நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய "‘என் ஊதாகுறிப்பேட்டில் நேற்று" புத்தகம் | En Oothaa Kuripetil Netru Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: “‘என் ஊதா குறிப்பேட்டில் நேற்று” – நூல்

சற்றேற குறைய கால் நூற்றாண்டாக கவிதை சிறுகதை விமர்சனம் என இலக்கிய உலகில் பயணிக்கும் ப்ரதிபா ஜெயச்சந்திரன் படைத்திருக்கும் புதிய கவிதை தொகுப்பாக ‘என் ஊதா குறிப்பேட்டில் நேற்று ‘ வாசகர் கரங்களில்..

ப்ரதிபா -வின் கவிதைகள் நவீனம் சார்ந்ததா? பின் நவீனம் பேசுவதா ?எனக் கலை விமர்சகர்கள் கவலைப்படட்டும் ..இந்த கவிதைகள் நான் உணர்ந்தவரை

.மனிதம் பேசுபவை’
மானுடம் பாடுபவை.

ப்ரதிபா -வின் கவிதைக் கருக்கள் எளிய மனிதர்கள். சின்னஞ்சிறு கிராமங்களில் எவ்வித அடையாளமும் இன்றி வாழ்வதாய் நம்பி இருத்தலியல் போராட்டத்தில் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்களை, கவிதை நாயகர்களாகி இருப்பதும் ,அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்திருப்பதுமே ப்ரதிபா ஜெயச்சந்திரன் வெற்றி என்பேன்.

“ஒரு படைப்பாளியின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று தன்னைச் சுற்றியுள்ள உலகை உற்று கவனித்தல். அதன் இருப்பை உள்வாங்குதல். அதனை தன்வயப்படுத்துதல். தனது மொழிக்குள் அல்லது தனது படைப்புக் கருவிக்குள் அதனைக் கொண்டுவருதல். அதனை வெளிப்படுத்தும் போது தான் உற்று கவினித்த யதார்த்தம் அவரது படைப்பு மொழி வழியாக புதிய யதார்த்தமாக வெளிப்படுதல். இதுதான் படைப்பு மொழியின் அசாத்தியமான சாதனை அதுதான் இந்த உலகை அழகுறச் செய்வதும், அதனை உள்வாங்கும் அழகியல் அறிதலை வெகுமக்களின் ரசனையாக கட்டமைப்பதும். அந்த அழகியல் அறவழிப்பட்டதாக, மனித உயிர்ப்பை பொருள் கொண்டதாக மாற்றும்போது அது உயர்ந்த இலக்கிய நிலையைப்பெறுகிறது”- என்னும் விமர்சகர் ஜமாலன் சஊட்சுமச் சொற்களுக்குள் பயணிக்கிறது ப்ரதிபா-வின் கவிதைப்பயணம்

‘என் ஊதா குறிப்பேட்டில் நேற்று ‘ தொகுப்பில் இருவித நிறங்களை உணரலாம்.

ஒன்று புறச்சூழல் குறித்த சமூக அக்கறையோடு சமகாலத்தை ,அதன் நிஜமுகத்தை கவிதைகளாக்கி இருப்பது
.மற்றொன்று சமகாலத் தனியனின் அகவுலகம் சார்ந்தது லகம் என்பது வெறுமனே காதலியோ காமதையோ சொல்வது மட்டுமல்ல! தனி மனிதன் ஒருவன் பார்வையில் வாழ்வை தரிசிப்பது உணர்வது என்றும் பொருள் கொள்ளலாம்.

கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, கோபம், துக்கம், ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கவிதை எப்போதும் நம்மோடு இருக்கிறது. மனிதன் எப்போதும் அழகைத் தேடிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய அறிவுக்கும் உணர்வுக்கும் ஒரு வடிவத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். கவிதை அவனுக்கு ஒரு புதையல் என்பார் பேராசிரியர் தி.சு.நடராசன்.

சங்கத் தமிழின் கவிதைப் படைப்பாக்கம் அகம் – புறம் என்ற இரு திசைகளில் பாய்ந்து பிரகாசித்ததை நாமறிவோம்.

அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை போன்றவை அகப்பாடல்களின் முத்திரையெனில், புறநானூறு, கலிங்கத்து பரணி போன்றவை புறப்பாடல்களின் புகழ் பாடுபவை.

01.ப்ரதிபாவின் அகவுலகம் :

கவிதையின் பாடுபொருளாக எதையும் பூரணமாய்ப் பொதிக்க நவீனக் கவிதைவெளி அளித்ததோ பெரும் சுதந்திரம். உடலை மட்டுமே மையமாகக் கொண்டதல்ல மாறாக மனதைமையமாக கொண்டது. காதலை, காமத்தை உணர்ந்து வெளிச்சொல்ல முடியா வேதனை பெருந்துக்கம், கவிமொழியாய் உருவானது. பின்னாளில் கொண்டாட்டமாய் குதூகலித்தது.

“தங்கையின் தோழிகளை ஆக்ஃபா III-யில்/கள்ளியோடையில் படம்பிடிக்க வந்தவினை:

ஊரார் விரட்ட ஓடி ஒளிந்த கம்மங்காட்டில்/பூத்திருக்கும் புதுநிலவு முள்வெளிச்சம் காட்டி’— துலுக்கன் குளம்’

‘கூலிக்கு மாரடிக்கும் தாம்புருப் பயல்களெல்லாம்/ கூட்டிக் கேட்கிறார்கள்./ நெல்மணி காத்துக் கூலி கேட்ட கரம் /நெருப்பின் கூக்குரலில் தீயவிட்ட/ வாழ்வெறுத்து ஓடிப் புதர் /ஒதுங்கியதும் ஓர் நிலவு நாளில்’–பச்சேரி

‘ஊட்டிய சோறும் காட்டிய நிலவும்/ நினைவுக்களுக்கப்பால் எனினும்/ ஊர் ஊராய் நிலவு வரும்!’

ஊர் ஊராய் நிலவு வரும் [பக்கம் 28] என்னும் கவிதையில் வேறு வேறு நிகழ்வு குறிப்புகள் வேறு வேறு கிராமங்களின் பெயர்கள் ஆனால் அந்நிகழ்வுகளில் கவிதை நாயகனும் நிலவும் பொதுவானவர்கள்.

‘கடை வீதியிலும் கடவுள் சன்னதியிலும் கண்ணாடி சன்னல் இடுக்குகளிலும் முளைத்தேடி சலித்துப்போன மனதுடன் வீட்டில் நுழைந்தாய் இரு முறைகள் இங்கு கேட்பாரற்று கிடந்தன ‘[ப. 61]

பிராய்டிசம் பூசிய அக உலகின் அழுக்குக் கசியும் வரிகள் ஒரு தலைமுறையை ஒரு தலைமுறைக்கு படப்பிடிப்பாக இந்த அவஸ்தை கவிதை

‘தன்னையழித்தல் வேறுவகையான கர்வம்/ புதுப்பித்தலில் பெயரிடலும் ஒன்று. /ஆபத்தின் சோதனைக் கூடம்/ அதிகாரம் எல்லாக் காலங்களிலும்./

அதிகாரத்தை எடுக்கும் பெயரிடல்.

பெயரின்றிக் காணல் சுகம்/ கேட்டல் சுகம் /இருத்தல் சுகம்/ இல்லாதிருத்தலும்!’[ப.36]

நவீன வாழ்வின் நார்சிஸ்ட் மனப்பாங்கில் பெயரழித்தல் என்பது பெருங்காரியம். தமிழ்நாட்டில் மாவீரன் என்ற அடைமொழி ஒரு காலத்தில் கள்ளசாராய வியாபாரி ஒருவரைக் குறிக்கும் ,பிறகு ஒரு குடிசை கொளுத்தி பின்னாளில் போற்றப்பட்டார் ஆனால் ஈழத்தில் பிரபாகரனுக்கும் சேகுவாராக்கும் மாவீரன் என்ற சொல் கச்சிதமாய் பொருந்துவதை காலம் உணர்த்தும்

வெளியில் தெரியும் உள்ளாடைகள்

‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் துருத்திக் கொண்டிருக்கும் முலைகாக்கும் குலதெய்வங்கள் சாட்சியாய்

கண்ணில் படாத காடுகளுக்குள்

இட்டுச் செல்லும் பலியாடா! நாமுண்டு நம் தொழிலுண் டென்றிருக்கும் நரம்புகள் அவிழும் கண்களுக்குள் விரியும் காட்சியாய்

…திசுக்களுக்குள் முண்டிக் கொண்டிருக்கும் புழுக்களாய் மூளை ஸெல்கள்

காக்க காக்க கனகவேல் காக்க.

எடுத்த அடி கொப்பளிக்க/ நாதம் சிந்த நடனமணி படியேற/ விளிம்பைத் தொடும் பெட்டிகோட்/ முன்கழுத்தின் கீழ் மேடாய்ப் புடைத்துத்/ தளவரிசை காட்டிப் போகும்/ கோடுகள் உச்சிக்கு இட்டுச் செல்லும் /கும்பிட்டு விரித்த கைகளில் /கொத்தாய் விழும் கனதனங்கள் /காக்க காக்க கனகவேல் காக்க

நாமார்க்கும் குடியல்லோம்/ நமனை அஞ்சோம்/ மேல் அறை நாவுகள் உச்சரிக்கும்/ ஞஙண நமன

காக்க காக்க கனகவேல் காக்க

தாயே சரணம்/தண் தமிழே சரணம்/ மூடிய கண் வேண்டும்/ முடக்கிய கை வேண்டும் /தேடிய பாதம் தேடாது ஒழிதல் வேண்டும்/ வாடிய மனம் வேண்டும் /வதங்கிய தேஹம் வேண்டும்/. வாவெனச் சொல்லாத /வன் நாவு தானும் வேண்டும்/ பிறைநிலவு பதிக்காத பித்தற்ற நகங்கள் வேண்டும்./

வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் /வெளியில் தெரியும் உள்ளாடை/ சொல்லாமல் விலக வேண்டும்./ காக்க காக்க கனகவேல் காக்க[ப.32]

நவீனத் தமிழ்க்கவிதையில் அங்கதம் சொல்ல ஞானக்கூத்தனை மட்டுமே சிலாகிக்கும் விமர்சகர்களுக்கு, ப்ரதிபாவின் ‘வெளியில் தெரியும் உள்ளாடைகள்’ கவிதையை பரிந்துரைக்கிறேன். .இக்கவிதையின் பகடி மொழியும் நவீன வாழ்வின் சில பக்கங்களும் ,தனிமனிதன் மீது ஏற்படுத்தும் அகவியத் தாக்கத்தை, எள்ளலும் பகடியுமான மொழியில் சொல்லி இருப்பது தமிழுக்கு புதிதென்பேன் . இந்தக் கவிதை மேலோட்டமாய் வாசிக்கையில் சற்றே விரசமாய் தோன்றும் கத்தி முனையில் கால்வழிக்கிடாமல் நடக்கும் சாகசம் .ப்ரதிபாவின் பகடி மொழியில் புனித வரிகளை எள்ளல் தொனியில் உடைக்கையில் உயிர் பெறுகிறது ஓர் புதிய கவிதை சன்னதம்

‘இதழ் பரவ ஏந்தகையில் /ஒளி முகம் மறுக்காத கண்/ கைப்பற்றிச் சென்ற மாலைச் சாலை/ மகிழ்ந்து காட்டும் பூக்களாய்/ தோள் தேடிய புல்தரைகள்/ நசுங்கலில் சுகம் பெறும்/ ஒளித்தக்கை வழியடைக்கும்/ ஓரமாய் ஊர்ந்து போன காலம்/ கழுத்தை மட்டும் கட்டி போடும் /வேலி காயத்திற் கேது ‘[ப. 37]

ப்ரதிபாவின் சந்தமும் இசையும் கலந்த கவிநடை, நவீனத் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் மிகப் புதிதாக ஒலிப்பது, ஊடாக கவிஞரின் மொழி, மெல்லியதொரு அரவமாக வாசகன் மேலுர்ந்து உள்ளிறங்கும் லாவகம் மிக்கது

02.ஜெயச்சந்திரனின் புற உலகம் :

இன்றைக்கு நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகள் குறித்து சிந்திக்காமல்,பேசாமல், கவிதை தராமல் சமகாலக் கவிஞனால் இருக்க இயலாது  அப்படி இருப்பின் அவன் சமகாலத்தைப் பிரதிபலிக்கின்றது கவிஞனாய் இருக்க முடியாது .ஒரு கவிஞனுக்கு கவிதையின் கச்சாப் பொருள்… (விதை) எங்கிருந்து  கிடைக்கும்? எப்போது கிடைக்கும்?    கவிஞனைச் சுற்றியுள்ள எதிலிருமிருந்து தான், எப்போதும் தான், சூரியனுக்கு கீழுள்ள எவையுமே பாடுபொருட்களே.               கவிஞன் தன் புலன்களை விழிப்போடு இருக்கும்படியாக வைத்திருக்கும் வேளையில் அவனைச் சுற்றியுள்ள எதிலிருந்தும் கவிதையின் மைக்கூடு திறக்கும் என்பதே நிதர்சனம். இயல்பாக தன்முன் நிகழும் நிகழ்வொன்றிலிருந்து வாழ்வின் சூட்சும இசையின் நுண்ணியத்தை, பகிரும் ஜெயச்சந்திரனின் புற உலகம் இது:

எதிர்வினை

‘1. சேரி மக்கள் உபயோகித்தார்களா சுவையான உணவை? பட்டுத் துணிகளை? கிரானைட் கற்கள் பதித்த வீடுகளை?

அவர்கள் ஆபரணங்களை உபயோகித்தார்களா? அவற்றில் மரகதமும், பவளமும் வைரமும், பத்மராகமும் பதிக்கப்பட்டிருந்தனவா?
அவர்கள் தங்களுக்கென்று தனியாக விழா எடுத்தார்களா? எப்போதேனும் அவர்கள் மகிழ்ச்சி கொண்டாடினார்களா?
அவர்கள் தங்களுக்கென்று கோயில்களையும் மணி மண்டபங்களையும் நிர்மாணித்துக் கொண்டார்களா? குளங்கள் வெட்டினார்களா?
அவர்கள் தங்களுக்கென்று தனியாக இதிகாசம் இயற்றினார்களா? தங்களுக்கான கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தார்களா?’[ப. 16]

கவிஞர் எழுப்பும் வினாக்களை தான் ஒரு காலத்தில் மக்கள் கவிஞர் செரமண்ட ராஜு எழுப்பினார் இன்றுவரை ஆணவக் கொலைகள் மட்டுமே நிகழ் பதிலாக அமைவது சமூகத் துயரம் என்றோ பக்கம்

‘ஒதுக்கீடுகள் அவமானங்களாகவும் /புனிதங்களாகவும் எதிர்கொள்ளப்படுகின்றன -/முறையே நமக்கும் பிறருக்கும்./’[ப.34]- சமகால சமூக யதார்த்தத்தை படம்பிடிக்கும் வரிகள் / மூதாதையர்களின் ஆன்மா சாந்தியடைய/ மலம் சுத்திகரிக்கிறார்கள் நம் கழிப்பறைகளில்

‘அகண்ட தேசத்திற்கான முன்னோட்ட வரைபடம் ‘[பக்கம் 119]

‘ தங்களை விமர்சிப்போரை தேச துரோகிகள் என்றனர் தங்களைச் சுற்றி சுற்றிலும் உள்ள அனைவரும் தேசத் துரோகிகளாகவே தெரிந்தனர் இப்பொழுது தேசம் தேசத் துரோகிகளால் நிரம்பி இருந்தது.’

அகண்ட தேசம் என்பதை சரியாகப் புரிந்து கொள்வோமானால் அதன் மற்றொரு பெயர் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதாகும். ஒருவரின் இருப்புக்குள் எல்லை தாண்டி அத்துமீறி நுழைவதும் ,ஆக்கிரமிப்பதும் கொடு வன்முறையின்றி வேறென்ன? எல்லை தாண்டுதல் என்பது ஒரு காலத்தில் வெறும் பிரதேசங்களை பிடிப்பது, செல்வங்களை கொள்ளையடிப்பது என்று மட்டுமே இருந்தது. ஆனால் இன்று நிகழ்த்தப்படும் பண்பாட்டுப் படையெடுப்பு ,வேறு வேறு நிகழ்வுகளால் விதவிதமான பெயர்களால் கட்டமைக்கப்படுவது

‘தங்களுக்கு எதிரான தடயங்களை அழித்தார்கள் தங்களின் அகண்ட தேசத்திற்காய் பொய்களையே அஸ்திவாரம் ஆக்கினார்கள் இப்பொழுது அண்டை நாடுகள் தங்கள் எல்லைகளை விரிவாக்கத் தொடங்கி இருந்தன.

.மொழி, உணவு, ஆடை, தொலைக்காட்சி தொடர்கள், PAN INDIA சினிமா என அது பன்முகம் கொண்ட வல்விலங்கின் சாடையில் நுழைவது. இன்றைக்கும் தமிழ்நாட்டின் வீதி உணவகங்களில் விற்பனை செய்யப்படும் விதவிதமான உணவுகளை பார்த்தாலே புரியும்! அவை எங்கிருந்து வந்தவை? யாருக்கானவை ?எதற்காக இங்கே திணிக்கப்படுகின்றன என்று. அந்த அகண்ட தேச மிருகம் பள்ளிகளுக்குள் பயிற்சியாக நுழையும். ஆயுதங்களை பயன்படுத்துவதை எளிதாக்கும் .வளர வளர பிற மதத்தினர் மீது துவேஷமாய் வளரும். ஒரு கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து கருவறை சிசுவை குதறி ‘ஜெய்ஸ்ரீராம்’ என வெ[ற்]றி கோஷமிட வைக்கும்.

இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம்! தினசரி மாலைகளில் தொலைக்காட்சி விவாதங்களில் அமைப்பின் பெயர் சொல்லாமல் அப்பன் பெயர் தெரியாத பிள்ளைகளாய் அமர்ந்திருக்கும் வலதுசாரி விமர்சகர்கள், அள்ளி வீசும் பொய்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை அவர்களின் ஒரே திறமை வேறெவரின் வாதத்தையும் கேட்கவிடாமல் செய்யும் வெறிநாய் குறைப்புகள் தான் !அந்த வகையில் ப்ரதிபா ஜெயச்சந்திரனின் இந்த கவிதை சமகால அரசியலை, சமூக நிகழ்வை அகண்ட தேசம் என இந்தியாவில் இருந்து மட்டுமல்ல வல்லரசு ஒன்றின் அதிபராய் இருப்பவர் என்னைக்காக எல்லை மீறும் யுத்தங்களையும் ஊடகமாய் தோலுரிக்கிறது

‘எங்கள் தெருப்பேய்கள் கூட/ மேலத் தெருவுக்குள் நுழைய முடியாத/ பேய்க் கதைகள் உலாவும் ஊரில் /மனிதர்கள் எப்படி வாழ மானமின்றி?

வர்ணம் கேட்க நேரமற்ற/ நகரத் தெருக்களின் அடர்த்தியில்/ அடையாளமிழந்து போகலாம்/ புதிய அடையாளங்கள் கிடைக்கும் வரை /சில சாவுகளுக்குப் பின்!’[ப. 40]

இன்றைக்கும் உலவுகிற சாதியத்தின் கோர முகத்தை கோட்டோவியங்களாய் சொல்லும் வரிகள் இவை .

வசைச் சொற்களில் உடல் குறையை சொல்பவையுண்டு [BODY SHAMING] .பெண்குறி சார்ந்த, பெண் ஒழுக்கம் சார்ந்த பிரபலமான கெட்ட வார்த்தைகளை அறிவோம். அதிலும் [வசைச்சொற்களும் கெட்ட வார்த்தைகளும் பெண் உடல் ,பெண் உறவு சார்ந்தே கட்டமைக்கப்பட்டும், பேசப்படுவதும், பயன்படுத்தப்படுவதும் ஆய்வுக்குரியது ]

‘ஒரே ஒரு வசையில் /ஜீவநாடிகள் ஒடுங்கி உடைந்தது/ ‘பறத்தாயோலி’

ப்ரதிபா ஜெயச்சந்திரன்  நடுங்கி ஒடுங்கும் ஒற்றை வசைச்சொல்லைப் பிரிக்க அதற்குள் சமூகவியல் ஆய்வாக சங்கதிகள் உண்டு.

பறையன் என்னும் சாதிய அடையாளம், விஷம வசை !
‘தாயோலி’ தாயைப் பெண்டாடுபவன் அல்லது தாயைப் புணர்பவன்

மீதி சாதிக்கழிசடைகள் யாவும் உன்னதமானவயா? மகளைப் புணர்ந்து கர்ப்பம் ஆக்கிய தந்தை! சகோதரியை வல்லுறவு கொண்ட தமையன் என சமகால செய்திகளை படித்தாலே விளங்கும். இவர்களுக்கு சாதி கிடையாது என..! ஆனால் இங்கு ஒரு சாதிக்கு மட்டும் சமூக தண்டனையாக இந்த வசவு, தெற்கு தமிழகத்தில் ‘பள்ளனேன்று’விளிக்கும் மேற்கு தமிழகத்தில் சக்கிலியன் என அழைக்கும்

‘மேலத்தெரு மூக்கையா பேரன் /ஆசிரியர் கட்டளைப்படி என் கையால்/ அடி வாங்குவான் /கணக்கில் நூத்துக்கு நூறு/ வர்ணம் தெரியுமுன்.

பின்னுக்குத் தள்ளிடினும்/ பாடிப்போகையில் மூன்று பேரையாவது/ முகத்தில் உதைத்து வரும் கபடிக்கபடி.

பெயரின் கீழ் பள்ளியின் பெயர் /பள்ளி என்னால் பெருமை அடைவதாக/ நூற்றாண்டு விழாக்களில்/ அள்ளி வந்த கோப்பைகள் [ப. 45]

ஆனால் நிஜமென்ன? யதார்த்த உலகம் இப்படிப்பட்டது?

‘சரித்திரத்தை விலை பேசுமளவிற்கு/ போதிய பணம் இல்லாததால்/ கல்வெட்டுக்களை அவர்களால்/ கிரயம் பண்ண முடியவில்லை.

அவர்கள் தங்களுக்கென்று/ தனியாக எழுதும் இதிகாசம்/ தங்களுக்கென்று தனியாக /வளர்ந்தெடுக்க வேண்டிய கலாச்சாரம் /அவர்கள்/ அவர்கள் மட்டுமே இனி!’[ப.19]

-என்னும் கவிஞன் வாக்கு பலிக்கும் வேளையில் வரலாறு புதியதாய் எழுதப்படும்

பாலைவனப் பாடல்

‘எங்களுக்கான எல்லைகளில் எங்கள் உறைவிடங்களை நிர்மாணித்தோம்

எங்களுக்கான எல்லைகளில் எங்கள் விளையாட்டு மைதானங்களை அமைத்தோம்

எங்களுக்கான விதிகளைத் தீர்மானித்துக் கொண்டோம்.

.. …

இன்றைக்கு எங்கள் குழந்தைகளின் உயிரோடு உடலையும் ஒற்றி எடுக்க ஏகாதிபத்தியப் போர் விமானங்கள் ஏங்கள் தெருக்களில் பாடை நிழல் விரித்திருக்கின்றன.

எங்கள் தாய் மண்ணின் வயிறுகள் எண்ணெய் வளத்தால் நிரம்பியிருப்பது ஏகாதிபத்தியங்களின் கண்களுக்கு உறுத்தலாக இருந்ததால் எங்கள் சகோதரதேசங்களில் குரல்வளையை நெரித்து எங்கள் உயிர்முடிச்சை நசுக்குகின்றன.

எங்கள் முதாதையர் புதைக்கப்பட்டிருப்பது இந்த மண்ணில்தான் எங்கள் திணங்கள் இந்த மண்ணில்தான் சுவறிக் கிடக்கின்றன. நாங்களும் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இந்த மண்ணில் புதைக்கப்படலாம்.

ஆனாலும் இங்கே ஏகாதிபத்தியங்களில் கந்தக நெடி வீசினாலும் எங்களின் மூச்சு இந்த தேசத்தை நிரப்பியிருக்கும்!’[ப. 47]

இன்றைய நவீன கவிஞர்களுக்கு விரைத்த குறியும் விரிந்த யோனியும் பிரச்சனையாகும் சமகாலத்தில் சர்வதேச கவிதையாக பூத்திருக்கும் இக்கவிதை யுத்தத்திற்கு எதிரான குரலாக ,ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான முழக்கமாக ஓங்கி ஒலிக்கிறது

பிணந்தின்னிக் காதை

ஒரு சம்பவம் செத்துப்போனது அதில்/என் காதலி கதாநாயகி/என் கண் விழிகளைத் தோண்டி/கனவு ராஜ்யம் பரி பாலித்தாள்/

அவள் ராஜ லீலையின் சுவடுகள்/என் நெஞ்சில் புதராக மண்டிப்போனது/புதரில் புதைக்க முடிந்ததெல்லாம்/அவளின் நினைவுப்பிணத்தைத்தான்

சில அர்த்த ராத்திரிகள்/ஜாமக் கோடாங்கியாகி என்னை உசுப்பிவிட்டது

நான் எழுந்தபோதெல்லாம்/பிணம் தோண்டித்தின்றேன்/தின்று சலித்து மீதிப் பிணத்தை மூடிவைத்தேன்/அதை மீண்டும் தோண்டிய போது முழுசாக இருந்தது.

அது பிணம்தானா?/நான் பிலாக்கணம் செய்தாலும்/என் நெஞ்சில் வெறியாட்டம்போட்டு/என்னையே தோண்டிப் புதைத்து/ஒரு சம்பவம் செத்துப்போனது அதில்…[ப. 83]

சர்ரியலிச உத்தியில் வெளிப்படுவது அக உலகமா? புறத்துயரமா? சமூகம் படிப்பவர்களுக்கு நிஜம் புரியும் ..!

தாலிக்குள் கைலாசம்

நல்லுசாமி சொன்னான்/பதினாறாம் நாள் வருகிறேனென்று/பூத் தெளித்து/பஞ்சும் பனைவெல்லமும் சூறையிட்டு/தெரு வாசல்கள் செம்புத்தண்ணீர் கண்ட நாளில்/

அப்பனுக்கு மைக்செட் வைத்தார்கள்/மூன்று வேளை வள்ளிக்கிழங்கும் சோறும்/

அப்பனுக்குப் பிடித்தது மொச்சைக் குழம்பென்று/கடைசி மகள் சொன்னாள் /

கந்தைத் துணிக்குள் லங்கோட்டை இழுத்துவிட்டு/சின்ன மாமன் சொன்னான்/

ராவுத்தர் கடை பிரியாணி வாசம் மெத்தப் பிடிக்கும்/பொரிகடலை சீவிய செவ்விள நீர்

பச்சரிசி பாயாசம் சுருட்டு பொடிமட்டை கூடவே சொல்லிவைத்தான் சமயன் சாமியாடி/

எதற்கும் இருக்கட்டுமென்று/பாட்டிலில் சாராயம்/இவள் தாலிக்குள் கைலாசம்[ப. 125]

சனங்களின் கதை சொல்லலில் கவிமொழி மிக எளிதாக வாசகன் மனதில் உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்கிறது

‘வந்த வழி தெரியும் திரும்பி சொல்ல திரும்பிச் செல்ல முடியவில்லை’ அவரவர் அம்மைக்குத் தெரியும் அம்பலத்தி லாடிய கூத்தன் யா ரெண்டு ‘

போன்ற நகுலன் தனமான வரிகளை விட   ‘வார்த்தை குவியலின் முன் மௌனத்தவம் இருக்கும் ஓர் வண்ணத்துப்பூச்சி’ —-பக்கம் 72 போன்ற வரிகளில் பிரதீபாவின் கவித்துவும் மிளிர்வதை சூட்சும வாசகன் உணரக்கூடும்

சூனியச் சொற்களுக்குள் மொழியைச் சிறை வைத்து அன்னிய இசங்களின் பெயரால் தமிழ்நாட்டின் எளிய மனிதர்கள் மீது திணிக்கப்படும் அதிநவீன கவிதைகளில் தேடிப்பாருங்கள் மனிதர் எவருமே தென்பட மாட்டார்கள். இருண்மைப் போர்த்திய நொடியின் அடர்வனத்திலிருந்து கவிதையை ஒளிஉலகுக்கு அழைத்து வந்திருப்பதில் பெருவெற்றிக் கொண்டிருக்கிறார் ப்ரதிபா ஜெயச்சந்திரன்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: என் ஊதா குறிப்பேட்டில் நேற்று (2026)
ஆசிரியர்: ப்ரதிபா ஜெயச்சந்திரன்
வெளியீடு:
யாவரும் பப்ளிஷர்
விலை: ₹.150
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்பாதவன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *