`சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதை’களுக்குப் பிறகு எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பாவண்ணன் எழுதி வெளிவந்திருக்கும் மற்றுமொரு புத்தகம் `எல்லாம் செயல்கூடும்’ என்கிற திருவருட்பாவின் வரியைத் தலைப்பாகக் கொண்டு பதினைந்து காந்திய ஆளுமைகள் குறித்த புத்தகமாகும்.
`தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்பது விவிலிய வாக்கு. அது போல ஆசிரியரும் அதிகம் அறியப்படாத ஆனால் பொதுநலத்தையும், தேச நலனையும் கருத்தில் கொண்டு பல இன்னல்களைச் சந்தித்த காந்தியர்கள் குறித்து அரிய தகவல்களை இந்த நூலில் கொடுத்திருக்கிறார்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குறித்த பதிவில் ஆரம்பிக்கும் இந்த நூல் ஆக்கூர் அனந்தாச்சாரி, கெய்த்தான், ஜெகந்நாதன் (கிருஷ்ணம்மாளின் கணவர்), கதருக்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்த கே. வைத்தியநாதன், பூதான திட்டம் மூலம் மகத்தான சாதனை புரிந்த வினோபா, இந்தியாவின் இரும்பு மனிதர் என அறியப்படுகிற சர்தார் படேல், ஆனந்த தீர்த்தர், இலட்சியத்தின் தூதரும், மொழிபெயர்ப்பாளருமான ஜமதக்னி, அமரத்துவம் நிறைந்த க. அருணாசலம், கோபிச்செட்டிபாளையம் லட்சுமண ஐயர், செயல்வீரர் அரிசன அய்யங்கார் கிருஷ்ணசாமி, அரங்கசாமி நாயக்கர், தொழுநோய் ஒழிப்புக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த டி.என். ஜெகதீசன், கிராம ராஜ்ஜியக் கனவை முன்னெடுத்த கோ. வேங்கடாசலபதி ஆகியோர் குறித்த தகவல்களைக் கொண்ட பொக்கிஷம் இந்த நூல் என்றால் மிகையில்லை.
`அவர் சொன்னார் நான் செய்தேன்’ என்கிற தலைப்பில் விகடனில் வெளியான ஒரு நேர்காணல் இந்நூலாசிரியரைக் கவர, இவரது தேடல் ஆரம்பமானது. இவர் படித்த நேர்காணல், ஒரு காலத்தில் அறுநூறு ஏக்கருக்கும் மேல் சொந்தமாக நிலம் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த கோபிச்செட்டிபாளையம் லட்சுமண ஐயரைப் பற்றியது. தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளிகளைக் கட்டுவதற்கும், அவர்கள் தங்குவதற்கான விடுதிகளைக் கட்டுவதற்கும் இந்த நிலமனைத்தையும் தானமாகக் கொடுத்து சுமார் எழுபது ஆண்டுகாலமாக அதை வெற்றிகரமாக நடத்தி வருவது பற்றியும் அந்த நேர்காணலில் பதிவாகியிருக்க ஆசிரியர் அவர் குறித்த தகவல்களை மேலும் திரட்ட ஆரம்பித்திருக்கிறார்.

இவர்கள் அனைவரும் காந்தியடிகளின் பேச்சை வேதவாக்காகக் கருதிச் செயல்பட்ட ஆளுமைகள். தொண்ணூறு வயதைக் கடந்த நிலையிலும் முதுமையைப் பொருட்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றும் ஊக்கத்துடன் வாழ்ந்து வருகிறார் கிருஷ்ணம்மாள். இவர் அண்ணலை மதுரையில் 1946 ஆம் ஆண்டு சந்திக்க அதன்பின் தன்னை காந்திய இயக்கத்துடன் இணைத்துக் கொண்டார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டோர் பிரிவிலிருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி கிருஷ்ணம்மாள். இவருக்கும் ஜெகந்நாதனுக்கும் செளந்திரம் அம்மாள், கெய்த்தான், குமரப்பா ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. அதற்குப் பிறகு வினோபாவின் பூதான இயக்கத்தில் இணைந்து நான்காண்டுகளுக்கும் மேலாகக் கணவனும் மனைவியுமாகத் தமிழக கிராமங்களில் பாதயாத்திரை செய்து சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலத்தைப் பெற்று அதை அப்போதே மக்களுக்குப் பிரித்தளித்தார்கள்.
