மத்திய அரசினால் கொண்டுவரப்பட உள்ள மின்சார சட்டம 2003 க்கான திருத்தம் 2020 ன் வரைவு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி கொண்டு வரப்பட்டு 4 வாரங்களுக்குள் திருத்தம் அளித்தல் வேண்டும் என்று அரசிதழில் வெளியிடப்பட்டது. மின்சார ஊழியர்கள் பொறியாளர்கள் நுகர்வோர்கள் அமைப்புகள் எல்லாம் சேர்ந்து இந்த வரைவை கொரானா காலத்தில் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. திருத்தங்கள் அளித்திட கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் ஜுன் மாதம் 5 ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தை மாற்றி அமைக்கவேண்டும் ; .மாநிலங்களின் உரிமைகளைப்பறிக்கும் விதிகள் உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய விடமாட்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் மின்துறை அமைச்சரும் எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவரும் திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும் ஆபத்தான திருத்தங்களைக்கொண்டுள்ள மின்சார சட்டம் 2020 ஐ திரும்பபெற வலியுறுத்தி உள்ளார். மின்வாரியத்தில் இயங்கும் சங்கங்கள் அனைத்தும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
மின்சார சட்டம் 2003 கொண்டு வந்தததால் பலன் உண்டா?
மின்சார சட்டம் 2003 ஐ கொண்டு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில். அப்போதைய பிரதமர் ஆக இருந்தவர் மறைந்த திரு .வாஜ்பாய் அவர்கள்.மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்த மின்வாரியங்கள் அச்சட்டத்தின் அடிப்படையிலேயே மின்விநியோகம் ,மின் உற்பத்தி மற்றும் மின்தொடர்பு என தனித்தனி அமைப்புகளாக பிரிக்கப்பட்டது.
மின்உற்பத்திக்கும் மின்கட்டமைப்பையையும் செய்வதற்கு நிதி ஒதுக்கீடை செய்ய மத்திய அரசு மறுத்தது. மாநில அரசுகள் மாநிலத்தின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ள தனியார் மின்உற்பத்தியாளர்களை நாட வேண்டியதாயிற்று.
மின் உற்பத்தியாளர்களிடம் மின்சாரம் வாங்குவதற்கு நீண்டகால மத்திய கால குறைந்தகால ஒப்பந்தம் போட வேண்டியதாயிற்று. தமிழகமும் இதில் இருந்து தப்பிக்கமுடியவில்லை. விவசாயிகளுக்கு ஆன இலவச மின்சாரம் அளிக்கப்பட்டால் அது மாநிலத்தின் பொறுப்பானது. வீடுகளுக்கு மான்ய விலையில் மின்சாரம் அளித்தே ஆகவேண்டும். மக்களுக்கு அளிக்கும் சலுகைகளை அந்தந்த மாநிலங்கள் திரும்பபெற முடியாது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் மூன்று மாநிலங்களில் மட்டுமே அமுலாகிக்கொண்டு இருக்கின்றது. தமிழ்நாடு பஞ்சாப் ஒன்றுபட்ட ஆந்திர இந்த மாநிலங்கள் மட்டுமே. அதைக்கூட தற்போது மத்திய எரிசக்திதுறை செயலாளராக இருந்தவர் அப்பதவியில் ஓய்வு ஆனவுடன் பாஜகஅரசில் எரிசக்திதுறை அமைச்சராகிவிட்டார். அவர் இலவசமாக மின்சாரத்தை அளிக்கமுடியாது. மினஉற்பத்தி என்ன இலவசமாகவா வருகிறது. விவசாயிகளின் இலவச மின்சாரத்தை அளவீடு செய்ய மீட்டர் பொருத்த நிதி ஒதுக்கீடு செய்தாகிவிட்டது என்றார்.
தனியாரிடம் வாங்கிய மின்சாரத்திற்கு அதிக விலை கொடுத்ததினால் மாநில மின்வாரியங்கள் கடனில் சிக்கிக்கொண்டன. 2012 ஆம் ஆண்டில் மத்திய அரசின் திட்டமான மாநிலங்களில் வலுவாக சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் மீட்சி நிதி கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு தமிழகம் தேசிய மின்தொகுப்பில் சேர்க்கப்பட்டது.(National Grid)
பாஜக செய்தது என்ன?
பாஜக ஆட்சிக்கு வந்தது. மின்வாரியங்களின் கடன் தீரவில்லை. கடனிலிருந்து மின்விநியோக கழகங்களை மீட்க உதய் மின்திட்டம் கொண்டு வந்தார்கள். அதிலும் பிரச்சினை தீரவில்லை. மின்விநியோக கழகங்கள் கடனுக்கு தள்ளப்படுவது எதனால் என்று தெரிந்தும் பாஜக அரசு அதே முறையை தொடர்ந்தது. பாஜக அரசின்கவனம் முழுவதும் மின்சார சட்டத்தின் அமுலாக்கத்தை மேலும் வீரியமாக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டே இருந்தது.
மின்சார சட்டம் திருத்தம் 2014 ஐக்கொண்டு வந்தார்கள். அதை 2019 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றமுடியவில்லை.
மத்திய அரசு புதிய மின்திட்டங்களை தனியாரிடமே ஒப்படைத்தது.இன்றைய தேதியில் 3லட்சத்து 70 ஆயிரம் மெகாவாட் மொத்த மின்நிறுவு திறனில் 29 சதவீதம் மாநில அரசும் 23 சதம் மத்திய அரசின் பொறுப்பிலும் 48 சதம் தனியாரிடமும் உள்ளது. மத்திய அரசின் நோக்கம் முழுவதுமே மின்சார விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமென்பதே. நிலக்கரி சுரங்கங்களை 2012 ஆம் ஆண்டிற்கு முன் அனல் மின்நிலையம் மாநில அரசிகால் அமைக்கப்படுகிறது என்றால் அதற்கான நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்படும் . பாஜக அரசு நிலக்கரிச்சுரங்கங்கள் யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்துக்கொள்ளலாம் என்ற அனுமதி அளித்து விட்டது.
அதற்காக மின்விநியோகத்தை தனியாரும் செய்வதற்குண்டான உரிமம் கொடுப்பது. மின் கட்டணத்தை தனியார் வசூல் செய்வது என்றெல்லாம் தனது திட்டத்தை அமுல்படுத்திட புதிய புதிய ஏற்பாடுகளை செய்துகொண்டே இருக்கிறது..
வரைவில் உள்ள திருத்தங்கள்
தற்போது கொண்டு வந்த மின்சாரசட்ட வரைவில் முக்கியமான ஒரு திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்பட்டால் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மின்சாரம் விற்பனை செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளைச்செய்திட ஒரு அதிகாரம் கொண்ட குழு உருவாக்கப்படும். இக்குழு மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செய்யும். வெளிநாட்டிலிருந்து மின்சாதனங்களை இறக்குமதி செய்து கொள்ள வழியை உருவாக்கும்.
இந்தியாவில் தற்போது இருக்கும் மொத்த மின்நிறுவுதிறனனில் 90 ஆயிரம் மெகாவாட் தனியார் மின்உற்பத்திநிலையங்கள் தனக்கு வேண்டிய விலை கிடைக்காத காரணத்தினால் மின்உற்பத்தி செய்யாமல் நிறுத்துப்பட்டுள்ளது. அத்தனையும் தனியார் அனல் மின்நிலையயங்கள். இதனால் என்ன ஏற்படும். நமது நாட்டில் அனல் மின்நிலையங்கள் இருப்பதனால் மாசு பிரச்சினை தண்ணீர் பற்றாக்குறை நிலக்கரி பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகளை எல்லாம் இந்திய மக்கள் ஏற்றுக்கொளளவேண்டும். அன்னிய நாட்டிற்கு பசுமை மின்சாரம் சென்றடையும்.
