வீட்டிற்குத் திரும்புவதற்கான தங்களுடைய வலிமிகுந்த பயணத்தின் போது, 26 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டு, 30க்கும் மேற்பட்டோர் லாரி விபத்தில் காயமடைந்த அந்த நாளில், விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்வதை தனியார் துறைக்கு திறந்து விடுவது பற்றி இந்திய நிதியமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். இது வினோதமானதாக மட்டும் இருக்கவில்லை. கோடிக்கணக்கான இந்திய குடிமக்கள் மற்றும் தொழிலாளர்கள், செல்வத்தை உருவாக்குபவர்கள், எந்தவொரு போக்குவரத்தும் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து, நெரிசலான லாரிகள், பேருந்துகளில் தங்களுடைய வீடுகளுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், அவர்களுடைய வலிகளையும், துன்பங்களையும் ஆளுகின்ற கட்சி அவமதிக்கும் செயலாகவே இருக்கிறது.
நிதியமைச்சரின் மனதில் அவர்கள் இருக்கவில்லை. நிறைவேற்ற முடியாத விஷயங்களைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போதிருந்த யதார்த்தத்திற்கும், நிதியமைச்சரின் சொற்களுக்கும் இடையே இருக்கின்ற வேறுபாடுகள், பிரதமரால் பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பின் தன்மையை – அவையனைத்தும் நம்ப முடியாதவை என்பதை – சுருக்கமாகக் கூறுகின்றன. கொஞ்சம் தெளிவாக்கி கொள்ளலாம். ஏழைகளுக்கு அல்லது ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு நேரடியாக அளிக்கின்ற வகையில் ஒரு பைசா கூட இந்த கூடுதல் தொகுப்பில் இல்லை. உழைக்கும் ஏழைகளின் குறிப்பிட்ட பிரிவுகளைப் பற்றி பிரதமர் தனது உரையில் எவ்வாறு குறிப்பிட்டார் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள்.
சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், மீனவர்கள் மற்றும் அவர் குறிப்பிட்ட மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள்? ஆனால் அவர்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடன்கள் வழக்கப் போவதாக அறிவிப்பும், ’அதிகாரமளிப்பதையே மோடிஜியின் அரசாங்கம் நம்புகிறது, உரிமை அளிப்பதை அல்ல’ என்று நிதியமைச்சரிடமிருந்து வந்த சலிப்பூட்டும் போதனையும் மட்டுமே அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. சரியான நற்சான்றிதழ்களைக் கொண்டிருப்பதால், 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் தள்ளுபடியைப் பெற்றிருக்கின்ற நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த உரிமை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை.

Finance Minister Nirmala Sitharaman addressed the fourth part of her press conference on the economic stimulus package on Saturday.
இரண்டு மாதங்களாக வருமானம் இல்லாதவர்களை, ஏற்கனவே கடனாக பணம் வாங்கி தங்களுடைய வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருப்பவர்களை, மேலும் அதிக கடன் வாங்குமாறு கேட்பது அர்த்தமுள்ளதுதானா? வெளிப்படையான பணப்பரிமாற்றம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், அதன் மூலம் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு, தங்களுடைய வேலையை அவர்கள் தொடங்குவதை அது உறுதி செய்திருக்கும். சுமார் 40 கோடி இந்தியத் தொழிலாளர்களில், 93 சதவீதம் பேர் அமைப்புசாராத் துறையில் இருக்கின்றனர். மிகச் சிறப்பான காலங்களில் கூட, ஏற்ற இறக்கத்துடனான வருமானங்களையே அவர்கள் பெற்று வருகின்றனர்.