1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் மேல்சாதிப் பண்ணையாரும் அவரது அடியாட்களுக்கும் சேர்ந்து சுமார் 44 பேர்களை ஒரு குடிசைக்குள் வைத்து கொளுத்திய சம்பவம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. இதையறிந்த கிருஷ்ணம்மாள், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றெண்ணி முயற்சி மேற்கொண்டார். 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகத் தெரியவந்தது. சம்பவம் நடந்த பின் மூன்றாண்டுக் காலம் அங்கேயே தங்கியிருந்து நிலங்களை வாங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் பெயரில் ஒவ்வொரு ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கினார். இவருடைய சேவை கஜா புயலின் போதும் தொடர்ந்தது. இவருடைய சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து கௌரவித்திருக்கிறது.
கரப்பாடியைச் சேர்ந்தவர் ஜமதக்னி. இவரும் ஆக்கூர் அனந்தாச்சாரியாரும் நண்பர்கள். 1857 ஆம் ஆண்டு கிழக்கிந்திய ராணுவத்துக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் நடந்த மோதலைக் கட்டுப்படுத்த நீல் என்கிற ஆங்கில அதிகாரி நியமிக்கப்பட அவர் மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்ததை கௌரவிக்கும் வகையில் அவருக்குச் சென்னையில் ஸ்பென்சர் அருகில் ஒரு சிலை வைக்கப்பட்டது. தேசிய விடுதலைப் போராட்டம் பெரிய அளவில் நாடெங்கும் பரவியபோது அந்தச் சிலையை அவமானச் சின்னமாக மக்கள் கருத அதை அப்புறப்படுத்தும் போராட்டத்தில் இறங்கியவர்களில் ஒருவர் ஜமதக்னி. அதன்பின் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைச்சாலையில் பல கொடுமைகளையும் அதனால் ஏற்பட்ட நோய்களையும் துச்சமென மதித்து தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சிறையிலிருந்தபோது அவருடன் சக கைதியாக இருந்த டி.எஸ்.எஸ். ராஜன், சிங்கார வேலர் இருவரோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதனால் காந்தியச் சிந்தனையையும், பொதுவுடைமைச் சிந்தனையையும் ஆழமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தாலும் எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கார்ல் மார்க்ஸ், லெனின் நூல்களை முறையாகப் படித்து ’மார்க்சியம்”, `நீ ஏன் சோஷலிஸ்ட் ஆக வேண்டும்’, `இந்தியாவில் சோஷலிசம்’ என்கிற புத்தகங்களை வெளியிட்டார். `தாஸ் கேப்பிடல்’ புத்தகத்தை `மூலதனம்’ என்னும் பெயரில் மூன்று பெரும் தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் கொடியேற்றும் விழாவில் கலந்து கொண்டார்.
காந்தியடிகளின் பதினெட்டு நிர்மாணப் பணிகளில் முக்கியமானது தொழுநோய் ஒழிப்பும் ஒன்றாகும். பட்டப்படிப்பு முடித்து வேலையில் சேர்ந்தபோது ஜெகதீசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டு டாக்டர் கோச்சரனின் தொடர் மருத்துவத்தின் விளைவாக அதிலிருந்து மீண்டார். அதன்பின் அண்ணாமலைப்பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிவரும்போது சீனிவாச சாஸ்திரியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சமஸ்கிருத அறிஞரான பர்ச்சூர் சாஸ்திரி என்பவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட போது அனைவரின் எதிர்ப்பையும் மீறி காந்தியடிகள் அவரை ஆசிரமத்தில் தங்க வைத்து அவருக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்திய நிகழ்ச்சியைக் கேட்ட ஜெகதீசன் தன்னை அந்நோய் ஒழிப்புக்கான சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் இவருடைய சேவையைப் பாராட்டி 1957 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இவர் எழுதிய தன்வரலாற்று நூலான `Fulfilment through leprosy’ ஓர் ஆவணமாகும்.
