பா.திருமலை எழுதிய எல்லோரும் நலமே (Ellorum Nalame) - நூல் அறிமுகம் -அனைத்து நூலகங்களிலும் அனைவரது கரங்களிலும் தவழ வேண்டிய நூல் - https://bookday.in/

எல்லோரும் நலமே – நூல் அறிமுகம்

எல்லோரும் நலமே – நூல் அறிமுகம்

அனைத்து நூலகங்களிலும் அனைவரது கரங்களிலும் தவழ வேண்டிய நூல்…

எல்லோரும் நலமே..? இந்நூலில் நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் பா. திருமலை. காந்திய சிந்தனை, பெரியார் சிந்தனை மற்றும் மார்க்சிய சிந்தனை ஆகியவற்றில் பட்டய படிப்பு பெற்றவர். வழக்கறிஞர் ஆவார். 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய பெரும் அனுபவம் கொண்டவர். எழுத்தினை முழு நேராக பணியாக செய்து வருபவர்.

இவரது நூல்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எல்லோரும் நலமே.. ? எனும் நூல் இவரது 60 வது படைப்பாகும்.

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், குடும்பம், உணவு , சமூகம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய ஏழு தலைப்புகளில் 32 சமூகம் சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் இந்த மண்ணையும் இந்த மக்களையும் நாம் மேலும் மேலும் நேசிக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது என்று வலியுறுத்தும் விதமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விரிவாக அலசுகிறது இந்த நூல்.

குழந்தைகள் படித்தால் தான் முன்னேற முடியும் என்பதை வலியுறுத்த பெற்றோர்களால் அவர்களுக்கு கொடுக்கப்படும் மறைமுக அச்சுறுத்தலையும் எதிலும் தலையிடாமல் நடந்து கொள் என்று கூறுவதன் மூலம் குழந்தைகளுக்கு இடையே ஏற்படுத்தப்படும் சமூக அக்கறையின்மை பற்றியும் அலசுகிறது. தொலைந்து போன கூட்டுக் குடும்பம் முறை, கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள இடைவெளி, தொழில்நுட்ப சாதனங்களினாலும் ஏற்படும் தீங்கு ஆகியவற்றையும் பட்டியலிட்டதோடு பெற்றோர் குழந்தை உறவு வலுப்பட என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி உலகம் முழுவதிலும் உள்ள திருமணமான பெண்களில் 52 சதவீதம் மட்டுமே தங்கள் சொந்த முடிவுகளைத் தாங்களாக எடுக்க முடிகிறது. பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் விதமாக பல சட்டங்கள் இயற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை.b பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றுப்புள்ளி வைக்காமல் நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்ற முடியாது என்பதை மிக ஆழமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பெண்களின் ஆரோக்கியத்தை வளர்ப்பதும் பாதுகாப்பதும் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தின் அடித்தளமாகும். ஏனெனில் பெண்களின் ஆரோக்கியம் என்பது ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் சமூகத்தின் ஆரோக்கியம் ஆகும். இதற்கு பெண்களுக்கு தேவைப்படும் மூன்று உதாரணங்களான, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவை தேவை என்பதையும் அருமையாக பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு தனி மனிதனும் முன்னேறினால் தான் ஒரு குடும்பம் முன்னேறும். ஒரு சமூகம் முன்னேற குடும்பங்களின் முன்னேற்றம் அவசியம். குடும்பங்களின் நலனில் அக்கறை காட்டி அதற்கான வழிமுறைகளை செய்தோமானால் அதைச் சார்ந்த சமூகம் முன்னேற்ற முடியும். சங்க காலத்தில் குடும்பத்திற்கு ஒரு பெண்ணே தலைமை ஏற்று இருந்தார் என்பது வரலாறு. வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல வாழ வைப்பதும் தான் என்பதை குடும்பம் தான் சொல்லித் தரும்.
அது போன்று நமது மனநலத்தை பாதுகாக்க விடில் ஏற்படும் அபாயங்களை தெளிவாக பதிவு செய்துள்ளார். நம்மை நாமே நேசித்தல், நம்பிக்கைக்கு உரியவர்களின் நட்பு, ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை தான் நமது மனநலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று மிக தெளிவாக பதிவு செய்துள்ளார்.

ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும் என்று கூறுகின்ற அதே வேளையில் அத்தகைய உணவு கிடைப்பதில் உள்ள சிக்கல்களை பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். இதுபோன்று ஆரோக்கியமான உணவு தேவையை கூறும் அதே வேளையில் துரித மற்றும் பேக்கிங் உணவுகளின் தீமையையும் மிக அருமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர். குறிப்பாக துரித உணவில் சேர்க்கப்படும் சுவை ஊட்டிகள், பதப்படுத்திகள், நிறமிகள் ஆகியவற்றின் மூலம் நமது உடல் நலனுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் பதிவிட்டதோடு விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம் என்பதையும் குறிப்பிடுகிறார்.