இந்த ஊரடங்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து விட்டது. இந்த மக்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, அவர்களுடைய ஜன் தன் அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட வங்கிக் கணக்குகளில் கணிசமான அளவில் அரசாங்கம் நேரடி பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சிகளுடன், உலகெங்கிலும் உள்ள பிரபலமான பொருளாதார வல்லுநர்களும் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்திருக்கின்றனர். அது நெறிமுறை சார்ந்த உணர்வாக மட்டுமல்லாது, நல்ல பொருளாதார உணர்வுடனும் இருக்கிறது. அது நிச்சயம் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். தேவையை உருவாக்கி பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு உதவும். இதுதான் உண்மையிலேயே ’உள்ளூர் மக்களுக்கான குரலாக’ இருந்திருக்கும். ஆனால் அரசாங்கம் இந்த திட்டத்தைப் புறக்கணித்து விட்டது.
20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பை அறிவித்தபோது, பிரதமர் புள்ளிவிவரங்களுடன் விளையாடினார். ஆனால் அது அவர் சொன்னவாறு இருக்கவில்லை. பிப்ரவரி முதல் மார்ச் வரை ரிசர்வ் வங்கி எடுத்த பல நடவடிக்கைகள் மூலமாகக் கொண்டு வரப்பட்ட கூடுதல் பணப்புழக்கம் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 1.7 லட்சம் கோடி தொகுப்பும் இதில் அடங்கியிருக்கிறது. எனவே இது பிரதமர் அறிவித்தது போல, 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு அல்ல.

26 migrants were killed and more than 30 injured in truck accidents in Uttar Pradesh’s Auraiya district on Saturday.
அந்த தொகையில் பாதிதான். மொத்த தொகையான 20 லட்சம் கோடி ரூபாயில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நபார்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் தரப்படப் போகின்ற ’தூண்டுதல்’ தொகுப்பிற்கு அப்பால், அரசாங்கம் செலவழிக்கவிருக்கும் உண்மையான செலவுத் தொகை எவ்வளவு? எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களுக்காக நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில், ஏழைகளுக்கு தரபப்டும் நேரடி நன்மைக்கான கூடுதல் செலவு வெறும் 3,500 கோடி ரூபாய் மட்டுமே. இது ரேஷன் கார்டுகள் இல்லாத 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கூடுதல் இலவச உணவு தானியங்களுக்கான தொகையாகும். இங்கே இன்னொரு கதை வருகிறது.
ஏற்கனவே அரசாங்கம் மூன்று கோடி ரேஷன் அட்டைகளை ரத்து செய்திருந்தது, பெரும்பாலும் ஏழை பிரிவுகளைச் சேர்ந்த உண்மையான அட்டைகளை வைத்திருந்தவர்களிடம் எந்தவொரு நேரடி சரிபார்ப்பும் செய்யாமலேயே, ஆதார் பயோமெட்ரிக் தரத்துடன் பொருந்தவில்லை என்று சொல்லி, அவர்களுடைய அட்டைகளை ’போலி’ என்று அரசு குறிப்பிட்டு விட்டது. அதே அரசு இப்போது, ரேஷன் அட்டைகள் இல்லாதவர்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதை, தான் தாராள மனதுடன் செய்வதாக கூறிக் கொள்கிறது!
தான் செலவழிப்பதாகக் கூறும் தொகையை உயர்த்திக் காட்டுவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய மற்றொரு வழிமுறை, செலவினப் பணத்தில் அரசாங்கத்தின் எந்தவொரு பங்கும் இல்லாதது. எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழிலாளர் நிதியம், மாவட்ட கனிம நிதியம் அல்லது இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதியம் (காம்பா) ஆகியவற்றில் இருந்தே செலவு செய்யப்படுகிறது. காம்பா நிதியைப் பொறுத்தவரை, ஆதிவாசிகள் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையின் அறிகுறியாக அதைக் கூறுகின்ற முரண்பாடு, நிதியமைச்சருக்குப் புரியவில்லை என்றாலும், இந்தியப் பழங்குடியினர் நன்றாகவே அதைப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கம் முதலில், பெருநிறுவனங்கள் வனநிலங்களைக் கையகப்படுத்துவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும், ஆதிவாசிகளின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்களை இடமாற்றம் செய்வதற்கும் அனுமதி அளிக்கிறது; அவ்வாறு செய்தபிறகு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உருவாக்கப்படும் தோட்டங்களில் ஆதிவாசிகளுக்கு வேலை வழங்குவது, உண்மையில் அவர்களுடைய ரத்தத்தை உறிஞ்சி அதற்கான பணத்தைத் தருவதை ஒத்ததாகவே இருக்கிறது! பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஏற்கனவே கணக்கிடப்பட்ட திட்டங்களையும், ஒதுக்கீடுகளையும் மறுசுழற்சி செய்வதிலும், அவற்றை கோவிட் தொகுப்பின் ஒரு பகுதியாகச் சொல்வதிலும் அரசாங்கத்திடம் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, மார்ச் மாத தொகுப்பில் விவசாயிகளுக்கான 2,000 ரூபாய் ரொக்கப் பரிமாற்றத்திற்காக செலவிடப்பட்ட பணம் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அவ்வாறாகவே நிதியமைச்சர் ஒப்புக் கொண்டாலும், அது குறித்து கூடுதல் விவரங்களைத் தர மறுத்துவிட்டார்.

Thousands of migrants are making the journey home by foot or by road.
கொடூரமான அடி விவசாயிகளுக்கே கிடைத்திருக்கிறது. பயிர் இழப்புகள், கூடுதல் செலவுகள், குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவான விலையில் விற்பனை விலை இருக்கின்ற போது, கடன்களைத் தள்ளுபடி செய்யவோ அல்லது குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கவோ அரசு மறுத்துவிட்டது. ஊரடங்கு காலத்தில் அரசாங்கம் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு என்ன செய்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஏற்கனவே அடைந்திருக்கும் துயரங்களை அதிகரிக்கின்ற வகையிலேயே இருந்தன.
எடுத்துக்காட்டாக, ஊரடங்கின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட வேலை நாட்கள் 40-50 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிதியமைச்சர் கூறினார். ஆனால் அரசின் அதிகாரப்பூர்வ தளம், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஏப்ரல் மாதத்தில், 46 சதவிகித வீடுகளிலும், வேலை நாட்களில் 59 சதவீதமும் குறைந்துள்ளது என்று அதற்கு முற்றிலும் நேர்மாறான விவரத்தைக் காட்டுகிறது. பொய்கள், மிகமோசமான பொய்கள், புள்ளிவிவரங்கள் என்ற கூற்றே நினைவிற்கு வருகிறது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 5.4 லட்சம் கோடி தொகுப்பில் கூட, அரசாங்கத்திற்கு உண்மையான செலவு வெறும் 25,000 கோடி என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறைக்கு எவ்வளவு வழங்கப்பட்டிருக்கிறது என்று கேட்டபோது, நிதியமைச்சர் பதிலேதும் பேசவில்லை. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்பட்டிருப்பதாக நிதின் கட்கரி இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அந்த தொகை கிட்டத்தட்ட இந்த தொகுப்பிற்கு சமமானதாகும்! புள்ளி விவரங்களை வழங்குவதில் அரசாங்கம் ஏன் மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் உண்மையில், அது அவ்வாறு செய்வதற்கு மறுத்திருக்கிறது.
இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பணப்புழக்கம் என்னவாக இருக்கும், அது ஏன் தனியாக அறிவிக்கப்படவில்லை என்று கேட்டபோது, அது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை என்று நிதிச் செயலாளர் பதிலளித்தார். அது உண்மையாகவே இருந்தாலும், வெளிப்படைத்தன்மையை மற்ற அரசாங்கங்கள் நம்பவில்லை என்றால், அத்தகைய மோசமான நடைமுறையை ஏன் நாமும் கடைப்பிடிக்க வேண்டும்? மிக உயர்ந்த அளவில் வைத்து செய்யப்படுகின்ற மதிப்பீட்டில்கூட, அரசாங்கம் வெறுமனே நான்கு லட்சம் கோடி அல்லது இந்த தொகுப்பின் 20 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது என்று தெரிய வருவதாலேயே, உண்மையான செலவினங்கள் குறித்து தெரிவிப்பதில் அரசாங்கத்திடம் தயக்கம் இருக்கின்றது.

