நூலின் பெயர் : என் பெயர் ‘ஙு’ (எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்)
ஆசிரியர் : வே.சங்கர்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : ௪௮
விலை : ரூ.50/-
எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் எறும்புகளையே உதாரணமாகச் சொன்னாலும், அவைகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகமே “என் பெயர் ‘ஙு’.
குழந்தைகளின் வாசிப்புத் திறனையும், கற்பனைத் திறனையும் வளர்ப்பதற்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.
“என் பெயர் ‘ஙு’ நூலின் தலைப்பைப் போலவே அவற்றில் உலாவரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களும் புதுமையாக உள்ளன. ஒற்றை எழுத்தில் பெயர்களும், அதுவும் பெருமளவில் புழக்கத்தில் இல்லாத ‘ங’, ‘ஙி’, ‘ஙு’ வரிசையில் இடப்பட்டுள்ள பெயர்களும் சிறப்பு.
சின்னச்சின்னதாக 14 அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகம் எறும்புகளின் மொத்த வாழ்க்கை முறையையும், உணவு தேடும் முறையையும், தன்னையும் தன் கூட்டத்தையும் பாதுகாக்க அவைகள் முன்னெடுக்கும் உத்திகளையும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்ட விதம் வியப்பில் ஆழ்த்துகின்றன.
நான் சிறுவயது முதலே, “எறும்புகளுக்கு நம்மைப் போலவே வீடு இருக்குமா? நம்மைப் போலவே சொந்த பந்தங்கள் இருக்குமா?” போன்ற கேள்விகள் என்னுள் எழுந்துகொண்டே இருக்கும்.
என் எல்லாக் கேள்விகளுக்கும் விடையாகவும், ஒரு சிலிர்ப்பூட்டும் கதையை வாசித்த உணர்வையும் இந்நூல் கொடுத்தது. குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எளிய வார்த்தைகளைக் கையாண்டவிதம் அருமை. இந்நூலை வாசிக்கும் எல்லாக் குழந்தைகள் இப்புத்தகம் நிச்சயம் பிடித்துப் போகும்.
முக்கியமாக ‘ஙு’ என்ற கதாபாத்திரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காரணம், ’ஙு’ தான் எறும்புகளின் புத்திசாலித்தனத்தைப் பற்றியும், பிரச்சனைகளை பொறுமையாக எதிர்கொள்ளும் முறை பற்றியும் மிக அருமையாகயும், நுணுக்கமாகவும் சொல்லிச்செல்கிறது.
எறும்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் ”என் பெயர் \ஙு’” – எறும்புக்கோட்டைக்குள் இரும்புப் பெண்.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/en-peyar-ngu/
புத்தகம் ஆர்டர் செய்ய: 04424332924