கெய்த்தான், இவர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் காந்தியடிகள் `யங் இந்தியா’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டு 1925ஆம் ஆண்டு மானாமதுரைக்கு அருட்பணியாளராக வந்து சேர்ந்து தன்னைப் பொதுநல சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். இவர் தமிழகத்தின் பல இடங்களில் ஆசிரமம் அமைத்து பொதுநல சேவை செய்து வந்தார். இவருடைய சேவையைப் பாராட்டி சிகாகோ பல்கலையும், காந்திகிராமப் பல்கலையும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தன. 1973 ஆம் ஆண்டு தன் ஈடுபாடுகள் குறித்தும், சேவைகளைப் பற்றியும் விரிவான அளவில் Pilgrimage in India என்னும் தலைப்பில் அவருடைய தன் வரலாற்று நூல் வெளியானது. 1984 ஆம் ஆண்டு மறைந்த இவரின் உடல் அவர் பணியாற்றிய ஒட்டன்சத்திரம் கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

`ஜெய் ஜகத்’ என்பது வினோபா வழங்கிய மகத்தான சொல். 1951 ஆம் ஆண்டு தொடங்கி 1957ஆம் ஆண்டு வரை தொடர்ந்த அவர் நடைப்பயணத்தில் சுமார் நாற்பது மில்லியன் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று நிலமற்ற தாழ்த்தப்பட்டோருக்கும் எளியோருக்கும் வழங்கப்பட்டது. இது வேறெங்கும் நிகழாத மகத்தான சாதனையாகும்.
இப்படியாக, மகாத்மாவின் சொல்லாலும் செயலாலும் ஈர்க்கப்பட்டு நாட்டுக்காக சேவை புரிந்த எண்ணற்றவர்களில் 29 பேர் பற்றிய தகவல்களை இந்நூலாசிரியர் இரண்டு புத்தகங்களின் வாயிலாக ஆவணப்படுத்தியிருக்கிறார். இன்னும் பலர் இருக்கக்கூடும் அவர்களைப் பற்றிய செய்திகளையும் ஆசிரியர் ஆவணப்படுத்த வேண்டும். இது அவர் இன்றைய இளைய தலைமுறையினருக்குச் செய்யும் பெறும் பேறு என்றால் மிகையில்லை.
காந்தியர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு வழங்கிய பரிசுகளையும், நிலங்களையும் கூட பொதுச் சேவைக்காகத் திருப்பிக் கொடுத்த மாபெரும் ஆளுமைகளுடன் ஒப்பிடும்போது சந்தர்ப்பம் கிடைத்தால் ஏழு தலைமுறைக்குச் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகள் கால் தூசுக்குக் சமானம் ஆகமாட்டார்கள்.
”என்னுடைய வாழ்க்கையே மக்களுக்கு நான் விட்டுச் செல்லும் செய்தி’ என்று கூறிய மாமனிதர் மகாத்மா காந்தி. அவரோடு நெருங்கிப் பழகி அவரது நிர்மாணப்பணிகளிலும் தேசத்துக்கான விடுதலைப் போராட்டத்திலும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து சேவை செய்த ஆளுமைகள் குறித்த இந்தப் புத்தகம் மாணவர்கள் பதிப்பாகவும் வெளியிடப்பட்டு அவர்களைப் பெருமளவில் சென்று சேர வேண்டும்.
புத்தகம்: எல்லாம் செயல்கூடும் – காந்திய ஆளுமைகளின் கதைகள்
ஆசிரியர்: பாவண்ணன்
பதிப்பகம்: சந்தியா
விலை ரூ 200

