் சென்ற முதல் சிங்கப்பூரில் பிறந்த ஆஸ்திரேலிய – அமெரிக்கப் பெண் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா என இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் தனது கணவர் மற்றும் தங்களது 5 குழந்தைகளுடன் புளோரிடாவில் வசிக்கிறார்.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
