எழுத்தின் பிறப்பு
அறிவியலாற்றுப்படை
பாகம் 15
முனைவர் என்.மாதவன்
மனிதனை வாசித்தல் முழுமையாக்குகிறது. மாநாடுகள் தயாரானவனாக மாற்றுகிறது. எழுதுதலோ மிகச்சரியானவனாக்குகிறது என்பார் அறிஞர் பிரான்சிஸ் பேகன். மொழியின் வரலாற்றில் பேசுதலே முதலில் வந்தது. பேசுதலிலும் சைகைகளுக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் ஆகப்பெரிய பங்கிருந்தது என்றும் பார்த்தோம். ஆனால் எழுதுதல் எப்படி உருவாகியிருக்கும் என்ற எண்ணங்களோடும் சில அனுமானங்கள் தோன்றுகின்றன. பொதுவாக எழுதுதலுக்கு அடிப்படையாக அமைந்தவை ஆதிமனிதர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் பாறைகளில் வரைந்துவைத்த ஓவியங்களே. தற்செயலாக பாறைகளோடு பாறைகள் உரசியபோது ஏற்பட்ட கிறுக்கல்களே முறைப்படியாக வரைதல்களுக்கு இட்டுச் சென்றிருக்க முடியும். தாங்கள் கண்களால் கண்ட சூரியன், கால்நடைகள் போன்றவற்றின் உருவங்களை வரைந்து மகிழ்ந்திருப்பர். கால்நடைகளின் உருவங்களையொட்டியே ஆங்கில எழுத்துக்களின் அகர முதலிகள் உருவாகியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகில் நிலவிய பல்வேறு புவியியல் சூழல்களுக்கேற்ப அங்கு நிலவிய பொருட்களுக்கான பெயர்கள் மனிதர்களால் இடப்பட்டன. சாதாரணமாக பனிக்கட்டி என்று சொல்கிறோம். இந்த பனிக்கட்டியின் பல்வேறு வகைகள் காணப்படும் துருவப் பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெயர்கள் பனிக்கட்டியின் தன்மைக்கேற்ப உள்ளதாம். அந்த வகையில் மனிதர்கள் பொருட்களுக்கு பெயர் வைப்பதில் நுணுக்கங்களை மேற்கொண்டிருக்கின்றனர். நமது தமிழில் கூட யானைகளுக்கு பல்வேறு பெயர்கள் வழங்கப்படுவதைக் கவனிக்கலாம்.
ஆனால் எழுத்து எழுதுதலுக்கான வரலாறு என்பது ஆட்சியாளர்க்ளோடு தொடர்புடையதாகவே வளர்ந்திருக்கும் என அறிஞர்கள் கணித்திருக்கின்றனர். ஓரிடத்தில் குடியிருக்கத் தொடங்கியவுடன் மனிதர்களிடம் மாடு, தானியங்கள் போன்ற பொருட்கள் அதிகப்படியான அளவில் சேகரமாகத் தொடங்கியது. இவ்வாறு சேகரமானவற்றைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் தேவையாகி இருந்தது. பகலில் வெளிச்சமான நேரத்தில் பாதுகாப்புக்கு பெரும்பாலும் பிரச்சனைகள் இருந்திருக்காது. இரவில் தூக்கம் மனிதர்களின் இயல்பான பிறகு மக்களில் சிலர் விழித்திருந்து காவல் காக்கவேண்டிய தேவை உண்டாகியிருக்கும். முதல் முதலாக இரவுக்காப்பாளர் வேலைதான் அரசுவேலையோ என்னவோ யார் கண்டது?
அதுபோலவே குழுவாக வாழ்ந்த காலங்களிலும் ஒரு குழுவை தனிமனிதனாக யாரும் தாக்கியிருக்க இயலாது. அந்த நாட்களில் சண்டைகளுக்கு முன்னால் செல்வ வளங்களைக் கவர்ந்துசெல்லும் ”ஆநிரை கவர்தல்” என்ற கலாச்சாரமே போரின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தமிழ்மொழியின் திணைவகைகளில் நொச்சித் திணை, வாகைத்திணை என்றெல்லாம் பேசப்படுவது இதன் மிச்சம் சொச்சம்தான்.
