பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடும் சமூக எதார்த்தத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருப்பது சிறப்புக்குறிய விசயம். பத்து தலைப்புகளில் கல்வி சார்ந்த கட்டுரைகளை தனக்கே உரித்தான பாணியில் பேராசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
புதிதாக வேலைக்கு சேர்ந்த போது தனது அதிகாரத்தை சிவப்பு பால்பாயிண்ட் பேனாவுக்குள் அடக்கி வச்சிருந்ததை வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இன்றைக்கும் ஆசிரியர்கள் தங்களின் அதிகாரத்தை பேனாக்களில் வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் என்னுடைய பேனாவுக்குள் வேறு ஒரு சிவப்பு மை நுழைந்தது என்று பதிவு செய்திருக்கிறார். அதன்பிறகு எனது வகுப்பறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது என்று சொல்கிறார். வகுப்பறைக்குள் உள்ளே நுழையும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை பேராசிரியரின் அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
வகுப்பறையில் நம்மை அறியாமலே மாணவர்களை திட்டிவிடுகிறோம் அவை ஒவ்வொன்றும் ஒரு மரணத்துக்கு சமம் என்று கூறுகிறார்.
வகுப்பறையை எப்போதும் ஆசிரியரே ஆதிக்கம் செலுத்துவது மாணவர்களின் தனித்தன்மையை பிரதிபலிக்காமல் ஆசிரியரின் எண்ண ஓட்டங்களை மாணவர்கள் மீது திணிப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை நாம் வாசிக்கும்போது குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறோம்.
பள்ளிகளில் பண்பாட்டு புரட்சியை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் ஆசிரியர்கள் பாப்லோ பிரையர், கிஜீ பாய், கோபயாட்சி போன்ற கல்வியாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காலத்தின் தேவையும் நமக்கு சொல்கிறார்.
ஜென் வகுப்பறைகளில் நடந்த கற்றல் கற்பித்தல் அனுபவங்களை ஜென் கதைகள் மூலம் விளக்கியிருக்கிறார் பேராசிரியர். அறிவொளி காலத்தில் மக்களோடு மக்களாக களப்பணியாற்றி அதனால் ஏற்பட்ட கற்றல் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார் பேராசிரியர். பத்து கட்டுரைகளையும் வாசித்தால் ஒரு ஆசிரியராக நாம் எந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வகுப்பறை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு ஆசிரியரின் வீட்டின் அலமாரியில் இருக்க வேண்டிய மிகச்சிறந்த அனுபவத்தொகுப்புதான் இந்த புத்தகம் என்றால் மிகையாகாது.
புத்தகம்: என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா
நூலாசிரியர்: பேராசிரியர் ச.மாடசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மதிப்புரை
கு.காந்தி
அரச நகரி.