எம்மண்ணின் நட்சத்திரங்கள் - புக்ஸ் ஃபார் சில்ரன்

வாட்சப் வழியாக இந்த நூல் வெளியீட்டுச் செய்தி கிடைத்து, நல்லதொரு வெளியீட்டு விழாவைக் கண்ட நிறைவுடன் வீட்டுக்கு வந்து புத்தகத்தை படித்து முடித்தேன்.

சமகால சிறார் எழுத்துலகம் பிரமிக்க வைக்கிறது.. நாம் இவர்களை கவனிக்காமல் இருக்கிறோமோ என்ற கவலை வந்தது. மூத்த படைப்பாளிகளின் சர்ச்சைகள் மிகுந்த இலக்கிய வெளியைத் தாண்டி நம்பிக்கை தரக்கூடிய எதிர்கால எழுத்தாளுமைகளைக் காண்பது நிறைவான மகிழ்ச்சி. நாற்பது பக்கங்களில் குழந்தைமையில் நவரசம் குழையக் குழைய பத்தாம் வகுப்பு மாணவி சூடாமணி வரலாறு எழுதி வியக்க வைத்திருக்கிறார்.

சிறார்கள் கதை எழுதுவதில் வியப்பில்லை.. கட்டுரை எழுதியதே சிறப்பு என்று வாழ்த்தினார் தோழர் நாறும்பூநாதன். எனக்கு தோழர் பூங்கொடியின் புதல்வன் செல்வன் பா.செல்வ ஸ்ரீராம் எழுதி, சுவடு வெளியிட்ட ‘கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும்’ நூல் நினைவில் வெட்டியது..

சூடாமணியின் நூலை வெளியிட்டு வாழ்த்திய தோழர் உதயசங்கர் ஸ்ரீராமின் நூலை தமிழல் சிறார் எழுதிய முதல் கட்டுரை நூல் என்று குறிப்பிட்டார். அங்கிருந்து பிடித்த தோழர் உதயசங்கர் சமகால சிறார் இலக்கிய வளர்ச்சி பற்றிய சித்திரத்தை வைத்துக் கொண்டே சூடாமணியின் நூலின் முக்கியத்துவத்தைப் பாராட்டிப் பேசினார்.. சமகாலத்தில் நான் கேட்ட உரைகளுள் இந்த உரை மகத்தானது..

இந்த வாழ்த்துரையைப் பெற மாணவி சூடாமணி முற்றிலும் தகுதியானவர் என்பது நூலின் கட்டுரைகளைப் படித்ததும் உறுதியானது.. ‘எம்மண்ணின் நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பால் கட்டுரைகள் திருநெல்வேலி நட்சத்திரங்களைப் பற்றி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் சூடாமணி தேர்ந்திருக்கும் நட்சத்திரங்களில் மூவலூர் ராமாமிர்தம் இருக்கிறார்.. ஆகவே எம்மண் என்பது இனிய தமிழ்நாடாக மாறிவிட்டது..

பத்து ஆளுமைகளின் வரலாற்று கட்டுரைகள்.. கட்டுரைகளில் கதையாடல் இருக்கிறது.. கதையாடலில் நாடகப் பாங்கு உரையாடல் இருக்கிறது.. உரையாடல்களில் சமூகத்தை நோக்கி தேர்ந்த நையாண்டி இருக்கிறது. அந்தப் பகடிகளில் கற்பனைச் செழுமையும் இருக்கிறது.. இப்படி படைப்பிலக்கியக் கூறுகளைக் கையாண்டு ஆளுமைகளின் வரலாற்றைச் சூடாமணி சொல்வது ரசிக்க வைக்கிறது.

பாளையங்கோட்டையில் சகோதரி கிளாரிந்தா வெட்டிய பாப்பாத்திக் கிணறு இப்போது காணாமல் போய்விட்டது. சூடாமணியின் கட்டுரையில் பாப்பாத்திக் கிணறு நம்முடன் பேசி கிளாரிந்தாவின் கதையைச் சொல்கிறது.. அடடா என வியந்தேன்.

காணாமல் போன பாப்பாத்திக் கிணறு, ‘ ஏழைகளும் தாழ்த்தப் பட்டவர்களும் பயன்படுத்த கிளாரிந்தா அம்மை வெட்டிய பொதுக் கிணறு நான்’ என்று சொல்லி சூடாமணியின் கதையில் ஆவணமாகிவிட்டது.

செங்கோட்டையின் ‘ஆவுடை அக்காளை’ எத்தனை பேருக்குத் தெரியும்..? எனக்குக் கொஞ்சம் போலத் தெரியும்.. சூடாமணி கோடை வெயிலில் வீட்டுக்குள் இருக்காது நூலகம் போய் ‘ஆவுடை அக்காள்’ பற்றிய நூலை எடுத்து வந்து படிக்கிறார். இல்லை.. இல்லை.. நம்மிடம் ‘ஆவுடை அக்காளை’ நேர்த்தியாக அறிமுகம் செய்து விடுகிறார்.. ‘பாரதியிடம் இவரது தாக்கம் இருந்தது’ என்று ஒரு போடு போடுகிறார்.. பால்யத்தில் விவாகமாகி, கைம்பெண்ணாகி, அப்புறம் கவிபாடும் ஆற்றல் பெற்று சீர்திருத்தக் கருத்துகளைப் பாடினாராம்.. பதினாறாம் நூற்றாண்டுப் பெண்மணி என்றதும் சூடாமணியின் தேடல் குறித்து வியப்பு வராமல் இருக்குமா..!

