நூல் : ஏலோ… லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை :₹ 360
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018,
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும் : thamizhbook.com
பணி ஓய்வு பெற்ற அரசு கல்லூரி நூலகர் ஜனநேசனின் இயற்பெயர் இரா.வீரராகவன். நான்கு குறுநாவல்கள், ஏராளமான சிறுகதைகளை ஏற்கனவே எழுதியுள்ள ஜனநேசன் ‘ஏலோ***லம்’ எனும் தன்னுடைய முதல் நாவலை தற்போது எழுதியுள்ளார். தான் மேற்கொண்ட கள அனுபவங்களின் அடிப்படையில் ரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைகள் நிறைந்த மலைப் பிரதேசத்தில் உள்ள ஏலத் தோட்டங்களில் உடலை வதைக்கும் குளிரில் குடிசை வீடுகளுக்குள் ஒதுங்கி உழைக்கின்ற விவசாயக் கூலிகள் படும்பாட்டை எழுதியுள்ளார்.
பல நாவல்களிலும் மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்கள் பதிவாகி உள்ளதை அறிவோம். மலேசியாவிற்கு 1950களில் பஞ்சம் பிழைக்கப்போன தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் அனுபவித்த சொல்லொண்ணாத் துயரங்களை ‘பால்மரக் காட்டினிலே’ என்ற நாவலில் அகிலன் சித்தரித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்ட மலைவாழ் மக்கள் படும் அவதிகளை ‘மனிதர்கள் விழித்திடும் போது’ எனும் நாவலில் கோதாவரி பாருலேக்கர் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். கொல்லிமலைப் பகுதியில் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட அவலங்களை, அந்த மக்கள் சங்கமாகத் திரண்டு மீண்டெழுந்ததைப் பற்றி ‘சங்கம்’ நாவலில் கு.சின்னப்ப பாரதி சித்தரித்துள்ளார். பஞ்சம் பிழைப்பதற்காக நெல்லை மாவட்டத்திலிருந்து வால்பாறை தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்றவர்கள் அனுபவித்த சோகங்களை ‘எரியும் பனிக்காடு’ நாவலில் பி.எச்.டேனியல் விவரித்துள்ளார்.
இந்த வரிசையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வட்டப்பாறை எனும் மலைப்பிரதேசத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு வேலை தேடிச் சென்று சீரழிந்த ஏழை மக்களின் துயரமிகு வாழ்வை ஜனநேசன் தன்னுடைய ‘ஏலோ…லம்’ நாவல் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார். இரண்டு பாகங்களாக விரிந்து செல்லும் இந்த நாவலின் முதல் பாகம் ரவி எனும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தன்னுடைய கடின உழைப்பு, விடாமுயற்சியால் படித்து சப் கலெக்டர் ஆகி வாழ்வில் வெற்றி பெற்ற அதே ரவியின் பார்வையிலேயே நாவலின் இரண்டாம் பாகம் விரிகிறது. நாவல் வழியாக கம்பம் பள்ளத்தாக்கின் அறுபதாண்டு கால சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை ஜனநேசன் நேர்மையுடன் நேர்த்தியாகச் சித்தரித்திருக்கிறார்.
ஏலத் தோட்டத்துக்கு எப்போதாவது மட்டும் வந்து போகும் முதலாளி கிருஷ்ண ராஜா, போடி நகரத்திலிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வருகின்ற அதன் மேனேஜர் வைரம் செட்டியார், தோட்டத்திலேயே தங்கியிருந்து மேற்பார்வை செய்து வரும் சங்கிலி கிழவர், கணக்குப்பிள்ளை துரைச்சாமி இவர்களின் கீழ் வேலை செய்யும் பழனிச்சாமி கவுண்டர், பரமன், சின்னாத்தேவர், சீனி மாதாரி, இராமர் ஆகிய கங்காணிகள் என்ற அதிகார வரிசையின் கீழ் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பஞ்சம் பிழைக்க வந்த ஏழை மக்கள் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். ஏலம் எனும் பணப் பயிர் விளைந்து பெருகுகிறது. அந்த முதலாளி மேலும் மேலும் நிலங்களை வாங்கிக் குவிக்கிறார். ஆயினும் பணப் பயிர் விளையப் பாடுபடுகின்ற விவசாயக் கூலிகளின் வாழ்வில் மட்டும் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. மலைக்கு எப்படி வந்து சேர்ந்தனரோ அதே நிலையிலேயே அந்த மக்கள் நாவலின் முடிவில் தங்கள் இடத்திற்குத் திரும்புகின்றனர். “காடு விளைஞ்சென்ன மச்சான்? நமக்கு கையும், காலுந்தான மிச்சம்” எனும் பட்டுக்கோட்டையின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன.
தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும் என்பதற்கிணங்க சிஐடியு சங்கம் இவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறது. கிருஷ்ணன் குட்டி, மாதவன் நாயர் என்ற இரண்டு தன்னலமற்ற தொழிற்சங்கத் தலைவர்களின் வழிகாட்டுதலில் தொழிலாளர்களின் நிலைமைகளில் நல்ல மாற்றங்கள் வருகின்றன. வட்டப்பாறை தோட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகம். குரங்குகளை விரட்டுவதற்கென்றே ரெங்கசாமி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் குரங்கால் தாக்கப்படுகின்ற மாரியம்மாள் என்ற பெண் மலைச் சரிவில் விழுந்து பலத்த காயமடைகிறாள். மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்து விடுகிறாள். மாரியம்மாளின் இறப்பிற்கு நிர்வாகம் தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. தொழிலாளிகளை அடக்கி வைப்பதற்காக போலீஸ் தேடுகின்ற குற்றவாளியான பாண்டியன் தலைமையில் ரௌடி கும்பல் ஒன்றை எஸ்டேட்டில் தங்க வைக்கிறார் முதலாளி. ரௌடிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சிஐடியு சங்கத்தின் துணைகொண்டு இப்பிரச்சனையையும் முறியடித்து வெற்றி பெறுகிறார்கள்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று கோரிக்கைப் பட்டியலை அளிப்பது என்று முடிவாகிறது. தொழிற்சங்கத்தின் நெருக்கடி நாளுக்கு நாள் கூடுவதாக நிர்வாகம் நினைக்கிறது. தொழிலாளிகளின் பேரணியை ரௌடிகளை வைத்து தாக்குவது என்று இடுக்கி பகுதியிலிருந்த அனைத்து தோட்ட முதலாளிகளும் ஒன்றுகூடிப் பேசி முடிவெடுக்கின்றனர். முதலாளிகளின் கூலிப்படையினர் தாக்குதலில் பெண் தொழிலாளி ஒருவர் இறந்து விடுகிறார். நிர்வாகத்தின் வன்முறை வெறியாட்டம் மாவட்ட நிர்வாகத்தைக் கோபமடையச் செய்கிறது. ஆட்சித் தலைவர் முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. நேர்மையான ஆட்சித் தலைவரின் நியாயமான தீர்ப்பில் தொழிலாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன. நிர்வாகம் பழிவாங்கிடத் துடிக்கிறது. முதலாளி திடீரென்று ஒரு நாள் இருநூறு ரூபாய் பணமும், நீண்ட விடுமுறையும் கொடுத்து ஊருக்கு அவர்களை அனுப்பி வைக்கிறார். முதலாளியின் சூழ்ச்சியை அறியாத தொழிலாளர்கள் வேலையிழந்து மீண்டும் பழைய வாழ்விற்கே திரும்புகின்றனர். வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. அனைவரும் மறுவாழ்வு பெறுகின்றனர். அவர்களில் சிறுவன் ரவி பெரும் வெற்றி அலாதியானது. சப் கலெக்டராகப் பணிபுரிந்த அவன் தான் பிறந்து வளர்ந்த கம்பம் பள்ளத்தாக்கிற்கே பணி ஓய்வுக்குப் பிறகு திரும்புகின்றான்.
