என் கதை – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : என் கதை
ஆசிரியர் : சார்லி சாப்ளின்
தமிழில்: யூமா வாசுகி
பக்கங்கள் : 224
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : 190
பெரும் கலைஞர்கள் இந்த புவியில் அதிசயங்களை ஸ்தாபிப்பவர்கள் என்பதற்கான காலாதீதி உதாரணங்களில் ஒருவர் சார்லி சாப்ளின் . உலகம் முழுதும் உள்ள எண்ணற்ற ரசிகர்களை தன் கலா வல்லமையால் ஈர்த்ததொரு பேராளுமை.
ஒருமுறை பெர்னாட்ஷா ” திரைப்படத்துறையில் தோன்றிய ஒரு உண்மையான மேதை சாப்ளின் ” என்று கூறியதை நினைவு கூறுவோம் . கற்பனையிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் உள்ள தனித்துவம் பிற கலைஞர் எவரும் சிந்திக்காத ஒன்று . சாதாரணங்களின் ஊடாக சாத்தியங்களின் உச்சங்கள் தொட்டது வரை சொல்லி மாளாது . சிரிப்பும் கண்ணீருமான இந்த பேரன்பை நம் இதயத்தோடு இணைக்கும் எளிய முயற்சியே இந்த நூல்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வேலையில் எளிய கார்ட்டூன் படங்களாக அவரது நடிப்பை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும் பாங்கு மட்டுமே சார்லி சாப்ளின் என்ற பெயரை நினைவு கூறும் . ஆனால் அந்த பெயருக்கு பின்னால் அவர் அனுபவித்திருக்கக்கூடிய வலிகளை பார்க்கும் பொழுது , எத்தனை மனிதர்களை சிரிக்க வைத்தவர் எத்துனை ஆழ்ந்த துயரங்களை சந்தித்திருக்கிறார் என்று வியக்க வைக்கிறது.
சார்லி சாப்ளின் வாழ்வில் அவரது குடும்பம் சார்ந்த உறவுகளில் மிக இறுக்கமான ஒரு பிணைப்பை ஏற்படுத்திய உறவு என்றால் அவரது சகோதரர் ஸிட்னி தான். 10 வயது வரை சகோதரர்கள் . 10 வயதிற்கு மேல் பங்காளிகள் என்று சொத்தை வைத்துக் கொண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் பாகப்பிரச்சனை இந்த சகோதரருக்கு இடையே காணப்படவே இல்லை . ஒருவருக்கு ஒருவர் துணையாக ஒருவரின் வாழ்வின் வளர்ச்சிக்கு மற்றொருவர் உறுதுணையாக இவர்கள் இருவரும் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் தாயாரின் நீடித்த உடல் நோவும் , எப்போதும் கிடைக்காத தந்தையின் பாசமும் தான்.
சார்லி சாப்ளின் ஆரம்பகட்ட வாழ்வு நல்ல செல்வ செழிப்போடு இருந்திருந்தாலும் அதற்கு பிற்பாடு 17 வயது வரை அவர் பட்ட வறுமையை பக்கம் பக்கமாக விவரித்து எழுதி இருக்கிறார். அந்த வறுமையும் , உண்ண கிடைக்காத உணவும் தன் திறமையை முழுமையாக வெளிக்காட்ட உதவி இருக்கிறது. சாப்ளினின் தாய் நோய்வாய்ப்பட்டு இருக்கையில் தந்தையின் மற்றும் ஒரு மனைவியான சித்தியிடம் அகப்பட்டு வருந்தும் நாட்களிலும் சரி இங்கிலாந்தின் வீதிகளில் திக்கு தெரியாமல் தவித்த சிறுவனாய் சாப்ளின் மேல் அனுதாபம் பிறக்கிறது.
தான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் வியப்பிற்குரிய அழகான எதிர்காலம் இருக்கிறது என்பது தெரியாமல் தன் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார். பணமும் புகழும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு சமயம் வந்து போகின்றன. திகைக்கச் செய்யும் அச்சுறுத்தும் எதிர்காலம் . இது என்னை எங்கே அழைத்துச் செல்லும் என்ற அளவுக்கு அவரிடம் ஒரு காலகட்டத்தில் பணம் நிரம்பி வழிகிறது.
” எந்த வகையைச் சேர்ந்த லேசான போதையும் ஒருவனின் அறிவுக் கூர்மையை பாதிக்கும் என்ற நம்பிக்கையுடையவன் நான். முக்கியமாக வேலையில் ஈடுபடும் போது “:என்று பெண்கள் மீது கொண்ட ஈர்ப்பை பற்றி ஓரிடத்தில் சாப்ளின் விளக்குகிறார்.
வாழ்க்கையின் சாராம்சம் போராட்டமும் வேதனையும்தான் என்று அறிந்து கொள்வதற்கு நான் புத்தகம் படிக்க வேண்டியது இல்லை . பிறவி குணம் போல என் நகைச்சுவை எல்லாம் இதை அடிப்படையாகக் கொண்டவை . நகைச்சுவை கதையை புனைவது என்ற என் வழி மிகவும் எளிமையானது. ஆனால் நகைச்சுவை வித்தியாசமானதும் மேலதிக கூர்மையும் உடையது . மகிழ்ச்சியான வேதனைகளிலிருந்து தான் நகைச்சுவை உருவாகிறது என்கிறார்.
வறுமையின் பிடியில் இருந்த பொழுது முதல் வகுப்பு பயணத்தை அவசரமாக பார்த்ததை நினைவு கூர்ந்தும்…
இன்று அதே முதல் வகுப்பின் ஆடம்பர மகிமையையும் சுட்டுப்பொசுக்கும் அதன் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கிறார் . அறியப்படாத ஒருவனாக வறியவனாக இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு அதே இங்கிலாந்துக்கு புகழ் பெற்ற மனிதனாகவும் பணக்காரனாகவும் திரும்பும் நேரங்களில் வாசிக்கும் நமக்குள் மெய்சிலிர்க்கிறது .
உலகப் புகழ்பெற்ற பின்னர் பல்வேறுபட்ட தலைவர்களை அவர் சந்தித்த காட்சிகளை நினைவு கூறுகையில்..
ஒருமுறை பெர்லினுக்கு சென்ற போது ஐன்ஸ்டீன் வீட்டுக்கு செல்ல நேர்கிறது . அளவான வசதிகள் மட்டும் உள்ள ஒரு சிறிய வீடு. அந்த வீட்டில் இருந்த மிகவும் விலை உயர்ந்த பொருள் ஒரு கருப்பு நிற பியானோ தான் என்கிறார்.
இதே போல காந்தியடிகள் , ஜவகர்லால் நேரு இன்னும் முதல் உலகப்போரின் போது நடந்த நிகழ்வுகள் என்று பல்வேறுபட்ட அரசியல் சூழலை பேசும் புத்தகமாக சார்லி சாப்ளினின் என் கதை அமைந்திருக்கின்றது . கிட்டத்தட்ட இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது பத்தாம் வகுப்பு சமூகவியல் பாடத்தை குறிப்பாக வரலாறு பாடத்தை வாசித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது . நடக்கும் நிகழ்வுகள் , பங்குபெறும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரு வரலாற்றுப் பாடத்தை மீளாய்வு செய்வதாகவே அமைந்திருப்பினும் ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் , புகழும் வீச்சும் மாறி மாறி அமைந்திருப்பதை “என் கதை ” உணர்த்துகிறது.
புகழ் மட்டும் கிடைத்துவிட்டால் அதனை ஒருவன் எப்படி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் ? , எத்தனை பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆட்பட வேண்டும் என்பதையும் இவரின் வாழ்க்கை நமக்கு பாடம் புகட்டாமல் செல்லவில்லை. அதேபோல பல பெண்கள் இவரது வாழ்வில் இடம் பிடித்து குறுகிய காலங்களில் விடை பெற்றிருந்தாலும் , இறுதியாக இவர் சந்தித்த ஊனா என்ற இளம் பெண் சிறந்த துணையாக இருந்திருக்கின்றார் . அதற்குப்பின் எந்த புகழும் வேண்டாம் என்று அமெரிக்க நாட்டை விட்டு இங்கிலாந்துக்கே திரும்பி சென்று ஒரு அமைதியான வாழ்வை மேற்கொண்டு இருக்கின்றார்.
ஊனாவின் கலங்கமற்ற அன்பு எல்லா ஏமாற்றங்களையும் மிகைத்த பேரழகு கொண்டது. ஏனென்றால் அது ஒருவரால் வெளிப்படுத்த முடிவதை விட அதிகமானது . நான் ஊனாவுடன் வாழும் போது அவள் சுபாவத்தின் ஆழமும் அழகும் எனக்கு நிரந்தரமான ஒரு தரிசனம் என்று என் கதையை முடிக்கின்றார்.
என்னை போல யாருமே கஷ்டப்பட்டது இல்ல அப்படின்னு சொல்றவங்க …
கண்டிப்பா இந்த புத்தகத்தை ஒருமுறை வாசிச்சு ஆகணும்.
வலிகளை வென்ற வெற்றி…
வெற்றியை வீழ்த்திய வேதனைகள்…
சார்லி சாப்ளினது வாழ்வு என்பதை நாமும் உணரலாம்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி
ஏரிப்புறக்கரை
பட்டுக்கோட்டை
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.