கார் தொழிற்சாலை வந்தால் மறைநீர் எப்படி செலவாகுமோ அப்படி ஒரு நிலை உருவாகும். அதுமட்டுமல்ல பிஎச்இஎல் நிறுவனம் மின்சாதனங்களை உற்பத்தி செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது. அதற்கு உண்டான ஆர்டர்கள் உள்நாட்டில் கிடைக்காது. தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு வந்தபோது தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தை அளிக்கமுடியாத சூழலில் மின்சாரம் தேவைப்படுவோர் தனியாரிடமிருந்தும் மின்சாரத்தை மின்வாரியத்தின் கம்பிகள் வழியாக பெற்றுக்கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டது.அதற்கான கட்டணத்தை மின்வாரியத்திடம் அளிக்கவேண்டும்.
அது மட்டுமல்ல மத்திய அரசிடம் தொழிற்சாலை முதலாளிகள் வைக்கும் கோரிக்கை என்ன? குறுக்கு மான்யத்தை ரத்து செய்ய வேண்டுமென்பதாகும். அது என்ன குறுக்கு மான்யம். தொழிற்சாலைகள் தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தியில் 38 சதத்தை எடுத்துக்கொள்கின்றார்கள். அதற்கான மினகட்டணம் என்பது வீட்டு மின இணைப்பு மின்கட்டணத்தை விட அதிகம்.
வீடுகளுக்கான மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று 1948 மின்வழங்கல் சட்டம் கூறுகின்றது. இச்சட்டம் டாக்டர். அம்பேத்கார் சட்ட அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. மின்சாரத்தை ஏழை எளிய மக்களும் வாங்குகின்ற விலையில் மின்சார கட்டணம் இருக்கவேண்டும். மின்சாரவாரியம் மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்தால் தான் அது சாத்தியம் என்றார். தற்போது அதற்கு நேர் மாறான நடவடிக்கை உள்ளது.
தொழிற்சாலைகள் ஏன் குறுக்கு மான்யம் அளிக்கவேண்டும்
மின்உற்பத்திக்கு ஆகும் செலவானது மின்கட்டணமாக மாறும்பொழுது அத்தொகையை கொடுத்து ஏழை எளிய மக்களால் வாங்க முடியாது. ஆகவே தொழிற்சாலைகள் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மின்கட்டணத்தின் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. தொழிற்சாலைக்கான மின் கட்டணம் 6.00 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். வீடுகளுக்கான மின்கட்டணம் 1 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் இரண்டின் சராசரி ரூ. 3.50 ஆகும். மின்உற்பத்திக்கான செலவு 3.50 ஆகிறது என்றால் அத்தொகை மின்வாரியத்திற்கு நட்டம் இல்லாமல் கிடைத்துவிடும்.
இந்த தொகையை தொழிற்சாலைகள் ஏன்கொடுக்கவேண்டும் என்று கேள்வி எழும். அதைத்தான் முதலாளிகள் கேட்கின்றார்கள். இதையெல்லாம் சமூகமேம்பாடு மற்றும் சமூக நீதி அடிப்படையில் பார்த்தல் வேண்டும். அத்தகைய குறுக்கு மான்யம் நீக்கப்படவேண்டும் என்று வரைவில் உள்ளது. இதனால் வீடுகளுக்கான மின்கட்டணம் தானாகவே உயருவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.
தொழிற்சாலைகள் எனக்கு மாநில மின்விநியோக கழகத்தின் மின்சாரம் தேவையில்லை என்று முடிவு செய்து தனியாரிடம் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் கூட இந்த குறுக்கு மான்யத்தை தமிழக மின்வாரியத்திற்கு அளிக்கவேண்டும். அது எவ்வளவு என்றால் தற்போது ரூ.1.60 காசு என்பதை தனியார் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் மின் வாரியத்திற்கு அளிக்கப்பட்டு வருவது நின்று போகும். மின்வாரியத்திற்கு வருமானம் குறைந்து விடும்.
