என் வாழ்க்கைக் கதை – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : என் வாழ்க்கைக் கதை

எழுதியது: மகாத்மா காந்தி

சுருக்கம் : பரதன் குமரப்பா

தமிழாக்கம் : ரா வேங்கடராஜுலு

வெளியீடு : நவஜீவன் வெளியிட்டகம் அகமதாபாத்

முதல் பதிப்பு :  1994

33ம் பதிப்பு :  செப்டம்பர் 2008

பக்கம் : 90

விலை :  ரூ.30

காந்தி பிறந்தது முதல் 1917 ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமம் அமைக்கப்பட்டது வரை அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிய சுய பரிசோதனையின் கீழ் எழுதப்பட்ட வாழ்க்கைக் கதை இது.

“நான் நடத்தி வந்திருக்கும் சத்திய சோதனைகள் பலவற்றின் கதையை சொல்லவே விரும்புகிறேன். ராஜீயத்துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள் இப்போது தெரிந்திருக்கின்றன. ஆன்மீகத் துறையில் நான் நடத்திய சோதனைகளைப் பற்றி எனக்கு மாத்திரமே தெரிந்தவைகளை சொல்லப் போகிறேன். அதைவிட சன்மார்க்கமே மதத்தின் சாரம் என்ற அடிப்படையில் பாரபட்சமற்ற வகையில் அடக்க உணர்ச்சியோடு எனது சோதனைகளை உங்களுக்குக் கூறுகையில் உங்களின் முன்னேற்றத்திற்கு வேண்டிய ஆதாரங்களை இதில் பெறுவீர்கள்””” என்று முன்னுரையில் காந்தி குறிப்பிடுவதைப் போல இந்த வாழ்க்கைக் கதை வாசிப்போரின் நெஞ்சத்தில் நிறைந்து அவரவர் வாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும் உத்தமர்களாகவும் அன்பு மிக்கவர்களாகவும் கருணையின் பின்னால் உலகத்தை நடத்திச் செல்லும் சிறந்த மனிதத்தை உடையவர்களாகவும் மாறிப் போவார்கள் என்பது உண்மை.

பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என்றுமே இருந்ததில்லை நடைமுறை காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம் அதிகச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் நூற்றுக்கணக்கானவர்களை நிர்வகிப்பதிலும் திறமையை அளித்தது. சத்தியசீலர் மற்றும் வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர் தயாளமுள்ளவர் என்பது தனது தந்தையைப் பற்றிய காந்தியடிகள் கூற்று.

“தவ ஒழுக்கமே என் நினைவுக்கு வருகிறது. மிகுந்த மதப் பற்றுக் கொண்டவர் கடுமையான விரதங்களை அடிக்கடி மேற்கொள்பவர் நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டு விடாதவர் அனுபவ ஞானத்தால் என்னை முழுவதும் கவர்ந்தவர்””என்பது தாயார் பற்றிய காந்தியின் கூற்று

பள்ளிப் பருவத்தில் வழக்கம் போல மற்ற சிறுவர்களுடன் கூட்டணி சேராமல் கூச்ச சுபாவத்தால் தானுண்டு தன் பாடங்கள் உண்டு என்று தனிமையை விரும்பியவர் காந்தி. ஆசிரியர் கூறிய பிறகும் காப்பியடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்று கூறும் காந்தி பெரியவர்களிடம் இருக்கும் குறைகளை காண்பதில் குருடன் ஆகவே இருப்பது எனது இயல்பு என்கிறார்.

படிப்பிக்கும் தேகப் பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்து என்னிடம் இருந்தது. ஆனால் பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் அசட்டையாக இருந்து விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதி அல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. மோசமான கையெழுத்தை அரைகுறையான படிப்புக்கு அறிகுறியாகக் கொள்ள வேண்டும். இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையை பிறகு என்றுமே நிவர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு இளைஞனும் இளம் பெண்ணும் என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும். குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்கு கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் சித்திரம் வரைய கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.. பூக்கள் பறவைகள் போன்றவைகளை குழந்தை பார்த்து தெரிந்து கொள்வதைப் போல எழுத்துகளையும் அது பார்த்து தெரிந்து கொண்டால் அக்குழந்தையின் கையெழுத்து மிக அழகாக அமையும் என்பது காந்தியின் பள்ளிக்கூட அனுபவம்.

“திருமணம் முடித்துக் கொள்ள நல்ல ஆடை கிடைக்கும் மேளதாளங்கள் இருக்கும் கல்யாண ஊர்வலங்கள் இருக்கும் பிரமாதமான விருந்து நடக்கும் இவற்றுடன் சேர்ந்து விளையாடுவதற்கு விசித்திரப் பெண் ஒருத்தியும் கிடைப்பாள் என்பதை தவிர 13 வயதில் எனக்கு விவாகம் என்பதைப் பற்றி வேறு ஒன்றும் தெரியாது. ஆனால் கணவன் என்ற அதிகாரத்தை மட்டும் உடனே பின்பற்றி விட்டேன்.””இது திருமணம் பற்றிய காந்தியின் அனுபவம்.

இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு மனிதர் நகமும் சதையுமாக நமது முன்னால் உண்மையையும் சத்தியத்தையும் விடாப்பிடியாகப் பின்பற்றி தனது லட்சியத்தை அடைந்தார் அதை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தார் என்பதை இன்றைய தலைமுறை வாசித்து பார்க்கையில் ஐயப்பாடுகளும் இடர்களும் அதிகமாக எழும். ஆனால் தனது வாழ்வை உண்மைக்கும் நேர்மைக்கும் முழுமையாக அர்ப்பணித்து அதற்காக எவ்வளவு இடங்களிலும் அதை ஏற்றுக் கொண்டு தன்னை முழுமையான மனிதராக மாற்றிக் கொண்டவர் காந்தி இன்றைய காலகட்டத்தில் அவரின் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏற்கப்படாமல் போனாலும் அவர் வழிகாட்டிய அகிம்சை ஒன்றே மனிதர்களுக்குள் அன்பையும் கருணையையும் ஈரத்தையும் சுரக்க வைக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை.

என் வாழ்க்கைக் கதை - நூல் அறிமுகம் என் வாழ்க்கைக் கதைஎழுதியது- En Vazhkai Kathai Tamil  Book Review | Mahatma Gandhi - https://bookday.in/

மாமிசம் சாப்பிட வேண்டியது முக்கியம்தான் நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும் தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததை விட அதிக மோசமானது. ஆகையால் அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவது இல்லை என்று தனக்குத்தானே உறுதி எடுத்துக் கொண்டவர். சிறுவயதில் பீடியை அவரது சிறிய தந்தையிடம் இருந்து திருடி உபயோகித்ததை ஒப்புக்கொள்ளும் காந்தி பெரியவர்களின் அனுமதி இல்லாமல் எதையுமே நாங்கள் செய்ய முடியாதிருந்தது எங்களுக்கு பொறுக்க முடியாத மனநிலையை தோற்றுவித்தது கடைசியாக வாழ்வே முற்றும் வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம் என்கிறார். ஊமத்தையின் விதைகளை திருடி வந்து மூன்று விதைகளை விழுங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தோம் ஆனால் அது முடியாமல் போகவே அதனால் திருடுவதையும் புகை பிடிக்கும் பழக்கத்தையும் விட்டு வெளியே வருவதற்கு எங்களுக்கு அது ஒரு பாடமாக அமைந்தது. மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளிக்காமல் ஒப்புக்கொண்டு விடுவதோடு இனி அத்தகைய பாவத்தை செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்கான சரியான வகையில் வருத்தப்படுவதாகும் என்பதை தந்தையிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாக கூறும் காந்தியடிகள் தன் வாழ்வின் இறுதிவரை அதை முழுமையாக கடைப்பிடிப்பதையும் கடைபிடித்து ஒழுகினார் என்பதும் நாம் கண்கூடாக கண்ட உண்மை.

வெளிநாட்டில் சென்று படிப்பதற்காக தனது தாயிடம் செய்த சத்தியத்தை இறுதிவரை மீறாமலும் இங்கிலாந்து நாட்டின் சீதோசனமும் தட்பவெட்பமும் அவரது உடல் நிலையை பாதித்த போதும் செய்த சத்தியத்திற்காக மது அருந்தாமல் தனது கல்வியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பியதும் அவரின் மனதிடத்தையும் தைரியத்தையும் நமக்கு பாடமாக அளித்துச் செல்கிறது. வெளிநாட்டில் படிப்புக்கு இடையூறு வரக்கூடாது என்பதால் தனது அன்னையின் மரணத்தை அண்ணன் தெரிவிக்காமல் தவிர்த்ததைக்கூறும் காந்தியின் வரிகளை வாசிக்கையில் கல்வியின் மீதான அவரது குடும்பத்தினரது அக்கறையை உணர்த்துகிறது.

தென்னாப்பிரிக்காவில் தொழில் நிமித்தமாக செல்கையில் அவருக்கு ஏற்பட்ட இனவெறித் தாக்குதலை தனது அன்பினாலும் கருணையினாலும் அவர் எதிர்கொண்ட விதத்தை எழுதும் பல அத்தியாயங்கள் நமக்கு அவ்வாறு நிகழ்ந்திருக்கும் பொழுது உடனடியாக பழிவாங்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையிலும் வன்முறையைக் கையில் எடுத்து தீர்வை நோக்கி நகர்ந்து இருப்போம் ஆனால் எந்த ஒரு சூழலிலும் வன்முறை பக்கம் செல்லாமலும் தன்னை அடித்துக் காயப்படுத்தியவர்களையும் மன்னித்து அவர்கள் மீது எவ்விதமான வழக்கும் பதியாமல் அவர்களையும் ஏற்றுக் கொண்ட பாங்கும் காந்தியடிகளை மகாத்மா என்ற நிலைக்கு உயர்த்தியது என்பதை இந்த நூல் நமக்கு முழுமையாக எடுத்துக் காட்டுகிறது.

சத்தியாகிரகம் பிறந்த கதையையும் அகிம்சையின் வழியே தனது கொள்கைகளை மக்களுக்கு எவ்விதம் உணர்த்த முடிந்தது என்பதையும் நூலின் வழியே எழுதிச் செல்லும் காந்தியடிகளின் வரலாறு இன்றைய காலகட்டத்திற்கும் நிச்சயம் பொருந்தும் என்பது நூலை வாசிக்கையில் அறிய நேர்கிறது

 

நூல் அறிமுகம் எழுதியவர்: 

என் வாழ்க்கைக் கதை - நூல் அறிமுகம் என் வாழ்க்கைக் கதைஎழுதியது- En Vazhkai Kathai Tamil  Book Review | Mahatma Gandhi - https://bookday.in/

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *