விவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்) – (தமிழில்: ச. வீரமணி)

விவசாயம் மற்றும் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஜூன் மாதத்தில் மூன்று அவசரச் சட்டங்கள் பிறப்பித்த பின்னர், இதற்கெதிராக விவசாய சங்கங்களும், விவசாயிகளும் நாடு முழுதும் தங்கள் உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர், ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன.

இவ்வாறு எதிர்ப்பு இருந்தபோதிலும் அதனைப்பற்றிக் கவலைப்படாது, அரசாங்கம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், அவசரச் சட்டங்களைப் மாற்றுவதற்காகவும் உடனடியாக நிறைவேற்றுவதற்காகவும் மூன்று சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மூன்று அவசரச் சட்டங்களும் உணவு தான்யங்களையும், இதர விவசாயப் பண்டங்களையும் இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகிறது. அவற்றை எவரும் வைத்துக்கொள்வதற்காக இருந்துவரும் உச்சவரம்பையும் நீக்கிவிடுகிறது. இவை, மாநிலங்களில் இருந்துவரும் விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMC) வேலை இல்லாமல் செய்துவிடுகிசறது. விவசாயப் பொருள்கள் மாநிலங்களுக்கிடையே எவ்விதமான தடையுமின்றி சுதந்திரமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கிறது. ஒப்பந்த விவசாயத்திற்கு ஒரு சட்டக் கட்டமைப்பை அளித்திருக்கிறது. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இவை அனைத்தும் சேர்ந்து பெரும் வர்த்தகர்களாலும், வேளாண்வர்த்தகம் செய்பவர்களாலும், கார்ப்பரேட்டுகளாலும் விவசாயிகள் சுரண்டப்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கின்றன.

மூன்று அவசரச் சட்டங்களுமே, விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவது, இந்திய விவசாயத்தை உலகச் சந்தையுடன் இணைப்பது, உணவுப் பாதுகாப்பை அரித்து வீழ்த்துவதற்கு இட்டுச்செல்லக்கூடிய விதத்தில் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக்கட்டுவது ஆகியவற்றைக் குறியாகக் கொண்ட ஒரு திரிசூலமாகும்.

இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்திற்குக் கொண்டுவந்துள்ள திருத்தம், இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தில் உள்ள பட்டியலிலிருந்து தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் அவற்றை இருப்பு வைத்துக்கொள்வதற்கான உச்சவரம்பையும் நீக்கிவிடுகிறது. இப்பொருள்கள் குறித்து அதீதமான விலை உயர்வு, யுத்தம் அல்லது இதர அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் மட்டுமே இவற்றுக்கு வரம்பு விதிக்கப்பட முடியும். இந்தத் திருத்தமானது, பெரும் வர்த்தகர்கள், கார்ப்பரேட்டுகள், இவற்றைத் திரட்டி வைத்திருப்பவர்கள் மற்றும் பதனப்படுத்துபவர்கள் வேண்டிய அளவிற்கு இருப்பு வைத்துக்கொள்வதற்கும், பதுக்குவதற்கும் வசதி செய்து கொடுக்கிறது. அவர்கள் இதனை தங்களுடைய ஊக வர்த்தகத்தில் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட பயன்படுத்திக்கொள்வார்கள். இதன் எதிர்விளைவு என்னவெனில், இது இப்பொருள்களின் மீது விலை உயர்வை ஏற்படுத்துவதற்கு இட்டுச்செல்லும்.

இரண்டாவது அவசரச் சட்டம் மாநிலங்களில் இருந்துவரும் விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களை (APMC- Agricultural Produce & Livestock Market Committee) ஒழித்துக்கட்டுவதற்கானது. வர்த்தகர்கள் மற்றும் கம்பெனிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும் அல்லது விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு வெளியேயிருந்தும் வாங்கிக்கொள்ள முடியும். இந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இனி மாநில அரசாங்கங்கள் எவ்விதமான வரிவிதிப்பும் செய்திட முடியாது. ஒப்பந்த விவசாயத்தை மேம்படுத்துவதுடன் இதுவும் சேர்ந்து வேளாண் வர்த்தக நிறுவனங்களும், பெரும் வர்த்தகர்களும் அவர்கள் கட்டளையிடும் விலைக்கு விவசாயிகளிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கு இட்டுச்செல்லும். இதுதொடர்பாக அரசுத்தரப்பில் தம்பட்டம் அடிக்கும் சொற்றொடர், “விவசாயிகளுக்கான சுதந்திரம்” என்பதாகும். எதார்த்தத்தில் இது பெரும் வர்த்தகர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தங்கள் இஷ்டத்திற்கு விவசாயப் பொருள்களின் விலைகளை நிர்ணயித்து, பொருள்களை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்கான சுதந்திரமேயாகும்.

Cabinet approves amendment to Essential Commodities Act, ordinances for  barrier-free trade - Times of India

விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் (APMC) மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் செயல்படுவது தொடர்பாக பிரச்சனைகள் இருக்கின்றன. இப்பிரச்சனைகளை மாநில அரசாங்கங்கள் மூலமாக சரிசெய்வதற்குப் பதிலாக, (ஏனெனில் விவசாயம் என்பது அரசமைப்புச்சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இருக்கிறது) மோடி அரசாங்கம் வேளாண்வர்த்தகம் புரிவோர், கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தகர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான வேலைகளைச் செய்வதற்குத் தீர்மானித்திருக்கிறது. விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் தொடர்பான சட்டமுன்வடிவு, மத்திய சட்டத்தின் வரையறைக்கு வெளியேயுள்ளதாகும். ஏனெனில் இது முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலைச் சேர்ந்ததாகும். எனினும் மத்திய அரசு இதனை நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கிறது.

பாஜக-வின் வழக்கத்திற்கேற்ப, பாஜக மாநில அரசாங்கங்கள் விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் மீதான மாநிலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளன. உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியவை இதனை ஏற்கனவே செய்திருக்கின்றன. இதேமாதிரிதான் தொழிலாளர் நலச் சட்டங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன அல்லது மாநில அளவிலான அவசரச் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாக அகற்றப்பட்டிருக்கின்றன.

மோடி அரசாங்கம், சுயசார்பு இந்தியா என்னும் போர்வையின்கீழ், நவீன தாராளமயக் கொள்கையை பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது.  விவசாயம் தொடர்பாகவும், கிராமப்புற கட்டமைப்பு தொடர்பாகவும் இது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் உண்மையில் விவசாயிகளுக்கு எதுவும் அளிக்கப் போவதில்லை.  பண்ணைவாயில் உள்கட்டமைப்பு நிதியம் (The Farmgate infracture fund), பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (The Pradhan Mantri Matsya Sampada Yojana), கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம் (The Animal Husbandry Infrastructure Fund) முதலானவை உண்மையில் பழைய திட்டங்கள் புதிய பெயரில் கொண்டுவரப்படுபவைகள் அல்லது 2019-20 மற்றும் 2020-21 மத்திய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டவைகளேயாகும். இவற்றுக்காக கூடுதல் செலவினம் என்பது ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவேயாகும்.

இப்போது பல்வேறு நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவுகள் எதையும், நாடாளுமன்றத்தின் நிலைக்குழுக்களுக்கு அனுப்ப, அரசாங்கம் மறுத்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்துவதற்கான நேரத்தை மிகவும் சுருக்கிக் கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம் இந்தச் சட்டமுன்வடிவுகள் அனைத்தும் மிகவேகமான முறையில் நிறைவேற்றப்பட்டுவிடும். கொரோனா வைரஸ் தொற்று மோடி அரசாங்கத்திற்கு தன்னுடைய விவசாயி  விரோத, தொழிலாளி விரோத சட்டங்களை, முறையான நாடாளுமன்ற நுண்ணாய்வுக்கோ அல்லது விவாதத்திற்கோ உட்படுத்தாமல் நிறைவேற்ற ஒரு பொன்னான வாய்ப்பை அளித்திருக்கிறது.

(செப்டம்பர் 16, 2020)