ஆரோக்கியமானதாக இருந்தால் தான் நாம் உழைப்பதற்கு உண்பதற்கும் உயிருடன் ஆரோக்கியமாக இருக்க முடியும். நல்ல உணவு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்றும் வழி காட்டுகிறார். நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் விரும்பி கேட்கும் உணவு பீட்சா, பர்கர், பிரைடு ரைஸ் போன்றவை தான். இதில் உள்ள தீமைகளை நாம் அவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி ஆசிரியர், குழந்தைகளுக்கான உணவுப் பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக மேற்கொள்ள வேண்டிய முயற்சி பற்றியும் அதுபோன்று பெற்றோர்களுக்கு உரிய அறிவுரைகள் குறித்தும் நூலில் மிகச் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

16 வகையான பாரம்பரிய விளையாட்டுகள் பற்றியும் அவற்றை விளையாடுவதன் விளைவாக பெறும் பயன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பள்ளி ஆசிரியர் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தருவதன் மூலம் குழந்தைகளின் உடல்நலம், மனநலம், சிந்தனை, பண்பாடு, வாழ்வியல், விடாமுயற்சி என்று அத்தனையும் மேம்படுத்த கூடியதாக அமையும் என்பதை மிகுந்த நம்பிக்கையோடு பதிவு செய்துள்ளார்.

இன்றைக்கு சமூகத்தில் கலப்படம் என்பது ஒரு பெரும் நோயாக வளர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. கலப்படத்தை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை எனில் கலப்படம் ஒரு புற்றுநோயாக சமுதாயத்தில் உருவெடுக்கும் என்பதையும் எச்சரிக்கை மணியோடு பதிவு செய்கிறார் நூலாசிரியர்.b அதே போன்று அதிகமாக பேசப்படும் போதைப்பொருள் பற்றியும் அதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் பதிவிட தவறவில்லை நூலாசிரியர்.

இதுபோன்று இன்றைய சமூகத்தில் காலநிலை மாற்றம் குறித்தும் மிகுந்த கவலையோடு பார்க்க வேண்டியது உள்ளது. கால நிலை மாற்றத்தால் நாம் பல நெருக்கடிகளை சந்தித்து கொண்டுள்ளோம். குறிப்பாக சராசரியான வெப்பநிலை உயர்ந்துவிட்டது. பெரும் புயல்களை சந்திக்கிறோம். மிக அதிக மழைப்பொழிவை சந்திக்கிறோம். இவையெல்லாம் காலம் மாற்றத்தின் எதிர்ரொலியாகும். அது போன்று பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை குறைத்தல், காடுகளை பாதுகாத்தல், தூய்மையான உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை மிகவும் அவசியம் என்பது புள்ளி விவரங்களோடு கூடிய தகவல்களை நமக்கு வழங்கியுள்ளார் நூலாசிரியர். காலநிலை மாற்றம் பற்றி பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை. நமது செயல் முறைகள் தான் நம்மை காப்பாற்றும் என்பது நிதர்சனமான உண்மை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசு உட்பட நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது என்பதையும் வலியுறுத்துகிறார்.
ஒவ்வொரு மனிதனும் சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கத் தொடங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் நாம் நம் இருப்பை உறுதி செய்ய முடியும்.

இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு கட்டுரை மிகவும் ஆழமாக பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட தகவல் பெட்டகமாகத்தான் இருக்கிறது.

எல்லோரும் நலமே..? நூலானது அனைத்து பள்ளிகளும் அனைத்து நூலகங்களிலும் அனைத்து கல்லூரிகளிலும் இடம் பெற வேண்டிய ஒரு அற்புதமான நூலாகும் இந்த நூலினை அனைத்து தரப்பு மக்களும் வாசிக்க வேண்டும். இந்நூலினை வாசிப்பதின் மூலம் சமூக மாற்றத்திற்கான வாய்ப்புகளை பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நூலின் தகவல்கள் : 

நூல் : “எல்லோரும் நலமே..?”
நூலாசிரியர்: பா. திருமலை
பக்கங்கள் :  216
விலை : ரூபாய் 200/-
வெளியீடு : மண், மக்கள், மனிதம் வெளியீடு,மதுரை – 625016.
தொடர்பு எண்: 9865628989

நூல் அறிமுகம் எழுதியவர் :

MJ. பிரபாகர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *