ஏன் எழுதுகிறேன்? என்று எழுத ஆரம்பித்து சுமார் நாற்பதாண்டுகள் கழித்து யோசிப்பது நன்றாகத்தான் இருக்கிறது. கல்லூரி நாட்களில் தீவிர வாசிப்பின் அடுத்த கட்டம் – ஒரு விதத்தில் ஒரு பிரமோஷன் என்று கூட வைத்துக் கொள்ளலாமே – எழுதுவது என்று நினைத்த நேரம். அந்த நாட்களில் 1982 – 85களில் நானும், எனது நண்பர்களும் தீவிரமாக கணையாழி வாசித்துக் கொண்டிருந்தோம். கடைசிப்பக்கத்தில் சுஜாதா சொல்லும் புத்தகங்களைத் தேடுவது தனி இன்பம். அப்போது கணையாழியில் குறுநாவல் போட்டி நடத்தி, மாதாமாதம் ஒரு குறுநாவல் வெளியிடுவார்கள். ஓராண்டு பட்டியலைப் பார்க்கும் போது, மதுரைக் கல்லூரி பேராசிரியா் முரளி அவர்களின் குறுநாவல் தேர்வாகி இருந்தது. பின்னாளில் சத்யப்பிரியன் என்ற பெயரில் புகழ்பெற்ற மதுரைக்காரரான பிரபாகர் அவர்களின் குறுநாவல் ஒன்று தேர்வாகி இருந்தது. ‘கணையாழியில் மதுரைக்காரங்க எழுதினாலும், போடுவாங்க போலயே‘ என்ற தைரியத்தில் நானும், நண்பன் கண்ணனுமாகச் சேர்ந்து ஒரு குறுநாவல் எழுதி கணையாழிக்கு அனுப்பினோம். ஆம்.. எழுத்தில் கவிதை. சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற படிநிலைகளில் படிப்படியாக ஏறாமல், நேராக கணையாழிக்கு குறுநாவல் ! – ஏதோ ஒரு படத்தில், என்னைப் போன்ற ஒரு சொங்கி துணை நடிகர் படத்தில் நடித்து, ஸ்ட்ரெய்ட்டா சிஎம்தாண்ணே ! என்பாரே அது போல ! கணையாழி அதை கண்டு கொள்ளவில்லை. அது எங்களுக்கும் தெரியும் என்பதால் பெரிய வருத்தமும் இல்லை. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு எழுதிய சந்தோஷம் என்ற சிறுகதை 1986 ஜுன் கணையாழியில் வந்தது. பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு கதை என்பதாக வந்தன. எழுதியதே அது போல இடைவெளி விட்டுத்தான். எழுதுவதை விட வாசிப்பில் அதிக ஆர்வம் . அன்றும், இன்றும்.
எல்ஐசியில் வேலைக்குச் சேர்ந்தேன். தொழிற்சங்க ஈடுபாடு. அகில இந்தியத் தலைமை அனுப்பும் சுற்றறிக்கைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தரும் வேலை. தொழிற்சங்க ஈடுபாடு ஏற்படுத்திய தொடர்புகளால், மார்க்சிஸ்ட் மாத இதழுக்கு கட்டுரைகள் மொழிபெயர்த்தல் என்று ஆரம்பித்து, முழு நேர மொழிபெயர்ப்பாளனாகவும் ஆனேன். அதே நேரத்தில் தான் தமுஎச தோழர்களுடனும் நெருக்கம் ஏற்பட்டது. எழுத்திற்கு நோக்கம் இருக்க வேண்டும், எழுத்தாளனுக்கு ஒரு சமூகப் பொறுப்பு உண்டு என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தன. தீக்கதிர் வண்ணக்கதிர், செம்மலர் இதழ்களுக்கு எழுத ஆரம்பித்தேன்.
அடிப்படையில் நான் வாழ்வில் எந்தக் கட்டத்திலும் பெரிதாக கஷ்டப்படாதவன். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டங்கள் தவிர, பெரிய துயரங்களையும், மோசமான அனுபவங்களையும் சந்திக்காதவன். கஷ்டப்படாமல் சுமாரான படிப்பு, அதன் காரணமாக அன்றைக்கு நடுத்தர வர்க்கத்தின் கனவாக இருந்த ஒரு அரசு குமாஸ்தா வேலை, அடுத்த தெருவில் இருந்த ஒரு மத்திய அரசு குமாஸ்தா பெண்ணோடு திருமணம், அடுத்த ஆண்டு குழந்தை, அதற்கு அடுத்த ஆண்டு அலுவலகக் கடனில் 3 சென்ட் இடம் வாங்கி 800 சதுர அடியில் வீடு. நான் கதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், எனது மந்தமான நடுத்தர வர்க்க வாழ்வின் சீரான போக்கில், எந்த வித்தியாசமான அனுபவங்களும் கிடையாது. டிபன் பாக்சில் தயிர்சாதத்துடன் 9.15 பஸ்சில் அலுவலகம், மாலை 5.15 பஸ்சில் வீடு என்ற வாழ்க்கையில் எதை எழுதுவது? நான் பிறந்து வளர்ந்த சூழலின் காரணமாக அறிந்த புராணங்கள், கதைகளை மறுவாசிப்பு செய்து எழுதிக் கொண்டிருந்தேன். அவை யாரும் அதிகமாக அறியாத களமாக இருந்ததால் முற்போக்கு வட்டாரங்களில் ரசிக்கப்பட்டன.