இலவசமின்சாரம் விவசாயிகளுக்கு அளிக்கமுடியாது. குடிசைகளுக்கு குறைந்த விலையிலும் வீடுகளுக்கு மான்ய விலையிலும் மின்சாரத்தை வழங்க முடியாது. இதற்கு முன் மின்சாரத்தை விநியோகம் செய்வோருக்கு உரிமம் வழங்கினால் அவரது நிறுவனத்தின் பிராண்டைப் பயன்படுத்தி வேறு ஒரு இடத்தில் விநியோகம் நடக்க உரிமம் தனியே வாங்கவேண்டும். இனி அது தேவையில்லை. மின்சாரத்தை யாருக்கு வேண்டுமானாலும் அந்த நிறுவனத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு விற்கலாம்.
மின்சார விநியோக கழகங்கள் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடவேண்டும். மாநில அரசிற்கு இதில் தலையிடும் அதிகாரம் இருக்காது. செல்போன் இணைப்பு வேண்டுமென்றால் உங்களுக்கு எந்த இணைப்பும் பெற்றுக்கொள்ள சுதந்திரம் உண்டு. அதே நிலை தான் இதற்கும். செல்போன் நிறுவனங்கள் தனியார் வசம் இருந்தபோது வருகின்ற அழைப்புக்கும் கட்டணம் பேசவேண்டிய அழைப்புக்கும் கட்டணம் செலுத்துவதாக இருந்தது. அதை மாற்றியது பிஎஸ்என்எல் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் மின்வியோகத்தில் வேறு மாதிரி. சலுகை பெற்றுக்கொண்டு இருந்த நுகர்வோர்களுக்கு தனியார் நுழைவால் அச்சலுகை பறிக்கப்படும். மக்களின் வரிப்பணத்தில் உருவான மின் தடங்களை, மின்மாற்றிகளை எந்தவித கட்டணமுமின்றி தனியார் பயன்படுத்தி அளவற்ற லாபம் பெறுவர். நுகர்வோர் வழக்கத்திற்கு மாறான வாங்கும் சக்தி இல்லாதவர்கள் மின்சாரத்தை பயன்படுத்தாத நிலை ஏற்படும். டெல்லி மாநிலத்தில் 7800 மெகாவட் மின்உற்பத்தியில் தனியாரின் பங்கு 899 மெகாவட் மட்டுமே. மின் விநியோகம் தனியாரிடம் டாட்டா மற்றும் ரிலையன்ஸிடம் முழுமையாக உள்ளது. மின்கட்டண உயர்வு மக்கள் தாளமுடியாத அளவிற்கு சென்றது நினைவிருக்கும்.
செய்யவேண்டியது என்ன?
ஒழுங்குமுறை ஆணையம் முற்றலுமாக தன்னாட்சி அமைப்பு என்றும் அது எடுக்கப்படும் முடிவுகளில் மாநில அரசு தலையிடக்கூடாது என்ற ஷரத்து நீக்கப்பட்வேண்டும். மின் விநியோக கழகங்கள் ஆண்டு வரவு செலவை முன்வைக்கும் போது வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியை மின்கட்டண உயர்வினால் சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஷரத்து மின்சார சட்டம் 2003 இல் இருந்து நீக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் தனது மாநில நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளில் மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் தலையிடக்கூடாது. மின் விநியோகம் அரசின் மின்விநியோக கழகங்களே செய்யவேண்டும்.
மாநிலங்கள் மின்தேவையை பூர்த்தி செய்துகொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். மின்கட்டண நிர்ணயிப்பில் ஒழுங்குமுறை ஆணையம் தலையிடக்கூடாது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் தனியாருக்கு மத்திய அரசே மின்நிலையங்கள் துவங்க அனுமதி அளிக்க கூடாது. இந்த திருத்தங்களே தற்போது தேவை. தமிழகத்திலுள்ள ஆளும் கட்சி எதிர்கட்சி என்று இல்லாமல் தமிழகத்தின் நலனுக்காக ஒன்று சேர்ந்து நிற்பதே மத்திய அரசு கொண்டு வரும் இந்த வரைவை முறியடிக்கமுடியும்.
-கே.விஜயன்