அ.சீனிவாசனின் காதல் கவிதைகள்
———————————————————-
1. தூக்கம்
இன்றைய நேர்முகத் தேர்விற்காக நேற்றிரவெல்லாம்
உறங்கவில்லை என்கிறாயே,
தேர்வு நடத்தியவன்
இன்றிரவு முதல்
தூங்கவேமாட்டான் என்பதை
அறிவாயோ!
—
2. விழிமொழி
யாமறிந்த மொழிகளிலே
உன் விழிமொழி போல் இயல்பானதெங்கும் காணோம்!
—
3. நகலெடுத்தல்
உனைப் பார்த்த
மாத்திரத்தில்
பார்த்தவர் எவராலும்
கவிதை
எழுதமுடிகிறது.
நகலெடுத்தலில்
என்ன சிரமம்
இருக்கப்போகிறது!!
—
4. தங்க(ள்) கால்கள்
சாஸ்திரப்படி
தங்கத்தில் கால் கொலுசு போடக்கூடாதென்கிறார்கள்,
தங்கக் கால்களுக்குமா!
—
5. புஷ்பா டீச்சர்
மீன்கள் மாமிசபட்சிணி என
புஷ்பா டீச்சர் சொன்ன போது ஒத்துக்கொள்ளவில்லை.
உன் கண்கள்
முழுமையாய் என்னை விழுங்கிய பிறகு தான்
புஷ்பா டீச்சரிடம்
ஒழுங்காய் விலங்கியல் படிக்கவில்லை
எனத் தெரிகிறது.
—
6. கூந்தலும் நீரும்
தலை துவட்டலில்
கடைசியாய்
உன் கூந்தல் நீங்க
உள்ளுக்குள்
ஓடி ஒளிகின்றன
நீர்த்திவலைகள்.
—
7. தனிமை
தனியாகவெல்லாம்
இருந்துவிடுவேன்.
நீ இல்லாமல்
இருப்பேனா தெரியாது.
—
8. வாசம்
உனைப் பிரிய மறுக்கும் ஆடைகள்
ஆறுதலாய்
உன் வாசத்தை அபகரித்துச் செல்கின்றன.
—
9. புதுமை
அணிய அணிய
புதிதாகின்றன
உன்
ஆடைகளும் அணிகலன்களும்.
—
10. மலர்
நீ சூடாத மலர் எனைப் போலவே
சமாதானம் கொள்கின்றது.
அதற்கும்
உன் பார்வை ஒன்றே போதுமாம்!
—
11. கொலுசுகள்
நீ அணிய மறந்த கொலுசுகள்
உனக்கு ஞாபகம் வரவேண்டுமென
மவுனவிரதம் அனுஷ்டிக்கின்றன
என்னுடன்.
—
எழுதியவர் :
✍🏻 – அ.சீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