இரண்டாவதொரு நாவலைப் போலவே தனித்து விளங்குகின்ற நாவலின் இரண்டாவது பாகம் இந்திய அரசியலில் 2014க்குப் பின் நடந்துள்ள கொடூர மாற்றங்களைச் சித்தரிக்கிறது. குறிப்பாக மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எவ்வாறு சீரழித்தது என்பதை நாவல் நன்கு விளக்குகிறது. நாவலின் நாயகன் ரவி மௌன சாட்சியாய் இருந்திட மனமின்றி இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிடும் வகையில் அரசியல் இயக்கங்களில் கலந்து கொள்கிறார். ஏழை மக்களுக்கு குறிப்பாக தன்னுடைய பால்ய காலத்தில் வட்டப்பாறையில் உடன் உழைத்த மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்து ரவி காலத்தைக் கழிப்பதாக நாவல் முடிகிறது.
நாவலின் வெற்றிக்கு ஜனநேசனின் கள அனுபவங்களே துணை நிற்கின்றன. சமீப காலங்களில் ’டாக்குமன்றி’ நாவல் என்று அழைக்கப்படும் நாவல்களில் ஒன்றாக ’ஏலோ…லம்’ நாவலை வகைப்படுத்த முடிகிறது. தமிழும், மலையாளமும் கலந்த இனிமையான மொழி தமிழ்நாடு-கேரளா எல்லையோரப் பகுதிகளில் வழக்கில் இருப்பதை அறிவோம். நாவலாசிரியர் ஜனநேசனுக்கு எளிதில்கைவந்துள்ள அம்மொழியில் ஏலக்காய் விவசாயம் குறித்த பல நுட்பமான விஷயங்களை அவர் சொல்லிச் செல்கிறார்.
நாவலில் காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி சங்கம் தான் வட்டப்பாறை எஸ்டேட் தொழிலாளிகளை முதலில் சங்கமாக ஒருங்கிணைக்கிறது. இவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாத போது தங்கள் பதாகையின் கீழ் வந்தடைந்த தொழிலாளிகளை அவர்களே மனமுவந்து சிஐடியுவிடம் அனுப்பி வைப்பது தொழிற்சங்க வரலாற்றில் கண்டிராத அதிசயமாகும். மேலும் கங்காணிகள் பொதுவாக எஸ்டேட்டுகளில் நிர்வாகத்திற்குச் சாதகமாக இருந்து தொழிலாளிகளைக் கொடுமைப்படுத்துவார்கள். ஆனால் இந்நாவலில் வர்க்க அணி வரிசையில் தங்களின் இடம் தொழிலாளிகளின் பக்கம் என்பதை உணர்ந்தவர்களாக கங்காணிகள் இருப்பதும் ஓர் அதிசயமே. தோட்டத் தொழிலாளிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளையும் கங்காணிகள் வகித்து வருகிறார்கள். பெண்கள் சார்பாக சிவனம்மா, பொன்னுத்தாயி, வெள்ளைத்தாயி ஆகியோர் சங்கப் பொறுப்புகளில் இணைந்திருந்து மிகவும் திறமையுடன் செயல்படுகிறார்கள். தொழிற்சங்க நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்து வளரும் சிறுவன் ரவி இளமையிலேயே வர்க்க அரசியலின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறான். அதனாலேயே உயரதிகாரியாக ஆன பிறகும் இடதுசாரி அரசியலை அவனால் இறுகப் பற்றிக் கொள்ள முடிகிறது. தன்னுடைய நீண்ட தொழிற்சங்க அனுபவத்தில் இருந்து தொழிலாளிகளின் போராட்ட நடவடிக்கைகளை எழுதியுள்ள ஜனநேசன் மேலும் இதுபோன்ற காத்திரமான நாவல்களைப் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
– பெ.விஜயகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஏலோலம் நாவலுக்கு தக்கதோர் மதிப்பீடு செய்த பேரா.பெ.விஜயகுமார் அவர்களுக்கும் புக்டே இணையதள நிர்வாகத்தாருக்கு மிக்க நன்றி.
ஜனநேசன் கள் அனுபவங்களை வைத்து நாவல்.. சிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். அவருக்கும் பேரா. விஜயமாருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்
கே.ராஜு