அறிவிக்கப் படாதொரு
அவசர நிலைகாலம்
வறுமைக்கு ஜதி கட்டி
வாழ வைக்கும் வாய்ஜாலம்
தெரிவிக்கப் படாதொரு
தேசத்தின் போர்க்காலம்
தெருவதிர நடந்தாலே
திருவடிக்குச் சிறைக்காலம்
கனவு கண்டாலே
கைது நடவடிக்கை
கார்ப்பரேட் கட்டளைக்குக்
கைகட்டி உடன்படிக்கை
ஊடலிலும் நாட்டின்
உள்துறையே தலையிடலாம்
ராடாரில் படுக்கையறை!
ராணுவமும் நுழைந்திடலாம்
இம்மென்றால் வனவாசம்
ஏனென்றால் சிறைவாசம்
கம்மென்று இருப்பதுவா?
கண்மூடிக் கிடப்பதுவா?
பாரத் மாதா கி
பரம்பரையில் வந்தவராம்
ஊரெல்லாம் கோவணத்தை
உருவுவதில் வல்லவராம்
முகவர்கள் போட்டிருக்கும்
முகமூடி எத்தனையோ?
முகமூடிக் குள்வடிக்கும்
முதலைநீர் எத்தனையோ?
நாடு முழுவதிலும்
நாகங்கள் எத்தனையோ?
நாகத்துக் குள்ளிருக்கும்
நஞ்சுவகை எத்தனையோ?
தந்திரங்கள் எத்தனையோ?
தகிடுதத்தம் எத்தனையோ?
தமிழ்நாட்டு வரைபடத்தில்
தாக்குதல்கள் எத்தனையோ?
மூலைக்கு மூலையிங்கு
மூலதனம் எத்தனையோ?
மூலதனம் செய்யுகிற
மூர்க்கத்தனம் எத்தனையோ?
வெவசாயி முதுகெலும்பில்
வெதவெதமா தூக்குமரம்
வெவசாயி குடல் தூக்குக்
கயிறாகித் தொங்கிவிடும்
வெதநெல்லு வாக்கரிசி
ஏருகாலு பாடைக்கழி
முப்பாட்டன் தோண்டிவச்ச
ஒற கெணறு பொதகுழியா?
பசியால பாடை செய்ஞ்சி
படுக்க வைக்கும் மோடிராசா
ஆதாரு எங்களுக்கு
அவரு வச்ச நெத்திக்காசா?
தெசையே தெரியாமத்
தெகைக்குறோண்டா சொடலமாடா!
வடக்கை வாழவச்சி
தெற்கு பூரா சுடுகாடா?
சட்டத்துல ஓட்டையிட்டு
சமத்துவத்தப் பூட்டிப்புட்ட
இட்லருக்கு அண்ணாவாம்!
இந்தியாவத் தின்னாராம்!
புட்டத்துல ஒட்டிக்கிச்சி
பூமியாளும் நாற்காலி
பொதகுழியும் புடுங்குறானே
கார்ப்பரேட்டு சேக்காளி
இழந்ததெலாம் மீட்பதற்கு
இந்தியா கூட்டணியாம்
குழந்தைகூட சொல்லுதடா
மோடி இனி ‘வேஸ்ட்’ அணியாம்!
எழுதியவர்
நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கவிதை சாட்டையா? இல்லை
சாட்டை கவிதையா? பின்னி
எடுத்திருக்கிறார் நா.வே
இனி அவர்களுக்கு ‘ நோவே’