இவ்வாறு ஆநிரை கவர்தல் என்று அழகாகச் சொல்லும் மாடுபிடித்துச் செல்லுதல் ஒருவகை செல்வ அபகரிப்பு முயற்சிதான். ஒருவகையில் டீசண்ட் ரவுடியிசம். இவர்கள் கும்பலாக வந்த தாக்கிவிட்டுத்தான் கால்நடைகளைக் கவர்ந்து சென்றிருக்க இயலும். இப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தேவை உண்டாகும்போது அந்தந்த பகுதிகளில் தலைவர்கள் உருவாகிறார்கள். இருப்பதிலேயே தகவல் தொடர்பும், உடல்வலுவும் கொண்டவர்களாக இருப்போர் தலைவர்களாக மாறினர்.
இவர்களே பிற்காலங்களில் அரசர்களாக பரிணமித்தனர். இவ்வாறு அரசர்களாக பரிணமித்தோர் தங்களுக்கு உதவியாக படைவீரர்கள் உள்ளிட்ட பலரை நியமித்துக்கொண்டனர். இவ்வாறு நியமித்துக்கொண்டோர்க்கு சம்பளம் கொடுக்கவேண்டியதாயிற்று. அவ்வாறு சம்பளம் கொடுக்க செல்வம் தேவையாகியிருந்தது. அந்த செல்வத்தை அரசர் மட்டும் எங்கிருந்து கொடுக்க இயலும். எனவே யாரெல்லாம் பயனாளர்களோ அவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தை தானியமாகவோ அல்லது வேறு வகையிலோ கொடுக்கத் தொடங்கினர். இப்படி வசூலானதுதான் வரி வசூல் செய்யும் முறை.
இவ்வாறு வசூல் தொடங்கியபோது யாரெல்லாம் கொடுத்தார்கள், யாரெல்லாம் கொடுக்கவில்லை என்பதற்கான குறிப்புகள் தேவைப்பட்டிருக்கும். இந்த குறிப்புகள் எழுத்திற்கும், கணக்கிற்கும் இட்டுச்சென்றிருக்கும். இவ்வாறு வரிவசூல் என்று வந்த போது மக்கள் முறையாக வரிசெலுத்தும் விதமாக ஒவ்வொருவரும் கைப்பற்றியிருந்த நிலங்களை அரசர்கள் வரிசெலுத்துவோர்க்கே உடைமையாக்கினர். முதலில் வாய்வழியாகவும் அருகிலிருப்போர் சம்மதங்களுடன் செயல்பட்ட இந்த உடன்பாடு பண்பட்ட எழுத்து மற்றும் காகிதங்களின் வரவுக்குப் பின்னர் சட்டபூர்வமான ஏற்பாடானது.
வரியை வசூல் செய்த அரசர்களுக்கு சட்டம் ஒழுங்கினைப் பராமரிக்கவேண்டிய தேவையும் அவசியமாகியது. இவ்வாறான சட்டங்களை ஒவ்வொருவரிடமும் சென்று காதுகளிலா சொல்லிக்கொண்டிருக்க இயலும். அனைவரிடமும் அப்பகுதியின் சட்டதிட்டங்களைக் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியங்கள் உண்டாகியது. அவ்வாறு அனைவரும் அறிந்துகொள்ள அறிவிப்புகளை பொதுஇடங்களில் கல்வெட்டுகளாக நிறுவினர். ஒருவகையில் இந்த நாளில் மூலைக்கு மூலை பிளக்ஸ் வைப்பதுபோல கல்வெட்டுகளை நிறுவினர். பாபிலோன் அரசர் ஹமுராபியின் கட்டளைகள் என்ற கல்வெட்டு மிகவும் பிரபலமானது. இதுதான் பொருள் புரிந்து வாசிக்கப்பட்ட பழைய கல்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது. கி.மு. 1754 களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டில் 282 சட்டக் குறிப்புகள் உள்ளன.

அதாவது என்ன குற்றம் செய்தால் என்ன தண்டனை என்ற வகையிலான குறிப்புகள். ஆனால் அன்றிருந்த மக்களுக்கு இந்த கட்டளைகளால் எப்படி விழிப்புணர்வேற்பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியே. இவ்வாறு சட்டரீதியாக பொறிக்கப்பட்ட சட்டக்குறிப்புகளுக்கேற்ப தண்டனைகள் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்டிருக்கும். இவ்வாறான தண்டனை நிறைவேற்றங்கள் மக்கள் மத்தியில் உரையாடல்களை உருவாக்கியிருக்கும். பின்னர் தண்டனைகள் குறித்த அச்சமே பிற்காலங்களில் தவறுகளைக் குறைக்க வழிவகை செய்திருக்கும். இந்தியாவிலும் அசோகர் கல்வெட்டுகள் பிரபலமானவை.
பிற்காலத்தில் ஜனநாயகத்தின் பிறப்பிற்குப் பிறகு ஏற்பட்ட கல்வியறிவு மனிதர்களை மேலும் பண்பட்டவர்களாக மாற்றத் தொடங்கியிருக்கும். எது எப்படியோ எழுத்து என்பது இப்படிப்பட்ட நிர்வாக வசதிக்காகவே தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்குப் பின்னால் மக்களுக்கு கிடைத்த ஓய்வு நேரம் எழுதுதல் கலைக்கு இட்டுச் சென்றிருக்கலாம். அவ்வாறு எழுதுபவர்கள் பூவாவுக்கு என்ன செய்வார்கள். சரி தம் மகிழ்ச்சிக்கு இரண்டு பாட்டு சோத்துக்காக இரண்டு பாட்டு என அரசர்களின் மெய்கீர்த்திக்கு செலவாகியிருக்கும். இவ்வாறான சன்மானங்கள் அவர்களது வயிற்றைப் பாட்டைப் போக்கியிருக்கும். இதனிடையே அற்புதமான இலக்கியங்களும் பிற்காலங்களில் பிறந்திருக்கின்றன.

அரசின் ஆணைகள் பலருக்கும் பரவலாகவேண்டும் என்ற நிலை வந்தபோது கல்வெட்டையா எல்லா இடத்துக்கும் சுமந்தா செல்ல இயலும். இந்த நிலையில் மாற்றுவழிமுறைகளைக் கண்டறிந்தனர். எகிப்தில் பாப்பிரஸ் போன்ற நாணல் வகைகளைக் கண்டுபிடித்து அதனைப் பதப்படுத்தி எழுதத் தொடங்கினர். கி.மு, 3000 த்தில் இது நடைபெற்றிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. இதிலிருந்துதான் நாம் இன்று பயன்படுத்தும் காகிதத்திற்கான ஆங்கில வார்த்தை பேப்பர் உருவானது என்பது ஒரு கொசுறு செய்தி. அதே நேரத்திலோ அதற்கு முன்பு பின்போ நம்மூர் புலவர்கள் பனையோலைகளை பதப்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஓலைச் சுவடிகள் மட்டும் இல்லையென்றால் நமது பழந்தமிழ் இலக்கியங்கள் எங்கிருந்து கிடைத்திருக்கும். இவ்வாறான எழுத்துக்களின் பிறப்பு குறித்தும் அகரமுதலிகளின் அறிவியல் குறித்தும் கொஞ்சம் பேசவேண்டும். அடுத்த அதனை நோக்கி நகர்வோம்.
படைஎடுப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 14: மொழிகளின் பிறப்பு – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Super அழகான எழுத்து வந்த கட்டுரை….
மனிதர்கள் எழுதக் கற்றுக்கொண்டது மானுட வரலாற்றின் கிளர்ச்சிகரமான அத்தியாயங்களில் ஒன்று. ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி முகாம்களில் இதை நான் எப்போதுமே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். இன்றைய அறிவியலாற்றுப்படை இதைப் பற்றிப் பேசியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, ஏற்கெனவே தெரிந்து வைத்துள்ளதை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள உதவுகிறது. பாராட்டுகள்.
Pingback: அறிவியலாற்றுப்படை 16: எழுத்துக்களின் பரிணாமம்