ஆனால், மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகள் அதிகம் இருந்தன என்பதால், கவனம் அதில் சென்றது. மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு இருந்த வரவேற்பு எனக்கே வியப்பாக இருந்தது. நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் கூட ஆங்கில மூலத்தில் படிக்க ஏனோ ஒரு வித தயக்கம் இருந்ததை உணர்ந்தேன். மொழிபெயர்ப்புகள் வழியே அவர்கள் அறியாத விஷயங்களை அவர்களுக்குக் கொண்டு செல்ல முடிந்ததை உணர்ந்தேன். மெல்ல மெல்ல என் எழுத்தின் நோக்கம் மக்களுக்கு அவர்கள் அறியாத விஷயங்கள் குறித்த அறிமுகப்படுத்துவது தான் என்பதையும் உணர ஆரம்பித்தேன்.
சிறுவயதிலிருந்தே நான் தீவிர வாசகனாக இருந்தேன். 1989லிருந்து நான் வாசிக்கும் புத்தகங்கள் பற்றிய விபரங்களை ஒரு பதிவேட்டில் குறித்து வைக்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல நண்பர்கள் மத்தியில் என் பதிவேடு புகழ்பெற ஆரம்பித்தது. தோழர். எஸ்.வி.வேணுகோபால் என் பதிவேட்டை பற்றி தீக்கதிரில் ஒரு கட்டுரை எழுதினார். பின்னர் தமிழ் இந்துவிலும் தனது ஒரு கட்டுரையில் அது பற்றிக் குறிப்பிட்டார். வாசிப்பு குறித்து பேச தமுஎச நண்பர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் வாசிப்பை நேசிப்போம் என்று வாசிப்பு பற்றி ஒரு சின்ன புத்தகம் 16 பக்க அளவில் எழுதினேன். நான் எதிர்பாராத அளவிற்கு அது பரவலாகப் பேசப்பட்டது. ஈரோடு கலைக் கல்லூரியில் தமிழ் பாடத்திட்டத்தில் பாட நூலாகச் சேர்க்கப்பட்டது. என் எழுத்தின் நோக்கமும் மாறியது.
எல்லோருமே வாசிக்க ஆசைப்படுபவர்கள்தான். நாம் அதிகமாக வாசிக்கவில்லையே என்ற ஏக்கமும் குற்றஉணர்வும் உள்ளவர்கள்தான். அவர்களை வாசிப்பின் பக்கம் இழுத்துச் செல்வதே என் எழுத்தின் பிரதான நோக்கமாக மாற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இர்விங் வாலஸ் தன் புகழ் பெற்ற நாவலான தி பிரைஸ் நாவலை எழுத 16 வருடங்கள் ஆய்வு செய்ய படாதபாடு பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்த the writing of one novel என்ற புத்தகம் பற்றி ஒரு கட்டுரையை புத்தகம் பேசுது இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் மாதாமாதம் இது போல் ஏதேனும் ஒரு புத்தகம் பற்றி எழுதுங்களேன் என்றார்கள். புகழ்பெற்ற ஆங்கில திரில்லர் எழுத்தாளர்கள் பற்றி பெயரில்லாத ஒரு தொடர் எழுத ஆரம்பித்தேன். பின்னர் அது இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற பெயரில் தொகுப்பாகவும் வந்தது. அத்தொகுப்பு பெற்ற வரவேற்பில் நான் எதற்கு எழுதுகிறேன் என்பதற்கான தெளிவான பதில் கிடைத்தது.
அடுத்ததாக எனக்கு மறுவாசிப்பு படைப்புகளின் மீதிருந்த ஒரு காதல் காரணமாக அப்படியான புத்தகங்களைத் தேடித் தேடி படித்து மீண்டெழும் மறுவாசிப்புகள் என்று ஒரு தொடர் எழுதினேன். பல நண்பர்கள் நான் அந்தத் தொடரில் குறிப்பிட்ட புத்தகங்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்ததை அறிய மகிழ்ச்சியாக இருந்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பற்றி விரலால் சிந்திப்பவர்கள் என்று மற்றொரு தொடர். நடுவில் வாசிப்பு வசப்படும், புத்தகத்தின் கதை என்று இரண்டு குட்டி புத்தகங்கள். அந்த வரிசையில் இப்போது புத்தகக் காதலர்கள் பற்றி வந்த புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதமாய் புத்தகக் காதல் என்றொரு தொடர் புத்தகம் பேசுது இதழில் வந்து கொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நின்று போன உயிர்மை மீண்டும் அச்சு இதழாக வரத் தொடங்கிய போது மனுஷ்யபுத்திரன் ஏதேனும் வித்தியாசமான புத்தகங்களை அறிமுகம் செய்யும் தொடர் ஒன்றை எழுதுங்களேன் என்றார். தமது தொழில் அனுபவங்களைப் பற்றி பலரும் எழுதியிருக்கும் புத்தகங்கள் குறித்து எமக்குத் தொழில் என்றொரு தொடர் உயிர்மையில் இப்போது வந்து கொண்டிருக்கிறது. ஒரு தபால்காரனின் பணியில் எத்தனை சுவையான சம்பவங்கள் இருக்கின்றன தெரியுமா? தீயணைப்பு வீரர், மோப்பநாய் பயிற்சியாளர், விமானப் பணிப்பெண், வனக்காவலர், கூவிப்படை வீரர் என்று விதவிதமான தொழில் செய்வோரிடம்தான் எத்தனை கதைகள் உள்ளன! கதைகளை விட நிஜ வாழ்க்கை சுவாரஸ்யமானது தானே?
யோசித்துப் பார்த்தால் மனிதன் புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறான். வாசிப்பதில் ஆர்வமுள்ளவனாக இருக்கிறான். புத்தகங்கள் மீது ஆசை உள்ளவனாக இருக்கிறான். ஆனால் ஏனோ இவற்றிற்கு அதிக நேரம் ஒதுக்காமல் இருக்கிறான். அவர்களை புத்தகங்கள் பக்கம், வாசிப்பின் பக்கம் இழுப்பதுதான் என் எழுத்தின் நோக்கமாக இருப்பதை இப்போது உணர்கிறேன். சொந்தமாகப் புனைவுக் கதைகளை எழுதி இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. அதில் ஒன்றும் பெரிய வருத்தம் எனக்கு இல்லை. நான் வாசித்த புத்தகங்கள் பற்றிய எனது கட்டுரைகள், யாரோ ஒரு வாசகருக்கு, ஏதோ ஒன்றைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பரவலாக அறியப்படாத ஒரு சம்பவம் பற்றிய ஒரு ஆங்கில நூலை நான் மொழிபெயர்த்தால், அதைப் படிக்கும் ஒருவர் அது தொடர்பான வேறு சில புத்தகங்களைத் தேடிச் செல்கிறார். ஏதோ ஒருவிதத்தில் அறிவுத் தேடலுக்கு என் எழுத்துகள் சின்னதாக உதவுவதாக உணர்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் எனது பதிவேட்டிலிருந்து ஓராண்டு முழுவதும் வாசித்த பட்டியலை ஜனவரி ஒன்றாம் தேதி ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்தேன். டிசம்பர் கடைசியிலேயே உங்கள் பட்டியலுக்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லும் நண்பர்கள் அங்கு இருந்தார்கள். இப்போது பலரும் இப்படியான பதிவுகளைப் போடுகிறார்கள். மிகச் சமீபமாக ஜுன் 30ம் தேதி half yearly report தருவது கூட ஆரம்பித்து விட்டது ! அதற்கு விதை நான் போட்டது.
ஒரு சிறு கூட்டத்தை வாசிப்பின் பக்கம் திருப்புவதே எனது எழுத்தின் நோக்கமாக இப்போது அமைந்துவிட்டது.
ஒரு காலத்தில் நான் வாசித்தது பற்றிப் பகிர்ந்து கொள்ள எழுதினேன். பின்னர் காலச்சூழலில் இப்படிப் பகிர்ந்து கொள்வதற்காகவே தேடித் தேடிப் படிப்பது என்றும் ஆகிப் போனது. எழுதுவதற்காக வாசிப்பது, வாசிப்பதனால் எழுதுவது என்றொரு பெரிய மாயச்சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது !
சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ஏன் எழுதுகிறேன் ? என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் எனது கட்டுரை.
நூல் : ஏன் எழுதுகிறேன்?
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
பக்கங்கள் : 244
விலை : 300
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.