பாப்பாத்திக் கிணறு பேசியது போல, நகராட்சி பூங்காவின் வேப்பமரத்துப் பூ பேசி கா.சு.பிள்ளையின் வரலாற்றைச் சொல்கிறது. அம்மாடி..!
கதை கேட்டுவிட்டு நன்றி சொல்லுமுன் வேப்பம் பூ பறந்து விட்டது போலும்.. ‘நன்றி எதிர்பார்க்க அது என்ன மனிதரா’ என்று செமையாக நையாண்டி முத்தாய்ப்பு வைக்கிறார் சூடாமணி..

பேராசிரியர் ய.மணிகண்டன் நெல்லை புத்தக விழாவில் வக்கீல் சாது கணபதி பந்துலு பற்றிப் பேசும் போது, பாரதியார் சென்னையில் இருந்து கடையம் செல்லும் வழியில் நெல்லையில் பந்துலு வீட்டுக்கு வந்தார் என்று பேசிய ஞாபகம் எனக்கு இருந்தது..

பாருங்களேன்.. சூடாமணியின் கட்டுரையில், பந்துலு வீட்டில் பாரதியார் கணீரென்று பாடிக் கொண்டிருக்கிறார். சாலையில் போகும் பால்காரி வேலம்மா என்பவர் பாடலைக் கேட்டு சிலிர்த்துப் போகிறார்.. பாடுவது யாரென நெல்லையப்ப அண்ணாச்சி என்பவரிடம் கேட்க பாரதியாhரடம் இருந்து அப்படியே பந்துலு பற்றிய வரலாறு நெல்லைத் தமிழில் வந்து விழுகிறது.. அந்த வீட்டுக்கு நேரு வந்தாராம்.. காந்தி வரப் போகிறாராம்.. அதைப் பார்க்க கொடுத்து வைக்காமல் இறந்து போன ஒரு பெண்ணை பற்றிப் பேச்சு துண்டாக வந்து விழுகிறது..

‘தையலார் விழாக்களை காணாமல் போனாயே பூம்பாவாய்’ என்று சம்பந்தர் பாடியது நினைவில் வெட்டியது.. நெல்லை வழக்கு பிரமாதமாய் வருகிறது சூடாமணிக்கு..! நெல்லை எழுச்சியை நினைவில் எழுப்பும் தலைவர்கள் வ.உ.சி.யும் சிவாவும் அந்த வீட்டுக்கு வந்ததை போகிற போக்கில் எழுதுகிறார்.
இந்த மாணவி என்னமாய் வரலாறு எழுதுகிறாள்..?

அட நம்ம நீலகண்ட பிரம்மச்சாரியும் வந்தாராமே.. அதை வாஞ்சிநாதன், கதைசொல்லியான நம்ம அண்ணாச்சியிடம் சொன்னாராம்.. என்ன ஒரு பில்டப்..!
ரேனியஸ் அய்யரையும் அவரது கல்லறையையும் பற்றி சூடாமணியும் தோழியும் பேசிக் கொள்கிறார்கள்.. அப்படியே கிறித்தவத்தின் கல்விக் கொடை, பெண்கல்வி, பூமி சாஸ்திரம் எல்லாம் படபடவென விழுந்து கொட்டுகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவிகளுக்கு கொடுத்து வரும் ஆயிரம் ரூபாய் கதை சொல்லியின் கணக்கில் வந்து விழுகிறது.. என்ன ஒரு அலாதியான, அதே சமயத்தில் குழந்தைமை ததும்பும் துவக்கம்..!

அப்படியே அம்மையாரின் கதையும், திராவிட இயக்க வேலைகளும், தேவதாசி முறை ஒழிப்பும் நமக்கு வந்து சேர்கிறது. கி.ரா. பற்றிய கட்டுரையில் உதயசங்கரையும் நாறும்பூநாதனையும் குறிப்பிட்டு விடுகிற இலாவகம் கைவந்திருக்கிறது.. முன்பெல்லாம் பேருந்து நிற்காத இடைசெவல் கிராமத்துக் காரரின் படத்தை பேருந்து நிலையத்தில் வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று நச்சென்று நன்றி பாராட்டுகிறார்..

தோழர் நல்லகண்ணுவின் போராட்டங்கள் பற்றி கதையாகச் சொல்லும் கட்டுரையை சூடாமணியை விட யாரும் எழுதியிருக்க முடியாது.. தலைவர் நல்லகண்ணு கட்டுரையை படித்து விட்டு தொலைபேசியில் பாராட்டினாராம்.. சபாஷ்..!

நாட்டுப்புறவியல் பண்பாட்டியல் ஆய்வாளர் தொ.ப. பற்றியும் இந்த பதினைந்து வயது மாணவி கட்டுரை தந்து வியக்க வைத்துவிட்டார்..
கடைசியாக புத்தகமும் வந்து சூடாமணியிடம் பேசுகிறது.. அதிலும் அது அறிவியல் புத்தகம்.. அறிவியல் தமிழுக்கு தொண்டாற்றிய பெ.நா.அப்புசாமியை அறிவியல் புத்தகம் வியந்து பேசியதில் எத்தனை பொருத்தம்..

எம்மண்ணின் நட்சத்திரங்களை எழுதிய இவர் துருவ நட்சத்திரமாக வருங்காலத்தில் நிலைக்கப் போகிறார் என்று என் வாசிப்பு அனுபவம் சொல்கிறது..
வாழ்த்துகள் சூடாமணி..

 

நூலின் தகவல்கள்  

நூல் : ‘எம்மண்ணின் நட்சத்திரங்கள்’ (குழந்தை எழுத்தாளரின் வரலாற்றுப் பதிவுகள்)

ஆசிரியர் : பத்தாம் வகுப்பு மாணவி சூடாமணி

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

பக்கங்கள் : 40

விலை : 40 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *