கருங்கல் கி.கண்ணன் எழுதிய “என் உயிர் தமிழுக்கே” (நூலறிமுகம்)

கருங்கல் கி.கண்ணன் எழுதிய “என் உயிர் தமிழுக்கே” (நூலறிமுகம்)

“எந்நிலை வந்தாலும்
தன்னிலை தவறேன் 
என் தாய் தமிழ்
என் உயிர் தமிழ் 
என் இதயத்தின் ஓசை தமிழ் 
என் சுவாசத்தின் காற்றும் தமிழ்” 
என்று என் உயிர் தமிழுக்கே எனும் தலைப்பில் தொடங்கி …
“காதல் வளர்த்ததும் தமிழ்
ஞானத்தை ஆண்டதும் தமிழ்
விழுப்பும் கண்டதும் தமிழ் 
வீரனை வணங்கியதும் தமிழ் 
இயல் இசை நாட்டியமும் தமிழ் 
அறத்தோடு வாழ்ந்ததும் தமிழ்
மறத்தமிழனின் தாயின் தமிழ்! தமிழே!
உணர்த்திட எமக்கு வரம்கொடு தாயே வல்லமை தாராயோ சக்தி 
வல்லமை தாராயோ” என வல்லமை தாராயோ என்னும் தலைப்பில் நிறைவு செய்திருக்கின்ற என் உயிர் தமிழுக்கே எனும் இந்நூல் 51 தலைப்புகளையும் 135 பக்கங்களையும் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் கருங்கல் கண்ணன். கோவை ரேணுகா பதிப்பகம் நூலினைப் பதிக்க தமிழண்ணை தமிழ்ச்சங்கம் இதனை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.
தனித்து இயங்கவல்ல தமிழ்மொழி பல மொழிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் பலரும் அறிவர். இதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?. பெரும்பான்மையான அமைப்புகள் எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? மொழியை அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்தவேண்டும்? என்கிற பல கேள்விகள் நம் நெஞ்சத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இவ்வாறான சூழலில் தம்முடைய பேச்சு, தம்முடைய எழுத்து என அனைத்தும் பிற மொழி கலவாத தனித்த தமிழிலேயே இருக்க வேண்டும் என்பதோடு, வட எழுத்துகள் என்று சொல்லப்படுகின்ற கிரந்த எழுத்துகள் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும் என்ற இலக்கோடு இந்த நூல் முழுமைக்கும்மான செய்திகளாகக் கவிதை வடிவில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் கருங்கல் கண்ணன் அவர்கள்.
தொடர்ந்து ஆங்காங்கே சமூகம் குறித்தும், பெண்ணியம் குறித்தும்,  காதல், பக்திகுறித்தும் தன்னுடைய எண்ணங்களைப் பதிவு செய்யத் தவறவில்லை. நூலில் பல்வேறு கவிதைகளில் இயல்பாகவே சந்தம் மிளிர்கின்றது சில கவிதைகள் பாடல் வடிவிலேயே எழுதப்பட்டிருக்கிறது
“ஏர்முனையே பசி தீர்க்கும் 
பார் போற்றும் இயந்திரமே 
ஏர்முனையே இல்லையெனில் 
தீராது பட்டினியே” உழவுத் தொழிலே உலக உயிர்களை காக்கும் தலையாயத் தொழில் எனப் போற்றுவதோடு
“உழை உழை 
உழைப்பில் சறுக்கல் வந்தாலும்
உழைப்பின் பின்னால் பார்க்காதே உழைப்பே உயர்வு நிச்சயமே” என உழைத்தும் பயனில்லாமல் கிடக்கும் உழைப்பாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பதிவு செய்திருப்பது அருமை.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
 பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
 எட்டுத்திக்கும் இன்று ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்…” எனும் பாரதியின் வைர வரிகளை “ஆளுகின்ற மங்கை என”  எனும் தலைப்பில் மிக அழகாகக் கவிதை வடித்துள்ளார்.
மாமதுரைக் கவிமன்றத்தின் தலைவர் கவிச்சித்தர் வீரபாண்டியத் தென்னவனாரின் நேரிய கொள்கையினை நெஞ்சில் தாங்கி, நூல் முழுமைக்கும் கிரந்த எழுத்து தவிர்க்கப்பட்டு எழுதியிருப்பது  மிகப் பாராட்டுவதற்குரியது.
பிறமொழி கலவாமல் எழுத வேண்டும் என்ற என்று கொள்கையோடு கருங்கல் கி.கண்ணன் அவர்கள் தமிழ்த்தாய்க்குக் கோயில் அமைப்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறார். அன்னாரின் இலக்கும் கொள்கையும் வெல்க. தொடர்ந்து பல்வேறு எழுத்தாக்கங்களை மொழிக்குத் தந்து சிறக்க “தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம் சார்பில் வாழ்த்துகிறோம்.
“என் உயிர் தமிழுக்கே” நூலின் விலை உரூ 150. வாங்கிப் படித்துப் பயன் பெறுக…
          நூலின் தகவல்கள் 
நூல் : “என் உயிர் தமிழுக்கே”
நூலாசிரியர் : கருங்கல் கி.கண்ணன்.
          அறிமுகம் எழுதியவர்
     
        புலவர் ச.ந.இளங்குமரன்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *