இந்தக் கவிதையை
ஒருவன் சொல்லச் சொல்ல
நான் எழுதியிருக்கிறேன்
அவன் யாரென்று சொல்வதற்கு
எனக்கு அனுமதியில்லை
அவன் மிகவும் வெறுப்புற்றவனாகவும்
அவனை நேசிப்பதற்கு இந்த தேசத்தில்
யாருமே இல்லாதது மாதிரியும்
எரிமலையின் கண்களால் என்னைப் பார்த்தான்
என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தான்
என்னை ஒரு புழுவைப் போலவும்
அருவெறுப்பின் மையத்தில்
ஒரு சக்கர நாற்காலியில் அமர்த்தியிருந்தான்.
சுயமைதுனம் செய்துகொள்வதைவிட
ஒரு நல்ல காரியத்தை
அவன் செய்ய விரும்பியதால்
இந்தக் கவிதையைச்
சொல்லச் சொல்ல என்னை எழுத வைத்தானாம்.
அவன் ஒரு ஆபத்தானவன் என்று கருதிய அடுத்த க்ஷணம்
மிகவும் மென்மையான சொற்களால் வருடினான்.
“எல்லோருமே ஒரு பைத்தியக்கார விடுதியில்
ஆனந்தமாக வசிக்கிறோமாம்“
திரும்பத் திரும்பத் தெத்துப்பல்லில் சிக்கிக் கொண்டது
அவனது திமிர் பிடித்த நாக்கு!
சிறைச்சாலைகளில் இருப்பவர்களைப் பற்றி
கொஞ்சமேனும் கவலையிருக்கிறதா என்று
ஓங்கிக் கத்தினான்.
யார் என்று கேட்பதற்கு எனக்குத் துணிச்சலில்லை
ஒரு மத்தியதர கௌரவஸ்தனுக்கு
இது பற்றியெல்லாம் யோசிக்க நேரமுமில்லை.
பன்றிகளை அடைத்துவைக்க
ஒரு சேற்றுக் குட்டை போதுமல்லவா
வேறென்ன உங்களுக்கெல்லாம் வேண்டும்
புரளுங்கள் புரளுங்கள் என்றுவிட்டு
அலட்சியமாகச் சிரிக்க ஆரம்பித்தபோதுதான்
இந்தக் கவிதையை எனக்கு
‘டிக்டேட்’ செய்ய ஆரம்பித்தான்.
“இந்தியா தன் புத்திரர்களைக் கொல்கிறது” என்று
அவன் திரும்பத் திரும்பச் சொன்னதை
நான் எடிட் செய்துவிட்டேன்.
ஆஃப்ரிக்கா தன் சூரியனைக் கொல்கிறது என்று
ஏற்கெனவே “கென் சரோ விவா”
ஒரு கதையை எழுதியிருப்பதாக
அவனிடம் காரணம் சொன்னேன்.
இந்தியாவில் யாராவது எழுதியிருந்தால் நீ பேசு
என்று கத்திவிட்டுத்
திடீரென்று மறைந்துவிட்டான்.
–நா.வே.அருள்
31.03.2023
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.