எலும்பில்லாத கறி
சிவராத்திரி முடிந்து
இரண்டு வாரம் தாண்டி
மறுபூசை நடக்கும்.
முழு ஆடும் பங்காளிகளுக்கு மட்டும்
வெளிஅழைப்பு கூடாதென்பதில்
அப்பத்தா கடுமை காட்டுவாள் எப்போதும்.
பரம திருப்தி அப்பு
கட்டுக்குலையாம இருக்கணும்
என்று சாமியாடி
திருநீறு கொடுத்துப் பானகம் குடித்ததும்
இலை போடுவார்கள்
குழந்தைகளுக்கென்று தனிவரிசை
ராத்திரி ஒரு மணிக்கு
சாப்பிடுகிறார்களா சாமியாடுகிறார்களா
என்று தெரியாது.
பரிமாற வரும் அக்காள்
தங்கை குழந்தைகளுக்கு எச்சுக் கறியை
வைக்காதது போல வைத்துச் செல்வாள்.
தங்கச்சி பரிமாற வரும்போது
அக்காள் குழந்தைகளுக்கு
எலும்பில்லாத கறி அதிகமாய்
வைப்பாள்.
வீட்ல திங்க வழி இல்லாததுக
இதுக மூணும்
என்று சொல்லி
கடும் சைவக்காரி பெற்ற மூவருக்கும்
ஆளாளுக்கு கறித்துண்டுகளைப் போட்டுக்
கொண்டேயிருப்பார்கள்.
தனியேபொறுக்கி வைத்த ஈரல் துண்டுகள்
எல்லாக்குழந்தையின் இலையிலும் இருக்கிறதா என்று
கண்ணைச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும்
அப்பத்தா பக்கத்திலிருந்து
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருக்கும் கருப்பராயன்
அப்பத்தாவைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருப்பார்.
— மஞ்சுளாதேவி