ஆனால் இந்த அளவிற்கான தொகையும்கூட மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. மே 8 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் கடன் 4.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுவே கோவிட் தொகுப்பிற்கு அரசாங்கம் செலவிடுகின்ற தொகையாக இருக்கலாம். ஆக இவ்வாறு அதிகரிக்கின்ற கடன், பெரும்பாலும் ஊரடங்கின் காரணமாக ஏற்படவிருக்கும் மிகப்பெரிய வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காவே இருக்கும்.
பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்டிருக்கும் சில அறிக்கைகளில் கிடைக்கின்ற தகவல்கள், பலதரப்பினராலும் செய்யப்பட்டிருக்கின்ற மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசாங்கம் செலவிடாது என்றே தெரிய வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் என்ற அறிவிப்பில் இருந்து, இந்த தொகை வெகு தொலைவில் உள்ளது. இந்த தொகை உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதமாகவே இருக்கும். 4.2 கோடி என்ற அளவில் மிக அதிகமாக வைத்துக் கொண்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதத்திற்கு சற்றே அதிகமாக மட்டுமே இருக்கும். உலக நாடுகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் கோவிட் நிவாரணத் தொகுப்புகளுக்கான அரசாங்க செலவினங்களில், இதுவே மிகமிகக் குறைந்த செலவாக இருக்கிறது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழு தொகுப்பும், கோவிட் -19க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் மாநில அரசாங்கங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது. கடன் வாங்கக்கூடிய வரம்புகளை நிபந்தனைகளுடன் அதிகரிப்பது குறித்த அறிவிப்புகள் வந்திருந்தாலும், மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை செலுத்துவதற்கான எந்த உறுதிப்பாடும் அறிவிக்கப்படவில்லை. இந்த முழு தொகுப்பு தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்படாமல், மாறாக பெருநிறுவனங்கள் சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்த அரசாங்கத்தின் திட்டங்களை முன்னிறுத்தும் வகையிலே இருப்பதையே, அது குறித்த உண்மைகள் சுட்டிக் காட்டுகின்றன.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளின் கட்டமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு, சுரங்கங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகளை தாராளமயமாக்குவது, வன நிலங்கள் உட்பட பலவந்தமாக நிலங்களை கையகப்படுத்துகின்ற புதிய கட்டத்தை முன்வைக்கிறது. சீர்திருத்தங்கள் என்ற பெயரில், வேளாண் துறையால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையில் அரசு கொள்முதல் செய்கின்ற முறையைப் பலவீனப்படுத்தி விட்டு, பெரிய வேளாண் வணிக நிறுவனங்களை விலைகளை நிர்ணயிக்க அனுமதிப்பது விவசாயிகளுக்கு அதிக பாதிப்பையே ஏற்படுத்தும்.
அனைத்து துறைகளையும் தாராளமயமாக்கி, வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்து, பொதுத்துறைகளை விற்பனைக்காக வைத்து இந்தியாவின் தற்சார்பை நொறுக்குகின்ற வழிமுறையே, இந்த அரசாங்கத்தின் தற்சார்பிற்கான விசித்திரமான வரையறையாக இருக்கிறது. அறிவிக்கபப்ட்டிருக்கும் அந்த தொகுப்பு வெறும் ஏமாற்று வேலை. இந்திய தொழிலாளர்களும், விவசாயிகளும் நீதிக்கதையில் வரும் குழந்தையைப் போல, சக்கரவர்த்தி ஆடையே அணியவில்லை என்று விரைவிலேயே கூச்சலிடப் போகிறார்கள்.
https://www.ndtv.com/opinion/in-20-lakh-crore-package-strange-approach-to-self-reliance-2230258
என்டிடிவி இணைய இதழ், 2020 மே 17
தமிழில்
தா.சந்திரகுரு