Ellaiyilla Inbam Poem By Adhith Sakthivel எல்லையில்லா இன்பம் கவிதை - ஆதித் சக்திவேல்

நாடுகளின் எல்லைகளில்
போராய் வெடிக்கின்றது
எல்லை மீறிய பனிப் போர்
எல்லையோர கிராமங்களில்

எட்டி நிற்க எச்சரிக்கும் மின் வேலி
முட்டி நிற்கும் இரு நாட்டுத் துப்பாக்கிகள்
தினம் தினம்
தீபாவளி கொண்டாடும் வானம்

வெடிச்சத்தத் தாலாட்டுகள்
அன்னையரின் தாலாட்டுக்குப் போட்டியாய்
வேறுபாடு ஏதுமில்லா
பகல் இரவுகள்
சூரிய ஒளி ஒன்றைத் தவிர

வெடிகுண்டுச் சத்தங்களை
விழுங்கிய இரவுகள் விடியும்
சீறிப் பாயும் போர் விமானங்களின்
பேரிரைச்சலுடன்

ராணுவ வண்டிகளால்
புழுதியான சாலைகள்
ஓடி ஒளிந்து உயிர் காக்க
பதுங்குக் குழிகளான காடுகள்
நாற்புறமும் திறந்திருக்கும்
பதுங்கு குழிகள்- அவற்றில்

ஒளியக் கற்றுக் கொண்ட குழந்தைகள்
அக்குழிகளின் இடுக்குகளில்
ஒளிந்து கொண்ட அவரது கல்வி

ஆழப் புதைந்த
தோட்டாவைத் தோண்டி எடுக்கையில்
பீறிட்ட குருதி உறைந்து கிடக்கும்
அக்குழிகளில் தரை எங்கும்

குண்டு துளைத்த காயங்களில்
ரத்தத்துடன் கசியும்
எல்லையோரக் கனவுகள்

வேடிக்கையாய்
பலூன்களைப் பறக்க விட்டு
ஓடி ஆட வேண்டிய குழந்தைகள்
வெடித்த வெடிகுண்டுகளின் மீதங்களை
வீசிப் பிடித்து விளையாடுகின்றன
மரணத்தின் வாசனை நிறைந்த வீதிகளில்

கருவிலிருந்தே வெடிச் சத்தத் தாலாட்டுக்கு
உறங்கி வளர்ந்த குழந்தைகள்
உறங்க மறுத்து அழுகின்றன
அச்சத்தம் கேட்கா இரவுகளில்

பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகள்
பொம்மைகள் ஆகின்றன
எச்சரிக்கைச் சங்கொலிகள்
எல்லையில் ஒலிக்கும் நேரங்களில்
இலக்குத் தவறிப் (?)பாய்ந்த எறிகணைகளால்
கருகி நிற்கும்
ஆலயங்கள்
வீடுகள்
பள்ளிகள்
பிள்ளைகளின் புத்தகங்கள்

வெடிச் சத்தம் கேட்கா நாட்களில் கேட்கும்
பள்ளிகளில் மணிச் சத்தம்
மலைக் குன்றுகளில் ஓடி ஒளிந்து விளையாடும்
மேகங்களின் இடையே
ஓடி ஒளியும் துப்பாக்கி ஏந்திய உருவங்கள்

அணி வகுத்த
ராணுவ வாகன வரிசை கண்டு
மலர பயந்த பூக்கள்
பேசப் பயந்த கிளிகள்
பாடப் பயந்த குயில்கள்
வெளியெங்கும்

பூத்துக் குலுங்கிய பள்ளத்தாக்குகளில்
மலரும் ஓரிரண்டு பூக்களும்
கருகி உதிர்ந்திடும்
வீசும் கந்தகக் காற்றில்

மன்னராட்சி மறைந்தும்
மண்ணாசை மறவா
மக்களாட்சி மன்னர்கள்
அம்மன்னரின் ஆணைக்கு
எல்லையில் போரிடக் காத்திருக்கும்
அவரது படைகள்

கடந்த போர் நிறுத்தத்தில்
பறக்கவிடப்பட்ட அமைதியின் சின்னங்கள்
பிரார்த்திக்கின்றன அமைதி வேண்டி
தூரத்தில்
வான்நோக்கி வளர்ந்த
பைன் மரக் கிளைகளில் அமர்ந்து

அமரவும் முடியாது
பறக்கவும் முடியாது
அந்தரத்தில் மிதக்கும் கிளைகளில்
தொங்கும் பறவைகளாய்
அச்சத்தின் ரேகை நிரம்பிய நாட்களில்
காலமெல்லாம் மக்கள்

எண்ணிப் பார்த்தேன்
இரு நாட்டு எல்லை – வெறும்
நிர்வாக எல்லையானால்……
எல்லை தாண்டியது என் மகிழ்ச்சி

அடையாளம் இழக்கும்
இரு நாட்டு தேசிய நாணயங்கள்
எல்லையோரக் கடைகளில்
இந்நாட்டோர்
அந்நாடு சென்றிடுவர்
தேநீர் அருந்திவர

அந்நாட்டோர்
இந்நாடு வந்திடுவர்
காய்கறி வாங்கிச் செல்ல

அங்காங்கே பூங்காக்கள்
எல்லை நெடுக
இருநாட்டு குழந்தைகள்
சறுக்கி விளையாடிட

பெண் எடுக்கவும் கொடுக்கவும்
தடை இல்லா எல்லையில்
திருமண ஊர்வலங்கள்
இரு திசைகளிலும்

இரு நாட்டுக் கொடிகளும்
அடுத்தடுத்த கம்பங்களில்
ஒருவர் மாற்றி ஒருவர்
ஏற்றி இறக்குவர்

கம்பி வேலி இல்லா எல்லை
துப்பாக்கிக்கு
வேலை இல்லா எல்லை

இன்றோ
ஒவ்வொரு நாட்டிலும்
பாதி நிதி – நிதிநிலை அறிக்கையில்
பாதி நிதி எல்லைக்கும் – அங்கே
அண்டை நாடுகள் தந்திடும் தொல்லைக்கும்
பாராளுமன்றம் பேசும்
பாதி நேரம் எல்லையைப் பற்றியே

இந்நிலை மாறி
என் ஆசை நிறைவேறிடின்
எல்லைகள் இல்லா நாடுகள்
எப்போதும் மகிழுமே
எல்லை இல்லா இன்பத்தில்………

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *